இரு நகரங்கள் இரு வேறு வாழ்க்கை
கதையாசிரியர்: ஜி.விஜய்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2026
பார்வையிட்டோர்: 2,885

சென்னையில் அவனுக்கு சொந்தமாக வீடு இருந்தது அதனால் வாடகை தர வேண்டிய தேவை இருந்ததில்லை. சொந்தமாக ஒரு காரும், ஒரு இருசக்கர வாகனமும் இருந்தது. அவனுடைய பணியிடத்திலிருந்து மிக அருகில் அவனுடைய வீடும் இருந்தது. அதனால் குடும்பத்துடன் சிறிது அதிக நேரம் செலவு செய்ய முடிந்தது. தினமும் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு காலையில் அழைத்து செல்வதும், மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வருவதும் அவனுடைய காரில் தான். அந்த கார் பயணத்தை அவன் மிகவும் ரசித்தான். அருகிலேயே பல வகையான கடைகள் அங்கு மளிகை சாமான்களையும், காய்கறி, பழ வகைகளையும் பெற முடிந்தது. வீட்டிற்கு அருகில் ஒரு காய்கறி சந்தையும் இருந்தது. அதனால் பல வகையான காய்கறி, கனி வகைகளையும், கீரை வகைகளையும் அவனால் வாங்க முடிந்தது.
உடல் நலம் குன்றிய பொழுது மருத்துவரை காண அருகிலேயே பல மருத்துவமனைகள் இருந்தன. பண வசதி இருந்ததால் எத்தகைய மருத்துவ நிபுணரையும் ஒரே நாளில் காண முடிந்தது.
வீட்டுப் பணிகளை செய்வதற்கு ஒரு பெண்ணை பணி அமர்த்தி இருந்தான். அவள் பாத்திரங்களை கழுவுவதற்கும் வீட்டின் தரையை கூட்டிப் பெருக்குவதையும் தினமும் செய்து வந்தாள். குளியலறையையும், கழிப்பறையையும் சுத்தம் செய்வதற்கு பல நிறுவனங்கள் இருந்ததால் மாதத்திற்கு ஒருமுறை அவர்களை அழைத்து சுத்தம் செய்து கொள்ள முடிந்தது.
இது தவிர மளிகை சாமான்களையும், பிற பொருள்களையும் வீட்டிற்கே டெலிவரி ஸ்விக்கி, zomato போன்ற பல நிறுவனங்கள் இருந்தன. இது தவிர பல வகையான உணவகங்களும், திரையரங்குகளும் அந்த பகுதியில் இருந்தன.
சூரிய ஒளி அபரிமிதமாக கிடைத்தது. இறைவனை வழிபட விரும்பினால், சென்னையை சுற்றி பல இடங்களில் பல கோவில்கள் இருந்தன. இறுதியாக தான் பிறந்து வளர்ந்த மாநிலத்தில் தன் மொழியை பேசும் மக்களுடன் அவன் வாழ்ந்து வந்தான். தமிழ்நாட்டுக்குள் அவன் தன்னை அந்நியனாக ஒருபோதும் எண்ணியதே இல்லை.
இப்படி வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையை விட்டு ஏன் இன்னொரு வாழ்க்கை முறைக்கு மாறினோம் என்று அவன் யோசித்தான்.
இப்பொழுது அவன் இங்கிலாந்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான். பணி நிமித்தமாக ஏழு வருடங்கள் இங்கிலாந்தில் ஏற்கனவே வாழ்ந்து இருக்கிறான். அவனுடைய குழந்தைகள் சிறு வயது முதல் இங்கிலாந்தில் வசித்திருக்கிறார்கள். அவர்களுடைய முதல் பள்ளிப் பருவமும் இங்கு தான் தொடங்கியது.
இதனால்தான் என்னவோ 2020இல் கொரோனா பேரிடருக்கு முன் அவன் சென்னைக்கு திரும்பிய பொழுது குழந்தைகளால் சிபிஎஸ்சி கல்வி முறையை சமாளிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் இரு வருடங்கள் பள்ளிகள் மூடப்பட்டு தொலைதூர கல்வி முறையில் குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டதால் அவனுடைய குழந்தைகளால் இந்த கல்வி முறைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள இயலவில்லை. இதனால் பெருத்த கவலையும், சோர்வும், துயரத்தையும் அடைந்தார்கள்.
இதன் விளைவு தங்களுக்கு பழக்கப்பட்ட இங்கிலாந்து வாழ்க்கைக்கு வாழ்க்கைக்கு திரும்பி விடலாமா என்று தினமும் அவனை நச்சரிக்க தொடங்கினார்கள் அதன் விளைவு ஒரு நாள் அவன் குடும்பத்துடன் மீண்டும் இங்கிலாந்து செல்வது என முடிவெடுத்தான்.
லண்டனில் குடும்பத்துடன் வாழ்வதற்கு மிகப்பெரிய தொகையை செலவிட வேண்டி இருந்தது. இரண்டு அறைகள் கொண்ட 650 sq ft உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு மாத வாடகை 2000 பவுண்ட். இதைத் தவிர இங்கிருக்கும் நகராட்சிக்கு அந்த வீட்டின் தன்மையை பொறுத்து மாதம் இருநூறு பவுண்டு கொடுக்க வேண்டும்.
லண்டன் நகருக்குள் பொதுத்துறை போக்குவரத்து சிறப்பாக செயல்படுவதால், பல அடுக்குமாடி குடியிருப்புகளில் எல்லோருக்கும் கார் நிறுத்தும் வசதி இருக்காது. அப்படியும் ஒருவர் சொந்தமாக கார் வைத்திருக்க விரும்பினால் கார் நிறுத்தத்திற்கு மட்டும் மாதத்திற்கு 100 முதல் 150 பவுண்டுகள் வரை கொடுக்க வேண்டி வந்தது. அதனால் கார் வாங்கும் கனவை அவன் தள்ளிப் போட்டான். இங்கு அவனிடம் இரு சக்கர வண்டியும் கிடையாது.
இங்கு குழந்தைகளை பொதுத்துறை பள்ளிகளில் சேர்க்க நகராட்சியிடம் தான் விண்ணப்பிக்க வேண்டும். பல காரணிகளைக் கொண்டு அவர்கள் தான் குழந்தைகளுக்கான பள்ளியை தேர்வு செய்வார்கள். அப்படி குழந்தைகள் வீட்டிலிருந்து 20 நிமிடத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்திற்கு நடந்தே செல்ல செல்வார்கள்.
இங்கு பல வகையான கடைகள் இருந்தாலும் இந்திய மளிகை பொருள்களை வாங்குவதற்காக ஒவ்வொரு பகுதிகளும் ஒரு சில கடைகளை இருந்தன. அதிலும் வடநாட்டு கடைகள், தென்னாட்டு கடைகள் என்று பலவிதம் இந்திய காய்கறிகளை ருசிக்க மிகுந்த விலையை கொடுக்க வேண்டி இருந்தது கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், அவரைக்காய், பாகற்காய் என்று எந்த காய்களை எடுத்தாலும் அதன் விலை ஒரு கிலோ ஆறிலிருந்து எட்டு பவுண்டு வரை இருந்தது. நம்முடைய கனி வகைகளை காண்பது அரிதிலும் அரிது. மா, கொய்யா, பலா, சீதா, நாட்டு வாழை என பல பழங்கள் சில பருவ காலங்களை பொறுத்து சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். அதனுடைய விலையை பல மடங்கு உயர்த்தி விற்பார்கள். கீரை வகைகளை பற்றி கேட்கவே வேண்டாம். ஒரு சில கீரை வகைகளே கிடைத்தன. பாலக் கீரை, முருங்கை கீரை இது தவிர நம்முடைய கீரை வகைகள் இங்கு கிடைப்பது மிக அரிது.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை இங்கே வசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு மருத்துவரிடம் தங்கள் குடும்ப நபர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். எந்த உடல் நல குறைவாக இருந்தாலும் இந்த மருத்துவரை மட்டும் தான் காண முடியும். அவர்களையும் அவ்வளவு எளிதாக காண முடியாது. ஒவ்வொரு மருத்துவமனையும் ஒரு மொபைல் செயலியை வைத்திருப்பார்கள் அதில் தான் அப்பாயின்மென்ட் புக் செய்ய வேண்டும். எந்த மருத்துவ நிபுணர்களையும் ஒரே நாளில் காண்பது என்பது முடியாத காரியம். பல வாரங்களோ, மாதங்களோ காத்திருக்க வேண்டி வரும்.
வீட்டுப் பணிகளுக்காக பணியாட்களை அமர்த்துவது என்பது இயலாத காரியம். இங்கும் குளியலறையையும், கழிப்பறையையும் சுத்தம் செய்ய பல நிறுவனங்கள் இருந்தாலும் அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்டு வரை சார்ஜ் செய்வார்கள் அதனால் பலர் தன் கையே தனக்கு உதவி என்று இங்கு வந்ததும் தங்களுடைய குளியலறையையும் கழிப்பறையையும் வீட்டையும் பாத்திரங்களையும் தாங்களே சுத்தம் செய்து கொள்வார்கள்.
சூரிய ஒளி வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இங்கு வந்து வந்த பிறகு தான் உணர்ந்து கொண்டான். ஆண்டின் பெரும்பகுதி குளிரும் மழையும் எப்போதாவது வெயில் அதை தொடர்ந்து பல நாட்கள் மழை. ஒரே நிலை ஒரே நாளில் எல்லா பருவங்களும் வரும் நாட்களும் உண்டு. ஆக மொத்தம் இந்த ஊரின் காலநிலை ஒரு குழம்பிய மனிதனைப் போன்றது. இங்கு குளிர்காலங்களில் சூரிய ஒளியை பார்ப்பது அரிது அதனால் இங்கு உள்ள மக்கள் சூரிய ஒளிக்கு பதிலாக விட்டமின் டி மாத்திரைகளை உணவுடன் எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு எடுத்துக்கொள்ள தவறும் பட்சத்தில் அது அவர்களுடைய எலும்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும். நம்மூரில் இலவசமாக கிடைக்கும் சூரிய ஒளியை அவ்வப்போது எண்ணிக் கொள்வான்.
இங்கு இறைவனை வழிபட விரும்பினால் வெகு சில இடங்களில் மட்டும் தென்னாட்டு கலாச்சார முறையில் ஒரு சில ஆலயங்களே இருந்தன. இறுதியாக ஒரு அந்நிய தேசத்தில் பல அந்நிய மொழிகளைப் பேசும் மக்களின் இடையே வந்தேறி என்ற அடையாளத்துடன் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.
சென்னையில் இருக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் பல காரணங்களால் அவன் ஏமாற்றம் அடையும் பொழுது அவன் மனம் லண்டன் வாழ்க்கையை நினைத்து ஏங்கி இருக்கிறது. அதே சமயம் இப்பொழுது லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அதே மனம் சென்னையில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குகிறது. மனம் எவ்வளவு விசித்திரமானது என்று எண்ணி பெருமூச்சு விட்டான்.
நாம் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையின் கடந்த காலத்தில் பல காலகட்டங்களில் வெவ்வேறு வகையான வாழ்க்கை முறையை வாழ்ந்திருப்போம். வெவ்வேறு சூழ்நிலைகள், சுற்றுப்புறங்கள், உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள், அண்டை அயலார், தெருக்கள், ஊர்கள் அது பிள்ளைப் பருவமாக இருக்கலாம், பள்ளிப் பருவமாக இருக்கலாம், கல்லூரி நாட்களாக இருக்கலாம், திருமணமான புதிதாக இருக்கலாம். நம்முடைய ஒவ்வொரு சிறு முடிவுகளும் நம் வாழ்க்கை பாதையை மாற்றுகின்றன. இந்த வாழ்க்கை என்ற ரயில் பயணத்தில் நம்முடன் பயணித்தவர்கள் பல இடங்களில் இறங்கி விடுகிறார்கள். கடைசியில் நமக்கென்று எஞ்சி இருப்பவை நினைவுகள் மட்டுமே.
தொடர்புள்ள சிறுகதைகள்
அகந்தை வெறி!
மா.சித்திவினாயகம்
June 26, 2026
அன்புள்ள அப்பாவுக்கு…
நாகரத்தினம் கிருஷ்ணா
June 26, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
June 26, 2026