பூந்துறையூர் காவல் படை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 98 
 
 

கொள்ளிடம் ஆறு தனது ஈரக்கரங்களால் ஆரத்தழுவி அணைத்துச் செல்லும் அழகான கிராமம் பூந்துறையூர். அதிகாலைப் பனி இன்னும் அகலாத வயல்வெளிகள். காற்றில் நெற்பயிரின் மணமும், ஆற்றங்கரையில் அல்லி மலர்கள் அசையும் சப்தமும் கலந்து, ஊர் முழுவதும் உலா வந்து கொண்டிருந்தது.

அந்த அதிகாலை வேளையில், பசுமை படர்ந்த வயல்வெளிகளை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்த நந்தகுமாரும் சந்திரனும் ஆற்றங்கரையில் சந்தித்துக்கொண்டனர்.

அப்போது இருவர் அவர்களுக்கு சற்று தள்ளி நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன மணி, உங்க பொண்ணு கல்யாணம் எப்ப வச்சிருக்கீங்க?”

“இந்த மாச கடைசில.. ஆனா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு!”

“ஏன் என்ன விஷயம்?”

“என்னோட பெரிய பொண்ணு கல்யாணம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்தப்ப சில பேரு தண்ணிய போட்டுட்டு வந்து ரொம்ப கலாட்டா பண்ணி அசிங்கப்படுத்திட்டாங்க! அப்ப சமைச்சு வச்சிருந்த மீன் வறுவல், குழம்பு, முட்டை அவியல், குடல் கறி, ரத்த பொரியல், தயிர் பச்சடி, ரசம் எல்லாத்தையும் தூக்கி வெளியில வீசி எரிஞ்சானுங்க! பாத்திரம் பண்டம் எல்லாத்தையும் அங்கங்க தூக்கி போட்டு நொறுக்குனானுங்க. எனக்கு ரொம்ப சேதாரம் ஆயிடுச்சு. அதே மாதிரி இந்த கல்யாணத்திலேயும் நடந்திருமோன்னு ரொம்ப கவலையா இருக்கு! அதனால நான் சாதா சாப்பாடு போடலாம்னு நினைக்கிறேன்.”

“நம்ம ஊர் வழக்கப்படி கல்யாணம்ன்னாலே கறி மீன் சாப்பாடு தான். அந்த பழக்கத்தை மாத்தாதீங்க!”

“அப்படி கறி சாப்பாடு போட்டா தான், கலாட்டா பண்றானுங்களே!”

“இனிமே அப்படி நடக்காது கவலைப்படாதீங்க!”

“இல்ல எனக்கு பணம் காசு செலவானாக கூட பரவாயில்லை! ஆனா சாப்பிட வந்தவங்கள்ல நிறைய பேரு பசியோட சாப்பிடாமலே திரும்பிப் போயிட்டாங்க! சாப்பிட்டுட்டு இருந்தவங்க இந்த கலாட்டாவெல்லாம் பாத்துட்டு அப்படியே இலையை மூடி வச்சுட்டு போய்ட்டாங்க! அதான் எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. இதுக்கு என்ன பண்றதுன்னு தெரியல!”

“நீங்க சொல்ற மாதிரி நடந்ததெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடி. இப்பல்லாம் அப்படி நடக்கிறது இல்ல. நம்ம ஊரு காவல் படை குடும்பம் அதெல்லாம் நடக்காம பாத்துக்கும்.”

இப்படி பேசிக் கொண்டே அவர்கள் அங்கிருந்து ஆற்றங்கரை ஓரமாக மேற்குப் பக்கமாக நடந்தபடி மேலே சென்றார்கள்.

“என்ன சந்திரா, நம்ம ஊர்ல ‘காவல் படை’ குடும்பம்னு அவங்க பேசிக்கிட்டத கேட்டியா … அது யாருன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டான் நந்தகுமார்.

சந்திரன் தன் தோளில் கிடந்த துண்டை உதறிப்போட்டபடி,

“ஆமாண்டா நந்தா, நானும் கேள்விப்பட்டேன். ஆனா எனக்கும் விவரம் தெரியாது. நான் கல்யாணம் முடிச்சு அஞ்சு வருஷமா மாமியார் ஊர்ல இருந்தேனா… இப்பத்தான் நம்ம ஊருக்குத் திரும்பியிருக்கேன். சரி விடு, இன்னைக்கு நடனசிகாமணி ஐயா வீட்டு கல்யாணம். நீ வரியா?”

“கண்டிப்பா வர்றேன்டா. அங்க போனா எல்லா விவரமும் தெரியும், வா!”

பூந்துறையூரின் மதிப்புக்குரிய குருமூர்த்தி ஐயாவின் ‘பசுமை இல்லம்’ பரபரப்பாக இருந்தது. வேப்ப மரத்தின் கிளைகளுக்கிடையே அணில்கள் ஓடிப்பிடித்து விளையாட, தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அதனை அழகாக ரசித்துக் கொண்டிருந்தார் குருமூர்த்தி. ஒரு காலத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர், இப்போது ஊர் பெரியவராகக் கௌரவிக்கப்படுகிறார்.

“வாசுகி… ஏ வாசுகி!” என்று மெல்லக் குரல் கொடுத்தார்.

உள்ளிருந்து வந்த அவர் மனைவி வாசுகி,

“என்னங்க, கிளம்பிட்டீங்களா?” என்றார்.

“இன்னைக்கு நம்ம நடனசிகாமணியோட பொண்ணு கல்யாணம் கும்பகோணத்துல நடக்குது. நீ வரியா?”

“இல்லைங்க, உடம்பு கொஞ்சம் நசநசன்னு இருக்கு. நீங்க மட்டும் போயிட்டு சீக்கிரம் வந்துடுங்க.”

“சரி வாசுகி, அப்ப ஒரு ரெண்டாயிரம் ரூபா கொடு. வரும்போது உனக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வரவா?” என்று அன்புடன் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். புது நெக்ஸான்ல போறீங்க, மெதுவா ஓட்டிட்டுப் போங்க. பசங்களுக்குச் செலவுக்குப் பணம் கொடுத்தாச்சா?”

“அவங்க எல்லாரும் காலையிலேயே வாங்கிட்டுப் போயிட்டாங்க. ஆளாளுக்கு ஆளுக்கொரு திசையில போனாலும், மண்டபத்துக்கு எல்லாரும் காலாகாலத்துக்கு வந்து சேர்ந்துருவாங்க! சரி நான் கிளம்புறேன் வாசுகி”

என்று கூறிவிட்டு விடைபெற்றார் குருமூர்த்தி.

கும்பகோணம் ராயர் திருமண மண்டபம் காலை 8.30 மணிமுதல் ஆட்டம், பாட்டம், கச்சேரி என களைகட்டியிருந்தது.

குருமூர்த்தி காலை 9 மணிக்கே அங்கு சேர்ந்துவிட்டார். அவர் பின்னாலேயே அவர் பிள்ளைகளும் வந்து சேர்ந்தனர். மூத்தவன் பாலகுமாரன் தொடர்வண்டியிலும், இளையவன் சிங்காரவேலன் தன் ‘ராயல் என்பீல்ட்’ வாகனத்திலும், மகள் சிவமணி தன் தோழிகளுடனும் வந்து இறங்கினர்.

காலை பத்து முப்பது மணிக்கு சரியானமுகூர்த்த நேரத்தில், கெட்டி மேளம் முழங்க, மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். அடுத்து தாலி கட்டும் நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அதன்பின் மணமக்கள் நேராக வந்து குருமூர்த்தியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அவர்களைத் தன் இரு கரங்களால் அரவணைத்து ஆசீர்வதித்த குருமூர்த்தியின் முகத்தில் ஓர் ஆனந்த பெருமிதம் அழகாகத் தெரிந்தது.

அப்போது மண்டபத்தின் மேல் ஒரு பறக்கும் பதிவேற்ற கருவி, வண்டுபோல ரீங்காரமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. அதை விசித்திரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஊர் பெரியவர் முத்தண்ணன்.

அப்போது நந்தகோபால் அருகில் இருந்த சந்திரனிடம் கேட்டான்,

“என்ன சந்திரா, கல்யாணம் முடிஞ்சு மூணு பந்தி ஓடிடுச்சு. ஆனாலும் இன்னைக்கு மண்டபத்துல ஒரு கலாட்டாவும் இல்லையே? அமைதியா இருக்கு!”

சந்திரன் சிரித்தான்.

“ஏன்டா, அடிதடி நடந்தாதான் உனக்குத் தூக்கம் வருமா?”

“இல்லடா அப்படி ரகளை நடக்குற இடத்துல, இப்ப என்னடான்னா ஊரே அடங்கிப்போய் கிடக்கு.

எல்லாம் திருந்திட்டாங்களா?”

சந்திரன் ரகசியமாகச் சொன்னான்,

“யாரும் திருந்தலடா… திருத்திட்டாங்க!”

“புரியலையே?”

“எல்லாம் நம்ம குருமூர்த்தி ஐயா செஞ்ச ஏற்பாடுதான். ஒரு வருஷத்துக்கு முன்னாடி, ரகளை செஞ்சவங்களை எல்லாம் இவரு சத்தமில்லாமப் பிடிச்சு, வண்டியில ஏத்திட்டுப் போய், அவங்க தோட்டத்துல வச்சு ஒரு கவனிப்பு கவனிப்பார் பாரு… அப்புறம் அவனுக்குப் போதை ஏறுறதுக்கு பதிலா பயம் ஏறிடும். அதுவும் ஐயாவோட பசங்க மூணு பேரும் மூணு திசையில நின்னு கண்காணிப்பாங்க. அதனாலதான் இவங்க குடும்பத்துக்கு ‘காவல் படை’னு ஊரே பேரு வச்சிருக்கு. இப்பப் பார், அந்தக் குடும்பத்துல யாராவது ஒருத்தரைத் தூரத்துல பார்த்தாலே வம்பு பண்றவங்க வாலைச் சுருட்டிக்கிட்டு ஓடிடுவாங்க.”

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது,

திடீரென மண்டபத்தின் வாசலில் ஒரு கூச்சல் கேட்டது.

“அப்பா… விட்டுடுங்கப்பா! இனிமே குடிக்கப் பணம் கேட்க மாட்டேன்!” என்று கத்தியபடி ஒரு இளைஞன் மண்டபத்திற்குள் ஓடி வந்தான். பின்னாடியே அவன் தந்தை ஒரு கட்டையைத் தூக்கிக்கொண்டு துரத்தி வந்தார்.

கூட்டம் சட்டெனத் திரும்பிப் பார்த்தது. சந்திரன் உற்சாகமானான்,

“ஆஹா… ஆரம்பிச்சுடுச்சு கலாட்டா!”

ஆனால், அடுத்த நிமிடம் அந்த இளைஞன் குருமூர்த்தி அய்யாவை பார்த்தவுடன் ஓடும் வேகத்தை குறைத்து, குருமூர்த்தி ஐயாவின் முன்னால் வந்து நின்றான். குருமூர்த்தியின் கண்கள் சிவந்ததைக் கண்டதும், அந்த இளைஞனின் போதை அப்படியே இறங்கியது.

“ஐயா… மன்னிச்சுடுங்க!” என்று அங்கிருந்து தலைதெறிக்க ஓடினான். அவனைத் துரத்தி வந்த தந்தையும் குருமூர்த்தியைப் பார்த்ததும் அடங்கிப்போய், “தலைவரே… அது என்னோட பையன்! கொஞ்சம்… மன்னிச்சுடுங்க,” என்று பின்வாங்கினார்.

நடந்தது ‘கல்யாண கலாட்டா’ அல்ல, அது போதை மீறிய ஒரு மகனின் ‘பாதை மாறிய பயணம்’ என்று புரிந்துகொண்ட குருமூர்த்தி, லேசாகச் சிரித்துக்கொண்டார்.

திருமணம் இனிதே முடிந்து. ‘காவல் படை’யின் நிழலில் அந்தத் திருமண மண்டபம் அமைதியாகவும் அழகாகவும் காட்சியளித்தது.

பசியோடு இருந்த ஊர் மக்கள், சாப்பாட்டு கூடத்திற்குள் நுழைந்து, நிம்மதியாக சாப்பிட ஆரம்பித்தனர்.

முத்தமிழ்ப்பித்தன் எழுத்தாளர் பற்றிய  குறிப்புகள்:  பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன்  இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்:  1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள்  (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *