திறந்த ஜன்னல்
கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 118

மானாமதுரை ஜங்ஷன். மாலை ஐந்து மணி.
பிளாட்பாரத்தில் காலடி வைத்தவுடன் அனல் மேலே எழுந்தது.
சட்டையின் பின்பக்கம் வியர்வையில் நனைந்து முதுகோடு ஒட்டிக்கொண்டது.
கையில் பை. தோளில் பை. குழந்தைகள் நடுவே சிக்கி.
காற்றே நின்ற மாதிரி.
ராமேஸ்வரம் – தாம்பரம் எக்ஸ்பிரஸ்.
ஐந்து ஐம்பதுக்கு வரும். அதுவரை நிற்க வேண்டியதுதான்.
செகண்ட் கிளாஸ் ஸ்லீப்பர் பெட்டிக்குள் ஏறும்போது இரும்பு வாசனை, மனிதக் குரல்கள், டீ விற்கும் சத்தம் — எல்லாமே கலந்த ஒரு சூடு.
யாரோ ஒருவன் வியர்வையைத் துடைத்துக்கொண்டே பேப்பரைப் புரட்டினான். இன்னொருவன் தன் பெட்டியைச் சரிசெய்துவிட்டுத் தலையைச் சாய்த்தான். அந்தச் சிறு இடத்திற்குள் முழங்கையை இடிக்காமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.
என் மனைவி கையில் இருந்த பையை கீழே வைத்து சரிசெய்தாள்.
மஞ்சள் நிற கல்யாண அழைப்பிதழ் ஓரமாக வெளியே வந்தது.
குழந்தைகள் இருவரும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பெர்த் எண்களைப் பார்த்தேன்.
இரண்டு மிடில்.
இரண்டு அப்பர்.
லோயர் பெர்த் கிடைக்கப்பெறவில்லை.
ஆனால் திருத்துறைப்பூண்டி வரைதான் பயணம். ஒன்பது மணிவரை உட்கார்ந்தே போய்விடலாம்.
ஜன்னல் ஓர லோயர் பெர்த் இருக்கையில் ஒரு இளைஞன்.
கழுத்தில் தொங்கியிருந்த அட்டை இன்னும் கழற்றப்படவில்லை.
லேமினேஷன் ஓரங்களில் தேய்ந்திருந்தது.
புகைப்படத்தில் இருந்த முகம் சற்றே மெலிதாக இருந்தது.
ஹெட்போன் மாட்டியபடி, மொபைல் திரை வெளிச்சத்தில் அவன் முகம் வெளிறியிருந்தது.
நாங்கள் ஏறிய சத்தம் கேட்டதும் எங்களைப் பார்த்தான்.
பிறகு பார்வை மீண்டும் திரைமேல் விழுந்தது.
எதிர் ஜன்னல் ஓர லோயர் பெர்த் இருக்கையில் இருந்த பெரியவர் மகனை கவனித்தார்.
அவன் ஜன்னலுக்கு அருகே போக முயன்றான். பின்னே வந்தான்.
ஆனால் பார்வை ஜன்னலிலிருந்தே விலகவில்லை.
அந்த பெரியவர் ஜன்னலின் கம்பியைப் பிடித்து எழுந்தார்.
மகனைப் பார்த்து,
“இங்க உட்கார்றியா தம்பி?” என்றார்.
மகன் ஜன்னல் பக்கம் ஒரு அடி நகர்ந்து நின்று என்னைப் பார்த்தான்.
நான் தலை அசைத்தேன்.
அங்கே உட்கார்ந்ததும் ஜன்னல் கம்பியைப் பற்றிக்கொண்டான்.
நகரும் மரங்களைப் பார்த்து மெல்லச் சிரித்தான்.
பெரியவர் சைடு லோயரில் நண்பருடன் சுருங்கிக்கொண்டார்.
“இது தாம்பரம் வரைக்கும்தான்…அதுக்கப்புறம் எலக்ட்ரிக் ட்ரெய்ன்லதான் போகணும்…” என்றார்.
நண்பர் தலை அசைத்தார்.
பிறகு தன் பழைய பையைத் திறந்தார். ஓரம் சற்று கிழிந்திருந்தது.
அதிலிருந்து மெது வடை போலிருந்த ஒரு இனிப்பை எடுத்தார்.
“இராஜகிரி சீனி வடை…” என்று நண்பரிடம் சொன்னார்.
பழைய பேப்பரில் மூன்று துண்டுகளாக கட்டியிருந்தது.
இரண்டு மட்டும் எடுத்தார்.
மூன்றாவது சிறிது நேரம் கையில் நின்றது.
பிறகு மீண்டும் பேப்பருக்குள் மடித்துவைத்தார்.
ஒன்றை நண்பரிடம் நீட்டினார்.
இன்னொன்றை மகன் பக்கம் நீட்டி,
“சாப்பிடுறியா தம்பி?” என்றார்.
மகள் கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பெரியவரின் கைகளையும், தம்பியின் முகத்தையும் மாறி மாறி.
ரயில் வேகம் எடுத்தது.
அதே நேரம், அந்த இளைஞன் போனை காதில் வைத்தான்.
“நான் சொல்லுறத கேளு…”
மறுபுறம் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
“நான் சொல்லுறத…”
குரல் பாதியில் நின்றது.
போனை மடியில் வைத்தான்.
திரையில் ஒரு பெயர் மின்னி மறைந்தது.
ஜன்னலுக்கு வெளியே இருள் ஓடிக்கொண்டிருந்தது.
இரவு எட்டு மணி.
அந்த இளைஞன் திடீரென்று ஹெட்போனை கழற்றினான்.
அவன் குரல் நேராக விழுந்தது.
“நான் தூங்கணும்.”
நான் கடிகாரத்தைப் பார்த்தேன் — எட்டு.
காலிலிருந்த செருப்பைப் பார்த்தேன்.
மிடில் பெர்த்தை உயர்த்தினேன்.
ஒரு பக்கம் சங்கிலியை கொக்கியில் மாட்டினேன். மறுபக்கம் அவன் அருகில் இருந்தது.
“இதை கொஞ்சம் மாட்றீங்களா?” என்றேன்.
அவன் சங்கிலியைப் பார்த்துவிட்டு குனிந்தான்.
“எனக்கு இதெல்லாம் தெரியாது,” என்றான்.
நான் சங்கிலியை அவன் அருகிலிருந்து எடுத்தேன்.
அவன் திரையைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
பிறகு அதை கொக்கியில் மாட்டினேன்.
சங்கிலி சத்தம் போட்டது.
அவன் திரும்பவில்லை.
காலிலிருந்த செருப்பைக் கழற்றினேன்.
மிடில் பெர்த்தைப் பார்த்தேன்.
பிறகு கீழே.
ஒன்றும் சொல்லாமல் எதிர் இருக்கையில் குழந்தைகளோடு சுருங்கி உட்கார்ந்தேன்.
பெரியவர் திரும்பிப் பார்த்தார்.
“இன்னும் கொஞ்ச நேரம்தான்…” என்றேன்.
“பரவாயில்லை தம்பி…” என்று கையை அசைத்தார்.
சில நேரம் கழித்து, கால்களை நீட்ட இடம் தேடினேன் — கிடைக்கவில்லை.
முழங்காலில் சற்று இழுத்தது.
மீண்டும் அவன் பக்கம் பார்வை சென்றது.
அந்த இளைஞனின் காதில் இன்னும் ஹெட்போன் இருந்தது.
மொபைல் திரை மட்டும் அணைந்திருந்தது.
வெளியிலிருந்து வந்த காற்று அவன் முகத்தைத் தொட்டது.
அவன் ஜன்னலின் இரும்புத் திரையை இழுத்தான்.
ஜன்னல் பக்கம் தலை வைத்து எங்களுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.
கழுத்திலிருந்த அட்டை முதுகுப் பக்கம் சாய்ந்ததில்,
புகைப்படம் இருளில் மின்னியது.
பெரியவர் யாரிடமோ மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
“ஹம்… ஹம்…”
போன் அவர் கையில் சற்று இறுகியிருந்தது.
தலையை அசைத்தார்.
“சரி ம்மா…”
சிறிது நேரம் அமைதி.
“பார்த்துக்கறேன்…”
போனை மடியில் வைத்தபடி ஜன்னல் கம்பியை வருடினார்.
அவரது நண்பர் ஜன்னலில் தலை சாய்த்து தூங்கிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து மகன் பையைத் திறந்தான்.
அதிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தான்.
ஒரு பிஸ்கட்டை அம்மாவிடம் நீட்டினான்.
அவள் தலை அசைத்தாள்.
அக்கா வாங்கிக்கொண்டாள்.
அவன் என்னைப் பார்த்தான்.
நான் தலை அசைத்தேன்.
பிறகு இன்னொரு பிஸ்கட்டை எடுத்தான்.
இம்முறை அது கையில் கொஞ்சம் நின்றது.
பெரியவரிடம் நீட்டினான்.
“தாத்தா… எடுத்துக்கோங்க.”
பெரியவர் வாங்கிச் சிரித்தார்.
பிஸ்கட்டில் சிறு துண்டை உடைத்து மகன் கையில் வைத்தார்.
அப்போது, அந்த இளைஞன் படுத்திருந்த இடத்தில் ஒரு சிறிய அசைவு.
முகத்துக்கு மேல் போட்டிருந்த கையின் இடைவெளியில் ஒரு கண் தெரிந்தது.
அது மகனிடமும் பெரியவரிடமும் மாறி மாறி நின்றது.
சில விநாடிகள்.
கை சற்று விலகியது.
மகனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான்.
“அவருக்கும்…ஒன்னு தரட்டுமா?” என்று மகன் இன்னொரு பிஸ்கட்டை எடுத்தான்.
நான் ஜன்னலுக்கு வெளியே ஓடும் இருளைப் பார்த்தேன்.
திரும்பினேன். ஏதோ சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை.
மகனின் கை இன்னும் நீண்டபடியே இருந்தது.
அந்த இளைஞன் கையை மீண்டும் முகத்துக்கு மேலே போட்டுக்கொண்டு சுவர் பக்கம் மேலும் சுருண்டுக்கொண்டான்.
மகன் மீண்டும் ஜன்னலைப் பிடித்தான்.
ஜன்னல் காற்றில் மகனின் சட்டை காலர் படபடத்தது.
வெளியே, விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக இருளில் நகர்ந்தன.
![]() |
சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஏவிவிடப்பட்ட கொலையாளி
திசேரா
May 31, 2026
உள்ளும் புறமும்
முத்தமிழ்ப்பித்தன்
May 28, 2026
ஏவிவிடப்பட்ட கொலையாளி
திசேரா
May 28, 2026
