நான் எரிகிறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 3,137 
 
 

புதுமனை புகுவிழாவிற்குத் தயாரான வீட்டின்,நுழைவாயிலின் இருபுறமும் கட்டித் தொங்க விடப்பட்ட மலர்ச்சரடுகளைப் போன்ற இரட்டை ஜடையும், புரட்டாசி மாத குளிர்காற்றை, ஆகர்ஷித்துக் கொண்ட வதனவட்டத்துடனும், கண்ணுகுடி கண்மாயில் கால் முளைத்த புயலைப் போல ஓடினாள், அந்தச் சிறுமி. பள்ளியிலிருந்து திரும்பியவள், மாடிப்படியில் உட்கார்ந்து கொண்டு, “அம்மா காபி” என்று குரல் கொடுத்தாள். ஏழெட்டு முறை இதே கூப்பாடுதான்..

“இந்த குட்டிக்கு என்னதா அவசரமோ தெரியலையே, பள்ளிக்கொடம் விட்டுவந்தா பாடாபடுத்துறாளே பாவிமக என, தன்னைத்தானே நொந்துகொண்ட அம்மாகாரி, இருடி என்ற வார்த்தை மட்டும் காதுகளுக்கு எட்டும்படி, எதிர்க்குரல் கொடுத்துக் கொண்டே சென்றாள்.கொதிக்க வைத்த வெந்நீருடன், சிறிது பால் கலந்த ஒப்பனைக் காபியுடன், ஜனனியை நெருங்கியவள்,மைசூர் சட்டிக்கு வலிக்கும்வகையில், அவளருகில் தரையில் ‘தடாரென்று’வைத்துவிட்டுத் திரும்பினாள். இரண்டுபேர் பார்க்க வேண்டிய வேலையை, ஒரு ஆளே பார்த்த மாதிரி,இடுப்பில் அவதிப்பட்ட முந்தானையை எடுத்து, ‘அடி ஆத்தி’ என முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

காபியை ஆற்றிக் கொண்டிருந்த ஜனனிக்கு முன்னால், துலக்கி பல நாளான பற்களைக் காட்டிக் கொண்டு, சகோதரர்கள் வந்து நின்றார்கள். ‘தங்கச்சி இந்தா காசு’என, ஒரு பேப்பரைக் கிழித்துக் கொடுத்து, ‘எனக்கு ஒரு காபி’ என்றான் மனோ. இவனுக்கு எடுப்பாக வந்து அடுத்து நின்றவனும், இதேபோல கேட்டான்.

கொடுத்த காபியை பாதிக்குமேல் பங்குபோட்டதால், காபி கொதிக்க வைத்த கொள்ளிக்கட்டையை விட சூடாகிப்போன ஜனனி, ‘மொங்கானிப்பயலே, சோத்துவத்திப் பயலே’ என்ற, பட்டப்பயர்களுடன் ஒருமையில் வைதாள். காலி கிளாஸை கையிலே எடுத்துக் கொண்டு, சில அடி நடந்தபின் திரும்பியவள், அவர்களைப் பார்த்து ‘அந்த ஊழமூக்கனுக்கு என்னடா ஆச்சு இன்னைக்கு’ என ஆஃப்சென்டான அண்ணணைப் பற்றிக் கேட்டாள்.

‘…டெய்லி விளையாட்டுக்கு இப்டி பண்றதுதானே, இதுக்குப்போயி கோவிச்சுக்கிறே…”என தலையைச் சொறிந்தவர்கள், அந்த ஊத்தை வாய்க்குள்ளிருந்த மஞ்சளும் கறுப்புமாக கறைபடிந்த பற்களை, ஒளித்து வைக்கத் துப்பில்லாமல், வாய்முழுக்க மீண்டும் காட்டினார்கள்.

‘…ஊராஞ்சோறுன்னா,உப்பில்லாமத் திங்கிற பயகன்னு அம்மாச்சி திட்டுமே அது நீங்கதானாடா..’ என வயதுக்கு மீறி திட்டயவள்,கிண்டலாக உடம்பை முறுக்கிக் கொண்டு நகர்ந்தாள். பள்ளிப் பருவத்தை கடக்கும் முன்பே, பருவமெய்திய ஜனனியின் படிப்புக்கு, முற்றுப்புள்ளி வைத்தது குடும்பம். இது அவர்களின் குடும்ப லட்சணமாம். எண்ணி சில மாதங்களுக்குப்பிறகு, பருவமெய்திய ஜனனியின் சரீரம் சட்டை, பாவாடையிலிருந்து தாவணிக்கு மாறியது. அவள் விளையாடும்போது, பெண்டுலமாக அவளது செவிமடலை வருடும் இரட்டை ஜடை,ஒற்றை ஜடையாக சிக்கனம் காட்டியது.புத்தகங்களைத் தூக்கிச் சென்ற, அந்த சரஸ்வதி கடாட்சம் தேங்கியிருந்த கைகள், தட்டு, தம்ளர்களைத் தாங்கி, வீட்டு வளாகத்திற்குள் விருந்தோம்பல் வேலையில் மும்முரமாகியது.

கல்யாண வயதைக் கடந்தும் ,அவிழ்த்துவிட்ட பொலிஎருதுகளைப்போலத் திரிந்த உறவினர் வீட்டு இளைஞர்களை, சோற்றுக்கு பாரமாக கருதிய அவர்களின் அப்புச்சி ஆத்தாமார்கள், கல்யாணம் என்ற பெயரில் தொலைத்துவிட முடிவு செய்து, பெண் தேடும் படலத்தைத் தொடங்கினார்கள்.

படிப்பை பாதியில் கைவிட்ட, ஜனனியையும் பெண் கேட்டு வந்தார்கள். இதில் முடிவு செய்யுமளவுக்கு, ஜனனியின் தாய்மாமன்களுக்கோ, சகோதரர்களுக்கோ வக்குமில்லை,துப்புமில்லை.நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க ‘..மாப்புளை பாத்துட்டீங்களாடா.. எந்த ஊரு..’ என்று வீட்டைப் பெருக்கிக்கொண்டே, ஒரு வினாவை வீசிச் சென்றாள், ஜனனியின் அம்மாச்சி.

முகத்தாடையிலும், மூக்குக்கு கீழேயும் முடியிருக்கும் அளவுக்கு, தலையிலே மூளை இல்லை என்றா சொல்ல முடியும்…? ‘..பேசிக்கிட்டு இருக்கோம், முடிஞ்சிடும்..’ என்று வழக்கம்போல,தன்புத்திக்கு எட்டியமட்டில், உளறிக்கொட்டினான் தமிழ்ச் செல்வன்.

இந்த இக்கட்டான நிலையில், ஆண்டவன் சும்மா இருப்பானா! இதில் யார் உசுப்பேற்றினார்களோ தெரியவில்லை.திடீரென, ஒருநாள் கோதாவில் இறங்கிய ஜனனியின் தகப்பனார், ‘..கழுதையை விடுங்க…நா பாத்துக்கிறேன்’என்றான். ’இவரு யாரைச் சொல்றாரு கழுதைனு’ என்றான் ஈஸ்வரன்.பார்வைதான் சிக்கலே தவிர, காது நல்லா கேக்குது’ என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக, இதைப் பயன்படுத்திக் கொண்டவன், பாவ்லாவுக்காக கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மெருகேற்றினான்.

நல்லகாரியமோ,கெட்ட காரியமோ, இடைச்செருகல் வைக்காமல் யார் விடுவார்கள். ‘..நீங்களே பாத்துக்கோங்க மச்சான்..’ என்று, வழக்கமான பல்லவியைப் பாடினான் அதே உளறுவாயன் தமிழ்ச்செல்வன்.பக்கத்தில் சோடாப்புட்டி கண்ணாடிக்காரன், ‘..அவராலே முடியுமா ? என, என்னோட வேலை இதுதான் என்பதுபோல முட்டுக்கட்டையோடு நின்றான்.

“… இதுமாதிரி விசயத்துக்கு அவந்தான் சரிப்பட்டு வருவாருங்கிறேன்..” என்று கூறிய குடும்பத்தைக் காக்கப் பிறந்த மூத்தவன் மணி “..எல்லாஞ்செத்து நாக்குச் சாகலேன்னு பேசிக்கிட்டு திரியிறவனாச்சே..பேசி முடிச்சிருவான்டா..” என்று விளக்கம் கொடுத்துவிட்டு, ‘வாங்கடா போவோம்’ என எழுந்தான். சொன்னதுதான் போதும் ‘ வெட்டி முறித்தவர்களைப் போல, துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு, வாழைப்பழத்தோலை உரித்து வீசியதுபோல, கால்மாடு தலைமாடில்லாமல் திண்ணையில் போய் சாய்ந்தார்கள.

இரண்டு மூன்று வாரங்களாக, வாயைச் செலவழித்த ஜனனியின் தகப்பனார், தான் பிறந்த ஊரிலேயே மாப்பிள்ளையைத் தேர்வு செய்தான். செட்டிநாட்டிலுள்ள விசாலமான மண்டபத்தில், திருமணத்தையும் கச்சிதமாக முடித்து வைத்தான். ஜனனியின் தாம்பத்ய வாழ்க்கையில், அழகான ஆண்குழந்தை பிறந்தது. வயிற்றையும், பற்களையும் வாடகைக்கு எடுத்ததுபோல், நடமாடி வரும் தாத்தாக்களைப்போல இல்லாமல், அதீத சோபையில் இருந்தான்.

கணவனுக்கு பலமாதங்களாக வேலையில்லை. “இதற்காக காலம் என்ன கையைக் கட்டிக்கொண்டு, நொண்டியா அடிக்கும்”? காலண்டர் நாளுக்குநாள் கிழிக்கப்பட்டது. இதனால் முழு நம்பிக்கையையும், பெற்ற பிள்ளைமீது ஏற்றினாள் ஜனனி. உறவுகளோ, ரத்த சொந்தங்களோ உதவாது என்ற முடிவுக்கு வந்தவள், தனது பரம்ம பிரயத்தனத்தால், மகனை சட்டக்கல்லூரி ஒன்றில் சேர்த்து, எதிர் கால வசந்தத்தை உணர்ந்தாள். அனுபவிக்க விதி விடவில்லை.அன்று எழுதியவன் அழித்தா எழுதுவான்.

உயரம்,பருமன், உருவத்தில், சினிமா ஸ்டாரைப்போல இருந்த கணவனுக்கு, பொருத்தமான வேலை வாய்க்காதது அவளுக்கு வருத்தம்தான். ‘.. ஏந்தானோ, இருக்காதோ பின்னே..’ கடனையும் கைக்காசையும் சேர்த்து, கணவனின் கஞ்சி போட்ட வேட்டியும், சட்டையும் கலையாத வகையில், அவனையும் ஒரு வணிக நிறுவனத்திற்கு முதலாளியாக்கினாள்.

சுகஜீவனம் செய்து கொண்டிருந்த ஜனனிக்கு, மேமிச்சமாக வாங்கிய கடன் கையைக் கடித்தது. இக்கட்டான தருணத்தில், ஒத்தாசையாக இருக்க வேண்டிய அவளது பிறந்தகமும், புகுந்தகமும் வாய்வார்த்தைகளை, விஷ அமிலங்களில் தோய்த்த வக்கணகளாக,அவள்மீது இறக்கியது. இதில் ஆறாத்துயரமடைந்தாள்.

இரந்து வாழ்ந்து பழக்கப்படாத ஜனனியின் கடைசி ஆசை, கண்ணீராகத்தான் கழிந்தது. ரத்தததில் ஊறிய சுய மரியாதையால் ‘..கையிலே காசு இருந்தால் என்னைநான் காப்பாற்றிக் கொள்வேன், இனி நான் செய்ய..’ என்று யோசித்தாள். உறக்கமில்லாத அவள் விழிகள் கண்டபலன்… பகலைப்போல, இரவும விடிந்தே வெயிலோடு கூடிய வெப்பத்தின் புழுக்கமாகவே நீண்டது.

எதிர்பாராத ஒருநாள், அவள் மரணச் செய்தி வந்தது. ஆம்புலன்ஸில் உயிரற்ற உடலாக இறக்கப்பட்டாள், வீட்டு வாசலில்… அவளுக்கு ஆறுதலளிக்காத வாய்களும், கண்ணீரைத் துடைக்காத கைகளும், அன்று அரற்றி அழுது கொண்டிருந்தது. கண்ணீர் வந்ததா,இல்லை,கன்னக்கதுப்பில் காய்ந்து விட்டதா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

அந்த வட்ட வதனத்தைப் பார்க்கச் சகிக்காத நெருப்பும்கூட, 24 மணி நேரங்கூட அவகாசம் அளிக்காமல், சிதையில் வைத்து உடலைக் கரிக்கட்டைகளாகக் குவித்தது.

மறுநாள் ஈமச்சடங்கின் இரண்டாம் பாகம் நடந்தது. திண்ணையில் உட்கார் ந்திருந்தவர்கள் ஜனனின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மெச்சிக் கொண்டிருந்தார்கள்.

அதே திண்ணையில், நேருக்குநேர் அமர்ந்திருந்த ஒரு ஆதர்ஷ தம்பதியும், அது பங்குக்கு அளந்து கொண்டிருந்தது. ” கேட்டன்னிக்கே பணத்தை அனுப்பிருக்கலாமோ…” என்றான் கணவன். எதிரே, நாசித் துவாரங்களுக்குள் கொசுக்கள் அளவலாவும அளவில், மூக்கை விடைத்தபடி வெறித்தே பார்த்துக் கொண்டிருந்தாள் மனைவி.

மௌனமே பதிலாக இருந்ததால், மனைவியிடமிருந்து பதிலாக வார்த்தைகளை எதிர்பார்த்தவன் “..ஏன்னா அனுப்பிருந்தா இந்தமாதிரி நடந்திருக்காதோனு சொல்ல வர்றேன்..” என பூசி மெழுகினான். ‘இதெல்லாம் நேரம், அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பணம் அனுப்பனும்னு சொன்ன நீங்க, தங்கச்சிக்கினு என்னைக்காவது சொல்லிருக்கீங்களா’ என நினைத்தவள், விடைத்துநின்ற மூக்கை, கணவனின் முகம் சுளிக்காதபடி லேசாக நெளித்து, கோரைப்புல்லின் அளவில் சிறு துவாரமாக்கி, கணவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மூன்றாம்நாள், நான்காம் நாள் இழவு கேட்க வந்தவர்களிடம், மகள் இறந்தது பற்றியோ, துக்கம் பற்றியோ அதிகம் பேசவில்லை ஜனனியின் தகப்பன். ஊருக்கு ஏற்றுக் கெட்டான், உள்ளதைச் சொல்லிக் கெட்டான் என்பதுபோல, “இந்த ரோடு போட்றதுக்கு நா பட்ட கஷ்டம், அய்யோ” என, இற்றுப்போன தற்பெருமையை மட்டும்தான் பீற்றிக் கொண்டிருந்தான்.

அப்போது ஆட்டுப்புழுக்கையுடன், அவர்களின் வீட்டு வாயிலைக் கடந்த சுயராஜ்யம் “..கட்டுறவனுக்குத் தெரியாத அருமை, உடைக்கிற நாய்க்கி எப்டித் தெரியுமுன்னு சொன்னாலே, அவ நெருப்புலை வெந்து கிடக்கா, இது சவடால் பேசிட்டுத் திரியிது. ஊருக்கு ரெண்டு பைத்தியக்காரப்பயக இருப்பாங்கே, இங்கேயும் ரெண்டுபேரு இருக்காங்கே. அதுலே இது மூணாவதுபோல, இதச் சொல்லியா தெர்யனும், என்று எப்போதும்போல் அந்த ஓட்டை வாயைத் திறந்து கொண்டே நடந்தாள்.

வடமாடுபோல,பின்னால் தலையைச் சொறிந்தபடி நடந்த, காணாக் கல்யாணம் மூலம் சம்பந்தப்பட்ட அவளது தம்பி மனைவி, ஆமா.. ஆமா..என ஆமாச்சாமியாக எரு விடுவதற்காக, பெரிய செய்யில் இறங்கினாள்.

பக்கத்திலுள்ள வயலில் இறங்கி களையைப் பிடுங்கிய சுயராஜ்யம், கடுப்போடு அதை தூர வீசினாள்.

எருயிட்டபடியே இதைக் கவனித்த சுயராத்தியத்தின் நாத்தனார் ‘இது என்னடி பெரிய கிரகமா இருக்கு’ என்றாள்.மெல்லக் குசுவி மூலையில் வைத்துப் பழக்கப்பட்டவள், பக்கத்தில் யாரும் இல்லாததால் தனக்குள்ளேயே விஞ்சியதைச் சுமந்து பொரிந்து கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *