பேசாத மௌனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2026
பார்வையிட்டோர்: 1,559 
 
 
வீட்டு முற்றத்தில் வின்னி சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டுக் கொண்டிருந்தான்.
“ஏப்பா …என்னாச்சு ?” ஒருவிதமான ஆதுரத்துடன் கேட்டார் விசுவாசம்.
“ஒண்ணும் தெரியலேப்பா… பிரவுசிங் சென்டரில் கேட்டேன்… வரலையாம்….  பியூட்டி பார்லர்லே  விசாரிச்சேன்…அந்த ரூபா  மேடம் ‘தெரியாது’ ன்னுடாங்க… அப்புறம்…”
பேச்சு சத்தம் கேட்டு மெர்லின் வெளியே ஓடி வந்தாள்.
“அக்காவுக்கு என்ன ஆச்சு?”
வின்னி  உதட்டைப்  பிதுக்கினான்.
“ஏம்மா  போன் பண்ணி பாத்தியா? ” என்றார் விசுவாசம்.
“எத்தனை தடவை பண்றது…சுவிட்ச் ஆப்னு வருது..” என்றாள் மெர்லின்.
“சர்ச் பக்கம் போனியா?”
“போனேன்… அங்கே பிரேயருக்கு போயிருப்பாளோன்னு உள்ளே போய் பார்த்தேன்… கொஞ்சம்  பேரு  முக்காடு போட்டுகிட்டு பிரேயர்லே  இருந்தாங்க.. சாராவை அங்க காணல…பாஸ்டர் கிட்டேயும் கேட்டேன்”
“இதுக்கு போய்  அலட்டிக்கிறீங்க… அவ என்ன சின்ன பொண்ணா கம்பெனியில் ஓவர் டைம் வேலை ஏதாச்சும் இருக்கும்..இந்த காலத்துல கேர்ள்ஸ் எல்லாம் சாவகாசமா நைட்டு  பன்னிரண்டு  மணிக்கு கூட  வராங்க… உங்க அப்பாவையும் அம்மாவையும் அமைதியா இருக்க சொல்லு… மெர்லின் எப்படி இருக்கான்னு
விசாரிச்சாரு… நல்லா இருக்கா பாஸ்டர்… எக்ஸாமுக்கு படிச்சிட்டு இருக்கான்னு சொன்னேன்” என்றான் வின்னி.
“இனி என்ன பண்ணலாம்..?”  என்றவாறு  வாஷ்பேஷனில் முகம் கை அலம்பினான்.
“அப்பா… ஒன்பதே முக்கால் மணி பஸ் வந்துட்டு போயிடுச்சான்னு  பாத்தீங்களா?”.
“பஸ் ஸ்டாப்புக்கு போய் பார்த்தேன்.. அதுல  வரல”
“சரி… லாஸ்ட் பஸ் பத்தரைக்கு …அதுல கண்டிப்பா வந்துருவா பாருங்க “என்றான் வின்னி .
“அதிலேயும்  வரலேன்னா..?”  என்றார் விசுவாசம்.
“நேரா கம்பெனிக்கு போயிட  வேண்டியதுதான் ” என்றான் வின்னி  தோசையைப்  பிட்டுப் பிட்டு தேங்காய் சட்னியில் தோய்த்து வாயில போட்டவாறு.
மைக்கேல் வீதியில் மையிருட்டு படிந்திருந்தது.ஆங்காங்கே மினிக்கிடும் தெரு விளக்குகள். சில வீடுகளில் ஹால் விளக்குகள் மட்டும் ஒளிர்ந்து  கொண்டிருந்தன. விசுவாசம் வீடு ஒன்றுதான் ஓளிக்கோலமாய் காட்சியளித்தது.
இரவு மணி 10:40
வாசல் கிரில் கேட் கிரீச்சிடும் ஒலி. சாரா சாவதானமாக, இயல்பாக காலணிகளை கழட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். நேராக பாத்ரூம் சென்று ‘காக்கா குளியல்’ போட்டு விட்டு… நிதானமாக நைட்டிக்குள் நுழைந்து… அம்மா சுட்டு வைத்திருந்த மூன்று தோசைகளை கோழி  மாதிரி அபக் அபக்’கென்று  விழுங்கி விட்டு… கையில் ஒரு புத்தகத்தைத்  தாங்கியபடி படுக்கையில் சாய்வாகப்  படுத்தவாறு பக்கங்களைப்  புரட்டினாள். சிறிது நேரத்தில் விளக்கை  அணைத்துவிட்டு உறங்கிப் போனாள்.
அவள் உள்ளே நுழைந்தது முதல் படுக்கையில் விழுந்த வரை யாரிடமும் பேசவில்லை.
அதிர்ந்து போன குடும்ப நபர்களில்  ஒருவருக்காவது அவளிடம் ‘ஏன்?எதற்கு? எங்கே? எப்படி?’ என்று கேட்பதற்குத்  துணிவு துளி  கூட இல்லை.
ரிட்டயர் ஆன அப்பா… ஏதோ பேருக்கு ஓய்வூதியம்… அம்மா ஹோம் மேக்கர்…தம்பி வின்னி  வேலையில்லா பட்டதாரி.. மெர்லின் குழந்தை சுபாவம்.. வயது முதிர்ந்த தாத்தா தனி  அறையில் இருமலுடன் போராடிக்கொண்டு…
இப்படி ஓர்  அசாத்திய மௌனத்திற்கு என்ன காரணம்?
சாரா என்கிற அந்த இளம் பெண்ணின் சாப்ட்வேர் சம்பாத்தியத்தில்தான் அந்தப்  பெரிய  நடுத்தர குடும்பம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *