சிவம் கலந்த சிலந்தி
கதையாசிரியர்: ஆத்மஜோதி நா.முத்தையா
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 21, 2026
பார்வையிட்டோர்: 26
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புறாவின் பொருட்டுத் துலை புகுந்து தியாகம் புரிந்த சிபியின் வழிவந்த சோழர்களுக்கு உரிமையாகிய சோழவளநாட்டிலே, காவிரி நதிக்கரையிலே சந்திர தீர்த்தத்தின் அருகில் ஒரு சோலை உண்டு. அப்பூங்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழ் விளங்கும் சிவலிங்கத்தை ஒரு வெள்ளானை தவ உணர்வுடன் தும்பிக் கையில் தண்ணீர் முகந்து ஆட்டிப் பூங்கொத்துக்களை எடுத்துச் சாத்தி வணங்கி வழிபாடு செய்யும், அதனால் அது திருஆனைக்கா என்று பெயர் பெற்றது.
அங்கு அறிவுடைய ஒரு சிலந்தி மரத்தின் சருகு இறைவன் மீது உ –திரா வண்ணம் அன்புடன் தன் வாய்நூலால் பந்தரிட்டது.
இறைவன் மீது இவ்வாறு வாய்நூலால் பந்தரிடுவது அநுசிதம் என்று கருதிய யானை அதனை அழித்துவிட்டு வழக்கம்போல் பூசித்துவிட்டுச் சென்றது. சிலந்தி மிகவும் அன்புடன் மீண்டும் பந்தரிட்டது. மறுநாள் மறுபடியும் யானை அழித்தது.
இவ்வண்ணம் பலமுறை நிகழ்ந்தது. இது கண்ட சிலந்தி சினமுற்றது. “இறைவனுடைய திருப்பந்தரை அழித்துச் சிவப்பணிக்கு இடர்புரியும் இந்த யானையைக் கொல்ல வேண்டும்” என்று கருதியது. நூலால் பந்தரிட்டு அதில் ஒருபுறம் மறைந் திருந்தது. பூசிக்க வந்த யானை அதை அழிக்கும்போது சிலந்தி யானையின் தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தது. அதன் விஷவேகத்தாலும் கடியினால் ஏற்பட்ட வேதனையினாலும் துன்புற்ற யானை மண்மிசை வீழ்ந்து புரண்டது. தும்பிக்கையைப் பலமுறை பூமியில் மோதியது. அதனால் தும்பிக்கையுள் சிக்கிய சிலந்தி மாண்டது. சிலந்தி விஷத்தால் யானையும் மாண்டது.
இறைவன் அருட்காட்சி தந்து யானைக்கும் சிலந்திக்கும் திருவருள் புரிந்தார். யானை சிவபதம் உற்றது. இறைவனுக்குப் பந்தரிடும் பணியில் அதிவிருப்பமுடைய சிலந்தி சோழர் குலத்தில் மன்னனாகப் பிறந்து மேலும் கோயிற் பணி புரியுமாறு இறைவன் திருவருள் புரிந்தனர்.
திருக்கயிலையில் சில கணத்தவருள் மாலியவான், புட்பதந்தன் என்ற இருவர் தமக்குள் சிவத்தொண்டில் தாம்தாமே சிறந்தவர் என்று கருதி மாறுபட்டனர். ஒருவரையொருவர் அது காரணமாகச் சினந்து மாலியவான் புட்பதந்தனை யானையாகுமாறு சபித்தான். புட்பதந்தன் மாலியாவனைச் சிலந்தியாகுமாறு சபித்தான். இருவரும் இறைவன் ஆணையின்படி இத்திருத்தலத்திலே யானையும் சிலந்தியுமாகப் பிறந்து சிவபிரானுடைய திருத்தொண்டிலேயே ஈடுபட்டுப் பழம்பிறப்பின் பகை காரணமாக இப்பிறப்பிலும் மாறுபட்டுப் பகைத்து மாண்டு, முடிவில் வீடு பேறு பெற்றனர். முதலில் யானையைக் கொல்லச் சிலந்தியே முயன்றதனால், அதற்கு மீண்டும் ஒரு பிறப்பு வந்தது. அப்பிறப்பும் மேலானதாக எய்தியது.
வாய்நூலால் பந்தரிட்ட புண்ணியத்திற்கு மன்னனாகப் பிறந்து உலகம் முழுவதும் காக்கும் பேறு சிலந்திக்கு உண்டாகியது என்றால் ஆலயப் பணியின் பெருமையை இதனால் நன்கு உணர்ந்து கொள்ளலாம். நூலால் பந்தரிட சிவபுண்ணியம் அரச பதவியைத் தருமாயின், கல்லால் ஆலயம் எழுப்பிய தருமசீலர்களுக்கு எத்துணைப் பெரிய பதவி கிடைக்கும்.?
சுபதேவன் என்ற சோழ மன்னன் கமலவதி என்ற மனைவியுடன் சோழநாட்டை அரசு புரிந்தான். அவன் மகப்பேறு இன்மை குறித்து வருந்தினான். தில்லையம்பதி சென்று அம்பலவாணரை வேண்டித் தவம் புரிந்தான். சிவபெருமான் திருவருள் செய்தபடி சிலந்தி வந்து கமலவதியின் வயிற்றில் கருவடைந்தது.
கரு வளர்ந்து குழந்தை உதிக்கும் பருவம் வந்தது. சோதிட வல்லுநர் “இன்னும் ஒரு நாழிகை கழித்துக் குழந்தை உதிக்குமாயின் இம்மூவுலகும் ஆளக்கூடியதாக இக் குழந்தை இருக்கும் என்று கூறினர். அது கேட்ட அரச மாதேவி மகன் ஒரு நாழிகை கழித்து பிறப்பதற்கு வழி யாது என்று சிந்தித்தாள். தன் தோழிகளுடன் ஆய்ந்தாள். கால் மேலாகவும், தலை கீழாகவும் தன்னை அமைக்குமாறு கூறினாள். அவ்வண்ணமே அவளைத் தலை கீழாகத் தூக்கிக் கட்டினார்கள். காலம் உணர்ந்தார் கூறிய நேரம் வந்தவுடன் கட்டினை நீக்கி மகவைப் பெற்றெடுத்தாள். இதனால் குழந்தை கண் சிவந்து பிறந்தது.
தாய், “என் மகன் செங்கணான்” என்று கூறித் தன்குழந்தையை அணைத்தாள். ஆவிபிரிந்தாள். தன் உயிர்க்கு இறுதி பயக்கும் என்று தெரிந்து, மகன் சிறப்பை முன்னிட்டு அளக்கமுடியாத வேதனையைத் தாங்கிப் பிள்ளையைப் பெற்று உயிர் துறந்தாள் என்னில், தாயன்பு எத்தனை உயர்ந்தது?.
தாயைப் பிரிந்த சேயைச் சுபதேவன் இனிது வளர்த்தான். கோச்செங்கண்ணர் வேதாகமங்களையும் வில்வித்தைகளையும் கற்றுணர்ந்தார். உரியகாலத்தில் மகனுக்கு மகுடம் புனைந்து சுபதேவன் கானகம் புகுந்து தவம் செய்து சிவபதம் அடைந்தான்.
கோச்செங்கட்சோழர் உலகத்தை ஒரு நெறி நிறுத்தி அரசாள்வாராயினார். அவர் முற்பிறப்பின் உணர்வு பெற்றார். சிவபெருமானுக்குக் காதலோடு ஆலயம் பல கட்ட எண்ணினார். திருவானைக்காவில் தாம் முதலில் அருள்பெற்ற காரணத்தால் அங்கு வெண்ணாவலடியில் வாழும் செழுநீர்த் திரளாகிய சிவமூர்த்திக்கு அழகிய ஆலயம் கட்டி முடித்தார். முற்பிறப்பில் ஆனை செய்த இடரை நினைந்து ஆனை நுழையாதபடி வாயில் வைத்து அமைத்தார். ஐந்து பூதத்தலங்களில் ஒன்றாகிய இந்த சேத்திரம் கருவறைச் சிறுவாயிலுடன் அமைந்துள்ளது இன்றும் காணப்பெறும்.
மந்திரிகளை ஏவிச் சோழநாட்டில் ஆங்காங்கு சிவாலயங்கள் பல புதுக்கினார். அக்கோயில் தோறும் அமுது படைக்கும் திருவிழாக்களுக்கு நிபந்தங்களும் அமைத்தார். கோச்செங்கட்சோழர் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களும், திருமாலுக்கு மூன்று கோயில்களும் எழுப்பியதாகத் தெரிகிறது. கோச்செங்கட்சோழர் முடிவில் திருத்தில்லை சென்று அம்பலத்தாடும் ஆடலரசனை ஆறுகாலங்களிலும் வழிபட்டு மகிழ்ந்தார். அங்கு இறைவனைப் பூசிக்கும் அந்தணர்களுக்கும் மாளிகைகள் பல புதுக்கித் தந்தார்.
இவருடைய பெருமையை அடியில் வரும் அப்பர் பெருமான் தேவாரம் நன்கு விளக்குகிறது.
சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழற் பந்தர் செய்து
உலந்தவன் இறந்த போதே கோச்செங்கணானுமாகக்
கலந்தநீர் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கை வீரட்ட னாரே.
– திருமுறைக் கதைகள், முதற்பதிப்பு: ஆவணி 1999, இந்து சமயப் பேரவை, கனடா.
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
சிவராத்திரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026