கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2025
பார்வையிட்டோர்: 218 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது வேதியன் வீட்டு ஆட்டுக் குட்டி. கழுத்திலே கட்டியிருந்த மணி கிலுங்க. அந்த இன்பப் போதையிலே மயங்கி, வழி தப்பிவிட்டது 

நீண்ட நேரம் அலைக்கழிந்த அதை ஒரு புலி சந்தித்தது. இளந் தசையின் சுவை மனதிலெழ, புலியின் நாக்கில் நீரூறிற்று. 

“நான் வழிதப்பி வந்துவிட் டேன். வேதியன் வீட்டைக் காட்டுகின்றாயா?” என ஆட்டுக்குட்டி விநயமுடன் கேட்டது. 

“நீ ஏன் வீட்டிற்குப் போக வேண்டும்?… உன்னை ஆண்டவன் எனது இன்றைய உணவாக அனுப்பி யிருக்கின்றான்”. 

“நீ முரட்டு மிருகமாக இருக்கின்றாயே… அன்புதான் வாழ்க்கை யின் அடித்தளம். கொலை, ஆண்டவனால் வெறுக்கப்படும் பாவங்களுள் ஒன்று.”

புலி சிரித்தது; ஆட்டுக்குட்டி தொடர்ந்து பேசிற்று. 

“புலால் உண்பதை மறுத்தலால் வரும் நன்மைகளைச் சொல்லுகின் றேன் கேள்… புல்லும் குளகுஞ் சாப்பிட்டு வந்தால், சாந்தகுணமேற் படுகின்றது. சாந்த குணமுள்ள மிரு கங்களை மனிதர் பிரியமுடன் வளர்க் கின்றார்கள். உண்டிக் கவலையேயில்லை. அவர்களே வேளா வேளைக்குத் தரு வார்கள். சாப்பிடுதலும், உறங்குதலும் என இம்மையிற் சுகமாக வாழலாம்… மறுமையில், நித்திய இன்ப வாழ்வாம் சொர்க்கம் கிடைக்கின்றது. 

புலி, முழக்கமாகச் சிரித்தது. 

“குட்டி ஆடே! வேதியன் வீட்டு வாசம் உன்னைக் கெடுத்திருக்கின்றது. தன்னைப் பிறருக்காக அழித்துக் கொள்வதினாலேதான் சொர்க்கம் கிடைக்கின்றது. உனக்குச் சொர்க்க போகத்தைத் தரவல்லவன் நான் தான். தாவர பட்சிணியாக இருப்ப தினால் நீ சோம்பேறியாகிவிட்டாய்; அடிமையாகிவிட்டாய். உன் கழுத்திலே தொங்கும் மணி உனது அடிமைச் சின்னம்… அடிமையான உன்னிடம் அஞ்ஞானம் குடிகொண்டிருத்தல் வியப்பன்று. என்னை ஞானா சிரியனாக ஏற்றுக்கொண்டு, என் பின்னால் வர். உலக உண்மைகளைப் போதிக்கின்றேன்.” 

“நீ என்னை ஏமாற்றப் பார்க்கின்றாய்.” 

“அப்படியல்ல. நான் சத்தியஞ் செய்து தருகின்றேன். மிருகங்களுக்கு பொய் பேசத் தெரியாது”.


புலி நடந்தது; ஆட்டுக்குட்டி பின்னாற் சென்றது. 

”எங்கே செல்கின்றோம்?” 

“அறிவுக் களத்திற்கு.”

சற்றுத் தூரம் நடந்ததும், புலி ஒரு மரத்தடியைக் காட்டிற்று. 

மரத்தின் கிளையில், தலை கொய் யப்பட்ட ஆடொன்று தலை கீழாகத் தொங்கிற்று. இரண்டு மனிதர்கள் அதன் தோலை உரித்துக் கொண்டிருந்தார்கள்.

அக்காட்சியைக் கண்ட ஆட்டுக்குட்டி கதறி அழுதது. 

“ஏன் அழுகின்றாய்?” 

”அந்த ஆடு என் அண்ணன். நேற்றுத்தான் வேதியன் இவர்களிடம் விற்றான்.”

ஆட்டுக்குட்டி தன்னைத் தேற்றுவ தற்கு நீண்ட நேரம் பிடித்தது. 

“ஏன் அவர்கள் தலையை வெட் டித் தோலை உரித்து எங்களை ஆக்கினைக் குள்ளாக்கு கின்றார்கள்.” 

“மனிதர்கள் தங்களுக்காகவே வாழும் சுயநலமிகள். தேவையில்லாத பகுதிகளைக் கழித்துவிட்டுச் சுவையான பகுதிகளை மட்டும் எடுத்து வேகவைத்துச் சாப்பிடுவார்கள்.” 

“இந்தச் சித்திரவதைகளுக்குப்பின்னர் நெருப்பிலே வேகவேண்டுமா?” 

நீண்ட நேரம் மௌனம் நிலவியது.  

“குட்டி ஆடே என்ன யோசனை.” 

“இந்த ஆக்கினைகளுக்குள்ளாகாமல் மறுமை இன்பம் பெறுவதே மேல். நீ என் ஞானாசிரியன்” என்று ஆட்டுக்குட்டி புலியை வணங்கி நின்றது. 

– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *