மணியார்டர்
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பஜரே கோபாலம்…”
‘ஜல் ஜல்’ என்ற ஜாலரா சப்தத்துடன் தெருக் கோடியில் வரும்போதே.சீதாராமய்யாவின் குரல் வீதி முழுதும் நிறைந்து ஒலிக்கும்.
எண்பதை எட்டிப் பிடிக்கும் தள்ளாத பருவம். மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்களையெல்லாம் அநுபவித்துச் சலித்துப் பழுத்துப்போன அவர் உடலில், சக்தியும் ரத்தமும் குன்றி, சதைப் பிடிப்பெல்லாம் சுருங்கி, புருவத்தின் ரோமம் நரைத்து, செறிந்து, மங்கிக் கூசும் கண்களின் மேற்பகுதியை மறைத்துக் கொண்டிருந்தன. சதைச் சுருக்கங்கள் முகமெல்லாம் ஆழ உழுதுவிட்டிருந்தன.
நாமாவளிக்கிடையே அடிக்கடி புகைந்து வரும் இருமலும் அதைத் தொடர்ந்து ‘நாராயணா, நாராயணா!’ என்னும் சிரமபரிகார உச்சரிப்பும் கேட்போரின் உள்ளத்தைக் கிளறி விடும்.
கையிலே ஜாலரா, தோளிலே பிட்சா பாத்திரம், கழுத் திலே தாமரை மணிமாலை, நெற்றியிலே அட்சதைத் திலகம், தலையிலே தியாகய்யரைப்போல் போர்த்திக் கட்டப்பட்ட வஸ்திரம், கக்கத்திலே குறுக்குக் கம்பிகளெல்லாம் இற்று வெலெத்துப்போன கறுப்புக் குடை.
பாடிக்கொண்டே, ஜாலராவைத் தட்டிக்கொண்டே, இருமிக்கொண்டே, தளர் நடை போட்டுக்கொண்டே ஊர் ஊராய்த் தெருத் தெருவாய்ச் சுற்றி அலைந்து உஞ்சவிருத்தி மூலம் கிடைக்கும் அரிசியைக்கொண்டு அன்றாடக் காலட் சேபத்தை நடத்தி வந்தார் அந்தத் தொண்டு கிழவர்.
அலைந்து திரிந்து சேகரித்துக் கொண்டுபோகும். அரிசியைப் பொங்கிப்போட அவருக்கு இந்த உலகத்தில் ஒருவருமே இல்லை.
தனித்து உழலும் ஒரு திக்கற்ற ஆத்மா அவர்.
பட்டிபுரம் கிராமத்துத் தெருவில் நடந்து வரும்போது அவர் கால்கள் தாமாகவே ஓரிடத்தில் வழக்கமாக நின்று விடும்.
அவர் நிற்கும் அந்த இடத்துக்கு எதிரில்தான் அந்த பிராஞ்சு தபாலாபீஸ் இருந்தது.
உள்ளே போஸ்ட் மாஸ்டர் வராகாச்சாரி அன்று வந்த தபால்களை ‘ஸார்ட்’ செய்துகொண் டிருப்பார்; அல்லது சடக் சடக்’ என்று முத்திரை குத்திக் கொண்டிருப்பார்; அல்லது ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார்; அல்லது தெருத் திண்ணையில் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும். பள்ளிக்கூடப் பிள்ளைகளை உள்ளிருந்தபடியே அதட்டி அடக்கிக் கொண்டிருப்பார்.
சிற்சில சமயங்களில் திண்ணைமீது வந்து கால்மேல் கால் போட்டபடி, வெற்றிலையை மடித்துப் போட்டவண்ணம் உலகத்தையே துரும்பாக மதிக்கும் பாவனையில் அமர்ந்திருப்பார்.
போஸ்ட் மாஸ்டர் திண்ணையில் இல்லாத நேரங்களில் சீதாராமய்யா ஜன்னல் ஓரமாகச் சென்று உள்ளே எட்டிப் பார்ப்பார்.
“யார், சீதாராமையாவா? வாய்யா!” என்று உள்ளிருந்து ஓர் அதிகாரக் குரல் கிளம்பும்.
“ஆமாம்……நான் தான்…… எனக்கு ஏதாவது மணி யார்டர் உண்டா?” என்று தமது குரலை அடக்கித் தாழ்த்திப் பணிவாகக் கேட்பார் சீதாராமய்யா.
“மணியார்டர்தானே? உமக்குத்தானே? வந்திருக் கய்யா வந்திருக்கு; உம்ம பேரன் மெட்ராஸிலே கலெக்டர் வேலை பண்றான் பாரும், அவன் அனுப்பி யிருக்கான்! கையெழுத்துப் போட்டு வாங்கிக்கிறீரா?’ – எக்காளச் சிரிப் புடன் வெகு அலட்சியமாகவும் கேலியாகவும் கூறுவார் வரா காச்சாரி. பின்னோடு, “அட,போய்யா போ, வேலை மெனல் கெட்டவரே! மணியார்டராம், மணியார்டர்! உமண்டு எவனய்யா மணியார்டர் அனுப்பப் போறான்? திதைக் வந்து என் பிராணனை வாங்கறீரே?…”
வராகாச்சாரியின் குரலில் அசட்டையும் அகம்பாவமும் பின்னிக் கொண்டிருக்கும்.
“நிஜமாகவே என் பேரன் ஒரு நாளைக்கு எனக்கு மணியார்டர் அனுப்பத்தான் போறான்; உம்ம கையாலேயே நீர் அதை எனக்குக் கொடுக்கத்தான் போகிறீர்!” என்பார் சீதாராமய்யா.
“ஆமாம்; உம்ம பேரன் பணம் அனுப்பப் போறான். நீர் அதை வாங்கி மாடி வீடு கட்டப் போகிறீர். பகல் கனவா காண்கிறீர்? இந்தக் காலத்திலே பெற்ற அப்பனையே பிள்ளை காப்பாற்ற மாட்டேங்கறான். எவனோ பேரனாம். தாத்தாவைக் காப்பாத்தப் போறானாம். பட்டணத்திலே, அவன் எங்கே ‘ததிங்கிணத்தோம்’ போட்டுக் கொண் டிருக்கிறானோ? மணியார்டர் அனுப்புவானாம் மணியார்டர்? அனுப்புவான், அனுப்புவான். பார்த்துக்கொண்டே இரும். கேட்டுக்கொண்டே இரும்” என்பார் போஸ்ட் மாஸ்டர்.
“போஸ்ட் மாஸ்டர் அப்படிச் சொல்லக்கூடாது, என் பேரன் ரொம்ப நல்ல பையன். கட்டாயம் மணியார்டர் அனுப்புவான்!” – அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறுவார் சீதாராமய்யா.
“ஐயா, பேஷாய் அனுப்பட்டும். நானா அதுக்கு குறுக்கே நிற்கப் போகிறேன்?” என்பார் போஸ்ட் மாஸ்டர்.
‘நாராயணா நாராயணா!’ என்று ஈனசுரத்தில் சொல்லிக்கொண்டே சீதாராமையா அந்த இடத்தை விட்டு நகர்வார்.
“பஜரே கோபாலம்” – இந்தக் குரல் தெருக்கோடி வரை ஒலித்துவிட்டுப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மறையும்.
“எனக்கு ஏதாவது மணியார்டர் உண்டா?” – சீதாராமய்யா தினம் தினம் ஆவலோடு, நம்பிக்கையோடு கேட்கும் கேள்வி இது.
“இல்லையே!” போஸ்ட் மாஸ்டர் வராகாச்சாரி ஒவ்வொரு நாளும் அலுக்காமல் சலிக்காமல் கூறும் பதில் இது.
மூன்று வருட காலமாக நாள் தவறாமல் சீதாராமய்யா இதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார். போஸ்ட் மாஸ்டர் அதே பதிலைத் திரும்பத் திரும்பச் சலிக்காமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
‘ஐயோ பாவம்! இப்படி ஒரு அப்பாவி ஆத்மா இந்த லகத்தில் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறதே!’ இதை எண்ணும்போது வராகாச்சாரிக்குத் தம்மை அறியாமல் சிரிப்பு வரும்.
வராகாச்சாரி தாலுகாபீசில் ஹெட் கிளார்க்காயிருந்து ரிடயரானவர். பெரிய வாயாடி. இந்த உலகமே அவருக்கு அலட்சியம். யாரையும் எடுத்துப் போட்டது போல் தான் பேசுவார்.
“வராகாச்சாரியா? மண்டைக் கிறுக்கு பிடித்த ஆசாமி யாச்சே? இதயத்திலே ஒன்றும் கிடையாதுதான். ஏழை எளியவர்களிடத்தில் அன்புள்ளவர்தான். ஆனாலும் மகா கர்வம் பிடிச்ச மனுஷனய்யா” என்பதுதான் அவரைப் பற்றி அந்தக் கிராமத்து மக்கள் கொண்டிருந்த அபிப்பிராயம்.
தாலுகா பீசிலிருந்து விலகிய பிறகு தம் சொந்தக் கிராம மாகிய பட்டிபுரத்துக்குத் திரும்பி வந்து பிராஞ்சு போஸ்ட் மாஸ்டர் வேலையை ஒப்புக்கொண்டார். தம் சொந்த வீட்டிலேயே போஸ்டாபீஸ், திண்ணைப் பள்ளிக்கூடம் இரண்டையும் நடத்திக்கொண்டு, சர்க்காரிடமிருந்து சம்பளம், வாடகை இரண்டையும் பெற்றுக் கொண்டிருந்தார்.
வராகாச்சாரிக்கு விஷ மந்திரமும் தெரியும். சுற்று வட்டாரத்தில் யாருக்குப் பாம்பு கடித்தாலும் இரவு பகல் எந்த நேரத்திலும் போஸ்ட் மாஸ்டரைத் தேடிக்கொண்டு வந்து விடுவார்கள். அவர் தம் வேட்டியின் ஓரத்தைக் கிழித்து மந்திரம் ஜபித்து, நாலு முடிச்சுப் போட வேண்டியதுதான் தாமதம்; விஷம் மளமளவென்று இறங்கி,போன உயிரே திரும்பி விடும்.
பத்து வருடங்களுக்கு முன்னால்…..
சீதாராமய்யாவின் மகள் வயிற்றுப் பேரன், ஏழு வயதுச் சிறுவன் – ரங்குடு தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய தாய் அந்தக் குழந்தையை அநாதையாக விட்டுவிட்டுக் காலமாகி விடவே, பேரனை எடுத்து வளர்க்கும் பொறுப்பு சீதாராமய்யாவின் தலையில் சுமந்தது.
தாத்தாவின் கஷ்டங்களை உணர்ந்த ரங்குடு, “தாத்தா, நான் நன்னாப் படிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டா நீ பிச்சை எடுக்கிறதை நிறுத்திடுவியா?” என்று கேட்டான்.
“ஆமாம்.”
“தாத்தா! பிச்சை எடுக்கிறது கேவலம்தானே?”
“கடவுள் நாமாவைப் பாடிக்கொண்டே தெருவிலே நடந்து போறேன். அவர்களாகக் கொடுக்கிற அட்சதையை வாங்கிக்கொண்டு வரேன். அதுவும் அன்றாடம் நமக்கு வேண்டிய அளவுக்குத்தான் வாங்கறேன். நாளைக்கும் சேர்த்து வாங்கற பழக்கம் கிடையாது. ஆண்டவன் என் தலையிலே இப்படித்தான் எழுதியிருக்கார்’” என்று கண்ணீர் உகுத்தார் கிழவர்.
ரங்குடுவின் இளம் உள்ளம் வேதனைப்பட்டது.
“தாத்தா, நீ இப்படிக் கஷ்டப்படறதைப் பார்க்க எனக்குச் சங்கடமாயிருக்கு. எத்தனை நாளைக்கு நீ இப்படி வெயிலிலும் மழையிலும் ஊர் ஊரா அலைஞ்சு கஷ்டப்படப் போறே?”
“என்ன செய்யலாம் கண்ணு! நீ சீக்கிரம் படிச்சுப் பாஸ் பண்ணிட்டா அப்புறம் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லே” என்று அவனைச் சமாதானப்படுத்துகிறபோதே கிழவருக்கு அசாத்திய இருமல் வந்துவிட்டது. அந்த இருமலில் அவர் உடலே குலுங்கி அதிர்ந்தது.
முதல் நாள் மழையில் அலைந்து திரிந்துவிட்டு வந்திருந் த்தால் அவருக்குத் தலைவலி, இருமலுடன் லேசார ஜுரம் வேறு கண்டிருந்தது.
“நாராயணா நாராயணா!” என்று சொல்லிக் கொண்டே தரையில் படுத்துவிட்டார் தாத்தா.
‘ஐயோ, தாத்தாவால் வெளியே போக முடியாதே! தாத்தாவுக்கும் எனக்கும் யார் சாதம் போடுவார்கள்? எப்படிச் சாப்பிடுவது! அரிக்கு என்ன செய்வது?’- ரங்குடுவின் இளம் உள்ளத்தில் பெரும் திகைப்பும் திகிலும் தோன்றிக் குழம்பின.
தாத்தாவுக்குத் தெரியாமல் குடிசையை விட்டு வெளியே சென்றான் அவன்; சற்று நேரத்திற்கெல்லாம் மூன்று ரூபாயுடன் திரும்பி வந்தான்.
“தாத்தா, உனக்கு மருந்து வாங்கிக்கொண்டு அப்படியே கடைக்குப் போய் அரிசி வாங்கிக்கொண்டு வரட்டுமா?”
“மருந்தும் அரிசியும் வாங்கப் போறயா? உன்னிடம் பணம் ஏது?” – ஆச்சரியத்துடன் கேட்டார் கிழவர்.
“நான் சேர்த்து வெச்சிருந்தேன்.”
கிழவர் அவன் பேச்சை நம்பவில்லை. “பொய்! உண்மையைச் சொல்; எங்கேயோ போய்த் திருடிக்கொண்டு வந்திருக்கே!” – தாத்தாவின் முகத்தில் கோபமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டிருந்தன.
“இல்லை தாத்தா, நிஜமாச் சொல்றேன். நான் சேர்த்து வெச்சிருந்தேன்.”
அவர் நம்பவில்லை. ஆவேசத்துடன் எழுந்து போய் ரங்குடுவைப் பளீர் என்று கன்னத்தில் அறைந்து, அவன் பிடரியைப் பிடித்துக் குடிசைக்கு வெளியே வேகமாகத் தள்ளிவிட்டு, “திருட்டுப் பயலே, இந்த வீட்டுக்குள் இனி காலடி வைக்கப் போறே! பிச்சை எடுக்கறது கேவலமாப் போச்சு உனக்கு! திருடறது உத்தமத் தொழிலா?” என்று கதவைச் சாத்திக் கொண்டார். திருடியாவது தாத்தாவின் கஷ்டத்தைத் தீர்க்க விரும்பினான் ரங்குடு.
ஆனால் தாத்தாவோ அவனை அடித்துத் துரத்தி விட்டார்.
அழுதுகொண்டே வெளியே சென்ற ரங்குடு அன்று போனவன் தான்; பிறகு அவன் அந்தக் குடிசைக்குத் திரும்பவேயில்லை.
தாத்தா குமுறிக் குமுறி அழுதார். “ரங்குடு, எங்கே போனே?” என்று ஏக்கத்தோடு கதறினார்.
“‘பிச்சை எடுக்கிறது கேவலம் இல்லையா தாத்தா?’ என்று என்னைக் கேட்டாயே! ரங்குடு, நீ மட்டும் திருடலாமா?” என்று தூக்கத்தில் வாய் பிதற்றினார்.
“நிஜம்மா சொல்றேன் தாத்தா! நான் தெரியாமல் திருடிவிட்டேன். இனிமேல் நான் திருடவே மாட்டேன்.” – ரங்குடுவின் இந்தக் கெஞ்சும் குரல் அவர் இதயத்தைப் பிளந்தது.
இந்தச் சம்பவம் நடந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன.
‘இப்போது ரங்குடு எங்கே இருக்கிறானோ? செய்கிறானோ? அவன் ரொம்பப் பெரியவனாக வளர்ந்திருப்பான். படித்துப் பாஸ் செய்திருப்பான். பட்டணத்திலே வேலையாயிருப்பான். ஒரு நாளைக்கு எனக்கு மணியார்டர் அனுப்புவான்!’
சீதாராமய்யா தம் பேரனிடம் திடமான, உறுதியான, மாறாத, மாற்றமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.
அந்த நம்பிக்கையின் பேரில்தான், ”எனக்கு ஏதாவது மணியார்டர் உண்டா?” என்று ஒவ்வொரு நாளும் வராகாச்சாரியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அன்று பொழுது விடிந்ததும் சீதாராமையா வெளியே புறப்பட்டார். நாலு தெருக்கள் சுற்றிவிட்டு, தபாலாபீஸ் தெருவுக்கு வந்தார். தபாலாபீசை அடைந்ததும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். வழக்கம்போல் “எனக்கு ஏதாவது மணியார்டர் உண்டா?” என்று கேட்டார்.
குனிந்தபடி ஏதோ கவனமாக எழுதிக் கொண்டிருந்த வராகாச்சாரி எரிச்சலுடன் திரும்பி, “போமய்யா, வேலைமெனக்கட்டவரே; மணியார்டரும் இல்லே, மண்ணாங் கட்டியும் இல்லே!” என்று சீறி விழுந்தார்.
வராகாச்சாரியின் சுபாவம் அறிந்த சீதாராமய்யா அவர் கோபத்துக்காகச் சிறிதும் வருத்தப்படவில்லை. அவருடைய வருத்தமெல்லாம் அன்றும் தனக்கு மணியார்டர் வரவில்லையே என்பதுதான்.
‘நாராயணா எத்தனை காலத்துக்கு நான் இப்படிக் கஷ்டப்பட வேண்டும்? என் பேரன் மணியார்டர் அனுப்பவே மாட்டானா? என் கஷ்டம் தீரவே தீராதா? நான் என்றென்றைக்கும் நடந்து நடந்து, உடல் மெலிந்து உயிரை விட வேண்டியதுதானா?’ கிழவர் தள்ளாடித் தள்ளாடி நடந்தார்.
மணி பதினொன்று இருக்கும்; நல்ல வெயில், களைப்புத் தாங்காமல் சாலை ஓரத்திலுள்ள பாழடைந்த அநுமார் கோயில் மண்டபத்தில் போய்ப் படுத்துக் கொண்டார். சோர்வின் மிகுதியால் அவர் கண்கள் குழி விழுந்து கிடந்தன. படுத்தவர் அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் விழித்துக் கொண்டு எழுந்தவர், காலின் கீழ் ‘வழ வழ’ வென்று ஏதோ நெளிவதுபோல் உணர்ந்தார். சட்டென்று காலை உதறிவிட்டுக் கீழே பார்த்தார்.
அதே சமயத்தில் அவருடைய காலால் மிதிபட்ட பாம்பு ‘புஸ்’ ஸென்று சீறிக்கொண்டு அவர் கால்மீது பாய்ந்து பிடுங்கியது.
“ஆ, ஐயோ!” என்று அலறிக்கொண்டே கீழே சாய்ந்து விட்டார் கிழவர்.
அப்போது அந்த வழியாக வந்த சிலர் சீதாராமய்யா பாம்பு கடித்துக் கீழே விழுந்து கிடப்பதைத் கண்டு விட்டு ஓடிவந்து அவரைத் தூக்கிக் கொண்டு போஸ்ட் மாஸ்டரிடம் விரைந்தார்கள்.
”என்ன? சீதாராமய்யாவைப் பாம்பு கடிச்சுட்டுதா?” – பதறினார் வராகாச்சாரி.
பரபரப்புடன் வேட்டியைக் கிழித்து மந்திரத்தை ஜபித்தார். காலம் கடந்துவிடவே, மந்திரத்துக்குப் பலன் இல்லாமற் போய்விட்டது.
சீதாராமய்யா என்றென்றும் மீளமுடியாத நிரந்தர உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். நம்பிக்கை நிறைந்த, சலன மற்ற அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் வராகாச்சாரி. எதற்குமே கலங்காத அவரது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.
சீதாராமய்யாவின் உயிரற்ற உடல் அவரைப் பார்த்துக் கேட்டது:
“எனக்கு ஏதாவது மணியார்டர் உண்டா? என் பேரன் ரொம்ப நல்ல பையன்… கட்டாயம் மணியார்டர் அனுப்புவான்”.
வராகாச்சாரியின் இதயம் குமுறிப் பொங்கிற்று. காரணம்: அன்று நிஜமாகவே சீதாராமய்யாவுக்கு ஒரு மணியார்டர் வந்திருந்தது. அவருடைய பேரன் ரங்குடு தான் அனுப்பியிருந்தான்!
ஒரு மணிக்குமுன் சீதாராமய்யா வந்து கேட்டபோது எங்கோ கவனமாக, மணியார்டரும் இல்லை, மண்ணாங் கட்டியும் இல்லை என்று தாம் அலட்சியமாகப் பதில் கூறி விட்டதை எண்ணி எண்ணித் துக்கப்பட்டார் வராகாச்சாரி.
“இப்ப என்ன சொல்றீங்க போஸ்ட் மாஸ்டர்? என் பேரன் பணம் அனுப்பிச்சிருக்கானா இல்லையா, பாரும்!”
போஸ்ட் மாஸ்டரைப் பார்த்துச் சீதாராமய்யா கேலி செய்வதுபோல் இருந்தது.
“அட பாவமே! பேரன் மணியார்டர் அனுப்பியிருக்கிறான் என்பதை அறிந்தால் சீதாராமய்யா எவ்வளவு சந்தோஷப் படுவார்? மணியார்டர் வரும் வரும் என்று எத்தனை நம்பிக்கையோடு எத்தனை காலமாகக் காத்திருந்தார். சீதாராமய்யாவின் வாழ்க்கையில் கிடைத்த ஒரே சந்தோஷத்தை-பேரன் அனுப்பிய மணியார்டரில் கையெழுத்துப் போட்டு வாங்கும் சந்தர்ப்பத்தை – ஒரே வார்த்தையில் இல்லாமல் செய்துவிட்டேனே? நான் மணியார்டரைக் கொடுத்திருந்தால் அவர் அநுமார்கோயில் மண்டபத்துக்குப் போயிருக்க மாட்டாரே! அவரைப் பாம்பும் கடித்திருக்காதே! பொறுப்பற்ற என் பதில் ஒரு நல்ல ஆத்மாவின் முடிவுக்குக் காரணமாகிவிட்டதே! அசட்டை யாக நான் செய்துவிட்ட குற்றம் எவ்வளவு பெரிய விபரீதமாக முடிந்துவிட்டது!” என்று துடிதுடித்துப் போனார் வராகாச்சாரி.
‘என் ஆயுள் காலத்தில் பாம்புக் கடிக்கு நான் மந்திரம் போட்டுப் பிழைக்காத கேஸ் இது ஒன்றுதான். என் தபாலாபீசுக்கு வந்த மணியார்டர் ‘டெலிவரி’ ஆகாமல் கிடப்பதும் இதுதான் முதல் தடவை. வராகாச்சாரியின் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் இருந்தது. தாம் செய்த பெரும் பிழைக்குப் பிராயச் சித்தமாகச் சீதாராமய்யாவின் அந்திமக் கிரியைகளைத் தாமே நடத்தி முடித்தார்.
கவிழ்ந்த முகத்துடன், கனத்த இதயத்துடன் மேஜை முன்பு வந்து உட்கார்ந்தார் வராகாச்சாரி. மணியார்டர் ‘பாரம்’ அவரைப் பார்த்துச் சிரித்தது. கண்ணீரைத் துடைந்தபடியே வராகாச்சாரி அந்த மணியார்டரைக் கையிலே எடுத்துப் பார்த்தார். அதில் சீதாராமய்யாவின் முகம் தெரிந்தது.
‘எனக்கு ஏதாவது மணியார்டர் உண்டா?’
– திருக்குறள் கதைகள், மங்கள நூலகம், சென்னை.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 5, 2025
பார்வையிட்டோர்: 50