பொண்டா டீ வேண்டாம்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 42
காலையில் ஏழுமணிக்கு வீட்டில் மனைவி சமைத்து பரிமாறிய பூரி, இட்லி சாப்பிட்டு ஜீரணமாவதற்குள் பத்து மணிக்கு எதற்கு பஜ்ஜி, போண்டா? வேண்டவே வேண்டாம் என அறிவு சொன்னாலும் மூக்கு மணம் பிடித்தவுடன் மனம் வேண்டும், வேண்டும் என பிடிவாதமாக நின்றதால் பெண் உதவியாளர் கொடுத்ததை எடுத்து சாப்பிட்டு விட்டு சூடாக ஒரு கப் டீயைக்குடித்து விட்டே சாந்தமானார் வங்கி மேலாளர் முகின்.“ஏங்க உங்களுக்கு எத்தனை தடவை சொல்லறது? ஆபீஸ்ல போண்டா, பஜ்ஜி, டீ சாப்பிடாதீங்கன்னு…?” மனைவி ரியா கோபமாக கேட்டதும் ஆடிப்போனார்.
“உனக்கெப்படி ஆபீஸ்ல நான் போண்டா டீ சாப்பிட்டது தெரிஞ்சது….? வெயிட் மிசின்ல வெயிட்ட பார்த்து எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடுவியா? சரி நாளைக்கு தண்ணியடிச்சிட்டு வாரேன். அப்ப இந்த வெயிட் மிசின் கண்டு பிடிக்குதான்னு பாத்திடுவோம்” கோபமாக பேசுவது போல் வெயிட் மிசின் மேல் நின்றபடியே நடித்தார்.
“தண்ணியடிச்சத வெயிட் மிசின் தான் கண்டு பிடிக்கனமா? அதுதான் ரெண்டு நாளைக்கு வாய் நாறுமே…. யார் வேணாலும் கண்டுபிடிச்சிடலாம்” மனைவி பேசியதைக்கேட்டு பேச்சே நின்று போனது.
“ஏங்க இப்படியெல்லாம் பேசறீங்க? என்னைத்தவிர மத்தவங்க இப்படி பேசுவாங்களா? உங்களுக்கு நாலு போண்டாவக்கொடுத்து அவங்க வேலைய ஈஸியா முடிக்கத்தான் செய்வாங்க. அது எந்த ஆயில்ல போட்டாங்களோ…? உங்க ஆயுளுக்கு பாதிப்பு வந்திருச்சுன்னா…? உங்களோட ஆரோக்யத்த பத்தி அவங்களுக்கு என்னங்க கவலை? இன்னைக்கு இந்த மேனேஜர், நீங்க போனா நாளைக்கு இன்னொரு மேனேஜர் அந்த பேங்க்குக்கு கிடைப்பாங்க. நீங்க போயிட்டா நான் என்னங்க பண்ணுவேன்? எனக்கு வேற கணவர் கிடைப்பார்னு நினைக்க முடியுமா?” கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய மனைவியை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தி ஆறுதல் கூறினார் முகின்.
மனைவியின் பேச்சு இரவு தூக்கத்தை கெடுத்தது. ‘தம்மை அவர்களது தேவைக்கு பயன்படுத்தும் சக ஊழியர்களுக்கும், அவர்களது தேவையே முதன்மை என கருதும் வாடிக்கையாளர்களுக்கும் நாம் வெறும் கருவி தான். தாய், மனைவி, மகள் என குடும்பத்தினரின் நிலை வேறு. குடும்ப வாழ்க்கை என்பது அன்போடு ஆரோக்யத்தை பேனவும் வழி வகுப்பது. மனைவி என்பவள் உடல் தேவைக்காகவும், வாரிசுகளை உருவாக்கவும், வெறுமனே சமைத்துப்போடுவதற்காக மட்டுமானவள் இல்லை. நீண்ட ஆயுளோடு, ஆரோக்யமாக குடும்பத்தினர் வாழவும் வழி செய்பவள். குடும்பம் என்பது மிகச்சிறந்த அமைப்பு. நம்மையே நினைத்திருப்பவளுக்கு நாம் தரும் பரிசு பெரிதாக ஒன்றுமில்லை. நாம் ஆரோக்யமாக இருப்பது மட்டும் தான்’ என நினைத்த போது அருகில் உறங்கிக்கொண்டிருந்தவளை அன்னையின் உருவிலும் பார்க்கத்தோன்றியது.
மறுநாள் தனது மேஜைக்கு போண்டா வந்தது. டீயும் வந்தது. உறுதியாக மனதின் ஆசையை அறிவால் கட்டுப்படுத்தியவாறு முதலாகச்சொன்னார் ” எனக்கு பொண்டா டீ வேண்டாம்….”
“சார்…. என்ன சொல்லறீங்க…? சுய நினைவோட தான் சொல்லறீங்களா….? பெண் உதவியாளர் அதிர்ச்சியுடன் கேட்க, “ஸாரி…. என்னோட பொண்டாட்டி என்னை போண்டா டீ சாப்பிட வேண்டாம்னு சொல்லிட்டாள் னு சொல்ல வந்தேன்” என்றதும் அதிர்ச்சியடைந்த பெண் உதவியாளர் முகத்தில் அதிர்ச்சி மறைந்து புன்னகை தவழ்ந்தது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
