இறக்கை விரிக்கும் மரம்
கதையாசிரியர்: திசேரா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 25, 2026
பார்வையிட்டோர்: 516
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ஒரு மரம். பெரிதாக அடர்ந்திருந்த மரம். புத்தனும் பிள்ளையாரும் குந்தியிருந்து ஞானம் பெறவும், பெண் பார்க்கவும் மறந்துபோன மரங்களில் இதுவுமொன்று. அவர்களைக் குந்தவைக்க யாருக்கும் தோணாமல் போனதுதான் அதியசயமாகவும் இருந்தது.
வேதாளங்கள் தலைகீழாகத் தொங்கிக் கீச்சிடும், இரவுகளில் கேட்டல் புலனுக்கு அப்பாற்பட்ட ஒலியை எழுப்பிப் பறந்தும் திரிந்தன. இவைகளைக்கூட சுட்டுத் தின்னவெனவும் ஒரு கூட்டம்.
இந்த மரம் அப்பாவித்தனத்தினதும், பயங்கரத்தினதும் குறியீடாகவும் இருந்தது. இதில் குடியிருந்த காக்கைகளையும், ஊர்ந்து திரிந்த எறும்புகளையும், பொந்துகளுள் கிடந்த பாம்புகளையும் எண்ணமுடியாது. பருவ மாற்ற காலங்களில் வந்து தங்கிக் கிடக்கும் கொக்குகளும், சிவப்பு வெள்ளையிலான பறவைகளும் ஏராளம். என்னதான் அடைக்கலம் கொடுத்தாலும், இந்தமரம் பயங்கரமாய்த் தான் இருந்தது. முன்னமொரு காலப்பகு தியில் காக்கை எச்சங்களுக்கு மட்டும் பயந்து நிழலாறிய இடம். இந்நிழலே துரத்தி வந்தது. அதைவிட தலை வெயிலேற்றத்தில் பரந்து எல்லோரையும் கவ்விப்பிடிப்பதாக ஓடி மறைந்தார்கள்.
இதற்குப் பல பெயர்கள் இடப்பட்டிருந்தாலும் இது அரச மரம்தான் என அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனாலும் அதைப் பேய் மரம், தூக்குமரம் எனவே அறிந்து கொண்டேன்.
காற்று பலமாக அடித்துக்கொண்டிருந்த அடித்துக்கொண்டிருந்த வெள்ளிக்கிழமை இரவொன்றில் பேயாட்டம் ஆடி ஆணிவேரையும் பிடுங்கிக்கொண்டு துரத்தி வந்தது, அதைவிட தலை தெறித்துப்போக நானும், அண்ணனும் ஓடிவந்துவிட்டோம். அன்றிலிருந்து இரண்டு தினங்களாகக் காய்ச்சல் பீடித்திருந்தது. அன்றைய தினம் முதல் அந்தப்பாதையை தவிர்க்க வேண்டுமென எண்ணினாலும் அது முடியாததாகவே இருந்தது. இம்மரம் பிரதான வீதியில் ஆஸ்பத்திரிக்கு அருகாமையிலும் பெரியம்மாவின் வீட்டு ஒழுங்கைக்கு முன்னாலும் இருந்தது.
இன்னுமொருமுறை தலையில் பாதிப் பந்தளவில் இருந்த கட்டை ஆஸ்பத்திரியில் வெட்டிவிட்டு வரும்போது அந்த மரத்துக்குக் கீழ்ப் போக நேர்ந்தது. ஏற்கனவே கட்டு வெட்ட வைத்திருந்த கத்தியைப் பார்த்துப் பயந்து கத்தத்தொடங்கியிருந்ததால், வெட்டி முடிந்த பின்னரும் அந்த அழுகையும் பயமும் தொடர்ந்திருந்தது. மரத்தைக் கண்ட பின்னர் அழுகை இல்லாவிட்டாலும் பயம் இருந்தது. என் அழுகையைத் தணிக்க, அப்பா பலூன் வாங்கித் தருகிறேன் என்றார். வேண்டாமென்று தூக்கிவைத்திருந்த அம்மாவினது கழுத்தை இறுகப்பற்றிக் கதறினேன். பரவாயில்லை வாங்கித் தருகிறேன் என மரத்துக்குக் கீழ் நின்ற வண்டிக்காரனிடம் வாங்கித்தந்தார். தரும்போது பயமாக இருந்தாலும் பலூனின் மீதிருந்த ஆசையினால் வாங்கி வைத்துக்கொண்டேன். அண்ணன், அக்கா எல்லோரும் கேட்டாலும் கொடுக்கக்கூடிய மனப்பாங்கு வளராமையினால், அப்பாவிடம் சொல்லி ஊதி நான் மட்டுமே விளை யாடினேன். தட்டித்தட்டியும், விரலை அழுத்தி இழுத்து இசை எழுப்பியும், அமத்தி அமத்தியும் விளையாடிக் கொண்டிருக்கும் போதே தூங்கியும் போனேன்.
இரவு மிகவும் கோர இருளுடன் கூடிய நடு இரவு வேட்டைப்பல முளைத்த வெள்ளை முயல்கள் ஆடிக்கொண்டும் தாவிக் கொண்டும் திரிந்தன. என்னைக் கடிக்க வாயையும் திறந்தது. பயம் உச்சிக்கேறியது. கத்தினேன் வீரிட்டுக் கத்தினேன். அப்போதுகூட ரெத்தம் வடியும் பற்களுடன் அவை அங்குதான் நின்றன. எனது வீரிடலில் அப்பாவும் அம்மாவும் எழுந்தனர். பயம் குறைந்தாலும், வேட்டைப் பல்லுடன் ரெத்தம் வடியும் வெள்ளை நிற முயலைக் காட்டிக் கத்தினேன். அம்மா குப்பி லாம்பைப் பத்தவைக்க அப்பா என்னவெனக் கேட்டார். கையினால் சுட்டிக்காட்டும்வேளை முயல்கள் அங்கில்லை. ஊதி விளையாடிக் கொண்டிருந்த பலூன்கள் தான் கிடந்தது. பயந்துவிட்டதனால் விபூதி பூசிப் படுக்க வைத்தார்கள். அன்றுடன் போன ஆசை இன்றுவரை பலூன் மீது வந்ததில்லை.
இது மாதிரியாகப் பல இரவுகள் இந்த மரம் எனைக் குலுக்கி, தூக்கி பந்தாடி தூக்கத்தைக் கொண்டுப்போனது.
இதற்கு அபூர்வ சக்தி இருக்கின்றதென எண்ணுகின்றேன்.
சற்றுப் பருமனில் குறைந்திருந்தாலும் இதைப் போலவே அந்த மாமரமும் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அவற்றின் வயதுகளைக் கணக்கிட்டுச் சொல்லக்கூடிய வயது எனக்கில்லாதது முதல் பிரச்சினை. இருப்பினும் அரச மரத்துடன் ஒப்பிடுகையில் அந்த மாமரத்துக்கு சக்தி இல்லையெனவே கூறவேண்டும். குறிப்பிடப்பட்ட அந்த மாமரம் எங்கள் வீட்டு மூலையில்தான் இருந்தது. நான் இப்படி ஒப்பிட்டுக்கூறக் காரணமும் இருந்தது.
புயல் வருமாம் என அப்பா சொல்லும்போதே ஆறு மணியளவில் வாசலுக்கு முன்பிருந்த நிழல் மரவள்ளி சாய்ந்து போனது. எவ்வளவு முயன்றும் எப்போதுமே ஏறமுடியாதிருந்த நிழல் மரவள்ளியின் உச்சிவரை பயணிக்க முடிவதையிட்டு சந்தோசித்தேன். இதன் காய்களைக் குண்டு விளையாடவெனப் பவுடர் டின்னுக்குள் ஆய்ந்து சேகரித்து வைத்துக் கொண்டிருந்தேன். மழைத்துளி பாரமாக மண்ணுள் பாய்ந்து கொண்டிருந்தது. காற்று துரத்தி வந்ததாலேயேதான் மழை சுறுசுறுப்பாக மண்ணுள் இறங்கிக்கொண்டிருந்தது. என்னுள்ளும் கூட ஊசியாய் இறங்கியது. அப்பா கூப்பிட்டுச் சத்தமில்லாமல் இருக்கச்சொன்னார். நேரத்துடன் சாப்பிட்டுப் படுக்கும்படி அம்மா குசினிக்குள் இருந்து கத்தினாள்.
அம்மா மடிக்குள் படுத்திருந்த எனக்கு, மாமா தூக்கும்போது விழிப்பு வந்தது.
எங்கள் வீட்டைவிட்டு இன்னுமொரு வீட்டுக்கு ஓடிப்போனோம். ஓடும்போது அக்கா ஆ… எனக்கத்தினாள். கையில் எதுவோ கிழித்து காயத்திலிருந்து ரெத்தம் வடிந்தது. இன்னொரு முறை விழிப்பு வந்தபோது அப்பா, மாமா இன்னுமிருவருமாக நான்கு பேர் வீட்டுக் கூரையின் சீற்றைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். முன்னம் ஓடிய வீடு இல்லை இது. அது குடிசை இது கல்வீடு. இப்படியே அந்த இரவு விழிப்பதும் உறங்குவதாய்ப் போனது.
காலையில் பெரிய அண்ணன் இரவு நடந்த கதையெல்லாம் சொன்னான். அதுதான் சூறாவளி எனவும் அதற்குப் புயலென கூறுவதுமுண்டு. புயல் கோரமானது. எல்லாவற்றையும் வீழ்த்தக்கூடிய சக்தி உள்ளதெனவும் சொன்னான். இதனால்தான் நமது வீடு தரைமட்டமாகிப்போனது இது நிறையப்பேரைத் தின்று மழையைக் என்றான்.
வளவின் மூலையிலிருந்த மாமரம் புடுங்கப்பட்டுக் கீழே கிடந்தது. அது சும்மா கீழே விழுந்து கிடக்கவில்லை. கீழே சாய்ந்து ஆணிவேர் மையத்தைச் சுற்றி சுழன்று பின்னர்தான் இப்படிக்கிடக்கின்றது. அதற்கான அடையாளங்கள்தான் பக்கத்திலிருந்த சின்னமரங்கள் முறிபட்டும், சுழன்ற. அடையாளம் மண்ணில் தெரிந்ததும் என அக்கா அழகாய் சொல்லிக்காட்டிக் கொண்டே அவளொரு மாங்காயை எடுத்துக்கொண்டு எனக்கொன்றையும் துடைத்துக்தந்து யாருக்கும் தெரியாமல் உண்ணுமாறு பணித்தாள்.
பெரும்பாலும் எல்லா மரங்களும் வீழ்ந்துதான் கிடந்தன. ஆனால், இந்த அரசமரம் மட்டும் ஒரு கிளையை முறித்து விட்டு விட்டுக் கம்பீரமாய் நின்றது. அதுகூட சிறிய கிளைதான். மேல் கிளை இடுக்குள் ஒரு குழந்தையை வைத்திருந்தது. அக்குழந்தைக்கு உனையொத்த வயது என்றாள் அம்மா. குழந்தைக்குள் மழைத்துளி நுழைந்து மஞ்சள் கலராய் மாற்றி உப்பச்செய்து இருந்தது.
இடம்பெயராத முடியாத இதனால் எப்படிக் குழந்தையை எடுத்துவர முடிந்தது. சிலவேளை கீழே போய்க்கொண்டிருக்கும்போது பறித்து விட்டதோ.
இனிமேல் இதன் கீழால் எனைக்கொண்டு வரவேண்டாமென்று அம்மாவிடமும் எல்லோரிடமும் சொல்ல வேண்டும். கொண்டுவர நேர்ந்தாலும் இறுக்கிப் பிடித்திருக்கும்படியும் கூறியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் எனதுயிருக்கு உத்தரவாதமளிக்க முடியாது.
இது நிறையப்பேரைத் தின்று மழையைக் குடித்துவிட்டுத்தான் இப்படி படுத்துக்கி டக்கின்றது. இதற்காகவேனும் இது கிளைபரப்பி வளர்ந்திருக்கின்றது. இதற்கு அபூர்வ சக்தி இருக்கின்றது. இல்லாவிட்டால் எல்லாமரமும் வீழ்ந்து கிடக்க இதனால்மட்டும் எப்படி நிமிர்ந்து நின்று ஜீவிக்கமுடியும். எனக்குத் தெரிந்த சகல அறிவுகளுக்கும் எட்டிய வரையில் பருத்த உருவம் இந்த அரச மரந்தான்.
மனிதர்களில் கறுப்பாய், வெள்ளையாய் பலர் உலாவிக்கொண்டு திரிந்தார்கள். அப்படியான உருவமொன்றுதான் அதில் கட்டப்பட்டுக்கிடந்தது. மரத்தையும் அந்த உருவத்தையும் சேர்த்துக்கட்ட ஐந்தாறு முடிச்சு கயிறு தேவைப்பட்டிருக்க வேண்டும். சின்னண்ணன் அறிமுகப்படுத்தினான் இது தவராசா மாமா என்று. என்னை அண்ணன் தூக்கி வைத்திருந்ததுபோல் குழந்தை களைத் தூக்கி வைத்ததுக்கொண்டும், யாரையும் தூக்கி வைத்திராமல் தனியே நின்றும் பலர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இந்த மரத்தைப் புரியமுடியாமலேயே இருந்தது. அவரை எப்படி இழுத்து வந்து கட்டிக்கொன்றிருக்கின்றது. ஏன் அவரை அதற்காகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தன்னைவிட அவர் பருத்து விடுவாரென்ற பொறாமையாக இருக்குமோ?
சுற்றி நிற்பவர்கள் பார்த்துக்கொண்டு மட்டும் இராமல் பல பல அபிப்பிராயங்களையும் கதைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கதைப்பது பற்றி சரியான விளக்கம் கிடைக்காவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சம் விளங்கியது.
“துரோகி…”
“இருபத்தையாயிரம்…”
“வெட்டி…”
இந்தத் திடீர் திடீர் சொற்கள் எந்தவித அறிவையும் தராவிட்டாலும் இதைத் தொகுத்து அறியவேண்டிய நிலைக்குள் இருந்தேன். இந்தப் பெருமனிதர் இருபத்தையாயிரம் ரூபாய்க்கு இம்மரத்தை வெட்டிவிடத் தீர்மானித்திருக்கலாம். இதனால் கோபமுற்ற மரம் இவரைத் துரோகியாக்கிக்கொன்றிருக்கிறது போலும். இதை வெட்டிப்போட வேண்டுமென என்னுள் துளிர் விட்டுக்கொண்டிருந்த எண்ணம் இவரையும் ஆக்கிரமித்து இருக்கின்றது.
என்னுள் சுருண்டிருந்த வெறுப்பு இவரையும் தொடக்காரணம் சிலவேளைகளில் அந்தப்புயலன்று இது தூக்கிவைத்திருந்த பிள்ளை இவருக்குரித்தானதாக இருக்குமோ அதற்காகக் கோபத்தில் மரத்தை வெட்டி இல்லாதாக்க நினைத்தது நியாயம்தான். ஆனாலும் இதனிடம் இவர் எப்படி மாட்டிக்கொண்டாரெனத் தெரியவில்லை. அடுத்து என்னைக் கொல்லத் தீர்மானம் எடுத்திருக்கின்றதோ தெரியவில்லை. எனைவிடவும் அதை வெட்டிவிட வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் வியாபித்திருக்காது.
நான் சின்னவனாக இருப்பதால் அதுக்கு கொல்லுதல் இலகுவாயிருக்கும். சிறியதொரு கிளையால் ஒரு அடி அடித்தோ, கவர்துண்டொன்றை கழுத்துக்குள் வைத்தோ சிறிய கிளையால் ஒரு அடி அடித்தோ, கவர்துண்டொன்றை கழுத்துக்குள் வைத்தோ சிறிய அழுத்தமொன்றால் கொன்று போடமுடியும். நான் இப்படி நினைத்துக்கொண்டாலும் எப்படி எனைக் கொல்வதென்று அது தீர்மானம் எடுத்திருக்கின்றதோ தெரியவில்லை. அதை நினைக்க நினைக்க சரியான பயமாய் இருந்தது.
இந்த நினைப்புகளில் தலைகுழம்பிப்போய் இருக்கும்போதுதான் இடமாற்றமொன்றின் காரணமாக வேறு ஊருக்கு அப்பா எங்களை அழைத்துவந்தார். அது சந்தோசத்தை அளித்தது. அந்த மரத்தினால் இடம் பெயர முடியாமையினால் இங்குவருவது சாத்தியமில்லை என்பது சந்தோசத்தை வர்க்கமாக்கியது.
அதிலும் இந்த ஊர் என்றுமே என் கனவுக்குள் அகப்படாத இடமாக இருந்தது. ஆண் பெண், குழந்தைகள் என எல்லோருமே சுருட்டுக் குடிக்கப் பழகி இருந்தார்கள். அதிலும் காலை வேளைகளில் மண்டான் சுருட்டு எனப்பட்ட மிகப்பெரிய சுருட்டைப் பாவிக்கப் பழகியிருக்க வேண்டும். நிறையப் புகைகளை ஊதித் தள்ளினார்கள். ஆனால் அப்பா சொன்னார் நீ, புகையை வைத்துக்கொண்டு சுருட்டுத்தான் குடிக்கின்றார்கள் எனத் தீர்மானம் எடுத்தது பிழை என்றார். இது குளிரினால்வரும் ஆவி நீயும் ஊதிப்பார் உனது வாயிலிருந்தும் புகை எனக்கூறிய ஆவி வரும் என்றார். இப்படியாக இந்த ஊர் நிறையக் கற்றுத் தந்தாலும் குளிரைக் காட்டி நடுங்க வைத்துக்கொண்டிருந்தது.
இப்படியாகக் குளிரில் மட்டும் நடுங்கிக் கொண்டிருந்த எனக்குப் பயமும் நடுங்க ஆரம்பித்தது. மறந்துபோக நினைத்துக் கொண்டிருந்த அந்த அரச மரத்தை நகரின் அண்டிய பகுதியில் காணப்பட்ட கறுப்பந்தேயிலை எனப்பட்ட யூகலிப்பிரஸ் மரங்கள் ஞாபகமூட்டின. அந்த மரமளவிற்கு தடித்திராவிட்டாலும் ஓங்கி வளர்ந்த இவை பயமுறுத்தின. அந்தப் பயத்தைக்கூட இவை நேரடியாக ஊட்டவில்லை. அரச மரத்தை ஞாபகமூட்டியே பயத்தை ஊட்டின. சாதுவானதாக கரடுமுரடற்று அழகாய் நீண்டிருந்தாலும் காணும் போதெல்லாம் பழைய நினைப்புகள் எல்லாம் கண்முன் திரையிட்டது. தவராசா மாமா, மஞ்சட் குழந்தை, புயல், எனைப் பிடிக்கக் கிளைகளை நீட்டுவது, வேட்டைப்பல் முயல் எல்லாம் முப்பரிமாணமாகவே தெரிந்ததால் பயம் கூடியது. இதற்குப் பயந்தே பஸ்சில் போக அப்பாவிடம் காசு கேட்டேன்.பஸ்சினுள் இருக்கும்போது எப்படியும் இதைக் காணக்கிடைக்காது அல்லது பார்க்க வேண்டியிராது என்பதாலேயே பஸ்சில் போக. நினைத்தேன். சிலவேளைகளில் பாடசாலை விடும்வேளையில் பஸ் இராது. எங்களுக்குப் பதினொன்றுக்குத் தொடங்கி நாலரைக்குத்தான் முடியும். மாலை வேளையாகுவதாலும், இருள் நேரத்து டனேயே கவிழ்ந்துக்கொள்வதாலும் இந்தப் பிரச்சினை அடிக்கடி இருந்தது.
நடந்துவரும் வேளையில் அப்பகுதியை நெருங்கும்போது பயம் போக்க என்ன பாடல் பாடினாலும் பயம் மூலையில் குந்தி இருந்து உலுக்கும்.
இப்படியாக ஒரு நாள் வரும்போது அம்மரப்பகுதியில் இருபாம்புகள் பிணைந்துகொண்டு நின்றன. இதேமாதிரியே அந்த அரச மரத்துக்கு சற்றுத்தள்ளி இருந்த எண்ணம்பாலைக்கருகில் சாரையும், நாகமும் வாலில் நின்றுகொண்டு பிணைந்ததை நானும், அக்காவும் கண்டு பாடசாலை செல்லப்பயந்து திரும்பி ஓடி இருக்கின்றோம். இதைப்பார்த்தபோது எண்ணம்பாலையில் இருக்கும் வெள்ளை நிறப்பூவின் மணம் மூக்கைத் தாக்கியது. அன்று மட்டுமன்றி அதன் பின்னாட்கள் ஒவ்வொன்றிலும் அந்தப் பூவின் மணம் வீசியது. பலராய் நடந்துகொண்டிருக்கும் போதுகூட எனக்கு மட்டுமே அந்த மணம் அடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அந்த மணம்கூட புலக் காட்சியில் எண்ணம்பாலையையும் அந்தச் சூழலையும் விகாரமாய் அரச மரத்தையும் காட்டியது.
அக்கொலைமரம் தொடர்பான எண்ணங்கள் இப்போது அதிகமாகவே வந்தன. அது எப்படியும் என்னைக் கொன்று விடுமென்ற பயம் தலைதூக்கிக் கொண்டிருந்தது. எப்படியும் சாகத்தானே வேண்டும். எப்போவாக இருந்தாலென்ன எனச் சாந்தப்படுத்தினாலும் பயம் நடுங்கிக கொண்டுதான் இருந்தது. வரவர இந்த நினைப்பு வலுப்பட்டதே தவிர குறையவில்லை.
ஒருநாள் அக்கா, அண்ணன், நான் எனவும் நாங்கள் இருந்த வீட்டுப் பிள்ளைகளுமாக கொய்யாமரத்தில் காய பறித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். எனக்குக் கிடைத்தது பெரிய காயாக இருந்ததால் அதைக் கடிக்க வாய் போதாமையால் வெட்டி உண்ண வேண்டியவனாக இருந்தேன். எனைவிடவும் இளையவளான வீட்டுக்காரப் பையன் மேசைக் கத்தியால் துண்டு துண்டாக்கி உண்டான். எனக்குக் வரும்போது கத்தி கிடைக்கவில்லை. அக்காவிடம் கேட்டபோது புதிதாக வாங்கி இருந்த அறைந்தது போலிருந்தது. நான் நின்று முனைப்பக்கம் வளைவாக இருக்கும் கொண்டிருக்க தலை மட்டும் சுற்றியது. கோப்பிக் கத்தியைத் தந்தாள். கையில் வாங்கும்போதே அது பாரமாக இருந்தது. கத்தியைக் காயில் வைத்து அழுத்தக்கூடிய பலம் என்னிடம் இருக்கவில்லை. சற்றுத்தூக்கி ஓங்கி வெட்டும்போது கத்தியானது இடது கை பெருவிரலின் ஓரத்தில் பட்டு நகத்தின் ஒரு பகுதியை துண்டாக்கியது. ரெத்தம் கீழே ஒழுகிக்கொண்டு காயை, நிலத்தை, சேட்டை சிவப்பாக்கியது. மற்றைய எல்லாருமாய் சேர்ந்து துடைத்தததுடன் கையில் துணியையும் சுற்றிக் கட்டினார்கள். இந்தச் செய்கைகளில் அக்காவே பெரும் பங்கெடுத்தாள். கத்தியை எடுத்துத் தந்த குற்றஉணர்வாக, அப்பா ஏசுவார் என்ற பயமாக, என்மேலிருந்த பாசமாகக்கூட அது இருந்திருக்கலாம். எனது கோபமெல்லாம் கத்திமேல்தான் இருந்தது. புடி பெரியதாக இருந்ததால்தான் என்னால் சரியாகப் பிடிக்க முடியாமல் நகம் வெட்டுப்பட்டது. அந்தக்கத்தியை வீட்டைவிட்டுத் தொலைத்தாக வேண்டும் எனப்பட்டது. அப்பாவிடம் சொன்னபோது ஆடத் தெரியாதவன் மேட கோணல் எண்டு சொன்னானாம்” எனச் சிரித்தார். இதுபற்றி வீட்டுக்கார மாமியிடமும் சொல்லியிருந்தார். அடுத்தநாள் தற்செயலாக அங்கு வந்த ஒருவரிடம் இதுபற்றி அப்பா சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தார். இந்த அப்பா இப்படித்தான் எல்லா விடயத்தையும் சொல்லிவிடுவார். எனக்குக் கோபம் கோபமாக வந்தது. நான் அவர்களை குறுக்கறுக்கும்போது,
“ஏன் தம்பி கத்தியோட கோபமா?” எனச் சிரித்ததுடன்
“அது நல்ல புடிங்க சேர் அரச மரத்தில் போட்டது” என்றதும் எனக்குப் பகீர் என்றிருந்தது. முன்னிருந்து அவர் இருகைகளையும் அகல விரித்து இரு காதுகளை நோக்கி அறைந்தது போலிருந்தது. நான் நின்று கொண்டிருக்க தலை மட்டும் சுற்றியது.
அடுத்தடுத்த நாட்களில் அவரைக்கண்டு என் ஊர் அரச மரத்தின் துண்டுதானா அந்தப்பிடி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைத்தாலும் அது முடியாது போனது. அவரைக் கண்டு கொள்வதென்பது பெருஞ்சிரமமாகவே இருந்தது.
அந்த அரசமரத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனப்பட்டது. அது இருக்கின்றதா? இல்லையா? அதன் பின்னர் யாரையாவது கொன்றிருக்கின்றதாவென அது பற்றியறிய நாவூறிக் கொண்டிருந்த வேளையில்தான் பெரியம்மாவின் மகன் எனக்கு அண்ணன் முறையானவனை வாகனம் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கிடைத்த தந்தியை அடுத்து ஊர் சென்றோம்.
இரவோடிரவாக மலையை விட்டிறங்கி சமவெளிப் பிரதேசத்தில் ஓடிக் கொண்டிருந்தோம்.
நிறைய நிறையவே மாறிப்போயிருந்தது ஊர். பாலைவனப் பிரதேசம் போல காய்ந்திருந்தது வெயில் தோலைச் சுட்டுப் பொசுக்கி விடுமாப் போல இருந்தது. ரெத்தங் கொதித்துக் கொளகொளவென வயிற்றுள் சத்தஞ் செய்தது.
நகரில் இறங்கி ஊர்ப்பக்கம் செல்லும் சிறிய வேனில்சென்று கொண்டிருக்கும்போது, வாவியைக் கடக்கவென அமைக்கப்பட்டிருந்த கறுப்புப்பாலம் பிரமாண்டமாக இருந்தது. அதன்கீழ் சொறி முட்டைகள் மிதந்து கொண்டிருந்த வாவியில் நிறையத் தோணிகள் நின்றிருந்தது. ஒவ்வொரு தோணியிலும் இருவர் இருவராக இருந்தார்கள். ஒருவர் வலை வீச மற்றவர் துடுப்பினால் வலித்துக்கொண்டிருந்தார். அந்தச் சொறிமுட்டைகள் அழகாய் அசைந்து கொண்டிருந்தன. குடைபோல மேல் பகுதியும், சடைமுளைகளைப் போல கீழ்ப்பகுதியில் நீட்டிக்கொண்டிருந்த பகுதிகளை அசைத்தே நகர்ந்தது. அது உடலில்பட்டால் அரிப்பெடுக்கும். அப்படியான திரவமொன்று அதில் இருந்தது. அதனால்தான் அது சொறிமுட்டையென வழங்கப்பட்டிருக்க வேண்டும். இப்பாலத்தினூடு முன்னர் பல தடவைகள் பயணித்திருப்பினும் நீண்டகால இடைவெளியின் பின்னர் செல்வது புதிய பிரதேசமொன்றில் பயணித்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது.
ஆஸ்பத்திரிக்கு முன்னால் வேன் நின்றதும் அப்பா இறங்கச் சொன்னார். நான் மறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த அரசமரத்தைத் தேடிக் கண்கள் தானாகவே திரும்பியது. கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தபோதுதான் அந்த இடம் வெட்டவெளியாய்த் தென்பட்டது. எங்கிருந்தென அறிய முடியாத சந்தோசமொன்று என்னுள் இறங்கியதா, பொசிப்பற்றுக் கிடந்தது எழுந்து கொண்டதாவெனத் தெரியாவிட்டாலும் ஒரு மகிழ்ச்சி தாண்டவமாடியது.
“அப்பா அரச மரத்த வெட்டித்தாங்க” கைகளைத் தட்டி முழங்காலை மடக்கி உடலைப் பின்னுக்காக்கி நான் சத்தம் போட்டபோது
“அதுக்கென்ன சத்தம் போடாம் வா, அங்க எல்லோரும் பாத்துத்து இருக்காங்க”
பெரியம்மாவின் ஒழுங்கைக்குள்ளால் நடந்தோம். என்னிடம் எனது உடுப்புக்கள் வைக்கப்பட்டிருந்த சிறிய பேக் மட்டும் இருந்தது. தனித்தனியாக அவரவர் உடுப்புக்களை எடுக்கவும் தனித்தனியே அவரவர் வேலைகளைச் செய்யவுமென அப்பா பழக்கி இருந்தார். பெரியம்மா வீட்டுக்கேற்றுக்கு அருகில் நிறையப்பேர் கூட்டமாய் இருந்தார்கள். எல்லார் முகங்களிலும் சோகம் தெரிந்தது. அப்பா, அக்கா, அண்ணன் எல்லார் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தேன். அவர்கள் முகங்களும் சோகத்தில்தான் இருந்தது. அண்ணனின் கண்கள் கலங்கி இருந்தது. அவனின் வயதுதானே செத்துப்போன அண்ணனுக்கும். என் முகத்தைப் பார்க்கக் கண்ணாடி இல்லை. ஆனாலும் சந்தோசமாகத்தான் இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அரச மரத்தைத் திரும்பித் பார்த்துக்கொண்டே நடக்கிறேன்.
“ஐயோ அத்தான் புள்ளயப் பறிகொடுத்த பாவியாயித்தனே” பெரியம்மாவின் சத்தம் கேட்டபோதுதான் பார்த்தேன் வாசலுக் கருகில் வந்துவிட்டோம். ஆனால் நான் அரச மரத்தடியிலேயேதான். பெரியம்மா அப்பாவைப் பார்த்துத்தான் கத்தினாள். அந்த சத்தத்தில்தான் நானும் இங்கு முளைத்தேன்.
பிரபா அண்ணனை தலையில் கெல்மெட் போட்டதுபோல வெள்ளைத்துணியால் கட்டி இருந்தார்கள். புயலில் ஒடிந்து, வீழ்ந்திருந்த அரசமரக்கிளையை இவர்தான் வீட்டுக் இழுத்து வந்தவர்.
‘கொள்ளிக்குத் தேவதானே நல்லா எரியும்” என்றார்.
இழுத்துக்கொண்டு போவதில் எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் அதை எரிப்பதில் சரியான சந்தோசமாக இருந்தது. அந்த சந்தோசம் இப்போது மேலோங்கி இருந்தது.
பெரியம்மா அருகில் வரும்படி அழைத்தாள்.
“பிரபா மகனே பாருடா தம்பிய, எப்பிடி வளர்ந்திருக்கிறான், கண்ண முழிச்சிப் பாருடா” என்றவள் எனை மடியில் அமர்த்திக்கொண்டு,
“உண்ட அண்ணன் போய்த்தானே.
நீ பெரியாளா வந்ததப் பாக்கமே போய்த்தானே.
எமன் பஸ்சில வந்தல்லோ
கொண்டு போனான்
அரிசி வாங்கி வாறெண்ட மகன்
அநியாயமாய்ப் போய்த்தானே”
என கதைகளைச் சொல்லி சொல்லியே ஒப்பாரி வைத்தாள். என் நினைவுகலெல்லாம் அரச மரத்திலேயே ஒட்டி இருந்தது.
மெல்ல எழுந்து வெளியே வரும்போது நிறையக் கண்கள் எனைப் பார்த்தன. அவற்றில் சில சோடிகளைத்தவிர பலவற்றை எனக்குத் தெரியாது.
வெளியில் அப்பா யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். யாரெனச் சரியாகக் கூறமுடியாவிட்டாலும், பழைய காலமதில் கண்டிருக்க வேண்டுமெனப்பட்டது. இப்படித்தான் நிறையப்பேர் ஏதேதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். அண்ணனையும் அக்காவையும் காணவில்லை. அப்பாக்கருகில் சென்று அமர்ந்து கொண்டேன். ஏதோ பாடசாலை சம்பந்தப்பட்ட கதைதான் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கதைகளின் இடையில் வந்த விடயம்தான் அவர்கள் கதையுள் எனையும் இழுத்தது.
“ரோட்டெல்லாம் பெரிசாக்கி, மதிலெல்லாம் உள்ள தள்ளி, இந்த அரச மரத்த வெட்டி இப்படியே நெடுக. இடையில் குறுக்கிட்டேன்.
“அங்கிள் ரோட்டப் பெரிசாக் கத்தான் அரச மரத்த வெட்டினாங்களா” இடையில் குறுக்கிட்ட என்னை யார் எனக் கண்ணால் கேட்டார். அப்பா சொன்னார் “இதுதான் கடைசி மகன்’ பிறகுதான் அவர் பதில் சொன்னார்.
“ஓம் தம்பி”
“வெட்டினதை என்ன செய்தாங்க”
“அதுல எங்க உள்ளுக்குள்ள பொந்து மாதிரி இருந்தது. காய்ஞ்சிபோன கந்துகளை கொத்தி எல்லாரும் கொள்ளிக்குக் கொண்டு போய்த்தாங்க”
“அதப் பலகைக்குப் புடி போடுறதுக்குப் பாவிக்கேலாதா”
“அது அப்படிப் பாவிக்கிற நிலையில இல்லப்பன்” அப்பா குறுக்கிட்டு
“இவன் இப்படித்தான் நிறையவே குறுக்குக் கேள்ளி கேட்பான், அந்தா அண்ணாச்சி நிக்கிறாரு அவரோட போ” என என்னை அனுப்பினார்.
மொத்தத்தில் மரம் இல்லாமல் போய்த்து அந்தக் கத்திப்புடி இந்த மரத்தில் செய்ததும் இல்ல.
மரம் செத்துப்போன மகிழ்ச்சியில் மரம் இருந்த இடத்தை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தபோது அண்ணன் தோளில் கை போட்டு அழைத்துப் போனான்.
– 2001, தேனகம்.
– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.
| எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
வளர்கவி
June 29, 2026
காயலாங்கடை
நா.ரங்கராசன்
June 29, 2026
எதுவும் மாறல
மனோகர் மைசூரு
June 29, 2026