கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2026
பார்வையிட்டோர்: 158 
 
 

(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதழ் 29-31 | இதழ் 32-34 | இதழ் 35-37

இதழ் 32 – ஆபிரிக்கா

இங்கே எனக்கு மனஉரம் மிகவும் தேவையாகவே இருக்கிறது-அதிலும் நாம் கழித்த கடைசி சிலமணி நேரத்தை எண்ணிப் பார்க்கும்போது! பிரியும்போது நாம் அடைந்த, ஆனால் காட்டிக் கொள்ளாதடக்கிய அதே துன்பத்தை-அதைவிட ஓயாது உள்ளத்தை அறுக்கும் துன்பத்தை-தொலைவில் இருந்து அனு பவித்து வருகிறேன். ஆனால் இழந்த, இழக்கும் இன்பப் போதுகளை நான் எப்படியும் விரைவில் மீட்டும் பெறு வேன் என்ற நினைப்பு ஆறுதல் அளிக்கிறது.” 

மேலையாபிரிக்காவில் ஸெனகாலின் ஆட்சித் தலை வராய்ச் சென்ற மூரட் லாரைனுக்கு எழுதிய முதற் கடி தத்தின் பகுதி இது. 

ஸெனகாலில் ஃபிரஞ்சுக் கொடி வானளாவப் பறந்தது, ஃபிரஞ்சு ஆட்சியின் சின்னமாக. அவ் வாட்சியின் தனிப் பேராளாகவே மூரட் அங்கே சென்றிருந்தான். ஆனால் ஸெனகாலின் ஃபிரஞ்சுக் கொடியின் மரபு அவனால் ஒரு சிறிதும் உணரமுடியாத மரபா யிருந்தது. ஆபிரிக்காவின் நாட்டுக் குடிகள் கறுப்பர். அவர்கள் வெள்ளையராகிய ஃபிரஞ்சு மக்களை உள்ளூர வெறுத்தனர். அதே சமயம் அவர்கள், அவர்கள் கொடிய வாளுக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் கொடுமைகளுக்கும் அஞ்சினர். ஆட்சியாளர் போக்குப் படி நடப்பவர்களுக்குச் சிலசமயம் தன் நாட்டுத் தோழரை அழித்தவாறு உயர்பதவி, கொள்ளை ஆதாயத்தில் பங்கு ஆகியவை கிடைக்கும் என்பதையும் அவர் கள் அறிந்திருந்தனர். ஆகவே வெறுப்பு, அச்சம், அடிமைத்தனம் பேராவல் ஆகியவற்றின் சின்னமாகவே ஃபிரஞ்சுக்கொடி அவர்கள் கண்முன் ஒளிர்ந்தது. ஆட்சிப் பொறுப்பில் பங்குகொண்ட பணியாளர்களாகிய வெள்ளையரோவென்றால், ஆட்சியையும் பணித்துறை யையும் உழைப்புக்கும் பொறுப்புக்கும் உரியவையாகக் கருதவில்லை. கொள்ளையடிக்கும் உரிமைக்கும் சூழ்ச்சித் திறமைக்கும் உரியவையாகவே நினைத்தனர். அவர்கள் நாட்டுமக்களை நாட்டு மக்களாகவே கருதவில்லை. தாம் விரும்பும் பொருளும் பிற சாதனங்களும் நிறைந்த ஒரு வேட்டைக் காடாகவே அவர்கள் கருதினர். 

ஆக்டேவ் மூரட் ஸெனகாலில் நேர்மையாக ஆட்சி யும் நடத்தி ஒழுங்கான முறையில் பொருளும் ஈட்டிப் புகழுடனும் செல்வத்துடனும் பாரிஸுக்கு மீண்டும் சென்று லாரைனைப் பெறவே விரும்பினான். நல்லாட்சி மக்கள் நல்வாழ்வுக்கு மட்டுமன்றித் தன் நல்வாழ்வுக்கும்’ உதவும் என்று அவன் எண்ணினான். இவ்வகையில் ஸெனகல் அவனுக்கு ஒரு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. 

வெள்ளையர் கொள்ளையடிப்பதையும் கைக்கூலி முதலியன பெறுவதையும் அவன் கண்டித்தடக்க முயன்றதினால், அவர்கள் வெறுப்பையும் கசப்பையுமே பரி சாகப் பெற்றான். அதே சமயம் அவன் திறமை கண்டு அவர்கள் அஞ்சவும் செய்தனர். அவனிடம் அவர்கள் குறை கூறுவதற்கும் அவர்களுக்கு இடம் கிடைக்க வில்லை. பிறரை வேலை ஏவியதை விட அவன்தானே பன்மடங்கு கடுமையான உழைப்பு உழைத்தான். ஆனாலும் இந்நல்லாட்சியாலும் உழைப்பாலும் எவரது நன்றிக்கும் அவன் உரியவனாகவும் இல்லை. ஏமாறாத இடத்தில் ஏமாற்றுவது, அஞ்சாத இடத்தில் அச்சுறுத் துவது என்ற முறையிலேயே ஆபிரிக்கக் கறுப்பர் பழகி ஊறிப் போயிருந்தனர். ஆகவே வெள்ளையர் அஞ்சி உள்ளத்தில் பொய்மையுடன் நடந்துகொண்டது போலவே அவர்களும் நன்றியற்றவராய், வேண்டா வெறுப்புடன் உழைத்தனர். 

நாட்டின் பழைய அரசர் மரபினரும் கோமக்களும் மூரட்டின் நற்பண்பைப் புகழ்ந்தனர். முன் எல்லாரும் துன்புறுத்திப் பரிசு வாங்கியது போல் வாங்காமல், நல்ல விலையுயர்ந்த பரிசுகளை அவன் அவர்களுக்கு வழங்கினான். அவர்கள் அதைப் பெற்றுப் புகழ்ந்தனர். ஆனால் அவர்களும் ஏமாறிய இடத்தில் ஏமாற்றியதாகக் கருதினரேயன்றி இம்மியும் மனமாறுதல் அடையவில்லை, 

பொறாமையுடைய பணியாட்களினால் ஸெனக லடைந்த சில நாட்களில் மூரட்டின் படை வீடு எரியூட் டப்பட்டது. தீயணைப்பில் எவருக்கும் முந்தி மூரட்டே நேரில் சென்று உழைத்தான். அதனால் அவன் கால்கள் நெருப்புக் காயங்களால் கொப்புளித்தன. ஆட்சியா ளருக்கு உரிய அறைகள்கூட சிறைக்கூடங்களை விட மோசமாயிருந்தன. அவற்றைக் கட்டும்போதே பணியாட்கள் எல்லாப்பொருள்களையும் தமக்கெனக்கொண்டு செத்தைகளை வைத் துக் கடனைக் கழித்தனர். பெருக்கித் தீட்டும் வேலையிலீடுபட்ட கறுப்பர்கள் அரைகுறையாக வேலை செய்ததால் எங்கும் அழுக்கும் முடை நாற்றமும் மிகுந்திருந்தன. இச்சூழல்கள் மூரட்டுக்கு ஒத்துப் போகாததால் அவனுக்குத் தலையிடியும் காய்ச்சலும் மாறாத தோழர்களாயின.

இத்தனை இன்னல்களிடையிலும் எப்படியாவது சீரமைப்பை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என்றும் அதன்பின் தன் தனி வாழ்வையும் உயர்த்தி விடலாம் என்றும் ஆக்டேவ் மூரட் மனப்பால் குடித்து வந்தான். லாரைனுக்கும், லாரைனுடன் தற்போது நெருங்கிப் பழகிய அரசிக்கும் பிறநண்பர்களுக்கும் அவன் ஆபி ரிக்காவின் அரும் பொருள்களைச் சேகரித்து அனுப் பினான். லாரைனின் பரிசு ஆபிரிக்காவின் தலைசிறந்த கிளியினவகையாகிய பொன்னிறக்கிளி ஒன்று. அகஸ்டி க்குச்செவந்த தலையுடைய ஒரு பச்சைக்கிளி. அரசிக்கு ஒரு பாடும் பூவை. அது ஸெனகல் மொழியிலும் ஃபிரஞ்சு மொழியிலும் அரசின் புகழ் பாடும்படி பழக்கப் பட்டிருந்தது. இப்பரிசுகள் நண்பர்களை மகிழ் வித்தன. ஆனால் ஃபிரான்சின் தட்பவெப்பச் சூழலில் அவை விரைவில் இறந்துபட்டன. லாரைன் நீங்கலாக மற்றவர்கள் அப்பரிசுகளை மறந்தே விட்டனர். 

மூரட்டின் பிரிவுத்துன்பத்தில் ஒருசில மாதங்களே அவன் கனவுகள் ஆறுதலளித்தன. தன் கனவுகள் ஆபிரிக்க மண்ணில் என்றும் நிறைவேறப்போவதில்லை என்பதை அவன் சில நாட்களில் உணர்ந்து கொண்டான் அவன் கடிதங்கள் இதனை ஓரளவு குறிப்பிட்டன வாயி னும் வெளிப்படையாக அவன் இம்முடிவைக் குறிக்கவில்லை. புகுந்தது புகுந்தாய் விட்டது. எப்படியும் கடமைகளை முழுவதும் முற்றுவித்து மீள்வதென்ற உறுதியுடனேயே அவன் இராப்பகல் ஓயாது உழைத்தான். 

பிரிவு இருவருக்கும் தாங்கொணாத் துயராகவே இருந்தது. ஆனால் லாரைன் மட்டும் தான் அதன் தாக்குதலில் முற்றிலும் தன் செயலிழந்து மறுகினாள். உழைப்பிலும் கடிதங்கள் எழுதுவதிலும் ஆக்டேவ் தன் நேரத்தைப் போக்கினான். அவன் உள்ளார்ந்த ஆண் மையும் எக்களிப்பும் துன்பத்திடையேயும் அவன் உள் ளத்துக்கு ஊக்கம் தந்தன. அவன் மனமுறிவுற வில்லை. ஆனால் லாரைனோ ஒரே துன்பப் பாலைவனத் தில் துவண்டாள். காதல் வாழ்வு இத்தகைய பாலை வாழ்வாயிருந்ததென்றால், மற்ற குடும்பவாழ்வோ அப் பாலைவனத்தில் எழும் புயல்களாகவே இருந்தன. மூரட் டின் இன்றியமையாமையைக் காதலுள்ளம் எவ்வளவு உணர்ந்ததோ அவ்வளவு அவன் குடும்ப வாழ்வும் பட் டுணர்ந்தது. ஆனால் அவன் தன் உள்ள உணர்ச்சி களையும் முற்றிலும் அவளுக்கு எழுதவில்லை. தன் துன் பங்களையும் அவள்மீது சுமத்த அவன் விரும்பவில்லை. 

ஆபிரிக்காவிலிருந்து மீண்டபோது மூரட் வெறுங் கையனாகத்தான் மீண்டான். வரும் போது கப்பல் உடைந்ததால்; உடுத்த உடை. தவிர எல்லாம் இழந்தான் ஆபிரிக்காவை வேண்டியவர்களுக்குத்தரும் பரிசாகவே நினைத்த அரசாங்கமும் வேறாளனுப்புவதைத் தவிர எதிலும் அக்கரை காட்டவில்லை. பாரிஸிலுள்ள ஒரு உறவினருக்கெழுதியே மூரட் லாரைனை வந்து காணட போதிய உடையணி வாய்ப்பைப் பெற முடிந்தது, 

இந்நீண்ட காலப் பிரிவு இருவர் வாழ்விலும் பல ஆண்டுகளைக் கொண்டது. இளமையைவிட்டு இரு வரும் இன்னும் நீண்ட தொலை சென்று விட்டனர்; லாரைனுக்கு இம்மாறுதலை அவள் பிள்ளைகளின்வளர்ச்சி நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டின. ஆனால் மூரட்டிடம் அதன் தாக்குதல் வயது ஒன்று தவிர வேறு எவ்வகை யிலும் இல்லை. அவன் காதற் கடிதங்கள் அவன்காதல் வாழ்வின் துடிப்பையும் ஆர்வத்தையுமே காட்டின. 

இதழ் 33 – லாரைனின் குடும்ப துயர்கள்

பிரிவால் தடைபட்டு லாரைனின் காதல் மாறாமல் அப்படியே நின்றது. ஆனால் அவர்கள் பிள்ளைகள் வாழ்வு மாறாத அக்காதலரின் முன் மிக விரைந்து மாறி வந்தன. மூரட் அடிலிக்கும் அகஸ்டிக்கும் ஒரு ஒப் பற்ற தந்தையாகவும், விளையாட்டுத் தோழனாகவும் ஆசிரியனாகவும் இருந்திருந்தான். அவன் உதவி யின்றி அவர்களைக் கவனிக்கும் வேலை லாரைனுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. ஆயினும் அவர்கள் முற்போக்கில் அவள் கவனம் செலுத்தியும் அவர்கள் வளர்ச்சியில் இன்புற்றுமே வந்தாள். அடிலி, தாயை உரித்து வைத்தாற் போன்ற அழகுடன் விளங்கினாள். அதேசமயம் அவள் துடிதுடிப்பும் குறுகுறுப்பும் எல் லாரையும் கவர்ந்தன. ஆனால் அவளை அடக்கியாள் வ து லாரைனுக்கு அரும்பாடாகவே இருந்தது. அகஸ் டியோ அவளைவிட அடக்கமும் அமைதியும் உடையவனாக இருந்தான். ஆனால் அவன் அறிவு விரைந்து வளர்ச்சியுற்றது. அரண்மனையில் இருவரும் நடித்தி திலிருந்து அவர்களுக்கு நடிப்பில் இயற்கை ஆர்வமும் திறமும் இருக்கிறது என்று கண்டு கொண்ட லாரைன் அவற்றை ஒரு நடிகையின் உதவியால் மேம்படுத்தினாள். 

இருவரும் பள்ளிப்பருவம் கடந்தபின் உயர்தரக் கல்விச் சாலைக்குச் செல்லாமலே கற்கும்படி திருத் தந்தை பெர்னார்டு என்பவரை அவர்களின் வீட்டாசிரியராக அமர்த்தினார். மூரட் ஆபிரிக்காவிலிருந்த காலத்தின் பெரும் பகுதியிலும் அவரே வளரும் பிள்ளை களா கிய அவர்கள் கல்வியின் முழுப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். எட்டாண்டுகளாக நீடித்து இப்பணிசெய்த பின் அவர் கிட்டதட்ட அவர்கள் குடும்பத்துடன் குடும்பத்தின் ஒருவராகக் கருதப்பட்டு வந்தார். ஆனால் இந்நிலை நீடிக்கவில்லை. அவர் லாரைனின் தாய்மை வாழ்வில் ஒரு பெரும் புயலை உண்டுபண்ணி அகன்றார். மூரட் போன்ற ஒரு தோழமையில்லாக் குறையை அது அவளுக்கு எடுத்துக் காட்டியது. 

ஆசிரியர் பெர்னார்ட் வந்தது முதல் பிள்ளைகளை அவர் பெரும்பாலும் அவர் பொறுப்பிலும் பணிப்பெண் டார்னாட் பொறுப்பிலும் விட்டுவிட்டதால், அவர்களிடையே ஏற்பட்டுவரும் மாறுதலை அவள் கவனிக்க முடியவில்லை; அவளை உள்ளூர வாட்டிவந்த காதல் பிரிவுத் துன்பமும் இங்ஙனம் கவனிக்கும் சூழ்நிலையை உண்டுபண்ணவில்லை. பிள்ளைகளுக்கும் தனக்கும் இடையே சிறிது சிறிதாக ஒரு திரையிடப்பட்டு அவர்கள் பிரிக்கப்படுவதையும் அவள் காணவில்லை. எனி னும் நாளடைவில் சில சிறு செய்திகள் அவள் உள்ள அமைதியைக் குலைக்கத் தொடங்கின. 

ஒருநாள் லாரைன் தன் பெட்டி வண்டியில் ஏறி வெளியே போய்க் கொண்டிருந்தாள். வழியில் ஒரு தோட்டத்தினருகே ஒரு குத்துக்கல்மீது அகஸ்டி உட் கார்ந்து கொண்டிருப்பது கண்டு அவள் திடுக்கிட்டாள். அணுகிக் கேட்டபோது அவள் ஆசிரியர் தன்னை அங்கே இருக்கச் சொல்லிப் போயிருப்பதாகவும் விரைவில் வந்து விடுவார் என்றும் கூறினான். “அப்படியானால் நானும் அவர் வரும்வரை இருந்து போகிறேன்” என்று தாய் கூறியதும் சிறுவன் அடைந்த கலவரத்தை அவள் கவனித்தாள். ஆசிரியர் வந்ததும் “இப்படிச் சிறு பிள்ளைகளைத் தனியே விட்டுப் போகும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டாள். அவர் முனகிக் கொண்டு “உடம்புக்கு நலமில்லை” என்பது போன்ற நொண்டிச் சாக்குகள் கூறினார். 

ஒருநாள் விடியற்காலையில் லாரைன் படுக்கையிலி ருந்து எழாமல் விழித்துக் கொண்டே கிடந்தாள். பிள்ளைகள் இரண்டும் வந்து நின்றிருந்தன. அவர் களைக் கண்டதும் ஆவலுடன் கைகளை விரித்து அவர் அழைத்தாள். ஆனால் அவர்கள் வர அஞ்சியவர்கள் போல நின்றார்கள். ‘ஏன் வராமலிருக்கிறீர்கள், அம்மாவிடம் வர என்ன அச்சம்?’ என்று கேட்டபோது அவர்கள் அழுதனர். 

இயற்கைக்கு மாறான இந்நிகழ்ச்சி லாரைனின் தாயுள்ளத்தை உறுத்தியது. குழந்தைகளைத் தான் நெடுநாளாக நேரிடையாகக் கவனிப்பதில்லை என்பதும், மூரட்டைப் போலத் தன்னினும் இனிய ஒருவர் அவர்களுக்கு இல்லை என்பதும் அப்போதுதான் அவ னுக்குப் பளிச்சென்று புலப்பட்டது. அவர்கள் உடல் பொதுவாக அழுக்கடைந்திருப்பதும், அவர்கள் உடைகள் பழயனவாய்க் கந்தலடைந்திருப்பதையும் கூட அவள் கண்கள் அப்போதுதான் கண்டன. 

அவள் உடனே மணியை அடித்து டார்னாடை அழைத்தாள். பணியாட்களுக்கு ஆணைகளிட்டும் நெடு நாளாகி யிருந்தது. இப் புதிய மரபை டார்னார்டு மதிக்கவோ விரும்பவோ இல்லை என்பதை அவள் வரு வதில் காட்டிய தாமதமும் வரும்போது முணுமுணுத் ததும் எரிந்து விழுந்ததும் நன்கு காட்டின. அத்துடன் லாரைனின் முதல் கேள்வியே அவள் குடும்ப நிலையை முழுவதும் அம்பலப்படுத்தத் தக்கதாயிருந்தது. அன்று காலைதான் லாரைன் அடிலிக்காக ஒரு உடை துன்னிக் கொடுத்திருந்தாள். அவன் பழைய உடையை மாற்றி அதைத் தானே உடுத்த எண்ணி அதைக் கொண்டு வரும்படி லாரைன் பணித்தாள். அது வண்ணானிடம் போயிருக்கிறது என்று கூறி டார்னார்டு தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டாள். ஆனால் உண்மையில் அந்த உடையையும், பிள்ளைகளுக்காக லாரைன் கொடுத்த உடைகள், உணவுகள், சிற்றுண்டி கள், பணம் யாவுமே, டார்னார்டின் பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்கும்தான் பயன்பட் டன. பிள்ளைகளை இருவரும் அடக்கி ஒடுக்கி அச்சுறுத்தி வைத்து லாரைனின் குடும்பப் பணத்தைக் கூட்டாகக் கொள்ளை யடித்து வந்தனர். “அம்மாவிடம் எந்தச் செய்தியைக் கூறினாலும் உதை” என்று இருவரும் பிள்ளைகளை உறுக்கி வைத்திருந்தனர். இந்த அட்டூழிய ஆட்சிக்கு எட்டு ஆண்டுகளாகப் பிள்ளைகள் வாய் திறவாமல் ஆட்பட்டிருந்தனர். 

அவள் மனத்தில் படிப்படியாகப் பல ஐயங்கள் ஏற்பட்டன. ஆனால் அவள் ஐயங்களை யெல்லாம் கூளி குறளிகளாக்கும்படி உண்மை கோரமான பெரும் பேயுருவில் ஒரு நாள் வெளிப்பட்டது. அவள் எதிர்பாராது வீட்டுக்குத் திரும்பிவந்தபோதெல்லாம் ஆசிரி யர் பிள்ளைகளின் பயிற்சியில் ஈடுபடாததைக் கண்டாள். டார்னார்டும் தன் கடமைகள் எதுவும் செய்யாது எங்கோ சுற்றுவதும் தெரிந்தது. ஒரு நாள் எதிர் பாராத விதமாக அகஸ்டி ஒரு கடிதத்தைக் கையில் ‘கொண்டு செல்வதை அவள் கண்டு விட்டாள், அவளைக் கண்டதும் சிறுவன் கடிதத்தை ஒளித்து வைப்பது அவள் ஐயத்தை இன்னும் பெருக்கியது. 

“கடிதம் யாருக்கு?” என்று கேட்டாள் அவள்.

சிறுவன் நடுங்கினான். ஒதுங்கி ஓடத் தலைப்பட் டான். நிலைமை பின்னும் பெருத்த கிலியூட்டிற்று. அவள் சிறுவனை எட்டிப் பிடித்துத் தன் அறைக்குள் கொண்டு சென்று அறைக் கதவை உள்ளிழுத்துப் பூட்டிவிட்டுக் கடிதம் யார் கொடுத்தது என்று கேட்டாள். அவன் நடுங்கிக்கொண்டே ஆசிரியர் டார்னார் டுக்குக் கொடுக்கச் சொன்னதென்றும், அதை வேறு எவரிடமும் கொடுத்தால் தனக்குத் தண்டனை கிடைக்கு மென்றும் கூறினான். 

கடிதம் துறவியாகிய ஆசிரியரால் தன் காதற் கிழத்தியாகிய டார்னார்டுக்கு எழுதப்பட்டிருந்தது. அகஸ்டியையும் டார்னார்டின் கணவனையும் நஞ்சிட்டு விரைவில் கொன்றுவிடும்படி கூறி அதற்கான திட்டத்தை ஆசிரியர் அதில் விரித்திருந்தார். அதை வாசித்ததும் லாரைன், இடியுண்டவள் போலத் திடுக்கிட்டாள். அவள் மூளை கனவேகமாகச் சுழன்றது. அகஸ்டியை ஏன் கொல்ல வேண்டும்? ஆம்; இப்போது அவளுக்கு விளங்கிற்று. அது அவள் மடத்தனத்தின் பயம்தான். அகஸ்டியின் கல்வியை விரைவில் முற்று விப்பதற்காக அவள் ஒரு பெருந்தொகையை அவன் கல்விக்கென்று எழுதி வைத்து, கல்விப் பயிற்சிக் காலம் முடிவுற்றதும் அதை ஆசிரியர் பெற்றுக் கொள்ளலாம் என்று வரைந்திருந்தாள். அகஸ்டி கல்விப் பயிற்சிக் காலம் அவன் சாவினால் எளிதில் முடிந்துவிடும் என்று துறவியின் பேய் உள்ளம் திட்ட மிட்டிருக்க வேண்டும். சட்டத்தின் பிடி எழுத்தின் வாசகத்தையே பற்றி நிற்கும் என்ற கோர உண் மையை அவள் கண்டாள். 

டார்னார்டின் கணவனைக் கொல்வதற்கான காரணத்தைக் தேடிப்பார்க்க வேண்டியதில்லை. கண வனைக் கொன்றாலே சட்டப்படி அவளை மணக்க முடியும். துறவி என்ற நிலையைப் பெயர் மாற்றத்தால் தகர்க்க அவர் திட்டமிட்டிருக்கலாம். 

தன்னைச் சூழ இருந்த இடம் அவளுக்கு விழிப்பும் எச்சரிக்கையும் ஊட்டிற்று. நிலைமை முற்றி விட்டது. தலைக்கு மிஞ்சுமுன் விரைந்து செயலாற்ற அவள் விரைந்தாள். நம்பகமான வேலையாள் மூலம் காவல் நிலையத்துக்குக் குறிப்பு வரைந்தாள். காவல் துறை யினர் வருவதற்குள் இருவரையும் தன்னறை வரும்படி. ஆளனுப்பினாள். இருவரும் எச்சரிப்பின்றித் தனித் தனியாக வந்தனர். உள்ளே வந்தபின் இருபுறமும் காவலர் வந்து சேர்வது கண்டனர். 

காவலரிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. காவ லர் இட்டுச் செல்லும்போது ஆசிரியர் கண்களில் தீப் பொறி பறக்க லாரைனை உறுத்து நோக்கிச் சென்றார். ‘இனி இவள் நம் வாழ்நாள் எதிரி’ என்பதை அந் நோக்கு அவளுக்கு அச்சுறுத்திக் காட்டிற்று. 

நல்ல காலமாகச் சட்டத்தின் பிடி அவர்களை ஆறு மாதம் கடுங்காவலிலிட்டது. ஆறு மாதம் கழிந்தது. அவர்கள் வெளி வந்ததும் அவளுக் கெதிரான ஆழ்சதிகளில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சதி நெருப்புப் பற்றுமுன் மாபெருந் தீயாகிய ஃபிரெஞ்சுப் புரட்சி எழுந்தது. அதன் ஈர்ப் பிலும் சுழலிலும் துறவி பெர்னார்டின் பழிகளுக்கு வேறு வழிகள் ஏற்பட்டன. 

லாரைன் பிள்ளைகளிடமிருந்து படிப்படியாகக் கழிந்த எட்டாண்டுச் செய்திகளனைத்தும் கேட்டறிந்து பின்னும் திகில் கொண்டாள். பிள்ளைகளுக்காகத் தான் கொடுப்பதாக நினைத்த பண மட்டுமன்றி உணவும் உடையும் அவர்களுக்குப் போய்ச் சேராதது, தாயுடன் அன்புப் பாராட்டப்படாது, பேசப்படாது என்பதற்காக அவர்கள் அடித்தடக்கப்பட்டது; ஒருவர் மீது ஒருவர் ஒற்று வேலைக்கு ஏவப்பட்டது. ஆகிய யாவும் வெளி வந்தன. எத்தகைய பெருங்கசத் தருகில் சென்று கொண்டிருந்தோம் என்ற அதிர்ச்சி அவளைச் சில நாள் படுக்கையில் தள்ளியது. 

உடல் தேறுவதற்காக அவள் சிலநாள் வெளியே செல்ல எண்ணினாள். அப்போது அரசியல் சூழ்ச்சி களின் காரணமாக மிகவும் அல்லற்பட்டு நாட்டுப்புறத் தில் ஒரு தனி இனிடத்தில் ஒதுங்கியிருந்த அரசி தன் கலைப்பண்ணைக்கு வரும்படி அழைத்தாள். அங்கே. அவர்கள் இருக்கும்போதுதான் மூரட்டினிடமிருந்து கிளிகள் பரிசாக அனுப்பப்பட்டிருந்தன. அரசி மூரட் பற்றியும் மற்றச் செய்திகளையும் நலங்களைப் பற்றியும் கனிவுடன் உசாவி உரையாடினாள். ஆனால் அரசி இப்போது லாரைனின் நிலையைவிடமிகவும் உயர்நிலையி -லில்லை. அரசவைச் செலவு மீதும் அவள்மீதும் ஏற் பட்ட தூற்றுரை புரட்சிக்காற்றின் ஆற்றலால் புகைந்து அனன்று அழலாயெழத் தொடங்கியிருந்தது. அதன் முன்னறிகுறியாக அவள் முகத்தில் துயர்க் குறிகள் படர்ந்து நிழலாடின. 

இதழ் 34 – அடிலியின் திருமணம்

ஸெனகலிலிருக்கும்போது மூரட் லாரைனைப் பற்றிய தன் எண்ணங்களையெல்லாம் கடிதங்களில் கொட்டி அதை அவள் பார்வைக்கே அனுப்பி வந்திருந் தான். ஆனால் லாரைன் அவனுக்கு எழுதிய கடிதங்களில் தன் துயரம், தன் எண்ணங்களை முழுதும் கொட்டவில்லை. அதே சமயம் எழுத்தாளராகிய. அவளால் எங்கேனும் அவற்றைக் கொட்டிப் பதிவு செய்யாமலும் இருக்க முடியவில்லை. பிரிவுகால நெருக்கடி தீர்ந்தபின் இருவரும் மீண்டும் பார்க்கும்படியான வடிவில் அவள் தன் நாட் குறிப்பில் அவற்றை நிழற் படம் பிடித்து வைத்தாள். அது ஒரு சோகக் காவிய மாயினும் அதேசமயம் பெண்மையின் பொறுமை வீர காவியமாகவும் விளங்கிற்று. அதில் அவள் துயர்கள், அவற்றை அவ்வப்போது ஆற்றிய தன் ஆறுதல் எண்ணங்கள் ஆகியவை இடம் பெற்றன. 

ஸெனெகலுக்கு மூரட் புறப்பட்ட காலமுதலுள்ள அவள் வாழ்வையும் எண்ணங்களையும் அவள் காதல் ஒழுக்கின் போக்குகளையும் அவை நிழற்படுத்தின, 

1786 ஜூன் 16. உங்களைக் குறித்தே, என் அருமைக் கணவனே, நான் நேற்றுக் கனவு கண்டேன். நனவில் உங்களிடம் நான் பெரிதும் காணாத அமைதியைக் கனவில் உங்களிடம் இருக்கக் கண்டேன். ஆனால் நம் காதலுக்குக் குந்தகமாயிருந்த பேயுருவ மனிதர்கள் புற்றீச்சல்கள்போல வாயில்கள் வழியே உள் நினைந்தனர். நீங்கள் மறைந்துவிட்டீர்கள். 

இன்று கோமகன் டார்ட்டாய் வீட்டு விருந்துக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள வாண வேடிக்கையில் ஆழ்ந்தேன். ஒளியண்டங்களை உள்ளடக்கிய ஒளி அண்டங்களுள் நானும் என் சிறு உலகும் அடங்கிக் கிடந்ததாக எனக்குத் தோன்றியது. இவ்வளவு பெரிய அகிலாண்டத்துள் ஒரு சிறிய உலகில் வாழும் சிறியவ ளாகிய நான் விரும்பியபடி எதுவும் ஏன் நடக்கவில்லை என்பதை இப்போது அறிந்து அமைதியுற்றேன். 

ஜூன் 19: நான் இப்போது தனியே இருக் கிறேன் – தனியே இருக்கிறேன் என்று கூறுவதைவிட என் நண்பருடனும் அவர் நினைவுகளுடனும் ஊடாடு கிறேன் என்று கூறலாம். நினைவுகளில் சில துயர் நினைவுகள் கறுப்புடையில் தோன்றின. ஆனால் சில இன்ப நினைவுகள். அவை நீலம், சிகப்பு, வெள்ளை முதலிய பன்னிறங்களில் ஊடாடின. 

உங்களைக் காதலிக்கும்போது அக்காதலின் தன் மையை அறியாது காதலித்துவிட்டேன். அது இவ் வளவு இடர் நிறைந்ததென்று தெரிந்திருந்தால், அதை உள்ளத்தின் வாயில் கடவாமல் தடுத்திருப்பேன். 

ஜூன் 23: தோட்டத்தில் உலவும் ஆவிபோலப் பகலின் ஒரு பகுதியை நிழல்களுடன் நிழலாகக் கழிக்கிறேன்- அந்நிலையிலும் என்னினும் உருவற்ற நிழல் ஒன்று என்னைத் தொடர்வதாகத் தெரிகிறது. ஏனெனில் அடிக்கடி யாரோ காலூன்றிப் பின்னாடிவரும் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். எட்டு மாதங்களுக்கு முன் காதுகளில் தோய்ந்துவிட்ட உணர்ச்சி இன்னும் விட்டபாடில்லை. 

ஜூன் 28: முதல்நாள் உங்களைக் கண்டபோது கொண்ட உணர்ச்சியையே இன்றுகூடக் கொள்கிறேன். என்றும் இந்நிலைதான் என்றே எண்ணுகிறேன். ஏனெனில் நீங்கள் என் உயிர். உயிரில்லாது உடலிருக்க முடியாததுபோல் உங்களை நினைக்காமல் நான் இருக்க முடிவதில்லை. உயிர் விட்டுப்போக விரையும்போதும் உடல்தானே துடிக்கிறது! 

ஆகஸ்டு 17: நீங்கள் சிறிது ஓய்வுபெறத் திரும்பி வருவதுகேட்டு உவகை கொள்கிறேன். என் கருத்துக்க ளெல்லாம் இந்தப் புது மகிழ்ச்சியில் குலைகின்றன. என் அங்கமெலாம் நடுங்குகின்றது-உன் வரவு ஒன்று தவிர எதுவும் பார்க்காது கண் குருடாய், அது தவிர ஒன்றும் கேட்காது காது செவிடாய் இயங்குகின்றன. 

இச்சிறு சந்திப்பு உறங்கும் துயரைத் தட்டி எழுப்பியதன்றி வேறல்ல. அடுத்த நாட்குறிப்புப் பகுதி இதைக் காட்டுகிறது. 

1787 ஜனவரி 22: என் நெஞ்சில் காதலின் இடத் தில் காலன் வந்திருப்பது போல இருக்கிறது. பக லெலாம் வேதனை, இரவெல்லாம் துயரம். பிரிவின் போது பட்ட துயரம் தேவலை; இந்த நீடித்தமைந்த துயர் தாங்க முடியவில்லை. இவ்வுயிரைப் போக்கிவிட முடியுமானால் எவ்வளவோ ஆறுதலாகத்தான் இருக்கும்! 

மே 7: ஏனிஸியை விட்டுச் செல்கிறேன்-சிறிதும் வருத்தமின்றி. அங்கே உங்களைப் பற்றிய எண்ணம் என் பிரிவுத் துன்பத்தை எண்ணெயிட்டு வளர்க்கிறது மாவட்டத் தலைமகனிடம் என் மற்றப் பொருள்களை எல்லாம் ஒப்படைத்துவிட்டேன். அவரிடமிருந்து புது மாற்றுப் பொருள்களும் பெற்றுக்கொண்டேன். இதுவும் உங்கள் பற்றிய நினைவுறுத்துகளை விலக்குவதற்காக முதலில் நீங்கள் இருந்த அறைக்கு அடுத்த அறை எனக்குக் கொடுக்கப்பட்டது. இதுவும் தொல்லையாகத்தான் இருந்தது. நயமாகப் பேசி தலை மகனையே அந்த அறைக்கு வருவித்து நான் அவன் அறைக்குச் சென்றுவிட்டேன். இப்போது எனக்குச் சிறிது அமைதி ஏற்படக்கூடும். 

காலம் என்னை மாற்றிவருகிறது. என் குணம்கூட மாறி வருகிறது. எவரிடமும் வெறுப்பும் கசப்பும் மிகுந்து வருகின்றன. என்னை நானே அறிய முடிய வில்லை. நீங்கள் திரும்பி வரும்போது நான் எப்படி யிருப்பேனோ, உங்களால் அறியக்கூடுமோ என்னவோ? 

மே 15: பகலெல்லாம் நான் பிள்ளைகளுடன் உலவு கிறேன். அடிலி வளர்ந்துவிட்டாள். நான் நள்ளிரவி லேயே குளிக்கிறேன். குளித்தபின் தான் இந்நாட் குறிப்பை எழுதுகிறேன். பகல் நேரத்தில் பிள்ளை களிடமிருந்து பிரியாதிருக்கவும் இரவுப்பொழுதை எளிதில் போக்கவும் இது உதவுகிறது. 

மே 19: பழைய நாள் திரும்பி வரும் என்ற நம்பிக்கை எனக்குக் குறைந்து வருகிறது. ஆனால் இது என் குற்றமன்று, உங்கள் குற்றம். இதுவே என் ஆறுதல். பழைய நாளை நீங்கள் பறிக்கலாம்—அந்த எண்ணங்கள் மட்டும் எப்படியும் எனதுதான். 

மே 29: நீங்கள் அனுப்பிய பரிசுகள் பெற்றேன். தங்களைப்பற்றியே நண்பர் பேசினார். இன்றும் அவ் வின்பத்தை நீடிக்க எண்ணி அவரை இங்கேயே தங்கி விருந்தினராயிருக்க அழைத்தேன். உங்கள் உடல் நிலையை அவர் அறிவித்து எனக்குச் சிறிது வருத்தமும் தந்தார். 

ஜூலை 5: கொச்சின் சீ னாவிலிருந்து வந்த அரசிளங்கோ பெருங்குறும்பர். உங்கள் பரிசுக் கிளி களைக் கூண்டிலிருந்து திறந்து விட்டுவிட்டார். ஆயினும் புதிய பரிசுகள்தாம் உங்களைப்போல ஓடின. என் பழைய கிளிகள் கூண்டு திறந்ததும் உள்ளேயே இருந்துவிட்டன. அவை பெண்களினத்துக்குரியவை போலும்! 

இம்மாதத்தில் அடிலிக்கும் அர்மாண்ட் டிகஸ்டின் என்ற இளைஞருக்கும் மணஒப்பந்தம் ஏற்பட்டது. காத லர் இன்பப் பொழுது போக்கை நாடி லாரைன் தன் குழந்தைகளுடன் அருகாமையிலுள்ள ‘மென்டன்’ என்ற இடத்துக்குச் சென்றனர். பின் மீட்டும் ஏனிஸி வந்தபின் மண வாழ்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. 

மண விழாவைப்பற்றி லாரைன் மணநாளாகிய ஜுலை 31-உ நாட்குறிப்பில் தன் எண்ணங்களைத் தீட்டிக் காட்டினாள். தன் குடும்ப நிகழ்ச்சியைக் கூடக் கலைத் திறம்பட எழுதும் லாரைனின் எழுத்தாளர் திறமை இக் குறிப்பில் விளங்குகிறது. 

ஜுலை 31: மணமகன் பாரிஸிலிருந்து புறப்படும் போதே அவருக்கு ஒரு பல்லில் நோவு தொடங்கிற்று. 

சொத்தையான பல்லைப்பிடுங்காமல் மண விழாவுக்குப் புறப்பட மாட்டேன் என்று அவர் பிடிவாதம் செய்தார். மணவிழா மகிழ்ச்சியும் காதலும்கூட நோவைத் தடை செய்ய முடியாதென்றும், மண விழாவின்போது நோவு இருந்தால், மணவிழாவை நினைக்கும் போதெல்லாம் நோவும் அவ்வெண்ணத்துடன் கலந்து திரும்பும் என்றும் அவர் அழகாக வாதாடினார். ஆனால் பல் மருத்து வர் அவர் பல்லைப் பிடுங்கும்போது பல்லை மட்டுமன்றி அவர் உள்தாடையின் ஒரு சிறு கூறினையும் சேர்த்துப் பிய்த்தெடுத்து விட்டார்… 

நான் அவர்களுக்குக் காலையுண்டி அளித்தேன். ஆனால் உண்டியைவிட அவர்களுக்கு ஓய்வே மிகவும் தேவையாயிருந்தது. அனைவரும் படுக்கைக்குச் சென்றபின், நான் எனக்கு இந்நிகழ்ச்சியால் ஏற்பட்ட திடீரதிர்ச்சியினின்று சமநிலை ய்மைதி பெறுவதற்காக நான் என் அறைக்குச் சென்றேன். ஏழை அடிலி என் நிலையினும் மோசமாகவே இருந்தாள். அச்சம் அவள் உள்ளத்தை மட்டுமன்றி உடலையும் வாட்டியது. இரவெல்லாம் அவளை நான் என்படுக்கையிலிட்டுப் போர்த் திக் குளிர் வராமல் பாதுகாத்தேன். அவளும் ஒரு சிறிதுகூடக் கண்ணயரவில்லை; நானும் அப்படியே. அவளுடைய புதிய மாறுதல் நிலைபற்றி நான் அவளுக்கு எதுவும் அறிவிக்காமலிருந்து விட்டேன். ஆயினும் அதனால் அதிர்ச்சி ஏற்படாத வகையில் எல்லாம் ஒழுங் கமைக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் தன்னையறி யாமல் வரும் இப்புது நிலைப்பற்றி அவள் இது காரண மாகவே இரட்டிப்புத் திகில் கொள்ளும்படியாயிற்று. புதுவரவு நான் எதிர்பாரா வகையில் அவள் அமைதி முற்றிலும் குலைத்தது. 

மூன்றுமணி நேரம் இருவரும் இந்நிலையில் படுக் கையிலிருந்தோம். இருவரும் எழுந்திருக்க வேண்டும் என்ற சிந்தையே யில்லாமல் தான் இருந்தோம். ஆனால் இறுதியில் கடிகாரத்தின் பக்கம் என்கண் திரும்பிற்று. ஒரு மணிக்குத் திருமணம். இப்போது இதற்குள்ளா கவே மணி பதினொன்றாயிற்று. இரண்டு மணி நேரத் துக்குள் அவள் உடுத்தி அழகு ஒப்பனை செய்தாக வேண்டும். அவள் வருங்காலக் கணவனின் முதல்நாள் காட்சியின் முழுப் பயனை அப்போதுதான் அவள் அடைய முடியும். 

ஒரு மணிக்கு எல்லாம் சட்டமாயிற்று.மிகுந்தபெரு மிதத்துடனும் ஆழ்ந்த அமைதியுடனும்முறைப்படிமண உலாவுக்குப் புறப்பட்டோம். அடிலியை கைப்பிடித்து நான் முன்னும், மணமகனைக் கைப்பற்றிக் கொண்டு அவர் தந்தை பின்னும் சென்றோம். மணமேடையின் முன் என் மகளை விட்டுப் பின்னடைந்தபோது என் நெஞ்சு துடியாய்த் துடித்தது. ‘ஆம்’ என்ற அந்த நிறை முதன்மையுடைய சிறிய சொல்லை, ஒரு தடவை வாய்விட்டுரைத்தபின் மீட்கமுடியாத அப்பெருந்திறச் சொல்லை, எவ்வளவு கழிவிரக்கம் கொண்டாலும் பயன் ஏற்றுத் தீரவேண்டிய அவ்வலிவு சான்ற சொல்லை அவள் வாய் ஒலித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சியைவிட உண்மையில் நான் அதே சொல்லைச் சொல்லிய போதுள்ள உணர்ச்சி மிகமிகக் குறைவே. ஆயினும் என்னதினும் இச்சொல் இங்கு எவ்வளவு மேம்பட்டது! 

நான் முதுமை வாய்ந்த, ஒரு நோய்ப்பட்ட மண மகனைக் கட்டிக் கொண்டு, அவருக்குப் பெரும்பாலும் மனைவியாயிருப்பதினும் நோய் மருத்துவர் ஆகவே இருந்து வந்தேன். அவளோ அழகும் குணமும் வாய்ந்த நல்லிளைஞனை மணக்கிறாள். அன்று நான் அம்மண விழாவின் விளைவுகள் குறித்துச் சிந்திக்கே யில்லை; என் கண்களுக்கு, எல்லாவற்றையும் எல்லாரை யும் ஒருங்கே நேசித்த என் கண்களுக்கு அன்று எல் லாமே ஒரே தன்மையாக நல்லனவாகத்தான் தென்பட் டன. அன்று காதல் என்பது இன்னது என்பதை மட் டுமே நான் அறியாதவளாயிருந்ததினால் நான் என்வயது சென்ற கணவனை என் தந்தையையும் பாட்டனையும் நேசித்த அதே முறையிலேயே நேசித்தேன். காதலினும் மெல்லிய இப்பிஞ்சு உணர்ச்சி அன்று என் உள்ளத். துக்கு நிறைவளித்தது. ஆனால் காலம் என்னை வஞ்சித்து விட்டது. அதுமட்டுமின்று. இன்பத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் அது அழித்து விட்டது. 

ஆகவேதான் மகளின்மணவினையின் போதெல்லாம் என் கண் ஆறாத நீர் ஒழுக்கிற்று. அச்சமயம் மற்றவர் கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் உணர்ச்சிகள் என்னை மீறின. நான் வசமிழந்தேன். 

என் அடிலியின் கண் கலங்கவில்லை. ஆனால் அவள் முகம் மெலிவால் நீண்டு காணப்பட்டது. அவள் கண வன் தோற்றமும் இன்பத்தில் உறுதியுற்றதாகக் காணப் படவில்லை. தலைமகனார் அறிவும் உணர்ச்சியும் வாய்ந்த நல்லுரையாற்றினார்; அனைவர் உள்ளங்களும் கனிவுற்றன. மணமக்கள் மேற் கவிகையை அகஸ்டியே தாங் கினான். ஆனால் அவன் உயரம் பற்றாததால், அவன் ஒரு உயரிய நாற்கலிமீது நிறுத்தப் பட்டிருந்தான்! அதன்மீது அவன் நின்ற தோற்றம் இயேசு பிறப்புப் பற்றி அறிவிப்பதாகப் படங்களிங் காணப்படும் அற மைந்தருள் ஒருவன் தோற்றத்தை நினைவூட்டுவதாக. இருந்தது. 

விழா வினை முடிந்ததும் முன்போலவே ஊர்க்கோல மாக மீண்டோம்-ஆனால் இப்போது என் புதல்வியை மணமகன் தந்தையாகிய டிகண்டினும், மணமகனை நானும் பற்றிக்கொண்டு சென்றோம். முன்னிருந்த அதே அமைதி நிலவியிருந்தது. மாளிகைக் கூடத்தில் எங்களுக்காகச் சிற்றுண்டி காத்துக் கொண்டிருந்தது. 

சிற்றுண்டிக்குப்பின் நாங்கள் தோட்டத்தில் உலா வச் சென்றோம். ஆங்கே ஊர்த்தலைவன் ஆயர் ஆய்ச்சியர் படைசூழ மணமக்களைப் பாராட்ட வந்தனர். ஆயர் ஆய்ச்சியராக நடித்த ஒவ்வொருவரும் ஒரு காதற் பாடலின் இரண்டிரண்டடி ஒவ்வொருவராகப் பாடினர். பின் நாட்டுப்புற இசைக் கருவிகளுடன் களங்கமற்ற நாட்டு ஆடல்களில் நாங்கள் கலந்துகொண் டோம். ஆடலில் டிகண்டினுடன் நான் ‘ஆட்டத்தைத் தொடங்கி வைத்தேன். என் குழந்தைகளுடன் நான் அன்று ஆடிய ஆட்டத்தினும் மகிழ்ச்சியுடன் நான் என்றும் ஆடியதில்லை என்று உறுதியாகக் கூறலாம். ஆடல் பாடல்கள் நாள்முழுதும் நடைபெற்றன. நாங் கள் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாயிற்று. பாட்டுக் கள் நாட்டுப்புறக் கவிஞரால் கட்டப்பட்டவை. அவற் றுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று, தச்சனால் இயற்றப் பட்டிருந்தது. அத்தச்சன் ஆதாமின் நேர்மரபில் வங் தவன் என்று கூறத் தடையில்லை! பாட்டின் வகைக்கு அவன் ஏதோ ஒரு பெயர் குறித்திருந்தான். ஆனால் .அவன் அதை எழுதிய தாள் இருபது புத்தகத்தாளை அடக்குவது. அதில் அவன் நாலு பக்கங்கள் தான் எழுதியிருந்தான்! அடேயப்பா! அந்தப் பாடலுக்கு முடிவு என்று ஒன்று இருக்குமா என்று நாங்கள் நீண்ட நேரம் ஐயுறவு கொண்டோம். இந்த நிலையில் நாங்கள் நன்கு கேட்கும்படி அவன் ஒரு நாற்காலியின் மேல் நின்று கொண்டு. கால் புள்ளி முற்றுப்புள்ளி விடாமல் நிறுத்தி வாசித்தான். 

ஆடி ஓய்ந்த பின் சிறிது நாட்டுப்புற விளையாட்டு விளையாடினோம். அதன் பின் தலைமகனார் எட்டுமணிக்கு விருந்தளித்தார். தலைமகனார் விருந்து வழக்கம் போலவே முழு நிறைவுடையதாயிருந்தது. விருந்து நெடுநேரம் நடந்தது. அதன் பின்னும் விளையாட்டு. அதன் பின் எங்கள் இரவு-மணமக்கள் புது விடியல் போது, மணமகளை மன்றற் படுக்கைக்கு அழைத்துச் செல்லும் போது மணமகளுக்கிருந்த நடுக்கமும் மலைப்பும் கிட்டத் தட்ட எனக்கும் இருந்தது. வயது மிகுதியாயினும் கூட, இன்றைய நிகழ்ச்சிகள் இன்னும் மிகப்பல-அவற்றைத்தெரிவிக்கும் இடம் இதுவன்று- என் மூரட்டுடன் தனி வண்டையிருந்து அவனைச் சிரிக்க வைத்து மணிக் கணக்கில் வருணிக்க வேண்டிய சிறு காட்சிகள் உண்டு. ஆனால் அவற்றுள் ஒன்று மணமகளுக்கு ஒரு சிறு தூண்டுதல் செய்யும்படி மணமகன் தந்தையை நான் தூண்ட நேர்ந்தது. அச் சமயம் எனக்கிருந்த அறைப்பு-என் வாழ்நாளில் அது போல் என்றும் இருந்ததில்லை-அதனால் சிவப்பேறிய முகம் இன்னும் சிவப்பு மாறவில்லை, இந்நிலையை என் மூரட் காண வேண்டும்! 

அடிலி திருமணத்துக்குப் பின்னும் இரண் டாண்டுகள் லாரைன் தன் வழக்கமான தனி வாழ்வு வாழ வேண்டியிருந்தது. அவளுக்கு இப்போதிருந்த ஒரே இன்பம் இளங் காதலருடனும் புதல்வனுடனும் விருந்து, உலா அயர்தம் மலை, ஆறு முதலிய இயற்கைக் காட்சிகளை அவர்களுடன் அனுபவிப்பதுமேயாகும். அடிக்கடி அவள் நாட்டுப்புறக் குடும்பங்களைச் சென்று பார்வையிட்டு அவர்களுடன் தங்குவாள். நாட்டுப் புறக் குடும்பங்களின் அமைதி அவள் உள்ளத்துக்குத் தற்காலிகமாகவாவது முழு நிறைவளித்தது. இவற்றைப் பற்றி யெல்லாம் கடிதங்களிலும் நாட்குறிப் புக்களிலும் எழுதும்போது, அவள் தன்னை இரு சொற் களால் குறிக்கத் தொடங்கினாள். இவற்றுள் ஒரு சொல் சிறு வகைச் சொல் ஆயினும், கேலியுடனும் அகமகிழ் வுடனுமே எழுதப்பட்டது. இதுவே லாரைன் தன்னைக் குறிக்கு மிடத்து ஆக்டேவ் மூரட்டின் காமக்கிழத்தி என்று குறிக்கும் இடங்கள் ஆகும். காமக்கிழத்தியரால் உலைவு பெறாத நிறை இன்பம் என நாட்டுப்புறக்குடும்ப வாழ்வு ஒன்றை அவள் குறிப்பிட்டாள். தன்னைக் குறிக்க அவள் வழங்கிய இன்னொரு சொல் ஒரு குற்றச் சாட்டாகவும்—அதே சமயம் அவள் பிரிவுத் துயரத்தை நன்கு சித்தரிப்பதாகவும் உள்ளது. அவள் பல கடிதங்களின் இறுதியிலும் போக்கிலும் தன்னை “உன் விதவை லாரைன்” என்று குறிக்கிறாள். உயிருடனிருந்தும் உடனிராத அவன் வன்கண்மையை இது நயத்துடன் எடுத்துக் காட்டுகிறது. 

அவள் துயரம், அவள் காதலார்வம், உள்ளத் தூய்மை, கற்பு உரம் ஆகிய யாவற்றையும் ஒரு கடி தம் படம் பிடித்துக் காட்டுகிறது. “உலகில் யாவும் நிலை யற்றது-உங்களையும் உங்கள் காதலையும் தவிர…. கடவுளைத் தவிர என்றார் சாலமன். ஆனால் என்கடவுள் நீங்கள் ஒருவரே; வேறு எந்தக் கடவுளையும் நான் அறிந்து கொள்ளவில்லை. உங்களுக்காக நான் படும் துன்பத்தில் ஓராயிரம் பங்கு நான் எந்தக் கடவுளுக்குப் பட்டிருந்தாலும் அந்தக் கடவுளின் துறக்கமும் அந்தக் கடவுள் நெறியின் திருநிலைத்தகுதியும் எனக்கு. முழுவதும் கிடைத்திருக்கும்…. எனவே நான் மிகவும் மோசமான கடவுளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் என் கடவுள்தான் காரியவாதி, தான்தோன்றித் தனமுடையவர்; அன்ப ராகிய என் உள்ளத் தடத்தின் ஆழ்ந்த அன்புக் கனிவை உணராதவர். என் துயரை என் அன்பை அளக்கத் தக்க அளவுகோலாக அவர் துயரும் அன்பும் இல்லை. இத்தகைய அன்புக்கு எனக்குக்கிடைக்கும் கைம்மாறோ, ஆதரவும் ஆறுதலும் எப்போது மிக மிகத் தேவையோ அந்த நேரத்தில் கைவிடப்பட்டு, துறக்கப்பட்டு இருப்பதுதான்… ஆயினும் இவ்வளவறிந்தும் ஏதோ ஒரு ஆழ்ந்த இயற்கையான மடமைச் சக்தி என்னை ஆட்டிக் கொண்டிருக்கிறது. வேறு எந்த நல்ல கடவுள் வேறு எந்த உலகும் பதவியும் இன்பமும் தருவ தானால் கூட அவற்றை மறுத்து இக்கடவுள் தரும் துன்பங்களையே விருப்புடன் ஏற்பவளாயிருக்கிறேன்!” 

ஆக்டேவ் மூரட்டின் நீண்ட ஆபிரிக்க வாழ்வு 1788 இறுதியில் முடிவுற்றது. போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே என்பது போல அவன் முன்னைய வறுமையை இன்னும் பெருக்கிக் கொண்டு முன்னிலும் வெறுங்கையனாய், கசப்புடையவனாய், ஆனால் முன்னிலும் ஆர்வமிக்கவனாய் வந்து சேர்ந்தான் ஆபிரிக்காவுக்குச் செல்லாமலிருந்திருந்தால், இந்த நீண்டகாலப் பிரிவும் அதன் துன்பங்களும் மிச்சமா யிருக்கும். அவன் அவா, ஆர்வம், ஆணவம், அவன் காதற் பணிவுக்குத் தண்டனை தந்து, அவன் காதல் வாழ்வையும் தடுத்து அவனையும் துன்பத்துக் காளாக்கியிருந்தது.

– தொடரும்…

– வாடாமல்லி (நாவல்), முதற்பதிப்பு: ஜூலை 1965, சேகர் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *