அக்காவுக்கு ஆயுசு கெட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2026
பார்வையிட்டோர்: 273 
 
 

 (2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எதுக்கு இப்படி பரபரப்பு.

என்னாச்சி இந்த வீட்ல. வாசல்ல மருத்துவச்சி வந்து உக்காந்திருக்கா. கொல்லப் பக்கம் வேலைக்காரி சவுரியம்மா கிணத்தடில் மோட்டார் போட்டுத் தொட்டிய நிரப்புறா. அய்யா ராமநாதன் வேட்டிய மடிச்சிக் கட்டி, ஸ்டூல்ல ஏறி தொட்டில் கம்பிய உத்திரத்தில மாட்டிவிட, பெரிய அக்கா வசந்தா நூல் சேல ஒண்ண பீரோலயிருந்து எடுத்து அய்யாகிட்ட கொடுக்கிறா. குமாருக்கு எதுவுமே புரியல. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும் கண்ட இந்தக் காட்சியெல்லாம் அவனுக்கு வித்தியாசமா இருந்துச்சி. 

தண்ணி குடிக்க நேரா அடுப்பந்திண்ணைக்குப் போனான். சொம்ப எடுத்து மண்பானயில தண்ணிய மோந்துக்கிட்டே…. அடுப்புல நின்னுக்கிட்டு இருந்த அம்மா மரகதம் கிட்ட “அம்மா எதுக்குமா மருத்துவச்சி வந்திருக்கா? ஏன் வேலைக்காரக்கா கிணத்தடி தொட்டில தண்ணி நிரப்புறாங்க?”னு கேட்டான். 

“போடா, நீ சின்னப் பையன். உனக்கு ஒண்ணும் தெரியாது. அக்கா சங்கீதா பிள்ள பெறப்போறா. குறுக்குவலி வந்துருச்சு. அதான் நானும் சுடுதண்ணி வைக்கிறேன். இன்னிக்கி ஒரு நாளைக்கி சீக்கிரமா காபிய குடிச்சுட்டு சினிமாவுக்கு போ. பாண்டி மாமா வந்து கூட்டிட்டுப் போவான்” இப்படி மரகதம் சொன்னத யோசிக்கிறான். அக்கா பிள்ள பெறப்போறா! அது புரியுது. எதுக்கு சினிமாவுக்குப் போகணும். அது புரியல. 

அம்மாவ விடல. “நா எதுக்குமா மாமாகூட சினிமாவுக்குப் போகணும்?” 

“அதுக்குல்லாம் என்னால இப்ப பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது.” பட்டுனு மரகதம் சொல்லிட்டா. குமாரு கோபத்தில டம்ளர டமால்னு தூக்கிப் போட்டான். 

அந்தக் காலத்துல வீடே பிரசவ வார்டா ஆகியிருந்தது. கையிக்குள்ளயும், காலுக்குள்ளயும் வீட்ல இருக்கிற சிறுசுகள சமாளிக்கிறது பெரும் பாடா இருந்தது. கேக்குற கேள்விக்கி பதில் சொல்லி முடியாது. நாலு சுவத்துக்குள்ள என்ன நடக்குது, எப்படி பிள்ளய வயித்துக்குள்ளயிருந்து எடுக்குறாங்கனு அதுக நம்பள குடஞ்சி எடுத்துருங்க. பக்குவமா இத சொன்னாலும் புரியுற வயசில்ல. விவரம் தெரியிற வயசு வரும். அதுவர இத மூடித்தான் வச்சிருக்கணும். எதயாவது சொல்லி அந்த நேரத்துல வீட்டவிட்டு எங்கயாவது கடத்தணும். அது சினிமாவோ எதுவோ. 

பட்டுனு மரகதம் சொல்லிய பிறகு குமார் சின்னக்கா சங்கீதாவிடமே கேட்கலாமுனு அவ இருந்த மச்சி ரூம் பக்கம் போனான். லேசா திறந்திருந்த கதவு இடுக்கு வழியா தலைய நுழச்சி மெதுவாக எட்டிப்பாத்தான். சங்கீதா கட்டில்ல சாஞ் சபடி உக்காந்து இடுப்ப பிடிச்சிக்கிட்டு அழுதுக்கிட்டுயிருந்தா. அவா எப்படா இத இறக்கிவப்போம்னு இருந்தா. வாழ்க்கையில பிரசவத்தில் மட்டும்தான் வேதன வலி சந்தோஷம் அத்தனையும் ஒரே நேரத்துல வரும். 

அந்த ரூம்ல ஃபேன் சுத்திக்கிட்டுதான் இருந்திச்சி. ஆனாலும் சங்கீதா வேர்த்து விறுவிறுத்துப் போயிருந்ததா “அக்கா….. வலிக்குதாக்கா. உனக்கு குறுக்கு வலினு அம்மா சொன்னாங்க… சன்னல் கதவ திறந்து வைக்கட்டுமாக்கா?” குமாரு வாஞ்சையோட கேட்டான். 

 “நீ பயப்புடாதக்கா.. பெரியக்காவும் இதே கட்டில்லதான புள்ள பெத்தாளாம். ராசியான கட்டிலினு ஆச்சி சொல்லுவாங்க. வலியைப் பொறுக்க முடியாதவளாய்…. “எல்லாம் எனக்குத் தெரியும்… ரொம்ப பேசாத. சீக்கிரமா வெளில போ”னு சங்கீதா அவனை விரட்டினாள். 

மச்சிக் கதவ சாத்திட்டு வெளிய வந்த குமார மாமா பாண்டியன் டேய் குமாரு ரெடியானு சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போக தயாராயிருந்தான். “வா சீக்கிரம், படம் போடுறதுக்குள்ள போவோம்.” “இருங்க மாமா கால்சட்டையை மாத்த வேண்டாமா செத்த இருங்க வந்துட்டேன்.” ஸ்கூல் யூனிபார்ம கழட்டிட்டு சட்ட கால்சட்டய மாத்தினான் குமாரு. அவனுக்குள்ள ஒரு கேள்வி: ‘எதுக்கு நான் இருக்கக்கூடாது. அக்காக்கு பிள்ளை பொறந்தா நான் பாக்கக் கூடாதா? அதுக்குத்தான் இந்த சினிமா ஏற்பாடா.’ 

பாண்டியன் சீட்டுல தூசிய தட்டி தாத்தா கொடுத்த பழைய ராலி 18 இன்ச் சைக்கிள்ல ஏறி உக்காந்தான். ரெண்டு தடவ கிணிங் கிணிங்னு பெல் அடிச்சி மறுபடியும் சீக்கிரம் வாடானு குமார கூப்பிட்டான். 

“ஒரு பக்கமா வசமா கால போட்டு உக்காந்துக்க மாப்ள…. மாமா தோல்பட்டய கெட்டியா பிடிச்சிக்க.” பாண்டியன் சொல்லிக்கிட்டே சைக்கிள ஓட்ட ஆரம்பிச்சுட்டான். உட்காந்துக்கிட்ட குமாரு திரும்பத் திரும்ப விடாம பாண்டியன்கிட்ட” ஏன் நான் இருக்கக் கூடாது? அப்படியென்ன அந்த மருத்துவச்சி செய்வா?” 

 “டேய், குட்டி பாப்பாவோ பையனோ உனக்குப் பிடிக்கும்ல.. பேசாம கம்னு வா. படம் விட்டு வீட்டுக்குப் போனதும் உனக்குக் காண்பிப்பாங்க அப்பத் தெரியும். அதுவர தொணதொணனு கேள்வி கேட்டுக்கிட்டே வராத.” தியேட்டர் வர்றதுக்குள்ள குமாருக்கு அப்பப்ப அந்த ஆர்வக்கோளாறு தலதூக்கிக்கிட்டே இருந்துச்சி. பாண்டியனுக்கு ரோதனையா இருந்தது. ஒரு பக்கம் குமாரு, இன்னொரு பக்கம் இந்த ஓட்ட சைக்கிளு. மல்லுகட்டி ஒட்டிட்டுப் போனான். 

அந்தக் காலத்து கருப்பு வெள்ளைப் படத்துக்கு இருந்த மவுசு பிறகு ஈஸ்ட்மென் கலருக்கு மாறி இப்ப எங்கயோ போயிருச்சி. அது பழைய முத்து டாக்கீஸ். முதல் முதல்ல “மெக்னாஸ் கோல்ட்”, “டென் கமாண்மென்ட்ஸ்” போன்ற ஹாலிவுட் படங்கள் இந்த தியேட்டர்லதான் வந்திச்சி. 

கேட்டு வாசல்ல நிக்கிற அந்தக் கிழட்டு வாட்ச்மேன் டிக்கெட்ட காமிச்சாத்தான் கேட்ட திறப்பான். ஒரு கேட்டு நல்லா இருக்கும், இன்னொன்னு நெளிஞ்சி போன அவன போல சாஞ்சி கிடக்கும். 

இந்த லட்சணத்தில மேனேஜர் டீ கேட்டா இந்தக் கிழடு வாங்கப் போயிரும். அதுவர கேட்டுல ஒரு கம்பிய சுத்தி வச்சி திறக்க முடியாம வச்சிரும். டிக்கெட் எடுத்தாலும் காத்துக்கிடக்கணும். தியேட்டர் பாதி கூட புல்லாகல…. அதுலயும் மேட்னி ஷோவா இருந்தா சில நேரம் தியேட்டர் காத்தாடும். படம் ரிலீஸ் ஆகி மொத ஒரு வாரம் புல் ஆகுதோ இல்லையோ, ஹவுஸ் புல்னு தகர போடு வெளி கேட்ல தொங்கிட்டேதான் இருக்கும். 

பாண்டியன் க்யூல நின்னு 80 பைசா பேக் பெஞ் ச் டிக்கெட் இரண்டு வாங்கிட்டு, குமார இழுத்துக்கிட்டு தியேட்டருக்குள்ள போனான். உள்ள பெட்டிக் கடைல ஓரமா ஆப்ரேட்டர் சூடா டீய வாங்கி குடிச்சிட்டு பத்தவச்ச பீடிய சுண்டி வாய்க்கால்ல எறிஞ்சிட்டு, படம் போட இன்னும் காமணிநேரம் ஆகுமுனு பாண்டியன் கிட்ட சொன்னாரு. பக்கத்துல டாய்லட், மூத்திர வாட குமாருக்கு குமட்டச்சி. 

பாண்டியன் இவரு தாண்டா ரீல் ஒட்ற ஆப்ரேட்டர்னு குமாருகிட்ட அறிமுகப்படுத்தினான். ஆப்ரேட்டர் புரஜெக்டர் ரூமுக்குள்ள நுழஞ்சத பாத்துட்டுத்தான் ஜனங்க வேகமாக தியேட்டருக்குள்ள ஓடுவாங்க. அதுதான் வழக்கம். 

சினிமா டாக்கிஸ்னாலே பீடி வாட, எங்க பாத்தாலும் சுவத்துல இலுவுன சுண்ணாம்பு, அங்கங்க புளிச் புளிச்சுனு துப்புன வெத்தல கரை இந்த அடையாளம் இல்லாத தியேட்டரே இருக்காது. ஆனா ஊருக்குள்ள இதுதான் சுத்தமான தியேட்டர்னு எல்லாரும் சொல்லிக்குவாங்க . 

அன்னிக்கு பத்து பேருக்கு மேல அந்த பேக் பெஞ்சில ஆளுக இல்ல. குமாரு சீட்ல உக்காந்ததும் அந்த அழுக்கு மஞ்சள் கலரு டிக்கெட்ட திருப்பித் திருப்பி பாத்தான். டிக்கெட்ல என்ன தெரியுதுனு இப்படி பாக்குறேனு பாண்டியன் கேட்டான். மாமா இதுல பாருங்க பின்னால கிரைப் வாட்டர்னு விளம்பரம் இருக்குனு அதுல இருந்த குட்டிப் பாப்பாவ காமிச்சான். இது பாக்க ரொம்ப யதார்த்தமா இருந்தாலும் பசங்க ஆழ்மனசுக்குள்ள இத பாக்க ஒரு சந்தோசம் இருக்குனுதான் தோணுது. 

மொதல நியூஸ் ரீலு ஓடிச்சி. பீகாரில் வெள்ளம். எல்லையில் சீனப் படைகள் ஊடுருவல்….. குமாரு நெளிய ஆரம்பிச்சான். கடேசியா லைப்பாய் சோப்பு விளம்பரத்தோட ஒரு வழியா முடிஞ்சி, படம் டைடில் போட ஆரம்பிச்சதுமே குமாரு ‘மாமா வீட்டுக்குப் போவோமா’ அப்புடினு பாண்டியன நச்சரிக்க ஆரம்பிச்சான். 

‘டேய் படத்தப்பாரு. இல்லாட்டி மண்டைல போட்டுருவேன்’னு பாண்டியன் அதட்டினான். 

இரண்டு மூணு டூயட் சீன் போயிருச்சி. இண்டர்வெல் வரைக்கும் குமாரு தாக்குப் பிடிச்சிட்டான். முறுக்கும், கடல மிட்டாயும் பாண்டி வாங்கி குமாருகிட்ட கொடுத்தான். இருட்டுக்குள்ள குமாரு இது என்னதுனு தடவிப் பாத்தான். 

“மாமா, இதெல்லாம் வேண்டாம் மாமா. வாங்க வீட்டுக்குப் போவோ”முனு மறுபடியும் ஆரம்பிச்சிட்டான். 

படத்துல ஒரு சீன். சாவித்திரியம்மா பிரசவ வேதனைல் துடிக்கிறாங்க. ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிட்டாங்க. 

சாத்தியிருக்கிற பிரசவ ரூமு கதவையே மாறிமாறி பாத்துக்கிட்டு ஜெமினி சார் கைய பிசஞ்சிக்கிட்டு டென்சனா இருக்காரு. டாக்டரம்மா ரூம விட்டு வெளியில வந்து சரியான நேரத்துல வந்துட்டீங்க. பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லனு சொல்லிட்டு மறுபடியும் பிரசவ ரூமுக்குள்ள போயிட்டாங்க. 

தம்பி குமாருக்கு இருப்பு கொள்ளல. சாவித்திரி அம்மா துடிக்கிறத பார்த்து அழுகையே வந்திருச்சு. “மாமா அக்காவும் இப்படிதான் துடிப்பாளா?’னு கேட்டான். ‘ஆமாடா, படத்தப்பாரு’னு பாண்டியன் அதட்டினான். 

ஆஸ்பத்திரி சுவத்துல இருந்த கடிகாரம் அஞ்சினு காமிச்சது. அப்படியே சீன் மாறாம அதே கடிகார முள்ளு நகண்டு உடனே அஞ்சரைனு காமிச்சது. 

அதுக்கு அடுத்த நிமிஷமே ரூமுக்கு வெளிய குழந்தையழுகிற சத்தம் கேட்டுச்சு. ஜெமினி சார் முகத்துல ஒரே சிரிப்பு, சந்தோஷம். ரூமு கதவு மெல்ல திறந்திச்சி. சிரிச்சிக்கிட்டே வெளில வந்த நர்ஸ் கையில கொண்டு வந்த குழந்தைய காண்பிச்சி உங்களுக்குப் பையன் பிறந்திருக்கான்னு சொன்னா. ஜெமினி ஆசையா சிரிச்சிக்கிட்டே சந்தோசமா அந்தக் குழந்த முகத்த பாத்தாரு. 

பின்னாலேயே வந்த டாக்டரம்மா சோகமா முகத்த வச்சிக்கிட்டு வந்தாங்க. ஜெமினி சார் முகமே சட்னு மாறிருச்சி. டாக்டரம்மா உங்க குழந்தையைத்தான் என்னால காப்பாத்த முடிஞ்சுது. உங்க மனைவியை எங்களால காப்பாத்த முடியல. மன்னிச்சிக்கோங்கன்னு சொன்னதைக் கேட்டதும் ஜெமினி கதறிக் கதறி தலலே அடிச்சி அழுகுறாரு. தியேட்டரே அழுகுது. இத பார்த்த நம்ம ஆளும் அழுக ஆரம்பிச்சுட்டான். விஸ்வநாதன் அடிச்ச மியூசிக் வேற ஒரு பக்கம் வயித்த கலக்குது. சோக சீனுக்குனு எல்லா படத்திலயும் இந்த மியூசிக்தான் அவரோட டிரேட் மார்க். 

“மாமா மாமா, நம்ம அக்காவும் இப்படித்தான் செத்துடுவாளா மாமா? எனக்கு பயமா இருக்கு மாமா… வாங்க உடனே வீட்டுக்குப் போவோம்”னு அழுக ஆரம்பிச்சுட்டான். அது வர அவன அதட்டுன பாண்டியனும் கொஞ்சம் பயந்துட்டான். “இது சினிமாடா. நிஜமா இப்படி நடக்காது அழுகாத. அக்காவுக்கு ஒண்ணும் ஆகாது’னு சொல்லிப் பாத்தான் அவன் கேட்கிறதா இல்ல தேம்பித் தேம்பி அழுக ஆரம்பிச்சுட்டான். பாண்டியனுக்கு வேறு வழிதெரியல. ‘சரி வந்து தொல. இன்னும் அரைமணி நேரம் படம் போச்சு’னு சொல்லிக்கிட்டே சைக்கிளை எடுத்தான். 

குமாருக்கு நெனப்பு முழுசும் அக்காமீது இருந்துச்சு. படத்துல சாவித்திரியம்மா மாறி நம்ம அக்காவுக்கு ஆயிடுக்குமோனு மனசு துடிச்சிச்சி. வீட்ட நெருங்குற வரைக்கும் அவனுக்குக் கண்ணீரு தாரைதாரையா ஓடுச்சி. “பாண்டி அழுகாம வாடா. அக்காவுக்கு ஒண்ணும் ஆகாதுடா. அது சினிமாதான்”னு திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே வந்தான். 

வீட்ட நெருங்கியாச்சி. வீட்டு வாசல்ல ரெண்டுமூணு ரிக்ஷாவண்டி ஐஞ்சாறு சைக்கிள் நின்னுச்சி. குமாருக்கு மனசு பதபதச்சிக்கிட்டு இருந்திச்சி. பாண்டியன் சைக்கிள நிறுத்தி ஸ்டேண்டு போட்றதுக்குள்ள சைக்கிளவிட்டு விருட்டுனு குதிச்சி, செருப்ப வெளிலயே வீசி விட்டுட்டு வீட்டுக்குள்ள ஓடிட்டான். 

“என்னத்துக்கு இத்தன வேகமா இந்த பக்கி ஓடியாருது” திண்ணல கால நீட்டி தூண்ல சாஞ்சி உக்காத்திருந்த ஆச்சி கேட்டாள். “மருமகனா, மருமகளானு பாக்க உங்க பேரன் ஓடுறான்” 

பாண்டியன் ஆச்சிக்கி இப்படிப் பதில் சொல்லி கிண்டலடிச்சான். வாசல தாண்டி வீட்டுக்குள்ள போனா, பெரியக்கா, சின்ன அக்கா, மச்சான் அப்படினு நிறையபேர். ஒருபக்கம் பக்கத்துவீட்டு கிழவிங்க வேற வந்துட்டாங்க. மருத்துவச்சி குருவம்மா இங்குட்டும் அங்குட்டுமா ஓட்டமும் நடையுமா இருந்தா. காளிமார்க் கலரு ரெண்டு கிரேட் வந்து இறங்கிச்சி. இப்படி நேரத்துல வந்தவங்களுக்கு குடிக்கிறதுக்குக் கொடுக்க அந்தக் காலத்தில அதுதான ஊரு வழக்கமா இருந்திச்சி. 

எல்லாத்தையும் தாண்டி வீட்டுக்குள்ள வீச்வீச்சுனு குழந்தை அழுகிற சத்தம். அத கேட்டதும்தான் குமாருக்கு மூச்சே வந்திச்சி. 

“என்னடா குமாரு, அதுக்குள்ளயா சினிமா முடிஞ்சிருச்சி?” 

“எங்க படத்தப் பாக்க விட்டான் அக்கா. வாங்க வீட்டுக்கு போவோம் மாமானு என்ன நச்சி எடுத்துட்டான்க்கா” பாண்டியன் சொன்னத கேட்ட அம்மா மரகதம், குமாரு இங்க வாடானு கூப்பிட்டாங்க. 

மருத்துவச்சி குருவம்மா துணியிலமடிச்சி குழந்தைய தூக்கிவந்து குமாரு மடியில வச்சி ‘இந்தா 

‘இந்தா உனக்குப் பொண்ணு வந்துட்டா’னு சொன்னா. அவ இப்படி சொன்னதும் அவனுக்கு வெக்கம் வந்துருச்சி. குழந்தையோட பிஞ்சு விரல தொட்டுத் தொட்டுப் பாத்தான். அது வீல் வீல்ணு கத்துச்சி. 

“என்னம்மா பாப்பா கையி இப்படி பஞ்சிமாறி இருக்கு….” 

“பிறந்த பிள்ளங்க கையி அப்படித்தான் இருக்கும். பிறந்தப்ப ஓங்கையும் அப்படித்தான்யிருந்திச்சி. சரி போதும் கொண்டா.” குருவம்மா உடனே பிள்ளைய அவே கிட்டயிருந்து வாங்கிக்கிட்டா.” 

குமாரு தியேட்டர்லயிருந்து வந்துட்டாலும், அக்காவப் பத்தின பயம் இன்னும் அவே மனச விட்டுப் போகல. 

மெதுவா மரகத்துக்கிட்ட காதுல “அம்மா அக்கா எங்கம்மா.. அக்காவுக்கு ஒண்ணும் ஆகலயே?” “ஏன்டா அப்படி கேக்குற. மச்சி ரூம்லதான் இருக்கா போய்ப்பாரு” அம்மா இப்படி சொன்ன உடனே பயந்துக்கிட்டே ரூமுக்குள்ள எட்டிப் பாத்து மெதுவா அக்கா பக்கத்துல போனான். மச்சி முழுசுமா டெட்டால் வாட மூக்க துளச்சது. 

அக்கா சங்கீதா மெல்லிசா நூல் சேலைய முழுசுமா மூடி காலநீட்டி மல்லாக்கப் படுத்திருந்தா. 

கண்ணைத் திறந்து பாத்துட்டு வாடா பக்கத்லேனு சொல்லி அவன் கன்னத்தவருடி, 

“என்னடா தம்பி பாப்பாவ பாத்தியா? உன்னபாத்து சிரிச்சாளா?” அவனுக்கு அழுகை அழுகையா வந்துருச்சு அக்காவ தொட்டுத் தொட்டுப் பாத்தான். அப்படியே தேம்பித் தேம்பி அழுதுட்டான். 

“அக்கா உனக்கு ஒண்ணும் ஆகலேல.” “போடா லூசு. எதுக்கு அழுவுற.. பாருடா அக்கா நல்லாதானட இருக்கே… அழுவாதட செல்லம்.” அவனோட கண்ணீர தொடச்சி விட்டா. 

“அக்கா சாவல. மாமா சொன்னமாதிரி அது சினிமாதான்”னு மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே வெளிய உடனே ஓடியாந்துட்டான். 

“என்னடா அக்காவ பாத்தியா பயந்தாகோளி பயலே. உங்க அக்காவுக்கு ஆயுசு கெட்டிடா பயப்புடாத”னு சொல்லி வக்கனையா சிரிச்சான் பாண்டியன். 

அரை நூற்றாண்டுக்கு முன் குமாரின் வாழ்வில் நடந்த இந்த சம்பவக் கதைக்குள் நாம் காணும் நம் மண்ணின் பாரம்பரியப் பண்புகள் இன்று சுவடு தெரியாது காணாமல் போய் விட்டன. 

நவீன மயமாக்கப்பட்ட மருத்துவத்திற்குள் தொலைந்து போனது நம் பண்புகள் மட்டுமல்ல, நம் ஆரோக்கியமும் கூடத்தான். வலுவிழந்த இந்த சமுதாயம் எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்து நிற்கிறது. நமக்கு நிறைய வசதிகள் கூடிவிட்டன. ஆனால் அது நம் இயல்பின் இருப்பைத் தேடச் செய்கிறது. 

ஒரு பெண் பிள்ளைக்குக் கிடைத்த வசதிகளைக் கொண்டு வீட்டிலேயே எத்தனை எளிமையாக பிரசவம் செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால், உண்மையில் அன்றைய சமூகம் எதையும் தன்னிச்சையாக செய்யும் திறமையையும், தைரியத்தையும் பெற்றிருந்திருக்கிறது. 

பிரசவம் ஆன உடன் அந்தப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றிலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தாய்மார்கள், பாட்டிமார்களின் பங்கு நிறைய இருந்திருக்கிறது. அவை கால ஓட்டத்திற்கு ஈடு செய்ய இயலாமல் இன்று தோற்றுப் போயின. 

குழந்தையைப் பெற்றெடுத்த அவளுக்கு பின் ஒரு மாதத்திற்கு பத்தியம் பார்த்து கொடுக்கும் உணவுகள் கொடுமையாய் ருக்கும். பிடித்த உணவான உருளை, மாம்பழம், பலா, மைதா போன்ற….. இப்படி செரிக்க சிரமப்படும் கனமான உணவுகளுக்குத் தடை செய்யபட்டுவிடும். பிடிக்காவிட்டாலும் பூண்டு, பால்கருவாடு அடிக்கடி சமையலில் இருக்கும். 

பெண் பிள்ளை என்றால் நல்லெண்ணய், ஆண் பிள்ளை என்றால் நெய் ஊற்றி, சுடுசோறு. இது அவர்களுக்கு மட்டுமே புரியும் வைத்தியம். பிரியாணி, பூரி, மசால் தோசை போன்றவற்றைக் கண்ணில் காட்ட மாட்டார்கள். 

தினமும் பாட்டி கொடுக்கும் கசப்பு லேகியத்தை அவள் முழுங்கி ஆக வேண்டும். அதிலும் பால் சுரக்காத தாய்க்கு நீர்விட்டான்கிழங்குப் பொடியும், பருத்திக்கொட்டை பொடியும் செய்துகொடுப்பார்கள். அதை அவள் விழுங்கும் போது பிள்ளை பெறாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றும். 

சில பெண் பிள்ளைகளுக்குப் பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலி உயிரை வாங்கும். அதற்கு பாட்டி நீளமாய் வேஷ்டித் துணியை மடித்து தண்ணீரில் முக்கி அதைக் கண் முன் தொங்கவிடுவார்கள். அந்தப் பெண்ணை தண்ணீர் சொட்டு விடுவதையே கண்ணசைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கச் செய்வார்கள். என்ன ஆச்சரியம். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பால் சொட்டுச் சொட்டாய் சுரக்கும் அதிசயம் நிகழும். அற்புதமான மனோதத்துவ ரீதியான வைத்தியம். இதையெல்லாம் இவர்கள் யாரிடம் கற்றார்கள். 

அத்தனை வலிகளையும் கடந்த பின் அக்கடா என்று கால்களைத் தளர்த்தி படுத்திருப்பாள். அப்போது பாதத்தில் சுளீர் என்று அடி விழும். கால்களைப் பின்னி படு நீட்டிப் படுக்காதே என்ற கண்டிப்பு வரும். விரிந்து விட்ட கர்ப்பப்பை பழைய நிலைக்கு வருவதற்கு இப்படி கால்களைப் பின்னிப் படுப்பதுதான் சரி என்று டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள். 

நன்றாகத் திரும்பி குப்புறப்படுத்து சுகமாக தூங்கலாம் என்று நினைக்கும் பொழுது இரவின் நடுவில் இரண்டுமுறை எழுப்பி குழந்தைக்குப் பாலுட்டுவதற்காக முழிக்க வேண்டிய கட்டாயம் வேறு ஏற்படும். 

காலை எழுந்தவுடன் வெந்நீர் பானையைப் பாட்டி முன்னால் வைக்கும் போதே அவளுக்கு மனசுல பீதியாகி விடும். வயிறு பழையபடி சுருங்குவதற்காக ஆச்சி கொடுத்த ட்ரிட்மெண்ட்…. அத அப்படியே அவளோடு வயித்துல ஊத்தி விடும்போது நரக வேதனை…. அந்த ஆச்சி தலைமேலேயே ஒரு பானை வெந்நீர ஊத்திரலாமானு. ஆத்திரம் ஆத்திரமா வரும். 

பிரசவ வலியைத் தாண்டி அடுத்தடுத்து இத்தனை வலிகளையும், கஷ்டங்களையும் கடந்துவந்த அனுபவம் தான் அவளின் தாய்மைக்கு முழுமை சேர்த்தது. வாழ்வில் இந்த அனுபவத்தால், பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் வலுவையும் பெறுகிறாள். 

ஆனால் இதையெல்லாம் அனுபவிக்காத நாகரீகப் பெண்கள், இன்றைய உலகில் எதையும் தாங்கும் மனநிலையற்று, எதிலும் மீண்டு எழுவதற்கான உத்திகளைத் தொலைத்து நிர்க்கதியாய் இருக்கிறார்கள்.

– காலச்சித்திரங்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 2025, மழைமான் பதிப்பகம், சென்னை.

அம்பாள் ஆர்.முத்துமணி விருதையில் 'அம்பாள்' என்று அழைக்கப்படும், பிரபல வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை அம்பாள் ராமசாமி அவர்களின் வழியில் வாழ்ந்து தொழிலும், தன் வாழ்விலும் உயர்வு பெற்றவர்.  தன் தந்தை வழி இலவச யோகா பயிற்சி மையப் புரவலர், யோகா பயிற்றுனர், ஆரோக்கிய விழிப்புணர்வுப் பேச்சாளர், தந்தை நிறுவிய அறக்கட்டளை மூலம் நல்ல பல இலவச சேவைகள் செய்து, விருதை மக்கள் போற்றும் சமூக ஆர்வலர் என்று இப்படி பன்முக ஆளுமை கொண்டவராய்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *