குற்றத்தின் மறுபக்கம்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 12, 2026
பார்வையிட்டோர்: 1,807
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகமாகி விட்டதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார் குறுநில மன்னன் சாம்பன். குற்றம் செய்பவர்களைத்தண்டிக்க அனுப்பும் ஆட்களும் அதே குற்றத்தைச்செய்து விடும் நிலையில் தண்டனையை கொடுப்பது கடினமாகி விட்டதாக வருந்தினார்.“மன்னா மனிதரின் மனம் மிகவும் பலவீனமானது என்பதை மனிதராகிய தாங்கள் அறியாதவரில்லை. மன்னராகிய நீங்கள் செய்வதை மக்கள் செய்யக்கூடாது என சொல்வதும் கூட தவறுதான்” சொன்ன மந்திரி கடம்பன் மன்னரின் முகத்தையே உற்று நோக்கினார்.
“நான் செய்வதை குற்றம் என்கிறாயா? அப்படியென்ன குற்றத்தை செய்து விட்டேன்? ” மந்திரியைப்பார்த்து கோபமாகக்கேட்டார் மன்னர்.
“மன்னரிடம் அதிகாரம் இருப்பதால் நடக்கும் குற்றத்தை யாரும் சுட்டிக்காட்டத்தயங்குவதாலும், சிரச்சேதம் ஏற்பட்டு விடக்கூடும் என பயப்படுவதாலும் யாரும் சுட்டிக்காட்டுவதில்லை மன்னா….”
“உமக்கு சிரச்சேதம் பற்றிக்கவலையில்லை போலிருக்கிறது….?” கோபம் மன்னரின் கண்களை சிவக்கச்செய்திருந்தது.
“மக்கள் மறைமுகமாகக்குற்றம் செய்வதற்கும், அதைத்தடுக்கச்செல்பவர்களும் அதே குற்றத்தைச்செய்வதற்கும் காரணமே நீங்கள் தான் என்பதைச்சொல்லாமல் விட்டால் மேலும் குற்றங்கள் பெருகுமே தவிர கருகாது” என தைரியமாக மந்திரி கூறியதைக்கேட்டு அதிர்ந்த மன்னர் “முதலில் எனது குற்றத்தைச்சொல்லும்” என்றார்.
“மன்னா அழகில் சிறந்த மகாராணி அரண்மனையில் காத்திருக்கையில் அழகிய பெண்கள் பலருடன் அந்தப்புரத்தில் சல்லாபம் செய்கிறீர்கள் என்பது தான் மக்களின் குற்றச்சாட்டு…. தவிர அப்பெண்களுக்கு தங்கள் மீது விருப்பமில்லாத நிலையிலும் கட்டாயமாக திருமணம் எனும் போர்வையில் அந்தப்புறத்தில் சிறைக்கைதிகளைப்போல் அடைத்து வைத்திருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்…” மந்திரியை முறைத்துப்பாத்தார் மன்னர்.
” நான் இந்த நாட்டின் மன்னன். நான் எதைச்செய்தாலும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது என்பது தான் சட்டம். இச்சட்டம் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைமுறையில் உள்ளது. நான் செய்ததை மக்கள் செய்ய அனுமதியில்லை” என கூறியவர் இடையிலிருந்த உறையிலிருந்த வாளை கையில் எடுத்ததும் நடுங்கிப்போய் விட்டார் மந்திரி கடம்பன்.
“மன்னித்து விடுங்கள் மன்னா. உங்களின் செயலைக்கண்டு மந்திரியான நானே அச்சமடையும் போது சாதாரண பிரஜைகள் எவ்வாறு பயப்படாமல் இருப்பார்கள்? பயப்பட்டாலும் தமது விருப்பங்களை நிறைவேற்றுவதில் மறைமுகமாக செயல்படுகின்றனர். நல்ல பெயர்களில் கெட்டதை செய்கின்றனர்”
“அதை எவ்வகையில் தடுப்பது…?”
“அந்தப்புரத்தில் இருக்கும் பெண்களை அவர்கள் விருப்பத்திற்கு நீங்கள் வாழ விட்டால் தான் தேவதாசிகள் எனும் பெயரில் கோவிலுக்கு நேர்ந்து விடுபவர்களை தங்களது இச்சைக்கு பயன்படுத்தும் பிரஜைகள் செய்யும் குற்றங்களை கண்டிக்கவும், தண்டிக்கவும் இயலும்” மந்திரி உறுதியாக சொன்னதும் இறுதியாக மறுத்தார மன்னர்.
மந்திரி கடம்பனுக்கு பல நாட்களாக பெண்களுக்கெதிராக நாட்டில் நடக்கும் கொடுமைகளைக்களைய வேண்டும், அதற்கு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் எனும் தீவிர யோசனை உறக்கத்தைக்கெடுத்துக்கொண்டிருந்தது.
மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி எனும் பழமொழிக்கேற்ப மன்னரது செயல்பாடுகளில் உள்ள தவறுகளை சரி செய்தால் தான் மக்களது தவறுகளை எளிதில் சரி செய்ய முடியுமென்கிற யோசனையில் மன்னரை சரி செய்ய தான் எடுத்த கடைசி முயற்சியும் தோற்றுப்போனதால் மனம் வருந்தினாலும், இன்னொரு பிரம்மாஸ்திரத்தைக்கையில் எடுத்தார்.
“சொல்லு மகாராணி…. ஏன் மிகுந்த மன வருத்தம் கொண்டுள்ளாய்….? உன் மனக்குறைகளைக்களைய சித்தம் கொண்டுள்ளேன். உனது கவலைக்கு எனது செயல்கள் ஏதாவது காரணமா…?” அணைத்தபடி அன்புடன் கேட்டார் கும்ப தேசத்து மன்னர் சாம்பன்.
“உங்களது மனதின் மகிழ்ச்சியை நிறைவேற்றிக்கொள்ள நீங்கள் செய்வது எதுவும் சரிதான். தங்களது செயலில் குற்றம் கண்டு பிடிப்பதை தாங்கள் விரும்பவும் மாட்டீர்கள். அதற்கு மாற்றான உபாயத்தைக்கண்டு பிடித்து முடிந்தால் நானும் தங்களைப்போல மனம் விரும்புவதைச்செய்து கொள்வது சாணக்யம் என முடிவு செய்துள்ளேன்…”
“புதுமையான வார்த்தைகளை பிரயோகப்படுத்துகிறாய். விந்தையான விசயம் என்னவோ….?”
” கணவனது செயலை எதிர்க்கவும் இயலாமல், தாங்கள் விரும்புவதைச்செய்யவும் பயந்து நமது முன்னோர்களைப்போல நானும் யோசிப்பதை விட எனது மனம் எதை விரும்புகிறதோ அச்செயலில் ஈடுபட்டு தங்களைப்போல நானும் மகிழ்ந்திருக்க விருப்பம் கொண்டுள்ளேன்….”
“நீ இன்று பேசுவது என்றுமில்லாத சொல்லாக இருந்தாலும் உனது மனதின் மகிழ்ச்சிக்கான பலனைத்தருவது எச்செயலாகினும் அதைத்தடுக்கும் உரிமை எனக்கில்லை மாண்டூ….”
“தங்களது மனமாற்றம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. காலங்காலமாக ஆண்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், பெண்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என இருந்த நிலையிலிருந்து நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டுள்ளது நாகரீகத்தின் வளர்ச்சிதான்….”
“அப்படியென்றால் நீ சொல்ல வருவது….?”
“தாங்கள் எவ்வாறு என்னைத்தவிர பல அழகிய பெண்களை திருமணம் செய்து அந்தப்புறத்தில் ஆசை நாயகிகளாக வைத்துள்ளீர்களோ, அது போல நானும் எனக்குப்பிடித்த பல ஆண்களை மணந்து நமது அரண்மனையிலேயே ஆசை நாயகர்களாக வைத்துக்கொள்ள ஆசை கொண்டுள்ளேன் மன்னா….” மகாராணி மாண்டுவின் பேச்சைக்கேட்டு அதிர்ந்து போனார் மன்னர்.
“மாண்டூ…..மதி மயங்கி பேசுகிறாயா….? என்ன இழிவான பேச்சு இது….? கற்புக்கரசி சீதை வாழ்ந்த மண் என்பதை மறந்தாயா….?” கடும் சினத்துடன் பேசினார் மன்னர் சாம்பன்.
“கற்புக்கரசர் ராமனை நீங்கள் மறந்த போது நான் சீதையை மறப்பது தவறில்லையே….?”
“பிதற்றாதே…..”
“இது பிதற்றல் அல்ல. தங்களுக்கு ஏற்பட்டிருப்பது போல பித்து….”
“கற்பே பெண்களின் சொத்து. அப்படியிருக்கையில் வேறு ஆண்கள் மீது மோகம் வருவது நம் தேசத்தின் சட்டப்படி தண்டனைக்குரியது….”
“அத்தண்டனை ஆண் மகனான தங்களுக்கு கிடையாதா….?”
“பார்த்துப்பேசு. உலகம் சிரிக்கும். நாடே பரிகசிக்கும். வரலாற்றில் நடக்காததை நீ விரும்புகிறாய்”
“நீங்கள் இதற்காக எனக்கு அநீதியாக உருவாக்கியுள்ள சட்டத்தின் படி மரண தண்டனை வழங்கினாலும் ஏற்றுக்கொள்ள சித்தமாக உள்ளேன். உங்களது செயலை நீங்கள் மாற்றிக்கொள்ளாதவரை எனது சிந்தனையும் அவ்வாறுதான் இருக்கும். ஒரு கணவன் மனைவியிடம் எதை எதிர்பார்க்கிறாரோ, அவ்வாறே அவரும் இருக்க வேண்டும் என்பதையே மனைவி விரும்புவாள். இதுதான் மனமெனும் சட்டத்தில் இயற்றப்பட்டுள்ள நீதி. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்பது அநீதி. இனி நமது நாட்டில் இது போன்ற சட்டங்களுக்கு அனுமதி கிடையாது. அனைவருக்கும் சட்டம் ஒன்றுதான்…” என உறுதியாக மனைவி சொன்னதும் ஆடிப்போன மன்னர் மந்திரி கடம்பனை அழைத்தார்.
மகாராணி மூலமாக தான் போட்ட திட்டம் நிறைவேறி விட்டதாக எண்ணியபடி “உத்தரவு மன்னா” என்றார் பணிவுடன் நடித்தபடி மந்திரி கடம்பன்.
“காலங்காலமாக எனது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்ததை நான் மாற்றப்போகிறேன். பெண்களின் காவலன் என வரலாற்றில் இடம் பெறப்போகிறேன்…” உறுதியாக சொன்ன மன்னனிடம் மேலும் குனிந்து “தங்கள் சித்தத்தில் உதித்ததை நிறைவேற்றக்காத்திருக்கிறேன் மன்னா…” என சொல்லிப்பணிந்தார் மந்திரி.
“இன்றே, இப்பொழுதே அந்தப்புறத்தில் மகாராணியைத் தவிர மனைவி எனும் பெயரில் உள்ள பெண்களையும்,ஆசை நாயகிகளாக இருக்கும் அழகிகளையும் அவர்களது வீட்டிற்கு அவர்கள் கேட்கும் பொற்காசுகளைக்கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்து விடு. பணிப்பெண்கள் கூட மகாராணிக்கு சேவை செய்ய மட்டும் இருக்கட்டும். எனது தேவையை பூர்த்தி செய்திட ஆண் பணியாளர்களை நியமித்திடு. நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி விடு. கோவில்களில் தேவதாசி முறையை நீக்க சட்டம் இயற்றிடு. உடன் கட்டை ஏறுவதை தடுக்க வீரர்களை நியமித்திடு….” மன்னர் சொல்லச்சொல்ல மகாராணியின் காலடிகளில் தனது மனதில் பூத்த நன்றி மலர்களை தூவினார் மந்திரி கடம்பன்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
