உருவெளி
கதையாசிரியர்: ஆலமர் செல்வன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2026
பார்வையிட்டோர்: 170
(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1

தண்ணி, தண்ணி, தாகம், பசி, பசி, தண்ணி, பசிக்கிறதே, ஐய்யோ பசி, அம்மா பசி, பசி உயிர் போகிறதே, கண்களில் இருட்டு இருண்டு வருகிறது. பார்க்க முடியவில்லை, பசி மயக்கம், செவிகளிலும் அடைப்பு, ஓசை, ஒலி எதையும் கேட்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை, தொண்டையில் முள், வாயும் வயிறும் ஈரப்பசையின்றி உலர்ந்து வறண்டுவிட்டதே, ஆ- அய்யோ, பசி.. பசி… போதும் இந்த நரக வேதனை. உடலிலிருந்து உயிர் பிரியும் வேதனை. தண்ணி, தண்ணி, தாகம், பசி எத்தனை முறைதான் ஈரப்பசையற்ற இந்நாவைக் கடித்து கடித்து உமிழ் நீரைச் சுரக்கச் செய்து விழுங்குவது. அய்யோ, இப்போதிந்த எச்சிலும்கூட சுரக்கவில்லையே, இப்போது நானாக நாவைக் கடிக்கவில்லை, ஆயினும் தானாகப் பற்கள் கிட்டித்து நாவைக் கடித்துக் கொண்டதால் சிறிதே சுரக்கும் செங்குருதியும்.. ச்.ச்சு.அ. இதன் ‘சல்’ என்ற சுவையும் அமிர்தமாய் இனிக்கின்றதே.. ஆ. பசி… அய்யோ… அம்மா… பசி… தாகம்… தண்ணி, கடிபட்ட நாவில் இப்போது செந்நீரும் கூட சுரக்கவில்லையே, உறும்பசி கனலால் குருதிப் புனலும் ஆவி ஆனதோ! பசி தாங்க முடியவில்லையே, மூச்சு திணருகிறதே, ஆ- அது.. அது என்ன சப்தம்… கேளா செவிகளின் மூலம் கேட்பது… ஆதி மௌனத்தின் ஆரவாரமோ! ஆ, அது என்ன ஒளி. காணா கண்களின் மூலம் காண்பது ஆதிவெளிச்சம் உறங்கும் கருவறை இருட்டோ, அய்யோ வயிற்றில் குடலின் முரட்டு முறுக்கல், வெறி கொண்ட நாகங்களின் கலவிபோல. இதோ காற்றில் ஆடும் தீபச் சுடர் கொழுந்துபோல படபடத்து, வெடவெடவென ஆடித் துடிக்கும் இதயம்.
இதோ இப்போழுது நின்றுவிடப் போகிறது. ஆ…. இதயத்தின் துடிப்பைக்கூட என்னால், எனதுடலால் தாங்க முடியவில்லையே, அய்யோ, பசி, பசி.. தாகம்… தண்ணி, மயக்கம் வருகிறதே, மயக்கம். இதோ நினைவு மீள்கிறது. மீண்டும் மயக்கத்தின் மடியில், பசி, பசி ஐம்புலனும் பொறி கலங்கி நெறி மயங்குகிறதே, தாகம், தண்ணி, தாகம் தீர்க்க இப்போது ஒரே வழி, ஆம், தாகம் தீர ஒரே வழி சிறுநீர் பெய்து குடித்தல் ஒன்றே, அய்யோ அதுவும்கூட வரவில்லையே, உடல் முழுவதும் நீர்ச் சத்தின்றி உலர்ந்து வறண்டு போய் உள்ளதே, உடல் வியர்த்தால் அதை நக்கி சுவைத்தாவது என் தாகம் தணிப்பேன் எனில் அதுவும் இயலாநிலை இப்போது ஹா.ஸ்… மூச்சு இழுப்பதும் விடுவதும் உடலில் தானாய் நிகழ்வது. ஆனால், அதுவும் கூட இப்பொழுது நானாய் நிகழ்த்த வேண்டி உள்ளதே. இதோ எனது மூச்சைச் சிரமத்துடன், மிக சிரமத்துடன் வெளிவிடுகிறேன். மீண்டும் மூச்சை உள்ளிழுத்தால்தான் உயிர் என் வசம் இல்லையேல் அது எமன் வசம். ஸ்…ஸோ ஹம். உள்மூச்சு, வெளிமூச்சு, ஆ- இதுதான் என் கடைமூச்சோ. ஆ- அய்யோ, என் இதயம் வலிக்கிறதே, என் இறுதி மூச்சு வெளியேறி பின் இதயத்துடிப்பு நிற்குமோ. இதயத்துடிப்பு நின்றவுடன் இறுதி மூச்சு வெளியேறுமோ அல்லது இரு நிகழ்வும் ஒன்றிணைந்து நிகழுமோ, அய்யோ, பசி, பசி, தாகம், மயக்கம், உணர்வு நழுவுகிறதே, துயிலுக்குள் மூழ்குகின்றேன். மீண்டெழுவனோ, பசி தண்ணீர் ஒரு வாய் தண்ணி, ஒரு மிடறு தண்ணீர், ஒரு துளி தண்ணீர் தாருங்களே யாராவது, உருவற்று தெளிவற்ற உருக்கொண்டு தெரிவது மனிதர்கள்தானோ அல்லது மரண தேவர்களோ, தண்ணீர், தண்ணீர் என்னைப் பசி பிணியிலிருந்து மீட்டு உண்டி கொடுத்து உயிரளிக்க இவ்வுலகில் ஒருவரும் இல்லையா, ஒரு மனிதன். ஒரே ஒரு மனிதன், எனக்கு உணவளிக்க, உயிரளிக்க ஒரு மனிதன்கூட இம்மண்ணில் இல்லையா. இல்லை. அப்படி ஒருவன் எனக்கு உணவளித்தால் அவன் மனிதன் இல்லை கடவுள் உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, உடலில் உயிர் நிலைக்க உணவு, உணவு, பசி தாகம், உடலை அசைக்கக்கூட முடியவில்லையே, ஆ- அய்யோ.. பசி.. பசியடங்க சிறிது மண்ணையாவது தின்கிறேன். மண் தின்ன போகும் உடல் இப்போது மண்ணைத் தின்னப் போகிறது. அய்யோ ஒரு பிடி கரம் கொண்டு எடுக்கமுடியவில்லையே வெட்டுண்டு வேர் பிரிந்த தருபோல் மாத்துக் கிடக்கும் என் உடலை உயிர்கொண்டு அசைக்கின்றேன். அய்யோ, இது மரத்துப்போன உடல் அல்ல, கொடும் வாதையே உடலாய் உருவெடுத்து இங்கு வந்துதித்ததோ, அய்யோ, இது ஜீவமரணப் போராட்டம். படுத்துக் கிடக்கும் இந்நிலையிலேயே உடல் அசைந்து புரண்டு என் வாய் திறந்து நாவசைத்து மண் நக்கி உண்கின்றேன். சுவை கொண்ட மண் துகள்கள் என் நாவில், அய்யோ நாவு எரிகிறதே. நாவில் பற்கள் கிட்டித்துக் கடித்துக்கொண்ட இரத்தக் காயங்களில் மண் அப்பிக் கொண்டதால், எரிகிறதே வாயும், நாவும், உயிர் பிழைக்க மண்ணை மென்று தின்னு, கல்லையும் கடித்து விழுங்கு, அய்யோ, என்னால் ஒரு பிடி மண்ணைக்கூடத் தின்னமுடியவில்லையே, க்கும். க்கும், மண் தொண்டையிலே மண், க்அ, க்கும், உயிர் பிழைக்க மண்ணையும் கல்லையும் தின்னத்தான் வேண்டுமா. கண்டதையும் தின்று உயிர் பிழைக்கத்தான் வேண்டுமா, அம்மா, அய்யோ, ம்… ரீங்காரமிடும் இந்த ஈக்கள், உங்களுக்கும் பசிதானே. ஆ- அய்யோ, எரிதழல் போல என் உடல் கடிக்கும் கொள்ளி எறும்புகளே, என்னைக் கடித்துத் தின்றே கொன்று விடுங்கள், என்ன அவசரம் உங்களுக்கு. உங்களுக்கும் பசிதானே. அனைத்துயிர்களின் ஆதிமூலம் பசி, ஆதி இச்சை பசி-பசிப்பதும், ஆதிகிரியை பசி பசிக்குப் புசிப்பதுதானே ஏகம் என்றும், பசி, ஆதி மட்டுமா, அந்தம் மட்டிலும் அதுவே. பசியே ஆதியும் நீயே அந்தமும் நீயே, ஆஹா மரணம் என்னும் போதி மரத்தடியின்கீழ் பசிதவம் புரிந்த எனக்கு இப்போதுதான் ஞானம் பிறக்கிறது. உடலின் பசி காமம், உயிரின் பசி ஞானம் அய்யோ, இப்போது என் வயிற்றின் பசிக்குக் கிடைக்குமா எனத்தில் ஒரு பிடி சாதம் அய்யோ உயிர் போகிறதே. பசி, தாகம், தண்ணி, பசி, பசி இப்போது என் உயிரைப் புசிக்கப் போகிறது. பசியே ஜனனமும் நீயே, பசியே மரணமும் நீயே, பசியே மற்றெல்லா சகலமும் நீயே, அய்யோ தாள முடியவில்லையே. இதுதான் உயிர் போகும் வாதனையோ, போதும் இந்த வேதனை, பசி தீயினில் வேகுதே என் ஆவி. நான் ஆவி துறக்கப் போகின்றேன். நான் இறந்துவிடப் போகின்றேன் இதோ எனது உணர்வு ஒடுங்குகிறது உடலில் உடல் ஒடுங்கும் இடம் எங்கே? மண்ணிலா, உயிர் ஒடுங்கும் இடம் எங்கே? விண்ணிலா, அல்லது என்னிலா? என்னில் எனில் நான் யார்? நான், நான் பசி, பசியைத் தவிர பிறிதொன்றிலை. பசியே அண்டமும் பிண்டமும் பசியே ஆதியும் அந்தமும், பசியே கடவுள். என்னில் நான் ஒடுங்குகின்றேன் பசியில் பசி ஒடுங்குகிறது. எந்தப் பசியும் அற்ற நிலைதான் முக்தியோ? நான் பசி, மயக்கம். தண்ணி, தாகம் உயிர் போகிறது. உணர்வு நழுவுகிறது. சூனிய வெளியை வெறித்து விழித்திருக்கும் என் விழி இமைகள் மெல்ல மூடிக்கொள்கிறது.
2
தண்ணி, தண்ணி.. தாகம்.. ஆ.. தண்ணி, அ ஆம்.. தண்ணீர் என், வறண்டு வெடித்த இதழ்களையும் நாவையும் மற்றும் பற்களையும் நனைத்து வாயில் பரவி படர்ந்து ஊறி உள் நாவையும் நனைப்பித்து கண்டம் ஏறி இறங்கி மிடறு விழுங்க, உணவுக் குழலையும் ஈரமாக்கி வழிந்து வழி கொண்டு ஊர்ந்து இரைப்பையில் இறங்கி நிரம்பி,ஒட்டிக் கிடக்கும் குடற் சுவர்களையும் நனைத்துப் பிரித்து உள் பாவி, குடல் நிறைந்து உடல் நிறைந்து உணர்வளிக்கிறது நீர். உடலுக்கு உயிரளிக்கிறது நீர், உயிர் புனலால் அகவுடல் நனைந்து குளிர்ந்து பசும் உயிர் முளைக்கின்றது. இன்னும், இன்னும் நீர், வறண்ட நிலமதை சேர்ந்த நீரதனை நிலம் நொடியில் உறிஞ்சுவதுபோல், தணியாதாகம், இன்னும் நீர், இன்னும் கொஞ்சம், இன்னும் நீர், அக உடல் நனைத்த உயிர் புனலால் என் மெய்யில் உயிர் சுடர்விடுகிறது. நீரின்றி அமையாது உலகு. உடல் உயிரும்கூட ஆஹா என்ன சுவை, என்ன சுவை, நீரின் சுவையா இது, அல்ல உயிரின் சுவை, உயிர்ப்பின் சுவை, உயிர் மீண்ட உடலில் மதியும் மனமும், நெறியுடன் புலன்களும் அதனதன் களத்தில் நின்றியங்க, செவிகளின் மௌன அந்தகாரத்தில் சப்த வெளிச்சங்கள், மின்மினிகளாய், புற உலகின் ஓசை, ஒலிகள் எல்லாம் மௌனத்தில் ஒற்றை ரீங்காரமாய் ஓங்காரமிட்டு, சங்கமிக்கத் துவங்குகிறது. ஓம் எனும் பேரோசை, பின் தெளிவற்ற ஓசைகள் எல்லாம் மெல்ல மெல்ல தேய்ந்து ஒடுங்க, எதோ ஒலிக் குறிப்புகள், எதோ ஒரு மொழி, என்ன மொழியோ? அறிந்த மொழிதான் “இன்னும் கொஞ்சம், மெதுவா மெதுவா”, வார்த்தைகள் ஜீவ ஊற்றாய் என் மந்த செவிகளில் நிரம்பித் தளும்ப, யாராலோ ஊட்டப்படும் உயிர் புனலை மேலும் மேலும் விழுங்குகிறேன். விக், விக், “மெதுவா, மெதுவா விக்குது பாரு, இத கொஞ்சம் குடி,” க்கும், ம். நாவில் படர்கிறது நீர்மம், உயிர்மம். நாவில் பற்களால் கடிப்பட்ட ரணவலியை இப்போது உணர்கின்றேன். காயங்களில் தீ எரிச்சல், அதையும் மீறி நாவின் சுவை அரும்புகள் மூளைக்குச் செய்தி அனுப்புகின்றன. ஆஹா, என்ன சுவை இது, நீரின் சுவையன்று இது, பழரசத்தின் சுவை. ஆஹா என்னே இனிப்பு, என் உள்ளம் கொள்கிறது களிப்பு. ஆம், பழரச பானம்தான் ருசியை ரசித்துக்கொண்டே விழிகளை விழிக்க முயல்கின்றேன். மேல் இமையும் கீழ் இமையும் ஒட்டிக்கொண்டு பிரிய மறுக்கின்றன. வீங்கிக் கிடக்கும் விழியிமைகளில் செவ்வெறும்புகள் பசி கொண்டு கடித்துச் சுவைத்த காரணத்தால் வலி- ஸ். ஆ- மெல்ல. மிக மெல்ல இமைகளை விரிக்கின்றேன் விழிகளை விழிக்கின்றேன். ஆ கூர்வாளென சுடரொளி என் நயனங்களில் பாய்கிறது. ஒளி கண்டு நாணும் நயனங்களை மெல்லத் திறந்து மூட, திறந்து மூட, இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி நடம் புரிய, இதுவாழ்வா? சாவா? அகத்திலும் இருளும் ஒளியும் நடம் புரிய, நான் இன்னும் இருக்கிறேனா. இல்லை இறந்துவிட்டேனா. இது கனவா? நனவா? விக்- வி… “இன்னும் விக்கல் அடங்கல பாரு, மெதுவா குடிப்பா”, மீண்டும் பழரசம் நாவில் படர இது எனக்கு உயிர் தரும் பானம் என்று நான் மிடறு விழுங்க, ‘படார்’ என்ற ஓசையுடன் எனது செவிகளின் அடைப்பு விலகுகிறது. செவிகளின் ‘கும்’ சட்டென விலகி குரல் தெளிவாய், ஆதுரமாய், மனித குரலா இது! அல்ல தெய்வத்தின் குரல், என் தெய்வமே, தெய்வத்தை கண்கொண்டு காண முடியவில்லை. இமைகள் கனத்து மூடிக்கொள்கிறது. எத்தனை மிடறு அருந்தினேனோ, உண்ட களைப்பு. உயிர் மீண்ட களிப்பு, இளைப்பாற கண்கள் தாமாக மூடிக்கொள்கின்றன. தாறுமாறான மூச்சிறைப்பு ஒடுங்கி ஒழுங்குடன் இலயப்படுகிறது. அதன் சீரான தாள கதியுடன் இணைந்த என் மனமும் அமைதியின் மடியில் மீண்டும் உறக்கம், விழிப்பு, விழிப்பின் வெளியில் மீண்டும் மீண்டும் எனக்கு ஊட்டப்படும் பழரசத்தை சேய் போல மெல்ல மெல்ல அருந்துகிறேன். உள்ளிறங்கும் நீர்ம கனியின் உன்னத ஊட்டத்தால் உடலில் சிறிது தெம்பை உணர்கின்றேன். கனிநீரமுதின் உயிர் சக்தி உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஊடுறுவி பரவி உயிர்ப்பளிக்கிறது. நான். நான்.இறந்து போய் மீண்டும் உயிர்ப்படைந்து விட்டேனா! அல்லது இது என் மறுபிறவியா? –
அப்படியாயின் நான் இப்போது சின்னஞ்சிறு குழவியா? எங்கே என் அன்னை? அவள் தான் எனக்கு முலை பாலூட்டுகிறாளோ? அ. அமிர்தம். விக், விக் “மெதுவா குடிப்பா, விக்குது பாரு, மெதுவா இந்தா இன்னும் கொஞ்சம்”, கார் மேகத்தின் இடிபோல ஆண்மை பொலியும் குரல், இப்போது இன்னும் தெள்ளத் தெளிவாக என்னால் கேட்கமுடிகிறது. அப்படியாயின் இது என் அப்பனின் குரல், அப்பா, அப்பா, என் அன்னை எங்கே? அம்மே அம்மே. அம்மா- இமைகளைச் சிரமத்துடன் விழித்து விழித்துப் பார்க்கிறேன் அப்பா, அப்பா, அம்மா எங்கே? என்னைப் பிறப்பித்து விட்டு எங்கே சென்று விட்டாள்? ஒருவேளை என்னைப் பிரசவித்துவிட்டு இறந்து விட்டாளோ? அம்மா, என்னைப் பெற்றவளே. நான் தாயில்லாத பிள்ளையா? அம்மா, அம்மா, என்னைப் பெற்றவளே ம்மா. அம்மா. “அழதேபா, அழதே, எல்லாம் சரியாயிடும். இந்த இத இன்னும் கொஞ்சம் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கு. எல்லாம் சரியாவிடும்.” சரி தூங்குகிறேன் அப்பா, நலிவுற்ற என் உடலும் உள்ளமும்கூட துயிலைத்தான் நாடுகிறது. விழிகள் செருக தூக்கமா, மயக்கமா என்ற கேள்வியுடன் என் இருவிழியிமைகளும் கனத்துத் தாமே மூடிக்கொள்கிறது. உயிரினங்களுக்குக் கிடைத்த உன்னத வரமான துயிலில் மூழ்குகிறேன் நான்.
உணர்வுகள் பைய மூண்டு விழிகள் விழித்தபோது நயனங்களில் ஊசி நுனியளவாய்ச் சுருங்கிக் கிடந்த கருவிழிகுழவி, கூசி பின் மெல்ல மலர, வெள்ளென ஒளிர்ந்த ஒளி, பின்பு வர்ணங்களின் இந்திரஜாலமாய் நடம் புரிய, செவிகளின் ஞொய்மை ஒடுங்கி சிற்றொலியும் பேரொலியும் புரியும் தாள ஓலங்கள், மேள தாளங்கள், நான். நான்- எங்கே இருக்கின்றேன். மறுபிறவி எடுத்த நான் இப்போது சிறு குழந்தையல்லவா, குழவி எங்கே இருக்கும், அம்மியின் மடியில்தானே. அம்மி- அம்மே… அம்மா- இது என் அன்னையின் மடியா! இல்லை குழந்தையை ஊஞ்சலாட்டித் தாலாட்டி உறங்க வைக்கும் தொட்டிலா?. என்னைத் தாலாட்டித் துயிலச் செய்தபின் எங்கு சென்றாய் என் அன்னையே, இதோ விழித்துக் கொண்டேன். ஸ்ஸ் ஆ- குளிர்கிறதே, அம்மா குளிர்கிறது- மேன் துகிலனைய பனிவளி என் இன்னுயிர் யாக்கையைத் தழுவிப் புணர்வதை உணர்கின்றேன். ஆ- குளிர்- இதமான பதம் தரும் குளிராக மாறுகிறது. என் உடல் புரள சுயம் விழிக்கிறது. நான் நான். எங்கே, “விழிச்சிடியா, மெதுவா, மெதுவா, அப்படியே படுத்துக் கொள்”, ஆண்மை பொலியும் சிம்மக்குரல் என் செவிப்பறைகளின் ஞொய்மையை அதிர செய்கிறது. கண்களைத் திறந்து குரல் வந்த திசை நோக்க, ஆ- இவர்தானே என் தந்தை. அப்பா, அப்பா, அம்மா எங்கே, அத்தனே நான் உங்கள் குழந்தை, என்னைத் தூக்கி எடுத்தணைத்து மார்போடு தழுவிக் கொள்ளுங்கள். என் கால்களை உதைத்துக்கொண்டு இரு கைகளையும் உயர்த்துகின்றேன். “படுத்துகோப்பா படுத்துகோ. அய்யோ பாவம், பசிதான் எவ்வளவு கொடுமை. இன்னும் சுய நினைவு வரல பாவம்”. அவர் பேசுவதை கேட்க, கேட்க, பைய, பைய எனது சுய உணர்வை அடைகின்றேன் எனது ப்ரக்ஞை தெளிகிறது. நான் – நான்.. குழந்தை அல்ல, வளர்ந்த மனிதன், இதோ, இவர் என் தந்தையில்லை, இல்லையில்லை. எனக்கு உண்டியளித்து உயிரளித்த இவர்தான் என் தந்தையும் தாயும், ஐயனே தாயும் நீயே தந்தையும் நீயே, அடியேன் இரு கரம் கூப்பி அவரை வணங்குகின்றேன். கூப்பிய கரங்களை அவர் ஆதரவுடன் பற்றி அமர்த்துகிறார். “எத்தனை நாள் பட்டினியோ, இப்பதான் உனக்கு சுயநினைவு வந்திருக்கு. பசி களைப்பு இன்னும் போகல, படுத்து ஓய்வெடுத்துக்கோ, இந்த பழரசத்தை குடிச்சிக்கோ, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா எல்லாம் சரியாயிடும்” நான் மெல்ல எழுந்தமர முயற்சிக்கின்றேன். வலுவற்றுப் பொலிவற்று நலிவுற்றவுடல் நடுநடுங்கி எழுந்தமர உதவி அதிர்கிறது. யாரோ செய்கின்றார்கள் “ம். மெதுவா, மெதுவா, அப்படி சாய்ச்சி உட்கார வை”- அவர் கட்டளையிடுகிறார் கோதையரின் மென்முலையனைய சாய்ந்தனையை என் முதுகில் முட்டுக் கொடுத்து நான் சாய்ந்தமர்த்தப் படுகின்றேன் எனக்கு ஏன் இந்த அன்பும், அரவணைப்பும், புதிய சூழல் எனக்கு ஒன்றும் புரியவில்லை. மலங்க, மலங்க விழிக்கின்றேன். என் கலக்கத்தைப் பார்த்து அவர், “நீ எதுக்கும் கவலைப் படாதே”, என பேசத் துவங்குகிறார். மேலும் மேலும் பேசிக்கொண்டே போக, என்னால் அவர் பேசுவதைக் கிரகிக்க முடியவில்லை. பழரசமும் ஊட்டப்படுகிறது, போதும் போதும் என்ற அளவிற்கு அருந்துகின்றேன். அமிர்தமே கிடைத்தாலும் போதும் வரைதானே. உண்ட களைப்பு, உடலில் உயிர் மீண்ட களிப்பு, மீண்டும் என் விழிகள் துயிலுலக வாயிலை நோக்கி நடைபயின்று சொக்க, இது உறக்கமா மயக்கமா என்ற கேள்வியும் என் விழிகள் இமைமூடி கொள்ள, “சரி, சரி இப்ப தூங்கட்டும். பத்திரம்”, அவர் குரல் ஒலித்து மெல்ல மெல்ல தேய்ந்து ஓடுங்குகிறது. நான் நினைவிழந்து மீண்டும் துயிலுலகதிற்குள் புகுகின்றேன்.
முற்றிலும் உறக்கம் கலையவில்லை, என்னுள் மீள்கிறது பழைய நினைவுகள் பல, சாலை ஓரத்தில் பசியால் நலிவுற்று மயங்கி உயிர் பிரியும் நிலையிலிருந்த என்னை, இதோ இவர் காப்பாற்றி இருக்கிறார். உலகில் நல்ல மனிதர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். இல்லை, இவர் மனிதர் இல்லை கடவுள், மனித உருவில் கடவுள் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும், துயில் கலைத்து மெல்ல கண் திறந்து எழுகின்றேன். உடலில் சிறிது தெம்பை உணர்கின்றேன், உடன் பசியையும்கூட ஆனால், உயிர் போக்கும் அளவிற்கு வாதை செய்யும் பசியல்ல நான் கட்டிலில் எழுந்தமர்ந்து நானிருக்கும் இடத்தைச் சுற்றும் முற்றும் பார்க்கின்றேன். நான்… நான் எங்கே இருக்கின்றேன். இது என்ன மாளிகையா? அரண்மனையா? சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் செல்வ செழிப்பு, உடலசைவிற்குப் பொருள் புரிந்துகொண்டு ஏவல் செய்ய காத்திருக்கும் பணியாளர் கூட்டம் வண்ண சீருடையில். நான் கண் விழித்ததை கண்டு அங்கிருந்த ஒருவர் அருகில் வருகிறார். புன்னகையுடன் “நான் என்ன செய்ய வேண்டும்”. என்று வினவுகிறார். “கட்டளையிடுங்கள்” என்று பணிந்து நிற்கிறார். ஒன்றுமே புரியவில்லை எனக்கு மெல்ல நகர்ந்து கட்டிலைவிட்டுக் கீழ் இறங்க எண்ணுகிறேன். முன்பு பார்த்த அவர் எங்கே, அவர் தான் இவர்களுடைய எஜமானராய் இருத்தல் வேண்டும். எங்கே ‘அவரி? எனக்கு ஏன் இந்த இராஜ மரியாதை? இது என்ன இடம்? நான் கட்டிலைவிட்டு இறங்க முற்படும் போதுதான் மஞ்சத்தின் மென்மையை உணர்கிறேன். மேலும், என் உடலில் புதிய ஆடைகள், என் உடல் துடைக்கப்பட்டு நறுமணம் வீசுகிறது ஆயினும் முற்றிலும் அழுக்கறவில்லை என்பது எனது எண்ணம். நீராடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன் என் உள்ள குறிப்பை அப்பணியாளர் எப்படித்தான் அறிந்து கொண்டரோ, என் உடலசைவைப் பார்த்து அவர் கண்களால் கட்டளையிட அங்கிருந்த பணியாளர்கள், பணிபெண்கள், என்னை கட்டிலை மற்ற விட்டுக் கீழ் இறங்க உதவுகிறார்கள். அவர்கள் உதவியுடன் மெல்ல தரையிலிறங்கி நிற்கிறேன். பளிங்கு தரையின் ‘ஜில்’ என் பாதங்களின் வழியாக ஊடுருவி உச்சி மண்டை வரை பாய்கிறது. நிற்க முடியாமல் கால்கள் இரண்டும் வெடவெடவென படபடக்கிறது பசி பிணியால் நலிந்த தேகமல்லவா, நிற்க முடியாமல் மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொள்கிறேன். பணியாளர்கள் பதைபதைக்கிறார்கள். “ஐயா, இன்னும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்”, நான் மறுக்கிறேன் இல்லை நான் நீராட வேண்டும். அப்படியாயின் இதோ சகட குதிரையைக் கொண்டுவரச் சொல்கிறேன் என கூறிய பணியாளரின் கூற்று முடியும் முன்பே என் எதிரில் ஒரு சக்கர நாற்காலி, இல்லை வேண்டாம், நான் நடக்கின்றேன் என்கிறேன். இதோ ஒரு நிமிடம் என கூறிய பணியாளர்கள் என் முன் மண்டியிட்டு அமர்ந்து என் பாதங்களில் புதிய காலணிகளைப் பொருத்துகின்றார்கள். என்னதான் நடக்கிறது என் வாழ்வில், எனக்கு ஏன் இந்த இராஜமரியாதை, எனது எல்லா கேள்விகளுக்கும் ஒற்றை பதில் “ஐயாவின் உத்தரவு”. காலணிகளை அணிவித்தவுடன் எழுந்து நிற்கின்றேன். நிற்க முடியாமல் நடுங்கும் கால்களைக் குனிந்து பார்க்கிறேன். முட்டாள் கால்களே நீங்களா இவ்வுடலைத் தாங்குகின்றீர்கள்? முழு உடலையும் தாங்குவது ஒரு சாண் வயிறல்லவா, அதுதான் இப்போது நிரம்பிவிட்டதே இன்னும் ஏன் நடுக்கம், நலிவுற்ற உடலில் நடுக்கத்துடன், பணியாட்கள் துணைபுரிந்து உடன்வர மெல்ல நடக்கின்றேன். இட்ட அடி நோக, எடுத்த அடியும் நோக, மெல்ல மெல்ல முட்டையிலிருந்து அப்போதுதான் வெளிவந்த புள்குஞ்சு போல் நடுக்கத்துடன் விழுந்து விடுவேனோ என அச்சம் கொள்ளத்தக்க வகையில் நடக்கின்றேன்.
குளியலறையா இது? அவ்வறையின் விசாலமான நளின அழகைக் கண்டு அதிசயித்து நிற்கின்றேன். அங்கிருக்கும் ஆடிகளில் விழுந்த என் உரு நிழல் கண்டு அதிர்ந்து போகின்றேன். நானா இது? என்னைக் கண்டு எனக்கே பயமாய் அருவெறுப்பாய் இருக்கிறது பரிதாபத் தோற்றம், எலும்புக் கூடுக்கு தோல் போர்த்தியது போன்ற அவல தேகத்தைப் பார்த்து எனக்கே குமட்டுவது போல் ஓர் உணர்வு எனக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு’ அவர் ஏன் என்னைக் காப்பாற்றினார், சிறிதுகூட முகச்சுளிப்பு இன்றி எத்தனை அன்பாய் என்னை அரவணைத்தார் என்னிலும் எனக்கு அன்னியவரான, அவரின் கட்டளைக்குப் பணிந்து அவரின் பணியாளர்கள்கூட எத்தனை அன்பாய் பணிவாய் இருக்கிறார்கள் பணியாளர்களைக் குளியலறைக்கு வெளியே இருங்கள், நான் குளித்துக் கொள்கிறேன். என்கிறேன். “ஒரு நிமிடம் ஐயா” எனக் கூறிய அப்பணியாளர் கூட்டத்தின் ஒரு குழு என் அனுமதி பெற்று அங்கிருக்கும் சுழல் நாற்காலியில் அமரச் செய்து என்சிகையைத் திருத்தம் செய்து முகமுடி களைந்து பின், குளியல் தொட்டியில் வெந்நீர் நிரப்பி அழுக்ககற்றும் நறுமண திரவியம் கலந்து நுரைபொங்க செய்து அதில் என்னை நீராட வேண்டுகிறார்கள். நீராடத் துணை புரியவரும் அவர்களின் துணையை மறுக்கின்றேன் நான். ஏதேனும் தேவையெனில் அழைப்பு மணியால் அழையுங்கள் வெளியே நாங்கள் காத்திருக்கிறோம் என அவர்கள் வெளியேற. அவ்வழகிய குளியலறையைச் சுற்றிப் பார்க்கிறேன் நான் விசாலமான அவ்வறையில் உள்ள அதிநவீன சாதனங்களின் பெயர்களும் அவற்றின் உபயோகமும்கூடத் தெரியவில்லை எனக்கு. ஏன் இந்த இராஜமரியாதை எனக்கு, மனதில் பல கேள்விகளுடன் உடை களைந்து நீராடத் துவங்குகின்றேன் ஆஹா சுகம். பரம சுகம், நாழிகை பல கடந்தும் நீரிலிருந்து வெளியேற விருப்பமில்லை. சிசுவாய் தாயின் கருவறை பனிக்குடநீரில் நீந்தித் திளைப்பதுபோல் ஓர் உணர்வு நீராடியபின்னும் நீரைவிட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கிருக்கும் பூங்துகில்களில் ஒன்றை எடுத்து என் உடல் சுற்றி அணிந்து, பின் அழைப்பு மணியால் பணியாளர்கள் அழைக்க, குளியலறையிலிருந்து வேறு ஓர் அறைக்கு என்னை அழைத்துச் சென்று, வெவ்வளிலீசு கருவியால் என் தலை மயிர் உடல் ஈரம் போக்கி, நறுமண சாந்து பூசி, வேறு ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அறையா அது! ஏதோ ஓர் ஆடைகள் விற்பனைக் கூடத்திற்குள் நுழைந்துவிட்டதைபோல, எங்கு நோக்கினும் வண்ண ஆடைளின் அணிவகுப்பு, தங்களுக்கு விருப்பமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுங்கள் என்று கூறிய பணியாளன், என் தோள் அளவும், இடை அளவும், உயரத்தையும் அளந்து பின்பு, “இதோ இங்கே உள்ள ஆடைகள் எங்கள் உடலளவுற்கு பொருத்தமானவை,” என்று சுட்டுகிறான். ஆம் அவை என் உடலுக்குப் பொருத்தமாகத்தான் உள்ளது. ஆனால், மனதுக்குத்தான் பொருந்தவில்லை. எத்துணை விலையுர்ந்த ஆடைகள். இவைகளை ஏன் எனக்கு அணிவிக்க வேண்டும். ஒன்றுமே புரியவில்லை எனக்கு. இப்போது இங்கிருந்து விடைபெற்றுச் சென்றுவிடலாம் என்று எண்ணுகிறேன், என் சிந்தனையைக் கலைக்கிறது ஒரு பணியாளனின் குரல். என்னை அங்கிருக்கும் சொகுசு நாற்காலியில் அமரச் செய்து என் பாதங்களுக்கு ஏற்கனவே அணிவித்த பாத அணிகளை கழற்றிவிட்டு புதிய பாதுகைகளை அணிவிக்கிறான், அப்பணியாளன். இந்த இராஜமரியாதைகள் எங்கே போய் முடியப்போகிறதோ, நான் அங்கிருக்கும் அனைவரிடமும் கூறுகிறேன். “உங்கள் அனைவருக்கும் நன்றி, என்னை காப்பாற்றி உணவளித்து, உடையளித்து, மேலாக உயிரளித்த உங்கள் எஜமானரிடம் என் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள் நான் போகிறேன்” என்று. பணியாளர்களின் முகம் நகைமுகமாக மாறுகிறது. “ஐயா. அவசரப்பட வேண்டாம். எங்கள் ஐயா, எஜமானர் உங்களைச் சந்திக்க வந்துகொண்டு இருக்கிறார். வாருங்கள் உணவுண்ணும் கூடத்திற்குப் போகலாம்”, என்று அழைக்கிறார்கள்.
“ஐயா, இதுதான் உணவுண்ணும் கூடம்,” வண்ணச் சரவிளக்குகள் இதமான வெளிச்சத்தைக் கசியவிட்டுக் கொண்டிருக்க, நயம் மிகுந்த கலை பொருள்களும் தமது அழகு குறித்து செருக்குடன் இருக்க, விசாலமான அக்கூடத்தில் நீண்டு அகன்ற உணவு பரிமாறும் மேசையும் அதில் பலவகை உண்பண்டங்கள் கலன்களில் வைக்கப்பட்டும் இருக்க, மேசையைச் சுற்றி இருந்த நாற்காலிகளில் பிரதான நாற்காலியின் வலப்புறம் உள்ள நாற்காலியில் என்னை அமருமாறு வேண்டுகிறான் பணியாளன். மேசையில் உள்ள பண்டகலன்களைச் சிறுநகர்வு செய்து மேலும் ஒழுங்குபடுத்துகின்றார்கள் பணியாளர்கள். உண்பண்டங்களின் சுவை சுமந்த நறுமணம் காற்றில் கலந்து நாசியில் நுழைந்து நாவில் உமிழ்நீரைச் சுரக்கச் செய்ய நான் மிடறு விழுங்குகிறேன்.
ஐயா வருகிறார், ஐயா வருகிறார், பணியாளர்களின் தணிந்தகுரல்வழிச் செய்தி அனைவரின் செவிகொளப் பரிமாறப்பட்டு அவர்களை ஓர் ஒழுங்கமையுடன் கூடிய தன்னிலையில் நிலைக்கச் செய்கிறது. நான் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்கிறேன். நலிவுற்ற உடல் அசதி, யாக்கை மெல்லத்தான் இயங்குகிறது. மெல்ல எழுந்து நிற்க முயலும் என்னைத் தோள்தொட்டு அமர்த்துகிறார். “உட்காரு, உட்காரு என் மகனே,” தானும் அமருகிறார். இராஜ நாற்காலியில். உணவின்றிச் சாகக்கிடந்த என்னைக் காப்பாற்றி உணவளித்தது உயிரளித்தது ஏன், ஏன் எனக்கு இந்த இராஜமரியாதைகள் என் உள்ளத்தில் உலாவும் கேள்விகள், விடை கண்டு நன்றி சொல்லி விடைபெற அவர்களின் என்னே வேண்டும். பணியாளர்கள் உணவு பரிமாறுகின்றார்கள் பணிவு, அடக்கம். நான் உணவுண்ணத் தொடங்குகிறேன் “மெதுவா, மெதுவா, ம். படாம் கேட்டு வாங்கிச் நல்லா சாப்பிடப்பா எது வேணுமின்னாலும் கூச்சப் உணவுண்டபடியே சாப்பிடு நான் தலையசைகிறேன். உணவல்ல, ஆயிரம் கவை அறுகவை உணவு. குறிப்பறிந்தும், காலமறிந்தும், அளவறிந்தும் என் மனமறிந்தும் உணவு பாரிமாறுகின்றார்கள் பணியாளர்கள். பார்த்தறியா வண்ணத்தில், ருசித்தறியா ருசியில், எத்தனை வகை உண்பண்டங்கள்! ஆஹா ராஜசுவை, “மெதுவா, மெதுவா, பருக்கை ஏறதுபாரு தண்ணிகுடி, நல்லா சாப்பிடு, எத்தனை நாள் பட்டினியோ, உடம்பு தேற கொஞ்சம் காலமாகும். நீ எதுக்கும் கவலைப்படாதே, இனிமேல் இது உன் வீடு, உன் மனசுலயிருக்கிற கேள்விக்கு எல்லாம் விடை கிடைக்கும், நீ கவலைப்படாம இரு, நான் அப்புறமா வந்து உன்னை பார்க்கிறேன்.” ஆறுதலளித்து விட்டு விடைபெறுகிறார். நானும் விடையளித்துவிட்டு விருந்தைத் தொடர்கிறேன். எத்தனை நாள் பட்டினி என்றாலும் வயிறு கொள்ளும் மட்டும்தானே உணவு. உணவுண்டு முடித்து எழமுடியாமல் எழுகின்றேன்.
உண்ட மயக்கம், இளைப்பாறலுக்காக சயன அறைக்கு வழி நடத்தப்படுகின்றேன். பின் மருத்துவர் குழு ஒன்று வந்து என்னைப் பரிசோதிக்கிறது. பட்டினியால் ஏற்பட்ட நலிவைத் தவிர குறை ஒன்றுமில்லை என்று சில சத்து மாத்திரைகளைப் பரிந்துரைத்து அளித்துவிட்டு விடை பெறுகிறது அக்குழு.
பல்சுவை உணவு, உறக்கம், ஓய்வு, உணவு, உறக்கம், ஓய்வு, உல்லாசம், இராஜ உபசாரம் என நாட்கள் பல கழிகின்றன. பணியாளர்களிடம் வினவுகின்றேன் “ஐயா எங்கே, அவரை சந்தித்து நன்றி சொல்லி விடைபெறவேண்டும்.” “ஐயா வெளிநாட்டு பயணத்தில் இருக்கிறார். பணி நிமித்தமாக, விரையில் திரும்ப போகிறார் உம் நிமித்தமாக, நான் ஐயாவின் அந்தரங்க காரியதரிசி குழுவின் தலைமை அலுவலன். உமது தேவை எதுவெனினும் எம்மிடம் தெரிவியும், இமைகள் கண்களை காப்பதுபோல் உம்மை பாதுகாக்க வேண்டும் என்பது ஐயாவின் உத்தரவு”. சிறிது தயங்கி பின் உரைக்கின்றான் அந்த காரியதரிசி, “அதிர்ஷ்டகாரர் ஐயா நீங்கள்”, ஆம் நான் அதிர்ஷ்டகாரன்தான் என்னதான் நடக்கிறது என் வாழ்வில்! சிந்தனையில் மெளனிக்கின்றேன் நான். என் மௌனம் கண்டு பதறுகின்றான் காரியதரிசி ‘ஏதேனும் தவறாக பேசியிருந்தால் மன்னித்துவிடுங்கள் ஐயா’ என்ன தவறாகப் பேசிவிட்டான் என்று என்னிடம் மன்னிப்பைக் கோருகின்றான். மேலும், என் மௌனம் கண்டு கலக்கமடைகின்றான். “ஏதோ வாய்த்துடுக்காகப் பேசிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா”. அவன் பதற்றம் கண்டு, என் கைவிரலசைத்துப் போகலாம் என உத்தரவு வழங்குகின்றேன் அதிகாரத்துடன். நானா இது? நிகழ்ந்து கொண்டு இருப்பது எல்லாம் நிஜம்தானா. இவையெல்லாம் கனவா? நனவா? தளவு எனில் இது என் களவுதானா, இப்படியெல்லாம்கூட என்னால் கனவு காணமுடியுமா? நனவு எனில் என் வாழ்வில் என் வாழ்வைத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேனா! என் உடலைக் கிள்ளிப் பார்த்து கொள்கின்றேன் உடலில் சுரணை இருக்கிறதா என்று இருக்கிறது ஆம். இது கனவல்ல, நிஜம்.
உண்ண உணவு, உறைய உறையுள், உறங்க உறக்கம், எண்ணுதற்கு எழிலான எண்ணங்கள், என உல்லாசமாக, சொர்க்கபுரி வாழ்வாகக் கழிகின்றன நாட்கள் பல. ஒரு நாள் ஆடியில் விழுந்த என் உருநிழல் கண்டு திகைத்து நின்று கொண்டு இருக்கின்றேன். என்னைக் கண்டு எனக்கே திகைப்பு, இது நான்தானா! ஆரோக்கிய வளமையுடன் கூடிய செல்வமெருகேறிய செழுமையான தேகம், என்ன ஒரு தேஜஸ், ஓஜஸ், என்னே அழகு. “ஐயா, உள்ளே வரலாமா”. காரியதரிசியின் குரல் கேட்டு திரும்புகின்றேன். என்னவென்று வினவுகின்றேன். “ஐயா வெளிநாட்டு பயணம் முடித்து திரும்பி விட்டார். ஒரு மணி நேரத்தில் மீண்டும் அயல் பயணம், உம்மையும் உடன் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யும்படி உத்தரவு. இதில் கையெழுத்திடுங்கள் ஐயா. கடவுச்சீட்டு மற்றும் வெளிநாடுகளில் தங்கி வசிப்பதற்குரிய ஆவணங்களை இன்னும் பத்து நிமிடங்களில் பெறுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். என் பெயர்கூட இவர்களுக்குத் தெரியாது, இவர்களுக்கு என்ன எனக்கேகூட என் பெயர் மறந்துவிட்டது. காரியதரிசி நீட்டிய காயிதங்களில் கையொப்பம் என எதையோ கிறுக்குகின்றேன். மற்றொரு காரியதரிசி என்னைப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறான் என் அனுமதியோடு. நான் மெல்ல வினவுகின்றேன். “பத்து நிமிடங்களில் எப்படி கடவுச்சீட்டு மற்றும் மற்ற ஆவணங்களை…” கேள்வியை முடிக்கவில்லை. மகிழ்ச்சி பொங்க புன்னகையுடன் கூறுகின்றான் காரியதரிசி, “எங்கள் ஐயாவை பற்றி உமக்கு தெரியாது” தன் கையில் வைத்திருக்கும் காயிதங்களை விழியால் சுட்டி மொழிகின்றான் மேலும் இதுகூட தேவையில்லை, என்றவன் காயிதங்களில் என் கையொப்பத்தை பார்த்துவிட்டு, “ஆம், உமது பெயர்…” என்று வினவியவன் தொடர்ந்து, “அதற்குகூட அவசியமில்லை. ஐயாவின் அனுமதியோடு அவருக்கு விருப்பமான பெயரை இதில் சூட்டி கொள்கிறேன். உத்தரவு கொடுங்கள் நான் விடைபெறுகிறேன்”, என்று கூறி விடைபெறுகிறான். இரண்டு நிமிடங்கள் கழித்து என் முன் தோன்றியவன் கடவுச்சீட்டு மற்ற ஆவணங்கள் முதலிய அனைத்தும் தயாராகிவிட்டதாகவும் பயணத்திற்குத் தயாராகும்படியும் கூறுகிறான்.
விமானத் தளத்திற்கு மகிழுந்தில் பயணம். பயணத்தின்போது வெளியில் அலைகடல் தெரிகிறதா என்று ஐயத்துடன் பார்த்துக் கொள்கிறேன். ஏனெனில், மகிழுந்துப் பயணம், சொகுசு கப்பல் பயணம்போல் இருக்கிறது. வாழ்வில் முதல் முறையாக விமானப் பயணம்.
விமான படிகளில் ஏறும்போது வானுலகப் படிகளில், சொர்க்கத்தின் வாசல்படிகளில் எறுவதாக நினைத்துக்கொள்கிறேன். விமானத்தின் உள்ளே நுழைந்ததும் விமானப் பணிப்பெண்கள் என்னை வணங்கி வாழ்த்தி என் இருக்கைக்கு வழிகாட்டி அமா வைக்கிறார்கள். விமானத்தில் உள்ள அனைவரும் தத்தமது இருக்கையிலிருந்து எழுந்துநின்று எனக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள். அனைவரின் வந்தனத்தையும் ஏற்றுக்கொண்டு, உடன் வந்த காரியதரிசியுடன் வினவுகின்றேன். “விமானம் எப்போது கிளம்பும்?” விமானம் ஐயா வந்தவுடன் கிளம்புமாம். அயல் பயணம் முடித்து வேறு ஒரு நாட்டிலிருந்து ங்கே வந்துவிட்டாராம் என்னை அழைத்துக்கொண்டு மேலும் பல நாடுகளுக்குப் பயணம் தொடருமாம். இந்த விமானம் அவரின் சொந்த விமானமாம், உடன் பயணிகள் அவரின் அதிமுக்கிய உறவினர்கள், நண்பர்கள், ஊழியர்களாம். என்னை அவர்களிடம் அறிமுகப்படுத்தவே அவர்களையும். பயணத்திற்கு அழைத்துள்ளாராம். இந்த விமானம் மட்டுமல்ல இதுபோன்று பல விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், சிறகூர்ந்துகள் அவருக்குச் சொந்தமாம். மேலும் பல விமானம், கப்பல், கட்டுமான, போக்குவரத்துக் கழகங்கள். மேலும் பலபல தொழிற்சாலைகள், தங்க வைர சுரங்கங்கள் உலகம் முழுவதிலும் அவருக்குச் சொந்தமாக உள்ளதாம். சொல்ல மறந்துவிட்டேனே. அவருக்கு சொந்தமான செயற்கை விண்கோள்கள், விண்வெளி மையங்கள் விண்ணில் புவிவட்ட பாதையில், அதற்கு அப்பால் மற்ற கிரகங்களின் சுற்றுப் பாதையில்கூட உலவிக்கொண்டு இருக்கிறதாம். அவர் தடம் பதிக்காதத் துறையே இந்த உலகில் இல்லையாம். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து, ஏன் அதற்கு முன்பும் கருவுற்றலிருந்து கல்லறைக்குப் போகும் வரையில் எங்கள் ஐயாவிற்குச் சொந்தமான நிறுவனங்களின் பொருள்களை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது. என்று மூச்சு விடாமல் பேசும் காரியதரிசி, எங்கள் ஐயாவின் பெருமையைச் சொல்ல தனது வாழ்நாள் போதாது என்று பேச்சை முடித்துக்கொள்கிறான். என் திறந்த வாய்க்குள் நுழைவதற்கு அங்கு ஈக்கள் இல்லை. திடீரென ஒரு சலசலப்பு, விமானப் பணிப்பெண்ணின் ஓய்யார குரல், ஒலிபெருக்கியில் ‘ஐயா வந்துவிட்டார்’. விமானத்தில் உள்ள அனைவரும் எழுத்து தின்று அவரை வரவேற்கிறார்கள், நானும்தான். அவரும் அனைவரின் வணக்கத்தையும் ஏற்றுக்கொண்டு, எனதருகில் வந்து புன்னகையுடன் என் தோள்தொட்டு அமர்த்தி, தானும் இருக்கையில் அமருகிறார். விமானப் பணிப்பெண்கள் இருவருக்கும் இருக்கை கச்சைகளை அணிவிக்கிறார்கள். ஐயா விமானம் புறப்பட ஆணையிட்டவுடன் விமானம் கம்பீரமாகச் சீறிப் பாய்ந்து விண்ணில் பறக்கத் துவங்குகிறது. அவர் என்னிடம் நலம் விசாரிக்கின்றார். எனக்குப் பேசுவதற்கு நா எழவில்லை, நன்றி நவில்கின்றேன். நாயினும் கடையனாய்ப் பட்டினியில் உழன்று உயிர் துறக்க இருந்த என்னை, கடைவீதி குக்கில் என்தனக்கு வான் சிவிகை தந்த காரணத்தை வினவுகிறேன்.
இதோ இந்த வரை உன் நிமிடம் உள்ளத்தில் உலவிக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடை இதுதான் என்று புன்னகையுடன் அவர் கூறுகிறார். உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் அவர் முதல்வராம், மணமாகி மனைவியை இழந்த அவர் மனைவிமேல் உள்ள காதலால் மறுமணம் செய்து கொள்ளவில்லையாம். அவருக்கு வாரிசுகளும் இல்லையாம். ஆம். அடுத்து அவர் கூறியது, அவரின். ஆம். அவரின் ஒரே வாரிசாக, என்னை ஆம், என்னைத்தான் தத்துப் புத்திரனாக சுவிகரித்துக் கொள்ளப் போகிறாராம். இது அவர் ஆழ்மன கட்டளையாம். வேறு எதைப்பற்றியும் அவருக்குக் கவலையில்லையாம் நான் சம்மதம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும்கூட என்னை விடப்போவதில்லையாம். நான் என்ன பதில் சொல்வது, பேச்சே வராமல் மௌனியாய்ச் சமைந்த நான், நான் நான். என்று எதோ பிதற்றுகிறேன் பதிலுரைக்க ஓர் அட்சரம்கூடக் கிடைக்கவில்லை எனக்கு நானறிந்த மொழிகளிலே ‘உனது கடந்த காலம் பற்றி எந்த விவரமும் தேவையில்லை எனக்கு இனி நீ என் மகன், விரைவில் இதை சட்டப்பூர்வமாக உலகிற்கு அறிவிப்பேன் என்றவர் விமானத்தில் உள்ள அனைவருக்கும், என்னை அவரின் ஒரே வாரிசு. என் மகன் இவன் என்று அறிவிக்கிறார். மகிழ்ச்சி ஆரவாரம் பொங்குகிறது அங்கே வரியவனுக்குப் பட்டத்து யானை மாலை அணிவித்து பட்டத்து அரசன் ஆக்கிய பழம் கதைதான் ஞாபகம் வருகிறது எனக்கு. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. நன்றி. தவில்கின்றேன் நான். கடவுளுக்கு நன்றி கடவுளே நன்றி, கடவுள் பலவல்ல ஒன்றே. அதுவும் இதோ என் கண்ணெதிரே வாழும் கடவுளாக, பிதாவே, நான் அவரை இரு கரம் கூப்பித் தாழ்ந்து வணங்குகின்றேன். அவர் புன்னகைத்தபடி என் சிரம் தொட்டு ஆசிர்வதிக்கிறார். விமானப் பணிப்பெண்னின் ஒய்யார குரல் ஒலிக்கிறது ஒலிபெருக்கியில், விமானம் தலையிறங்கப் போகிறதாம். நிர்மலமான நீலவானிலிருந்து வெண்மேக கூட்டங்களில் நுழைந்து நுழைந்து நீந்திய வண்ணம் தரை இறங்குகிறது விமானம்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்க் கழிகிறது புதிய வாழ்க்கை, மீண்டும் மீண்டும் பல நாடுகளுக்குப் பயணம். உலக வல்லரசு அதிபர்கள் போன்ற சந்திப்பு. ஓயாத அதிமுக்கிய பிரமுகர்களின் மகள் என்று அனைவரிடமும் என்னைத் தன் அறிமுகப்படுத்துகிறார் என் தந்தை அப்பா அடுத்து நாம் செல்லப் போகும் நாடு எது? இது எந்த நாடு? உலகில் மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் இதுவும் ஒன்று, நாம் இந்நாட்டு மன்னரைச் சந்திக்கப் போகிறோம், முதலில் நமது அரண்மனைக்குச் சென்று ஒவ்வெடுத்துவிட்டு, பிறகு மன்னரைச் சந்திக்கலாம். இந்த தாட்டிலும் நமக்குப் பல அரண்மனைகள், தொழில்சாலைகள் உள்ளன என்கிறார் என் தந்தை ஓய்விற்குப் பிறகு காரியதரிசி அந்நாட்டு மன்னர் எங்களைச் சந்திக்க வந்து காத்துக்கொண்டு இருப்பதாக செய்தி கூறுகிறான். என் தத்தை என்னை அவர் மகன் என்று அறிமுகப்படுத்த, மன்னர் மனமகிழ்ந்து என்னைக் கட்டித் தழுவி வரவேற்கிறார். பின்பு, தன் பட்டத்து இராணியையும் அவரின் ஒரே மகளான இளவரசியையும் அறிமுகப்படுத்துகிறார். ‘இளவரசி’! நான் அப்படியே பிரமித்து நிற்கின்றேன். அழகைச் சொல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லாத அழகு, அவள் அழகு. அற்புத அபூர்வம் அவள் அழகு. ஆ… அந்த நீல கண்கள்தான் எத்தனை அழகு என்னை நோக்கிய நீல நயனங்கள் நாணத்தால் இமை மறைத்துத் தாழ்கின்றன. தாழ்ந்த இமைகள் நிமிர மீண்டும் ஒரு விழி வீச்சு. அவள் விழிகள்தான் எத்தனை நீலம், நீளம். அந்த நீல விழிகளில் விழுந்த நான் நீலவானெங்கும் கரைந்து பரவி படர்வது போல் ஓர் உன்னத உணர்வை அடைகிறேன்.
மன்னரின் குரல் கேட்டு சுய உணர்வு நிலைக்குத் திரும்புகின்றேன். மன்னர் எங்களை அந்தரங்க ஆலோசனை மணிமண்டபத்திற்கு அழைக்கிறார். சிறு விமானத்தில் பயணம். நீலவிழியாளும் உடன் வருகிறாள். வான் பயணத்தின்போது எங்கள் விழிகள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள புன்னகையை பரிமாறிக்கொள்கிறோம்.
ஆலோசனை மணிமண்டபத்தில், அப்பா மன்னரின் நாட்டில் தொடங்கவிருக்கும் தொழிற்சாலைகள், மக்கள் நலப் பணித் திட்டங்கள் பற்றிய பேச்சுவார்த்தை இனிதே நிறைவுறுகிறது. உங்களிடம் கொண்ட தொடர்பால் உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயித்து நிச்சயிக்கும் நாடாக நமது நாடு மாறிவிட்டதாக மன்னர் மனமகிழ்ந்து அப்பாவிடம் கூறுகிறார். மேலும், உமது நட்பு எனது பெரும் பாக்கியம் எனவும் தமது அரண்மனையில் சிறிது காலம் தங்கி தங்களை கௌரவிக்குமாறு வேண்டுகிறார். அப்பா நாசுக்காக மறுக்கிறார். பின்பொரு நாள் கட்டாயம் வருவேன் என்றும், முக்கிய அலுவல் ஒன்று இருக்கிறது என்றும் கூறி விடைபெற, மன்னரும், பட்டத்துராணியும், இளவரசியும் எங்களை வழி அனுப்புகிறார்கள். இளவரசி.. ஆ- அந்த நீல நிற விழிகள்… அதில் தோன்றும் சோகலய அசைவுகள், ஈரம் படர்ந்து இமைவிளிம்பில் திரளும் கண்ணீர் முத்துகள் என் நெஞ்சிலே இனம் புரியா சோகம், பாரம்… நீல விழி… நீல விழியாளே… மீண்டும் நான் வான்நீலத்தில் கரைந்து படர்கின்றேன்.
மேலும், உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு விஜயம் செய்த பின் சொந்த நாடு திரும்பியதும், அப்பா செய்த முதல் காரியம், ஒரு நன்நாளில் சட்டப்பூர்வமாக என்னைத் தத்தெடுத்து உலகம் முழுவதற்கும், அனைவருக்கும் அறிவித்ததுதான். மண்ணிலும், விண்ணிலும், கடலிலும் உள்ள அவரின் அனைத்து அசையும், அசையா சொத்துகளுக்கு ஏக வாரிசு நான்தான். “உனக்கு விருப்பம் இருந்தால், நீ விரும்பும் போது உலகளாவிய நமது தொழில் நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொள் இல்லையெனில் உனது நேரத்தை உன் விருப்பம் போல் செலவழிக்கலாம்” என அப்பா கூற, சங்க நிதி, பதும நிதி இரண்டும் தந்து தரணியோடு வான், கடல் ஆள வைத்த என் தந்தையை வணங்கி மகிழ்கின்றேன் நான்.
நான் எனது நேரத்தை எனது விருப்பம் போல் செலவழிக்கின்றேன். ஆய கலைகள் அறுபத்து நான்கும் கற்றுத் தேர்கின்றேன். கற்றது கை மணலளவு ஆதலால் கல்லாத எண்ணிலி வளர்கலைகள் மற்றனைத்தையும் கற்க விழைகிறேன். கற்று மகிழ்கிறேன். நினைத்தது எல்லாம் நிறைவேறும் மந்திர வரம் கைவரப் பெற்றதுபோல், என் எண்ணங்கள் எல்லாம் நிறைவேறும் நிலையில் உன்னத வாழ்வு வாழ்கிறேன். சிரபுஞ்சி மழையில் குளித்துவிட்டு சகாரா பாலையில் தலை துவட்டிக் கொள்வேன், நயகரா அருவித் தூறலில் நனைந்து விட்டு, தேம்ஸ் நதியில் படகோட்டி மகிழ்ந்து, பாரிஸ் நவ நாகரிக உடை அணிந்துகொண்டு ஜப்பான் சென்று காலை உணவை ருசி பார்ப்பேன், பின் சுவிஸ் வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்துவிட்டு மதிய உணவை ரஷ்யாவில் உண்பேன். மாலையில் குமரி முனையில் முக்கடல் சங்கமத்தில் சூரிய சந்திர அழகை ரசித்துவிட்டு இரவில் ஆப்கான் மலை குகைகளில் ஓய்வெடுப்பேன். ஹாவாய் தீவின் எரிமலைக் குழம்பில் குளிர்காய்ந்துவிட்டு, துருவப் பனிக்குளிரில் கடல் சிங்கங்களுடன் விளையாடுவேன். இப்படி எத்தனை எத்தனையோ என் தினசரி வாழ்வின் நடவடிக்கைகள்: இப்படி இன்பமே எந்நாளும் துன்பமில்லாவாழ்வில் ஒருநாள், இத்தாலியில் பீஸா சாப்பிட்டுவிட்டு இந்தியாவில் எனக்காகக் கட்டியுள்ள பிளாட்டின கழிப்பறையைப் பயன்படுத்த விழைந்த இந்தியப் பயணத்தின்போது, என் தந்தை என்னை உடனே சந்திக்க விரும்புவதாகச் செய்தி வந்தது.
அப்பா, என்னிடம் தனக்கு வயதாகிவிட்டதால் தனது அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றார். மேலும், தனது திருமணத்தை விரையில் நிச்சயத்து முடித்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். நான், எனது திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம் என்று கூறி மற்ற பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறேன். அதன்பின் இலாபம், இலாபம் என செல்வம் என்னிடம் சேர்ந்த வண்ணமாய் இருக்கிறது. உலக மக்களுக்கு எல்லாம் தானம், தர்மம் என வாரி வாரி வழங்கியும் மாளாத செல்வம். கண்ணுக்குத் தெரியாத இறையாட்சி போன்று உலகெங்கும் எனது அரசாட்சிதான். உலகமே எனது காலடியில் சுழன்று கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அதுவே சதகோடி உண்மை. மீண்டும் மீண்டும் என் தந்தை எனது திருமணம் பற்றி என்னிடம் என் சம்மதம் வேண்டுகிறார். எனக்கு மணம் முடித்துவிட்டால் அவர் நிம்மதியாகக் கண்ணை மூடி விடுவாராம். எனக்கு பெண் கொடுக்க, என்னை மணம் புரிய, உலகக் கோடீஸ்வரர்கள், வல்லரசுகளின் அதிபர்கள், உலக பிரபஞ்ச அழகிகள், கலைஞர்கள் என பலரும் கடும் தவம் புரிகிறார்கள். தந்தையின் வற்புறுத்தலால் பல பெண்களைச் சந்தித்துப் பழகியும் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை. நான் திருமணப் பேச்சை நாசுக்காகத் தவிர்க்கிறேன். ஆனால், என் தந்தை எனக்கு, நான் விரும்பும் பெண்ணிற்கு அணிவதற்காக திருமண நிச்சய மோதிரம் ஒன்றைப் பரிசளிக்கிறார். ஒப்பில்லாத மாமணி என அந்த மோதிர வைரகல் சுடர் வீசுகிறது. ஆஹா என்ன அழகு, நீல ஜூவாலை ஜொலிஜொலிப்பு, அற்புத நீல நீறம். நீல நிற விழியழகியின் ஞாபகம் வருகிறது எனக்கு. நீல விழி இளவரசியின் நினைவு உள்ளத்தின் நினைவோட்டத்தில் சுழன்று சுழன்று மேலெழ என் நெஞ்சில் ஏதோ இனம்புரியா ஏக்கம், சோகம்.
மீண்டும் ஒரு நாள் தந்தை, “இன்று ஒரு முடிவு சொல்”, என்கிறார். எனது திருமணம் பற்றி என்ன பதிலுரைப்பது நான். “இத்தனை பெண்களில் யாரையும் உனக்கு பிடிக்கவில்லையா! அழகில் அறிவில் அந்தஸ்த்தில் என்ன குறை அவர்களுக்கு, எந்த பெண்தான் வேண்டும் உனக்கு” பதிலுரைக்க முடியாமல் மௌனியாகிறேன் நான். “ஒரு தந்தைக்கு மகன் ஆற்றும் நற்கடன் இதுதானா! இப்படி மௌனமாய் நின்றால் என்ன அர்த்தம், சரி நான் பார்த்து நிச்சயிக்கும் பெண்ணைத்தான் நீ மணம் புரிய வேண்டும். நிமிர்ந்து பார்”, மெல்ல விழிகள் நிமிர்த்தி மீண்டும் இமை குனிந்து கொள்கிறேன். “உங்கள் விருப்பம் அப்பா’ உதடுகள் சம்மதத்தை உச்சரிக்கின்றன. “நில்” நகரும் எனதுடலைக் கட்டி நிறுத்தும் ஒற்றைச் சொற்கயிற்றைச் சாடையென வீசுகிறார். நிமிர்ந்து இந்தப் பெண்ணைப் பார், இவள் தான் இனி உன் மனைவி, நிமிர்ந்து பார், மெல்ல மெல்ல எனது விழிகள் நிமிர- ஹா… எனது நயனங்களையே என்னால் நம்ப முடியவில்லை, நீலவிழியாள், இளவரசி இவள் எப்போது இங்கு வந்தாள்! உடன் மன்னரும், இராணியும் அவர்தம் பரிவாரங்களும். உள்ளத்து உவகை முகத்தில் புன்னகையாய் பொங்க தந்தை கூறுகின்றார், “மைந்தனே, தாய் அறியாசூல் உண்டா? உன் மனம் நானறியாததா” அனைவரின் அக மகிழ்வும் அக நகையாய் அரும்பு, புன்னகை மொட்டாகி, இதழ்கள் விரிய தேன் ததும்பும் பெரும் குதூகல சிரிப்பாய் மலர்கிறது. நான் நீல விழியாளுக்கு மண நிச்சய கணையாழியை அணிவிக்க நாணத்தால் தலைகுனிந்து புன்சிரிக்கிறாள் இளவரசி. அப்புன்னகையும், அவள் நீலவிழிநாணப் பார்வையும், நிலவு பொழிவதுபோல் நீலவொளி குளுமையை என் நெஞ்சில் நிறைக்கின்றன.
பிறகென்ன, உலகமே வியக்கும்வண்ணம் திருமணப் பெருவிழா, கோலாகலம், குதூகல கொண்டாட்டம், சொல்லொண்ணா மக்கள் கூட்டம் அனைவருக்கும் அன்பு பரிசென பெருமநிதியை வாரிவாரி வழங்குகின்றேன். உலக நாடுகளின் கடை மகனும் முதல் குடி மகனும் மற்றும். பலரும் என் மணவிழாவில் கலந்துகொண்டு எனக்குப் பரிசளித்து மகிழ்ந்து அவர்களின் பிறவிப் பயனைப் பெறுகின்றார்கள். விருந்து, கேளிக்கை. உல்லாசம். கொண்டாட்டமாய் வாழ்க்கை மெல்ல நகர்கிறது. பிறகு நீலவிழியால் கருவுருகிறாள். ஈனுகிறாள் மகவு ஒன்று நாம் இருவர் தமக்கு இருவர், நாணுகிறான் தீலவிழி செல்ல சிணுங்களுடன் ஈனுகிறாள் மற்றொரு பெண் மகவு: காலம்தான் எத்தனை வேகமாய்ச் சூழல்கிறது. என் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி அவர்களுக்கும் தக்க வரன் பார்த்து மணம்முடித்து பேரன், பேத்திகளைத் தூக்கிக் கொஞ்சுகின்றேன். தனது கொள்ளுபேரன், பேத்திகளைப் பார்த்து மகிழ்ந்த பின்புதான் என் தந்தை கண் துஞ்சுகிறார். பெரிய விருட்சம் சாய்ந்தால் பேரோசை உண்டாகும் என்பதுபோல் உலகமே ஓலமிட்டு ஒப்பாரி வைத்து அழுகிறது. என்னதான் செல்வம் அதிகாரம் இருந்தாலும் மரணத்தைத் தவிர்க்க இயலுமா? காலச் சக்கரம் சுழல சுழல எனக்கும் இப்போது வயோதிக காலம் தெருங்குகிறது. ஆயினும் தான் நலமுடனே இருக்கின்றேன். இவ்வாழ்வில்தான் எத்தனை எத்தனை கோடி இன்பம் இன்பமே எந்நாளும் துன்பமில்லா இன்ப வாழ்வில் ஒருநாள் திடீரென ஏதோ ஓர் உணர்வு, இடப்பக்க மார்பில் சிறிது வலி. சிறிது சிறிதாய் வலி பெருக, விழிகலங்க தாளவியலா வலி நெஞ்சில் பெரும் பாரம் உடலை அசைக்கக் கூடமுடியவில்லை. உடலெங்கும் வியர்த்து கொட்டுகிறது. நீலவிழியாளே, நான் பெற்ற மக்கள் செல்வங்களே, அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றேன். தொண்டையை விட்டு குரல் எழும்பவில்லை. நீலவிழி, நீலவிழி, இதோ நீலவிழியாள் என்ன ஆயிற்று உங்களுக்கு என்று பதறுகிறாள் என் மனைவி, நினைவு இழக்கின்றேன் நான்.
நினைவு மீண்டபோது, நீலவிழியாள் மடியில் தலைவைத்துப் படுத்து இருக்கின்றேன். அவன் கண்களில் நீல கடலில் விளைந்த வெண்முத்துகள் போல் கண்ணீர் துளிகள். எனக்கு அந்த நாள் ஞாபகம் வருகிறது. புன்னகைத்து கை உயர்த்தி அவள் என்னம் வருடுகிறேன். நிலவிழியாள் கூறுகிறாள். “உங்களுக்கு ஒன்றும் இல்லை. சிறிது உடல் நல குறைவுதான், மருத்துவ குழு சிகிச்சையை ஆரம்பித்துவிட்டது. கொஞ்சம் ஓய்வில் இருங்கள் எல்லாம் சரியாகிவிடும்” ஆம். எல்லாம் சரியாகிவிடும். உடல் மீண்டும் நலம் பெற்ற உயிர் வாழ்வேன். அதன் பிறகு, அதன் பிறகு எத்தனை காலம் நான் உயிர் வாழ முடியும். ஊழி வரையிலா? அதற்குப் பின்புமா? எதுவரை என் வாழ்வு. இத்துணை செல்வமும், அதிகாரமும், மனைவி மக்களும், சுற்றமும், நட்பும் எதுவரை எனக்குத் துணை? வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம். என் இதழ்களில் புன்னகை மலர்கிறது. என் நகை கண்டு நீலவிழியாள் மிரண்டு சுலங்குகிறாள். நீல விழியாளே கலங்காதே. இதுதான் இறைவனின் இயற்கை நியதி. நிறைவான பொருட்செல்வம், மாடமாளிகை கூடகோபுரம், மக்கள் செல்வம் சுற்றமும் நட்பும். மேலும் மேலும் நான். விரும்பிய எதுவும் எனக்கு கிடைக்காமல் போனதில்லை. எத்தனை பேருக்குக் கிடைக்கும் இந்த இராஜ வாழ்வு. ஆயினும் இப்போதும் எப்போதும் தவிர்க்க இயலாதது மரணம் அதுவும் நிகழட்டும் இப்போது என் ஆசை நீலவிழி, நான் போகின்றேன் நிம்மதியாக என் அகம் வழியே நன் திம்மதியாகப் போகின்றேன் கலங்காதே குகாகலத்தில் களிக்கூத்தாடுகிறது. ஆரை ஆனந்தம், ஆனந்தம் ஆ ஆனால், என்ன இது, என்ன உணர்வு இது ஆதி உணர்வு அந்தம் வரையில் உள்ள உணர்வு, அய்யோ உயிரே போவது போல், உயிர்தான் போகிறதோ. அய்யோ, ப.சி. பசி, தாகம், பசி, பசி, பசி..
3
உணர்வு மீண்டு மூடிக்கிடந்த இமைகள் மெல்ல திறக்க, பசி தாகம், பசி பசி. அய்யோ அம்மா உயிர் போகிறதே.. இமைகளை கடும் முயற்சியுடன் திறந்து திறந்து இருளில் வெளிச்சத்தை நாடுகின்றேன். எங்கும் இருள், காரிருள். பின் மங்கலாய் ஒளி… ஒளியின் ஒளிர்வில் தெரியும். தெளிவற்ற சுலங்கல் உருவங்கள் தோன்றித் தோன்றி மறைந்து பின் தோன்றி நிலைபெறுகின்றன. நான் எங்கே இருக்கிறேன். இது எந்த இடம் ஆ. பசி, உடல் எங்கும் தீக் கங்குகளால் சுடுவதுபோல் செவ்வெறும்புகள் கடிக்கும். வேதனை. சுக்களின் ரீங்காரம். பசி பசி, வேண்டும். இப்போது உண்ண உணவு: யாரங்கே. எனக்கு உண்ண உணவு கொண்டு வாருங்கள். எங்கே போனீர்கள் எல்லோரும். நீல விழி நீல விழி எங்கே இருக்கிறாய் நீ நான் பெற்ற மக்களே, சுற்றமே. நட்பே. எங்கே இருக்கிறீர்கள் எல்லோரும்? என்ன இது இப்படி மண் தரையில் கிடந்து உழலுகின்றேனே நீலவிழி, எங்கே என் மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும்? எங்கே என் மக்கள்’ எங்கே என் சுற்றும்’ எங்கே என் நட்பு! அய்யோ நான் எங்கே இருக்கிறேன்? இப்படி யாருமற்ற அநாதையாய் மண்ணில் கிடந்து உழன்றுகொண்டு, இது இது. கடந்த காலமா? எதிர் காலமா? நிகழ் காலமா? அல்லது காலமே உறைந்து போயிற்றா? அல்லது காலமற்ற பெருவெளியா? அய்யோ இது என்ன மாயம். இது வரை நான் வாழ்ந்தது மாய் வாழ்வா! கனவா! கற்பனையா? இது வரை நான் கண்டது கானல் நீர்போல். மாயக்காட்சிகளா! கனவா, நிஜமா, அய்யோ நான் கண்டது கனவென அறிந்து கொண்டேனே. எது கனவு? எது நிஜம்’ காண்பது கனவென அறியும் வரையில் காண்பதுதானே நிழும். இல்லை. இதுவும் மாயக் கனவுதான். பின்பு எதுதான் நிறம், பசி பசி என் உயிரை போக்குகிறதே. அய்யோ, அம்மா, அப்பா, நீல விழியாளே. அய்யோ அந்த மாய உருவெளியிலேயே நான் உயிர் துறத் இருக்கக் கூடாதா. நனவிற்கு என் உணர்வு திரும்ப வேண் டும். அய்யோ. பசி, பசி, தண்ணி. கடவுளே என்னைக் காப்பாற்று பசி, பசி உணர்வு நழுவுகிறது. உயிர் போகிறது. சூனிய வெளியை வெறித்து விழித்திருக்கும் என் விழியின் இமைகள் மெல்ல மூடிக்கொள்கிறது நிரந்தரமாக.
– உயிர்எழுத்து அக் 2014
தொடர்புள்ள சிறுகதைகள்
அவனுக்குத் தெரியுமா?
ஆர்.கே.பதி
July 2, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
July 2, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
June 29, 2026