தாயின் தவம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2026
பார்வையிட்டோர்: 125 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

கொழும்பின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்தப் பழைய வீட்டின் முற்றம் எப்போதுமே மல்லிகைப் பந்தலில் பூத்த பூக்களின் வாசனையோடு சொர்க்கமாய் ஜொலிக்கும். அந்த வீட்டில் தான் மரகதம் அம்மாள் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தாள். கணவருடன் கைகோர்த்து நடந்து மகன் நேசனைப்  பெற்றதெல்லாம் இதே வீட்டில்தான் . இந்த வீடு அவளின் அடையாளம். அவ்வீட்டின் ஒவ்வொரு பாகமும் அவள் வாழ்ந்த வாழ்வின் சாட்சிகள். மனிதர்க்கு வீடுதான் பாதுகாப்பான  உலகம். மனித வாழ்க்கைக்கு வீடு என்பது வெறும் தங்குமிடம் மட்டுமல்ல. அது அன்பு, பாதுகாப்பு, மன அமைதி மற்றும் தனிநபர் அடையாளத்தின் அடித்தளம். வீடுதான் சமூகத்தில் ஒருவரின் சுயமரியாதையைப் பாதுகாப்பது. இவ் உலகில் எங்கு பாதுகாப்பெனில் அது அவரவர் வீட்டில் தான். இப்படி அன்பூறி நின்ற அந்த வீட்டின் தூணாக நின்ற அவளது  கணவர் மாரடைப்பால் இறந்த போது அவள் இடிந்து போனாள்.  அவளுக்காக எஞ்சி, இருந்த ஒரே உலகம், ஒரே ஆசை, ஒரே மூச்சு எல்லாமே அவளது மகன் நேசன் மட்டும்தான்.

தன் கஷ்டங்களை எல்லாம் மறைத்து, பசிநோக்காது, பகல் இரவு பாராது உழைத்து அவனைக் கொழும்பில் உள்ள ஒரு நல்ல கல்லூரியில் பொறியியல் படிக்க வைத்தாள். நேசனும் நன்றாகப் படித்து, ஒரு பெரிய வெளிநாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பெற்று, கடல் கடந்து சென்றபோது மரகதம் அம்மாள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தன் வறுமை தீர்ந்துவிட்டது என்றும், தன் மகனின் எதிர்காலம் பிரகாசமாகிவிட்டது என்றும் அவள் பெருமிதம் கொண்டாள்.

ஆனால், காலம் செல்லச் செல்ல அந்த மகிழ்ச்சி கவலையாக மாறத் தொடங்கியது. வெளிநாடு சென்ற நேசன், அங்கேயே பிறநாட்டைச் சேர்ந்த சாரா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டான். அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒருமுறை பேசிய நேசன், பிறகு பண்டிகை நாட்களுக்கு மட்டும் பேசினான். ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து அழைப்புகளே வராமல் நின்றுபோயின. கொழும்பு வீட்டில் முற்றிலும் தனித்துவிடப்பட்டாள் மரகதம் அம்மாள். சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும், மகனின் குரல் கேட்காத அந்த வீடு அவளுக்கு ஒரு பெரிய சிறைச்சாலை போலக் காட்சியளித்தது.

ஆனாலும், அவளது தாய் உள்ளம் மகனைத் தவறாக நினைக்கவில்லை. அவன் வேலைப் பளுவில் இருப்பான், குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் அவசரத்தில் இருப்பான் என்று தனக்குத் தானே சந்தோசமாகச் சமாதானமானாள்.  ஒவ்வொரு வாரமும் தவறாமல் அவனுக்கு ஒரு கடிதம் எழுதுவாள். “நேசன், நீயும் சாராவும் குழந்தையும் நலமாக இருக்கிறீர்களா? எனக்கு இங்கே ஒன்றும் குறையில்லை. உன்னைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. உனக்கு நேரம் கிடைக்கும்போது எனக்காக வாரம் ஒரு கடிதமாவது போடுப்பா. உன் கையெழுத்தைப் பார்த்தால் என் மனசு ஆறிவிடும்” ஒருமுறையாவது குடும்பமாக வந்து போங்கள் என்று உருகி உருகி எழுதுவாள். ஆனால், அந்தக் கடிதங்களுக்குப் பதிலே வருவதில்லை. தபால்காரர் வரும்போதெல்லாம் வாசலுக்கு ஓடிவந்து ஏமாந்து போவதே அவளது அன்றாடப் பிழைப்பானது.

அப்படி ஒரு நாள், யாரும் எதிர்பாராத நேரத்தில், அந்தப் பழைய வீட்டின் வாசலில் ஒரு சொகுசு கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய நேசனைக் கண்டதும் மரகதம் அம்மாளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஓடிச்சென்று அவனைக் கட்டியணைத்துக் கண்ணீர் வடித்தாள். பத்து வருடங்களுக்குப் பிறகு தன் மகனின் முகத்தைப் பார்க்கிறாள், அவனது கைகளைப் பற்றுகிறாள். நேசனும் அவளிடம் மிகவும் பாசமாகப் பேசினான். “அம்மா, உங்களை இப்படித் தனியாக விட்டுவிட்டேனே என்று என் மனசு தினமும் தவித்தது. நீங்கள் ஏன் இன்னும் இந்த வயதில் தனிமையில் கஷ்டப்பட வேண்டும்? எங்களோடு வெளிநாட்டிற்கே வந்துவிடுங்கள். என் மனைவி சாரா உங்களை மிகவும் அன்போடு உங்களைப் பார்ப்பாள் . குழந்தையோடு நீங்கள் விளையாடலாம். நாம் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழலாம்” என்றான்.

மகனின் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகள் மரகதம் அம்மாளின் காதுகளில் அமுதமாகப் பாய்ந்தன. தன் மகன் தன்னை மறக்கவில்லை, தன் மீது இன்னும் பாசம் வைத்திருக்கிறான் என்று எண்ணி அவள் உருகிப்போனாள். அவனுடன் செல்ல உடனே சம்மதித்தாள். அப்போது நேசன் மெதுவாகப் பேச்சை மாற்றினான். “அம்மா, நாம் அனைவரும் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறப் போகிறோம். அப்படி இருக்கும்போது இந்த பழைய வீடு இங்கே எதற்கு? இதை விற்றுப் பணமாக்கிக் கொண்டால், அங்கே நாம் வாங்கியுள்ள புதிய வீட்டில் உங்களைக்குத்்தங்கவைக்க  ஒர் சொகுசு அறை உண்டாக்க உதவியாயிருக்கும். இங்கு சும்மா கிடக்கும் வீட்டில் யார் வந்து இருக்கப் போகிறார்கள்?” என்றான்.

கணவரின் நினைவுகள் நிறைந்த, தன் மகன் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அந்த வீட்டை விற்க மரகதம் அம்மாளுக்கு முதலில் மனமில்லை. ஆனால், மகனின் பாச வலைக்கும், அவனோடு வாழப் போகும் எதிர்காலக் கனவுக்கும் முன்னால் அந்த வீடு அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. மகனின் வார்த்தைகளை அப்படியே நம்பி, வீட்டை விற்கச் சம்மதித்தாள். சில நாட்களிலேயே அவசர அவசரமாக வீடு விற்கப்பட்டது. கைகளில் கிடைத்த மொத்தப் பணத்தையும், அவனது வங்கிக் கணக்கிற்கு நேசன் மாற்றிக் கொண்டான். தாயின் கையில் ஒரு சிறு தொகையைக் கூட அவன் வைக்கவில்லை.

விமானப் பயணத்திற்கான நாளும் வந்தது. கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் பிரம்மாண்டமும், அங்கே இருந்த கூட்டமும் மரகதம் அம்மாளுக்கு ஒருவித பயத்தைக் கொடுத்தன. அதுவரை கிராமத்துப் பகுதியையும், கொழும்பின் எளிய தெருக்களையும் மட்டுமே பார்த்த அவளுக்கு, அந்தப் பளபளப்பான விமானத் தளம்  மிரட்சியைத் தந்தது. தன் மகனின் கையை அவள் பயத்துடன் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். நேசன் அவளைப் பார்த்துப் புன்னகைத்து, அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர வைத்தான்.

“அம்மா, நீங்கள் அஞ்சாமல் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் போய் நம்முடைய போர்டிங் பாஸ் (Boarding pass) மற்றும் இதர விசா ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு, பொருட்களை உள்ளே அனுப்பிவிட்டு உடனே வருகிறேன். இந்த இடத்தை விட்டு எங்கும் நகராமல் இருங்கள்” என்று கூறிவிட்டு நகர்ந்தான். தாய் தன் மகனின் முதுகையே, அவன் கூட்டத்திற்குள் மறைந்து போகும் வரை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். அவனது கையில் இருந்த பைகளில் அந்த எளிய தாயின்  வாழ்நாள் உழைப்பும், அவளது வீட்டின் பணமும் இருந்தன.

அரை மணி நேரம் கடந்தது. நேசன் வரவில்லை. ஒரு மணி நேரம் ஆனது. சுற்றிலும் இருந்த மனிதர்கள் மாறிக் கொண்டே இருந்தனர், புதிய புதிய விமானங்கள் பறப்பதற்கான அறிவிப்புகள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று காலத்தின் முட்கள் நகர்ந்தன. மரகதம் அம்மாளின் நெஞ்சில் பயம் வந்தது. “என் பிள்ளை எங்கே போனான்? இன்னும் வரவில்லையே…” என்று தவித்தாள். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் ஒலித்த அறிவிப்புகள் நடுவே யாரிடம் கேட்பது என்று திகைத்தாள்.

 தன் மகன் தன்னை ஏமாற்றிவிட்டு, பணத்தோடு அநாதையாக விட்டுவிட்டு,  தன் நாட்டுக்குத் தனியாகப் பறந்துவிட்டான் என்ற கொடூர உண்மை அந்தப் பேதைத் தாய்க்கு  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தாலும் அவளால் நம்ப முடியவில்லை.

இரவு கடந்து விடியல் வந்தது. விமான நிலையப் பாதுகாப்புக் காவலர்கள் அந்த நாற்காலியிலேயே அழுதுகொண்டிருந்த முதியவளைக் கவனித்து விசாரித்தனர். ஆனால், அவளால் தன் மகனின் பெயர் மற்றும் அவன் வெளிநாடு சென்ற விபரங்களைத் தவிர வேறு எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. முகவரியைக் கேட்டபோது, “கொழும்பு வீடு…” என்றாள். ஆனால், அந்த வீடு இப்போது அவளுக்குச் சொந்தமானதில்லை, புதிய மனிதர்கள் அங்கே குடியேறிவிட்டனர். சொந்த வீடும் இல்லை, கையில் பணமும் இல்லை, உயிர் போன்ற மகனும் இல்லை என்ற அந்த அதிர்ச்சியை அவளது வயதான மூளையாலும், தாய் உள்ளத்தாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளது புத்தி மெதுவாகப் பேதலித்துப் போனது.

நாட்கணக்கில் விமான நிலையத்திற்கு வெளியேயும், கொழும்பின் தெருக்களிலும் பைத்தியக்காரி போல அலைந்து திரிந்தாள். பசியோடும் தாகத்தோடும், அழுக்கேறிய ஆடைகளுடன், “என் நேசன் போர்டிங் பாஸ் எடுக்கப் போயிருக்கான், இப்போ வந்திடுவான்” என்று புலம்பிக் கொண்டே இருந்தாள். அவளது நிலையைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் சிலர், அவளை மீட்டு ஓர் அரசு மனநல விடுதிப் பராமரிப்பில் கொண்டு போய் சேர்த்தனர்.
இன்று, அந்த அரசு காப்பகத்தின் ஒரு மூலையில், நரைத்த தலைமுடியும், சுருக்கங்கள் விழுந்த முகமுமாக, கிழிந்த புடவையோடு அமர்ந்திருக்கிறாள் மரகதம் அம்மாள். அவளது கண்கள் எப்போதும் அந்தக் காப்பகத்தின் பிரதான இரும்புப் பாதையையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த இல்லத்தின் வாசலில் எப்போது “அம்மா…” என்று யாரோ ஒருவன், யாரோ ஒரு அம்மாவை அழைக்கும் போதெல்லாம், “என் நேசன் வந்துவிட்டான்!” என்று தன் தளர்ந்த கால்களையும் பொருட்படுத்தாமல், முகம் கொள்ளா மகிழ்ச்சியோடு ஓடி வருகிறாள்.

அவன் ஒருபோதும் வரமாட்டான், பணத்திற்காகத் பெற்ற தாயையே விற்றுக் கொழும்பு விமான நிலையத்தில் அநாதையாக எறிந்துவிட்டுச் சென்றுவிட்டான் என்ற நிதர்சனம் அவளுக்குத் தெரியாது. அவளது மனம் இன்னும் அந்த விமான நிலைய நாற்காலியிலேயே, தன் மகன் போர்டிங் பாஸுடன் கைகளைப் பற்றிக்கொள்ள ஓடிவருவான் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறது. மரணத்தை விடக் கொடூரமான அந்த ஏமாற்றத்தைச் சுமந்தபடி, இன்னும் அந்த இரும்பு வாசலையே பார்த்துக் காத்திருக்கிறது ஒரு தாயின் இதயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *