கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2026
பார்வையிட்டோர்: 53 
வாசிப்பு நேரம்: 29 நிமிடங்கள்

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம் – 13

மாசி மாதம் தொடங்கியது. பொதுவாக எல்லோருமே படிப்பில் முனைந்து நின்றார்கள். பகலும் இரவும் எல்லோரும் புத்தகமும் கையுமாக இருந்தார்கள். சிறப்பாக, இரண்டாம் இண்டர் வகுப்பில் இருந்தவர்களும் பல்கலைக்கழகத் தேர்வுக்குச் செல்லும் மற்ற மாணவர்களும் ஓயாமல் படித்தார்கள். அவர்களின் அறையில் இரவில் நெடுநேரம் விளக்குகளின் ஒளி காணப்பட்டது. சந்திரனும் படித்தான்.

தேர்வு நெருக்கத்தில் ஊக்கம் ஊட்டிச் சந்திரனுடைய தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் சந்திரனைக் கண்டு நன்றாகப் படிக்குமாறு சொல்லவேண்டும் என்று குறித்திருந்தார். அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அவனுடைய அறைக்குச் சென்றேன். அவன் நாற்காலியில் சாய்ந்தபடியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மேசையில் ஆங்கிலப் புத்தகம் திறந்தபடியே இருந்தது. ஒலி செய்யாமல் சென்று மேசைப் பக்கத்தில் உட்கார்ந்தேன். புத்தகத்தின் இடையே புகைப்படம் இருப்பதுபோல் தோன்றியது. குடும்பத்தாரின் படமோ, அல்லது சந்திரனின் படமோ என்று மெல்ல எடுத்துப் பார்த்தேன். ஒரு பெண்ணின் படமாக இருந்தது. கீழே “க. இமாவதி” என்று கையெழுத்தும் இருந்தது. படத்தை உற்று நோக்கினேன். நாடகத்தன்று அவனோடு பேசிய அந்தப் பெண்தானோ என்று எண்ணி மறுபடியும் பார்த்தேன். அவ்வாறுதான் தோன்றியது.

படத்தைப் பழையபடியே வைத்துவிட்டேன். சந்திரன் இன்னும் எழவில்லை. சிறிது நேரம் சிந்தித்தபடி இருந்தேன். மாலன் சொன்னபடி காதலாகத்தான் இருக்குமோ என்று எண்ணினேன். எப்படியாவது போகட்டும். தேர்வு நெருக்கத்தில் நன்றாகப் படித்துக் களைத்துபோய் இப்படித் தூங்குகிறானே, இதுவே போதும் என்றும் எண்ணினேன். அந்தப் புத்தகத்தின் பக்கங்களைத் தள்ளி மறுபடியும் ஒருமுறை அந்தப் படத்தைப் பார்த்தேன். கையெழுத்தையும் பார்த்தேன். பழையபடியே புத்தகத்தின் பக்கத்தைத் திறந்தாற் போல் வைத்தேன். அப்போதும் சந்திரன் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. பிறகு வந்து பார்க்கலாம் என்று எழுந்து வந்தேன். அவன் விழித்துக்கொண்டு “என்ன வேலு” என்றான்.

“ஒன்றும் இல்லை, அப்பா கடிதம் எழுதியிருக்கிறார்.”

“எதைப்பற்றி?”

“உன் படிப்பைப் பற்றி”

“எனக்கும் எழுதியிருக்கிறார்” என்று சொல்லி நிறுத்தி, சிறிது பொறுத்து, “சரி” என்றான்.

நான் வந்துவிட்டேன்.

எங்களுக்கும் கல்லூரித் தேர்வுகள் நெருங்கின. சந்திரன் முதலானவர்களுக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகள் நெருங்கின. மாலனும் நானும் போட்டியிட்டுப் படிப்பது என்று எங்களுக்குள் தீர்மானம் செய்துகொண்டோம். ஒரு நாள் மாலை அவன் என்னிடம் வந்து, “வேலு! கோயிலுக்குப் போய் வருவோம்” என்றான். நான் இசைந்து எழுந்தேன்.

வழியில் அவன், “மற்றவர்கள் யாருக்கும் சொல்லாதே. நான் எப்போதும் தேர்வுக்கு முன் ஓர் அருச்சனை செய்வது வழக்கம். அதோடு ஒரு பிரார்த்தனை செய்து கொண்டு, தேர்வு வெற்றி எனத் தெரிந்தவுடனே போய் அந்தப் பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருவேன். எஸ்.எஸ்.எல்.சி-யும் அப்படித்தான் தேறினேன். இப்போது அதற்காகத்தான் போகிறேன். நீயும் தேர்வை முன்னிட்டு அருச்சனை செய்; ஒரு பிரார்த்தனையும் செய்துகொள்” என்றான்.

என் மனத்தே பெருஞ்சோர்வு வந்தது. படித்த பையன் இப்படி எண்ணுகிறானே. எண்ணுவதையும் இவ்வளவு உண்மை என எண்ணுகிறானே. இவனிடம் என்ன சொல்வது என்று வருந்தினேன். “கோயிலுக்குப் போகலாம், வழிபாடு செய்யலாம். மனத்தைக் காக்கும்படி வேண்டலாம்; சோர்வைப் போக்கி ஊக்கம் தரும்படியாகவும் வேண்டலாம்; ஆனால் தேர்வில் வெற்றி தருமாறு வேண்டுவதா? அதற்கு லஞ்சமாக அருச்சனையும் பிரார்த்தனையும் செய்வதா? எனக்கு இப்படிப்பட்ட போலி வழிபாடு பிடிக்காது. நான் திரும்பிப் போகிறேன்” என்றேன்.

“நீ நம்பாவிட்டால் போகட்டும், துணைக்காவது என்னோடு வா” என்று என் இரு கைகளையும் பற்றிக் கொண்டான். அவனுடைய அன்புக்காகத் துணையாகப் போய் வந்தேன். திரும்பி வந்தபோது, “உனக்கு இதனுடைய பயன் எல்லாம் இப்போது தெரியாது; போக போகத் தெரியும்” என்றான்.

“பார்த்தாயா? நீ என்னை வென்றுவிட்டதுபோல் பேசுகிறாய்” என்று உற்றுப்பார்த்தேன்.

“சரி, சரி. வா” என்று கைகளைப் பற்றினான்.

“நான் கடவுளை மிகப் பெரிய சக்தியாக எண்ணி வழிபடுகிறேன். ஒழுங்கான ஆட்சித் தலைவராக மதித்து அன்பு செலுத்துகிறேன். சின்ன சின்ன பொருளை எல்லாம் பார்த்து விதிகளை மாற்றி உதவி செய்யும் சிறுமை அவரிடம் இல்லை” என்றேன்.

அவன் அதற்கும் ஒன்றும் விடை கூறாமல், “எப்படியாவது இருக்கட்டும்” என்று நழுவினான்.

தேர்வுகளில் இருவரும் நன்றாகவே எழுதிக்கொண்டு வந்தோம். ஆனால் மாலனிடத்தில் மட்டும் அடிக்கடி ஏக்கமும் சோர்வும் காணப்பட்டன. இருந்தபோதிலும் விடா முயற்சியோடு படித்து எழுதினான்.

சந்திரனுடைய அறைக்கும் அடிக்கடி போய் எட்டிப் பார்த்து வந்தேன். தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் போய் எப்படி எழுதினான் என்று தெரிந்து வந்தேன். ஆங்கிலத்தில் பாடங்கள் மறந்து போவதாகவும் தமிழில் நன்றாக எழுதலாம் என்றும் கூறினான். கணக்குப் பாடங்களும் விஞ்ஞானப் பாடங்களும் நிறைய இருப்பதாகச் சொன்னான். அவனுக்குத் தேர்வில் உண்மையான ஆர்வம் இருந்ததை உணர்ந்து மகிழ்ந்தேன்.

ஆங்கிலத் தேர்வு நடந்த மூன்று நாட்களும் மாலையில் அவனுடைய அறைக்குப் போய், “எப்படி எழுதினாய்.” என்று கேட்டேன். “ஏறக்குறைய எழுதியிருக்கிறேன்” என்று சொல்லி வினாத்தாள்களைக் காட்டினான்.

தமிழ்த் தேர்வு நடந்த இரண்டு நாட்களிலும் கேட்டபோது, “நன்றாக எழுதியிருக்கிறேன்” என்றான்.

கணக்குத் தேர்வு நடந்த இரண்டு நாட்களும் போயிருந்து கேட்டேன். “நூற்றுக்கு ஐம்பது வரும். அவ்வளவுதான்” என்றான்.

“வாலாசாவில் நூற்றுக்கு நூறும் தொண்ணூற்றெட்டுமாக வாங்கிக் கொண்டிருந்த நீ, எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்து என்னை வல்லவன் ஆக்கிய நீயா இப்படிச் சொல்வது?” என்றேன்.

“என்ன செய்வது?” என்று இரண்டு சொற்களில் முடித்தான்.

விஞ்ஞானப் பாடத்துத் தேர்வு அடுத்துத் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் விடுமுறை தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்காக வந்திருந்தது. விடுமுறையில் வெளியே போய்ச் சுற்றுகிறானா, ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறானா பார்க்கலாம் என்று சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். சந்திரன் குப்புறப்படுத்திருந்தான். விம்மி விம்மி அழுவது கேட்டது. கண்களைத் துடைப்பதைக் கண்டேன். பக்கத்தில் ஒரு கவர் ஓரம் கிழிக்கப்பட்டிருந்தது. தனியே ஒரு கடிதம் கிடந்தது. சுவர் ஓரத்தில் பளபளப்பான தாள் ஒன்று இரண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டிருந்தது. கிழித்த ஒரு துண்டில் ஒரு பெண்ணின் படமும், மற்றொன்றில் ஆணின் படமும் இருந்தன. திருமண அழைப்பிதழோ என்று ஐயுற்றேன். அவனுடைய தங்கை கற்பகத்தின் திருமண அழைப்பிதழோ என்று எண்ணினேன். என் மனம் பகீரென்றது. சந்திரனுக்கும் விருப்பமில்லாத இடத்தில் கற்பகத்தைத் திருமணம் செய்து கொடுக்கிறார்களோ? கற்பகத்தின் திருமணமா? இவ்வாறு எண்ணியவுடன், என் கண்களும் கலங்கின; என் இதயமும் விம்மியது. “சந்திரா?” என்றேன். அவன் திரும்பிப் பார்த்துவிட்டு, “இப்போது வராதே, போய்விடு” என்றான். எனக்கு அழுகை வந்துவிட்டது. “உன் துயரத்தில் எனக்கும் பங்கு உண்டு! சந்திரா! இதற்காகக் கலங்காதே. என்ன செய்வது!” என்றேன்.

அவன் திடுக்கிட்டாற்போல் பார்த்தான். “உனக்கும் தெரியுமா?” என்றான்.

“அதோ தெரியுதே” என்று திருமண அழைப்பிதழைக் காட்டினேன்.

“வேலு! மோசம் செய்து விட்டாளே!” என்று அறையின் கதவைத் திறந்தான். கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. முகம் வீங்கியிருந்தது. உடனே படுக்கையில் விழுந்து விம்மி அழுதான். “இதோ, பார்” என்று பக்கத்தில் இருந்த கடிதத்தை எடுத்து நீட்டியபடியே, “படி, படித்துப் பாரடா” என்றான். படித்துப் பார்த்தேன்.

அன்புள்ள அண்ணா,

இத்துடன் என் திருமண அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். நேரில் வந்து கொடுக்க எண்ணினேன். ஆனால் தேர்வுக்கு உரிய காலம் அல்லவா? இன்னும் மூன்று நான்கு நாளில் எல்லாம் முடிந்து விடும். பிறகு நான் நேரில் வருவதற்குள் நீங்கள் ஊர்க்குப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடுவீர்களோ என்று எண்ணியே தபாலில் அனுப்பியுள்ளேன். மன்னிக்க.

தேர்வுகள் நன்றாக எழுதியுள்ளேன். இனி உள்ளவற்றையும் நன்றாக எழுதிவிடுவேன். நீங்களும் அவ்வாறே செய்திருப்பீர்கள்.

உங்கள் அன்புக்குரிய
க. இமாவதி.

கடிதத்தைப் படித்த பிறகு என் உள்ளத்தின் துயரம் போயிற்று. உண்மை விளங்கிற்று. சந்திரனைப் பார்த்தேன். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தான்.

“தேர்வு முடிந்ததும், ஊர்க்கு உன்னை அழைத்துக் கொண்டுபோய் அப்பாவுக்குச் சொல்லி அவளை மணம் செய்துகொள்ள…” என்று வாக்கியத்தை முடிக்காமலே அழுதான். “இப்படி ஒரு திருமண அழைப்பு அச்சிட எண்ணினேன். அவள் செய்துவிட்டாள்” என்று தான் கிழித்து வீசியதைக் காட்டினான். மறுபடியும் குழம்பிய குரலில், “அவளுடைய வாழ்க்கை தொடங்குகிறது; என் வாழ்க்கை முடிகிறது” என்று கதறினான்.

என்ன சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேசாமல் இருந்தேன். கிழிந்த அழைப்பிதழை எடுத்துப் பார்த்தேன். முன் பார்த்த அதே பெண்ணின் படம் இருந்தது. கீழே “இமாவதி” என்று அச்சிட்டிருந்தது. அடுத்த துண்டில் மணமகனின் படம் இருந்தது. அதன் கீழே “சிவசங்கரன்” என்று அச்சிட்டிருந்தது.

“இனிமேல் நான் படிக்க முடியாது. சாகத்தான் முடியும்.” என்றான் சந்திரன்.

“பைத்தியம் உனக்கு” என்றேன்.

“உனக்குக் காதல் என்றால் என்ன என்று தெரியாது. நீ ஒரு மண்டு, மக்கு, உணர்ச்சியற்ற மரம்” என்றான்.

“இருக்கலாம். ஆனால் இது காதல் அல்ல. அவள் கலங்கவில்லை. நீ மட்டும் இப்படி அழுகிறாய். இதுவா காதல்? அவள் விரும்பவில்லை. நீ மட்டும்….”

சந்திரனுக்குக் கோபம் வந்தது. அழுது சிவந்த கண்களே கோபக்கண்களாக மாறி, என்னை பார்த்து, “எனக்கு அறிவுரை சொல்ல வந்துவிட்டாயா? எழுந்து போ” என்றான். மறுபடியும் குப்புறப்படுத்து, “பைத்தியமா! நீயா இப்படிச் சொல்கிறாய்?” என்று சொல்லிக்கொண்டே அழுதான்.

இனி என்ன சொல்லியபோதிலும் தவறாகவே கருதுவான் என உணர்ந்தேன். நான் ஓர் ஆண்டு தவறி விடவே, இவன் மேல் வகுப்புக்கு வந்து என்னைப் பற்றிக் குறைவாக எண்ணுகிறான்; அறிவிலும் அனுபவத்திலும் தான் பெரியவன் என்று கருதுகிறான்; அதனால்தான் அறிவுரை கூற எனக்கு உரிமை இல்லை என்கிறான். கல்லூரிக்கு வந்த பிறகு பழகிய பழக்கத்திலும் என்னைச் சிறு பையன் போலவும் தான் வளர்ந்த தமையன் போலவும் கருதி நடத்துகிறான்; அதனால்தான் நானாக நெருங்கிச் சென்ற காலங்களிலும் புறக்கணித்திருக்கிறான்; நான் அன்பினால் பணிந்து போனதை, இவன் தவறாக உணர்ந்து உயர்வு மனப்பான்மை கொண்டு விட்டான்; ஒருகால் எனக்குக் கணக்குக் கற்றுக்கொடுத்த காரணத்தாலேயே நான் அறிவில் சிறியவன் என்றும் தான் அறிவு முதிர்ந்தவன் என்றும் எண்ணிவிட்டானோ; வயதிலும் இவன் என்னைவிட ஓராண்டுதான் மூத்தவன்; அப்படி இருக்க நான் ஏன் இவனிடம் இப்படிப் பணிந்து இந்தச் சிறுமைக்கு ஆளாகவேண்டும் என்று என் உள்ளத்தில் பல எண்ணங்கள் எழுந்தன. எழுந்து வந்துவிடலாமா என்று தோன்றியது. உடனே அவனிடம் நான் கொண்டிருந்த நன்றியுணர்ச்சியும் குடும்பப்பிணைப்பும் என்னைத் தடுத்தன. அழுது கொண்டிருந்த அவன் பக்கத்திலேயே இருந்தேன்.

சிறிது பொறுத்து, “நடந்தது நடந்துவிட்டது. அவள் உன்னை ஏமாற்றிவிட்டாள்; மோசம் செய்துவிட்டாள் என்றே வைத்துக்கொள்ளலாம். அதற்காக இப்போது என்ன செய்வது? அழுது அவளுடைய மனத்தை மாற்றி விடமுடியுமா? எழுந்து முகத்தை அலம்பிக்கொண்டு படிக்க உட்காரு. அல்லது வெளியே எங்காவது போய் வரலாம், வா. இதை மறப்பதற்கு வழி அதுவே” என்றேன்.

அவன் ஒன்றும் கூறாமல், குப்புறப் படுத்தபடியே கிடந்தான்.

எதை நினைத்துக்கொண்டோ, சிறிது நேரத்தில் ஒரு பெருமூச்சு விட்டு விம்மினான். “நீ அப்பாவுக்கு எழுதிவிடு. நான் தேர்வுக்குப் படிக்கப் போவதில்லை; ஊருக்கும் வரப் போவதில்லை என்று எழுதிவிடு” என்றான்.

இப்போது எதைச் சொல்லியும் பயன்படாது போல் இருக்கிறது. அழும் வரையில் அழுது ஓயுமாறு தனியே விட்டு, பிறகு வந்து சொல்லலாம் என்று எண்ணி எழுந்தேன். “இருக்கட்டும், பிறகு வருவேன்” என்று சொல்லிப் புறப்பட்டேன்.

அறைக்கு வந்த பிறகு என் மனம் அமைதியாக இல்லை. அவன் தனியே எங்காவது போய்த் தற்கொலை செய்து கொள்வானோ என்று மனம் அஞ்சியது. அதனால் உட்காருவதும் எழுந்து போய்ப் பார்ப்பதுமாக இருந்தேன். பக்கத்து அறைகளின் கதவின் ஒலி கேட்டாலும் அவன்தான் கதவைச் சாத்துகிறானோ என்று எழுந்து பார்த்தேன். ஏதாவது நஞ்சு வாங்கி வைத்திருந்து அதைக் குடித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வானோ, அப்படியானால் உள்ளே இருக்கிறான் என்று விட்டுவிடுவதிலும் ஆபத்து இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி எழுந்துபோய்ச் சன்னல் வழியாகப் பார்த்து வந்தேன். அவன் பழையபடி அதே கோலத்தில் கிடந்தான். கடிதம் காலையில்தானே வந்திருக்கிறது. அதற்குள் எப்படி நஞ்சு வாங்கிக்கொண்டு வந்து அறையில் வைத்திருக்க முடியும். வீணாக நம் மனம் அஞ்சுகிறது என்று ஒருவாறு தேறினேன்.

அப்பால் சிறிது நேரத்தில் அவனுடைய அறையில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. எழுந்துப் போய்ப் பார்த்தேன். அவன் படுக்கையில் உட்கார்ந்து இரண்டு மாணவருடன் பேசிக்கொண்டிருந்தான். கிழிந்த அழைப்பிதழையும் கடிதத்தையும் எடுத்து மறைத்துவிட்டிருந்தான். “உடம்பு நன்றாக இல்லை. ஒரே மயக்கம். வயிற்று நோவு. படிக்க முடியவில்லை” என்று பொய்யான காரணத்தை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“இரவில் நெடுநேரம் கண் விழித்துப் படித்திருப்பாய். அதனால் வந்திருக்கும்” என்றான் ஒருவன்.

“அல்லது, கண்ட வேளையில் எல்லாம் தேநீர் குடிக்கிறாயாமே, அதனால் வந்திருக்கும், சனியன்” என்றான் மற்றொருவன்.

“என்னவோ, தொல்லை” என்று சந்திரன் கண்களைத் தேய்த்து கைத்துண்டினால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, ஒரு கவலையும் இல்லாதவன் போல் காட்டிக் கொண்டான். சிறிது நேரத்தில் இப்படி நடிக்கக்கூடியவன் இன்னும் சிறிது நேரத்தில் கவலையை மறந்து நடக்கவும் முடியும், படிக்கவும் முடியும் என்று நம்பிக்கை கொண்டேன்.

நண்பர்கள் போனபிறகு சென்று சன்னல் வழியாகப் பார்த்தேன். பழையபடியே படுத்துக்கொண்டிருந்தான். ஆனால் விம்மலும் கண்ணீரும் இல்லைபோல் தெரிந்தது.

நாலைந்து முறை எழுந்து எழுந்து போய்ப்பார்த்தேன். அவன் அதே நிலையில் இருந்தான். மாலைச் சிற்றுண்டிக்கு நேரம் ஆயிற்று. போய் அழைத்தேன். “எனக்கு தேவை இல்லை. வீணாகத் தொந்தரவு செய்யாதே; என் அறைப் பக்கம் வராதே” என்று கடிந்தான்.

பேசாமல் திரும்பினேன். நான் சிற்றுண்டி உண்ட பிறகு வந்து சன்னலருகே நின்று பார்த்தேன். அவன் அங்கே இல்லை. என் நெஞ்சு திடுக்கிட்டது. கதவை மெல்லத் தள்ளிப்பார்த்தேன். பிறகுதான் அது வெளியே பூட்டப்பட்டிருந்ததைக் கவனித்தேன். எங்கே போயிருப்பான் என்று எண்ணிக் கவலைப்பட்டு நின்று கொண்டிருந்த போது, அவன் குளிக்கும் அறைக்குப்போய் முகம் அலம்பிக் கொண்டு திரும்பியதைக் கண்டேன். என் உள்ளம் குளிர்ந்தது. என்னைப் பார்த்ததும் பேசாமல், சாவி எடுத்து அறையைத் திறந்து உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டான். சிறிது நேரத்தில் நண்பர் சிலர் வந்து, “ஏன் இப்படி அழுமூஞ்சிபோல உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? வெளியே சுற்றிவிட்டு வந்து படிக்க உட்காரலாம். வா” என்று அவனை வற்புறுத்தி அழைப்பது கேட்டது. அப்படியாவது அவர்களோடு போனால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அவன் புறப்படுவதாக இல்லை. நண்பர்கள் வெளியே வந்தனர். சிறிது கழித்துப்போய் எட்டிப்பார்த்தேன். கட்டிலின் மேல் படுத்து அந்தப் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். இன்னும் சில நண்பர்கள் வந்து கதவைத் தட்டினர். “அட என்னப்பா! இரவெல்லாம் கண் விழித்தாயா? இப்போது தூங்குகிறாயே” என்றார்கள். “ஆமாம்’பா இப்போது எழுப்பித் தொந்தரவு செய்யாதீர்கள். தயவு செய்து போய்வாங்க” என்று படுத்தபடியே அனுப்பி விட்டான். நானும் எங்கும் வெளியே போகவில்லை.

விடுதி முழுதும் விளக்கொளி பரவியது. ஒரே நோக்கமாக மாணவர்கள் எல்லாரும் தம் தம் அறையில் படிக்கத் தொடங்கினார்கள். சந்திரனுடைய அறையில் மட்டும் விளக்கு இல்லை. அந்த வழியே வந்த சிலர், “இது நடிகமணி சந்திரனுடைய அறை அல்லவா? எங்கே சிவகாமி காணோமே! இமாவதியைத் தேடிக்கொண்டு போயிருப்பான்” என்று பேசிக்கொண்டு போனார்கள். அதைக்கேட்டபோது என் மனமே கலங்கியது என்றால், உள்ளே ஒரு மூலையில் படுத்துக்கிடந்த சந்திரனுடைய மனம் எவ்வளவு வருந்தியிருக்குமோ? அந்தப் பாவிப் பெண் இமாவதி அப்படி இவனை ஆசை காட்டி ஏமாற்ற வேண்டுமா?… இல்லை, இல்லை. அவளுடைய கடிதத்தைப் பார்த்தால் அப்படி ஆசை காட்டியவளாகத் தெரியவில்லையே. நண்பன் ஒருவன் மற்றொரு நண்பனுக்குக் கடிதம் எழுதியது போலவே எழுதியிருந்தாள். காதல் செய்து மணந்து கொள்வதாக ஆசைகாட்டியிருந்தால் இப்படி உண்மையான நட்புரிமையோடு திருமண அழைப்பு அனுப்பிருக்க முடியுமா? அழைப்போடு கடிதம் ஒன்று எழுதியிருக்க முடியுமா? கடிதத்தில் கலங்காமல் எழுதியிருக்க முடியுமா? தான் நன்றாகத் தேர்வு எழுதியிருப்பதாகவும், இனியும் அவ்வாறு எழுதிக் குறையை முடிக்கப் போவதாகவும் குறிக்க முடியுமா? அதே கடிதத்தில் சந்திரனும் நன்றாக எழுதி வெற்றி பெறவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியுமா? ஒரு வேளை போலி ஆசைகாட்டி அவனை ஏமாற்றிய வேசித்தனம் உடையவளாக இருந்தால், இப்படி உண்மையன்பு உள்ள ஒரு கடிதம் எழுத முடியுமா? ஏமாற்றியவள் தன் ஏமாற்று வித்தையை வெளிப்படையாகக் காட்டி அழைப்பிதழை அனுப்புவாளா? இருக்கவே இருக்காது. இமாவதி உண்மையாக நல்ல பெண்ணாகவே இருக்க வேண்டும். சந்திரனிடத்தில் அன்பு மிகுந்த பெண்ணேதான். ஆனால் அந்த அன்பை இவன் காதல் என்று எண்ணிவிட்டான், பைத்தியக்காரன். ஆண் ஒருவன் மிகுந்த அன்பு செலுத்தினால் அது நட்புத்தானே? அப்படிப்பட்ட அன்பை ஒரு பெண்ணும் ஒருவனிடம் செலுத்த முடியாதா? அதுவும் நட்புத்தானே? ஆணுக்கும் பெண்ணுக்கும் மனத்தில் அன்பு நட்பு எல்லாம் உண்டு அல்லவா? பெண் அன்பு செலுத்தினால் அதை ஏன் ஆண்கள் காதல் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். என்னிடம் என் தங்கை அன்பு செலுத்துவதுபோல், ஒரு பெண் உடம்பின் எண்ணம் இல்லாத அன்பைச் செலுத்த முடியாதா? இவ்வளவு கூர்மையான அறிவு உள்ள சந்திரன் இதை உணராமல் அலைகின்றானே! இவனுடைய அறிவையும் அழகையும் கண்டு அந்தப் பெண் அன்பு கொண்டிருப்பாள்! அந்த அன்பை உடம்பின் எண்ணம் இல்லாமல் நட்பாக வளர்த்திருப்பாள்! அவளால் முடிந்தது; இவனால் முடியவில்லை. காதல் என்று கோட்டை கட்டிவிட்டான். இன்று கலங்கி நிற்கிறான் என்று பலப்பல எண்ணினேன்.

உணவு நேரத்தில் சில மாணவர் வந்து கதவருகே நின்று, “எங்கே போயிருக்கிறான். காணோமே” என்றார்கள். அவர்களில் ஒருவன், “இதோ பூட்டு இல்லையே! விளக்கு அணைத்துவிட்டு உள்ளே இருக்கிறான்” என்றான். “சந்திரா! சந்திரா!” என்று கதவைத் தட்டினார்கள். அதற்குள் ஒருவன், “பாமா கதவைத் திறவாய்” என்று பாட்டுப் பாடத் தொடங்கினான். சந்திரன் உள்ளே இருந்து, “எனக்கு உடம்பு நன்றாக இல்லை கொஞ்சம் தூங்கிவிட்டுப் பிறகு வருவேன். தொந்தரவு செய்யாதீர்கள்” என்றான். அவர்கள் அங்கிருந்து உணவுக் கூடத்துக்குச் சென்றார்கள். நான் போய் அழைத்தாலும் அதே போல்தான் சொல்வான் என்று உணர்ந்து நானும் உணவுக்குப் புறப்பட்டேன். புறப்பட்ட நேரத்தில் மாலன் வந்து சேர்ந்தான். “என்ன! பக்கத்து அறையில் உங்கள் ஊர் ஆள் இல்லையே! விளக்கே காணோமே! ஆள் இல்லா விட்டாலும் விளக்குப் போட்டுப் பூட்டிவிட்டு மின்சாரத்தைச் செலவு செய்வது கல்லூரி நாகரிகம் ஆயிற்றே” என்றான். “உஸ்” என்று அவனைத் தடுத்து உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்றேன். வழியில், “அவனுக்கு மனம் நன்றாக இல்லை என்று குறிப்பாகச் சொன்னேன். “ஏன்? ஏதாவது காதல் வந்து முற்றி விட்டதோ? அதுவும் தேர்வு நெருக்கடியிலா? அந்தப் பாழும் காதல் இன்னும் நான்கு நாள் தேர்வு முடிந்த பிறகு வந்து தொலையக் கூடாதா?” என்றான். “எனக்கு ஒன்றும் தெரியாது” என்று மழுப்பினேன்.

உண்டு திரும்பி வந்து பார்த்தபோது, சந்திரனுடைய அறை பூட்டியிருந்தது. உள்ளே விளக்கு இல்லை. மனம் திடுக்கிட்டது. இன்னொரு பக்கம், “அப்படி எங்கும் போயிருக்க மாட்டான். இன்னும் சிறிது நேரத்தில் உணவுக் கூடத்துக்கு வருவதாகச் சொன்னான் அல்லவா? அதன்படி உணவுக்குத்தான் போயிருப்பான். நம் எதிரே வரவில்லை. ஒருகால் தெற்குப்படி வழியாக இறங்கிப் போயிருப்பான்” என்று ஒருவகையில் ஆறுதலும் அடைந்தேன்.

என் முக வாட்டத்தை உணர்ந்த மாலன், “ஏன் அப்படிக் கவலைப்படுகிறாய்? சந்திரனுக்காகவா? உன்னை அவன் ஒரு பொருளாகவே கருதவில்லையே. நீ மட்டும் ஏன் இப்படி உயிரை விடுகிறாய்?” என்றான்.

“இவன் எப்படி இருந்தாலும் இவனுடைய அம்மா, அப்பா அத்தை எல்லாரும் நல்லவர்கள். குடும்பமே நல்ல குடும்பம். இவனும் என்னிடம் மிகமிக அன்பாக இருந்தான். இருவரும் ஓர் உயிர் போல் மூன்று ஆண்டுகள் கழித்தோம்” என்றேன்.

“சந்திரனுடைய ஊர் எது?” என்றான்.

ஊர் முதலியவற்றை எல்லாம் விரிவாகக் கூறினேன். அன்றுதான் மாலனும் தன் ஊரைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் விரிவாகக் கூறினான். சிறிது நேரம் வரையில் அக்கறையோடு கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு சந்திரனைப் பற்றிய எண்ணம் வந்துவிட்டது. மாலனை உட்காரவைத்து விட்டே எழுந்து போய்ப் பக்கத்து அறையைப் பார்த்தேன். பழையபடியே கதவு பூட்டியிருந்தது. திரும்பி வந்தேன்.

“இன்னும் வந்திருக்க மாட்டான்” என்றான்.

“வரவில்லை” என்றேன்.

“சரி, சரி படி நம் கடமையைச் செய்யவேண்டும்” என்று அவன் எழுந்து சென்றான்.

நேரம் ஆக ஆக என் கவலை மிகுதியாயிற்று. என் அறையின் வாயிற்படியிலேயே நின்றேன். கால் நோகவே, உள்ளே நாற்காலியைச் சன்னல் பக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு, வழியில் போவோரை எல்லாம் பார்த்திருந்தேன். மணி ஒன்பது அடிக்கும் வரையில் அவ்வாறே இருந்தேன்.

ஒருகால் இமாவதியையே தேடிக்கொண்டு போய் விட்டானோ? திருமண ஏற்பாடு உண்மைதானா என்று கேட்டு வருவதற்காகப் போனானோ? அல்லது வேறு யார் வீட்டுக்காவது போயிருப்பானோ? அவனுக்கு இந்த ஊரில் யார் நண்பர்கள்? யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே. உணவுக் கூடத்துக்குப் போய் உண்ட பிறகு, தனியே இருப்பதற்குப் பிடிக்காமல், அங்கிருந்து யாரேனும் ஒரு நண்பனுடைய அறைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணினேன். உடனே எல்லா அறையையும் பார்த்துவர வேண்டும் என்று மனம் தூண்டியது. எழுந்து அறையைப் பூட்டி விட்டு மெல்ல எல்லாப் பக்கத்தையும் சுற்றி வந்தேன். மாலனின் அறைப் பக்கமாக வந்தபோது அவன் என்னைப் பார்த்துவிட்டான்.

“என்ன? எங்கே போய் வருகிறாய்? அவனையா தேடுகிறாய்?” என்றான்.

“இல்லை தூக்கமாக இருந்தது. அதை மாற்றுவதற்காக இப்படி உலாவி வருகிறேன். நீ எழுந்து வரவேண்டா, படி நானும் போய்ப் படிக்கப் போகிறேன்” என்றேன்.

சந்திரனைக் காணாமலே என் அறைக்குத் திரும்பினேன். சரி, வெளியே யாருடைய வீட்டுக்கோ போயிருக்கிறான். காலையில் திரும்பி வந்துவிடுவான் என்று எண்ணி, படிப்பதற்காகப் புத்தகத்தை எடுத்தேன். படித்துக் கொண்டிருந்தபோது கதவு திறக்கும் ஒலி கேட்டு இருமுறை எழுந்து எழுந்து போய்ப் பார்த்தேன். அவனுடைய அறை பூட்டியது பூட்டியபடியே இருந்தது. மணி பத்து அடித்தது. சிறிது நேரம் படிப்பு, சிறிது நேரம் சந்திரன் நினைவு இப்படியே மாறி மாறிக் கழிந்தது. பக்கத்தில் உள்ள மரங்களிலிருந்து ஆந்தையின் ஒலியும் சுவர்க்கோழியின் ஒலியும் கேட்டன. தூக்கம் வந்தது. கடைசியாக எழுந்து போய் ஒரு முறை பார்த்துவந்து உறங்கிவிட்டேன்.

இரவு 2 மணிக்குத் திடீரென்று என் உறக்கம் கலைந்தது. இரவு முன்னேரத்தில் படுத்தால் எப்போதும் விடியற்காலம் வரையில் ஒன்றும் அறியாமல் ஆழ்ந்து உறங்குகின்றவன் நான். தேர்வு நாட்களில் கடிகாரத்தில் 4, 4 1/2 மணிக்கு அலாரம் வைத்துவிட்டுப் படுத்தாலும், அலாரம் அடிக்கும் போது அந்தக் கடிகாரத்தின் மேல் வெறுப்போடும் ஆத்திரத்தோடும் எழுவேன். சில நாட்களில் எழுந்து நிறுத்தியதும் மறுபடியும் படுத்துவிடுவேன். வீட்டில் இருந்த காலங்களில் அம்மா மெல்லத் தட்டிக் கொடுத்து என்னை எழுப்பி உட்கார வைப்பார். அப்படி ஆழ்ந்து உறங்கும் வழக்கம் உடைய நான் அன்று எதிர்பாராமல் 2 மணிக்கு விழித்துக் கொண்டது எனக்கே வியப்பாக இருந்தது என் மனத்தில் இருந்த கவலையும் திகிலும் அதற்குக் காரணமாக இருந்திருக்கும்.

எழுந்து விளக்கிட்டுக் கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். எங்கும் ஒரே அமைதி நிலவியது. கிழக்குப் பகுதியில் தொலைவில் இரண்டு அறைகளில் மட்டும் விளக்கொளி தெரிந்தது. எம். ஏ. படிக்கும் மாணவர்கள் யாரேனும் இன்னும் உறங்காமல் தேநீர் குடித்துவிட்டுப் படித்துக்கொண்டிருக்கலாம்; அல்லது, முன்னேரத்தில் நன்றாகத் தூங்கிவிட்டு இப்போது விழித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணினேன். ஒருகால் சந்திரன் வந்திருக்கக்கூடும் என்று எண்ணி, கதவருகே போய்ப் பார்த்தேன். பூட்டிய பூட்டு அப்படியே இருந்தது. கொட்டாவி விட்டபடியே வந்து மறுபடியும் படுத்துக்கொண்டேன்.

அன்று அலாரம் 5 மணிக்கு வைத்திருந்தேன். ஆனால் அது அடிக்கவில்லை. அலாரத்துக்குச் சாவி கொடுக்க மறந்துவிட்டேன் என்பதைப் பிறகு கண்டேன். நான் விழித்தபோது மணி 5-30 ஆகியிருந்தது. பரபரப்போடு எழுந்தேன். மாணவர்கள் படிக்கும் குரல் பல கேட்டன. மரங்களில் காக்கை, குருவிகளின் பேச்சும் பாட்டும் கேட்டன. இன்பமான குயில்கள் இரண்டு மாறி மாறிக் கூவும் காதல் பாட்டின் இசையும் கேட்டது. இத்தனை குரல்களையும் கேட்டுக் கைகால் நீட்டித் திமிர்விட்டபடியே சிறிது நேரம் கிடந்தேன். சந்திரன் நினைவு வந்தது; பெருங்காஞ்சியில் அவனுடைய தந்தை அவனுக்காகக் கவலைப்பட்டுப் படிக்க வைத்ததை எண்ணினேன். இன்னும் சில மணி நேரத்தில் அவனுடைய விஞ்ஞானப் பாடத்தின் தேர்வு தொடங்குமே, படிக்காமலே, இருந்தால் அவன் எப்படிப் போய் எழுதுவான் என்று கவலைப்பட்டேன். முந்திய நாள் பகலில் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. “இனிமேல் தேர்வு எழுதமாட்டேன்; ஊருக்குப் போகமாட்டேன். அப்பாவுக்கு எழுதிவிடு” என்று சொன்னான். அதை நினைத்தவுடன் என் உள்ளம் திடுக்கிட்டுக் கலங்கியது.

உடனே எழுந்து சந்திரனுடைய அறையைப் பார்த்தேன். ஒரு மாறுதலும் காணப்படவில்லை. பரபரப்போடு திரும்பி வந்தேன். என் அறைக்குள் நுழைந்தபோது சன்னலின் கீழே ஒரு சாவி இருப்பதைக் கண்டேன். அது சந்திரனுடைய அறையின் சாவிபோலவே இருந்தது. அதை எடுத்துச்சென்று அவனுடைய அறையின் பூட்டைத் திறந்தேன் அது திறந்தது. என் மனம் மிகக் கலங்கியது. முந்திய இரவு நான் உணவுக் கூடத்துக்குப் போயிருந்தபோது, தன் அறையை பூட்டிச் சாவியைச் சன்னல் வழியாகப் போட்டுவிட்டு வெளியேறிப் போயிருப்பான் என எண்ணினேன். நொந்தேன். அவனுடைய அறைக்குச் சென்றேன். மேசைமேல் ஏதேனும் கடிதம் வைத்துவிட்டு போயிருக்ககூடும் என்று பார்த்தேன். அங்கு ஒன்றும் இல்லை. அறை வழக்கம் போலவே இருந்தது. அவனுடைய தோல்பை மட்டும் காணோம். பெட்டி முதலியவை அப்படியே இருந்தன. பெட்டி பூட்டப்பட்டுச் சாவி கீழே வைக்கப்பட்டிருந்தது. எல்லாம் திட்டமிட்டுச் செய்திருக்கிறான் என்பது நன்றாகத் தெரிந்தது. அறையைப் பூட்டிவிட்டு, மாலனிடம் விரைந்து சென்றேன். அவனுக்கு எல்லாச் செய்தியும் சொன்னேன். “வா, போகலாம். உடனே தபால் நிலையத்துக்குப் போய் அவனுடைய அப்பாவுக்கு ஒரு தந்தி கொடுப்போம்” என்றேன்.

அவன் ஒன்றும் பேசாமல் வந்தான். தபால் நிலையத்துக்குப் போய்த் தந்தி கொடுத்துவிட்டுத் திரும்பினோம். அதற்குள், நான் மாலனோடு பேசிய செய்தி எப்படியோ விடுதி முழுவதும் பரவியது. நாங்கள் திரும்பியவுடன் மாணவர் பலர் எங்களை நோக்கி வந்து, “என்ன செய்தி” என்று கேட்டார்கள். என் அறையை நோக்கி வந்தபோது சந்திரனுடைய அறைக்கு எதிரே மாணவர் சிலர் கூடியிருந்தது கண்டேன். ஒரு வேளை சந்திரன் திரும்பி வந்துவிட்டானோ? அதனால்தான் கூட்டம் இருக்கிறதோ என்று எண்ணிச் சிறிது மகிழ்ந்தேன். கூட்டத்தில் இருந்த சாந்தலிங்கம் என்னை நோக்கி விரைந்து வந்து, “உண்மையாகவா? நம்பவே முடியவில்லையே! அன்று சிறுநீர் அறையில் ஏற்பட்ட பிணக்கின் போது, அவ்வளவு அஞ்சாமையோடு என்னை எதிர்த்துப் பேசினானே! அவனுடைய தைரியத்தையும் தெளிவையும் நான் மனமாரப் போற்றினேனே! அப்படிப்பட்டவனா மனம் தளர்ந்து இப்படிச் செய்திருப்பான்?” என்று வருந்தினான்.

செய்தி விடுதிக் காப்பாளர்க்கு எட்டியது. அவரும் வந்தார். என்னைக் கேட்டார். நான் சொன்னபிறகு சிறிது சிந்தித்தபடி இருந்து, “ஊருக்குத்தான் போயிருப்பான் பார்க்கலாம். தந்திபோன பிறகு என்ன செய்தி வருகிறது என்று பார்ப்போம்” என்றார்.

திடீரென்று எனக்கு ஓர் எண்ணம் எழுந்தது. எங்காவது போய்க் கடலிலோ வேறு எங்கோ விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் என்று எண்ணியதும் மனம் திடுக்கிட்டது. மாலனிடம் சென்று சொன்னேன். அவன் உடனே படிப்பகத்துக்கு அழைத்துச் சென்று, செய்தித் தாளில் விபத்து தற்கொலை முதலான செய்திகளைத் தேடிப் பார்த்தான். ஆங்கிலத்தாள் தமிழ்த்தாள் இரண்டிலும் பார்த்த பிறகு, “கவலையே வேண்டா, அப்படி நடந்திருக்காது, நடந்திருந்தால் உடனே செய்தி வந்திருக்கும்” என்றான்.

அன்றைய தேர்வில் நான் நன்றாக எழுதவில்லை. எழுதும்போது, சந்திரனுடைய தேர்வுபற்றி அடிக்கடி எண்ணம் வந்தது. இரண்டு ஆண்டுகள் இண்டர் படித்துக் கடைசியில் இப்படி எல்லாவற்றையும் வீணாக்கிவிட்டானே என்று வருந்தினேன்.

மாலையில் சந்திரனுடைய வீட்டுக்குக் கடிதம் எழுதினேன். அதில் எல்லாச் செய்திகளையும் விரிவாக எழுதியிருந்தேன்.

அன்று முழுவதும் என் மனம் மிகச் சோர்ந்திருந்தது. அழகன், அறிஞன் என்று நான் போற்றிய நண்பன் இப்படி ஆகவேண்டுமா என்று எண்ணி எண்ணி மனம் களைத்துப் போயிற்று. முதலிலிருந்தே எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்தான்; என்னை நெருங்கவொட்டாமல் ஒதுக்கினான். என் நட்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் அன்போடு உதவி செய்ய முடியாமற் போயிற்று; சாமண்ணாவும் அத்தையும் அந்த அம்மாவும் கேட்டு எவ்வளவு வருந்துகிறார்களோ; கற்பகம் தன் அண்ணனை நினைந்து நினைந்து கதறுவாள் என்றெல்லாம் எண்ணிச் சோர்வு மிகுதியாயிற்று. மனத்தின் சோர்வு உடம்பையும் தாக்கவே, அன்றிரவு பத்து மணிக்குள்ளாகவே கொட்டாவி மேல் கொட்டாவி வந்தது. அயர்ந்து படுத்தேன்.

காலையில் எழுந்து பல் துலக்கிக் கொண்டிருந்தபோது “உன்னைத் தேடிக்கொண்டு யாரோ வந்திருக்கிறார்கள்” என்று என் வகுப்பு மாணவன் ஒருவன் வந்து சொன்னான். எதிர்பார்த்தபடி சாமண்ணா வந்திருந்தார். அந்த ஊர்ப் பள்ளியின் தலைமையாசிரியரும் வந்திருந்தார். என் கடிதத்தை அவர்கள் பார்க்கவில்லை. ஆகையால் விரிவாகச் சொன்னேன். சாமண்ணாவின் கண்கள் கலங்கின. அவரால் பேச முடியாமல் நாத்தழுதழுத்தது. “மகன் உயிரோடு வந்து சேர்ந்தால் போதும்; தேர்வு போகட்டும், படிப்பும் போகட்டும், அவனுடைய அம்மாவிடத்தில் இதோ உன் பிள்ளை என்று கொண்டுபோய்ச் சேர்த்தால் போதும். இல்லையானால், நான் அவளை உயிரோடு பார்க்கமுடியாது” என்றார்.

தலைமையாசிரியர் என்னையும் மாலனையும் தனியே அழைத்துப்போய், அந்தப் பெண்ணைப்பற்றிக் கேட்டார். அந்தப் பெண்ணும் அவனும் சேர்ந்து எங்காவது வெளியூர்க்கு ஓடிப்போயிருக்கலாம் என்றார். பெற்றோர்கள் செய்யும் திருமண ஏற்பாட்டை விரும்பாமல், அப்படிக் காதலர்கள் ஓடிப்போவது உண்டு என்று இங்கே நடந்ததும் அங்கே நடந்ததுமாகச் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டார். “இப்போது நேரே அந்தப் பெண் இருக்கும் இடத்துக்குப் போய் அங்கே கேட்டுப் பார்ப்பது நல்லது. ஒருவேளை அந்தப் பெண்ணே அங்கே இருந்தால் அவளையே கேட்டு விடுவோம். இதில் தப்பு ஒன்றும் இல்லை” என்றார்.

சாமண்ணாவை விடுதியில் என் அறையில் தனியே விட்டுவிட்டுப் போகலாம் என்றேன். தலைமையாசிரியர் அதற்கு உடன்படவில்லை. தனியே இருந்தால், அவர் மிகத் துயரப்பட்டுக் கலங்குவார் என்றார். அதனால் சாமண்ணாவையும் அழைத்துக் கொண்டு அந்தப் பெண்கள் கல்லூரிக்குச் சென்றோம். அங்கே அந்தப் பெண்ணின் பெயர் சொல்லிக் கேட்டோம். சிறிது நேரத்தில் அவளே வந்து எங்கள் முன் நின்றாள். “என்ன செய்தி? நீங்கள் யார்?” என்றாள்.

நான்தான் பேசினேன். “நான் சந்திரனோடு படிப்பவன் பக்கத்து அறை” என்றேன்.

தொடர்ந்து பேசுவதற்குள், “வேலுவா? வணக்கம், அவர் சொல்லியிருக்கிறார்” என்றாள்.

“அவர் சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா. இவர் அந்த ஊர் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்” என்றேன்.

அவள் முகம் வாடியது. “என்ன செய்தி? சந்திரனுக்கு உடம்பு நன்றாக இல்லையா?” என்றாள்.

“சந்திரன் முந்தா நேற்று இரவு போனவன் இன்னும் வரவில்லை; தேடுகிறோம்.”

அவள் முகம் வெளிறியது. “அப்படியா? என்ன காரணம்? தேர்வு?” என்று தன் வலக்கைச் சுட்டுவிரலை உதட்டில் சுவைத்தபடி தரையை நோக்கி நின்றாள்.

“காரணம் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா என்று கேட்பதற்காக வந்தோம்” என்றார் தலைமையாசிரியர்.

“அய்யோ! தெரியாதே! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே! தேர்வு நன்றாக எழுதவில்லையா? அப்படி இருந்தால் எனக்குத் தெரிவித்திருப்பாரே. இரண்டு நாளைக்கு முன்தான் நான் ஒரு கடிதம் எழுதினேன். என்ன காரணமோ?” என்றாள்.

சாமண்ணா கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தார். அவள் அவருடைய கலக்கத்தைக் கண்டதும், “என் நெஞ்சு பகீர் என்கிறதே! நான் அண்ணன் தம்பி இல்லாத பெண். அவர் என்னோடு அன்பாகப் பழகினார். எனக்கு அண்ணன் ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்தேன். படிப்பைப் பற்றியெல்லாம் எனக்குத் தைரியம் சொல்லுவார்” என்றாள். தரையை நோக்கிய அவளுடைய கண்களிலிருந்து நீர்த்துளிகள் விழுந்தன. முந்தானையால் கண்களைத் துடைத்தாள். கலங்கி நின்றாள். முந்தானையை வாயருகே வைத்தபடி என்னை நிமிர்ந்து பார்த்தாள். “அவர் கிடைத்தவுடன் எனக்குத் தெரிவியுங்கள். என் வீட்டு முகவரிக்கு எழுதுங்கள். 10, நடுத்தெரு இராயப்பேட்டை” என்றாள்.

நான் அந்த முகவரியைக் குறித்துக் கொண்டேன்.

“சரி போகலாம். உனக்கு ஏதாவது தெரிந்தால் எழுது அம்மா. சாமண்ணா, பெருங்காஞ்சி, வாலாசா தாலுக்கா” என்று தலைமையாசிரியர் விடைபெற்று நகர்ந்தார். சாமண்ணா ஒன்றும் பேசாமலே கலங்கிய கண்களோடு தொடர்ந்தார்.

நான் விடைபெற்றபோது “விடுதியில் என் முகவரிக்கு எழுதுங்கள். அறை எண் – 90” என்றேன். அவள் வாய் திறந்து ஒன்றும் கூறாமல் கைகூப்பினாள் அவளுடைய கண்கள் இன்னும் கலங்கியிருந்தன.

வழியில் தலைமையாசிரியர் என்னைப்பார்த்து, “பெண் நல்ல பெண்; உண்மையானவள். இவன் தப்பாக எண்ணிவிட்டான். அவள் ஏமாற்றவில்லை. இவன்தான்-” என்று நிறுத்திவிட்டார்.

“அப்படி ஏதாவது சொல்லியிருந்தாலும், கேட்டுப் பார்த்துத் திருமண ஏற்பாடே செய்திருக்கலாமே” என்றார் சாமண்ணா.

கடற்கரையில் எங்காவது திரிகின்றானோ பார்க்கலாம் என்று அன்று மாலை கடற்கரைக்கும் போய், வருவார் போவோரை எல்லாம் பார்த்துக் காத்திருந்தோம். மறுநாள் சாமண்ணாவும் தலைமையாசிரியரும் தங்கள் ஊரார் இருக்கும் இடம் எல்லாம் தேடிப் பார்த்துச் சோர்ந்து போய் சந்திரனுடைய பெட்டியும் படுக்கையும் எடுத்துக்கொண்டு ஊர்க்குச் சென்றார்கள்.

அத்தியாயம் – 14

அதற்கு மறுநாள் எங்கள் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்த நாள் ஊர்க்குப் போகத் திட்டமிட்டோம். மாலையில் மாலனும் நானும் கீழ்ப்புறத்துச் சிமெண்டுத் திண்ணையின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அதே திண்ணையில்தான் எங்கள் நட்பு அன்று ஒருநாள் வேர் கொண்டது. அன்று சந்திரனுடைய ஒத்திகையை – பெண்ணாக நடித்த திறமையைப் பார்த்து மனத்தில் பாராட்டிக் கொண்டிருந்தேன். அந்த நாள் நினைவுக்கு வந்தது. சந்திரனிடத்தில் அதுவரையில் கண்டிராத திறமையை அன்று அவனிடம் கண்டேன். அந்தத் திறமை அவனுள் எப்படித்தான் அடங்கிக் கிடந்ததோ என்று வியந்தேன். சிறப்பான கலைத் திறமை எப்படி அவனுள் அடங்கிக் கிடந்ததோ அப்படியே காதலுணர்ச்சியும் அடங்கிக் கிடந்தது போலும் என்று எண்ணினேன். கலைத்திறமை இயல்பாகவே வெளிப்பட்டு விளங்கக் கூடியது; நெடுங்காலம் மறைத்து வைக்க முடியாதது. பாடத் தெரிந்தவன் எங்கேனும் எப்படியேனும் பாடித் தீர்வான்; ஓவியம் வரையத் தெரிந்தவன், தரையிலேனும் விரல்களால் கீறித் தீர்வான்; நடிக்கும் கலைத்திறமையும் அப்படிப்பட்டதுதான். வெளிப்படுத்தாவிட்டால் அது மனித உள்ளத்தைக் கொன்றுவிடக் கூடியது. அதனால் சந்திரன் மேடை ஏறி ஆடிவிட்டான். ஆனால் காதலுணர்ச்சி அப்படிப்பட்டது அல்ல; பிறர்க்குப் புலப்படாமல் மறைப்பதிலேயே காதலர் கருத்தாக இருக்கின்றனர். சந்திரனும் அப்படித்தான் இருந்துவிட்டான். பைத்தியக்காரன். தன் காதலை என்னிடம் மறைத்தது மட்டும் அல்லாமல், தன் காதலியிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறான்! இவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த போது விடுதி வேலையாள் வந்து, “அய்யா! உங்களை யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள்” என்றான். “என்னையா?” என்று மாலன் எழுந்தான். “அவரை, அவர்தானே வேலு” என்றான். நான் எழுந்து சென்றேன். ஒருவேளை சந்திரன் வேறு எங்கிருந்தாவது என்னை அழைத்திருக்கலாம். வேறு யார் என்னைத் தொலைபேசியில் அழைக்கக்கூடும் என்று ஒருவகை மகிழ்ச்சியோடு சென்றேன். மாலனும் உடன் வந்திருந்தான்.

“வேலு பேசுகிறேன்.”

“இமாவதி, வணக்கம்.”

என் மகிழ்ச்சி குலைந்தது. “வணக்கம்” என்றேன். உடனே ஒரு நம்பிக்கை பிறந்தது. சந்திரனைப் பார்த்ததாகச் செய்தி சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையோடு “ஏதாவது செய்தி உண்டா?” என்றேன்.

“அதைக் கேட்பதற்குத்தான் உங்களைக் கூப்பிட்டேன். ஒன்றும் தெரியவில்லையா? இன்னும் அவர் வரவில்லையா?”

“இல்லையே!”

“நீங்கள் வந்து சொன்ன அன்று முதல் எனக்கு மனமே நன்றாக இல்லை. பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கிறது. சந்திரன் நல்லவர்; மிகவும் நல்லவர்; குழந்தை மனம் உடையவர். மிக நல்ல குணம். அவர் மனம் ஏன் இப்படி மாறியதோ, தெரியவில்லை. எனக்கு ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. நாளைக் காலையில் வீட்டுக்கு வருவீர்களா? நேரில் சொல்வேன். உங்களோடு பேசினால்தான் என் மனம் ஆறுதல் அடையும்.”

“வருவேன்.”

“வீட்டு முகவரி தெரியுமா?”

“10, நடுத்தெரு, இராயப்பேட்டை.”

“அதுதான். தேர்வு முடிந்துவிட்டது அல்லவா? ஓய்வுதானே?

“ஆமாம், வருவேன்.”

“அம்மாவும் தங்கைகளும் இருப்பார்கள். அவர்களுக்குச் சொல்லிவைப்பேன்.

“சரி.”

“என்னவோ, போங்க. எனக்கு இந்த மூன்று நாளாக மனமே கலங்கிவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை எனக்குத் திருமணம். வீடெல்லாம் ஒரே அமர்க்களமாக ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்திதான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன். என்னைப் பார்ப்பவர்கள் எனக்குத் திருமணம் விருப்பம் இல்லையா என்று கேட்கிறார்கள். நான் என்ன செய்வது? இப்படி இருக்கிறது என் கதை. போகட்டும். நீங்கள் கட்டாயம் வரவேண்டும்.”

“வருவேன்.”

“வணக்கம். நன்றி”

“வணக்கம்” என்று சொல்லிப் பேசும் கருவியைக் கீழே வைத்தேன். மாலனைத் திரும்பிப் பார்த்தேன்.

“பெரிய புதிராக இருக்கிறது” என்றான் மாலன்.

“இமாவதிதான்.”

“அது தெரிந்து கொண்டேன். அரைகுறையாகத் தெரிந்தது. அவள் நிறையப் பேசினாள். நீ இரண்டொரு சொல்லே சொன்னாய்.”

“இப்போது சொல்லமாட்டேன். பிறகு விரிவாகச் சொல்வேன். தவறாக எண்ணவேண்டா. அவள் பேச்சிலிருந்து எனக்கும் விளக்கம் ஏற்படவில்லை. காலையில் வரச் சொல்லியிருக்கிறாள். போய்ப் பேசிய பிறகுதான் விளங்கும்.”

“விழிப்பாக நடந்துகொள். இந்தப் பட்டினத்தில் யார் எப்படி என்று இரண்டொரு நாளில் தெரிந்து கொள்ள முடியாது. நம் கெட்ட காலம் எப்படி இருக்குமோ? எங்கும் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது” என்றான் மாலன்.

காலையில் எழுந்ததும் ராயப்பேட்டைக்குச் செல்லும் பஸ் ஏறி நடுத்தெருவுக்கு வழி கேட்டுச் சென்றேன். பத்தாம் எண்ணுள்ள வீடு சின்ன வீடுதான். மாடியில் இமாவதி வீட்டார் குடியிருந்தார்கள். நான் சென்று அங்கிருந்த ஒரு பெண்ணிடம் என் பெயரைத் தெரிவித்தேன். அவள் என்னை அங்கே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். இமாவதி போலவே இருந்தபடியால், அவளுடைய தங்கையாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன். வீட்டில் பலர் இருந்தார்கள்; பரபரப்பாக இருந்தார்கள். திருமணத்திற்காக வந்த உறவினராக இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன்.

இமாவதி வந்தாள். வரவேற்றாள். ஆனால் அவளுடைய முகத்தில் புன்முறுவல் இல்லை; மலர்ச்சி இல்லை. ஏதோ வேண்டா வெறுப்போடு வரவேற்பவள் போல் “வாங்க” என்றாள். கூடத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே என்னை உட்காரச் செய்து தானும் உட்கார்ந்தாள். அவளே பேச்செடுப்பாள் என்று எதிர்பார்த்துப் பேசாமல் இருந்தேன். அவளோ தரையைப் பார்த்தபடி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். நாம் ஏன் வந்தோம் என்று வருந்தும் அளவிற்கு என் உள்ளம் மாறியது. வரவேண்டும் என்று வற்புறுத்தித் தொலைபேசியில் பேசியவள் இவள்தானா, அல்லது வேறு எந்தப் பெண்ணாவது குறும்புக்கு அப்படிப் பேசி வம்பு செய்தாளா. மாலன் சொன்னது போல் இந்தச் சென்னையில் உண்மையை எளிதில் உணர முடியவில்லையே என்று தடுமாறினேன்.

இமாவதி கற்பகத்தைப் போல் அவ்வளவு அழகானவள் என்று சொல்லமுடியாது. பல ஆண்டுகளாகப் படிப்பின் சுமையும் தேர்வின் தொல்லையும் காரணமாக இமாவதியின் அழகு வற்றிப்போயிருக்கலாம். இருந்தாலும் முகத்தில் கவர்ச்சி இருந்தது. நல்ல சிவப்பு மேனியும் அளவான உடற்கட்டும் உடையவள்; சின்ன நெற்றியும் சுருட்டை மயிரும் அவளுடைய முகத்திற்கு அழகு செய்தன. உழைப்பவரின் உடம்பு போல், தசைப் பெருக்கம் இல்லாமல் கைகள் கடைந்தெடுத்தவை போல் இருந்தன. இருந்தாலும் அவளுடைய கவர்ச்சி, கற்பகத்தின் அழகுபோல் முற்றிலும் இயற்கையழகின் கவர்ச்சி என்று சொல்வதற்கில்லை. அன்று அவள் அணிந்திருந்த ரோசா நிறப் புடைவையும் பொன்னிறச் சோளியும் அவளுடைய அழகுக்குக் கவர்ச்சி ஊட்டின. கோடுகளும் பூக்களும் இல்லாத புடைவையும், மிகச் சிறு புள்ளிகள் அமைந்த சோளியுமாக இருந்தமையால் அவை அழகாக இருந்தன. இன்னும் சிலநாளில் மணப்பெண் ஆவதற்கு இருந்த அவள் சுமையான நகைகளை அணியாமல், காதில் தோடும் கழுத்தில் பொன் சங்கிலியும் கையில் இரண்டு இரண்டு வளையலும் மட்டும் அணிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. கையில் கடிகாரமும் காணப்படவில்லை.

அந்த வழியாக யாரோ போனார்கள். “என்ன’மா! கல்யாணப் பெண் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?” என்று ஒருத்தி கேட்டுச் சென்றாள். “எனக்கு என்ன வேலை இருக்கிறது, மாமி! எல்லாவற்றிற்கும் நீங்கள் இருக்கிறீர்கள் பார்த்துக் கொள்வீர்கள்” என்று இமாவதி சொன்னபோது, ஒரு சிறு புன்முறுவல் மின்னல்போல் தோன்றி மறைந்தது. அதன் பிறகு என்னைப் பார்த்து, “நீங்கள் எப்போது ஊருக்குப் புறப்படுவீர்கள்?” என்றாள்.

“நாளைக்கு”

“அவரைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லையா?”

“இல்லை.”

“நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை.”

“இப்படிச் செய்யக்கூடியவன் என்று நான் கனவிலும் கருதவில்லை.”

“ஏன் இப்படிச் செய்தார் என்றுதான் தெரியவில்லை. நீங்கள் வந்து போனதுமுதல் நான் நன்றாகப் படிக்கவும் முடியவில்லை. தேர்வு வரையில் எப்படியோ மூச்சுப் பிடித்தேன். தேர்வு நாட்களில் விடுதியிலேயே இருந்து படித்தேன். அங்கே வகுப்புப் பெண்கள் பலருடைய சூழலில் இருந்த காரணத்தால் மனம் எப்படியோ ஒரு வகையாகத் தேறியிருந்தது. இங்கே வந்த பிறகுதான் பைத்தியக்காரி போல் ஆகிவிட்டேன். உனக்குத் திருமணம் விருப்பம் இல்லையா, மாப்பிள்ளை விருப்பம் இல்லையா, அதை முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா என்று பலரும் கேட்கத் தொடங்கினார்கள். நான் என்ன செய்வது? சொன்னால், உண்மையைத் தெரிந்து கொள்ளக்கூடியவர்களும் அல்ல. அம்மாவுக்கு மட்டும் சொன்னேன். அம்மாவுக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும். அதனால் சொன்னதும் விளங்கிக்கொண்டார்கள்.”

இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, நாற்பத்தைந்து ஐம்பது வயது உள்ள ஒருவர், சிறிது வழுக்கையாய் மாநிறமாய் வெள்ளாடை உடுத்தியவராய் அந்தப்பக்கம் வந்தார். அவரைக் கண்டதும், இமாவதி எழுந்து “எங்கள் அப்பா” என்றாள். “இவர் சந்திரனுடைய நண்பர்; அவருடைய ஊரார்; பக்கத்து அறையில் உள்ளவர்” என்று என்னை அறிமுகப்படுத்தினாள்.

அவர் உடனே என்னைப் பார்த்து, “சந்திரன் இன்னும் வரவில்லையா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

“திருமண வேலைக்கெல்லாம் எவ்வளவோ உதவியாக இருப்பான் என்று மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்” என்று சொல்லி, அந்தப் பக்கம் போனவர் ஒருவரைக் கூப்பிட்டு, “சரி வரட்டுமா? கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று நகர்ந்தார்.

“இந்தப் பிள்ளைக்குக் காப்பி சிற்றுண்டி கொடு அம்மா” என்று தம் மகளுக்குச் சொல்லிக்கொண்டே சென்றார்.

மறுபடியும் நானும் அவளும் உட்கார்ந்தோம்.

“திருமண வேலையாக இருக்கிற வீடு. நீங்கள் வந்த வேளையில் பரபரப்பாக இருக்கிறோம். மன்னிக்கவேண்டும்” என்றாள்.

“அதற்கு என்ன? இருக்கட்டும்.”

“அவர் போவதற்கு முன் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா? கடிதம் ஏதாவது எழுதி வைத்துவிட்டுப்போகவில்லையா?”

“இல்லை.”

“அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? குழந்தை போன்ற மனம் உடையவர். அழகாக இருப்பவர்கள் பலர் பொல்லாதவர்களாக, வஞ்சகர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு தீமையும் அறியாதவர். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவருடைய பேச்சு. ஒரு கெட்ட சொல் அவருடைய வாயிலிருந்து வராது. ஒரு கெட்ட பழக்கமும் அவரிடம் இல்லை. உங்களுக்குத்தான் தெரியுமே நானும் அவரும் ஒரே பாடம் எடுத்திருந்த காரணத்தால், அவர் எழுதி வைத்திருந்த குறிப்பை எல்லாம் என்னிடம் கொடுத்தார். எனக்குக் கணக்கில் அடிக்கடி சந்தேகம். தெரியாத கணக்கை எல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தார். கற்றுக் கொடுக்கும்போது எவ்வளவு பொறுமை. எவ்வளவு எளிமை!”

“எனக்கு உயர்நிலைப் பள்ளியில் அவன்தான் கணக்குக் கற்றுக்கொடுத்தான். அவனுடைய உதவி இல்லாவிட்டால் நான் தேர்வில் வெற்றி பெற்றிருக்கமாட்டேன்.”

“எங்கள் ஆசிரியர்க்கும் அவ்வளவு திறமை இல்லை என்று சொல்லலாம். நல்ல வருவாய் மட்டும் கிடைப்பதாக இருந்தால் அவரை ஆசிரிய வேலைக்கே போகச் சொல்வேன்.”

“கடைசியில்…..” என்று வாய் திறந்து பேசத்தொடங்கி நிறுத்தி விட்டேன்.

“கடைசியில்?”

“ஒன்றும் இல்லை, சொல்லுங்கள்.”

“இதை எல்லாம் சொன்னால்தான் மனம் ஆறுதல் அடையும். அம்மாவிடம் சொன்னேன். கொஞ்சம்தான் சொன்னேன். முதலில் அவருடைய பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? கல்லூரியில் இண்டரில் சேர்ந்ததற்கு அடுத்த மாதம் ஒரு நாள் மாலையில் கடற்கரையில் தனியே வந்து கொண்டிருந்தேன். அப்போது கல்லூரியில் பெண்களிடையிலும் எனக்கு நண்பர்கள் குறைவு. என் பக்கத்தில் முரடன் ஒருவன் நடந்து வந்தான். அவன் முன்னே போகட்டும் என்று நான் பின் தங்கினேன். அவன் என்னை ஒரு கண்ணால் பார்த்தபடியே மெல்ல நடந்து ஓர் இடத்தில் நின்றான். நான் பரபரப்பாக நடந்து முன்னே சென்றேன். அவன் தொடர்ந்து என் பக்கத்தில் வந்தான். மறுபடியும் நின்றேன். அவன் முன்போலவே செய்தான். பஸ் நிற்கும் இடத்திற்கு நடந்தேன். அவனும் அங்கே வந்து உராய்வது போல் சென்றான். நான் ஒதுங்கியும் பயன் இல்லை. என்மேல் உராய்ந்து கொண்டு முன்சென்று நின்றான். பஸ் வந்து நின்றது. பெண்கள் முந்திக்கொள்ளட்டும் என்று ஆண்கள் ஒதுங்கினார்கள். எனக்கு முன்னே ஒரு கிழவி ஏறட்டும் என்று வழிவிட்டு, பிறகு நான் ஏறினேன். அந்த முரடன் என் பின்னே வந்து நெருங்கி ஏறி, நான் உட்கார்ந்த இடத்திற்குப் பக்கத்திலேயே நின்றான். “தொலையட்டும், இனிமேல் என்ன?” என்று பேசாமல் இருந்தேன். நல்ல பட்டுச்சொக்காயும் நீலக் கால்சட்டையும் அணிந்திருந்தான். வயது இருபது இருபத்தைந்துதான் இருக்கும். சந்திரன் என்னையும் அவனையும் கடற்கரையிலிருந்தே கவனித்து வந்திருக்கிறார். எங்களைப் பின் தொடர்ந்திருக்கிறார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் ஏறிய பஸ்ஸிலும் ஏறினார். அங்கும் முரடன் நடந்து கொண்டமுறையைக் கவனித்திருக்கிறார். அவன் ஒதுங்காமல், முன்னுக்கும் செல்லாமல் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான் அல்லவா? என் பக்கமாகத் தன் கால்களை நகர்த்தி என் கால்கள்மேல் படுமாறு செய்தான். நான் என் கால்களை எவ்வளவோ ஒடுக்கி உட்கார்ந்தும் பயன் இல்லை. எனக்கு அழமட்டாத குறைவாக இருந்தது. ஒரு புறம் கோபமாகவும் இருந்தது. ஆனாலும் யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது? இன்னும் சிறிது நேரத்தில் இறங்கப் போகிறோம் என்று பொறுத்துக் கொண்டிருந்தேன். அவனுடைய பார்வை என் மேலேயே இருந்தது. இந்தப் பாவிகள் எல்லாரும் அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? இவர்கள் தங்கள் குடும்பத்தில் பெண்களையே பார்த்ததில்லையா? என்ன நாடு இது! என்ன நாகரிகம் இது என்று வெறுப்போடு இருந்தேன். நான் இறங்கும் இடம் வந்தது. எழுந்தேன். அவன் என் பக்கத்தில் உராய்ந்து நின்றான். வழிவிடுங்கள்” என்றேன். வழிவிடுவது போய் விலகி நான் முன்னே சென்றவுடன், என் பக்கத்தில் நெருங்கி வந்து தானும் இறங்கத் தொடங்கினான். பஸ்ஸை விட்டு இறங்கித் தரையில் கால் வைக்கும் நேரத்தில், என் கையில் இருந்த புத்தகங்களையும் சிறு தகரப் பெட்டியையும் வேண்டும் என்றே தட்டிக் கீழே விழச் செய்தான். பிறகு தானே விரைந்து பரபரப்பாக அவற்றை எடுத்துத்தர முனைந்தான். “வேண்டா விட்டுவிடு. நான் எடுத்துக் கொள்வேன். வேண்டும் என்றே தட்டிவிட்டு இப்போது எடுத்துத் தர வருகிறாயா?” என்று கோபத்தோடு கேட்டேன். ‘யார்? நானா? நல்லதற்குக் காலம் இல்லை’மா என்று எதிரே நின்று மீசைமேல் கைவைத்தான். அப்போது அவனுடைய கன்னத்தில் பளீர் பளீர் என்று இரண்டு அறைகள் விழுந்தன. அறைந்தவர் வேறு யாரும் இல்லை, சந்திரன்தான். உடனே முரடன் அவரை அடிக்கக் கை ஓங்கி ஓர் அடி கொடுத்தான். அதற்குள் பஸ்ஸில் இருந்தவர் இருவர் இறங்கி அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு இருவரையும் விலக்கினார்கள். ‘இந்த ஆள் கடற்கரையிலிருந்து என்னைத் தொடர்ந்து வருகிறான்’ என்று வழியில் நடந்தவற்றை எல்லாம் நான் சொன்னேன். முதலிலிருந்தே தாம் எல்லாவற்றையும் பார்த்து வருவதாகவும் மனம் கேட்காமல் தாமும் அந்தப் பஸ்ஸில் ஏறி வந்ததாகவும் சந்திரன் கூறினார். ‘வேண்டும், வேண்டும், அந்த முரட்டுப் பயலை நன்றாக உதையுங்கள்; நாங்களும் கவனித்தோம். அவன் வேண்டுமென்றே செய்ததுதான்’ என்று பஸ்ஸில் இருந்த இரண்டு மூன்று பேர் குரல் கொடுத்தார்கள். ‘சரி விட்டுத் தொலையுங்கள்’ என்றனர் சிலர். ‘அப்படியே கையோடு அழைத்துக்கொண்டு போய்ப் போலீஸ் நிலையத்தில் எழுதி வைக்கவேண்டும்’ என்றனர் சிலர். ‘விடுங்கள் அவனே பி.ஏ. படித்துப் பிறகு போலீசு இன்ஸ்பெக்டர் வேலைக்கு வந்தாலும் வரலாம். சொல்லிப் பயன் இல்லை. நாகரிகம் வரணும்’ என்றார் ஒருவர். அந்த முரடன் சந்திரனை உற்றுப் பார்த்தபடியே அப்பால் நகர்ந்தான். ‘சரி நான் போய் வருகிறேன். வணக்கம்’ என்றார் சந்திரன். வீட்டு வரைக்கும் வந்து போகுமாறு கேட்டுக்கொண்டேன்.

“சந்திரன் உண்மையாக அடித்தானா?” என்று நான் வியப்போடு கேட்டேன்.

“உண்மையாக, அவருக்கு என்ன துணிச்சல் தெரியுமா” என்று சொன்னதும் அவளுடைய முகம் மாறியது. கண்கள் கலங்கின. “அப்படிப்பட்ட துணிவும் தைரியமும் அவருடைய மென்மையான உடம்பில் அடங்கிக்கிடக்கின்றன. அதனால்தான், இப்படித் துணிந்து படிப்பையும் தேர்வையும் விட்டு விட்டுப் போய்விட்டார். நீங்களும் நானும் இப்படிச் செய்வோமா? துணிச்சல்தான் அவரைக் கடைசியில் கெடுத்து விட்டது.”

அது உண்மைதான் என்று எனக்குப்பட்டது.

“ஆமாம், உண்மைதான்” என்றேன்.

“வீட்டுக்கு அழைத்து வந்து அதோ அந்த நாற்காலியில்தான் உட்காரவைத்தேன். உள்ளேபோய் அம்மாவிடம் சொன்னேன். அம்மா வந்து அவரைப் பாராட்டி நன்றி கூறினார். ‘உன்னைப்போல் நல்ல பிள்ளைகளும் இருப்பதனால்தான் இந்த நாட்டில் கொஞ்சம் மழை பெய்கிறது’ என்று அவருடைய நல்ல பண்பைப் பாராட்டினார். என்னைக் காப்பி வைத்துக் கொண்டு வரச்சொல்லி அனுப்பிவிட்டுச் சந்திரனோடு பேசிக் கொண்டிருந்தார். ஊர், பேர், குடும்பம் முதலிய எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். நான் காப்பிக் குவளையோடு வந்தபோது, ‘உன்னைப்போல் படிக்கிற பிள்ளைதான்’மா. வேறே கல்லூரி; நீ படிக்கும் அதே வகுப்புத்தானாம். இந்தப் பிள்ளையும் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆச்சுதாம்’ என்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு அவர் புறப்பட்டபோது, விடுமுறையில் அடிக்கடி வந்து போகும்படியாக அம்மா கூறினார். நானும் சொன்னேன் இப்படித்தான் எங்கள் நட்புத் தொடங்கியது” என்றாள்.

நல்ல வகையில்தான் நட்புத் தொடங்கியது என்று எண்ணினேன்.

அப்போது முதலில் வந்த பெண் வந்து, “அக்கா! உன்னை அம்மா வரச் சொன்னார்கள்” என்றாள்.

“வருவேன். அவசரம் இல்லையே. அவசரமாக இருந்தால் வந்து சொல்” என்று அவளை அனுப்பிவிட்டு “இவள் தான் எனக்கு அடுத்த தங்கை. திருமகள் என்று பெயர். இன்னும் இரண்டு தங்கை உண்டு. உயர்நிலைப் பள்ளியிலும் தொடக்கப் பள்ளியிலும் படிக்கிறார்கள்” என்றாள்.

“அப்புறம்? சந்திரன் உங்களோடு நெருங்கிய நட்புக் கொண்டான் அல்லவா?” என்றேன்.

“அன்று அவருடைய பெயரை நானும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. என்னுடைய பெயரை அவரும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் அவரைப் பற்றி அடிக்கடி நினைத்தேனே தவிர, கடிதம் எழுதும் வாய்ப்பு இல்லை. நட்பு, ரயில் நட்புப்போல் அன்றே முடிந்து போயிருக்க முடியும். ஆனால் அவர் உண்மையான அன்பு உடையவர். போலி அன்பு, போலி நட்பு எல்லாம் அவருக்குத் தெரியாதவை. இரண்டு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணிக்கு அவர் இதே இடத்தில் வந்து நின்றார். யார் வீட்டுக்கோ போவதற்காக ஒழுங்காக உடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்த நான், அவரைக் கண்டதும், பெருமகிழ்ச்சி அடைந்தேன். ‘எங்கோ புறப்படுவதாகத் தெரிகிறது. போய் வாங்க’ என்றார். எனக்கோ அவரை விட்டுப்போக மனம் இல்லை. உட்கார்ந்து பேசினோம். என் படிப்பு முதலியவற்றைப் பற்றிக் கேட்டார். என்ன என்ன பாடங்கள் நடந்தன என்று கேட்டார். நானும் சொன்னேன். இன்னார் இன்னாருடைய குறிப்புகள் நல்லவை என்று சொன்னார். கணக்குகள் எல்லாம் தெளிவாகத் தெரியுமா என்று அவரே கேட்டார். உண்மையில் நான் கணக்குப் பாடத்தில்தான் அரைகுறையாக இருந்தேன். தடுமாறிக் கொண்டிருந்தேன். என் நிலையைச் சொன்னதும் கணக்குப் புத்தகத்தைக் கொண்டுவருமாறு சொல்லி, சந்தேகம் என்ன என்று கேட்டார். என் அறியாமை நீங்குமாறு விளக்கமாகச் சொன்னார். அதன் பிறகுதான் அவருடைய பெயரைக் கேட்டறிந்தேன். என் பெயரைப் புத்தகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டார். “போன வாரம் எதிர்பார்த்தேன். நீங்கள் வரவில்லையே” என்று உரிமையோடு கேட்டேன். கடற்கரைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்.”

அவர்களின் உறவின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. ஆனால் எப்படிக் கேட்பது என்று திகைத்தேன்.

அவளே பேசலானாள்: “அது போகட்டும். என் மனத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு வேதனைப்படுத்தி வருகிறது. அதை உங்களிடம் சொல்லி நான் குற்றம் அற்றவள் என்பதை விளக்கி, ஆறுதல் பெறவேண்டும் என்றே உங்களை இங்கே வரும்படியாகச் சொன்னேன்” என்றாள்.

அப்போது ஓர் அம்மையார் எங்களை நோக்கி வர இமாவதி எழுந்து, “எங்கள் அம்மா” என்றாள். அம்மாவை நோக்கி, “இவர்தான் வேலு, சந்திரன் நம்மிடத்தில் அடிக்கடி சொல்லியிருக்கிறாரே” என்றாள்.

அந்த அம்மா உடனே என்னை ஆர்வத்தோடு பார்த்து “ஆமாம் சந்திரனோடு ஊரில் படித்த பிள்ளையா?” என்றார்.

“ஆமாம் அம்மா” என்றேன்.

“சந்திரன் எங்கே? என்ன இது, கதையாக இருக்கிறதே! என்னால் நம்பவே முடியவில்லையே” என்று சொல்லிக் கொண்டே என் எதிரே உட்கார்ந்தார். நாங்களும் உட்கார்ந்தோம். “அந்தப் பிள்ளை கள்ளம் கரவு இல்லாமல் குழந்தைபோல் பேசும்! என்ன மனக்குறை இருந்தாலும் எங்களிடம் வந்திருக்கக் கூடாதா? நேரில் சொல்லியிருக்கக் கூடாதா? எங்கள் வீட்டு ஆண்பிள்ளைபோல் எண்ணியிருந்தோம். அப்பா பணம் அனுப்பவில்லையானால் கேள் என்று சொல்லி வைத்திருந்தோம். மகன் போல் பழகிவிட்டு, இப்படிச் சொல்லாமல் போனால், மனத்துக்கு வேதனையாக இருக்கிறது. ஒரு சொல் சொல்லியிருக்கக் கூடாதா? நாங்கள் என்ன செய்வது? ஏதாவது சாமியார் பைத்தியம் உண்டா? எங்காவது மலைக்கு, குகைக்கு” – என்றார்.

“அதெல்லாம் இருந்தால் நமக்குத் தெரியாதா அம்மா? அவரைப் பற்றி நமக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?” என்றாள் இமாவதி.

“இந்தத் தருணத்தில், நம்மவர்கள், நண்பர்கள் ஆகியவர்களின் உணவு முதலிய வசதிகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைச் சந்திரனிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தோம். திருமணத்துக்குள் வந்து சேர்ந்தால், என் வயிற்றில் பால் வார்த்ததுபோல் இருக்கும். அவனுடைய அப்பா வந்தாராமே; நம் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கக் கூடாதா?” என்றாள் அந்த அம்மா.

இவர்களின் உறவு முதலியவற்றை எனக்கே தெரிவிக்காமல் மறைத்திருந்தான் சந்திரன். அவன் என்னைவிட்டு ஒதுங்கி நின்ற தன்மையும் இவர்களுக்குத் தெரியாது. ஆனால் அதை எப்படிச் சொல்வது?

“சரி, சரி, தம்பி! எனக்கு வேலை ஏராளமாக இருக்கிறது. யாரோ இமாவதியோடு நெடுநேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு வந்தேன். சரி, வரட்டுமா? இமாவதி! தம்பி இருக்கட்டும். அங்கே உறவினர்கள், வந்தவர்கள் தப்பாக நினைக்கக்கூடும். அப்படி வந்து அவர்களோடு கூடிப் பேசிக் கொண்டிருக்கலாமே” என்று சொல்லிச் சென்றார்.

“கொஞ்சம் பேசிவிட்டு வருவேன்’மா” என்று சொல்லி விட்டு, இமாவதி என்னை நோக்கினாள்.

“என்னவோ சொல்லவேண்டும் என்கிறீர்கள்?”

“ஆமாம் என்று சிறிது நேரம் அமைதியானாள். பிறகு அவருடைய மனக்கவலைக்கு என்ன காரணம்? உங்களுக்குத் தெரிந்த காரணம் ஏதாவது இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள்” என்றாள்.

உண்மையை எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். தலை குனிந்தேன்.

“தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். என் திருமண அழைப்பிதழ் வந்தபிறகுதான் கவலைப்பட்டாரா?”

“ஆமாம்” என்று சொல்லித் தலை நிமிர்ந்து பார்த்தேன். அவள் தன் முந்தானையின் ஒரு முனையை வாயில் வைத்தபடியே தன் கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உங்களிடம் ஏதாவது சொன்னாரா?” என்றாள். அவளுடைய உள்ளத்தின் கலக்கம் குரலில் புறப்பட்டது.

“சொன்னார்.”

“ஏமாற்றம் அடைந்ததாகச் சொன்னாரா?”

“ஆமாம்.”

முந்தானையால் கண்களைத் துடைத்தாள். யாரோ வருவதைக் கண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். “நான் உண்மையாகச் சொல்கிறேன். நான் குற்றவாளி அல்ல. அவர் தவறாக எண்ணிக்கொண்டு பழகியிருக்கிறார். அவருடைய எண்ணம் இப்படி இருக்கும் என்று நான் சந்தேகப்பட்டதே இல்லை. தங்கையோடு பழகுவதுபோல் என்னோடு பழகினார். நான் அண்ணன் என்று கருதிப் பழகினேன். அதனால்தான் அன்போடு திருமண அழைப்பிதழ் அனுப்பிக் கடிதமும் எழுதியிருந்தேன். அவர் ஏமாற்றம் அடைவார் என்று தெரிந்திருந்தால், தேர்வு முடியும் வரைக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருப்பேனா? அதை ஏன் அவர் உணரவில்லை?” அப்போது அவளுடைய மனக்கலக்கம் தீர்ந்துவிட்டது. தெளிவாகப் பேசினாள். “எல்லாவற்றிலும் வெளிப்படையாகக் குழந்தை மனத்தோடு பழகியவர் இதில் மட்டும் ஏன் இப்படி மறைத்து நடந்தார்? ஆண்களோடு எப்படிப் பழகினாலும் ஆபத்துக்கு இடம் இருக்கும்போல் தெரிகிறது” என்றாள்.

“ஒரு பெண் திருமணம் ஆனபிறகு இப்படிப் பழகினால் இடர்ப்பாடு இல்லை” என்றேன்.

அவள் உடனே மறுத்துப் பேசினாள்: “அப்போதும் உண்டு. அந்தப் பெண்ணின் கணவன் அப்போது அவள்மேல் சந்தேகப்படுவான்” என்றாள்.

“உண்மைதான்” என்று சிரித்தேன்.

“முதலாம் நாள் சந்திரனைக் கண்டு பழகி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோமே, அன்று அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரன் வந்து போனார் என்று சொன்னேன் அல்லவா? அன்று இரவு அம்மா என்னைத் தனியே அழைத்து அறிவுரை கூறினார். “நல்ல பிள்ளை அம்மா அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன் வாழ்வோ தாழ்வோ அதை ஒட்டித்தான் இருக்கிறது. பருவ உணர்ச்சி பொல்லாதது. அதைக் கடந்து பொதுவான அன்போடு அண்ணன் தங்கைபோல் பழக முடியுமானால் பழகு. சந்திரனுக்கே மனம்மாறி உன்னிடத்தில் வேறு வகையாகப் பழகத் தொடங்கினாலும் விலகிவிடு; அல்லது உன் மனமே சந்திரனிடத்தில் வேறு வகையாகச் செல்லுமானாலும் விலகிவிடு. ஏன் என்றால், ஆண் பெண் உறவு என்பது ஒரு நாளில் உங்கள் உணர்ச்சியால் முடிவு செய்யக்கூடியது அல்ல. அது வாழ்க்கை முழுவதையுமே மாற்றக்கூடியது. ஆகையால் அனுபவம் நிறைந்த எங்கள் அறிவுரையும் அதற்கு வேண்டும். அதனால்தான் சொல்கிறேன். கவனித்துப் பொறுப்போடு நட. தங்கைபோல் பழக முடிந்தால் பழகு. இல்லையானால் பழகாதே” என்று கூறினார். அந்த அறிவுரை எனக்குப் பயன்பட்டது. ஆனால் அவருக்கு அப்படி ஒருவர் அறிவுரை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றாள்.

நான் பேசாமல் இருந்ததைக் கண்டு, “என்மேல் தவறு இருந்தால் சொல்லுங்கள்” என்றாள்.

“நீங்கள் அன்பாகப் பழகியதால் அவன் அப்படி எண்ணிவிட்டான்” என்றேன்.

“அப்படியானால் ஒரு பெண் ஆணோடு நட்புக்கொண்டு பொதுவாகப் பழகவே கூடாதா?”

“கூடாது என்று நான் சொல்லவில்லை. நடைமுறையில் தீமையாக இருக்கிறதே!”

“அதை வெல்லவேண்டும். முன் காலம் வேறு. பெண் வாழ்ந்த எல்லை குறுகிய எல்லை. வீடு, வீட்டைச் சார்ந்த அக்கம் பக்கம் அவ்வளவுதான். இப்போது எந்தக் குடும்பத்துப் பெண்ணும் பல ஆண்களோடு பழகவேண்டியுள்ளது. கடைத்தெரு, மருந்தில்லம், பள்ளிக்கூடம், கலையரங்கம் இப்படி எத்தனையோ இடங்கள்; குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக, வியாபாரிகள், டாக்டர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர் முதலானோர் பலருடன் பழகவேண்டியுள்ளது. தந்தையின் நண்பர்கள், கணவரின் நண்பர்கள் இப்படிப் பலரோடு பழகவேண்டியுள்ளது. ஆகையால் பெண்கள் ஆண்களோடு பழகாமல் வாழ முடியாத காலம் இது. பொது அன்பை வளர்த்து நட்பு முறையில் பழகக் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”

“மெய்தான்.”

“நான் குற்றவாளி அல்ல என்று நீங்கள் சொன்னால் போதும். அதுதான் எனக்கு ஆறுதல் அளிக்கும்.”

“நீங்கள் குற்றவாளி அல்ல என்பது நன்றாகத் தெரிகிறதே!”

“ஆனால் ஒரு குற்றம் என்மேல் உண்டு. அவருடைய மனம் இப்படி வளர்ந்துவருகிறது என்பதை நான் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன். அது குற்றம்தான். அதற்குக் காரணம், அவர் என்னிடம் அப்படி அண்ணன் போல் பழகினார். சில வேளைகளில் அண்ணன் போல் அதிகாரம் செய்தும் நடத்தியிருக்கிறார். உடம்பு நன்றாக இல்லை. ஆகையால், நாளைக்குக் கல்லூரிக்குப் போகக் கூடாது என்று தடுத்திருக்கிறார். சில பாடங்களில் கேள்விகள் கேட்டுத் தவறு செய்தபோது கடிந்திருக்கிறார். சில பெண்களோடு பழகக்கூடாது என்று தடுத்திருக்கிறார்.”

அப்போதுதான் நான் உரிமையோடு சில கேள்வி கேட்டேன். “நீங்கள் இருவரும் தனியே பேசிக்கொண்டு போனது உண்டா?” என்றேன்.

“உண்டு! அம்மாவுக்குச் சொல்லிவிட்டுக் கடற்கரைக்குப் போயிருக்கிறோம். சினிமாவுக்குப் போயிருக்கிறோம். தங்கையை அழைத்துக் கொண்டு போனதும் உண்டு. நாங்கள் இருவர் மட்டுமே போனதும் உண்டு.”

சந்திரன் தன் அறையில் இல்லாமல் அடிக்கடி வேறு வேலை. வேறு வேலை என்று வெளியே போய்வந்த காரணம் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. தொடர்ந்து சில கேட்டேன்.

“அவனை என்னவென்று அழைப்பீர்கள்?” என்றேன்.

“‘சந்திர்’ என்று பெயர் சொல்லி அழைப்பேன்.”

“யாராவது பார்த்தால் தப்பாக நினைப்பார்களே என்று எண்ணவில்லையா?”

“வெளிப்படையாகப் பழகினோம்; குற்றம் செய்யவில்லை; ஆகையால் மற்றவர்கள் நினைப்பதைப் பற்றிப் பயப்பட்டதில்லை. அண்ணனும் தங்கையும் பழகுவதில்லையா!”

“நான் என் தங்கையோடு நெருங்கிப் பழகுவதில்லையே!”

“அடிக்கடி சண்டையிட்டது உண்டு அல்லவா?”

“உண்டு.”

“நானும் சந்திரனும் அப்படி அடிக்கடி சண்டையிட்டிருக்கிறோம். இங்கே வீட்டில், கடற்கரையில் அம்மா அப்பா எதிரில்.”

“கல்லூரியில் எங்கள் விடுதியில் மாணவர்கள் சிலர் உங்கள் இருவரையும் காதலர் என்று எண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?”

“இருக்கலாம். உடன் பிறந்த அண்ணனும் தங்கையும் புதிய ஊரில் ஒரு தெரு வழியாக போனால், அந்த ஊரார் பலர் அவர்களைக் காதலர் என்றுதான் எண்ணுவார்கள். அது உலக இயற்கை! மனிதரின் மனத்தில் பொதுவாக உள்ள காம இச்சை அப்படி எல்லாரையும் பார்த்துச் சொல்லச் செய்கிறது!”

அவளுடைய அறிவின் திட்பத்தைக் கண்டு வியந்தேன். இன்னொன்றும் கேட்கவேண்டும் என்று தோன்றியது; கேட்டேன். “இந்த அனுபவத்திற்குப் பிறகு, நீங்கள் உங்கள் தங்கைக்கு என்ன வழி சொல்வீர்கள்” என்றேன்.

“எதைப்பற்றி?”

“ஆண்களோடு பழகுவதில்!”

“அம்மா எனக்குச் சொன்னதையே சொல்வேன்.”

“அதனால் குறை ஏற்படுகிறதே; இப்படி ஒரு வாழ்வு பாழாகிறதே.”

இதைச் சொன்னவுடன், அவளுடைய திட்பமும் தெளிவும் பறந்து போயின. “அதை நினைக்கும்போதுதான் எனக்குத் துயரமாக இருக்கிறது. நான் குற்றவாளி அல்ல என்பதை உங்களிடம் சொல்லி, என் மன வேதனையைத் தீர்த்துக்கொண்டேன். ஆனால் என் அன்புக்குரிய சந்திரனுடைய வாழ்வு கெடுவதை நினைத்தபோது எனக்குத் துயரமாக இருக்கிறது” என்று வருந்தினாள். அவளுடைய முகம் வாடியது. ஒரு பெருமூச்சு விட்டாள். “அன்று உங்களுடைய கல்லூரியில் ஒரு நாடகம் நடந்தது. நான் வந்திருந்தேன். அவருடைய நடிப்பைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். மறுநாள் வீட்டுக்கு வந்திருந்தார். அந்தப் பெண் வேடத்தோடு நான் அவர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன்; வேண்டாம் என்று மறுத்தார். இயல்பான உடையோடு புகைப்படம் எடுக்கலாம் என்று சொன்னார். அதற்கு நான் இணங்கவில்லை. அதிலிருந்து அவர் தெரிந்து கொண்டிருக்கலாம். தேர்வு தொடங்குவதற்கு முன் இங்கு வந்திருந்தபோது அம்மா வீட்டில் இல்லை. எங்கே என்றார். திருமண வேலையாக என்று சொன்னேன். யாருக்கு என்றார்? எனக்குத்தான், என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். அன்று அவர் தெரிந்து கொள்ளாமல் போனது வியப்பாக இருக்கிறது” என்றாள்.

“நீங்கள் நாணத்தால் சிரித்திருக்கலாம். வேடிக்கை பேசியதாகக் கருதி அவன் சிரித்திருக்கலாம்” என்றேன்.

சிறிது நேரம் அசையாமல் சிற்பம் போல் இருந்தாள். “உண்மைதான்! அவ்வாறு கருதியிருக்கக் கூடும். என்ன வாழ்க்கை இது!” என்றாள்.

“நம் நாட்டு நாகரிகம்! எல்லாவற்றிலும் வெளிப்படையாகப் பழகிவிடுகிறோம். ஆனால் வாழ்க்கைக்கு அடிப்படையான காதலில் – திருமணப் பேச்சில் மட்டும் வெளிப்படையாகப் பேசி விளக்குவதில்லை. பெற்றோரும் மக்களிடம் அப்படி இருக்கிறார்கள்; மக்களும் பெற்றோரிடம் அப்படி இருக்கிறார்கள். அண்ணன் தங்கையும் அப்படி நடக்கிறார்கள்; நீங்களும் அப்படித்தான்” என்றேன்.

“நான் பெண், அவர் இயல்பாகத் துணிவும் அஞ்சாமையும் உடையவர். அவர் வெளிப்படையாகப் பழகியிருக்கலாமே?”

“நீங்கள் பெண்தான்; ஆனால் பழங்காலப் பெண் அல்லவே? வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே?”

“அவர் சொல்லியிருக்கலாமே!”

“ஆண் பெண் பழக்கம் என்றால் அது காதல் வரையில் நீளக்கூடியது. அதன்படி அவன் இயற்கையாக நடந்து கொண்டான். நீங்கள்தான், இந்தப் பழக்கம் அதுவரையில் செல்லக்கூடாது என்று கட்டுப்பாட்டோடு பழகினீர்கள். அந்தக் கட்டுப்பாட்டையாவது சொன்னீர்களா?”

மறுபடியும் சிறிது நேரம் திகைத்து நின்றாள். “ஆம்! சொல்லவில்லை. என்னுடைய குற்றம்தான். எவ்வளவோ முன்னேறினாலும், இந்த நாட்டில் வழிவழியாக வந்த பழக்கம் – வெளிப்படையாகச் சொல்லாமல், பழகும் பழக்கம் – இது. என் தவறுதான்” என்று வருந்தினாள்.

மறுபடியும் தங்கை வந்து, “அம்மா கூப்பிடுகிறார்கள்” என்றாள்.

“கடைசியில் உங்களுக்கு வருத்தம் உண்டாக்கி விட்டேனா?” என்று நான் எழுந்தேன்.

“அவருடைய வாழ்க்கையே கெட்டுவிட்டது! நான் சிறிது நேரம் வருந்தினால் என்ன?” என்றாள். “சிறிது உட்காருங்கள்; சிற்றுண்டியும் காப்பியும் உண்டு செல்ல வேண்டும்” என்று உள்ளே சென்றாள். தங்கையிடம் அவற்றைக் கொடுத்தனுப்பினாள். விரைவில் திரும்பி வந்து “திருமணத்திற்கு நீங்களாவது வரவேண்டும்” என்றாள்.

“சந்திரனே அதற்குள் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றேன்.

“அப்படி அவர் வந்தால், அதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை. எங்கள் இல்லத்தில் முதல் விருந்து அவருக்கு நடத்துவதாக எண்ணியிருந்தேன். என் எண்ணம் நிறைவேறினால் நன்றாக இருக்குமே” என்று கண் கலங்கினாள்.

அங்கு உள்ள குடும்பப் பொறுப்புகளுக்கு இடையூறாக நிற்கக்கூடாது என்று விரைவில் விடை பெற்றுத் திரும்பினேன்.

அத்தியாயம் – 15

விடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், “நான் தேறிவிடுவேன்” என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, “செய்தி எப்படித் தெரிந்தது? இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா?” என்றேன். “சோதிடம் கேட்டேன்” என்றான். “சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது!” என்று சிரித்தேன். “குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்” என்றான். என் முகத்தில் சிரிப்பு மாறாமல் இருக்கவே, “நீ இப்படித்தான் எதிலும் நம்பிக்கை இல்லாமல் அலைகிறாய். போகப் போகத் தெரியும். நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது சோதிடம் கேட்டேன். அவன் சொன்னது சொன்னபடி நடந்தது. உனக்கு, என்ன தெரியுமய்யா? ஊருக்குப் போனதும், அப்பாவுக்குப் பழக்கமான சோதிடர் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் கேட்கப்போகிறேன்” என்றான். “அவரை ஏன் கேட்கவேண்டும்? நீ எழுதியது உனக்கே தெரியவில்லையா?” என்றேன். “என்ன இருந்தாலும் கிரகம் கெட்டதாக இருந்தால், எழுதும் போது கெடுத்து விடும்; நல்லபடி எழுதியிருந்தாலும் திருத்தும்போது கெடுத்துவிடும்; எண்களைக் குறைத்துவிடும்” என்றான்.

பிறகு, “அது போகட்டும். நீ போய் வந்த செய்தி என்ன? அதை முதலில் சொல்” என்றான். எல்லாவற்றையும் கூறவில்லை. பொதுவாக, இமாவதியின் குடும்பம் நல்ல குடும்பம் என்றும், அவள் நட்பு முறையில் தான் பழகினாள் என்றும், சந்திரனே தவறாக உணர்ந்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டான் என்றும் கூறினேன். இளைஞர்களான ஆணும் பெண்ணும் பழகும் முறை பற்றி இமாவதியின் கருத்தைச் சொன்னேன்.

“இது எப்படி முடியும்? அழகான ரோசாப் பூவை ஒரு பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு அதை முகராமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா? மணமுள்ள மாம்பழத்தை ஒரு சிறுவன் கையில் கொடுத்துவிட்டு அதைத் தின்னாமல் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா? முகராமலும், தின்னாமலும் வைத்திருக்கும் அளவிற்குப் பயத்தாலும் காவலாலும் செய்ய முடியும். ஆனால் அதனால் மனம் கெடும்” என்றான்.

“ஐரோப்பியரும் அமெரிக்கரும் இல்லையா? நாமும் அப்படிப் பழகக்கூடாதா?”

“பழகலாம். அதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் அவ்வளவாக கவலைப்படுவதில்லை. நாமும் அப்படிக் கவலைப்படாமல் இருந்தால் சரிதான்.”

“அவள் நல்ல பெண்.”

“நல்ல பெண்ணாக இருந்தும் சந்திரனுடைய மனத்தைக் காப்பாற்ற முடியவில்லையே. அதனால் நீயும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். சந்திரன் போல் கலங்கிவிடாதே.”

“சே! என்ன பேச்சு பேசுகிறாய்?”

“ஒன்று கேட்கிறேன். உனக்கு அழகுணர்ச்சியே இல்லையா?”

“கொஞ்சம் குறைவுதான். அதுவும் எனக்கு நன்மைதான். சந்திரனைப் போல் எனக்கு அழகும் இல்லை; அழகுணர்ச்சியும் இல்லை. பெண் வேடத்தோடு நடிக்கப் போவதும் இல்லை, பெண்ணின் அன்பால் கலங்கப்போவதும் இல்லை.”

“அழகுணர்ச்சி இல்லாத வாழ்வு என்ன வாழ்வு?”

“அது சீர்கெட்ட மட்டமான வாழ்வாக இருந்தாலும் ஒரு வாழ்வாக இருக்கிறது அல்லவா? அதுவே போதும். வாழ்வே அடியோடு கெட்டு அழிவதைவிட ஏதோ ஒரு வாழ்வு இருப்பது மேலானது.”

பிறகு, சாப்பிடப் போகலாம். வா” என்று உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் அவனும் நானும் ஒரே ரயிலில் ஏறினோம். அவன் அரக்கோணத்தில் இறங்கிவிட்டான். நான் வாலாசாவில் இறங்கி வீட்டுக்குச் சென்றேன்.

வீட்டாருக்குச் சந்திரனைப் பற்றி நான் ஒன்றும் எழுதவில்லை. செய்தியைச் சொன்னபோது அவர்கள் திடுக்கிட்டார்கள். “நல்ல பையன்! எவ்வளவு அக்கறையான பையன்! அவனா அப்படிப் போய்விட்டான்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இமாவதியைப் பற்றியோ, காதலைப் பற்றியோ நான் அவர்களிடம் ஒன்றும் சொல்லவில்லை.

நான் போய் சேர்ந்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம், பாக்கிய அம்மையார் வீட்டுக்கு வந்தார். “தம்பி எப்போது வந்தது?” என்றார். “இப்போதுதான்” என்றேன். அம்மா சந்திரனைப் பற்றிய செய்தியைப் பாக்கியத்திடம் சொன்னார். அதைக்கேட்ட பாக்கியம், திடுக்கிட்டு, வாயைத் திறந்தது திறந்தபடியே நின்றார். ஒரு பெருமூச்சு விட்டு, “அய்யோ ஊரில் அந்த அத்தை என்ன பாடுபடும்!” என்றார். உடனே போய்விட்டார்.

சந்திரனுடைய ஊர்க்குப் போய் அவனுடைய பெற்றோர்க்கும் அத்தைக்கும் ஆறுதல் சொல்லி வரவேண்டும் என்று மனம் தூண்டியது. மூன்றாம் நாள் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். விரைந்து திரும்பி வருமாறு சொன்னார்கள்.

பெருங்காஞ்சியில் நான் சென்று கண்ட காட்சி துயரவடிவாக இருந்தது. அந்தப் பெரிய வீடு இழவு வீடுபோல் இருந்தது. சாமண்ணா மூலையில் ஒரு கட்டிலிலேயே ஒரு நாளில் இருபத்து மூன்று மணி நேரமும் கழித்தார். சந்திரனின் தாயோ, தேங்காயும் வெல்லமும் இருந்த அறையில் ஓர் ஓரமாகப் பாயும் தலையணையுமாகக் கிடந்தார். அத்தை மட்டும் சமையலறைக்கும் வாசலுக்குமாகத் திரிந்துகொண்டிருந்தார். கற்பகமும் வாடிய கொடிபோல் இருந்தாள். சமையலறையில் உறவினரான ஓர் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருவரும் அழத் தொடங்கினார்கள். அத்தையின் கண்ணீர் என்னை உருகச் செய்தது. சாமண்ணாவின் பெருமூச்சு வேதனை தந்தது. சந்திரனுடைய தாயின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.

வேலைக்காரன் மாசன், தோட்டக்காரன் சொக்கான், முதல் வருவோர் போவோர் வரையில் அத்தனை பேரும் என்னிடம் துக்கம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இருக்க இருக்க, அவர்கள் கேட்ட கேள்விகள் எனக்குச் சலிப்பையும் தந்தன. திரும்பத் திரும்பக் கேட்ட கேள்விகளையே கேட்டு என்னை வாட்டினார்கள். தலைமையாசிரியர் ஒருவர்தான் பயனுள்ள வகையில் பேசினார். ‘இப்படிக் காணாமல் போனவர்களைப் பற்றிச் செய்தித்தாளில் படம் போட்டு அறிக்கை வெளியிடுகிறார்களே, அதுபோல் செய்யலாம்’ என்றார். எனக்கும் அது நல்லது என்று தோன்றியது. உடனே இருவரும் உட்கார்ந்து, ஆங்கில இதழ் ஒன்றிற்கும் தமிழ் இதழ் ஒன்றிக்கும் எழுதிப் படங்களும் வைத்து அனுப்பினோம்.

அங்கே இருந்த ஒவ்வொரு மணி நேரமும் எனக்குத் துயரமாகவே இருந்தது. மறுநாளே புறப்படலானேன். தாயும் தந்தையும் பேச்சு இல்லாமல், கண்ணீரும் கம்பலையுமாக விடை கொடுத்தார்கள். அத்தை மட்டும், “எங்கே பார்த்தாலும் கேட்டாலும் கொண்டு வந்து சேர்த்துவிடு வேலு” என்று வேண்டினார். கற்பகம் வழக்கத்துக்கு மாறாக என் எதிரே நின்று கைகூப்பிக் கண் கலங்கி விடை கொடுத்தாள்.

ஊர்க்குத் திரும்பியபோது, வழியில் அந்த இலுப்பை மரங்களைக் கண்டேன். நான் எதையோ சிந்தித்தபடியே குதிரை வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். ஆனால் இலுப்பைப் பூக்களின் மணம் என்னைக் கவர்ந்தது. சாலையின் இரு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தேன். வழக்கமாக நானும் சந்திரனும் உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பொழுது போக்கிய இடம் வந்தது. அதன் எதிரே இருந்த கிணறு பாழடைந்தாற்போல் தோன்றியது. அந்த மாந்தோப்பும் அவ்வாறே தோன்றியது. மாமரங்களில் காய்கள் நிறையத் தொங்கிக் கொண்டிருந்தன. வேலியோரமாக இருந்த வேப்பமரங்களில் வெண்ணிறப் பூங்கொத்துகள் நிறைய இருந்தன. புன்க மரங்களில் கிளைகள்தோறும் காய்கள் பெருகி, பச்சை நிறக் கிளிஞ்சல்கள் போல் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாம் இருந்தும் ஏதோ ஒருவகைக் குறை தோன்றியது. பொலிவே போய் விட்டாற்போல் தோன்றியது. சந்திரனும் நானும் அங்கே மாலைக் காலங்களில் உட்கார்ந்தும் உலாவியும் பழகிய பழக்கம் போய் இரண்டு ஆண்டுகள் ஆய்விட்டன. காலம் எவ்வளவு விரைவில் கழிகிறது என்று வியப்போடு எண்ணினேன். அந்த இலுப்பை மரச்சாலையில் பழகிய பழக்கத்திற்குப் பிறகு சந்திரனும் நானும் கல்லூரி விடுதியில் அடுத்தடுத்து அமைந்த அறைகளில்தான் வாழ்ந்தோம். ஊரில் குடியிருந்தபோதும் அவ்வளவு அடுத்து வாழவில்லை; இரண்டு வீடுகள் கடந்து வாழ்ந்தோம், கல்லூரி விடுதியில் இரவும் பகலும் நெருங்கிப் பழகுவதற்கு வேண்டிய வாய்ப்பு இருந்தது. அவ்வளவு அடுத்துத் தங்கியிருந்தும், எங்கள் உள்ளங்கள் மிக மிகத் தொலைவில் இருந்தன. இவ்வாறு எண்ணியவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்குச் சென்றதும் அம்மா ஆவலோடு கேட்டார்; கடையிலிருந்து வந்ததும் அப்பாவும் கேட்டார். பெருங்காஞ்சியில் சந்திரனுடைய வீட்டார் துயரில் மூழ்கியிருந்த நிலையைக் கேட்டு அவர்கள் மிக வருந்தினார்கள். அம்மாவின் பெருமூச்சு, உள்ளத்தில் பொங்கிய துன்ப உணர்ச்சி வெளிப்படுவதாக இருந்தது. அப்பா சிறிது அமைதியாக இருந்தபிறகு, “எல்லாம் அவரவர்கள் கேட்டு வந்தபடிதான் நடக்கும், சும்மா கவலைப் பட்டுப் பயன் இல்லை. படிக்க வைத்துப் பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பிப் பெருமையாக வாழலாம் என்று பார்த்தார்கள். என்ன ஆயிற்று, பார்த்தாயா? அதனால்தான் பெரிய படிப்பே வேண்டா என்று ஒவ்வொரு வேளையில் எண்ணிப்பார்க்கிறேன். என்னவோ போ” என்று சுருக்கென்று முடித்தார். அது என் படிப்பைப் பற்றி அவர் கொண்ட வெறுப்பையும் அதற்கு ஒரு முடிவையும் புலப்படுத்துவதுபோல் இருந்தது. இருந்தாலும், அப்பா என் படிப்பைத் தடுக்கமாட்டார். தடுத்தாலும் அம்மாவிடம் அழுது கண்ணீர்விட்டு எண்ணியதை முடித்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை எனக்குள் இருந்தது. அதனால் அவருடைய சொல் என் உள்ளத்தைக் கலக்கவில்லை.

ஆனால் சந்திரனைப் பற்றிய எண்ணம் அடிக்கடி எழுந்து என் உள்ளத்தில் அமைதி இல்லாமற் செய்துவந்தது. மூன்று ஆண்டுகள் எங்கள் தெருவில் அவன் தங்கியிருந்து, குடும்பத்தோடு குடும்பமாய் நெருங்கிப் பழகி, ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் இருந்து காலை முதல் மாலை வரையில் தொடர்ந்து பழகிய பழக்கத்தை எளிதில் மறக்க முடியவில்லை. நான் மறந்தாலும் எங்கள் தெருவும், திண்ணையும், வேப்ப மரங்களின் நிழலும் பாக்கிய அம்மையாரின் வீடும், இலுப்பை மரச் சாலையும் அடிக்கடி எனக்குச் சந்திரனையே நினைவூட்டி வந்தன. அந்த நினைவு மகிழ்ச்சியான நினைவாக இருந்தால் கவலை இல்லை. அது என் உள்ளத்தில் வேதனையைத் தூண்டுவதாக இருந்தது. கல்லூரி விடுதியில் பக்கத்து அறையில் இருந்துகொண்டு அவனுக்காகக் கவலைப்பட்டதைவிட, வேப்ப மரத்தடியில் திண்ணையில் சாய்ந்து தனியே இருந்தபடி நான் பட்ட கவலை மிகுதியாக இருந்தது. அவனுடைய அழகும் அறிவும் அன்பும் நட்பும் இப்படித் துன்பத்தை வளர்ப்பதற்குத்தானா பயன்படவேண்டும்.

இந்தத் துன்ப நினைவு ஒருவாறு மாறுவதற்கு இரண்டு வாரங்கள் ஆயின. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு திருமணப் பேச்சும், நாதசுர ஒலியும் அடிக்கடி கேட்கும் நிலைமை வந்தது. பாக்கியத்தின் தம்பி விநாயகத்திற்குத் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. குண்டலேரி என்னும் கிராமத்தில் அவர்களின் பழைய உறவில் ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்தார்கள். அப்போது திருமணக் கடிதங்கள் எழுதுவதற்கும் அங்கே இங்கே போய் வருவதற்கும் என் உதவியைக் கோரினார்கள். அம்மா பெரும்பங்கான வேலைகளை எடுத்துக்கொண்டு செய்தார். அந்த வீட்டிலும் வந்த உறவினரிலும் வாழ்வரசியாக யாரும் இல்லாத காரணத்தால், அம்மாவின் உதவி அவர்களுக்குத் தேவையாக இருந்தது. திருமணத்திற்கு முன் செய்யும் சில பொங்கல் பூசைகளுக்கும் கோயில் வழிபாடுகளுக்கும் அம்மாவே முன் நின்று, எங்கள் வீட்டு அலுவல் போலவே அக்கறையோடு மேற்கொண்டு செய்துவந்தார். அப்பா மளிகைக் கடையை விட்டு அசையவே இல்லை. பெண் வீட்டாரிடம் உறுதிப் படுத்திக் கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றபோது, பாக்கியமும் அந்த அம்மாவின் தகப்பனாரும் நேரே வந்து அப்பாவிடம் சொல்லி வற்புறுத்தி அழைத்தார்கள். “சில்லறைக் கடையை விட்டு எப்படி வரமுடியும்? சொல்லுங்கள். ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா?” என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன கிராமம். உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே. ஒருநாள் இரவு தங்கி உறுதி செய்து கொண்டு விருந்து உண்டு மறுநாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு வந்துவிட்டோம். ஒப்பந்தத் தாளில் குறித்த நாளிலேயே திருமணத்தை முடிப்பதென்று, வந்தவுடன் பாக்கியமும் அவருடைய தகப்பனாரும் திருமண ஏற்பாடுகளில் முனைந்து ஈடுபட்டார்கள். மாப்பிள்ளை ஆகவேண்டிய விநாயகமோ, ஒரு மாறுதலும் இல்லாமல், பழையபடியே யாருடனும் பேசாமல் கடிகாரம் போல் தொழிலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். தம் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாறுதலைப் பற்றி ஒன்றும் அறியாதவர் போல் இருந்தார்.

விடுமுறையில் எவ்வளவோ படிக்க வேண்டும் என்று நானும் மாலனும் திட்டமிட்டுப் புறப்பட்டோம். இண்டர் மீடியட் இரண்டாம் ஆண்டு நடைபெற வேண்டிய பாடங்களின் புத்தகங்களையும் வாங்கினோம். மாலன் ஒருவாறு திட்டப்படி படித்து வருவதாகக் கடிதம் எழுதியிருந்தான். எதிர்பார்த்த அளவிற்கு என்னால் படிக்க முடியவில்லை. அமைதியாக இருந்த காலத்தில் சந்திரனைப் பற்றிய கவலையால் என் படிப்புக் கெட்டது. திருமண முயற்சியால் அந்தக் கவலை குறைந்தபோதிலும், திருமண வேலைகளில் ஈடுபட்ட காரணத்தால் மனம் படிப்பில் ஈடுபடவில்லை.

திருமணம் பாக்கியம் வீட்டிலேயே நடைபெற்றது. செல்வம் இல்லாக் குறையால், ஆடம்பரத்திற்கு வழி இல்லை. எளிய முறையில் நடந்தாலும் கூடியவரையில் குறை இல்லாதவாறு நன்றாக நடைபெற வேண்டும் என்று பாக்கியம் பெரிதும் முயன்றார். ஆனால் எண்ணியபடி நடக்கவில்லை. வந்த உறவினர் சிலர் திருமணத்துக்கு முந்திய இரவில் பெண்ணை அழைத்து வந்த போதே சீற்றத்தோடு பேசத் தொடங்கிக் குழப்பத்தில் ஈடுபட்டனர். சிலர் உண்ண மறுத்துவிட்டனர். குழப்பக்காரரில் ஒரு சிலர் நன்றாகக் குடித்திருந்தனர். அதை நான் முதலில் தெரிந்துகொள்ளவில்லை. அவர்கள் கன்னா பின்னா என்று பேசத் தொடங்கியபோது நான் சமாதானம் செய்ய விரும்பி மெல்ல நெருங்கி ஒன்று இரண்டு சொன்னேன். அப்போது எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்னைக் கைப்பற்றி இழுத்து, “என்ன தம்பி! நீ அவர்களிடம் போய்ப் பேசுகிறாயே! குடிகாரரிடம் காரணம் பேசிப் பயன்படுமா?” என்றார். “அப்படியா?” என்று திகைத்து நின்றேன். “கிட்டே போனால் சாராய நாற்றம் மூக்கைத் துளைக்கிறதே, தெரியவில்லையா?” என்றார். அதன் பிறகுதான், அவர்களுடைய முகங்களை நன்றாகக் கவனித்தேன்; குடித்திருக்க வேண்டும் என்று துணிந்தேன். சாராய நாற்றத்தை அறிவதற்காக மறுபடியும் நெருங்கிச் சென்றேன். அந்த நாற்றம் இருந்ததை உணர்ந்தேன். அம்மாவிடம் அதைப் பற்றிச் சொன்னேன். “அப்படித்தான் இருப்பார்கள். கிராமத்தில், படிக்காத மக்கள் அப்படித்தான். நம்முடைய பங்காளிகளும் சிலர் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்பா அவர்களை வீட்டுப்பக்கமே சேர்ப்பதில்லை. எதற்கும் அழைப்பதும் இல்லை. என்ன செய்வது? படிப்பும் இல்லை, பண்பும் இல்லை” என்றார்.

உள்ளூராரும் வெளியூராரும் சிலரும் சேர்ந்து கடைசியில் இரவு 11 மணிக்குப் பெண் அழைத்து வந்தோம். அதற்கு மேல் நாதசுரம் முழங்க, நலுங்கு வைக்கத் தொடங்கினார்கள். அந்தக் குடிகாரரில் இருவர் அங்கே வந்து உட்கார்ந்து விட்டார்கள். அவர்களை யாரும் அழைத்ததாகவும் தெரியவில்லை. அவர்களே வலிய வந்து பந்தலில் உட்கார்ந்து கொண்டார்கள். மணப்பெண்ணுக்கு நலுங்கு வைக்கப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து சந்தனம் பூசி ஆரத்தி சுற்றிச் சென்றார்கள். ஒருவர் வடக்குப் பக்கத்தே உட்கார்ந்து, நலுங்கு வைத்த பெண்களுக்கு வெற்றிலை பாக்கு எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தார். இளம் பெண்கள் இருவர் சேர்ந்து பாட்டுப் பாடினார்கள். பாட்டும் நாதசுர இசையும் மாறி மாறி அமைந்து கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பெண் வீட்டுக்காரரும் பிள்ளை வீட்டுக்காரருமாகக் கலந்து நலுங்கு வைத்துச் சென்றார்கள். அம்மா நலுங்கு வைக்க முன் வந்ததைப் பார்த்து என் மனத்தில் ஊக்கம் ஏற்பட்டது. அம்மா சந்தனத்தை எடுத்து மணப்பெண்ணின் முகத்திலும் கைகளிலும் தடவிவிட்டு ஆரத்தி சுற்றத்தொடங்கியபோது, “போதும் அம்மா! ஒன்பது பேர் ஆகிவிட்டது. நீங்களே கர்ப்பூரம் ஏற்றிச் சுற்றி விடுங்கள், போதும்” என்றார் ஒருவர். இல்லை எட்டுபேர்தான் நலுங்கு வைத்தார்கள். இன்னும் ஒருவர் குறையாக இருக்கிறது” என்றார் அம்மையார் ஒருவர். அவர் வெளியூரார் போல் தெரிந்தது. உடனே, அவரைப் பின்பற்றி, மற்றோர் அம்மையார், “அது என்ன வழக்கம்? சாதியில் இல்லாத வழக்கம். குலத்தில் இல்லாத வழக்கம்! எட்டுப்பேர் நலுங்கு வைப்பது பற்றி நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன். வேண்டும் என்றே செய்வதாக இருக்கிறதே! முன்னே பின்னே வாழ்ந்த வீடாக இருந்தால் தெரியும்” என்றார். சும்மா உட்கார்ந்திருந்த குடிகாரர் கிளம்பிவிட்டார். “முதலில் இருந்தே இப்படித்தான் செய்து வருகிறார்கள். நானும் பார்த்து வருகிறேன். யாரையும் மதிப்பதில்லை. ஒன்றும் இல்லை. யாரைக் கேட்டுப் பெண் அழைத்தார்கள்? அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்” என்று மீசையை முறுக்கிக்கொண்டு எழுந்தார்.

“இன்னும் ஒருத்தர் நலுங்கு வைத்து முடித்துவிடலாமே. இந்தச் சின்ன வேலைக்கு ஏன் இவ்வளவு பெரிய பேச்சும் குழப்பமும்?” என்றேன்.

பக்கத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து, “நீ சும்மா இரு. தம்பி! உனக்கு என்ன தெரியும்? வெற்றிலை பாக்குக் கொடுத்து வருபவர் பெரிய மனிதர். அவர் சொல்கிறார் ஒன்பது பேர் ஆகிவிட்டது என்று, இப்போது இன்னொருவர் வந்து நலுங்கு வைத்தால் பத்து ஆகிவிடுமே! எட்டு ஆகாது என்றால், பத்து மட்டும் ஆகுமா?” என்றார்.

மணப்பந்தல் முழுவதும் ஒரே குழப்பமாக மாறிவிட்டது. எண்குணத்தான் என்று திருவள்ளுவர் கடவுளைச் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒவ்வோர் அதிகாரத்திலும் அவர் பத்துப் பத்துக் குறள் பாடியிருப்பதும் நினைவுக்கு வந்தது. “எட்டு, பத்து எல்லாம் நல்ல எண்கள்தானே? ஒன்பதாக இருந்தால் என்ன? எட்டு அல்லது பத்தாகவே இருந்தால் தான் என்ன?” என்றேன்.

பக்கத்தில் இருந்தவரின் முகம் மாறியது. “நீ சும்மா இருப்பா, இந்தக் காலத்தில் இளம்பிள்ளைகளே இப்படித்தான். கடவுளே இல்லை என்று சொல்கிறவர்கள் நீங்கள். உங்களுக்கு எட்டு, பத்து எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். நாளைக்கு இதனால் ஏதாவது கேடு வந்தால் யார் முன்வந்து காப்பாற்றுவார்கள்? செய்கிறவர்கள் சரியாகச் செய்வதுதானே? செய்யத் தெரியாவிட்டால், எங்கள் வீட்டிலே கலியாணம் என்று ஏன் பெருமையோடு ஒப்புக்கொண்டு வந்தீர்கள்?” என்றார்.

குடிகாரனின் மனநிலை மயங்கியது போலவே, அவருடைய மனநிலையும் மயங்கியிருந்ததை உணர்ந்ததும் பேசாமல் அமைதியானேன். மூட நம்பிக்கையும் ஒருவகைப் போதைப் பொருள் என்பது முன்னமே தெரியும். நெருக்கடியான நேரத்தில் அமைதியைக் கெடுப்பதற்கு மூடநம்பிக்கையும் கள்போல் எவ்வளவு பயன்படுகிறது என்பதை அன்று உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் அப்பா வந்து சேர்ந்தார். எல்லாவற்றையும் கேட்டறிந்த பிறகு உரத்த குரலில் பேசி எல்லாரையும் அமைதிப்படுத்தி, வெற்றிலை பாக்குக் கொடுத்தவர் சொல்லும் எண்ணையே எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அம்மாவே கர்ப்பூரம் ஏற்றிப் பெண்ணின் நலுங்கை நிறைவேற்றவேண்டும் என்றும் சொன்னார். அவர் சொல்லி முடித்தவுடன், “அதுதான் சரி” என்றும் “அப்படியே செய்வோம்” என்றும் நாலைந்து பேர் உரக்கச் சொன்னார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவில்லை. அப்பாவின் திறமையால் அமைதி ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. மணி பன்னிரண்டே முக்கால் ஆகிவிட்டது. பேசிப் பேசிக் களைத்துப் போன காரணத்தால், எப்படியாவது முடியட்டும் என்று சோர்ந்துதான், அப்பாவின் தீர்ப்பை ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். நானும் களைத்துப் போனேன். உடம்பின் களைப்புக்கும் காரணம் இல்லை. உள்ளத்தின் சோர்வால் உடம்பும் சோர்ந்திருந்தது. எழுந்து வீட்டுக்கு வந்தேன்.

மறுநாள் காலையில் திருமணப் பந்தலுக்குப் போன போதுதான் மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. முந்திய நாள் கவிழ்ந்த முகத்தையே பார்த்தேன். விளக்கொளியில் பார்த்த காரணத்தால் உண்மையான அழகும் தெரியவில்லை. திருமணத்தன்று காலையில் பந்தலைச் சுற்றி வந்தபோது மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்த்தேன். முகத்தில் அவ்வளவாக கவர்ச்சி இல்லை. மாநிறமான பெண்கள் பலர் எவ்வளவோ கவர்ச்சியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவர்ச்சியும் காணப்படவில்லை. மூக்கு அளவாக அமையவில்லை. உருண்டு திரண்ட அந்த மூக்கின் கொடியவடிவம் முகத்தின் அழகையே கெடுத்துவிட்டது. கன்னங்களில் தசைப்பற்று இல்லை. ஒரு பெண்ணின் இளமைக்கு அழகு செய்யும் சிறு நெற்றி இல்லை. ஆண்களுக்கு இருப்பது போன்ற பரந்த பெரிய நெற்றி இருந்தது. இவை எப்படியாவது போகட்டும் உடுத்திருந்த உடையிலாவது, அணிந்த நகைகளிலாவது அழகைக் கூட்டியிருக்கலாம். அதுவும் செய்யப்படவில்லை. ஆடம்பரத்தைப் புலப்படுத்தும் முயற்சி இருந்ததே தவிர அழகை எடுத்துக் காட்டும் முயற்சி இல்லை. பொன்னிறப் பட்டுச் சேலையும் சரிகை மிகுந்த சோளியும் மணமகள் உடுத்திருந்தாள். கோயிலில் சாமியின் அழகு புலப்படாதபடி – மார்பும் கழுத்தும் கைகளும் தெரியாதபடி – நகைகளால் மூடி மறைப்பது போல் அந்த மணமகளைப் பலவகை அணிகலன்களால் – காசுமாலை முதல் சிலவகைப் பதக்கங்கள் வரையில் – எல்லாவற்றையும் அணிவித்துப் – போர்த்திருந்தார்கள் என்று சொல்லவேண்டும். அந்த நகைகளில் முக்கால் பங்கு இரவல் வாங்கியனவாக இருக்கவேண்டும் என்பது தானே தெரிந்தது. ஏன் என்றால், பெண் வீட்டார் பெரிய செல்வர் அல்ல என்பது, அவர்களின் வீட்டுக்குப் போய் வந்த எனக்கு நன்றாகத் தெரியும். தவிர, அந்த நகைகளில் சில, காலத்திற்கு ஏற்காத பழைய நகைகள், பொருட்காட்சியில் வைக்கத் தகுந்தவை. ஆகையால் மணமகள் இருந்த அழகும் குறைந்து விளங்கினாள். அந்த வீட்டில் விதவையாக வாழ்ந்த பாக்கியத்தின் இயற்கை அழகில் அரைக்கால் பங்கும் அவளுக்கு இல்லை. ஆனால் மணமகன் விநாயகத்தின் அழகை நோக்கியபோது, அந்தச் சிடுமூஞ்சிக்கு இவள் போதும் என்று தோன்றியது. மணப்பந்தலிலும் அவருடைய முகத்தில் ஒரு பொலிவோ புன்னகையோ இல்லை. வழக்கம் போல் உம்மென்று உட்கார்ந்திருந்தார். சொன்னதைச் செய்து சடங்குகளை முடித்தார். இப்படிப்பட்டவர் புதிய ஒருத்தியோடு பேசிப் பழகி எப்படி வாழ்க்கை நடத்தப் போகிறாரோ என்று எண்ணினேன்.

திருமணம் முடிந்த பிறகும் பகல் விருந்தின் போது சிறு குழப்பம் நடந்தது. தாலி கட்டுவதற்குமுன் எதற்காகவோ யாரையோ கேட்கத் தவறிவிட்டார்கள். அவ்வாறு செய்தது தப்பு என்று சிலர் கோபத்தோடு எதிர்வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்துகொண்டு அங்கே ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார்கள். திருமணத்துக்கு வந்த உறவினர்கள், ஆளுக்கு ஒருவகை உதவி செய்து துணையாக இருந்து போவதை விட்டு, ஆளுக்கு ஒரு குழப்பம் செய்து கலகம் விளைவிக்கிறார்களே என்று வருந்தினேன். இவ்வளவு அறியாமை உடைய மக்களுக்கு இடையே வாழ்க்கை நடத்துவது எவ்வளவு துன்பம் என்றும் எண்ணி வருந்தினேன்.

திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நான் அடிக்கடி அங்கே போய் வருவதைக் கவனித்த என் தாய், “இளம் பெண் – புது மருமகள் வந்திருக்கும் வீட்டுக்கு நீ அடிக்கடி போவது நல்லது அல்ல. எப்போதாவது ஒரு முறை போய்விட்டு வந்தால் போதும்” என்றார். அதன்படியே நான் போவதைக் குறைத்துக் கொண்டேன். பாக்கியம் முன்னைவிட ஓய்வாக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார். “இனிமேல் எனக்குக் கவலை இல்லை. குடும்பம் அவர்களுடையது. வேலை இருந்தால் செய்துவிட்டு, சோறு இருந்தால் சாப்பிட்டுவிட்டு, இப்படியே என் காலத்தைக் கழிப்பேன்” என்று சிலமுறை அம்மாவிடம் பேசியபோது குறிப்பிட்டார். அந்தப் பேச்சு அவருடைய மனநிறைவைக் காட்டியதே தவிர, கவலையைக் காட்டவில்லை.

விடுமுறையில் ஒரு பாதி இப்படிக் கழித்துவிட்டது. மறுபாதியில்தான் படிக்கத் தொடங்கினேன். முற்பகுதியின் குறையை ஈடுசெய்யும் அளவிற்கு நன்றாகவே படித்தேன். சந்திரனைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்தது. ஆயினும் முன்போல் அதனால் சோர்வடையவில்லை.

– தொடரும்…

– மு.வரதராசன் இந்நாவலை 1958-ல் எழுதினார். அவருடைய ‘தாயகம்’ பதிப்பகம் வெளியிட்டது. இந்நாவலுக்கு 1961-ல் சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டது.

நன்றி: https://www.projectmadurai.org/

மு.வரதராசன் மு.வரதராசன் (மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மு. வரதராசனார்) இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஏப்ரல் 25, 1912 இல் பிறந்து அக்டோபர் 10, 1974 இல் இயற்கை எய்தினார். எளிய தமிழ் நடையில் திருக்குறளுக்கு இவர் எழுதிய தெளிவுரை தமிழக மக்களிடையே இன்று வரை மிகவும் பிரபலமாக உள்ளது. டாக்டர் மு.வ. பற்றிய முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *