கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2025
பார்வையிட்டோர்: 51 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர்தான் அந்த ஹாஸ்ய நடிகர் – கோமாளி ராமண்ணா! ஓகோ, உங்களுக்குத் தெரியாதோ அவரை?… 

அந்தக் காலத்தில் அவர் பெயரைத் தெரியாதவர்களே யாரும் கிடையாது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாடக உலகில் பெரும் புகழுடன் விளங்கிய நடிகர் அவர். 

கோமாளி ராமண்ணா மேடையில் தோன்றுகிறார் என்றால் போதும்! கூட்டம் சொல்லி முடியாது. சுற்று வட்டாரங்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் கட்டுச் சாத மூட்டையுடன் நாடகம் பார்ப்பதற்கு வந்துவிடுவார்கள். 

ராமண்ணா கோமாளியாக மேடையில் தோன்றி, ஒரு தடவை கண்களைச் சிமிட்டித் தலையை இப்படியும் அப்படியும் ஆட்ட வேண்டியதுதான்! கொட்டகையில் சிரிப்பு அலை குளுகுளுவென்று பரவும். ராமண்ணா, கால் ஆர்மோனிய வாத்தியக்காரரின் பக்கத்தில் போய் நின்று கொண்டு, 

“அப்பா, நோட்டு வாங்கப் பணம் வேணும்” என்று கூறிக்கொண்டே எதிரில் வந்து நின்றான் அவருடைய மகன்.

“சீ, போடா! வெளியே புறப்படறப்போ அபசகுனம் மாதிரி!” என்று எரிச்சலுடன் கூறிவிட்டுக் கிளம்பினார் அவர். 

அன்று முழுதும் ராமண்ணா எங்கெங்கோ அலைந்தார். தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் கேட்டுப் பார்த்தார். யாரிடத்திலும் காலணாப் பெயரவில்லை. நடந்து நடந்து, அலைந்து அலைந்து, பசியும் களைப்பும் மேலிட்டவராய் வீட்டுக்குத் திரும்பி வந்தார். 

‘சே! நானும் ஒரு மனிதனா? இதுவும் ஒரு பிழைப்பா? ஊரெல்லாம் என் நடிப்பைக் கண்டு மகிழ்கிறது. ஆனால் என் உள்ளவேதனையை அது அறியவில்லை. என் குடும்பம் சோற்றுக்கில்லாமல் திண்டாடுகிறது. ஆனால் ஊரார் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நான் திண்டாடுகிறேன். உலகம் என்னைக் கொண்டாடுகிறது. இதுதான் ஒரு. கோமாளியின் வாழ்க்கையா? இன்னும் எத்தனை காலத் துக்கு நான் இவ்வாறு வாழ்க்கையுடன் போராடுவது?… தூ !’ என்று அலுத்துக் கொண்டார் ராமண்ணா. 

ராமண்ணா தன் மனைவியை அழைத்து, “குடிக்கக் கொஞ்சம் மோர் இருந்தால் கொடு” என்றார். 

அவர் மனைவி மோருக்குப் பதிலாக நீரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “இதுதான் இன்னிக்கு மோர்; பழைய பாக்கியைக் கொடுத்தாத்தான் இனிமே தயிர் போடுவேன்னு சொல்லிட்டா தயிர்க்காரி” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினாள். 

“தங்கம்! வாங்கிய கடனைத்தான் நம்மால் சரியாத் திருப்பிக் கொடுக்க முடிவதில்லையே! அவங்களும் எத்தனை நாளைக்குத்தான் கடன் கொடுத்துக்கிட்டு இருப்பாங்க?” என்றார் ராமண்ணா. 

“சரி; நீங்க போன காரியம் என்ன ஆச்சு?” என்று கேட்டாள் தங்கம்மாள். 

“கால் கடுக்க அலைஞ்சதுதான் மிச்சம். கேட்ட இடத்தி லெல்லாம் கையை விரிச்சுட்டாங்க” என்று சோகம் ததும்பக் கூறினார் ராமண்ணா. 

“இந்தாங்க, இந்த மூக்குத்தியைக் கொண்டுபோய் அடகுக் கடையிலே வெச்சுப் பணம் வாங்கிட்டு வாங்க. தஞ்சாவூருக்குப் போய் வந்ததும் மீட்டுக்கலாம்” என்று தன்னுடைய மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாள் தங்கம்மாள். 

ராமண்ணா அதை அடகுக் கடைக்கு எடுத்துக்கொண்டு போய்ப் பத்து ரூபாய் பணம் வாங்கி வந்தார். ஏழு ரூபாயை மனைவியிடம் கொடுத்துவிட்டு, மூன்று ரூபாயைப் பஸ் சார்ஜுக்கு வைத்துக் கொண்டார். அவரிடம் ஒரே ஒரு சட்டைதான் இருந்தது. அதுவும் நைந்துபோன ஒரு பழைய சட்டை. முதுகுப் பக்கத்தில் கிழிந்து போயிருந்தது. அதை எடுத்துத் துவைத்தபோது கிழிசல் இன்னும் பெரி தாகி விட்டது. அவர் மனைவி அடுத்த வீட்டிலிருந்து நூலும் ஊசியும் வாங்கி வந்து அதைத் தைத்துக் கொடுத்தாள். 

மறு நாள் காலை. 

ராமண்ணா துவைத்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு அந்த மூன்று ரூபாய்களுடன் பஸ்ஸுக்குப் புறப்பட்டார். அப்போது வாசலில் கூடை வியாபாரி ‘ஆரஞ்சுப் பழம்’ என்று கூவிக்கொண்டே போனான். ராமண்ணாவின் பெண் குழந்தைகளில் ஒன்று ஓடி வந்து, “அப்பா! எனக்கு. ஆரஞ்சுப் பழம் வாங்கித்தாப்பா” என்று கெஞ்சியது. 

“சீ, கழுதை! ஆரஞ்சுப் பழமா வேணும் உனக்கு! இந்தா ஆரஞ்சுப் பழம்” என்று கூறிக்கொண்டே அந்தக் குழந்தையின் முதுகில் இரண்டு அறை வைத்து விட்டார். 

அன்றிரவு தஞ்சாவூரில் நடைபெற்ற ஸ்பெஷல் நாடகத்தில் ராமண்ணா அரண்மனை விதூஷகனாக வேடம் தாங்கினார். ஒரு காட்சியில் அரசன், விதூஷகனிடம் மூன்று ஆரஞ்சுப் பழங்களை உரித்துக் கொடுத்து, அந்தப் பழங்கள் மூன்றையும் அப்படியே முழுசாக விழுங்கும்படி கட்டளை இட்டார். 

விதூஷகன் திருதிருவென்று விழிப்பதைக் கண்ட ராஜா, “விதூஷகரே, விழுங்கப் போகிறீரா இல்லையா?” என்று மிரட்டினார். 

அரசனுடைய உத்தரவுக்கு அஞ்சிய விதூஷகர் பழங்களை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கினார். அப்போது கொட்டகை யில் எழுந்த கரகோஷம் கூரையையே பிய்த்துக்கொண்டு போயிற்று! 

ராமண்ணாவின் கண்களில் கண்ணீர் துளித்தது. 

காரணம்? 

அன்று காலை அவருடைய குழந்தைகளில் ஒன்று ஆரஞ்சுப் பழம் வாங்கித் தரும்படி அழுது பிடிவாதம் செய்தபோது அவர் அதன் முதுகில் இரண்டு அறைகள் வைத்துவிட்டு வந்தாரல்லவா? 

‘என் குழந்தை ஆரஞ்சுப் பழம் கேட்டது. என்னால் வாங்கித் தர முடியவில்லை. இங்கே நாடக மேடையில் ஆரஞ்சுப்பழம் தின்னும்படி அரசன் என்னை வற்புறுத்துகிறான். என் குழந்தைகள் ஆசைப்பட்டுக் கேட்ட ஆரஞ்சுப் பழங்களை நான் விழுங்க வேண்டியிருக்கிறதே!’ – கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் ராமண்ணா. 

நாடகம் முடிந்தது. 

பளபளக்கும் பட்டு அங்கிகளைக் கழற்றிவிட்டு, தமது பழைய கந்தல் சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டார் ராமண்ணா. 

ராஜபார்ட் ரங்கப்பா கொடுத்த பதினைந்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்பி வந்தார். 

மூக்குத்தி?… 

அதை மீட்கவே மூடியவில்லை. அதற்குள் எத்தனையோ பிடுங்கல்கள்! 

ராமண்ணாவின் வாழ்க்கை இன்று நேற்று மட்டும் இப்படி நடக்கவில்லை. அவர் கோமாளி வேஷம் போடத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்தக் கதிதான். 

மாதத்தில் நாலைந்து ஸ்பெஷல் நாடகங்களில் சான்ஸ்’ கிடைக்கும். அதில் வீட்டு வாடகை, கடைச் சாமான் பள்ளிச் சம்பளம் – இவ்வளவும் கொடுத்தாக வேண்டும். முடியுமா? இவ்வளவுக்கும் அந்தப் பணம் ஈடு கொடுக்குமா? 

கடன்காரர்கள் அவர் கழுத்தை நெரித்தார்கள். 

ராமண்ணா பல்லைக் கடித்துக்கொண்டு வாழ்க்கைத் தோணியை ஓட்டிக் கொண்டிருந்தார். கடும் புயலும் மழையும், கடலின் கொந்தளிப்பும் சேர்ந்து அவர் செலுத்திய ஓடத்தை உலுக்கிக் குலுக்கின. 

ராமண்ணாவின் இருண்ட வாழ்க்கையில் ஒரு சிறு வெளிச்சம்மட்டும் தூரத்தில் நட்சத்திரம்போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளி, அவர் மகனுடைய வருங்காலம் தான். அவன் படிப்பை முடிக்க இன்னும் மூன்று வருடங் களே இருந்தன. அப்புறம் அவன் தன்னைக் காப்பாற்றத் தொடங்கிவிடுவான். 

மகன் தலையெடுத்து உத்தியோகம் பார்க்கத் தொடங்கி விட்டால் அன்றோடு தன் கஷ்டங்களெல்லாம், கவலைகளெல் லாம் தீர்ந்து ஒழிந்துவிடும். பின்னர் தன்னையும் தன் நடிப்பையும் கண்டு சிரிக்கும் ஊராரைப்போல் தானும் சிரிக்கலாம். சிரித்துக்கொண்டே இருக்கலாம். இந்த ஒரே நம்பிக்கையுடன்தான் அவர் இத்தனை காலமும், இத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொண்டிருந்தார். 

நாலு ஆண்டுகள் நகர்ந்து சென்றன. ராமண்ணாவுக்கு இப்போது வயது கிட்டத்தட்ட ஐம்பதுக்குமேல் ஆகி விட்டது. வறுமையின் மங்கிய ஒளி அவர் கண்களில் பிரதி பலித்தது. முதுமையின் வடு அவர் உடலெங்கும் வியாபித் திருந்தது. 

இன்னும் ஒரு வருஷத்தில் தம் மகன் வேலைக்குப் போக ஆரம்பித்து விறுவான். அன்றே இந்தக் கோமாளித் தொழி லுக்குத் தலை முழுக்குப் போட்டு விடலாம். இந்த ஒரே நம் பிக்கைதான் அவரை வாழ வைத்தது. 

ஒரு நாள் காலையில் தலையை வலிக்கிறது’ என்று சொல்லிக்கொண்டிருந்த அவருடைய மகனுக்கு மாலையில் நல்ல காய்ச்சல் கண்டுவிட்டது. ராமண்ணா கலங்கிவிட்டார். அவர் மனைவி கை வைத்தியமாக ஏதேதோ செய்து பார்த் தாள். எதற்கும் ஜுரம் குறையவில்லை. இரண்டு நாட்கள் கடந்தன. மகன் படுத்த படுக்கையாகவே கிடந்தான். டாக் டரை அழைத்து வந்து வைத்தியம் செய்ய வசதியில்லாத ராமண்ணா, மனக் கவலையோடு இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தார். மூன்றாம் நாள் சற்று ஜுரம் குறைந்தது. இந்தச் சமயத்தில் ராமண்ணாவுக்கு ஒரு கடிதம் வந்தது. ாஜபார்ட் ரங்கப்பாதான் எழுதியிருந்தார். மதுரையில் சேர்ந்தாற்போல் ஏழு நாடகங்களுக்கு ஏற்பாடாகி யிருக் கிறதென்றும், மொத்தத்துக்கும் சேர்த்து நூறு ரூபாய் கருவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத் துடன் மதுரையில் நாடக ரசிகர்கள் சங்கத்தில் ராமண்ணா வின் நடிப்பைப் பாராட்டி ஒரு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்க ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாகவும். அவர் எழுதியிருந்தார். 

ராமண்ணாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. மனைவியிடம் கடிதத்தைப் படித்துக் காட்டி, “தங்கம், இத்தனை துன்பங் களுக்கும் நடுவிலே எனக்கு யோகம் அடிக்குது பார்த் தியா?” என்று சிறு பிள்ளை போல் கூறி மகிழ்ந்தார். 

“ஆமாம்; மதுரைக்குப் போகப் பணத்துக்கு என்ன செய்யப்போறீங்க?’ என்று கேட்டாள் தங்கம்மாள். 

“நாடகக் காண்டிராக்டர் குப்புசாமிப் பிள்ளை இந்த ஊருக்கு வந்திருக்காராம். அவர் தான் மதுரையிலே காண்டிராக்ட் எடுத்திருக்காராம். அவரைப் போய்ப் பார்த்துப் பணம் கேட்டு வாங்கி வரப் போகிறேன்” என்று புறப்பட்ட ராமண்ணா முப்பது ரூபாயுடன் திரும்பிவந்தார். 

படுக்கையில் படுத்திருந்த அவர் மகன், அப்பா. பள்ளிக்கூடத்திலே இன்னும் பத்து நாளைக்குள் பணம்: கட்டாவிட்டால் பரீட்சைக்கே சேர்த்துக்க மாட்டாங்களாம்” என்று ஈனசுரத்தில் முனகினான். 

“கவலைப்படாதே தம்பி, மதுரையிலிருந்து திரும்பி வந்ததும் கட்டி விடலாம். இன்னும் பத்து நாள் இருக்கிறதில்லையா? அதுக்குள்ளே உனக்கும் உடம்பு குணமாயிடும். தங்கம்! இந்தா, இந்த இருபது ரூபாயை வச்சுக்க. வைத்தி யரை அழைச்சுக்கிட்டு வந்து தம்பிக்கு மருந்து வாங்கிக் கொடு. அவன் உடம்பை கவனிச்சுக்க. ஜாக்கிரதை’ என்று மனைவியிடம் எச்சரித்துவிட்டு மதுரைக்குப் புறப்பட்டு விட்டார் ராமண்ணா. ஆயினும் அவர் மனத்தில் நிம்மதி இல்லை. அந்தச் சமயம் அவர் மனைவியும் கருவுற்றிருந்தாள். ராமண்ணா எப்படியோ மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு மதுரைக்குப் பயணமானார். 

மதுரையில் மூன்று நாட்கள் தொடர்ந்தாற்போல் நடைபெற்ற நாடகம், நான்காம் நாள் அடாது மழை பிடித்துக்கொள்ளவே தடைப்பட்டு விட்டது. 

ஆனால், ராமண்ணாவுக்குப் பொன்னாடை போர்த்துவது என்று முடிவு செய்திருந்த மதுரை நாடக ரசிகர் சங்கத்தார் மட்டும் விழாவை நடத்தி விடுவது என்று முடிவு செய்தனர். பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகரப் பொது மண்டபத்தில் ரசிகர்களும், பொது மக்களும், பிரமுகர்களும், கலைஞர்களும் துளி இடமில்லாதபடி கூடிக் குழுமியிருந்தனர். 

ராமண்ணாவின் நடிப்புத் திறமையைப்பற்றியும் நாடகக் கலைக்கு அவர் செய்துள்ள சேவையைப்பற்றியும், பலர் வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்ததுடன், அவருக்குப் பொன்னாடை போர்த்தி,நூறு ரூபாய் பண முடிப்பும் அளித்தனர்.

ராமண்ணாவின் கந்தல் சட்டையைப் பொன்னாடை மறைத்தது. அப்போதும் அவர் சிரிக்கவில்லை. பற்றற்ற துறவி போல் எழுந்து நின்று நகைச்சுவையின் உயர்ந்த தன்மையைப்பற்றிப் பேசினார்: “அந்த அரிய கலை ஒன்று தான் எல்லோரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும் சக்தி படைத்தது. என்னை இத்தனை காலமும் சாகாமல் வாழ வைத்ததும் அந்தக் கலைதான். அந்தக் கலைக்கும் எனக்கும் கௌரவம் அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறிவிட்டு உட்கார்ந்தார் அவர். விழா முடிந்தது. 

தமக்குக் கிடைத்த பெருமையையும் பணத்தையும் தம் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன் அடுத்த ரயிலிலேயே ஊருக்குப் பயணமானார் ராமண்ணா. வீட்டுக்குச் சென்றதும் முதல் காரியமாக மகனுடைய சம்பளத்தைக் கட்டிவிடலாம் என்ற மகிழ்ச்சி அவர் உள்ளத்தில் நிரம்பி யிருந்தது. 

ஆனால், வீட்டை அடைந்தபோது அவர் கண்ட காட்சி… 

அங்கே, அவர் மனைவியைக் காணவில்லை! 

மகன்?… 

அவனையும் காணவில்லை. இரண்டு பெண் குழந்தைகளும் பட்டினியோடு ஒரு மூலையில் படுத்துக் கிடந்தன. 

ராமண்ணாவைக் கண்ட அந்தப் பெண் குழந்தைகளில் ஒன்று எழுந்து வந்து, “அப்பா, அண்ணா செத்துப் போயிட்டான்” என்றது. 

அந்தச் செய்தியைக் கேட்ட ராமண்ணாவின் தலையில் வானமே இடிந்து விழுவது போலிருந்தது. மின்னல்களும் நட்சத்திரங்களும் அவர் தலையைச் சுற்றிவட்டமிட்டன. அவர் தலை சுழன்றது. 

“அம்மா எங்கே?” என்றார் ராமண்ணா. இதற்குள் அங்கே வந்த அடுத்த வீட்டுக்காரர், “ஜுரமாகப் படுத்திருந்த உங்க மகன் நேற்று இறந்துவிட்டான். அந்த அதிர்ச்சி தாங்காமல் உங்கள் மனைவிக்கு வலி கண்டுவிட்டது. ஆசுபத்திரிக்கு எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். மதுரைக்குத் தந்தி கொடுத்தோமே, வந்து சேரவில்லையா?” என்றார். 

தாம் மட்டும் சிரிக்காமல் மற்ற எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த ராமண்ணா அன்றுதான் முதல் தடவையாக வாய்விட்டுச் சிரித்தார். பின்னர் கையிலிருந்த பொன்னாடையைப் பிய்த்து எறிந்தார். 

அப்புறம் சிரித்துக்கொண்டே இருந்தார் அவர். 

– திருக்குறள் கதைகள், மங்கள நூலகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *