என்ன சொல்ல.. என்ன சொல்ல..?
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 681
ஓபனிங்க்கிலேயே சர்வர் சுந்தரம் படத்தில் கஸ்டமர் ஒருவரைப் பார்த்துச் சொல்வார், ‘நீ ஏன் கையைக் கழுவறே?!’னு. அதுதான் நியாபகத்துக்கு வந்தது எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரைப் பார்த்ததும் ஆறுமுகத்துக்கு.
அவர் சாப்பிட்டுக் கொண்டே…
‘உனக்கு எத்தனை மணி வரைக்கும் வேலை?’ என்றார் சர்வரைப் பார்த்து… கருணா மூர்த்தியாக!
காரணம் அந்த சர்வர் ஆணல்ல! ஒரு பெண்.
அவள் ‘பத்து மணியாயிடும்!’ என்றாள்.
வேலை முடிஞ்சு எப்ப வீட்டுக்குப் போவே?
கடைசி பஸ் பத்தரைக்கு. அதுலதான் போவேன்.
‘ஏன் டூவீலர் ஒன்னை வச்சுக்கறதுதானே? எந்நேரமானாலும் வீடு போலாமே?’ இது அவர்.
டூவீலர்லாம் வாங்க வசதி இல்லை.
வீட்டுக்காரர் என்ன வேலை பார்க்கிறார்?
அவரில்லை. செத்து மூணு வருஷமாச்சு.
குழந்தைகள்?
ரெண்டிருக்கு. எல்லாம் பள்ளிக் கூடத்துல படிக்குதுங்க!
அவருக்கான பில்லைக் கொண்டு வந்து வச்சாள் அந்தப் பெண்.
சே! வந்தமா சாப்பிட்டமா போனோமான்னு இல்லாம, என்ன கருணை மனுஷனுக்கு?! சாப்பிட்டு முடித்த கை விரல்களைக் கழுவத்தேவை இல்லாத அளவுக்கு உறிஞ்சி எடுத்தார். சர்வர் சுந்தர நாகேஷ் நினைவுக்கு வந்தார்.
அவளைப் பார்த்து, ‘நூறு நூத்தைம்பது ரூபாய்க்குப் பழைய சைக்கிளாவது வாங்கி வச்சுக்கலாமே?’ என்றார் கருணை பொங்க.
ஏதோ.. ஐநூறோ ஆயிரமோ கொடுப்பார்னு தோணிச்சு.
ஆறுமுகம் மனசில் அவர் படிப்படியாய் பரமபத ஏணியாய் ஏறினார். பில் அமவுண்டைக் கொடுத்து அனுப்பிவிட்டு,
தலையைக் குனிந்து ஆறுமுகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னார்…
‘நல்ல வேளை புருஷன் போய்ச்சேர்ந்தான். டாஸ்மாக்குல குடிச்சுச் சாகாம!’ என்றார்.
நொறுங்கிப் போனார்கள் ஆறுமுகமும் அந்தப் பெண் சர்வரும்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
