மனுமதி மாற்றிய சமூக விதி
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதைத்தொகுப்பு:
குடும்பம் 
கதைப்பதிவு: April 9, 2026
பார்வையிட்டோர்: 266

கல்லூரி படிப்பை முடித்த மனுமதி, தனது பெற்றோரே , தன் உலகம் என வாழ்ந்து வந்தாள். சமையலில் அம்மாவிற்கு உதவி, வாசலில் அழகழகாய் கோலம் , ஓய்வு நேரத்தில் புத்தக வாசிப்பு, சிறிது நேரம் தொலைக்காட்சி இப்படியே நாட்கள் நகர்ந்தன. எனினும் தன் இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்புகளையும் , பெற்றோரின் கஷ்டங்களையும் உணர்ந்த பொறுத்து மிக்க பெண்ணாக இருந்தாள்.
மனுவின் அப்பா சங்கர், ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியர். அம்மா லட்சுமி, இல்லத்தரசி. கணவரின் வருமானத்திற்குள் சிக்கனமாய் குடும்பம் நடத்தி வந்தாள். மகளின் திருமணம் ஒன்றையே தமது வாழ்வின் இலக்காக இருவரும் கொண்டிருந்தனர். தன் மகள் மனுவிற்கு ஒரு நல்ல மன வாழ்க்கை அமைந்து விட வேண்டும் என விரும்பினர்.
ஒரு நாள் மாலையில் , மனு .., பூ தொடுத்து கொண்டிருக்கும்போது, சங்கர் ஒரு தபால் கடிதத்தை மேஜையில் வைத்தார். “மனு, இந்த வரன் ரொம்ப நல்லாருக்கு. பையன் வெளிநாட்டுல நல்ல வேலை பார்க்கிறாராம். ஒரே பையன். மதுரை மேலமாசி வீதியில் சொந்த வீடு இருக்காம் . உன் போட்டோவை பார்த்துவிட்டு மாப்பிள்ளை சரி என சொல்லி இருக்கிறாராம்”
லட்சுமி ஆசையுடன் மனுவைப் பார்த்தாள். ஆனால், அடுத்த வார்த்தை லட்சுமியின் இதயத்தில் கல்லைத் தூக்கிப் போட்டது. “ஆனா, அவங்க 30 இலட்சம் வரதட்சணையும், 50 பவுன் நகையும் எதிர்பார்க்கிறாங்க, லட்சுமி.” சங்கரின் குரலில் இயலாமையும் விரக்தியும் கலந்திருந்தது.
லட்சுமியின் முகம் வாடியது. “முப்பது லட்சமா? நம்மகிட்ட அவ்வளவு பணம் இல்லையே. எவ்வளவு சிக்கனமாய் செலவு செய்தும் மகளின் கல்யாணத்திற்கு என்னால் பத்து லட்சத்திற்கு மேல் சேமிக்கவே முடியவில்லை. 50 பவுனுக்கு நாம எங்கே போவோம்..”
சங்கர் பெருமூச்சுவிட்டார். “என்ன பண்ணச் சொல்ற? எல்லா இடத்துலயும் இதே கதைதான். இந்தக் காலத்துல பொண்ணு பெத்தா, இதையெல்லாம் சந்திச்சு தான் ஆகணும். கடன ஒடன வாங்கித் தான் கல்யாணத்தை பண்ணனும். நீ கழுத்தில் போட்டிருக்கும் செயின் எத்தனை பவுன் லெட்சுமி.?”
இந்த வார்த்தைகள் மனுவைத் துளைத்தன. வரதட்சணை என்னும் இந்தச் சமூகப் பிணி நடுத்தர குடும்பத்தினை ஆட்டிப்படைப்பது கண்டு முதலில் அவளுக்குள் கோபம் கொப்பளித்தது. பெண்ணுக்குப் பெண் வீட்டார் நகை போடுவதில் தவறில்லை. அதை வற்புறுத்தி கட்டாயம் கேட்பதுதான் தவறு.
அப்போ பெண் வீட்டார் 30 லட்சம் கொடுத்து ,அந்த மாப்பிள்ளையை விலைக்கு வாங்கிக் கொள்ளச் சொல்கிறார்களா.? பிறகு அந்த மாப்பிள்ளை நம்ம வீட்டிற்கு வந்து விடுவாரா.? இல்லையே. முற்றிலும் தலைகீழாய் அல்லவா நடைமுறையில் உள்ளது. நான் அங்கு போய் உண்ணும் உணவிற்கு பணம் கேட்கிறார்களோ.? என மனுவின் மனதிற்குள் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
அதே சமயத்தில் பெண் வீட்டார் மீதும் தவறு இருக்கிறது. நாம் எப்படி இருந்தாலும் நமது பெண் போய் வசதியான வீட்டில் சுகமாய் வாழ வேண்டும் என பெண்ணின் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இருபத்தைந்து வருஷமா பத்து வாடகை வீடு மாத்தியாச்சு. நம் பெண்னாவது சொந்த வீடு உள்ள மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு, நிலையான வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் என அடிக்கடி அம்மா கூறுகிறாள். இந்த ஆசை நியாயமான ஆசையா..?
அது எப்படி.? நம்மால் உழைத்து சொந்த வீடு கட்டமுடியவில்லை. ஆனால் பெண் போகும் வீட்டில் மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இது பேராசை தானே. மாப்பிள்ளையின் பெற்றோரோ , மாப்பிள்ளையோ உழைத்து கட்டிய வீடு. அந்த உழைப்பில் , வீட்டிற்கு வரப் போகும் பெண்ணின் பங்கு சிறிதும் இல்லை. உழைத்து சம்பாதித்து வசதியாய் வீடோ , பிற சொத்துக்களோ வைத்திருக்கும் மாப்பிள்ளை வீட்டார், அதை அனுபவிக்க வருகின்ற பெண், தன் பங்குக்கு ஏதாவது தந்தால் நல்லது என நினைப்பது அவர்கள் அளவில் நியாயமானது தானே.
இந்த சிந்தனையோடு ,மனு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றாள். அன்று இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை. வரதட்சணை என்னும் இந்தச் சங்கிலியை அறுக்க , ஏதேனும் ஒரு வழி காண வேண்டும் என சிந்தித்தாள். அவள் மனதுக்குள் ஒரு தீர்க்கமான முடிவு பிறந்தது.
மறுநாள் காலை, வீட்டில் ஒரு மௌனம் நிலவியது. லட்சுமி கண்ணீருடன் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள். சங்கர் கையில் இருந்த நாளிதழைப் படிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தார். மனம் என்னவோ அந்த மாப்பிள்ளையையே சுற்றி சுற்றி வந்தது. மனு திடீரென அமைதியைக் கலைத்தாள்.
“அப்பா, அவர்கள் விரும்பினாலும், நான் அந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க போவதில்லை.”
லட்சுமி அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தாள். “என்ன மனு பேசுற? எவ்வளவு நல்ல வரன்!”
“அம்மா, வரதட்சணை வாங்குற ஒருத்தருக்கு என் வாழ்க்கையில இடம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்ல.” மனுவின் குரலில் உறுதி இருந்தது. அவர்களின் மனநிலையில் அவர்கள் கேட்பது நியாயமாய் இருக்கலாம். ஆனால் நான் வரதட்சணை கேட்கும் ஒருவனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். இதில் மாற்றமில்லை.
சங்கர் நாளிதழை மடக்கினார். “மனு! உனக்குச் இந்த சமூகத்தைப் பத்தி என்ன தெரியும்? நம்ம ஒரு நடுத்தரக் குடும்பம். இந்தச் சமூகத்துல ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பு வேணும்னா, இதெல்லாம் சகிச்சு தான் போகணும். நீ வீராப்பா பேசி, ஒரு நல்ல வரனை தட்டிக் கழிக்காத.. அப்புறம் கல்யாணம் அப்படியே தட்டிட்டு போயிரும். அப்புறம் என்ன பண்றது?”
“ஏப்பா…. எப்ப பார்த்தாலும் கல்யாணம் கல்யாணம்னு உயிரை எடுக்குறீங்க. பெண்ணாய் பிறந்தால் கல்யாணம் பண்ணிக்கணுமா.? அதுதான் வாழ்க்கையா.? அதற்காக தான் நான் இவ்வுலகில் பிறந்தேனா? உங்கள் கடமைக்காக எனக்கு திருமணம் செய்ய நினைக்கிறீர்களா? அல்லது எனது மகிழ்ச்சிக்காக திருமணம் செய்கிறீர்களா? கல்யாணம் முடிந்தால் எல்லா பெண்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? 75 சதவிகிதம் திருமணமான பெண்கள் மகிழ்ச்சியாய் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு புள்ளிவிவரம் நிரூபிக்கிறது.
“கல்யாணம் நடக்காம போனாலும் பரவாயில்லை அப்பா. வரதட்சணை கொடுத்து நடக்குற கல்யாணம் என்னைக்கும் சந்தோஷமா இருக்காது. வரதட்சணை கேட்கிறவன் எப்படி என்னை மதிப்பான்..? நீங்க என்ன வேலை பாக்குறீங்க. உங்களுக்கு என்ன சம்பளம் என்பது அவர்களுக்கு தெரியும் இல்லையா.! உங்களால் அவ்வளவு பணமும் அவ்வளவு நகையும் போட முடியாது என்பது அவர்களுக்கு தெரியும் தானே. தெரிந்தும் கேட்கிறார்கள். அப்படியானால் ரிதன்யா , ப்ரீத்தி வரிசையில் நானும் ஒருத்தியாய் இருக்க விரும்புகிறீர்களா? அவர்களின் பெற்றோர்களும், உங்களை போல் பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டும் என ,எவ்வளவோ வரதட்சனை கொடுத்து தான் திருமணம் செய்து வைத்தார்கள். என்ன நடந்தது..?”
“ஆண்டாண்டு காலமாய் இந்த சமூகப் பிரச்சினை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நவீன யுகத்திலும் , எவ்வளவு சட்டங்கள் இருந்த போதும் ,இன்றும் ஆங்காங்கே இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஒரு பொண்ணோட மதிப்பு அவள் கொண்டு போற நகையிலும் பணத்திலும் இல்லை. என்னை மதிக்கிற ஒரு குடும்பம் தேவை. அந்த குடும்பம் என்னை மதிக்க வேண்டும் என்றால் ,நான் என்னை அவர்களுக்கு இணையாக உயர்த்திக் கொள்ள வேண்டும். .”
“மேலும் நீங்கள் நினைப்பதும் தவறுதான் அப்பா. .எதுப்பா பொருத்தமான கல்யாணம். மாப்பிள்ளை நல்ல வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும். வீடு வாசல் இருக்க வேண்டும். மகளை மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படித்தானே நீங்கள் நினைக்கிறீர்கள். நாம் வாடகை வீட்டில் இருக்கிறோம். ஆனால் நமது பெண் மட்டும், அவர்கள் உழைத்து கட்டி வைத்துள்ள சொந்த வீட்டில் போய் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை உங்களுக்கும் இருக்கு தானப்பா. அப்படி நினைத்து தான் பெண்ணை பெற்றவர்கள் அகலக்கால் வைக்கிறார்கள். நீங்கள் நினைப்பதும் தவறு அப்பா. “
“ஒரு குடும்பம் கஷ்டப்பட்டு உழைத்து சொத்து சேர்த்து, வீடு கட்டி வைத்திருப்பார்கள். தனது மகன் படிப்புக்கு செலவழித்து நல்ல வேலை கிடைக்க ,படாத பாடு பட்டு இருப்பார்கள். அவனின் பெற்றோர்களின் கடின உழைப்பும் அதில் கலந்து இருக்கிறது. எனது பங்கு எதுவும் இல்லாமல், நான் போய் அங்கு சுகபோக வாழ்க்கை அனுபவிப்பது எனக்கும் சரியாகப்படவில்லை அப்பா. இதுவரை அவர்கள் உழைப்பில் எந்த பங்கும் எடுத்துக்கொள்ளாத நான் , அவர்கள் வீட்டிற்கு போய் அதை எளிதாய் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதும் உங்களின் பேராசை தானே அப்பா. அவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை. அதனால் முதலில் நான் எனக்கொரு நல்ல வேலையை தேடிக் கொள்ள முடிவு செய்து விட்டேன். நம் குடும்பத்தைப் போல சம அந்தஸ்தில் உள்ள, வரதட்சணை வாங்காத ,என்னை மதிக்கின்ற ஒரு பையன் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொள்கிறேன். இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கல்லூரி முடித்து எனது ஒரு வருட காலத்தை வீணாக்கி விட்டேன். இனி என்னை என் போக்கில் விட்டு விடுங்கள் அப்பா.”
சங்கரும் லட்சுமியும் , மனுவின் இந்தப் புதுப் பரிமாணத்தைக் கண்டு திகைத்துப் போனார்கள். அதுவரை அமைதியாக, பெற்றோரின் சொல்லை மீறாத மகளாய் அல்லவா இருந்தாள் மனு. ஆனால் இன்று..? மனுவின் பேச்சில் ஒரு உறுதி இருந்தது.
வரதட்சணை கேட்கும் வரன்களை மறுத்தது மட்டுமல்லாமல், மனு ஒரு புதிய இலக்கை நோக்கி பயணிக்க தயாராகிறாள். தன்னுடைய பொருளாதார சுதந்திரம் தான் இந்தப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு என்று அவள் நம்புகிறாள். மனுவின் உறுதியான பேச்சுக்கு முன்னால் இவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.
முதலில் தனக்கு நல்ல அரசு வேலை கிடைப்பதற்கு தேவையான , விவரங்களைத் திரட்டி, அதற்கான முயற்சியில் இறங்கினாள் மனு. போட்டித் தேர்வுகளுக்கு தன்னை தயார் படுத்த ஆரம்பித்தாள். அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தாள். தொடர்ந்து எழுதினாள். பல நேர்காணல்கள், பல தோல்விகள். இருந்தும் அவள் தளரவில்லை. இரவும் பகலும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானாள். அவள் கையில் இருந்தது ஒரே ஒரு விஷயம் தான் – தன்மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்காக எடுத்துக்கொண்ட விடா முயற்சி.
இதற்கிடையில், சுற்றத்தார் அவளைப் பற்றிப் வம்பு பேச ஆரம்பித்தனர். “என்னமோ வீராப்பா பேசுனா. வயசு ஏறிக்கிட்டே போகுது. இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. இவளுக்கு வரன் தேடறதுக்குள்ள அவங்க அப்பா உயிர் போயிடும்..” என்றெல்லாம் புரணி பேசினர்.
இந்தச் சலசலப்புகள் லட்சுமியின் மனதை மிகவும் பாதித்தன. “மனு, போதும் இந்தப் பிடிவாதம். வேலை கிடைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை. மூன்று வருடமாய் முயற்சிக்கிறாய். ஒரு பலனும் இல்லை. வேலை கிடைப்பதற்கும் காசு கொடுக்க வேண்டும் மகளே அதாவது லஞ்சம் . போதும் மனு. ஆக வேண்டிய காரியத்தை பார். இப்பவே வயது 25 ஆகிவிட்டது. அப்புறம் வயதாகி விட்டது என எந்த மாப்பிள்ளையும் வரமாட்டான். இப்பவே ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து, கடன் வாங்கி, மாப்பிள்ளை வீட்டார் கேட்டதைக் கொடுத்துட்டுப் போயிரலாம்.” என லட்சுமி ஒரு நாள் கண்ணீருடன் கெஞ்சினார்.
மனு தாயைத் தேற்றினாள். காசு கொடுத்து வேலை கிடைப்பதில் எனக்கு விருப்பமும் இல்லை. நம்பிக்கையும் இல்லை. என் திறமையின் மூலம் நிச்சயம் ஒரு நல்ல வேலை கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..
“அம்மா, இனி இந்தக் குடும்பம் யாருக்காகவும் கடன்காரனா இருக்காது. நான் என்னோட திறமையில் சம்பாதிப்பேன். சுற்றத்தார் பேசுவதை நினைத்து சோர்ந்து விடாதே. கல்யாணத்திற்கு கடன் அவர்களிடம் கேள். ஓடி விடுவார்கள். எலும்பு இல்லாத நாக்கு எப்படியும் பேசும். இன்று இப்படிப் பேசுபவர்கள் இனி என்னை பார்த்து, தன் மூக்கின் மேல் நிச்சயம் விரலை வைப்பார்கள்.
எனக்கு வேலை கிடைத்த பிறகு, நம் குடும்பத்திற்கு சமமான வரனையே பாருங்கள் அப்பா. நான் எவ்வளவு சம்பாதிக்கிறேணோ அதே அளவு சம்பாதிக்கும் மாப்பிள்ளையே போதும். உங்க பெண்ணுக்கு வசதி படைத்தவன் மாப்பிள்ளையாக வரவேண்டும் என கனவு காணாதீர்கள். அப்படி நீங்கள் நினைப்பதற்கும் அவன் வரதட்சணை கேட்பதற்கும் ஒன்னும் வித்தியாசம் இல்லை. விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பதற்கு ஏற்ற போல் வரன் பார்க்கலாம். அப்படி அமைந்தால் சரி .அமையாவிட்டாலும் சரி. எனக்கு ஒரு துளியும் கவலை இல்லை. என உறுதியுடன் கூறினாள்.
சில மாதங்களில், மனுவின் கடின உழைப்புக்கான பலன் கிடைத்தது. போட்டித் தேர்வில் தேர்ச்சி அடைந்து ஒரு நல்ல அரசு வேலை அவளுக்குக் கிடைத்தது. அந்தச் செய்தி வந்தபோது, வீடே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. சங்கரின் கண்கள் முதல் முறையாகப் பெருமிதத்தில் கலங்கின.
வேலை கிடைத்த பின் மனுவின் வாழ்க்கை மாறியது. அவள் அந்தப் பணியை அர்ப்பணிப்புடன் விரும்பி செய்தாள். சம்பளத்தில் ஒரு பகுதியை வீட்டுச் செலவுகளுக்கும், இன்னொரு பகுதியைத் தன்னுடைய எதிர்காலச் சேமிப்புக்கும் ஒதுக்கினாள் .ஒரு நாள், வங்கிச் சேமிப்புப் புத்தகத்தைக் கண்ட சங்கர், அதிர்ச்சியடைந்தார். அதில் சில லட்சங்கள் சேர்ந்துவிட்டிருந்தது. சங்கர் நெகிழ்ந்து போனார்.
சங்கருக்கு இந்த இடத்தில் தான், தன் மகளின் நிலைப்பாடும் உறுதியான சிந்தனையும் புரிந்தது. அன்று முதல், வரதட்சணை பற்றியும் தன் மகளின் திருமணத்தைப் பற்றியும் அவர் கவலைப்படுவதை நிறுத்திவிட்டார். அவருக்குத் தன் மகளின் தன்னம்பிக்கை மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்தது.
இதற்கிடையில், லட்சுமி தன் மகளின் வெற்றியை மற்றவர்களிடம் பெருமையுடன் சொல்ல ஆரம்பித்தாள். “என் பொண்ணு சம்பாதிக்கிறா. அவ வரதட்சணை இல்லாமத் தான் கல்யாணம் பண்ணிப்பா. அவளோட படிப்பு தான் அவளோட நகை.” லட்சுமியின் குரலில் இருந்த அச்சம் போய், பெருமையும் துணிச்சலும் குடிபுகுந்தன. மனுவின் இந்த புது புரட்சி மெல்ல மெல்ல அவளுடைய குடும்பத்தின் சிந்தனையையும் மாற்ற ஆரம்பித்தது.
மனுவின் புதிய நிலையைக் கேள்விப்பட்டதும், சில வரன்கள் அவளைத் தேடி வந்தன. ஆனால், இம்முறை மனு சில நிபந்தனைகள் விதித்தாள்: “வரதட்சணை ஒரு துளியும் இல்லை. நகை என் விருப்பத்தை பொருத்தது. நான் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து வேலை செய்வேன். நான் குடும்ப பொறுப்புடன் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன். அதே சமயத்தில் என் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் துணையும், என் மீது அன்பு செலுத்தும் குடும்பமும் வேண்டும் .”
இவளின் நிபந்தனைகளை அறிந்து அதனை ஏற்று, ஒரு நல்ல வரன் தேடி வந்தது. அவன் பெயர் அரவிந்த். ஒரு மென்பொருள் பொறியாளர். அரவிந்தின் குடும்பம் முற்போக்குச் சிந்தனை கொண்டது. அரவிந்தின் தாய், லட்சுமியிடம் முதல் சந்திப்பிலேயே, “சங்கர் அண்ணா, எங்களுக்கு மனு தான் மருமகளா வேணும். அவ கொண்டு வரப் போற பணமோ நகையோ எங்களுக்கு தேவையில்லை. அவளோட தைரியம் தான் எங்களுக்கு வேணும். எங்க பையன், மனுவோட இந்த முடிவை வரவேற்கிறான்..” என்றார்.
மனுவுக்கு அரவிந்தின் குடும்பம் பிடித்திருந்தது.. தன் திறமைக்கும், அறிவுக்கும் மதிப்பு கொடுக்கும் ஒரு குடும்பமும், ஒரு துணையும் கிடைத்ததில் அவள் மனதிற்கு நிறைவாய் இருந்தது.
திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்டது. ஒரு சாதாரணமான, ஆடம்பரமில்லாத திருமணம். திருமண அழைப்பிதழில், சங்கர் இந்த ஒரு வரியை அடிச்சிட்டு இருந்தார்.
“எங்கள் மகளின் கல்விச் செல்வமே அழியாத செல்வம்.. வரதட்சணை வாங்காத இந்த அன்பு திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்துக்கள் .”
மனுவின் திருமணம் அவர்களின் உறவுகளிடையே ஒரு சிறிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பலர் வியந்தனர்; சிலர் விமர்சித்தனர். ஆனால், மனு எதற்கும் கவலைப்படவில்லை. அவள் தனது முடிவில் உறுதியாக இருந்தாள்.
திருமணம் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு, மனு அரவிந்துடன் தனது பெற்றோரை பார்க்க வந்திருந்தாள். மகிழ்ச்சியான பேசி மகிழ்ந்த அந்த நேரத்தில் , லட்சுமியின் உறவுக்காரப் பெண் அஞ்சலி, பயத்துடனும் கண்களில் நீருடனும் அவர்கள் வீட்டிற்கு வந்தாள். அஞ்சலியின் திருமணத்திற்கு வரதட்சணை அதிகமாகக் கேட்கிறார்கள் என்றும், அதனால் அவள் திருமணம் நின்றுவிடும் அபாயம் இருப்பதாகவும் கூறி அழுதாள்.
மனு அமைதியாக அஞ்சலியைப் பார்த்தாள். “அஞ்சலி, பயப்படாதே. நீயும் என்னைப் போல அதே நடுத்தரக் குடும்பப் பெண் தான். ஆனா, நீ என்ன பண்ணணும்னு முடிவு எடுக்கிறது உன் கையில தான் இருக்கு.”
மனு, அஞ்சலிக்குத் தைரியம் அளித்தாள். அவளைப் போல் ஒரு நல்ல வேலையைத் தேடச் சொன்னாள். வரதட்சணை என்னும் சங்கிலியை அறுக்கச் சொல்லி ஊக்கப்படுத்தினாள். மனுவின் பேச்சைக் கேட்டதும், அஞ்சலிக்குப் புதுத் தெம்பு பிறந்தது.
அன்று, மனு ஆரம்பித்த அவளுடைய தனிப்பட்ட புரட்சி, இப்போது மெல்ல மெல்ல அவளின் உறவுகளுக்கு ஒரு உந்துசக்தியாக மாற ஆரம்பித்திருந்தது.
மனுமதி காலம்காலமாகத் தொடரும் ஒரு சமூக விதியைத் தாண்டி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது வாழ்வை மாற்றி, புரட்சி விதை ஊன்றி, பலருக்கு முன்னுதாரணமாய் பயணிக்கிறாள்.
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
