ஞாபகச் சந்து

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 136 
 
 

கோவிலுக்குச் செல்லும்போதே வளாகத்தினுள் கோவிலின் இடது பக்கவாட்டுப் பின்பகுதியில் அம்புக்குறியுடன் அந்தப் பெயர்ப் பலகை இருப்பதை ஜெயபால் கவனித்திருந்தார். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்த அதில், மெமரி லேன் எனும் ஆங்கிலச் சொற்கள் கவனத்தை ஈர்த்தன. ஆனால் அப்போது கோவிலில் பூஜை நடந்துகொண்டிருந்தது. அது முடிவதற்குள் சென்று வழிபட வேண்டும் என்கிற அவசரத்தில் அவரும் மற்றவர்களும் இருந்ததால் இதை விசாரிக்க அவகாசம் இருக்கவில்லை.

கேரளத்தில் புனிதச் சுற்றுலா சென்றிருந்த அந்தத் தமிழகக் குழுவினர், தெற்கே திருவனந்தபுரம் முதல் வடக்கே மலப்புறம் வரை முக்கியமான சில ஆலயங்களைத் தரிசித்து வழிபட்டு வந்துகொண்டிருந்தனர். இதுதான் கடைசி. இது முடிந்ததும் ஊர் திரும்புதல்.

ஓய்வுபெற்ற அதிகாரியான ஜெயபாலுக்கு 68 வயது. கௌரவமான மனிதர். இளமையில் வறுமையில் வாடி, கஷ்டப்பட்டு முன்னேறி, உயர் நடுத்தர வசதியை அடைந்தவர். ஒரு மகன், ஒரு மகள், அவர்கள் வழி பேரக் குழந்தைகள் என நிறைவான வாழ்க்கை. ஓய்வுக் காலத்தை சுகமாகப் பொழுதுபோக்கியும், அவ்வப்போது மனைவியுடன் புனிதச் சுற்றுலாக்கள் சென்றும் கழித்துக்கொண்டிருக்கிறார்.

வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்த சுற்றுலாக் குழு, கோயில் நுழைவாயிலில் கூடியிருந்தது. ஜெயபால் கோயில் பணியாளரிடம் ஞாபகச் சந்து பற்றி விசாரித்தார்.

“அது அல்புத ஷக்தியுள்ள சந்து. அதுல நடந்துபோச்சுன்னா, ஞிங்ஙள் மறந்நுபோய பழைய ஓர்மைகளெல்லாம் திரிச்சு கிட்டும்.” இவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழும் மலையாளமும் கலந்த மணிப்ரவாளத்தில் சொன்னார்.

ஜெயபாலுக்கு அது உண்மையாக இருக்குமா என்று சந்தேகம். ஆனால், சுற்றுலாக் குழுவில் மற்ற அனைவருக்கும் அது ஆர்வமூட்டியது.

“அந்த சந்துல போகும்போது சம்சாரிக்கக் கூடாது. தியானம் செய்யறது போலயோ, தெய்வத்தைத் தொழற மாதிரியோ மௌனமா இருக்கணம். அர்ச்சனை டிக்கெட் வாங்கற ஸ்தலத்துல டோக்கன் கிட்டும். மொபைல் ஃபோனை ஸ்விட்ச் ஓஃப் பண்ணி, அங்க குடுக்கற துண்டு சீட்டுல பேரு, அட்ரஸ் எழுதி, கவர்ல போட்டு குடுத்துடணும்…”

அசாதாரணக் கட்டுப்பாடுகள் ஜெயபாலுக்கும் ஆர்வத்தைத் தூண்டின. அவரின் மனைவி கோகிலா அதிக ஆவலோடு, “வாங்க, போயி டோக்கன் வாங்கிட்டு வர்லாம்” என அவரை இழுத்தாள்.

அந்தச் சூழலில் தனது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. நம்பாதது பொருட்டல்ல. போய்ப் பார்ப்பதால் பெரிய நட்டம் ஏற்பட்டுவிடாது. ஆனால், அவர் தனது கசப்பான கடந்த காலத்தைப் பற்றி நினைக்க விரும்பாதவர். “கடந்த கால ஞாபகத்துல என்ன பிரயோஜனம்? எதிர்காலம் பத்தித் தெரிஞ்சாலாவது உபயோகமாகும்” என்றார்.

“நீங்க இப்படித்தான், ஏட்டிக்குப் போட்டியா ஏதாவது பேசீட்டிருப்பீங்க. நீங்க வந்தா வாங்க; வராட்டிப் போங்க. பர்ஸைக் குடுங்க இப்படி!” என்று பாக்கெட்டில் கைவிட்டு அவளே உருவிக்கொண்டுவிட்டாள்.

வேறு வழியின்றி இவரும் பின்தொடர வேண்டியதாயிற்று.


வனாந்திர மரங்களினூடே வளைந்து நெளிந்து செல்லும் ஞாபகச் சந்து, மூங்கில்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலே தென்னை ஓலை மறைப்பு. ஒளிக் கீற்றுகள் கசியும் இருள் வழி, குகை போலக் காட்சியளித்தது. இதமான காற்று. தெரியாத பூக்களின் வாசனை. புறச் சத்தங்கள் தொலைதூர ஓசையாக மறைந்துபோயின.

இடுங்கிய வழியாதலால் ஒருவர் பின் ஒருவராக சென்றுகொண்டிருந்தனர். ஜெயபால், கோகிலாவின் பின்னே. எவ்வளவு மெதுவாக நடக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக நடக்கும்படி அறிவுரைக்கப்பட்டிருந்ததால் ஊர்வது போலத்தான் வரிசை நகர்ந்துகொண்டிருந்தது.

யாரும் எதுவும் பேசாத, அலைபேசிகள் ஒலிக்காத நிசப்தம். வனத்தின் மோனத்தில் அவர்களும் கரைந்துவிட்டது போலிருந்தது.

திடீரென்று ஜெயபாலின் காதுகளுக்குள், ‘ஐய்யய்யோ பொன்னம்மா; அரிசி விலை என்னம்மா…?’, ‘காமராஜ் அண்ணாச்சி; கருப்பட்டி விலை என்னாச்சு?’, ‘கக்கா – மாணவர்கள் என்ன கொக்கா…?’ என்ற கோஷங்கள் ஒலித்தன. திடுக்கிட்டு ஒரு கணம் நின்றுவிட்டார். பிறகுதான் அது தனது பால்ய காலத்துடையதும், தமிழக அரசியல் வரலாற்றினுடையதுமான குரல்கள் என்பது புரிந்தது.

தமிழகத்தைப் புரட்டி போட்ட, 58 ஆண்டுகளுக்குப் பிறகும் முறியடிக்கப்படாத வகையில் அதிக வாக்கு சதவீதத்தை (76.56%) எட்டிய, 1967ம் ஆண்டுத் தமிழக மக்களவைத் தேர்தலின் பிரச்சாரக் காலகட்டம் அது. இரவுப் பொழுது. ஜெயபால், அவர்களின் குடிசைக்குள், சட்டை அணியாத வெற்று உடம்புடன், கிழிசல் ட்ரௌசர் மட்டும் அணிந்து, பசி வயிற்றை இறுக்கி அழுத்திப் பிடித்தபடியே, சிம்னி விளக்கொளியில், ஓரங்கள் நைந்த பாடப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். வெளியே, ரூபாய்க்கு ஒரு படி அரிசி, கடல்நீரைக் குடிநீராக்குதல், கடல்பாசியில் இருந்து அல்வா தயாரித்தல், ஏழைகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகள் முழங்கிக்கொண்டிருந்தன.

ஞாபகச் சந்து வேலை செய்வதை முதியவர் ஜெயபால் புரிந்துகொண்டார். நம்பவியலாத வியப்புற்று நடை தொடர்ந்தார்.

அவர் இப்போது கல்லூரி மாணவன். தேவையான புத்தகங்கள் வாங்கப் பணம் இல்லை.

கிராமத்து நாவிதர் பரமசிவம், கரடுமுரடான கைகளும், கனிவான புன்னகையும் கொண்டவர். தனது குடும்பத்திற்கு உணவளிக்கப் போதுமான அளவு சம்பாதிக்காத மனிதர். அவர் கசங்கிய, அழுக்கான, பழைய பத்து ரூபாய் நோட்டைத் தன் கையில் திணித்த நாள் ஜெயபாலுக்குள் உயிர்த்தெழுந்தது.

“புஸ்தகம் வாங்கறக்கு வெச்சுக்க. நம்மூர்லயே காலேஜ் போன மொதல் ஏழைப் பையன் நீதான். நீ படிச்சுப் பெரிய ஆளா ஆனா, அது நம்மளை மாதிரி ஏழை பாழைக எல்லாருக்குமே பெருமை.”

தினக் கூலியாட்களுக்கு ஐந்து – ஆறு ரூபாய் கூலி கிடைத்த காலம் அது. பஞ்சம் தலைவிரித்து ஆட, ஏழைகளைப் பசி, பட்டினி தின்றுகொண்டிருந்த சமயம். பரமசிவத்தின் கொடை, ஜெயபாலின் லட்சியத்திற்கு எரிபொருளாகியது.

அந்த நினைவு நெஞ்சை உருக்கியது.

ஞாபகச் சந்து நெளிந்து வளைந்தது. இன்னொரு நினைவு மேலெழுந்தது. அரசுப் பள்ளி தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கே உரிய வகையில் ஜெயபால் கல்லூரியில் ஆங்கிலப் பாடங்களில் சிரமப்பட்டான். அதனால் படிப்பில் பின்தங்கல். ஆங்கிலம் தனி வகுப்பு படிக்கலாம் என்றால் கட்டணம் கட்ட வழியில்லை. வகுப்புத் தோழியும், ஆங்கில வழி மெட்ரிகுலேஷனில் பயின்றவளுமான ப்ருந்தா அவனுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்தாள். அந்த உதவி இல்லாவிடில் அவனால் கல்லூரிப் படிப்பை எளிதாகவும், உயர் மதிப்பெண்களோடும் முடித்திருக்க இயலாது.

குற்ற உணர்வு துளைத்தது. பட்டப் படிப்புக்குப் பிறகு ப்ருந்தாவுடன் தொடர்பு கொள்ளவேயில்லை.

அடுத்தடுத்து நினைவுகள் அடர்த்தியாகவும் வேகமாகவும் வந்தன. வேலைக்குப் பரிந்துரை செய்த தோழர் மணிமுத்து, வேலையில் அக்கறையோடு வழி காட்டிய சக ஊழியர் வெங்கி, பதவி உயர்வுக்குக்

காரணமான மூத்த அதிகாரி கோவிந்தன், வீடு கட்ட வட்டியில்லாமல் கடன் கொடுத்த சிங்காரம்,…

ஒவ்வொரு முகமும் அவரது கடந்த காலத்தின் கூர்மையான நினைவூட்டலாக, அவர் வசதியாக மறந்துவிட்ட கடந்த காலத்தை அவருக்குக் குத்திக் காட்டுவதாக இருந்தன.

ஜெயபால் லட்சியத்தாலும், இடைவிடாத உழைப்பாலும் வெற்றியின் ஏணியில் முன்னேறினார். ஆனால், அதற்கு உதவியவர்களைப் பின்னர் ஒதுக்கிவிட்டார்.

இவர் வாழ்வில் முன்னேறி, உயர் பதவி வகிப்பதைக் கண்டு மகிழ பரமசிவம் ஒரு முறை இவரது அலுவலகத்திற்கு வந்ததை நினைவுகூர்ந்தார். அந்த ஏழையின் வறுமைத் தோற்ற உடைகள் ஜெயபாலுக்கு கௌரவக் குறைச்சலாகப் பட்டது. சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பேசி, தான் பணியில் மும்முரமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு, பரமசிவத்தை விரட்டாத குறையாகக் கிளம்பச் செய்துவிட்டார்.

தோழர் மணிமுத்துவின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தப் போகவில்லை. சிங்காரம் சமீப மாதங்களாக உடல் நலமின்றிப் படுக்கையாகக் கிடக்கிறாராம். இவரைப் பற்றி விசாரித்ததாகவும் கேள்வி. அப்படியிருந்தும் அவரைப் பார்க்கப் போகவில்லை.

நினைவுகளின் சந்து ஒரு கொடூரமான கண்ணாடியாக இருந்தது, அது அவரது உள் முகத்தை, நன்றியின்மையின் அசிங்கத்தைப் பிரதிபலிக்கிறது. அதை நினைக்க, தன் மீதே அருவருப்பும், குற்ற உணர்வும் மேலிட்டது.

பரமசிவம் இறந்துவிட்டார். இனி அவருக்கு நன்றி தெரிவிக்கவோ, கைமாறு செய்யவோ, அவரிடம் மன்னிப்பு கேட்கவோ இயலாது. வீடு திரும்பியவுடன் கிராமத்திற்குச் சென்று, பரமசிவத்தின் மகனையாவது பார்த்துப் பேசிவிட்டு வந்தால் தனக்கு ஆறுதலாக இருக்கும் என்று பட்டது. அப்படியே சிங்காரத்தையும் பார்த்து, பண உதவி ஏதும் தேவைப்பட்டால் செய்ய வேண்டும். தனக்கு உதவியவர்களில் யாரெல்லாம் உயிருடன் இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் சந்தித்து அளவளாவிவிட்டு வர வேண்டும். இனி மீதமுள்ள ஆண்டுகளில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவவும், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் அளிக்கவும் வேண்டும்… என்றெல்லாம் எண்ணிக்கொண்டார்.


கோவிலின் இடது பக்கம் துவங்கிய ஞாபகச் சந்து, பின் பகுதி வனத்துக்குள் கால் மணி நேர மெதுநடை தூரத்துக்குச் சென்று, கோவிலின் வலது பக்கவாட்டுப் பகுதியில் முடிவடைந்தது. அதிலிருந்து வெளியேறியதுமே ஜெயபால் தன்னுள் மாற்றத்தையும் ஆசுவாசத்தையும் உணர்ந்தார். சக பயணிகள் பலரது முகங்களிலும் பரவசமும் கிளர்ச்சியும் நிலவின. சிலர் ஆனந்தத்திலும், சிலர் ஆற்றாமையிலும் அழுதுகொண்டிருந்தனர்.

கோகிலாவின் முகம் பூரிப்பில் விகசித்திருந்தது. “கொழந்தையா இருந்தப்ப மத்த கொழந்தைகளோட சேந்து வைக்கப்போர்ல குதிச்சு உருண்டு, உடம்பெல்லாம் அரிப்பெடுத்து அவஸ்தைப்பட்டது,… ஸ்கூல்ல சத்துணவு ரவைக் கஞ்சி சாப்புட்டது,… சூட்டுக்கொட்டை, தண்ணித் தழை, புளியம்பிஞ்சு,… எல்லாம் ஞாபகம் வந்துச்சு. அப்படியே மறுக்காவும் கொழந்தையா ஆயிட்ட மாதிரி இருக்குது…!”

அவளுடைய உற்சாகம், தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. சக பயணிகளும் அதில் தூண்டப்பட்டு, தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

“உங்களுக்கு என்ன ஞாபகம் வந்துச்சு?” கோகிலா எதிர்பார்ப்புடன் ஜெயபாலிடம் கேட்டாள்.

நினைவுகளின் அழுத்தத்திலிருந்து விடுபட்டிருட்டிருந்த அவர், “சொல்லிக்கறாப்ல ஒண்ணுமில்ல!” என்றார்.

– கல்கி இணைய இதழ், 12-10-25.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *