கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 1,176 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

அத்தியாயம் முப்பத்தொன்று 

பெரிய பங்களாவின் பக்கத்திலுள்ள மலையில் ஆண்களும் பெண்களுமாகப் பலர் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். வீரய்யா ஒருபுறமும் கறுப்பண்ணன் கங்காணி மறுபுறமும் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தனர். 

இரவிரவாகக் கூனிகள் பிடுங்கப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்டதும், கண்டக்டர் துரையின் பங்களாவுக்குச் சென்று அவரிடம் விஷயத்தைக் கூறினார். வீரய்யாவும் ராமுவும் சேர்ந்துதான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என்று தனக்கு எழுந்த சந்தேகத்தையும் அவர் துரையிடம் கூறத் தவறவில்லை.

முதன் நாள் இரவு, தான் கிளப்புக்குச் சென்று திரும் பும் வேளையில் யாரோ நாலைந்து பேர் மடுவத்தில் இருந்ததும், தன்னைக் கண்டு மறைந்துகொண்டதும் துரைக்கு நினைவில் வந்தது. 

வீரய்யாவும் ராமுவும் சேர்ந்துதான் இந்த வேலையைச் செய்திருக்கவேண்டுமென துரைக்கும் சந்தேகம் எழுந்தது. இப்படியான காரியத்தை வேறு எவரும் தோட் டத்தில் துணிந்து செய்யமாட்டார்கள் என்பதும் அவருக்கும் தெரியும். 

இந்த விஷயத்தில், தான் ஏதும் நடவடிக்கை எடுக்கா மல்விட்டால், கட்சி அமைப்பாளரின் சந்தேகத்துக்கு ஆளாகவேண்டிவரும் என அவரது உள்ளம் கூறியது. அவ ரது நண்பரான பக்கத்துத் தோட்டத் துரை, “தற்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குச் சார்பாகவே கடமை புரிவதுதான் புத்திசாலித்தனமானது” என அவருக்குப் புத்திமதி கூறியதும் அவரது நினைவில் வந்தது. 

துரை, கண்டக்டரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு மடுவத்தின் அருகே இருக்கும் மலைக்குச் சென்று கவனித் தார் ; அதிகாலையில் சிறிது மழை பெய்திருந்ததால் கூனிகள் பிடுங்கப்பட்ட அடையாளங்கள் அழிந்துபோயிருந்தன. 

துரை காரைத் திருப்பிக்கொண்டு தொழிலாளர்கள் கொழுந்தெடுக்கும் மலையை வந்தடைந்தார்.காரை விட்டிறங்கியதும்,கண்டக்டரிடம் வீரய்யாவை அருகில் வரும் படி அழைக்கச் சொல்லிப் பணித்தார். கண்டக்டர் அழைப் பதை அறிந்து வீரய்யா ஒன்றும் அறியாத பாவனையில் காரின் அருகே வந்தான். 

“யார் அந்தக் கூனியெல்லாம் பிடுங்கி வீசினது?’ துரை விறைப்பான குரலில் கேட்டார். 

“எனக்குத் தெரியாதுங்க தொர, இன்னிக்குக் காலை யிலதான் நானும் அதைப்பத்திக் கேள்விப்பட்டேனுங்க.” 

கொழுந்தெடுப்பவர்கள் எல்லோரும் துரை, வீரய்யா வுடன் கண்டிப்பான குரலில் பேசுவதை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். 

“பொய் சொல்ல வேணாம்; அது நீயெல்லாந்தான் சேந்துசெஞ்சிருக்கவேணும்” என்றார் துரை கோபத்துடன்.  

“நான் நேத்து தோட்டத்துக்கு விருந்தாளியா போயி ருந்தேனுங்க.இன்னிக்கு காலையிலதாங்க தொர வந்தேன். தொர அநியாயமா என்னைய சொல்லுறீங்க” என்றான் வீரய்யா ஒன்றும் அறியாதவன் போல. 

“எங்கே ஒன் கூட்டாளி ராமு… அவனுந்தானே சேந்து இந்த வேலை செஞ்சது?” 

“அவன் இன்னிக்கு வேலைக்கு வரல்லீங்க, அவனுக்கு இந்த ரெண்டு நாளா சரியான வவுத்து வலிங்க… படுத்திருக்கானுங்க…” என்றான் வீரய்யா பணிவான குரலில். 

“நீ மிச்சம் பொய் பேசுறது. இந்தக் கூனியெல்லாம் புடுங்கி வீசிறது மிச்சங் பெரிய குத்தம்; நீதானே இப்ப தோட்டத்தில தலைவரு… ஒன்னைத்தான் பொலீசில புடிச் சுக் கொடுக்கிறது” என்றார் துரை மிகவும் கோபமாக. 

“தோட்டத்தில தலைவரா இருந்தா… நான் செய்யாத குத்தத்துக்கு என்னைப் பொலிசுல புடிச்சுக்குடுக்க முடியுங்களா துரை” 

வீரய்யா துரையைப் பார்த்துக் கேட்டான். 

அந்த வேளையில் மடுவத்தின் பக்கமிருந்து “டாண்…டாண்…” என பிரட்டு மணியின் ஓசை பலமாக ஒலித்தது. 

மறுகணம் வீரய்யா மலையிலே கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களைப் பார்த்து, “எல்லாரும் மடுவத்துக்கு வாங்க” எனப் பலமாகக் கூறிக்கொண்டே மடுவத்துக்கு ஓடினான். 

மலையில் நின்ற தொழிலாளர்கள் எல்லோரும் மந்தி ரத்தால் கட்டுண்டவர்கள் போன்று.வீரய்யாவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து தமது கொழுந்துக் கூடைகளுடன் மடுவத்தை நோக்கி விரைந்தனர். 

துரையும் கண்டக்டரும் திகைத்துப்போய் நின்றனர். “ஏய்..ஏய்..ஏன் எல்லாம் வேலை செய்யிறதை விட்டுட்டு எங்க ஓடுறது? நீங்க நெனைச்சபாட்டுக்கு இப்புடிச் செஞ்சா எல்லோருக்கும் நான் வேலை நிப்பாட்டிறது” துரை தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பெரிதாகக் கத்தி னார். ஆனால், எவருமே அதனைக் காதில் வாங்கிக்கொண்ட வர்களாகத் தெரியவில்லை.கோபத்தினால் துரையின் உடலெல்லாம் நடுங்கியது. 

ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததுபோல நாலாபுறமும் இருந்து தொழிலாளர்களும் முதியவர்களும் சிறியவர்களும் பெண்களும் மடுவத்தை நோக்கி விரைந்து வந்தனர். சில நிமிடங்களில் மடுவத்தின் முன்னால் மக்கள் சமுத்திரம் போலக் கூடிவிட்டனர். அதைப் பார்த்த போது வீரய்யாவின் உள்ளம் மகிழ்ச்சியினால் துள்ளியது. தொழிலாளர்கள் தனக்கு ஒத்துழைப்புத் தருவதற்கு இப் போது தயாராகிவிட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவர்களிடையே இருந்த பய உணர்ச்சி யெல்லாம் மறைந்து இப்போது எதற்கும் துணிந்தவர் களாக மாறிவிட்டதை வீரய்யா கண்டுகொண்டான். 

தூரத்திலே ஸ்டோர்ப் பக்கமாக நில அளவையாள ரின் ஜீப் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும், செபமாலை பிரட்டு மணியை அடித்து ஓசை எழுப்பியிருந்தான். ஜீப் வண்டி மடுவத்துக்கு வந்து சேருவதற்கு முன்னரே இவ்வளவு தொகையான மக்கள் அங்கு வந்து சேருவார்கள் என்பதை அவன் எதிர்பார்க்கவேயில்லை. 

வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப், மடுவத்தின் ஓர மாகப் பாதையை மறைத்துக்கொண்டிருந்த சனங்களைக் கண்டதும் பிரேக்’ போட்டு நிறுத்தப்பட்டது.அதில் இருந் தவர்கள் திகைப்புடன் சனக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது துரையும் கண்டக்டரும் காரில் அந்த இடத்துக்கு வந்துசேர்ந்தனர். 

டிரைவர் ஜீப் வண்டியின் ‘ஹோணை’ப் பலமாக அழுத்தினான்.எவருமே தாங்கள் நின்ற இடத்தைவிட்டு அசையவில்லை. 

வீரய்யா முன்னால் சென்று ஜீப்பில் உட்கார்ந்திருக்கும் உத்தியோகத்தர்களைப் பார்த்து, “நாங்க இனிமே ஒங்களை காணியளக்க விடமாட்டோம்; தயவுசெஞ்சு நீங்கெல்லாம் திரும்பிப் போங்க” எனக் கூறினான். 

துரையும் கண்டக்டரும் காரிலிருந்து இறங்கி ஜீப் நிற்கும் இடத்திற்கு வந்தனர். 

ஜீப்பில் இருந்த ஒருவர். “இவர்கள் எல்லோரையும் எங்களுக்கு வழிவிட்டு விலகச் சொல்லுங்கள். நாங்கள் எங்களது கடமையைச் செய்யவேண்டும்” எனத் துரையிடம் ஆங்கிலத்தில் கூறினார். 

அதைக் கேட்ட துரை, வீரய்யாவின் பக்கம் திரும்பி, “நீங்க இவங்களை எல்லாம் தடுக்கவேணாம். அவுங்க வேலையைச் செய்யட்டும்; கொழப்பம் பண்ணாதீங்க” எனக் கோபத்துடன் கூறினார். 

“நாங்க அவங்களை காணியளக்கவிடமாட்டோம்” எனக் கூறினான் அப்போதுதான் அவ்விடம் வந்துசேர்ந்த ராமு. 

“இப்புடி நீயெல்லாம் கொழப்பம் பண்ணினா நான் பொலீசுக்குச் சொல்லி, ஒங்களை எல்லாம் ‘ரிமாண்ட்’ பண்ணுறது” என்றார் துரை சிடுசிடுப்புடன். 

“ஆமாந் தொர…அப்புடிச் செய்யுங்க. ஒங்களுக்கு முடிஞ்சா தோட்டத்துல இருக்கிற எல்லாரையும் கொண்டுபோய் ‘ரிமாண்ட்’ பண்ணுங்க” என்றான் வீரய்யா. 

“எல்லாரையும் பொலிசுல அடைச்சிட்டு வேணு முன்னா இவங்க வந்து காணி அளக்கட்டும்” எனக் கூறினான் பக்கத்தில் நின்ற செபமாலை. 

“கடைசியா நான் கேக்கிறது…நீ எல்லாம் இந்த எடத்தைவுட்டிட்டு போறதா இல்லையா?’ எனத் துரை அதட்டிக் கேட்டார். 

‘முடியாது’ என்ற பாவனையில் வீரய்யா தலையசைத் தான்.அங்கு நின்ற எல்லோரும் ஒரே குரலில் “நாங்கள் காணியளக்க விடமாட்டோம்” என முழங்கினர். 

துரைக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. 

அப்போது ஜீப்பில் உட்கார்ந்திருந்த ஓர் உத்தியோ கத்தர் இவர்களோடு கதைப்பதில் பிரயோசனம் இல்லை… நாங்கள் திரும்பிச் செல்கிறோம்.மீண்டும் சில நாட்களில் வேண்டிய ஏற்பாடுகளுடன் வருகிறோம்” எனக் கூறினார். 

சாரதி ஜீப்பை பின்பக்கமாக ரிவேஸில் செலுத்தினான். துரை கோபத்துடன் சென்று காரில் ஏறி பலமாகக் கதவைச் சாத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். 

எல்லாவற்றையும் இதுவரை நேரமும் மௌனமாக நின்று கவனித்துக்கொண்டிருந்த கண்டக்டர், இவர்களுக்கு இவ்வளவு துணிவு ஏற்பட்டுவிட்டதா? இன்றே கட்சி அமைப்பாளரிடம் சென்று நடந்தது எல்லாவற்றை யும் கூறி, இவர்களை மட்டந்தட்டுவதற்கு ஏதாவது ஏற் பாடு செய்யவேண்டும். என்ற எண்ணத்துடன் அவ் விடத்தைவிட்டு அகன்றார். 

அத்தியாயம் முப்பத்திரண்டு 

பண்டா முதலாளியின் வீட்டில் அன்று ஒரு கூட் டம் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.முதலாளி தான் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். அரசாங்கத்தினால் இனாமாக வழங்கப்படவிருக்கும் காணிக்கு மனுப் போட்டவர்கள் எல்லோரும் கூட்டத்துக்குத் தவறாது சமு கம் அளிக்கும்படி அவர் அறிவித்தல் கொடுத்திருந்தார். கூட்டம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோதிலும், குறிப்பிட்ட நேரத் திற்கு முன்பாகவே பலர் முதலாளியின் வீட்டில் வந்து கூடிவிட்டனர். சுமணபாலாவும், பியசேனாவும் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர். 

வயலில் நெற்பயிர்களை பூச்சிகள் தாக்கியிருந்ததால், கிராம சேவகர் அவற்றிற்கு தொழிலாளர்களைக் கொண்டு மருந்து அடித்துவிட்டு, நாட்டிலிருக்கும் தனது வீட்டிற் குச் சென்று மனுப்பத்திரங்களின் பிரதிகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகக் கூட்டம் நடக்கும் இடத் திற்கு வந்தார். 

“வாருங்கள் ஜி.எஸ். மாத்தியா… உங்களது வர வைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்” எனக் கூறி பண்டா முதலாளி அவரை வரவேற்று அங்கிருந்த கதிரையொன்றில் அமரும்படி கூறினார். 

“எப்படி எல்லாரும் வந்துவிட்டார்களா?” எனக் கேட்டபடி அங்கிருந்தவர்களை ஒரு தடவை நோட்டம் விட்டார் கிராமசேவகர். 

“மனு அனுப்பியவர்களில் ஒரு சில பெண்கள் வர வில்லை. ஆனாலும் அவர்களது சார்பில் அவர்களது குடும்பத்திலிருந்து வேறு ஆட்கள் வந்திருக்கின்றனர்.” 

“அப்படியானால் நாம் கூட்டத்தை ஆரம்பிக்கலாம்” என்றார் கிராமசேவகர். 

”நாம் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கு முக் கிய காரணம் என்னவென்றால், அரசாங்கத்திற்கு நாங்கள் மனு அனுப்பியிருந்தபோதிலும் நமக்குக் காணிகிடைப் பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இது விஷயமாக உங்களிடம் கதைத்து உங்களது அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள விரும்புகின்றோம்.” 

பண்டா முதலாளி இப்படிக் கூறியதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

“அப்படி என்ன பிரச்சினைதான் இப்பொழுது ஏற்பட்டு இருக்கின்றது?” கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது. 

“அதாவது, மேலிடத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற் படவில்லை. அவர்கள் எமக்குக் காணி தருவதற்கு ஏற்ற முயற்சிகள் எடுத்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள்தான் அதற்குத்தடையாக இருக்கின்றார்கள்” என்றார் பண்டா முதலாளி. 

“ஆமாம்; நில அளவையாளர் அடித்து வைத்த கூனி களையெல்லாம் அவர்கள் பிடுங்கி வீசிவிட்டார்களாம். நேற்று காணியளப்பதற்கு உத்தியோகத்தர்கள் வந்த போது கூட தொழிலாளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவர்களைத் தடுத்துவிட்டார்களாம்” என்றான் முன் பகுதியில் நின்ற பொடிசிங்கோ. 

“தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டுப் போவதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கின்றார்கள்.நாம் இந்த விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் எமக்குக் காணி கிடைப்பது சந்தேகந்தான்” என்றார் கிராமசேவகர். 

“நாங்கள் அதற்கு என்ன செய்யமுடியும்? அரசாங்கம் அல்லவா அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றான் பொடிசிங்கோவின் அருகில் நின்றவன். 

“எல்லாவற்றிற்கும் நாம் அரசாங்கத்தையே எதிர் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவ்வளவு நாளாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு இப்போதுதான் காணி கிடைக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதனைத் தடுப்பவர்களை நாம் சும்மா விட்டுவைக்கக்கூடாது” என்றான் அருகில் இருந்தவர்களில் ஒருவன். 

“நீங்கள் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றித் தவறா கப் புரிந்திருக்கிறீர்கள். எமக்குக் காணி கிடைப்பதைத் தடுப்பது அவர்களது நோக்கமல்ல. தங்களைத் தோட்டத்தி லிருந்து வெளியேற்றவேண்டாமென்றுதான் அவர்கள் போராடுகின்றனர்” என்றான் இதுவரை நேரமும் மௌனமாக நின்ற சுமணபால. 

“நீ முட்டாள்தனமாய் பேசுகிறாய். உனக்கு அனுப வம் போதாது. எமக்குக் காணி கிடைப்பதைத் தடுப்பது அவர்களது நோக்கம் இல்லையென்றால் அவர்கள் ஏன் கூனி களைப் பிடுங்கி வீசவேண்டும்?… காணியளப்பவர்களை ஏன் தடுக்கவேண்டும்?…” என்றார் பண்டா முதலாளி பட படப்புடன். 

அப்போது சுமணபாலாவின் அருகே நின்ற பியசேனா கூறினான்:- 

“நீங்கள் கோபத்தில் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றீர்கள். ஆண்டாண்டுகாலமாக எங்களோடு ஒற்றுமையாக வாழ்ந்த தொழிலா ளர்கள், இப்போது எங்களுக்குக் காணி கிடைப்பதற்கு ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள். தங்களைத் தோட்டத்தைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே அவர்கள் அப்படிக் கூனிகளைப் பிடுங்கி வீசினார்கள். அதனை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்” அவனது குரல் கணீரென ஒலித்தது. 

“தோட்டத்தொழிலாளர்கள் என்ன நோக்கத்தோடு கூனிகளைப் பிடுங்கினார்கள் என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதால் எங் களுக்குக் காணி கிடைக்காமல் போய்விடுமல்லவா?” என் றான் பொடிசிங்கோ பலமாக, 

“இது எங்களுடைய நாடு. நாமெல்லாம் மதிப்பிற் குரிய பிரஜைகள். எங்களுக்குக் கிடைக்கப்போகும் சலு கைகளுக்கு யார் தடையாக இருந்தாலும் நாம் இலேசில் விட்டுவிடக் கூடாது” என்றார் பண்டா முதலாளி. 

“இது நமது நாடுதான். அதை நான் மறுக்கவில்லை. ஆனாலும் காடாகக் கிடந்த மலைகளை வெட்டி, வளம் படுத்தி தேயிலைச் செடிகளை நாட்டி வளர்த்தெடுத்தவர்கள் அந்தத் தோட்டத் தொழிலாளர்கள்தான். அவர்களுக்கும் இந்த மண்ணிலே பற்று இருக்கத்தான் செய்யும். அவர்களை விரட்டிவிட்டுத்தான் நாம் காணி பெற்றுக்கொள்ளவேண்டுமா?’ எனக் கேட்டுவிட்டு எல்லோரை யும் ஒருகணம் பார்த்தான் சுமணபால. 

“சுமணபாலா சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது” என்றார் இதுவரை நேரமும் அமைதியாக நின்று அங்கு நடந்த சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டிருந்த முதியான்சே. 

“தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு கூலிகளாகத்தானே கொண்டுவரப்பட்டார்கள். ஊதியம் பெற்றுக்கொண்டுதானே அவர்கள் வேலை செய்தார்கள். எப்படி அவர்கள் உரிமைகொண்டாடமுடியும்? இது அநியாய மாகவல்லவா இருக்கிறது” எனப் படபடத்தான் அங்கு நின்ற வேறொருவன். 

”அவர்கள் இந்த நாட்டுக்கு கூலிகளாக வந்திராவிட் டால் இந்தத் தேயிலைச் செடிகளையே நாம் இங்கு பார்க்க முடியாது. நூறு வருடங்களுக்கு மேலாகத் தமது உழைப்பை அர்ப்பணித்து, இந்தத் தேயிலைச் செடிகளை வளர்த்தெடுத்த தொழிலாளர்களை இன்னும் நாம் கூலிகள் என்று உதாசீனப்படுத்துவதுதான் மிகப்பெரிய அநியா யம்” என்றான் பியசேனா. 

“எங்களது மூதாதையர்களிடமிருந்து வெள்ளையர் கள் பிடுங்கிக்கொண்ட காணியை இப்போது அரசாங்கம் எமக்குத் திருப்பி அளிக்க முன்வந்துள்ளது. அதனைத் தோட்டத் தொழிலாளர்கள் தடுப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. இந்தக்கொடுமையை நாம் கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது” எனக் கூறினான் பொடி சிங்கோ. அவனது முகத்தில் கோபம் தெறித்தது. 

“நமது காணியில், நாட்டு உரிமையே இல்லாத தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கிறதுமல்லாமல் அடாத்தான முறையில் நடக்கவும் தொடங்கிவிட்டார்கள். இதனைப் பார்த்துக்கொண்டு இருக்க நாம் என்ன கோழைகளா…?’ மூலையில் நின்ற இளைஞன் கூறினான். அவனது உடல் உணர்ச்சிவசத்தால் நடுங்கியது, 

“நீங்கள் எல்லோரும் ஆத்திரத்தில் அறிவை இழக்கின் றீர்கள். சில அரசியல்வாதிகள் தமது செல்வாக்கை அதி கரித்துக்கொள்வதற்காக, பிழையான வழியில் முயற்சி செய்கின்றார்கள். எங்களுக்கு வாக்குரிமை இருப்பதனால் அடுத்த தேர்தலிலும் தமது பதவியைக் காப்பாற்றும் எண் ணத்துடன் எமக்கு சலுகைகள் செய்ய முனைகிறார்கள். நமக்கு இருப்பதுபோல் தொழிலாளர்கள் எல்லோருக்கும் வாக்குரிமை இருந்தால், ஒருபோதும் அவர்களை தோட்டத்தைவிட்டு விரட்டவேமாட்டார்கள், அவர்களுக்கும் ஏதாவது சலுகை செய்ய முயற்சிப்பார்கள்” என்றார் முதி யான்சே. 

“தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவது உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நீங்கள் ஏன் காணிக்கு மனுக்கொடுத்தீர்கள்?” என்றார் கிராமசேவகர். 

“தோட்டத் தொழிலாளர்களை விரட்டிவிட்டுத்தான் காணி தரவேண்டுமா? தரிசாகக் கிடக்கும் காணியை நமக்குத் தரலாமே” என்றான் பியசேனா. 

“இவன் எப்பொழுதும் தோட்டத் தொழிலாளர். களின் சார்பாகவே பேசுகிறான். இவன் நமது ஆளாக இருந்துங்கூட, இவனுக்கு இனப்பற்றுக் கொஞ்சங்கூட இல்லை. இவன் நமது சமுதாயத்தைக் காட்டிக்கொடுக்கும் கோடரிக்காம்பாக மாறினாலும் மாறிவிடுவான்” எனக் கூறிவிட்டு பண்டா முதலாளி தனது பற்களைக் கடித்துக் கொண்டார். 

“முதலாளி… அவன் அப்படித்தான் கதைப்பான் அவன் அப்படிக் கதைப்பதற்கு வேறு ஏதாவது சொந்தக் காரணம் இருக்கலாம் அல்லவா?” எனக் கிண்டலாகக் கூறிவிட்டுச் சிரித்தான் பொடிசிங்கோ. 

”ஆமாம் தோட்டத்தொழிலாளர்கள் போய்விட்டால் அவனுக்கும் சில பாதிப்புகள் ஏற்படலாமல்லவா…?’ எனக் கூறினான் பொடிசிங்கோவின் அருகில் நின்றவன். 

“எல்லோரும் ‘கொல்’லெனச் சிரித்தனர். 

“அவன் நியாயத்தைக் கூறும்போது, அதனை ஏற்றுக் கொள்ளும் அறிவு உங்களுக்கு இல்லை; குதர்க்கம் பேசத் தான் உங்களுக்கு நன்றாகத் தெரியும்” எனப் படபடப்புடன் கூறினார் முதியான்சே. 

“நாங்கள் ஒன்றும் குதர்க்கம் பேசவில்லை. நாங்கள் எல்லோரும் ஒருமுகமாக நிற்கும்போது நீங்கள் தான் குறுக்கே இழுக்கின்றீர்கள்’ என்றார் கிராமசேவகர். 

“நாங்கள் ஒன்றும் உங்களுக்குக் குறுக்கே நிற்கவில்லை. நியாயத்தைத்தான் கூறினோம்” என்றான் சுமணபாலா, 

“அப்போ நாங்கள் எல்லோரும் நியாயமற்றவர்கள் என்றா சொல்லுகின்றாய்? உங்களைப்போன்று எமது சமுதாயத்துக்கு மாறாக நடக்கும் புல்லுருவிகளல்ல நாங்கள். நீங் கள் பேசுவதை நாங்கள் ஏற்கத் தயாராகவும் இல்லை”, என்றார் பண்டா முதலாளி. 

“நீங்கள் என்ன அநியாயத்தையாவது செய்யுங்கள். அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கமாட்டோம். இங்கு இனி நாங்கள் நிற்கவும் விரும்பவில்லை” எனக் கூறிய பிய சேனா, விருட்டென அவ்விடத்தை விட்டு வெளியேறினான். அவனைத் தொடர்ந்து சுமணபாலாவும் வெளியே சென்றான். 

“அவர்கள் போனால் போகட்டும். நாம் எப்படியும் தோட்டத் தொழிலாளர்களை விரட்டியே தீரவேண்டும்” என்றான் பொடிசிங்கோ. 

“தோட்டத் தொழிலாளர்களோடு போராடி ஏதாவது குழப்ப நிலை ஏற்பட்டுவிட்டால் பின்பு என்ன நடக்குமோ சொல்லமுடியாது. சில வேளை அரசாங்கம் காணி கொடுப்பதை நிறுத்தினாலும் நிறுத்திவிடவுங்கூடும்” என யோசனையுடன் கூறினார் முதியான்சே. 

“நீங்கள் இப்படிப் பயந்து நடுங்கினால் நாமெல்லாம் என்ன செய்வது? நீங்களும் வேண்டுமானால் அவர்களைப் போல் ஒதுங்குங்கள். நாங்கள் போட்ட திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்” என்றார் கிராமசேவகர். 

இப்போது முதியான்சேயும் அவ்விடத்தில் நிற்க விரும் பாதவராக வெளியே சென்றார். 

அங்குவந்து இருந்தவர்கள் எல்லோரும் தங்களது திட் டத்தை எப்படி நிறைவேற்றவேண்டும் என்பதை வெகு நேரமாகக் கலந்தாலோசித்துவிட்டு. அவ்விடத்தைவிட்டு அகன்றனர். 

அத்தியாயம் முப்பத்துமூன்று 

வழுக்கற்பாறை லயத்தின் பக்கமாக உள்ள மலையில் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கிராமத்திலுள்ளவர்களில் பலர் ஆண்களும், பெண்களுமாகப் பெருங் கூட்டமாகத் தொழிலாளர்கள் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் மலையை வந்தடைந்தனர். 

களவாகக் கொழுந்தெடுப்பதற்கு எதிராக எவரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததினால் கிராமத்தவர் களுக்கு இப்போது துணிவு அதிகரித்திருந்தது; அவர்கள் தோட்டத்தின் உள்ளே அதிக தூரம் வந்து கொழுந்துபறிக் கத் தொடங்கியிருந்தனர். 

மலையின் நாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் மறுபக்கத்திலிருந்து விரைவாகக் கொழுந்து பறிக்கத் தொடங்கினர். அப்படி அவர்கள் கொழுந்தெடுப்பதைப் பார்த்ததும் வீரய்யாவின் உ ள்ளம் கொதித்தது. கடந்த ஒரு கிழமையாகத் தோட்டத்துக் கொழுந்துகளை அவர்கள் களவாடி வருகிறார்கள். வீரய்யா அதைப்பற்றி ஆரம்பத்திலேயே துரையிடம் முறையிட்டிருந்தான். துரை அது விஷயமாக மேலிடத்துக்கு அறிவித்தல் கொடுக்கப் போவ தாகக் கூறியிருந்தார். அவர் அறிவித்தல் கொடுத்தாரா இல்லையா என்பது வீரய்யாவுக்குச் சந்தேகமாக இருந்தது. 

தோட்டத்துக் கொழுந்தைக் கிராமத்தவர்கள் வந்து எடுப்பதால். தோட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகிவிடும். இப்போது நடந்துகொண்டி ருக்கும் விதத்தைப் பார்த்தால் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூட தோட்டத்தில் வேலை கிடைக்குமா என்பது வீரய்யாவுக்குச் சந்தேகமாக இருந்தது. தொழிலாளர்களை எப்படியாவது தோட்டத்தைவிட்டுத் துரத்திவிடவேண்டு மென்ற நோக்கத்துடனேயே கிராமத்தில் உள்ளவர்கள் செயலாற்றுகிறார்கள் என்பதை வீரய்யா புரிந்துகொண்டான். மலையில் எதிர்ப்புறமாக வேகமாகக் கொழுந்தெடுத் துக்கொண்டிருந்தவர்கள், இப்போது தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்தெடுக்கும் பக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். 

“ஏய் கங்காணி. நீயெல்லாம் இந்த மலையில் கொழுந் தடுக்க வேணாம்… நாங்க எடுக்கவேணும். எல்லாம் லயத் துக்கு ஓடிப்போ…” எதிர்ப்புறத்திலிருந்து பொடிசிங்கோ வீரய்யாவைப் பார்த்துப் பலமாகக் கூறினான். 

“நாங்க தோட்டத்து வேலய செய்யுறோம்.ஒங்களப் போல கள்ளக் கொழுந்து எடுக்கல்ல… நீங்க எல்லாருந் தான் வூட்டுக்குப் போகணும்” என்றான் வீரய்யா பொடி சிங்கோவைப் பார்த்து. 

“என்னா கங்காணி, எங்களைப் பாத்தா கள்ளக் கொழுந்து எடுக்குறோமுனு சொல்றது? நாங்க என்னா கள வானியா? இந்தக் காணியெல்லாங் நமக்குக் கொடுக்கப் போறதுதானே; அதனாலைதான் நாங்க வந்து கொழுந் தெடுக்கிறது.” 

”சட்டப்படி இன்னும் ஒங்களுக்கு காணி ஒண்ணும் குடுக்கல. அதுக்கு முந்தி நீங்க வந்து இப்புடிக் கொழுந் தெடுக்கிறது சரியில்ல” என வீரய்யா கூறினான். 

“எங்களுக்கு காணி கொடுக்கவிடாம நீங்கதான் தடுக் கிறது. அதுனாலதான் நாங்க இப்புடி வந்து கொழுந்தெடுக் கிறது’ என்றான் பொடிசிங்கோ விறைப்பான குரலில். 

“நீங்கள் எங்களைத் தவறா நெனைச்சிக்கிட்டீங்க. நாங்க ஒங்களுக்கு காணி ஒன்னும் கொடுக்க வேணாமுனு சொல்லல்ல. நெலம் இல்லாத ஆளுகளுக்கு காணி கொடுக்கத் தான் வேணும்- ஒங்களுக்கெல்லாம் காணி கொடுக்கத் தான் வேணும். ஆனா, எங்களை இந்தத்தோட்டத்தவுட்டு போகச் சொல்ல வேணாமுனுதான் நாங்க சொல்லுறோம் என்றான் வீரய்யா அடக்கமாக. 

“ஒங்களை வேறதோட்டத்துக்குப் போகச் சொல்லுறது தானே. இது எங்களுக்குக் கொடுக்கிற தோட்டம். நீங்க எல்லாங் சுறுக்கா போயிடனும்” என்றான் பொடிசிங் கோவுக்குப் பக்கத்தில் நின்றவன். 

“நாங்க இந்த தோட்டத்தில பரம்பரையா இருக்கிறோம். இந்தத் தோட்டத்தவுட்டு நாங்க போகமாட் டோம். நீங்கதான் இப்ப கள்ளக்கொழுந்து எடுக்கிறத வுட்டிட்டு சுறுக்கா இந்த இடத்தை விட்டுப் போயிடனும்” என்றான் தூரத்தில்  கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த ராமு. 

அதைக் கேட்டதும் பொடிசிங்கோவின் கோபம் அதிக மாகியது. 

“ஏய், என்னடா நீ மிச்சங் பேசறது… பேசாம லயத்துக்குப் போடா” எனக் கத்தினான் பொடிசிங்கோ. 

“எங்களை போகச் சொல்லுறதுக்கு நீ யாருடா?’ எனப் பலமாகக் கத்தியபடி பொடிசிங்கோவின் பக்கம் பாய்ந்தான் ராமு. 

வீரய்யா பாய்ந்து சென்று ராமுவைக் கட்டிப் பிடித்து இழுத்தான்; “என்ன ராமு, அவசரப்பட்டு சண்டைக்குப் போறே. நம்ப நெலமைய  யோசிக்க வேணாமா. கொஞ்சம் நெதானமா இரு” என அவனைச் சாந்தப்படுத்தினான். 

“அட பலப்பாங்கோ மூ அபிட்ட காண்ட எனவா. அபித் நிக்காங் இண்ட பே-எண்ட அபித் காமு.” பொடி சிங்கோ ஆத்திரத்தில் அலறினான். 

மறு கணம் நாட்டிலிருந்து வந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கத் தொடங்கினர். கையிலிருந்த ஆயுதங்களாலும், கற்களாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கினர். தொழிலாளர்களும் அவர்களை எதிர்க்கத் தொடங்கினர். 

“டேய்,டேய்… ஒருத்தரும் நாட்டாளுங்களோட சண்டைக்கி போகாதீங்க. எல்லாரும் லயத்துக்குப் போங்க” எனப் பலமாகக் கத்தினான் வீரய்யா. 

வீரய்யா இப்படிக் கூறியதும் தொழிலாளர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். காரணமில்லாமல் அவன் இப்படிக் கூறமாட்டான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் வீரய்யாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு லயத்துக்கு விரைந்தனர். தொழிலாளர்கள் லயத்துக்குத் திரும்புவதைக் கண்டதும் கிராமத்தவர்கள் தமது தாக்குதல்களை நிறுத்திக் கொண்டனர். 

அந்தச் சொற்ப நேரத்தில் தொழிலாளர்களில் நான்கைந்து பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுவிட்டன. அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வழி செய்துவிட்டு வீரய்யா துரையின் பங்களாவை நோக்கி விரைந்தான். 

தோட்டத் தொழிலாளர்களைத் தான் லயத்துக்குப் போகும்படி கூறியிருக்காவிட்டால் பெரிய பயங்கரம் நிகழ்ந்திருக்கும் என்பதை அவன் எண்ணிப் பார்த்தான். இரு பகுதியினரும் போராடிப் பலத்த காயங்கள் ஏற்பட்டு கொலைகூட விழுந்திருக்கலாம். நல்ல வேளையாக அப்படி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லையென நினைத்து வீரய்யா மனதைத் தேற்றிக்கொண்டான். 

உண்மையில் நாட்டு மக்களுக்கு காணி கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவன் மனப்பூர்வமாக ஆதரித்தான். அவர்களோடு தோட்டத்து மக்கள் அன்புடனும், அந் நியோன்னியமாகவும் இதுவரை காலமும் இருந்ததைப் போலவே இனிமேலும் இருக்கவேண்டும் என்பதையே அவன் விரும்பினான். நாட்டு மக்கள் தங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு சண்டைக்கு வந்தது மிகவும் அவனது மனதை வேதனையடையச் செய்தது. 

வீரய்யா, துரை பங்களாவை அடைந்தபோது துரை எங்கேயோ போவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். 

“தொர, நம்ம ஆளுங்க கொழுந்து எடுத்துக்கொண் டிருந்த நேரத்தில் அந்த நாட்டாளுங்க. வந்து அடிச்சி வெரட்டிப்புட்டாங்க. நாலைஞ்சு பேருக்கு சரயான காயமுங்க; நாட்டாளுங்க கள்ளக் கொழுந்தெடுக்கிறதைப் பத்தி முந்தியே தொரகிட்ட சொல்லியிருக்கேன். தொரை இதப்பத்தி கொஞ்சங்கூட கவனிக்காம இருக்கிறீங்க. அதனால் இப்ப பெரிய கரச்சல்தான் வரப்போகுது” எனக் கூறினான் வீரய்யா. 

”ஓ அதிங் நான் அரசாங்கத்துக்கு எழுதிப் போட்ட ருக்கு, அவங்கதான் அதிக்கி நடவடிக்கை எடுக்கவேணும். நா ஒன்னும் செய்ய முடியாது. ஒங்களையெல்லாங் தோட் டத்தைவுட்டு போக சொன்னாப் பிறகு, நீங்க எல்லாங் இருக்கிறதினாலதான் இப்புடிக் கரச்சல் வாறது” என க் கோபத்துடன் சீறினார் துரை. 

“என்னாங்க தொர,நம்ம ஆளுங்களுக்கெல்லாம் நாட்டாளுங்க அடிச்சிப்புட்டாங்கண்ணு சொல்லவந்தா, எங்களை தோட்டத்தவுட்டு ஏன் போகல்லேன்னு கேக்கிறீங்க. இது நாயமுங்களா?” 

”சரி சரி,நாங் இதுபத்தி அரசாங்கத்துக்கு கடதாசி எழுதி, பொலீசுக்கும் சொல்லுறது. நீங்க எல்லாங் லயத்துக்குப்போய் சத்தம் போடாமல் அமைதியா இருக்கோணும்” எனக் கூறிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டார். 

வீரய்யா நடந்து முடிந்த விஷயங்களைப்பற்றிக் கதைப் ‘பதற்காக தொழிற் சங்கக் காரியாலயத்தை நோக்கி நடந் தான். தோட்டத் தொழிலாளர்களைச் சரியான வழியில் கொண்டு செல்லவேண்டிய பெரும் பொறுப்பு – தலைமைப் பதவி, தன்னிடம் வந்த வேளையில் இப்படியான அசம்பா விதங்கள் நடந்துகொண்டிருக்கின்றனவே என எண்ணிக் கலங்கியவனாக அவன் நடந்துகொண்டிருந்தான். 

நாட்டிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்தும் அதே மலையில் கொழுந்தெடுத்தவண்ணம் இருந்தனர். தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் தமக்குப் பயந்து லயத்துக்கு ஓடிவிட்டார்கள் என்பதைக் கதைத்த வண்ணம் மிகவும் குதூகலமாக அவர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தனர். 

அத்தியாயம் முப்பத்துநான்கு

பண்டா முதலாளி கொழுந்துத் தரகராக மாறியதி லிருந்து அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அவர் பக்கம் திரும்பியிருந்தது. உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்ததால் கொழுந்தின் விலையும் நாளுக்கு நாள் அதி கரித்துக்கொண்டே வந்தது. கொழுந்தின் விலை உயர்ந்து கொண்டே செல்லச் செல்ல பண்டா முதலாளியின் கமிஷ’னும் அதிகமாகிக்கொண்டு வந்தது. ஒரு மாத காலத்துக்குள் பண்டா முதலாளிக்கு ஆயிரக் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டது. 

கிராமத்தில் வாழும் மக்களுக்கும் கொழுந்தெடுத்து விற்பதால் கிடைக்கும் வருமானமும் கூடிக்கொண்டு வந் தது; அதனால் அவர்களது வாழ்க்கைத்தரத்திலும் மாற்றம் காணப்பட்டது. மூன்று வேளையும் அவர்கள் வயிறார உணவருந்தினார்கள். தமக்கு வேண்டிய உடைகளை அந்த சிலர் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் வாங்கினார்கள். தமது குடிசைகளைத் திருத்தி அமைத்தார்கள். வேறு சிலர் வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங் கிக் கொண்டனர். ஒரு மாத காலத்துக்குள் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்தது. 

கொழுந்தெடுத்து விற்பதினால், நாளுக்கு நாள் பணம் அதிகமாகக் கிடைத்துக்கொண்டிருக்க மக்களிடையே கொழுந்தெடுக்கும் ஆர்வமும் அதிகரித்துக்கொண்டேவந் தது. அதனால் அவர்கள் அந்தக் கிராமத்தின் நாலாபுறமும் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து திருட்டுத்தனமாகக் கொழுந்து பறிக்கத் தொடங்கினர். 

முன்பெல்லாம் பண்டா முதலாளி, தான் வாங்கும் கொழுந்தை விற்றபின்னரே ஆட்களுக்குப் பணம் கொடுப்பார். ஆனால், அவரிடம் இப்போது போதியளவு பணம் சேர்ந்துவிட்டபடியால், கொழுந்து கொண்டு வருபவர்களிடம் கொழுந்தை நிறுத்து உடனுக்குடன் பணத்தைக் கொடுத்தார். 

நாட்டில் உள்ளவர்களுக்குப் பணம் தேவைப்பட் டால், இப்போது அவர்கள் எவ்வித யோசனையுமின்றி எங்காவது சென்று கொழுந்தைப் பறித்துக் கொண்டுவந்து, பண்டா முதலாளியிடம் கொடுத்து உடன் பணம் பெற்றுக் கொள்ளும் நிலைமை உருவாகியிருந்தது. அவசர தேவைகளுக்கெல்லாம் பண்டா முதலாளி இப்போது முற்பணம் கொடுத்து உதவினார். அவருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர் கொழுந்தைத்தான் எதிர்பார்த்தார். 

பண்டா முதலாளியின் கடையிலும் வியாபாரம் இப் போது பெருகியிருந்தது. அவராலும் மெனிக்காவினாலும் வியாபாரத்தைச் சமாளிக்க முடியாததால், எடுபிடி வேலைக்காக ஒரு பையனையும் அமர்த்தியிருந்தார் பண்டா முதலாளி.இப்போது கடையில் பலவகைப் பொருட்கள் நிறைந்திருந்தன. நாட்டிலுள்ளவர்கள் தமக்கு வேண்டிய சகல பொருட்களையும் அவரது கடையிலேயே வாங்கக் கூடியதாக இருந்தது. 

அன்று மாலை வழக்கம் போல் கொழுந்து நிறைந்த சாக்குகளுடன், தெருவோரமாக லொறியின் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தார் பண்டா முதலாளி. அன்று அவ ருக்கு என்றுமில்லாதவாறு பெருந் தொகையான கொழுந்து கிடைத்திருந்தது. மூவாயிரம் ரூபாவுக்கு மேல் பணத்தைக் கொடுத்து ஆட்களிடம் அவர் கொழுந்தை வாங்கியிருந்தார். அவ்வளவு கொழுந்தையும் லொறிக் காரனுக்கு விற்றுவிட்டால் சுளையாக ஆயிரம் ரூபாவாவது இலாபமாகக் கிடைக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது அவரது உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது. வழக்கமாக வரும் நேரத்துக்கு அன்று ஏனோ லொறி வர வில்லை. வெகு நேரமாகத் தெருவோரமாக நின்றுகொண் டிருந்தபடியால் அவரது கால்கள் வலித்தன. அருகில் இருந்த கொழுந்துச் சாக்கின் மேல் அமர்ந்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார். 

நேரஞ் செல்லச் செல்ல பண்டா முதலாளிக்கு மனதில் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. ஒருவேளை இன்று லொறி வராமல் விட்டுவிடுமோ என நினைத்தபோது அவ ருக்குப் பெரும் திகிலாகிப் போய்விட்டது. தற்செயலாக அன்று லொறி வராவிட்டால் கொழுந்தெல்லாம் பதங் கெட்டு வீணாகிவிடும். பின்னர் அந்தக் கொழுந்தை ஒன் றுமே செய்ய முடியாது; வீசவேண்டியதுதான். அப்படி நேர்ந்துவிட்டால் ஒரே நாளில் மூவாயிரம் ரூபாவுக்கு குறையாத நட்டம் ஏற்பட்டுவிடும். அதை நினைத்துப் பார்த்தபோது அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. 

எங்கும் நன்றாக இருட்டிவிட்டது. ஒருவேளை லொறி யில் ஏதாவது பழுது ஏற்பட்டிருக்கும். அதனைத் திருத்திக் கொண்டு வருவதற்கு சுணக்கம் ஏற்படலாம் என நினைத்து. பண்டா முதலாளி நம்பிக்கையுடன் லொறியை எதிர் பார்த்துக்கொண்டிருந்தார். 

இருட்டிய பின்பு வெகுநேரமாகியும் பண்டா முத லாளி வீட்டிற்குத் திரும்பாததால், அவர் வேலைக்கு அமர்த்தியிருக்கும் பையன் தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு அவரைத் தேடி வந்திருந்தான். 

பண்டா முதலாளி பந்தத்தை வாங்கி நிலத்திலே குத்தி வைத்துவிட்டு, “லொறி வர நேரம் செல்லும்போல் இருக்கிறது. லொறி வந்தவுடன் கொழுந்தை விற்றுவிட் டுத்தான் வரவேண்டும். நீ போய்க் கடையை கவனித்துக் கொள்” எனக் கூறி அவனைத் திருப்பி அனுப்பிவைத்தார். 

சில்லென்று வீசிய குளிர்காற்று அவரது உடலைத் தைத் தது. உடல் குளிரால் நடுங்கியது. லொறி எப்படியாவது வந்து சேரும் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்குத் தளர வில்லை. 

நேரம் ஒன்பது மணியைத் தாண்டியதுந்தான் இனி லொறி வருவது சந்தேகமென அவர் எண்ணிக்கொண் டார் – ஒன்றா. இரண்டா மூவாயிரம் ரூபாய் அல்லவா பாழாகப் போகின்றது என எண்ணியபோது அவருக்குத் தலை சுற்றியது. தலையில் கைவைத்துக்கொண்டு பெருஞ் சோகத்துடன் கொழுந்துச் சாக்கின்மேல் வீற்றிருந்தார் பண்டா முதலாளி. 

லொறிக்காரனை நினைத்தபோது அவருக்குக் கோபம் பொங்கியது. எவ்வளவு பொறுப்பில்லாமல் அவன் நடந் திருக்கிறான். அவனுக்கு வரவசதியில்லையானால் யாரிடமா வது சொல்லியனுப்பியிருக்கலாந்தானே. நான் இப்போது அடைந்த நட்டம் அவனுக்கு எங்கே தெரியப்போகிறது. என்னிடமிருந்து வாங்கும் கொழுந்தை அவன் கொண்டு போய்க் கூடுதலான விலைக்கு, தனக்கு வசதியாகவுள்ள தேயிலைத் தொழிற்சாலையில் விற்றுவிடுவான். அதனால் எனக்குக் கிடைக்கும் இலாபத்தைவிட அவனுக்கு அதிக இலாபம் கிடைத்துக்கொண்டுதானே இருக்கிறது. அவன் லொறியுடன் வந்தால் நிச்சயம் அவனுக்கு இலாபம் கிடைக்கும். வராவிட்டால் அவனுக்கு ஒருபோதும் நட் டம் வராது. இந்த வியாபாரத்தில், நான் வேறு ஒருவனி டம் தங்கியிருப்பதால்தானே எனக்கு இப்படியான நட் டம் ஏற்படுகிறது. நான் எனக்குச் சொந்தமாக ஒரு லொறியை வாங்கிவிட்டால், இவ்வளவு நேரம் காத்தி ருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது; நட்டமும் அடையத் தேவையில்லை. இலாபமும் இரண்டு மடங்காகக் கிடைக்கும் – இப்படிப் பலவாறாக அவரது சிந்தனை ஓடியது. 

கடையிலிருந்து மீண்டும் பெடியன் அவரைத் தேடி வந்திருந்தான். மெனிக்கே அவனிடம் சுடுதண்ணிப் போத்தலில் தேநீர் அனுப்பியிருந்தாள். தேநீரைப் பரு கியபோது அவருக்குத் தொண்டைக்குக் கீழே இறங்குவதற்குச் சிரமமாக இருந்தது. 

இனி லொறியை எதிர்பார்த்து நிற்பதில் பிரயோசன மில்லை என அவர் எண்ணிக்கொண்டார். ஆனாலும் அவ்வளவு கொழுந்தையும் அங்கு போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போகவும் அவருக்கு மனம் வரவில்லை. தற்செய லாக லொறி பிந்திவந்தால் அவ்வளவு கொழுந்தையும் பணமாக்கிவிடலாம் என்ற நப்பாசை எழுந்து அவரை வீட்டுக்குப் போகவிடாது தடுத்தது. 

இப்போது பெடியனும் அவருடன் இரவிரவாக விழித்திருந்தான். 

மறுநாள் விடிந்ததுந்தான் பண்டா முதலாளி வீட் டுக்குப் புறப்பட்டார். அவரது உடலும், உள்ளமும் பெரி தும் சோர்ந்துபோய் இருந்தன. தள்ளாடியபடியே வீட்டை அடைந்தார் பண்டா முதலாளி. 

இரவு லொறி வராததை மெனிக்கேயிடம் சொல்லி விட்டு இனிமேல் நாம் வேறொருவரின் கையை எதிர் பார்த்து நிற்காமல் எமக்குச் சொந்தமாக ஒரு லொறி வாங்கிவிடவேண்டும் என அவர் திடசங்கற்பம் செய்து கொண்டார். 

மறு நாள் மாலையில் வழக்கமான நேரத்திற்கு லொறி வந்தது. முதல் நாள் லொறி பழுதடைந்தமையால் லொறியைக் கொண்டுவர முடியவில்லையெனக் கூறிய அந் தக் கொழுந்து வியாபாரி, முதல் நாள் பண்டா முதலாளி சேகரித்து வைத்திருந்த கொழுந்தை வாங்குவதற்கு முற்றாக மறுத்துவிட்டான். 

மறு வாரத்தில் பண்டா முதலாளிக்குச் சொந்தமான லொறியொன்று அந்த மலைப் பாதையில், அங்குமிங்குமாக ஓடி கொழுந்தை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தது. கொழுந்துத் தரகராக இருந்த பண்டா முதலாளி இப் போது ஒரு லொறிச் சொந்தக்காரராகிவிட்டார். 

அத்தியாயம் முப்பத்தைந்து 

அன்று முதியான்சேயைச் சந்திப்பதற்காக அவரது குடிசைக்கு சுமணபாலாவும் பியசேனாவும் சென்றிருந்தனர். 

ஏதோ பழைய புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டி ருந்த முதியான்சே அவர்கள் வருவதைக் கண்டதும் புத்த கத்தை மூடி வைத்துவிட்டு தான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றினார். 

“வாருங்கள், வாருங்கள்… என்ன இருவருமாகச் சேர்ந்து வருகின்றீர்கள். ஏதாவது விசேஷம் உண்டா?'” 

“விசேஷமாக ஒன்றும் இல்லை. சும்மா உங்களைப் பார்த்துக் கதைத்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்” என்றான் பியசேனா. 

இருவரும் அங்கிருந்த வாங்கில் அமர்ந்துகொண்டனர்.  

“தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக் கள் சண்டைக்குப் போய்விட்டார்களாமே; இதைப்பற்றி தோட்டத்து மக்கள் என்ன அபிப்பிராயப்படுகின்றார்கள்? நீங்கள் தினமும் தோட்டத்துக்கு வேலைக்குப் போகின்றீர்கள் தானே, அதனால் தான் கேக்கிறேன்” என்றார் முதியான்சே. 

”ஆமாம். கொழுந்து மலையில் சண்டை ஏற்பட்டது உண்மை தான். ஆனாலும் தொழிலாளர்களைப் பொறுத்த வரை கிராமத்து மக்களுடன் போராடும் எண்ணம் அவர்களுக்குச் சிறிது கூடக் கிடையாது. அவர்கள் எம்முடன் ஒற்றுமையாக வாழ்வதைத் தான் விரும்புகின்றார்கள்” என்றார் சுமண்பால். 

“அது எனக்கு நன்றாகத் தெரியும். நான் முப்பது வருட காலமாக தோட்டத்தில் வேலைசெய்திருக்கின்றேன்; அவர்களோடு நன்கு பழகியும் இருக்கின்றேன். எப்போ துமே அவர்கள் எம்முடன் ஒற்றுமையாகவே வாழ விரும்புபவர்கள் தான்” என்றார் முதியான்சே. 

“கிராமசேவகரும் பண்டா முதலாளியுந்தான் இங்குள்ள மக்களைத் தோட்டத் தொழிலாளர்களோடு தூண்டி விட்டுப் போராட வைக்கின்றனர்” என்றான் சுமணபாலா. 

“இவர்கள் இப்படிப் பகைமையை ஏற்படுத்துவதால் என்ன நன்மையைத் தான் பெறப்போகின்றார்களோ தெரியவில்லை” எனக் கவலையுடன் கூறினான் பியசேனா. 

“என்ன அப்படிச் சொல்கின்றாய்; தோட்டத்து மக் களை வெளியேற்றிவிட்டுத்தான் கிராமத்து மக்களுக்குக் காணி கொடுக்க வேண்டுமென்று சில அரசியல்வாதிகள் கருதுகின்றார்கள். அவர்களது கருத்தை முன்னின்று செயற்படுத்திவிட்டால், இவர்களும் அரசியல் செல்வாக் கைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?” என்றார் முதியான்சே. 

“அதுமட்டுமல்ல, தோட்டம் கிராமத்து கைக்கு மாறிவிட்டால், பின்னர் அங்கு கிடைக்கும் கொழுந்து முழுவதையுமே பண்டா முதலாளி வாங்கி வியாபாரம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமல்லவா” என் றான் சுமணபால். 

அவன் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண் டிருந்த முதியான்சே, ‘அவர்கள் நினைப்பது போல் தோட் டத்தைக் கிராமத்து மக்களிடையே பிரித்துக் கொடுத்து விட்டால், கொஞ்சக் காலத்திலேயே அந்தப் பகுதி முழு வதும் காடாக மாறிப் போய்விடும்” என்றார். 

“ஆமாம் கங்காணி… நீங்கள் சொல்வது சரிதான். தோட்டம் ஒரு ஸ் தாபனத்தின் கீழ் இயங்கும் போது அதனை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற வசதி யிருக்கும்.ஆனால் தனி மனிதர்களின் கையில் துண்டு துண்டாகப் பகிர்ந்து கொடுத்துவிட்டால் எல்லோருமே சீரான முறையில் அதனைப் பராமரிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது” என்றான் சுமணபால். 

தேயிலைச் செடியில் கொழுந்து இருக்கும் வரை அதனை விற்றுப் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்; ஆனால் செடியைப் பராமரிக்கமாட்டார்கள். கொஞ்சக் காலத்தில் தோட்டமே காடாகிப் போய்விடும்” என்றான் பியசேனா. 

“கிராமத்து மக்களுக்கு தோட்டத்தில் இப்போதிருக் கும் தொழில் வாய்ப்புக்கூட பின்னர் கிடைக்காது போய் விடும்” என்றான் சுமணபால. 

“எல்லாருமே சுறுக்காகப் பணத்தைச் சம்பாதிக்கத் தான் யோசிக்கின்றார்கள். ஆனால், காலப்போக்கில் ஏற் படப்போகும் பாதிப்பைப்பற்றி எவருமே சிந்திக்கவில்லை. இதனால் ஒரு காலகட்டத்தில் எமது நாடே பாதிக்கப்பட லாம்’ என்றார் முதியான்சே கவலையுடன். 

“நாங்கள் எதைச் சொன்னாலும் கிராமத்து மக்கள் புரிந்துகொள்கின்றார்களில்லை. பண்டா முதலாளியின் பேச்சைத் தான் கேட்கின்றார்கள்” என்றான் சுமணபால். 

“அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக நாம் ஏதா வது நியாயத்தைக் கூறிவிட்டால் சண்டைக்கு வரப் பார்க்கிறார்கள்” என்றான் பியசேனா. 

“பண்டா முதலாளியிடமிருந்து தானே அவர்களுக்கு பணம் கிடைக்கின்றது. பின் ஏன் அவர்கள் எமது பேச்சைக் கேட்கப் போகின்றார்கள். அதற்காக நாம் மனம் தளர்ந்துவிடக் கூடாது; சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல் லாம் மக்களுக்கு நியாயத்தை எடுத்துக் கூறத்தான் வேண் டும்” என்றார் முதியான்சே. 

“நீங்கள் சொல்வது சரிதான் கங்காணி. ஆனாலும் அன்று கூட்டத்தில் என்ன நடந்ததென்று எண்ணிப் பாருங்கள். பியசேனா நியாயத்தை எடுத்துக் கூறியபோது சொந்தக் காரணத்திற்காக அவன் அப்படிக் கூறுகிறா னென எல்லோரும் கேலி செய்து அவனை அவமதித்தார்கள் தானே” என்றான் சுமணபால். 

“நியாயமற்றவர்கள் அப்படித்தான் தனி மனிதனைத் தாக்கிப் பேச முனைவார்கள். அதற்காக நாம் கவலைப் படத் தேவையில்லை” எனக் கூறிய முதியான்சே, சிரித்து விட்டு, “அதுசரி பியசேனா… நீ அந்த மாயாண்டியின் மகளைக் கூட்டி வரத்தான் போகின்றாயா?” எனப் பியசேனாவைப் பார்த்துக் கேட்டார்.  

முதியான்சே இப்படி திடீரெனக் கேட்டதும் பிய சேனா சிறிது வெட்கம் அடைந்தான். 

“இதில் வெட்கப்பட என்ன இருக்கின்றது. நான் கூட எனது இளமைக் காலத்தில் ஒரு தோட்டத்துப் பெண்ணைக் காதலித்தேன். ஆனால், அவளை எனக்குத் தெரியாமல் அவ ளது தாய்தந்தையர் வேறொருவனுக்கு கலியாணம் செய்து வைத்துவிட்டார்கள். எனக்குக் காதலில் தோல்வி தான் ஏற்பட்டது” எனக் கூறிவிட்டுப் பலமாகச் சிரித்தார் முதியான்சே. 

“கங்காணி,உங்களுக்குக் காதல் தோல்வியாக இருந் திருக்கலாம். ஆனால் பியசேனாவைப் பொறுத்தமட்டில் அவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான்” எனக் கூறிச் சிரித்தான் சுமணபால். 

கிராமத்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் பகைமை ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், நீ அந்தப் பெண்ணைக் கூட்டி வருவதால் ஏதும் ஆபத்து ஏற்படாதா?” என யோசனையுடன் கேட்டார் முதியான்சே. 

“என்னதான் ஆபத்து ஏற்படப்போகின்றது? இது பியசேனாவின் சொந்த விடயம். இதில் யாரும் தலையிட முடியாது. இந்த விஷயத்தில் நான் எனது பூரண ஒத்து ழைப்பை அவனுக்குக் கொடுப்பேன்’ என்றான் சுமணபால உறுதியான குரலில். 

முதியான்சே பதில் எதுவும் கூறாது சிரித்தார். 

“சரி கங்காணி… நேரமாகிறது, நாங்கள் போய் வருகின்றோம்” எனக் கூறி பியசேனா எழுந்தான். சுமண பாலாவும் அவனுடன் புறப்பட்டான்.

– தொடரும்…

– குருதிமலை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 1979, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *