வயசாயிடுத்து
கதையாசிரியர்: வாஷிங்டன் ஶ்ரீதர்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 206

கோபம் மிகும்போது நிதானம் தவறும். நிதானத்துடன் சேர்ந்து போவது சிந்திக்கும் சந்தர்ப்பமும். எல்லா குடும்பங்களிலும் நடப்பதுதானே? அதற்கென்ன இப்போது இந்தக் கதை? நியாயமான கேள்வி. பதில் கதையில் இருக்கவே, கதையை சொல்லியே ஆகவேண்டும்.
சென்னையில் செய்தி பத்திரிக்கை படிப்பவர்கள் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைந்து விட்டார்கள். ஆனால், இன்னும் தினசரி படித்துக்கொண்டே பில்டர் காஃபி குடிக்கும் சிலருள் ஒருவர் சுந்தரம்.
இவருக்கு ‘வயசாயிடுத்து’ என்று யார் யாரோ சொல்லும்போது, ‘அப்படி என்னய்யா ஆச்சு?’ என்று பதிலடி கொடுக்க நினைத்தாலும், நாவை அடக்கிக் கொண்டு யோசனையில் மூழ்குவார் சுந்தரம். காலையில் படிக்கும் செய்தி மாலையில் முழுக்க மனசில் நிற்பதில்லை என்றால் வயசுதான் காரணமா – இப்படியும் யோசிப்பவர் சுந்தரம். மறு கணம் வேறுபட்ட எண்ணமும் குறுக்கிடும். ‘வயசாயிடுத்து’ … ‘வயசாயிடுத்து’… இதையே சொல்லி வயசை ஏத்தற எரிச்சலை எப்படி தாங்கறது, தடுக்கறது? குடியிருக்கிற காலனியிலும் சரி, தெருவில நடந்து கடைக்கு போனாலும் சரி, டாக்டர் கிட்ட செக்-அப் போகும்போதும் சரி – 24/7 ‘வயசாயிடுத்து’ ஓலம் காதை துளைக்கிறதே.
“ஏன்னா… நான் சொன்ன சாமான்லாம் போன்ல ஆர்டர் பண்ணியாச்சா?” ஜானகி சமையல் அறையிலிருந்து உரக்கக் கேட்டாள்.
“ஏன் இப்படி நாய்ஸ் பொல்லுஷன் வீட்ல? இங்கே வந்து கேக்கலாமே?” சுந்தரத்தின் எரிச்சலான குரல்.
“நான் கேட்டதுக்கு என்ன பதில்?” விடாப் பிடியாக ஜானகி. இந்த கவுண்டர் – விவாதத்துக்கு பிள்ளையார் சுழியாயிற்று.
மளிகை சாமான்களை ஃபோன் ஆர்டர் செய்யறது ஒரு பகீரத பிரச்சினையா? அன்று ஜானகி-சுந்தரம் தம்பதிக்கு இந்த சொல்ப விஷயம் ஒரு வாக்குவாதமாக விசுவரூபம் எடுத்து, மதியம் ஒரு மணிக்கு இருவருக்குமே தொண்டை கரகரத்து போய், குரல் மேலே எழும்பாமல் போகவே ஒருவழியாக நாய்ஸ் பொல்லுஷன் தானாகவே அடங்கியது. இந்த அர்த்தமில்லாத வாய் இரைச்சலில் பலியான சமையில் திட்டம், வெறும் பருப்பு ரசம், சுட்ட அப்பளம் மற்றும் புளிச்ச தயிர் சாதத்திலும் முடிந்தது. பேச்சே காரமயிருந்ததால் ஊறுகாய் தேவைப்படாமல் போனது.
சுந்தரம் களைத்துப் போய் சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். முன்பெல்லாம் ஜானகிக்கும் அவருக்கும் தர்க்கம் வரும்போது மணி கணக்காக ஓயாது; இப்போல்லாம் ரொம்பவே குறுகி, நிமிஷக் கணக்குல நின்னுடறதே… ‘வயசாயிடுத்து’ போல இருக்கே? வயசாயிடுத்தோ?’
மாலை எட்டு மணி இருக்கும்… வீட்டில் மின் விளக்குகள் சட்டென அணைந்தன; தொலைக் காட்சியில் வழக்கமான தொடரை ஜானகி பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி மறைந்து டீவி ஒளி புள்ளியாகி திரை கறுப்பானது.
ஜானகி எழுந்து நின்றாள். சுந்தரம் தன்னை சுதாரித்துக் கொண்டார். அவளை ஒருதரம் ஏறெட்டுப் பார்த்துவிட்டு பார்வையை கீழ் நோக்கி திசை திருப்பினார். அப்போதுதான் நினைவு வந்தது: ‘அடடா… எலக்ட்ரிசிட்டி பில்’ கட்டவில்லையே… அதான்…’
“இந்த மாசமும் மறந்தாச்சா?” ஜானகியின் கரகரத்த குரல் துல்லியமாகவே ஒலித்தது.
“ம்…ம்…அது…அதான்…”. குற்ற உணர்வு குரலை அழுத்திவிடவே, அன்று காலை பூகம்பம்போல் ஒலித்த சுந்தரத்தின் குரல் அதள பாதாளத்திலிருந்து கேட்டது.
“சின்ன விஷயத்தை பெரிசாக்கி என்கிட்ட பட்டிமன்றம் பேசுவீங்க…ஆனா எது முக்கியமோ அதை சுத்தமா மறந்துடுங்கோ… என்னத்த சொல்றது? வயசாயிடுத்து…”
ஆ…ஆ…நீயுமா ஜானகி? இந்த பிரும்மாஸ்திரம் உங்கிட்டேயும் இருக்கா?
அல்ப சொல்ப விஷயத்துக்கு அங்கலாய்த்துக் கொண்டு, முக்கிய விஷயங்களை கோட்டை விடுவது எந்த குடும்பத்தில்தான் நடக்கவில்லை?
![]() |
பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க... |
