ஏமாற்றக்கோடுகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 152 
 
 

இரவு முழுதும் உறக்கம் கெடுத்துப்படித்தும் தேர்வில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் விழித்தான் முருகன். அந்தப்படிப்பு முடித்தால் போதும், இந்தப்படிப்பு முடித்தால் போதுமென ஒவ்வொரு படிப்பாய் படித்து முடிக்கையில் முப்பதைத்தொட்டிருந்தது வயது.

முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப்படித்த பலர் பின் வருடம் சிலரென பல காரணங்களால் படிப்பை நிறுத்தியவர்களே அதிகம். ஊரில் அதிகம் படித்தவனென்ற பெருமை மட்டுமே தனக்கு இருப்பதாகப்பட்டது. அது, இதுவென ஐந்து டிகிரிகள் வாங்கியிருந்தான்.

“சார் உங்க படிப்புக்கு எங்க கம்பெனில வேலை இல்லை. சொல்லப்போனா உங்களை செலக்ட் பண்ணற இடத்துல இருக்கிற நானே உங்க படிப்புல பாதி கூட படிக்கல. அதோ அந்த போட்டோவப்பாருங்க, அவரு தான் எங்க ஆயிரம் பேருக்கும் முதலாளி. அவரே ஐந்தாவதோட படிப்பை விட்டவர்தான். அனுபவம் தான் முக்கியம்” என வேலைக்கு இன்டர்வியூவிற்கு சென்ற இடத்தில் மேனேஜர் கைநீட்டிச்சொன்ன முதலாளி படத்தைப்பார்த்தான். தன்னுடன் ஐந்தாவது வரை படித்த ஆனந்தன். அதிர்ச்சியுடன் வெளியேறினான். பல கம்பெனிகளின் படியேறி சலித்துக்கொண்டான்.

“முருகா உன்னோட படிப்புக்கெல்லாம் ஸ்கூல் காலேஜ்ல டீச்சிங் வேலைக்கு போகலாம். ஆனா சம்பளம் பெருசா தரமாட்டாங்க. பேசாம ஐடி ஜாப்புக்கு டிரை பண்ணு. அதுக்குன்னு ஒரு வருச கோர்ஸ் இருக்கு படி” என நண்பன் மாதவன் கொடுத்த ஆலோசனையில் படித்ததும் பெங்களூருவில் ஐம்பதாயிரம் சம்பளத்தில் வேலை கிடைக்க நம்பிக்கையுடன் ரயிலேறினான்.

தன்னுடன் வேலை பார்க்கும் பலர் தன்னை விட வயதில் மிகவும் குறைந்தவர்களாக இருந்ததால் நண்பர்கள் கிடைக்கவில்லை.

தனது வயதொத்தவர்கள் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். படித்தாலும் வேலைக்காகவே படிக்க வேண்டும் என்பதை இப்போது தான் புரிந்து கொண்டான். 

ஒரே இடத்தில் அசையாமல் பத்து மணி நேரம் முழு ஈடுபாட்டுடன் முருகனால் வேலை செய்ய முடியவில்லை. தவிர வாங்கும் சம்பளமும் பெரும்பகுதி செலவாகி விடுவதால் சேமிக்க இயலாமல் வருந்தினான். சிறு வயது லட்சியங்கள் நிறைவேறுமென்பதிலிருந்த நம்பிக்கையை சிறிது, சிறிதாக இழந்தான். 

நாகரீகம் வளர்ந்த நகரத்தின் கலாச்சாரம் பிடிக்காமல் வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டிற்கு வந்தவன் அறையை விட்டே வெளியே வராமல் முடங்கினான்.

படிக்காமல் வேலைக்கு போன பலருக்கு நல்ல அனுபவத்தினால் சம்பளம், தொழில் வருமானம் வருவதால் பெண் கொடுத்தனர். முருகன் நன்றாகப் படித்திருந்தும், தெய்வம் முருகனைப் போலவே அழகாக இருந்தும் அதிக சம்பளத்தில் வேலையும், சொந்த வீடும் கூட இல்லாததால் பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. ‘அழகும், படிப்பும் அறிவும் கூட இந்த மக்களிடம் செல்லாது’ என்பதைப் புரிந்த போது மனம் வருந்தினான்.

“எனக்கு இந்த வாழ்க்கையே புடிக்கலை. இந்த பாசு, பெயிலு, முதலாளி, வேலைக்காரன், பணக்காரன், ஏழை, கடன், கவலை, தொழில், நஷ்டம் இதெல்லாம் கூடவே கூடாது. எங்கேயாவது ஒரு கிராமத்துல‌ காட்டுக்குள்ளே ஆடு, மாடு, காக்கா, குருவின்னு வாழ்ந்திடனம். மனுசங்களோட, மெசினோட, கம்யூட்டரோட, செல்போனோட, டென்சனோட, அதனால வர்ற நோயோட, மருந்து, ஊசின்னு இல்லாத வாழ்க்கை வேணும். சீதைக்கு லட்சுமணன் போட்ட கோடு மாதிரி, மத்தவங்க போட்ட கோட்டுக்குள்ள நாம வாழனும்னு நினைக்கிறாங்க. அது எச்சரிக்கை கோடு. அது சரி. ஆனா நம்ம வாழற முறை கோடுகள் ஏமாற்றக்கோடுகளாத்தான் இருக்கு.

ஆதாரு, ரேசன் கார்டு, கரண்டு பில்லு, சிலிண்டரு, கேபிள் கணைக்சன், பைக்கு, காரு இன்சால்மெண்ட் டென்சன் னு எதுவுமே இல்லாம நல்ல சுத்தமான காத்து வாங்கீட்டு, பழங்கள பறிச்சு திண்ணுட்டு, ஆத்துல குளிச்சிட்டு, ஓலைச்சாளைல கயித்துக்கட்டில்ல படுத்து தூங்கீட்டு நம்ம முன்னோர்களப்போல நூறு வயசு வாழனம்னு நெனைக்கிறேன். என்னோட வாழ்க்கைய நான் எப்படி வாழனம்னு முடிவு பண்ணற உரிமை எனக்கு இருக்கில்ல…?

டவுன்ல கஷ்டப்பட்டு பீஸ் கட்டி படிச்சு, காலேஜுக்கு கிராமத்துல இருந்த காட்ட வித்து டொனோசன் கட்டி, வேலைக்குப்போனா அதுல மூணுல ஒரு பங்கு டேக்ஸ் எடுத்துக்கிறானுக. வெளியூர்ல வேலைன்னா வீட்டு வாடகை, மளிகை சாமான், சமையல்காரின்னு, வாரத்துல மூணு நாள் ஹோட்டல்னு செலவு. பஸ், டிரெயின் செலவு சம்பளத்துல பாதி போயிடுது. 

சொந்தமா வீடு வாங்கலாம்னா மாசத்துக்கு ஒரு வெலை சொல்லறானுக. சம்பளம் ஏறுதோ இல்லையோ வீடும், எடமும் மனசாட்சியே இல்லாம ஏறிகிட்டே போகுது. ஒரு வருசத்துக்கு முன்ன ஐம்பது லட்சம்னு சொன்ன வீடு இப்ப ஒரு கோடின்னு சொல்லறாங்க. பஸ்டேண்டுக்கு பக்கத்துலேன்னு விளம்பரம் கொடுக்கறாங்க. அதத்தாண்டி ஐம்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கு. வெளிப்படையாவே கூடை கூடையா பொய் சொல்லறாங்க. ஆனா படிச்சவங்க யோசிக்காம நம்பி கடன்காரனாகறாங்க. வீட்டு வேலைய செய்யறதே உடற்பயிற்ச்சின்னு புரியாம வெளில பணங்குடுத்து உடற்பயிற்சிக்கு போறாங்க. வீட்டு வேலைக்கு சம்பம் கொடுத்து ஆள் போடறாங்க.

எல்லாமே டவுன் வாழ்க்கை, ஆடம்பர மோகம். கிராமத்துல மாட்டுக்கு போடற மக்காச்சோளம் டவுன்ல நூறு இருநூறுன்னு விக்கறாங்க. எந்த உணவுப்பொருளுக்கும் மருந்து, கெமிக்கல்னு போட்டு ஸ்டாக் வைக்கிறதுனால உயிர் சத்தில்லாமப்போயிடுது. சத்தில்லாத வெத்து உணவு ஒடம்ப வளர்க்கிறதுக்கு பதிலா கெடுக்குது. நோய் கொடுக்குது. அதுலயும் மாலுக்கு, சினிமா தியேட்டருக்கு போயிட்டா பத்து ரூபா டீய நூறுக்கு விக்கிறாங்க. தெரியாம யாரும் துன்பப்படலே. தெரிஞ்சே படறாங்க” சொல்லி முடித்ததில் மனபாரம் பாதியாக குறைந்திருந்தாக நினைத்தான் முருகன்.

“சொல்லி முடிச்சிட்டியா? இன்னும் பாக்கி இருக்கா? இப்படி புலம்பறதுக்கா அப்பாம்மா உன்னை கஷ்டப்பட்டு படிக்க வெச்சாங்க? மச்சானப்பவே கூப்பிட்டாருல்ல. அவரோட கம்பெனிக்கு வேலைக்கு போயிராந்தீன்னா இன்னேரம் வீடு வாங்கி, கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா கூட ஆகியிப்பே…. இல்லே முறையா கம்யூட்டர் படிப்பாவது படிச்சிருந்தீன்னா காலேஜ்லயே ஐடி கம்பெனிக்கு வேலைக்கு எடுத்திருப்பாங்க. ஆர்ட்ஸ் போதும்ன்னு போயி பிஏ,எம்ஏ, எம்பில் னு படிச்சு என்னத்தக்கிழிச்சே….? இந்தக்காலத்துல இலக்கியம் படிச்சு கதை, கவிதை, கட்டுரைன்னு எழுதினா சோத்துக்கு பிச்சை எடுக்கத்தான் போகோணும்….” சகோதரி மாயா பேசியது சரி என்றாலும் அவளது கணவனது வேலையில் முருகனுக்கு விருப்பமில்லை. 

‘இயல்பிற்கு மாறாக எப்படி வாழ முடியும்? பலா மரத்தில் எப்படி மாங்கனி காய்க்கும்? மனிதர்கள் புத்தகங்களைப்படித்தும் மனிதர்களைப்படிக்காதவர்களாக உள்ளனர். தன் வாழ்க்கையைப்போலவே மற்றவர்களது வாழ்க்கையும் இருக்க வேண்டும் என எதற்காக நினைக்கின்றனர்? கொலை செய்த ஒருவன் மற்றவர்களும் தன்னைப்போலவே கொலை செய்பவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தால் நிலை என்னவாகும்? இயற்கை ஒவ்வொருவருக்கும் வேறு, வேறு சிந்தனைகளை வைத்து படைத்ததே வாழ்க்கை முறை தடையின்றி சீராக இயங்கத்தானே….? அனைவரும் ஒரே விசயத்தை செய்தால் உலகம் எவ்வாறு தன் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்? சராசரி மனிதர்களுக்கு அறியாமை விலகும் போது ஆயுள் முடிந்து விடுகிறது. நமக்கு இப்போதே விலகிய அறியாமை பிற மனிதர்களிடமிருந்து தள்ளி வைக்கிறது. இந்த முரண்பாடுகளை முற்றிலும் களைவது சாத்தியமில்லை. நாம் நம் வழியில் செல்வது தான் சாணக்கியம்’ என்பதை தானாகவே யோசித்ததில் புரிந்து கொண்டு நிம்மதியானான்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *