கல்யாணமாம் கல்யாணம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 5,740 
 
 

வீடு இரண்டு நாட்களாக அமளி துமளிப்பட்டது. அந்த காலத்து இரண்டு கட்டு பெரிய வீடென்பதால் கல்யாணம் அங்கேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.

வாண்டுகள் ஒருபுறம் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, டீன் ஏஜ் குரூப் ஒன்று அங்குமிங்குமாக அரட்டையடித்தபடி கும்மாளமிட பெண்களில் சிலர் மணப் பந்தலில் ஐயர் கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்க, ஆண்களும் தங்கள் பங்கிற்கு வருபவர்களை அமர வைத்து உபசரிப்பு செய்வதிலும், தோட்டத்தில் நடக்கும் வேலையை கண்காணித்த படியும் இருக்க, மொத்தத்தில் விடே முழுமையான கல்யாணக்களையுடன் காட்சி அளித்தது.

நம் கதையின் நாயகி, கோகிலா உறவினப் பெண்களின் அலங்கரிப்பில், தன்னையே புதியதாக உணர்ந்தாள், தன்னை இந்த அலங்கரிப்பில் அவர் பார்த்தால் எப்படியிருக்கும் நினைக் கையிலே நெஞ்சம் இனித்தது.

உடனே கோபாலைப் பார்க்க ஆர்வம் எழுந்தது. ஆனால் நேற்று அத்திம்பேர் சுறாராய்ச் சொல்லிவிட்டாரே! ‘மணபந்தலில் அமர்ந்த பிறகுதான் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க வேண்டும், பேசவேண்டும்’ என்று. என்ன செய்வது! இந்நேரம் அவர் என்ன செய்து கொண்டிருப்பார்? இதற்கு மேல் தாங்கமுடியாது என உணர்ந்தவளாய், போன் செய்து அவரிடம் பேசலாம். முடிவு எடுத்து கையில் செல்போன் எடுத்த அடுத்த நொடியே சின்ன வாண்டு ஓன்று ஓடிவந்து அவள் கையிலிருந்த செல்போனை பிடுங்கியது.

“ஐ…ஐ… நீங்க இந்த மாதிரி பண்ணுவிங்கன்னுதான் உங்களை வாட்ச் பண்ண எங்களை விட்டிருக்காங்க” சொல்லிவிட்டு போனைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடியது.

விஷயம் வெளியே கசிந்துவிட, டீன்ஏஜ் பெண்கள் ஓடிவந்து கோகிலாவைச் சுற்றி குழுமினார்கள்.

“அட இங்க பார்றா… கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாழிதான் இருக்கு. அதுக்குள்ள என்ன இது, அவசரமா இல்ல ஆசையா…” கிண்டலடிக்க ஆரம்பிக்க, கோகிலாவின் முகம் அவள் பூசியிருந்த மஞ்சளையும் மீறி நாணத்தால் சிவந்தது.

“போதும்! நிறுத்துங்கடி…” பொய்க் கோபத்துடன் சொன்னவள், “ரெண்டு நாளா உங்க அமர்க்களம் தாங்க முடியல, கல்யாணம் முடியட்டும் உங்க எல்லாரையும் வச்சுக்கறேன்” சிரித்தபடி எச்சரித்தாள்.

கொஞ்சமும் சளைக்காத அப்பெண்கள், “அதையேதான் நாங்களும் சொல்றோம், இந்த கல்யாணம் முடியட்டும் உங்க ரெண்டு பேரையும் வச்சு செய்வோம்ல…” சொல்லி விட்டு உரத்து சிரித்தனர்.

அதேவேளையில் வெளியே இருந்து ஐயரின் குரல் வேகமாக ஒலித்தது.

“நாழியாயிடுத்து, தம்பதியை அழைச்சுண்டு வாங்கோ!” அறுபது வயது கோபால கிருஷ்ணனும், ஐம்பத்தைந்து வயது கோகிலாவும் மணப்பந்தலுக்கு அழைத்து வரப்பட்டு இருவரும் அமர வைக்கப்பட்டார்கள். திரும்பி ஒருவரையொருவர் பார்த்த பார்வையில், கணவன் மனைவி இடையே அன்பு, அன்யோன்யம், தாம்பத்யம் இவற்றுக்கு வயது என்பது எக்காலத்திற்கும் தடை இல்லை என்ற உண்மை புலப்பட்டது.

அறுபதாம் கல்யாணம் அமோகமாய் நிகழ்ந்தேறியது!

– தினமலர், பெண்கள்மலர், 26.5.2018 21.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *