விறகு அடுப்பு!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 133

சிலிண்டர் கிடைக்கவில்லை என தெரிந்ததும் மிரண்டு, அரண்டு போனாள் கல்பனா. பழைய கால வாழ்க்கையைப்பற்றியே பேசியதால் பாட்டி இருக்கும் பக்கமே போக பயப்பட்டவள், இன்று பாட்டியருகில் சென்று அன்பாக பேசியது பாட்டிக்கே ஆச்சர்யமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது.
“மாடி ஊடு கட்டுன பின்னாடி ஓட்டு ஊட்ல வாழற என்னைய உனக்கு சுத்தமா புடிக்காம போச்சு. பாசுமதி அரிசில சோறாக்கற உனக்கு பாட்டியோட கம்மஞ்சோறு எங்க புடிக்கப்போகுது? கார்ல போற உனக்கு கட்ட வண்டில போனவள புடிக்குமா? அப்பறம்…. திடீர்னு பாட்டி மேல என்ன கரிசனம்?” கேட்ட அருக்காணி பாட்டியை கட்டியணைத்துக்கொண்டாள்.
“பாட்டி வெறகு அடுப்புல எப்புடி சோறாக்கறதுன்னு கேட்டிட்டு போகலாம்னு வந்தேன்…” என்றாள்
“வெறகு அடுப்பா….? அதெதுக்கு உனக்கு?”
“ஈரான்ல போர் நடக்குறதுனால அடுப்பெரிக்க சிலிண்டர் கெடைக்கல. காருக்கு பெட்ரோல் கெடைக்கல”
“பாத்தியா…. நான் நெனைச்சது நடந்தே போச்சு. அரசன நம்பி புருசன கை விட்டு அரசனும், புருசனும் ஆத்தோட போன கதையால்ல இருக்குது. உன்ற ஆத்தாக்காரி கிட்ட நானும் படிச்சு, படிச்சு சொன்னேன். வெறகடுப்பொன்னு எப்பவும் ஊட்ல இருக்கோணும்னு. கேட்டாளா? அந்த வெறகடுப்போட ,சொன்ன என்னையும் தூக்கி தூர எறிஞ்சு போடாடாளே பாதகத்தி….”
“ஸாரி பாட்டி. நீங்க என்ற வீட்டுக்கு வந்திடுங்க. வெறகு அடுப்ப எப்படி பத்த வைக்கிறதுன்னு ஒரு வாரத்துக்கு சொல்லிக்கொடுத்திடுங்க. அம்மா இருந்திருந்தா அம்மாவக்கேட்டிருப்பேன். இப்ப நீங்கதான் எனக்கு அம்மா மாதிரி” பேத்தி சொன்னதைக்கேட்டு மனமுருகி உடனே பேத்தி வீட்டுக்கு செல்ல ஒத்துக்கொண்ட பாட்டி வீட்டை விட்டு வெளியே வந்ததும் “எங்க காரக்காணோம்?” என்றாள்.
“அது வந்து பாட்டி அதுக்கும் பெட்ரோல் கிடைக்கல. சைக்கிள்ல வந்திருக்கேன்”
“ம்… அம்பது வருசத்துக்கு முன்னால என்ற புருசங்கூட சைக்கிள்ல போனது. சரி இப்படிக்கொண்டு வந்து இந்த திண்டுக்குட்ட நிறுத்து. ஒயரமா இருக்குது” எனக்கூறியதும் வீட்டின் வெளியில் இருந்த திண்ணை அருகே நிறுத்த திண்ணைமீதிருந்து சைக்கிளில் ஏறிய பாட்டியை வைத்து தள்ளிக்கொண்டே சென்றாள் கல்பனா.
“என்ன நீயி…. ஏறி ஓட்டுவீன்னு பாத்தா தள்ளீட்டு போறே….?”
“சைக்கிள் ஓட்டி பல வருசம் ஆயிப்போச்சு. ஓட்டி எக்குதப்பா ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா என்ன பண்ணறதுன்னு இப்படி தள்ளறேன். என்னை நினைச்சாவே எனக்கே கேவலமா இருக்கு” என்றாள் சலிப்புடன்.
வெறகு அடுப்பை தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சியை எடுத்து பெட்டியில் உறைத்து பற்றவைத்தாள். அதற்குள் விரலில் சூடு வைத்துக்கொண்டாள். ஒரு பெட்டி குச்சிகளை உறைத்தும் விறகில் நெருப்பு பற்றவில்லை. பாட்டி அருகிலிருந்து புன்னகைத்தாள்.
“வெறகு வாங்கும்போது மொதல்ல நல்ல காஞ்சதா, பச்சை விறகான்னு பாக்கோணும். இப்படி பச்சை வெறகு பத்துமா? கொஞ்சம் இந்தப்பக்கம் வா. நாம்பாக்கறேன்” என அடுப்பு பக்கம் வந்த பாட்டி, அடுப்பிலிருந்த விறகை எடுத்து விட்டு அருகிலிருந்த காய்ந்த விறகை பிரித்தெடுத்து வைத்து காகிதங்களை வாங்கி அதில் முதலில் பற்ற வைத்து விறகில் பற்றியதும் கல்பனா முகத்தில் நூறு வாட்ஸ் பல்பு எரிந்தது.
விறகிலிருந்து புகை வருவதால் இருமிய கல்பனாவை பக்கத்து வீட்டிலிருந்து சரண்யா எட்டிப்பார்த்து”இதென்ன பொழப்பு. எலக்ட்ரிக் அடுப்பு வெச்சு செஞ்சிடு” என கூறியதும்” சம்மர்ல அதுவும் சரியா வரலேன்னா என்ன பண்ணறதுன்னு பாட்டியக்கூட்டிட்டு வந்து வெறகுல பழகுறேன்” என்றாள்.
“அடுப்பிலிருந்த விறகு அணைந்தது. மீண்டும் ஊதி பற்ற வைத்த போதுதான் நம் முன்னோர்கள் எவ்வளவு சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள் என புரிந்தது.
நூறு கோடி சொத்து இருக்கிறது, ஐநூறு பவுன் நகை இருக்கிறது. பென்ஸ் கார் கூட இருக்கிறது. பங்களா வீடு இருக்கிறது. கணவர் பெரிய பதவியில் இருக்கிறார். அவற்றில் எதையும் பசிக்கு உண்ண பயன்படுத்த முடியவில்லை என்பதை உணர்ந்த போது, தான் என்ற அகங்காரமும், பெரியவர்களை இழிவாக நினைத்த கர்வமும், பணத்திமிரும் அவளிடமிருந்து விடை பெற்றதை உணர்ந்தாள்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
