தேவனைத் தேடி வந்தவள்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 3,238

அமுதவல்லி:
கும்பகோணம் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பு கடந்த ஆண்டு முடித்தேன். கடந்த ஓராண்டாக கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தேன். வங்கிக்குச் செல்லும் போதெல்லாம் என்னை ஒருவன் அடிக்கடி பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். ஒரு மாதத்திற்குப் பிறகு, அவன் என்னை நெருங்கி வந்து என்னிடம் ஆசையாகப் பேசினான். அடுத்து ஒரு நாள் எனக்கு எனது பிறந்த நாளில் ஒரு அழகிய கைக்கடிகாரத்தைப் பரிசாகத் தந்துவிட்டு, நான் எதிர்பாராத நேரத்தில் என் கன்னத்தில் முத்தமிட்டான். அதன் பிறகு அவனை எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. நான் வங்கிப் பணி முடிந்த பின் அடிக்கடி அவனை சந்திக்க ஆரம்பித்தேன்.
ஒரு நாள் அவன் என்னை ஒரு திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றான். திரையரங்கில் மிக மிகக் குறைவானவர்களே படம் பார்க்க வந்திருந்தனர். படம் போடத் தொடங்கியதும் அவனது கைகள் என் உடல் எங்கும் நடமாடத் தொடங்கியது. அதுவரை கட்டுப்பாட்டோடு அவனிடமிருந்து சற்று விலகியே இருந்த நான், அதன் பின் எனது கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஆரம்பித்தேன். இருட்டான சூழல், அருகில் ஆளில்லாத நிலை, இளமைக்குத் தோதான படக் காட்சிகள் என்னை தடுமாற வைத்தது. நான் கிறங்கிப் போனேன். அதன் பின் அவனது நடவடிக்கைகளுக்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. நான் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய் மாறிப்போனேன்.
எனது அலுவலகப் பணிகளில் அலட்சியம் அதிகமாக, வங்கி நிர்வாகி என்னை வங்கியில் இருந்து வெளியேற்றி விட்டார். 10 நாட்களுக்கு முன்பு, அவன் என்னிடம்,’ சென்னைக்குச் சென்று அவனது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கலாம்,’ என்று சொல்ல, நானும் அவனுடன் சென்றேன். இந்த விஷயம் எதுவும் எனது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது.
சென்னையில் போரூர் அருகே உள்ள அவனது உறவினர் வீட்டில், தனி அறையில் அவன் என்னை தங்க வைத்தான். இரண்டு நாட்கள் அவன் என்னை சுகப்படுத்தினான். நான் சுகவாசி ஆனேன். மூன்றாம் நாள் அவனது செய் கைகளில் லேசான மாற்றம் தெரிந்தது. அந்த வீட்டில் குடும்பமாக எவரும் வசிக்கவில்லை. ஒரே ஒரு நடுத்தர வயதுக்காரர் மட்டும் அந்த வீட்டின் திண்ணையில் எப்போதும் அமர்ந்தபடி இருந்தார்.
இரவு 9:00 மணிக்கு இருவரும் படுத்தோம். அவன் அன்று இரவு 10 மணி அளவில் படுக்கையில் இருந்து எழுந்தான். மெல்ல என்னைப் பார்த்தான். நான் நன்கு தூங்கி விட்டேனா இல்லையா என்பதை அறிவதற்கான முயற்சியாக அவனது பார்வை இருந்தது. அவன் மெல்ல ஓசைப்படாமல் நடந்து சென்று, வாசல் கதவைச் சாத்திவிட்டு வெளியே சென்று, திண்ணையில் அமர்ந்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
அவர்களின் பேச்சு எனக்கு சரியாகப் புரியாததாக இருந்தது. நான் உடனே மெல்ல எழுந்து கதவருகே சென்றேன். அப்போது அவர்களின் பேச்சு நன்றாகப் புரியும்படியாக இருந்தது. அவனுடன் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது, அந்த வீட்டின் சொந்தக்காரரா பக்கத்து வீட்டுக்காரரா அல்லது வேறு யாராவதா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் என்னை வைத்து, லட்சம் லட்சமாக சம்பாதிக்க திட்டமிட்டது மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்தது.
இனி இவனை நம்பி இங்கே இருப்பது எந்த வகையிலும் நல்லதல்ல என்பதை எனது உள் மனம் எனக்கு உணர்த்தியது. இவன் நன்றாக ஒரு திட்டத்தோடு தான் என்னைக் காதலிப்பது போல் நாடகம் நடத்தி, நன்றாக ஏமாற்றி விட்டான் என்பது புரிந்ததும் மனம் மிகுந்த வேதனையை அடைந்தது. இரவு முழுவதும் தூக்கம் இல்லை.
விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்தேன். அவன் என்னருகே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். நான் கொண்டு வந்திருந்த பயணப்பையை பத்திரமாக மெல்ல எடுத்து வைத்துக்கொண்டு, அதனை எனது தோளில் மாட்டிக்கொண்டேன். இதயம் வர்ஷா புயலைப் போல் 120 கிலோமீட்டர் வேகத்தில் அடித்துக் கொண்டும், துடித்துக் கொண்டும் இருந்தது. நான் வாசற் கதவைத் தாண்டி, திண்ணைப் பகுதிக்குச் செல்லும் வரை என்னுள் படபடப்பு படு வேகத்தில் இருந்தது.
வீட்டிற்கு எதிரே இருந்த கழிவறையின் கதவுகள், என்னைப் போலவே படக் படக்கென்று சப்தமித்தபடி காற்றின் வேகத்தில் முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருந்தது. நான் எனது துண்டினை எடுத்து எனது தலைக்கு முக்காடு போட்டுக் கொண்டேன். அப்போது என்னை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. நான் பேருந்து நிலையத்தை தேடிக்கொண்டே நடந்தேன். வழியில் ஒரு தாத்தா சுருட்டை பற்ற வைத்துக் கொண்டு, அதனை மெல்ல மெல்ல ஊதி ஊதி இழுத்தபடி ஒரு மின்னல் மோகினியாய் அங்கே வலம்வந்து கொண்டிருந்தார். நான் அவரிடம் பேருந்து நிறுத்தத்திற்கு வழி கேட்டேன். அவர் சொன்னதன் அடிப்படையில் சிறிது தூரம் நடந்தேன். என்னை பின்தொடர்ந்து ஒரு கருப்பு உருவம் வந்து கொண்டிருந்தது. நான் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மேலே சென்று கொண்டிருந்தேன்.
நான் பேருந்து நிலையத்தை அடைந்த பின் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் பதற்றம் இன்னும் இருந்தபடி தான் இருக்கின்றது. நான் அங்கிருந்து திருத்தணி செல்லும் பேருந்தில் ஏறி திருத்தணியில் இறங்கினேன். எங்கள் ஊரைச் சேர்ந்த மாரிக்கண்ணுவிடம் நான் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.
அதிகாலை ஐந்தரை மணி அளவில் மாரிக்கண்ணு என்னருகே நின்று கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தபடி இருந்தாள். அவளை விசாரித்ததில் அவள் ஆட்டுக்கறி எடுப்பதற்காக அந்த அதிகாலை நேரத்தில் வந்திருப்பதாகச் சொன்னாள். வீடு அருகில் தான் இருந்தது. அவள் எங்கள் ஊரைச் சேர்ந்த பெண். இந்த ஊரில் தான் அவள் வாழ்க்கைப் பட்டிருக்கின்றாள். இருவரும் ஆட்டுக்கறியை வாங்கிக் கொண்டு பேசிக்கொண்டே நடந்தோம். நான் என்னைப் பற்றிய விஷயத்தை ஆரம்பித்தில் சொல்லவில்லை. அவள் வீட்டிற்குச் சென்றபின் அவளிடம் விரிவாகச் சொன்னேன்.
வாசுதேவன் மாமா எனக்கு தூரத்து உறவு. அவளுக்கு அவர் சகோதரர் முறை. மாமாவை பற்றிய அனைத்து தகவல்களும் அவளுக்குத் தெரியும். மாரிக்கண்ணுவின் யோசனைப்படி, பிற்பகலில் நான் தஞ்சாவூருக்குப் புறப்பட்டேன். பாபநாசம் அருகில் உள்ள எங்கள் வீட்டிற்கு மாமா ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை வந்திருக்கிறார். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். “இப்போது மாமா என்னை இந்த நிலையில் ஏற்றுக்கொள்வாரா?” என்ற ஐயத்துடன் நான் விரைவுப் பேருந்தில் பயணித்தேன். நான் கும்பகோணம் வந்தபின் அங்கு சில மணி நேரம் பேருந்து நிலையத்திலேயே பயணிகள் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுத்தேன்.
காலை 7 மணி அளவில் நான் தஞ்சைக்குப் புறப்பட்டேன். நான் பயணித்த பேருந்து ஆலமரத்தான்பட்டி அருகே சென்றபோது, நான் ஓட்டுனரிடம் கெஞ்சிக் கூத்தாடி ஆலமரத்தான் பட்டி அரசமரத்தடியில் இறங்கிக் கொண்டேன். நான் இறங்கிய போது காலை 9 மணி. அப்போது அருகில் வயல்களில் ஏழு எட்டு ஆண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். ஆற்றங்கரை அருகில், ஒரு பாட்டியும் மாமாவைப் போன்ற சாயல் உள்ள ஒரு மனிதரும் நின்று கொண்டு என்னைக் கவனிப்பதைப் பார்த்தேன்.
திடீரென்று ஒரு சிற்றுந்துவில் வந்த நான்கு இளைஞர்கள், நான் தனியே நிற்பதைக் கண்டவுடன் வேகமாக இறங்கினார்கள். அதில் ஒருவன் வேகமாக ஓடி வந்து, என் கையைப் பிடித்து இழுத்தான். நான் உடனே ”மாமா என்னை காப்பாத்துங்க,” என்று சத்தமிட்டபடியே எனது கையை வெடுக்கென்று உருவிக்கொண்டு வேகமாக ஓடினேன். திடீரென்று பத்தடி பள்ளத்தில் உள்ள வயல்வெளியில் பொத்தென்று விழுந்தேன்.
வயலில் வேலை செய்த ஆட்கள் என்னை நோக்கியும், சிலர் அந்தச் சிற்றுந்தில் வந்தவர்களை துரத்திப் பிடிக்கவும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
எனது முழங்கால், கைகள், கன்னம் என பல இடங்களில் காயம் ஏற்பட்டு லேசாக ரத்தம் கசிந்தபடி இருந்தது. சென்னையில் இருந்தே என்னைப் பின்தொடர்ந்து சிற்றுந்துவில் வந்தவர்கள் தோதான இடம் கிடைத்தவுடன் வலுக்கட்டாயமாக என்னை சிற்றுந்துவில் கடத்திச் செல்ல இருந்ததை நினைத்தவுடன் நான் அப்படியே மயங்கி மறத்துப் போனேன். யாரோ என்னை தோளில் சுமந்தபடி தூக்கிச் செல்வது லேசாகப் புரிந்தது. அது அனேகமாக எனது வாசுதேவன் மாமாவாகத்தான் இருக்க வேண்டும். அவரது தோள்களில் துவண்டபடி நான் அப்படியே தூங்கிப் போனேன்.
பழனியம்மாள் பாட்டி:
நான் ஆலமரத்தான் பட்டியைச் சேர்ந்த 74 வயது கிழவி. எனக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் ஆகி எனக்கு 11 பிள்ளைங்க இருந்தாங்க. இப்பவும் அவங்க நல்லபடியாதான் இருக்காங்க. ஆனா எனக்குத் துணையா இப்ப இங்க இந்த ஊர்ல ஒருத்தன் கூட இல்லை. எல்லாரையும் நல்லா படிக்க வச்சேன். அவங்க எல்லாரும் இப்ப வெளிநாடுகள்ல , வேற வேற தேசத்துல இருக்கானுங்க. ஆஸ்திரேலியாவுல ஒருத்தன், சிங்கப்பூர்ல ஒருத்தன், கனடாவில் ஒருத்தன், தான்சானியாவுல ஒருத்தன்- இப்படி எல்லாரும் குடும்பத்தோட வெளிநாட்டிலேயே இருக்கானுங்க.
என்னோட வீட்டுக்காரரு, அதான் என் மச்சான் மருதமுத்து, ஆறு வருஷத்துக்கு முன்னாடியே எந்த சிக்கல் சிரமமும் இல்லாம நல்லபடியா போய்ச் சேர்ந்துட்டாரு. ஆனா அவரு செத்ததுக்குக் கூட இந்த பயலுகல்ல மூணு பேரு மட்டும் வந்துட்டு, அதுவும் அவதி அவதியா போய்ட்டானுங்க. அவனுங்களும் கருமாதிக்குக் கூட இருக்கல. மத்தவனுங்க இப்ப வர முடியாது, அப்புறம் வரேன்நானுங்க. பரதேசிப் பயலுவ. அப்பன் செத்ததுக்குக் கூட வராம அப்படி என்னடா பொல்லாத வேலை அவனுங்களுக்கு.
என் மச்சான் கொடுத்து வச்ச மகராசன். இந்த நாரப் பயலுக வரலன்னாலும் இந்த ஊர் உலகமே வந்து காரியத்தைக் கடைசி வரைக்கும் இருந்து நல்லபடியா முடிச்சுட்டுப் போச்சு. நானும் அவரு கூடயே போய்ச் சேந்துரலாம்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா ஆண்டவனாப் பார்த்து எனக்கு ஒரு நல்ல துணையா இந்த பேராண்டி வாசுதேவனை என்கிட்ட ஒப்படைச்சுட்டான். என்கிட்ட இந்தப் பேராண்டி அப்படி பிரியமா இருக்கான்.
அவன் இந்த ஊருக்கு வந்த அஞ்சு வருஷத்துல நான் நல்லா இருக்கேன். இந்த ஊரும் நல்லா இருக்கு. என்னோட 10 ஏக்கர் வயல இவன் அப்படி அம்சமா பார்த்துக்கிட்டு இருக்கான். அவன் வந்த பிறகு விவசாயமும் நல்லா இருக்கு. நல்ல விளைச்சலும் கிடைக்குது. இப்ப நான் நிம்மதியா இருக்கேன். ஆனா ஒரே ஒரு குறை மட்டும் மனசுல இருக்கு. அவனுக்கு ஒரு நல்ல குட்டிய கல்யாணம் பண்ணி வச்சிட்டா நான் நிம்மதியாப் போய்ச் சேர்ந்திடுவேன்.
இந்தப் பேராண்டிக்கு இப்ப 40 தாண்டி ஓடிக்கிட்டு இருக்கு. ஆனா பாத்தா 30 வயசு மாதிரிதான் இருக்கிறான். நல்ல உழைப்பாளி. நல்ல மனசுக்காரன். ஆனா அவனை இந்தக் கேடுகெட்ட சிறுக்கிங்க புரிஞ்சுக்காம, ஒரு வேலை வெட்டி இல்லாம விவசாயத்தப் பார்க்கிறவனுக்கு எப்படி பொண்ணக் கட்டி கொடுக்குறதுன்னு சொல்றாளுங்க.
அவன் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கான். ஆனா ஒரு வேலையும் சரியா கிடைக்கல. பின்ன அவன் என்ன பண்ணுவான்? விவசாயத்தை நல்லபடியா பார்த்துகிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கான்.
பேராண்டி அவன் ஊர்ல இருந்தப்ப, எல்லாரும் நக்கலும் நையாண்டியும் பண்ணி, அவன ஒரு வழி ஆக்கிட்டானுங்க. பத்தாதுக்கு அவனுடைய அப்பா அம்மாவும் தினமும் அவனை கரிச்சு கொட்டிக்கிட்டே இருந்திருக்காங்க.
அப்புறம் அவன் வீட்டை விட்டுட்டு, இங்க ஓடிவந்து என்னோட தங்கிட்டான்.
நான் இப்பப் பேராண்டிக்கு ஒரு நல்ல குட்டியா அமையனும்னு தெனமும் வேண்டாத தெய்வம் இல்லை. ஆனா என்னோட வேண்டுதலுக்கு ஆண்டவன் இப்பதான் இறங்கிவந்திருக்கான்.
இப்ப மூணு நாளைக்கு முன்னாடி, ஒரு சின்னப் பொண்ணு தானா அவனத் தேடி வந்து இருக்கா. அதுவும் நல்லா யோசிச்சு அவனப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டு வந்து இருக்கா. அவனப் பத்தி அவளுக்கு ஏற்கனவே நல்லாத் தெரியுமாம். சொந்தக்காரின்னு வேற சொல்றா. ஆனா அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு
இருக்கிறப்ப, எனக்கு தெரியாம இரண்டும் கண்ணாலேயே பேசிக்கிதுங்க. சிரிக்குதுங்க. சரி ரெண்டு பேரும் நல்ல பிரியமா பேசிக்கிட்டு இருக்கட்டும்னு விட்டுட்டு வந்தா, அவன் என்னடான்னா செவுத்த பாத்துக்கிட்டு நிக்கிறான். இவ என்னடான்னா உத்தரத்தப் பாத்துகிட்டு கிடக்கா. இதுங்கள புரிஞ்சுக்கவே முடியல. என்ன பண்றதுன்னு தெரியல? எப்படியோ ரெண்டும் ஒன்னா சேர்ந்துகிச்சுங்கன்னா என் கவலை தீந்துரும்.
தேவன் என்கிற வாசுதேவன்
எனக்கு வயது 42 ஆகிறது. நான் தமிழ் இலக்கியம் படித்த முதுகலைப் பட்டதாரி. எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. நான் தமிழ் படிச்சதையும் விவசாயம் பார்க்கிறதையும் எல்லாரும் கேவலமா நினைக்கிறாங்க. ஒருத்தரும் எனக்குப் பொண்ணு தரல. நான் கல்யாணமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு, விவசாயத்தைப் பார்த்துகிட்டு இருந்தேன். எல்லாரும் என்ன நக்கலும் நையாண்டியும் செய்து மனதை நோகடிக்கிறாங்க. என்னப் பெத்தவங்க கூட பொழுதினிக்கும் என்னை திட்டிக்கிட்டே இருந்தாங்க.
அதன் பிறகு வீட்டில் இருக்கப் பிடிக்காமல் நான் வீட்டை விட்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஓடி வந்து விட்டேன். நான் ஓடி வந்து விட்டேனே தவிர எங்கே போவது என்ன செய்வது என்பது தெரியவில்லை. அப்படியே கால்நடையாக நடந்து வந்து கொண்டிருந்தேன். ஆலமரத்தான் பட்டி அருகே உள்ள வேப்ப மரத்தடி சுமைதாங்கியில், நடந்து வந்த களைப்பில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். அங்கே படுத்திருந்த என்னை ஒரு பாட்டி எழுப்பி, என்னைப் பற்றி விசாரித்தார். அதன் பின் நான் பாட்டியின் புதிய வீட்டில் தங்கிக் கொண்டு பாட்டியையும் அவரது வயல்களையும் பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த சுமைதாங்கிக்கு அருகே தான் பாட்டியின் வயல்கள் அனைத்தும் இருக்கின்றது. நான் பெரும்பாலும் பாட்டியோட அந்த சிறிய ஓட்டு வீட்டில்தான் இருப்பேன். இரவு மட்டுமே புதிய வீட்டில் தங்குவேன். பாட்டியையும் என்னுடன் வந்து தங்கி இருக்கச் சொன்னேன். ஒரு பாட்டி “நான் இப்போது அங்கே வரமாட்டேன். உனக்கு ஒருத்திய கல்யாணம் பண்ணி வச்ச பிறகுதான் நான் அந்த வீட்டுக்கு வருவேன். அதுவரைக்கும் நான் இந்த ஓட்டு வீட்ல தான் இருப்பேன்,” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
அமுதவல்லி என்னைத் தேடிக்கொண்டு அரசமரத்தடி அருகே பேருந்தில் வந்து இறங்கிய போது நானும் பாட்டியும் அங்குதான் நின்று கொண்டிருந்தோம். அவள் வயலில் விழுந்து அடிபட்டு மயங்கி கிடந்தபோது, நான் தான் அவளை எனது தோளில் சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்தேன். அதன் பிறகு அவளுக்கு பாட்டியும் நானும் அவள் உடல் முழுவதும் உள்ள காயங்களை சுத்தம் செய்து அவளுக்கு
தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு அவளை இரவு முழுதும் பார்த்துக் கொண்டோம். அவள் பார்க்க, பழக நல்லவளாகத்தான் இருக்கின்றாள். ஆனால் ஏற்கனவே ஒருத்தனோடு ஓடிப் போனவள் வேறு வழி இன்றி என்னைத் தேடி வந்திருக்கின்றாளோ என்ற ஐயமும் என்னுள் அவ்வப்போது வந்து போகின்றது. அதனால் நான் எனது ஆசையை அன்பை அவளிடம் இன்னும் முழுமையாகக் காட்டவில்லை.
அன்று அவள் என்னை முழுமையாக வெகுநேரம் வெறித்தனமாகப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளின் பார்வையில் மென்மையும் உண்மையும் ஒருசேர ஒன்றி இருந்ததை நான் உணர்ந்தேன். ஒரு பெண்ணின் துணையின்றி ஓர் ஆண் வாழ்ந்தால் அது முழுமையான வாழ்வாக நிச்சயம் அமையாது. ஆனால் அந்தப் பெண் அன்பானவளாக இல்லையென்றால் அதைவிட பெரிய கொடுமை வேறு இல்லை என்பதையும் நான் அறிவேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு திங்கட்கிழமை காலை பாட்டி, நாங்கள் தங்கியிருக்கும் அவரது புது வீட்டிற்கு வந்தாள். எங்களது திருமணத்தைப் பற்றி அவள் எங்களிடம் கலந்து ஆலோசனை செய்தாள். கடைசியாக பாட்டி எங்களைப் பார்த்துச் சொன்னாள்,
“வர்ற புதன்கிழமை ரொம்ப நல்ல நாளா இருக்கு. அன்னைக்கு நம்ம ஊரு அய்யனார்கோவில்ல உங்களுக்கு கல்யாணம். என்ன சரியா? இந்த ஊர்ல உள்ள எல்லாரையும் நீங்க ரெண்டு பேரும் நேரா அவங்க வீட்டுக்குப் போயி கூப்பிட்டுட்டு வாங்க. விடியற்காலைல நான் இங்க வரேன். அப்ப நிச்சயதார்த்தசடங்கு இருக்கு. மத்தியானம் உங்களுக்கு கோவில்ல கல்யாணம். என்ன சொல்றீங்க?” என்று கேட்டாள். இருவரும் பாட்டி முன்னிலையிலேயே சந்தோஷத்தில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டோம். பாட்டி எங்களை விட அதிகம் சந்தோஷப்பட்டாள்.
புதன்கிழமை விடியற்காலை:
அமுதவல்லி குளித்து முடித்து கிராமத்தின் மேற்கே தனியாக இருக்கும் அந்த புது வீட்டின் கூடத்தில் தனியாக நின்று கொண்டிருந்தாள்.
அப்போது நானும் கீழத்தெரு பழனியம்மாள் பாட்டியும் வீட்டிற்குள் நுழைந்தோம். அமுதவல்லி பாட்டியை பார்த்ததும் பரவசம் அடைந்து பாட்டியை கட்டி அணைத்துக் கொண்டாள். அவள் பாட்டியின் காலில் விழுந்து வணங்கினாள். பாட்டியும் அமுதவல்லியைக் கட்டி அணைத்தபடி முத்தமிட்டாள். உள்ளே சென்ற நான், புது மாப்பிள்ளையாய் பட்டு வேட்டி பட்டு சட்டையுடன் பவ்வியமாக வந்து அமுதவல்லியோடு நின்றேன்.
“நீங்க ரெண்டு பேரும் இந்த சாமிமாடத்துக்கு முன்னாடி வந்து நில்லுங்க” பாட்டி எங்களைப் பார்த்துச் சொன்னாள். நாங்கள் நின்றோம்.
பாட்டி என்னிடம் ஒரு மாலையை எடுத்துக் கொடுத்தார். நான் இந்த மாலையை அமுதவல்லியின் கழுத்தில் சூட்டினேன். அடுத்து பாட்டி அமுதவல்லியிடம் ஒரு மாலையை கொடுத்தாள். அவள் அதை எனது கழுத்தில் சூட்டினாள். பாட்டி சொன்னபடி இருவரும் மலைகளை மாற்றிக் கொண்டோம்.
பாட்டி தான் கொண்டு வந்திருந்த இரட்டை வட தங்கச் சங்கிலியை கையில் எடுத்து, அதனை தனது இரு கைகளாலும் ஏந்தி உயரப் பிடித்து, கண்களை மூடி, இறைவனை வேண்டிய படி சில மணித்துளிகள் தியானித்தார். பின் பாட்டி சுவர்க் கடிகாரத்தில் மணியைப் பார்த்தார்.
“டேய் பேராண்டி. இப்ப அருமையான நேரம். இந்தாடா இந்த தங்கச் சங்கிலிய அமுதவல்லி கழுத்துல நீ போடு, இது நீ அமுதவல்லிக்கு கொடுக்கிற நிச்சயதார்த்த பரிசு” எனச் சொல்ல, நான் ஆனந்த பரவசத்துடன் அந்த சங்கிலியை அமுதவல்லியின் கழுத்தில் போட்டேன். சாமி மாடத்தில் இருந்த மூன்று தெய்வங்களையும் மூவரும் மேற்கு பார்த்தபடி நின்று அமைதியாக தியானித்தபடி நிற்க, அந்த தெய்வங்கள், எங்கள் மூவருக்கும் ஆனந்தமாய் ஆசிகள் வழங்கினர். பழனியம்மாள் பாட்டி எங்களை ஆசையோடும் அன்போடும் ஆரத் தழுவியபடி கட்டிப்பிடித்துக் கொண்டு,
“இப்பலாம் உத்தரப்பிரதேசம் பீகார் போன்ற வட மாநிலங்களில் 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்ததைப் போல இரண்டு மடங்கா ஜனத்தொகை பெறுகி போச்சுதாம். ஆனா நம்ம தமிழ்நாட்டுல வீட்டுக்கு ஒன்னு ரெண்டு இருந்தது போயி, இப்ப ஒன்னும் இல்லாமப் போய்கிட்டு இருக்கு. நீங்க ரெண்டு பேரும் என்ன மாதிரி நிறைய பிள்ளைங்களை பெற்று பேரும் புகழுமா வீரத்தமிழனா, வீரத் தமிழச்சியா, எதுக்கும் அஞ்சாம வாழணும்,” என்று சொல்லி மனதார வாழ்த்தினாள். பாட்டியின் கண்களில் இருந்து ஆனந்தம் சில துளிகள் கண்ணீராய் கனப் பொழுதில் வெளிவந்தது.
அன்று மதியம் ஐயனார் கோவிலில் எங்கள் திருமணம் இனித்தே நடந்தது.
அன்று இரவு: இரவு 8 மணிக்கு சாப்பிட்டபின் அமுதவல்லி என்னிடம் வெற்றிலைப் பாக்கை மடித்துக் கொடுத்தாள். பின், சமையல் அறைக்குச் சென்று பசும்பாலைக் காய்ச்சி எடுத்து வந்தாள். அதனை எனக்கு அருகில் அமர்ந்தபடி ஆற்றினாள். மிதமான சூட்டில் இருக்கும் போது அதனை என்னிடம் நீட்டினாள்.
“நீங்க பாதிய குளிச்சிட்டு எனக்குக் கொஞ்சம் மீதி வையுங்க மாமா” என்றாள். நான் பால் முழுவதையும் குடித்துவிட்டு அமுதவல்லி யிடம் திரும்பி,”நீ போயி சமையல் கட்டுல மிச்சம் இருக்கிற பாலைக் குடிச்சுக்கடி” என்றேன்.
அமுதவல்லி சற்று ஏமாந்தே போனாள். அதன் பிறகு அவள் சமையல் கட்டுக்குப் போகவும் இல்லை. பாலைக் காய்ச்சிக் குடிக்கவும் இல்லை. அமுதவல்லி என்னிடம் செல்லமாக கோபித்துக் கொண்டாள்.
“போங்க மாமா நீங்க ரொம்ப மோசம் எனக்கு கொஞ்சம் கூட வைக்காம குடிச்சிட்டீங்க. சரி சட்டைய கழட்டிட்டு படுங்க, அமுக்கி விடறேன்,” என்றாள்.
நான் சட்டையைக் கழட்டிப்போட்டுவிட்டு கட்டிலில் படுத்தேன். அமுதவல்லி எனது மார்பில் கைகளால் ஓங்கி நங்கு, நங்கு என்று மூன்று முறை வேகமாகக் குத்தினாள். பிறகு
”என்ன மாமா உங்க உடம்பு இரும்பு மாதிரி இருக்கு? எனக்குத்தான் கைய வலிக்குது. எப்பா என்ன உடம்பு போங்க? உங்களுக்கு வலிக்கவே இல்லையா மாமா?” என்று கத்தினாள்.
நான் சிரித்தேன். அமுதவல்லி எனது மார்பில் முகம் வைத்து செல்லமாகக் கடித்தாள்.
“ஏய் போதும்டி. வலிக்குதுடி. விடுடி.”என்று நான் சொல்ல, அமுதவல்லி தொடர்ந்து அழுத்தமாகக் கடித்துக் கொண்டே இருந்தாள்.
நான் கோபத்தில் எழுந்து அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தேன். அவள் என் கழுத்தைக் கட்டிப்பிடித்தபடி, கேவி அழுதாள். நான் அவளது கன்னத்தை மெல்லத் தடவிக் கொடுத்தபடி இருந்தேன். திடீரென்று கலகலவென சிரித்தபடி அமுதவல்லி எழுந்து,
“மாமா என்ன பயந்துட்டீங்களா? உங்களுக்கு சூடு சொரணை எல்லாம் இருக்குதான்னு பார்த்தேன் மாமா. அதனால தான் நான் கடிச்சேன்”என்று சொல்லிவிட்டு மீண்டும் கலகலவென சிரித்தாள்.
அவளை நான் அப்படியே செல்லமாகக் கிள்ளிவிட்டு, பின் இழுத்து அணைத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் இருவரும் அப்படியே தூங்கிப் போனோம்.
அன்று நள்ளிரவு எங்களுக்கு நல்ல இரவாகவே இனிமையாகவும் இதமாகவும் ஏற்றம் நிறைந்ததாகவும் கழிந்தது.
நான்கு மாதங்களுக்குப் பிறகு:
“சரிடி வள்ளி நாம ரெண்டு பேரும் உங்க ஊருக்குப் போயி உங்க அப்பா அம்மாவப் பார்த்து ஆசி வாங்கிட்டு வரலாமாடி?”
கட்டிலில் சாய்ந்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்த அமுதவல்லியிடம் நான் கேட்டேன்.
“அய்யய்யோ, அதெல்லாம் வேண்டாம் மாமா. நான் இப்ப ஊருக்குப் போனா என் அண்ணன்காரனும், சித்தப்பனும் “ஓடு காலி நாய்க்கு இங்க என்னடி வேலை”ன்னு சொல்லி என்னக் கொன்னே போற்றுவானுங்க. அதனால இப்பக்கி அங்கெல்லாம் போக வேண்டாம். அப்புறம் ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு, நமக்குக் குழந்தை குட்டின்னு ஆன பிறகு போவோம் மாமா” என்றாள் அமுதவல்லி. நான் அமுதவல்லியை ஆசையோடு பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.
அமுதவல்லி என்னை அழைத்துக் காதருகே சொன்னாள்,
“மாமா இப்ப என் வயித்துல நாலு ஜீவன்கள் என்ன உதைச்சுகிட்டு இருக்கானுங்க. நீங்க வந்து என்னன்னு கேளுங்க மாமா” என்றாள். நான் ஆனந்தத்தில் அமுதவல்லியின் வயிற்றைத் தடவிக் கொடுத்தபடி ஆசை முத்தங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தேன்.
“சரிடி இந்த நல்ல செய்தியை நம்ம பாட்டி கிட்ட சொல்லனும். அவங்க எங்கடி?” நான் அமுதவல்லி இடம் கேட்டேன்.
“பாட்டியா மாமா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க தோட்டத்துப் பக்கம் போனாங்க அந்த பக்கமா பாருங்க,” என்றாள் அமுதவல்லி.
இப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது .. பாட்டி அங்கே வந்தாள். அமுதவல்லி பாட்டியிடம் கேட்டாள்.
“பாட்டி ஒரு நாலு பசங்க பேரச் சொல்லுங்க?”
பழனியம்மாள் பாட்டி அமுதவல்லியை அன்புடனும் ஆர்வத்துடனும் பார்த்துக்கொண்டே சொன்னாள்,
“தமிழ் மணி, தமிழ்ச் சேரன், தமிழ் அமுதன், தமிழ் நேசன், என்ன போதுமாடி இல்லை இன்னும் சொல்லவா?”
“இப்போதைக்கு இது போதும் பாட்டி. அடுத்தடுத்த வருஷங்களில் அப்புறம் நாங்க உங்ககிட்ட கேட்கிறோம் பாட்டி”
இருவரும் பாட்டியிடம் விஷயத்தை சொன்னபடியே பாட்டியின் காலில் விழுந்து வணங்கினோம்.
பாட்டி எங்கள் இருவரையும் வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றாள். நானும் அமுதவல்லியும் கட்டிலில் அமர்ந்திருக்க, பாட்டி அவளது அறைக்குள் சென்றாள். ஐந்து நிமிடங்கள் கழித்து பாட்டி எங்கள் அருகில் வந்த போது அவள் கைகளில், வீடு மற்றும் நிலங்களின் பத்திரங்கள் இருந்தன. பாட்டி அந்த பத்திரங்களை எங்கள் இருவரிடமும் ஒப்படைத்தார். பிறகு பாட்டி பேச ஆரம்பித்தாள்.
“நீங்க ரெண்டு பேரும் என்னோட சொத்துக்கள். இந்த வீடும் நிலங்களும் இனி உங்களோட சொத்துக்கள். அதுக்கான பத்திரங்கள் எல்லாம் இதுதான். அதை முறைப்படி உயில்ல நான் எழுதி இருக்கேன். இனி நீங்க எதுக்கும் கவலைப்படாம நல்லபடியா சந்தோசமா இருக்கணும். இனி இந்த வீடு முழுவதும் குழந்தைகளா நிரம்பி வழியனும். நான் இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்.” என்று சொல்லிக் கொண்டே பாட்டி எங்கள் இருவரையும் மாறி மாறி கட்டிப்பிடித்து முத்தங்களை கொடுத்தபடி இருந்தாள். நாங்கள் மெய் சிலிர்த்து பாட்டியையே பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஆனந்தப் பரவசத்தில் பாட்டி அப்படியே மயங்கிக் கீழே சாய்ந்தாள். அதன் பிறகு பாட்டி மீண்டும் எழவேயில்லை.
குறிப்பு: இக்கதை எனது “இசையின் எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் நான் தங்களுக்கு அனுப்பும் 6ஆவது சிறுகதை. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எங்கெங்கு காணினும் சக்தியடா
எஸ்.மதுரகவி
June 20, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 20, 2026
அப்பாவின் பட்டுவேஷ்டி
ஷைலஜா
June 20, 2026
