உறுப்புகளைத் தேடி…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2026
பார்வையிட்டோர்: 150
(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

ஹரிசின் ஹூண்டாய் கிரீட்டா கார் திண்டுக்கல்லை நோக்கிப் பயணமானது. காரின் டேஷ் போர்டில் உள்ள கணனித் திரை செல்லும் பாதையைக் காட்டியது. காரைக் கிளம்பும்போதே… அடையும் இடத்தைக் அதில் குறிப்பிட்டு விட்டதால் ஹரிஸ் கவலைப்படாமல் செலுத்தினான்.
திண்டுக்கல் வரலாற்று சிறப்பு மிக்க இடம். சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்களால் ஆளப்பட்டது.
கோட்டை கடல் மட்டத்திலிருந்து 360 அடி உயரத்தில் உள்ளது. நாயக்கர்கள் தொடங்கி ஹைதர் அலி, திப்பு சுல்தான், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என்று அனைவரும் ஆண்டு இளைப்பாறிய இடம்.
அந்த மலை ஊரின் நடுவில் திண்டு – கல் மாதிரி இருப்பதால் திண்டுக்கல் ஆனது. கோட்டை இருக்கும் மலையை வைத்தே மக்கள் அதற்குப் பெயர் சூட்டி விட்டார்கள்.
மேற்கே…தற்போது தாலுகா இருக்கும் இறந்த வீரர்களைப் புதைக்கும் இடம்.
கோட்டை மாரியம்மன் திப்பு சுல்தான் படை வீரர்களால் நிறுவப்பட்டது…!! என்று எல்லாம் நினைக்க சிலிர்ப்பாக இருந்தது.
கார்….திண்டுக்கல்லைத் தாண்டி சிறுமலை 20 கிலோ மீட்டர் அறிவிப்புப் பலகையைக் கடந்து சென்றது.
18 கொண்டாய் ஊசி வளைவுகளைக் கொண்ட அந்த சிறுமலையில் கார் நிதானமாக ஏறியது.
சாலை ஓரத்தில்…’ மலைகளின் சிற்றரசி உங்களை வரவேற்கிறாள் ” விளம்பரப் பலகைகள் கண்ணில் பட்டன.
ஊட்டி – மலையரசி, கொடைக்கானல் – இளவரசி, ஏற்காடு – எழிலரசி, இந்த சிறுமலை – சிற்றரசி ! – மலைகளுக்குப் பெயர் வைப்பதில் கூட தமிழர்கள் ரசனைமிக்கவர்கள். எப்படி அருமையாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்! வியந்தபடி ஹரிஸ் காரை ஓட்டினான்.
சாலை ஊட்டி, கொடைக்கானல் சாலைகளைப் போலவே அழகாகவும், தரமாகவும் இருந்தது. எங்கும் குண்டு குழி மேடு பள்ளங்கள் இல்லை.
மலைகளுக்கே உள்ள மரம், காடு, பசுமை, குளுமை…! தட்ப வெட்ப நிலை அருமையாக இருந்தது.
சாலையின் சிற்சில இடங்களில் கிராமங்களும் அது தொடர்பான சிறு சிறு கடைகளும் கண்களில் தென்பட்டன..
மக்களெல்லாம் மலைவாழ் மக்களாய் இல்லை. சாதாரணமானவர்கள் போலவே இருந்தார்கள். பேச்சு கூட திண்டுக்கல் பேச்சுதான். ஒருவேளை திண்டுக்கல் மக்கள் இங்கே குடி ஏறி இருப்பார்கள் என்று நினைக்கும் அளவிற்கு மக்கள் இருந்தார்கள்.
காரில் உள்ள கணனித் திரை குறிப்பிட்ட முகவரியை நெருங்கி விட்டதாகக் காட்டியது.
விசாரிப்பதற்காக…. சாலை ஓரம் காரை நிறுத்தி இறங்கினான்.
பெட்டிக் கடை, டீக்கடை, பழக்கடை என்று அங்கு சிறு சிறு கூரைகளில் இருக்கும் ஐந்தாறு சிறு கடைகள் நோக்கிச் சென்றான்.
விசாரிக்க வேண்டி டீக்கடையில் டீ சொன்னான்.
குடித்துவிட்டு காசு கொடுக்கும்போது…
‘சார் ! இங்கே தமிழ்வேலன் வீடு எது..?” கேட்டான்.
காசை வாங்கி கல்லாவில் போட்ட அவர் கொஞ்சம் யோசித்து….
“அப்பா பெயர்?” கேட்டார்.
“ஏன் கேட்குறீங்க..?” என்றான்.
“இது… பழனி பக்கம் என்கிறதால சிறுமலையில் நாலைந்து தமிழ்வேலன் இருக்கு” – பதில் சொன்னார்.
ஹரிசுக்குப் புரிந்தது.
“தமிழ்வேலன் தகப்பன் பெயர் குமாரசாமி”
அடுத்த வினாடி அவர் யோசிக்காமல்…எதிரில் உள்ள சாலையைக் காட்டி..
“இது வழியே போனால் 15ஆம் எண் வீடு” என்றார்.
‘ஆக… முகவரி பொய் இல்லை! தஞ்சை தனஞ்செயன் மருத்துவமனை ஏமாற்றவில்லை. இந்த முகவரி உண்மை என்றால் மற்றவைகளும் நிஜம்..!’ – நினைக்க மனசுக்குள் மந்தகாசமான மகிழ்ச்சி பூத்தது.
‘சந்தோசம் வேண்டாம் நண்பா. நீ தேடி வந்த ஆள் இவர்தானா? என்று சந்தித்து விசாரித்தபிறகு முடிவெடு!’ – மனம் எச்சரித்து அதற்கு தாழ்ப்பாள் போட்டது.
ஹரிஸ் காரில் ஏறி மேற்கு நோக்கிச் செல்லும் அந்த சாலையில் காரை விட்டான்.
சுமார் ஐம்பது அடி தூரத்திலேயே அந்த பிரமாண்ட வீடு கண்ணில் பட்டது. சுற்றுச் சுவர் பத்தடிக்கு மேல் உயரமாக இருந்தது. ‘கேட்’டும் அந்த உயரம் இருந்தது.
சுற்றுச் சுவரிலிருந்து பத்தடி தூரத்தில் அந்த பெரிய வீடு இருந்தது. வீடே அவர் பண பலத்தைக் காட்டியது.
போர்டிகோவில் மாருதி டிசையர் கார் பளீரென்ற வெள்ளை நிறத்தில் பளபளவென்று நின்றது. அதற்கு அருகில் இரு இருசக்கர வாகனங்கள்.
ஹரிஸ் கேட் அருகில் உள்ள அழைப்பு மணி அழுத்தினான்.
கதவு திறந்து வேட்டி பனியனில் 50 வயது பெரியவர் வெளிப்பட்டார்.
இவன் தலையைப் பார்த்து…
“கதவு திறந்துதான் இருக்கு. நாய் இல்லை. தைரியமாய் திறந்து வாங்க.” அங்கிருந்தே குரல் கொடுத்தார்.
தெரிந்தவன் என்று அழைப்பு விடுத்தாரா..? இல்லை தெரியாதவன் என்று தெரிந்தும் வரச் சொன்னாரா..? எப்படியோ அறிமுகம், புதுமுகம் பார்க்காமல் எந்த முகத்தையும் வரவேற்று விசாரிக்கும் மனிதப் பண்பு இன்னும் செத்துவிடவில்லை என்று நினைக்கையில் அவனுக்குள் உவகை வந்தது.
ஹரிஸ் கார் சாவியில் பட்டனை அழுத்தி காரைப் பூட்டிவிட்டு கேட் கதவு திறந்து உள்ளே சென்றான்.
இவன் அவர் அருகில் சென்றதுமே…
“தம்பி! நீங்க தமிழ்வேலன் நண்பனா…?” கேட்டார்.
“இல்லே சார். நீங்க…?”
“நான் அவன் அப்பா. பையன் ஊரில் இல்லே. அவனைப் பார்க்க வந்திருக்கீங்களோன்னு நினைச்சு கேட்டேன்.” என்றார்.
தேடி வந்த ஆள் இல்லை என்றதும் ஹரிசுக்குள் ஏமாற்றம் வந்தது.
“சா… சார்…” தடுமாறினான்.
“சரியா வீடு தேடி வந்திருக்கீங்கன்னா விசயம் இருக்கனும். உட்கார்ந்து சொல்லுங்க..?” – நின்று கொண்டு இருந்த குமாரசாமி அமர்ந்து நாற்காலியைக் காட்டினார்.
முகம் தெரியாத ஆளாக இருந்தாலும் பெரியவர் வந்த அளவிற்கு மரியாதைக் கொடுக்கிறார். மனிதனை உபசரிக்கிறார் – நினைக்கையில் இவனுக்கு அவர் மீது மதிப்பு மரியாதை வந்தது.
அமர்ந்தான்.
“சொல்லுங்க..?” இவனைப் பார்த்தார்.
“சார்! நான் அணைக்கரை…” ஆரம்பித்தான்.
“அது எங்கே இருக்கு..?”
“கும்பகோணத்திலிருந்து இருபது கிலோமீட்டர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கு. கங்கைகொண்ட சோழபுரம் அங்கிருந்து பத்து கிலோமீட்டர்.” – விபரம் சொன்னான்.
“எனக்குக் கங்கைகொண்ட சோழபுரம் பிடிக்கும். படிச்சிருக்கேன். சொல்லுங்க…?”
“நான் ஹரிஸ். அப்பா வாசுதேவன் அம்மா அஷ்டலட்சுமி.”
குமாரசாமி பேசாமல் இருந்தார்.
அவர் முகபாவனையிலிருந்தே… இன்னும் இவருக்குத் தன்னைத் தெரியவில்லை! தெரிந்தது.
“நீங்க உங்க மகன் தமிழ்வேலனுக்குச் சென்னை சங்கர நேத்ரலயா கண் மருத்துவமனையில் பத்து வருசத்துக்கு முன் கண் மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கீங்க…?”
“ஆமா…”
“அந்தக் கண் என் அண்ணன் கண்!”
“தம்பிஈ….!” அதிர்ந்து துணுக்குற்றார்.
”ஆமாம் சார்” என்ற ஹரிஸ் அது பற்றிய முழு விபரத்தையும் சொன்னான். குமாரசாமிக்கு மனசு கனத்தது.
“உங்க அப்பா அம்மாவுக்கு ரொம்ப நன்றி சொல்லனும் தம்பி.” என்றார்.
ஹரிஸ் பேசாமல் இருந்தான்.
“கண் ஆபரேசன் முன் ‘கண் தானம் செய்யிறவங்… பொறுத்தப்படுகிறவர் முகவரி கேட்கிறங்க.. கொடுக்கலாமா?’ன்னு டாக்டர் என்னிடம் அனுமதி வாங்கி என் சம்மதத்தின் பேர்லதான் கொடுத்தார். மறந்துட்டேன்! தம்பி. யார் கண்ணினாலோ என் பையனுக்குப் பார்வை கிடைச்சிருக்குன்னு சந்தோசப்பட்ட எனக்கு விபரம் கேட்டதும் வருத்தமா இருக்கு.” என்றவர் தன் துக்கத்தை கொஞ்சம் மௌனம் மூலம் மறுபடியும் வெளிப்படுத்தினார்.
“இத்தனை மனிதருக்கு நாளாய் மூளைச் சாவு… பின் மண்டையில் அடி, விபத்தினால்தான் ஏற்பாடுன்னு நெனைச்சேன். கர்நாடகாவில் வரவேற்பில் இருந்த மணப்பெண் திடீர்ன்னு மயங்கி விழுந்திருக்காள். மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்காங்க. அங்கே அவளுக்கு மூளைச் சாவுன்னு சொல்லி இருக்காங்க. தினசரியில் படிச்சேன். அதிர்ச்சியாய் இருக்கு.” சொன்னார்.
ஹரிசுக்கும் அந்த செய்தி புதிதாக இருந்தது.
குமாரசாமியின் கண்கள் டக்கென்று பணித்தது.
ஹரிஸ் துணுக்குற்றுப் பார்த்தான்.
அத்தியாயம் – 5
“நீங்க நல்ல… நல்லா… இருக்கனும். உங்க குடும்பம் நல்லா விளங்கனும். நீங்க கண் கொடுத்த புண்ணியம் என் பையன் ரொம்ப நல்லா இருக்கான். துப்பாக்கிச் சுடும் போட்டியில் தேசிய அளவில் சாம்பியனா மட்டுமில்லாமல் ஒலிம்பிக் போட்டிக்கும் தேர்வாகி இருக்கான்.” சொன்னார்.
“துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஒலிம்பிக்கிற்குத் தேர்வா.. ? என்ன சார் சொல்றீங்க..” ஹரிஸ் ஆச்சரியமாகக் கேட்டான்.
“ஒரு நிமிசம் இருங்க. வீடியோ காட்றேன்.” என்ற குமாரசாமி அருகிலிருந்த கைபேசியை எடுத்து…
“அன்புச்செல்விஈஈஈஈ….” உள் நோக்கிக் குரல் கொடுத்தார்.
“இதோ வர்றேன்!” எங்கோ ஒரு மூலையில் உள்ளிருந்து குரல் வந்தது.
சிறிது நேரத்தில் 40 வயது அவர் மனைவி அருகில் வந்தாள்.
“நம்ம மகனுக்குக் கண் கொடுத்தவர் தம்பி வந்திருக்கார்.” – ஹரிசைக் காட்டினார்.
அவள் இவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டதும் விபரம் சொன்னார்.
“தமிழ்வேலன் தினம் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து ஜாகிங் போவான். அப்புறம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி செய்ய திண்டுக்கல் போவான். அஞ்சு வருசத்துக்கு முன் ஒரு நாள் காலை அப்படிப் போனவன் வாழைப்பழத் தோல் வழுக்கி…. சாய்ந்து குப்புறவிழுந்து மூர்ச்சையாகிட்டான். அங்கே அக்கம் பக்கம் உள்ளவங்க தூக்கி ஆட்டோவில் அள்ளிப் போட்டுக்கொண்டு வந்தாங்க. நான் உடனே திண்டுக்கல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். சாதாரண அடித்தான்னு சொன்னாங்க. நாலு நாட்களில் குணமாகிடுச்சி. வீடு திரும்பிய ஒரு மாதத்தில் தலைவலி, கண் பார்வை மங்களானது. வைத்தியம் பார்த்தும் பார்வை குறைபாடு சரியாகலை. சென்னை மருத்துவமனையில்தான் சரியா கண்டுபிடிச்சி… பையனுக்கு அதிர்ச்சியில் கண் பாதிக்கப்பட்டிருக்கு. சில நாட்களில் பார்வை போய்விடும். சொன்னாங்க. இதுக்கு மாற்றுக் கண் தான் மருந்து. அப்போதான் பார்வை கிடைக்கும்ன்னு டாக்டர் சொன்னார்.
எல்லாரும் உறைந்து போய்ட்டோம். பையன் இடிந்து போனான். ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவது லட்சியம்ன்னு பயிற்சி எடுத்தவன் ஐயோன்னு உடைந்து போனான். மாற்றுக் கண் வைத்தாலும் பார்வை சரி வருமா..? பார்வை வந்தாலும் இந்த துப்பாக்கிச் சுடுதலுக்குத் தேர்வாய் இருக்குமா..? குறி பார்த்து சுடுவதற்குச் சரி வருமான்னு மூளைக் குழம்பி போனான்.
உங்க அண்ணன் கண் பொறுத்தின பிறகு பார்வை ரொம்ப துல்லியமாகிடுச்சு” என்றவர், “இருங்க. அதை பையன் வாயாலேயே சொல்றதைக் கேளுங்க…” என்று சொல்லி கைபேசியை உயிர்ப்பித்தார். அந்த வீடியோவை தேடி எடுத்தார்.
அந்த வீடியோவில்…தமிழ்வேலன், “நான் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகி இருப்பதற்கு முக்கிய காரணம். எனக்கு கண் கொடுத்த அந்த முகம் தெரியாத நபர், மனிதர், மகான்,தெய்வம் காரணம். என் வலது கண் பார்வையை விட அவர் இடது கண் பார்வைக்கு ஒளி, கூர்மை அதிகம். மாற்றுக் கண் கொடுத்த அவர் என் கடவுள்!” சொன்னான்.
கேட்க…. ஹரிசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
கைபேசியை அணைத்த குமாரசாமி மனைவியை அருகில் உட்காரச் சொல்லிவிட்டு..
“தம்பி! உங்க அப்பா, அம்மா கைபேசி எண் கொடுங்க பேசறேன். என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
“அ… அப்பா இல்லே..” சொன்னான்.
“தவறிட்டாரா..?”
“ம்ம்….”
“அம்மா..?”
“இருக்காங்க…”
“அந்த தெய்வத்தைக் காட்டுங்க பேசறேன்” சொன்னார்.
ஹரிஸ் தன் கைபேசி எடுத்து அஷ்டலட்சுமியை வாட்சப்பில் தொடர்பு கொண்டான்.
“அம்மா! இடது கண்ணில் இருக்கிறேன்!” – சொன்னான்.
“மகிழ்ச்சிப்பா..”
“பையன் அப்பா பேசணும்ன்னு ஆசைப்படுறார்…”
“கொடு ஹரிஸ்”
கொடுத்தான்.
குமாரசாமி எந்தவித அறிமுகமும் இல்லாமல்…
“அம்மா! நீங்க கண் கண்ட தெய்வம். உங்க மகன் என் மகனுக்குக் கண் கொடுத்த கடவுள். தெய்வம் மாதிரி உங்க பையன் வந்து எங்களைச் சந்திச்சிருக்கு. தெய்வத்தை நேரில் பார்த்த மாதிரி இருக்கு. உங்களை நேரடியாய்ப் பார்க்கனும் போல இருக்கு. என் பையன் தமிழ்வேலன் இப்போ பக்கத்துல இல்லே. டெல்லியில் இருக்கான். அவன் வீடு வந்ததும் பேசச் சொல்றேன். அவனோடு நேரடியாய் வர்றேன். இது என் மனைவி. அவளுக்குச் சட்டுன்னு அதிகம் பேச வராது. நாங்க மூணு பேரும் நேரடியாய் உங்க வீட்டுக்கு வர்றோம்!” என்று மனைவியைக் காட்டி அறிமுகமும் செய்து முடித்து கைபேசியை ஹரிசிடம் திருப்பினார்.
“அப்படியே உங்க கைபேசி எண், அம்மா கைபேசி எண் சொல்லுங்க தம்பி. சேமித்து வைச்சுக்கிறேன். அடிக்கடி பேசறேன்” சொன்னார்.
ஹரிஸ் அப்படியே தங்கள் பெயர்களுடன் எண்களைச் சொன்னான்.
குமாரசாமி சேமித்துக் கொண்டார்.
பின் அவரே இவனோடு ‘செல்பி’ எடுத்துக் கொண்டார்.
ஹரிசும் அவர்களோடு ‘செல்பி’ எடுத்துக் கொண்டு விடைபெற்றான்.
வெளியே வந்தான் மனம் ரெக்கை கட்டி பறந்தது.
தானத்தில் சிறந்தது உடல் தானம், உறுப்புதானம். மனிதனுக்குக் கண் பார்வை கொடுக்கிறது. உயிர் வாழ வைக்கிறது. எத்தனை பெரிய உண்மை. கொடுப்பிணை – நினைக்க சிலிர்த்தது.
பெண் கொடுப்பதைவிட அவள் புகுந்த வீட்டில் சுகமாக இருக்கிறாள், எந்தவித குறையுமில்லாமல் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்று கேள்வி படுவதை விட நேரில் சந்தித்துப் பார்ப்பது, பேசுவது எவ்வளவு சந்தோசம், புளகாங்கிதமான விசயம்! – நினைக்க இனித்தது.
அத்தியாயம் – 6
ஹரிஸ் காருக்குள் அமர்ந்து அடுத்து செல்ல வேண்டிய இடத்தைப் பார்த்தான்.
ஷாகுல் ஹமீது த/பெ முகமது ஆரிபு 7, ஹாஜியார் வீதி, நாகூர்! – படித்தான்.
நாகூர் செல்ல நடுநிசி ஆகும். திருச்சியில் தங்கி செல்ல வேண்டும் முடிவெடுத்துக் கொண்டு காரை விட்டான்.
மலை இறக்கத்தில் கார் அழகாக வந்தது. மாலை வெயிலும் கண்களைக் கூசாமல் இதமாக அடித்தது.
ஷாகுல் ஹமீது எப்படி இருப்பார்..? வயதானவரா… வாலிபரா..? நினைவுகள் ஓடியது.
உடலுறுப்புகள், இரத்தம் எல்லாம் சாதி, மதம் ஆண் பெண் பேதங்கள், ஏழை, பணக்காரன் பார்க்காமல் மனிதனுக்குள் சேர்க்கிறது.
ஆனால் மனிதன்…?
சாதி, மதம் வெறி பிடித்து அலைகிறான்.!
ஏன்..? உறுப்பு மாற்று செய்து வாழ்பவன் கூட சாதியிலும் மதத்திலும் சத்திரியனாய் இருக்கிறான்.
மதத்திற்கு மதம் மற்றவனை இழுப்பது கொடுமை. மதத்தின் எண்ணிக்கையை உயர்த்தி இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்..? தன் மதம் பெரியது என்று மார் தட்டிக்கொள்வதில் இவர்களுக்கு என்ன பெருமை..? ஹிட்லரை விடவா மத வெறியர்கள் உலகில் பிறக்கப்போகிறார்கள்..?! அவன் மற்ற மதத்தினரை எப்படி எப்படியெல்லாம் கொன்றான் கொடுமைப் படுத்தினான். இறுதியில் அவன் எதை சாதித்தான்..? எந்த சாதி, மதம், கடவுள் வந்து அவன் உயிரைக் காப்பாற்றியது. ? இப்படி நினைத்துக் கொண்டே ஹரிஸ் காரை ஓட்டினான்.
திருச்சியைத் தொடும்போது மணி இரவு 8.00.
கண்ணில் பட்ட நல்ல விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கினான்.
கீழே வந்து உணவருந்திவிட்டு அறைக்குள் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் செய்தி சேனல்கள் புரட்டினான்.
எந்த அரசியல்வாதி வீட்டிலோ வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்ப்பு காரணமாக ‘ரெய்டு ‘ சேதி முக்கிய செய்தியாக ஓடியது.
இப்போது அரசியல் என்றாலே ஆதாயம், சொத்து சேர்ப்பு ஆகிவிட்டது. ராஜாஜி, காமராசர் காலத்தோடு மக்கள் காலம் போய்விட்டது.
இவர்களெல்லாம் மக்கள் வரிப்பணத்தைக் கோடி கோடியாய்க் கொள்ளையடிப்பவர்கள். எந்தக் கட்சியும் யோக்கியமில்லை.
நீ வந்தால் நீ. நான் வந்தால் நான் . சுரண்டல்! சுரண்டலுக்கென்று ஒரு வரை முறை கிடையாது! – கசப்பாக இருந்தது.
கஷ்டப்பட்டு உறங்கினான்.
காலை குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு புத்தம் புது மனிதனாகக் கிளம்பினான்.
காரில் உள்ள கணனித் திரையில் செல்ல வேண்டிய முகவரியைப் பதிவு செய்துவிட்டு காரைக் கிளப்பினான்.
நாகூர் இவனுக்கு அறிமுகமில்லாத ஊர் கிடையாது.
அம்மாவின் அம்மா – பாட்டி வீடு காரைக்கால். ஐந்தாறு வயதுகளில் …காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு பள்ளி விடுப்புகள் என்றாலே அண்ணன் தம்பிகளுக்குப் பாட்டி வீடுதான் அடைக்கலம். காரைக்காலிலிருந்து 10 கிலோ மீட்டரில் நாகூர் என்பதால் இவர்கள் வரும்போதெல்லாம் ஒருமுறையாவது பாட்டி பேரர்களை இழுத்துக் கொண்டு சென்றுவிடுவாள்.
வியாழக்கிழமை மாலை புறப்பட்டு நாகூர் தர்கா சென்று, இரவு தங்கி அங்கு படுக்கையைப் போட்டு வெள்ளி விடியல் காலைப் புறப்பட்டு இவர்களை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுவாள்.
தர்காவில் முஸ்லீம்கள் தொழுவார்கள். பாத்தியா ஓதுவார்கள். படுக்கை போடுவதெல்லாம் இந்துக்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் அறுவடைக் காலங்களில் நெல், உளுந்து, பயிறு போன்றவைகளைக் காணிக்கையாய் கொண்டு வந்து செலுத்துவார்கள்.
மனநோயாளிகள் இரும்பு சங்கிலிகளால் கட்டப் பட்டிருப்பார்கள். அவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.
தர்கா உருவாக்கத்திற்கு இந்துக்கள் ஏராளமான கொடைகள் வழங்கி இருப்பதாக வரலாறு.
தர்காவில் முஸ்லீம்களை விட இந்துக்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். இதனால்தான் இந்துக்கள் வருகை அதிகம் என்று கூற முடியாது. அருகிலுள்ள வேளாங்கன்னியிலும் இந்துக்கள் தினம் அதிகமாக கூடுவார்கள். இந்துக்கள் எல்லா மத தெய்வங்களையும் சாமியாக நினைத்துப் பாகுபாடின்றி வணங்குவார்கள். கிரிஸ்த்துவர்கள் இந்து கோவில்கள் பக்கம் வரமாட்டார்கள். கிறிஸ்டின்கள் தான் அவர்களைத் தங்கள் மதம் பக்கம் இழுக்க ஜெபிப்பார்கள், இலவசங்கள் வாரி வழங்கி கவர்வார்கள்.
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டில் அடி எடுத்து வைக்கவில்லை, இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்து ஆட்சி செய்யவில்லை என்றால் இங்கே கிரிஸ்டின் மதம் உருவாகாமல் இயேசு, மாதா, மாதாக்கோவில்கள் எல்லாம் இல்லாமலே போயிருக்கும்.
திருச்சி – தஞ்சை தேசிய கட்டண நெடுஞ்சாலையில் கார் அலுங்காமல் குலுங்காமல் சென்றது.
தஞ்சை – நாகை தொடர் தேசிய நால்வழி சாலை வேலைகள் மந்தகதியில் நடந்து கொண்டிருந்தன.
ஒரு சில இடங்களில் வேலைகள் நடந்து முடிந்து போயிருந்தது. ஒன்றிரண்டு இடங்கள் முடிந்தும் முடியாமலும் அரைகுறையாய் இருந்தன.
நாம் தேடி செல்லும் விலாசத்தில் ஆள் இருப்பார்களா இல்லையா..? அந்த இடம் விட்டு வேறு இடம் மாறி விட்டார்களா..? சொந்த வீடா, வாடகை வீடா..?
சொந்த வீடென்றால் மாற வாய்ப்பில்லை விற்றால் தான் மாற்றம். வாடகை என்றால் நினைத்தால் மாற்றம்.
மாற்றம் என்றாலும் ஆளைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். வீட்டு வாசலில் நின்று விசாரித்தால் மாற்றம் எங்கு என்று தெரிந்து விடும். அங்கும் மாற்றமென்றால் அங்கு விசாரித்தால் அடுத்த மாற்றம் தெரிந்துவிடும். எப்படியும் கண்டுபிடித்து விடலாம்! – நினைத்து வண்டியை விட்டான்.
காரை இவன் தேடி வந்த வாசலில் நிறுத்தினான்.
பத்தடி அகலத்தில் சிறு திண்ணை வைத்து ஒற்றைச்சாரி நாட்டு ஓட்டு வீடு ரொம்ப பழமையில் நின்றது. நான் ஏழை என்று பறைசாற்றியது. சொல்லாமல் சொல்லியது.
அந்த தெருவில் ஏகப்பட்ட மாடி வீடுகள் இருந்தாலும் இப்படி சில வீடுகளும் இருந்தன.
ஹரிஸ் காரை விட்டு இறங்கி வீட்டின் முன் சென்றான். அழைப்பு மணி தேடினான். இல்லை!
கையால் கதவு தட்டினான்.
சில நொடிகளில்…
குப்பையில் கிடக்கும் முத்தைப் போல் பளிச்சென்று ஒரு 20 வயது இளம் பெண் கதவு திறந்தாள்.
அறிமுக மில்லா ஆளைக் கண்டதும் இஸ்லாமிய பெண்களுக்கே உரிய இயற்கை சுபாவத்தில்… சட்டென்று கழுத்தில் கிடந்த துணியால் முக்காடு போட்டு முகத்தை மூடினாள்.
இவனும் இவளை எதிர்பார்க்கவில்லை.
“ஷா…. ஷாகுல்ஹமீது…” தடுமாறினான்.
அவள் பதில் சொல்லவில்லை. மாறாக…
“வாப்பா..!” என்று அழைத்து திரும்பிச் சென்றாள்.
அதனைத் தொடர்ந்து…
ஒல்லி உருவம், இடுப்பில் கைலி, கைவைத்த பனியன், தலையில் தொப்பியுடன் 60 வயது முஸ்லீம் முதியவர் இவன் முன் வந்தார்.
யோசனை உணர்வுகள் முகத்தில் பரவ…
“தம்பி… நீங்க…?” ஏறிட்டார்.
“நான் ஹரிஸ். ஷாகுல் ஹமீதைத் தேடி வந்திருக்கேன்.” என்றான்.
“நீங்க அவன் நண்பனா…?” உள்ளே வர சொல்லாமல் வெளியில் நிறுத்தியே விசாரித்தார்.
“இல்லே.”
“…”
“அவர் உங்க மகனா..?”
“அ…ஆமாம்….”
“பார்க்கனும்…”
அதற்கு மேல் விசாரிக்காமல் குழப்பத்துடன்…
“உள்ளே வாங்க” – திரும்பி நடந்தார்.
ஹரிஸ் அவரைத் தொடர்ந்தான்.
ஒரு பக்கம் கொஞ்சம் முற்றம் விட்டு இருபது அடி நீளத்தில் ஒற்றச் சாரி வீடு தாழ்வாக இருந்தது. தரையில் சிமெண்ட்டுகள் இல்லை. அந்தக்கால வெறும் செங்கல் பரப்பாக இருந்தது. கடைசியில் ஒரு தடுப்பு. அடுப்படி! எதிரில் கழிவறை, குளியறை தடுப்புகள். தாழ்வாரத்தில் புழக்கம், நாற்காலிகள் இருந்தது. உள்ளே அவர் மனைவி இருந்தாள். மகள் இருந்தாள். அவன் இல்லை!
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆண்பார்க்க வந்தவள்
நிர்மலா ராகவன்
June 9, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 9, 2026
நியாயங்கள் பொதுவானவை
ஜெயந்தி சங்கர்
June 9, 2026
