கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 110 
 
 

(கதைப் பாடல்)

அடர்ந்து வளர்ந்த பெருங்காடு
அதிலே பற்பல மிருகங்களாம்!
பிடரி வளர்ந்த பெருஞ்சிங்கம்,
பிளந்த வாயுள்ள ஓருநரியும்,

குள்ளநரியுடன் ஓநாயும்
கூடி இருந்தன அக்காட்டில்!
நல்ல கடமான் ஒன்றினையே
நாலும் உண்ணத் தொடர்ந்தனவாம்.

புல்லை மேயும் கடமானின்
வில்போல் வளைந்த விலாவினிலே
எல்லை யற்ற பலத்தோடு
எகிறித் தாக்கியது சிங்கமது!

மானோ துடித்துச் சாய்ந்துவிழ
மற்ற விலங்குகள் தமைப்பார்த்து
நானே இதனை நாற்கூறாய்
ஆக்கிடப் போறேன் எனச்சொல்ல..

நமக்கும் ஒருபங்கு கிடைக்குமென
நம்பிக்கை கொண்டு நரியோடு
குள்ள நரியும் ஓநாயும்
குலைப்பசியோடு இருந்தனவாம்.

சிங்கம் மானைச் சரியாக
பங்கு போட்டது நாலாக!
அங்கும் இங்கும் அளவதுவோ
அணுவளவேணும் கூடவில்லை!

சிங்கம் மற்ற விலங்குகளை
சிரித்தபடியே பார்த்துவிட்டு
நாலு பங்கில் முதற்பங்கு
நானிதை வீழ்த்தியதாலெனக்கு…!

இரண்டாம் பங்கு உங்களிலே
இருப்பதில் வலியவன் எனக்காகும்
மூன்றாம் பங்கை முறைப்படிநான்
முன்னின்று பங்கியதாலெனக்கு

நான்காம் பங்கை உங்களிலே
நல்ல வலியோர் கைவைத்து
நன்கு சுவைத்து உண்ணுங்கள்!
என்றது கேட்ட விலங்குகளோ

தப்பியது தலையென தப்பித்து
அப்பால் ஓடி மறைந்தனவாம்
செப்பிய சிங்கம் சிரமமின்றி
சேர்த்து அதையும் உண்டதுவாம்!

தன்வலி மட்டும் அல்லாமல்
மாற்றான் வலியும் அறிவதுதான்
மன்னர்க்குத் தேவை எனவுரைத்தார்
மாண்புகழ் வள்ளுவப் பெருந்தகையார்!

அடங்கிப் போவோர் கோழையல்ல..
அதுவும் வீரத்தின் ஓர்நிலைதான்
கொடிய பாம்பும் செம்போத்தின்
குணத்திற் கஞ்சி ஒளிவதுண்டு!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *