ஸதாநந்த போதக சாமியார்
கதையாசிரியர்: வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 69
(1933ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-6.3 | அத்தியாயம்-7
அத்தியாயம் – 7 – மலை விழுங்கியப்பன் – தலை வாங்கிப் பிள்ளை

இந்த அபூர்வக் கடிதத்தைப் படித்த பண்ணை எஜமான் ராமாமிர்த ஐயர் அதைப் படித்த காலத்தில் பல இடத்தில் அதீதமான பிரமிப்பினாலும் ஆவேச உணர்ச்சிப் பெருக்கினாலும் மேற்கொள்ளப்பட்டுத் திணறி ஒவ்வொரு நொடிகாலம் பேச்சு மூச்சற்று ஓய்ந்து நின்று நின்று படித்து அதை முடித்தது ஆகாயத்தை யளாவிய மலை போன்ற பிரம்மாண்டத் தேரை இழுத்து நிலையில் கொண்டு போய் நிறுத்தியதுபோ லிருந்தது.
அவர் அவ்விதமான விசித்திர சம்பவங்களைத் தமது ஆயுட்காலம் முடியக் கேட்டிராத பரமஸாது மனிதராகையால், அவருடைய பரிசுத்தமான மனதிற்கு அவைகள் நம் பிக்கையே படவில்லை; தாம் அந்தக் கடிதத்தைப் படித்ததும், மன்மத பீட மகா யோகீசுவரர் அதை எழுதி யிருப்பா ரென்பதும் நிஜம்போலவே படவில்லை. தமது ஐம்புலன்களும் உணர்ந்தது பொய்யென்றும், தாம் அப்போது கனவே காண்கிறோமென்றும் அவர் அடிக்கடி சம்சயித்தார்.
திவ்ய தேஜஸோடு பரம ஸாதுவாய் விளங்கிய மன்மத பீட மகா யோகீசுவரர் போலிச்சாமியார் என்பதும், அவர் செய்து காட்டிய அதிமாநுஷ விநோதங்கள் யாவும் தந்திர ஜாலங்களென்பதும் முக்கியமாய் அவரால் சகிக்கக்கூடிய வரம்பை மீறிய ஆச்சரிய உணர்ச்சியையும் மனவேதனையையும் உண்டாக்கி விட்டன.
அவையன்றி, ஸ்வர்ணாம்பாள் எஸ்.ஆர்.ஐயருடைய எஸ்.ஆர்.ஐயருடைய மகளன்று என்று எழுதப்பட்டிருந்த விஷயம் சுத்தப் புரளி போலவே பட்டது. ஏனெனில் ஸ்வர்ணாம்பாள் எஸ்.ஆர்.ஐயர் தனது சொந்தத் தகப்பனாரென்றும், தான் அவ ருடைய இளைய மனையாளின் வயிற்றிலுதித்த சொந்தப் பெண்ணென்றும் வந்தது முதல் உறுதியாய்ச் சொல்லிக் கொண்டிருந்ததற்கு மாறாய், யாரோ ஒரு மோசக்கார மனிதர் ஒரு புதிய சங்கதியை எவ்வித ஆதாரமுமின்றிச் சொல்ல வந்தது, அவருக்கு, பைத்தியக்காரனுடைய பிதற்றல் போலத் தோன்றியது. ஸ்வர்ணாம்பாள் மாத்திரமன்றி, பெரிய ஜெமீன்தாரும், ஹைகோர்ட் வக்கீலுமான ஒரு கனவானுடைய புதல்வரான கிருஷ்ணமூர்த்தி ஐயர் நெடுங்காலமாய் எஸ்.ஆர். ஐயர் பங்களாவில் இருந்து, பழகி அவர்களுடைய குடும்ப மர்மங்களை அறிந்திருந்தவர்; அவரும் ஸ்வர்ணாம்பாள் எஸ்.ஆர்.ஐயருடைய சொந்த மகளென்ற ஹோதாவில் அவளை மணந்து கொண்டதன்றி, எஸ்.ஆர்.ஐயர் தமது செல்வம் முழுதும் ஸ்வர்ணாம்பாளுக்கே உரிய தென்று பல தடவைகளில் கூறியதையும் கேட்டிருந்தவர். அந்தத் தகவலையும் அவர் அதற்குமுன் இரண்டொரு சந்தர்ப்பங்களில் வெளியிட்டிருந்தார்.
அத்தனை ஆதாரங்களுக்கும் விரோதமாய் போலிச் சாமியார் திடீரென்று தோன்றி, பிரத்தியக்ஷமாக எல்லோருக்கும் தெரிந்திருந்த ஓர் உண்மையை அடியோடு மாற்றியது சிறிதும் நம்பிக்கைக்கு யோக்கியமற்ற முழுப்புரட்டாகத் தோன்றியது.
இவ்விதம் ஒரு பெரிய விஷயத்தை மாற்றி அபாண்டமான ஒரு கற்பனையை உற்பத்தி செய்யத்தக்க மனிதர் சொல்லும் மற்ற விஷயங்களும் அதுபோலவே பொய்யா யிருக்குமென்ற சம்சயத்தை உண்டாக்கவே, தாம் ஏதோ ஏழைகளின் விஷயத்தில் பரோபகார தர்ம கைங்கரியம் செய்ய வேண்டுமென்ற மேலான நோக்கத்துடன் போலி மடாதிபதியாய் நடித்ததாக அவர் எழுதி இருந்ததும் பொய்யான முகாந்திரமாயிருக்க வேண்டும் என்றும் பண்ணை ராமாமிர்த ஐயர் கருதினார்.
அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விஷயங்களை மேன்மேலும் சிந்திக்கச் சிந்திக்க, ஐயரவர்களுக்கு போலிச் சாமியார் விஷயத்தில் அபாரமான கோபாவேசம் பொங்கிய படி இருக்கவே, தாம் உடனே போலீஸ் அதிகாரியை வர வழைத்து, அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்து அந்த மோசக்கார வேஷதாரியை அவர்கள் சிறைப்படுத்தி தண்டனைக்குக் கொண்டுபோகச் செய்ய வேண்டுமென்ற ஆவேசமும் துடிதுடிப்பும் தோன்றிப் பெருகின.
அவருடைய மனதில் எவ்விதமான நினைவுகளும் சம்சயங்களும் உணர்ச்சிகளும் பொங்கி யெழுந்துவதைத் தனவோ, அவ்விதமாகவே அங்கிருந்த மற்றவர்களுடைய மனதிலும் பொங்கி வதைத்தனவானாலும் எல்லோருக்கும் பெரியவரான ஐயரவாள் பேசாமலிருக்கையில் தாம் எதை யும் சொல்வது தவறென்று நினைத்து மற்றவர் மௌனமாக இருந்தனர்.
அந்த மௌனம் சுமார் ஐந்து நிமிஷகாலம் நீடித்திருக்க, பண்ணை ராமமிர்த ஐயர் கிருஷ்ணமூர்த்தி ஐயருடைய முகத்தைப் பார்த்து, “என்ன, ஐயரவாள், பேசாம லிருக்கிகளே! மௌனம் கலகம் நாஸ்தி என்று நெனைக் கறாப்புலெ இருக்கு!” என்றார்.
கிருஷ்ணமூர்த்தி ஐயர்:-பெரியவாள்ளாம் சகிச்சுண்டு பேசாமே இருக்கச்சே, நாங்கள்ளாம் என்ன சேயக் கெடக்கு!
பண்ணை ஐயர்:- நேக்கும் கிட்டத்தட்ட அஞ்சு கழுதெ வயசாயிட்டுது. இது வரையிலே நம்ப ஸத்தரத் துக்கும், நம்ப ஆத்துக்கும் எத்தனையோ பெரியவாளும், யோகீசுவராளும், சந்நியாசிகளும் வந்திருக்கா. இந்தமாதிரி நான் யாருக்கிட்டவும் ஏமாந்ததே கெடையாதுன்னா. இது எந்தக் காலத்துலெயும் ஆரும் காதாலே கேக்காத வேடிக்கை யான்னா இருக்கு! எம்பிட்டூண்டு வழுக்கைப் பய, எப்பேர்ப் பட்ட பிரமாதமான காரியத்தைப் பண்ணீட்டுப் பேட்டானே! ரெண்டு மாஸகாலம் இந்தாத்துலே இருந்து ஆடம்பரம் பண்ணிருக்கான்! ஒத்திருக்காவது கொஞ்சங்கூட சந்தேகம் உண்டாகல்லியே! அதுன்னா ஸாமர்த்தியம். பசு மாட்டெ அடிச்சு, தோலெ செருப்புக்காக பிராம்மணாளுக்கு தானம் பண்ணறதூன்னு பெரியவா ஸ்லோகம் சொல்லுவா. அதுபோலேன்னா இருக்கு இந்தப் பய சொல்லியிருக்கற ஞாயம்! என்னமோ தர்ம கைங்கிரியம் பண்ணப் போறானாம்; அதுக்காகப் பணம் சேக்கணும்னு இப்பிடி யெல்லாம் பண்ணானாம். தர்ம கைங்கிரியம் பண்ணனுங்கறது இவுனுக்குத்தான் தெரியும் போலிருக்கு. நம்பிளுக்கெல்லாம் தர்மங்கறது இன்னதூன்னு தெரியுமா என்ன! தெரியாமெத்தான் நம்ப பெரியவாள்ளாம் அன்ன ஸத்தரம், பாடசாலை, பூரிதக்ஷணை, பிராம்மண ஸந்தர்ப் பனை எல்லாம் ஏற்படுத்திருக்கா! ஏண்டா தென்னமரத்துலே ஏறினேன்னானாம். கன்னுக்குட்டிக்குப் பில்லுப்புடுங்க ஏறினேன்னு பதில் சொன்னானாம். தென்னமரத்துலெ பில்லேதுடான்னு கேட்டா, அதுனாலெதான் இப்ப எறங்கி கேட்டா,அதுனா வந்திண்டிருக்கேன்னானாம். அந்த மாதிரிக் கதையான்னா இருக்கு இது. இப்ப நேக்கு வர ஆத்தரத்துலெ இந்தக் கடுதாசியைப் போலீஸ்காரருக்கு அனுப்பிச்சு அவனெப் புடிச்சு பத்து வருஷம் எட்டு வருஷம் தெண்டிச்சுப் புட ணும்னு இருக்கு.
பர்வதலக்ஷ்மி அம்மாள்:- (கதவின் மறைவிலிருந்தபடி மிருதுவான குரலில் பேசத்தொடங்கி) என்னமோ பாவம் பிராம்மணப் புள்ளை. அவர் தண்டனைக்குப் போனா, அந்த அவுமானம் நமக்கில்லியா! அவாளவா பண்ணற பாவம் அவா ள்வாளோடெ எல்லாத்தியும் பாத்துண்டு மேலே பகவான் ஒத்தர் இருக்கார். அக்கிரமம் பண்ணறவாளுக்குத் தக்கின கூலி குடுத்துட்றார். அவரெ தண்டனெக்கி அனுப்பற பாவத்துலெ நாமேன் போகணும். எல்லாத்தியும் பகவான் கிட்ட ஒப்பிச்சுட்டுக் கடுதாசியெக் கிழிச்சுப் போட்டுட்டு சிவனேன்னு பேசாமெயிருங்கோ.
கிருஷ்ண மூர்த்தி ஐயர்:- மாமி சொல்றது சரியான ஞாயமாத்தான் இருக்கு. மல்லாந்து படுத்துண்டு தம்பலத்தெ உமிஞ்சா, மார்லெதான் விழும்னு சொல்லுவா. அந்த மாதிரி இந்தக் கேலிக்கூத்தெ நாம்பளே வெளீலெ சொல்லீண்டா, நமக்குத்தான் இளிச்சவாத்தனம். திருடனெத் தேளுக் கொட்டினாப்புலேன்னு சொல்றதுண்டு. அது சரியாப் போச்சு. ஆனா, நேக்கு இதுலெ இன்னொரு ஆச்சிரியம் என்னன்னா, இப்பிடியெல்லாம் வேஷம் போட்டு, ஜெகஜாலப் பெரட்டெல்லாம் பண்ணி ஒரு வருஷ காலமா ஊரைக் கொள்ளையடிச்ச மனுஷன், தான் பண்ணினத்தை யெல்லாம் துணிஞ்சு இப்பிடி வெளிப்படுத்திக்குவனாங் கறதுதான் நேக்கு நம்ப முடியல்லெ. இப்பிடியெல்லாம் சொன்னா ந்த மோசத்துனாலே ஏமாந்துபோனவாள்ளம் தனக்கு தெண்டனெ பண்ணிவைக்க மாட்டாளாங்கறது அவுனுக்கு புத்தீலெ படாமெ இருக்குமா? இத்தெ அவனே இழுதி யிருப்பனா, இல்லாட்டா, அவனெச் சந்தீலெ இழுத்து விடணும்னு அவனோடெ விரோதி ஆராவது இப்பிடி இழுதியிருப்பனாங்கறது நேக்கு சந்தேகமா இருக்கு.
பர்வதலக்ஷ்மியம்மாள்:- ஊர்லெ பொறாமைக்காரர் ரொம்ப ஜாஸ்தி. கண்டவா கண்டபுடி சொல்லுவா. அத்தெ யெல்லாம் நாம்ப காதுலெ போட்டுக்கப்படாது. இது பொய்யாயிருந்தா, பெரியவாளே அவுமானப்படுத்தற தோஷம் நம்பளெத்தானே சேரும். அதெல்லாம் நாம் ஆத்தரப்பட்டு எத்தெயும் சேயப்போகாது. ஆருவேண்ணா எப்பிடி வேண் ணாலும் சொல்லிண்டு திரியட்டும். நீங்க காதுலெ போட்டுக் காமெ விச்சா இருந்துடுங்கோ. நமக்கேன்னா அந்தப் பழியெல்லாம்.
பண்ணை ஐயரவாள்:-ஆனா இதுலெ நாம்ப இன்னொரு முக்கியமான சங்கதியெயும் கவுனிக்கணும். இந்தக் கடுதா சீலெ, ஸ்வர்ணாம்பாளைப்பத்திப் பிரஸ்தாபம் பண்ணிருக்கு. த்தெ நாம்ப இப்ப போலீஸ்காரங் கிட்டக் குடுத்தா, இத்தெ வச்சிண்டு இதுக்குமின்னே இந்த சந்யாசி போயி ருந்த எடத்துக்கெல்லாம் போயி விசாரிப்பா: கச்சேரிலே தெ த தாக்கல் பண்ணுவா. இவா இஞ்செ இருக்காங்கற சங்கதி பகிரங்கமாயிடும். இவாளோடெ பகையாளிக்கு அது தெரிஞ்சுபோனா, பெரிய அபாயமா முடியும். வாண்டாம். வாண்டாம். இது வந்துதுங்கற சங்கதியே அசலார் ஆருக்கும் தெரியவாண்டாம். விட்டுடுங்கோ.
பர்வதலக்ஷ்மியம்மாள்:- அந்தக் கடுதாசியெ மின்னாலெ இரும்புப் பொட்டீலெ வச்சுச் பூட்டீட்டு மறுகாரியம் பாருங்கோ. அன்னியாயமா நம்மாலெ இவாளுக்குக் கெடுதல் வந்துடப்போறது.
கிருஷ்ணமூர்த்தி ஐயர்:- இத்தெ இழுதினவன் அடுத்த கடுதாசீலே இன்னும் என்னென்னமோ சங்கதியை இழுதப் போறானாமே. அதுவும் வரட்டும்; என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.
பண்ணை ஐயரவாள்:-ஆம். வாஸ்தவம் தான். ஐயர வாள் சொல்றதும் நல்ல யுக்திதான். அடுத்த கடுதாசிலெ என்ன வரதூன்னு பாக்கலாம்-என்று கூறினார்.
அவ்வளவோடு அவர்களுடைய அன்றைய சம்பாஷணை முடிவுற, அவரவர்கள் தம்தம் காரியங்களை கவனிக்கும் பொருட்டுப் பிரிந்து போயினர்.
அதன் பிறகு அந்தக் கடிதத்தைப்பற்றியாவது, அதில் இருந்த விஷயங்களைப்பற்றியாவது எவரும் எவ்விதமான பிரஸ்தாபமும் செய்யாமல் இருந்தனர். ஆனால், ஒவ்வொருவரது மனதிலும், அதிலிருந்த முக்கியமான விஷயங்கள் உறுத்திக் கொண்டே இருந்தன. முக்கியமாய், கிருஷ்ணமூர்த்தி ஐயரும், ஸ்வர்ணாம்பாளும் முன்னிலும் அதிக வியாகுலமும், முகவாட்டமும் அடைந்தவர்களாய்த் தோன்றி, பண்ணை யாரையும், பர்வதலக்ஷ்மியம்மாளையும் காணும்போதெல்லாம் நிரம்பவும் அதிகமான கிலேசமடைந்தவர்களாய் நடந்து கொண்டனர்.
அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டதற்கு ஒரு காரணமுமிருந்தது. பெரிய லக்ஷாதிபதியான எஸ்.ஆர்.ஐயருடைய பெண், மாப்பிள்ளை என்ற ஹோத வில், பண்ணையாரும், அவருடைய மனையாளும் தங்களுடன் சம்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற நினைவை அவர்கள் ஏற்கனவே கொண்டிருந்தனராதலால், தங்களுக்கு உண்மையில் எஸ்.ஆர். ஐயருடைய பாந்தவ்வியம் இல்லையென்று போய்விட்டால், தாங்கள் எவ்விதத்திலும் அவர்களுக்கு சமதையாக மாட்டோமென்றும், அதன்பிறகு அவர்கள் தங்கள் பெண்ணை தம் புத்திரனுக்குக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பமாட்டார்களென்றும் நினைத்தனராதலால், அவர்களது மனதில் தானாகவே ஒருவித கிலேசம் அப்போது முதலே உள்ளுக்குள் தோன்றி உறுத்திக்கொண்டே யிருக்கத் தொடங்கியது.
அதன் பிறகு சுமார் ஒருவார காலம் கழிந்தது. போலிச் சாமியாரிடமிருந்து இன்னொரு கடிதம் வந்து சேர்ந்தது. அதை வாங்கவோ, பிரித்துப் படிக்கவோ, பண்ணை ஐயரவாளும், அவரைக்காட்டிலும் அதிகமாய்ப் பர்வத லக்ஷ்மியம்மாளும் விரும்பவில்லை.
ஆனால் கிருஷ்ணமூர்த்தி ஐயருடைய வேண்டுதலின் மேல், அவரே அந்தக் கடிதத்தைப் படிக்கும்படி பண்ணை ராமாமிர்த ஐயர் கொடுத்துவிட்டார். கிருஷ்ணமூர்த்தி ஐயர் அதைப் படிக்க, மற்றவர் அதை அசட்டையாய் கவனித்துக் கொண்டிருந்தனர். கடிதம் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:-
“மகா-ள-ஈ-ஸ்ரீ விஷ்ணுபுரம் பண்ணை ஐயரவாள் சமுகத்திற்கு போலிச்சாமியார் பொன்னுசாமி ஐயர் மிக வணக்கமாய் எழுதிக்கொள்ளும் விக்ஞாபனம். அநேக நமஸ்கார உபய குசலோபரி.
“நான் சில தினங்களுக்கு முன் எழுதியனுப்பிய கடி தம் உங்களிடம் வந்து சேர்ந்திருக்குமென்றும், அதைப் பார்த்து விஷயங்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்களென் றும் நம்புகிறேன். அதைப் படித்தபின் நீங்கள் எல்லோரும் என்னைப்பற்றி எவ்விதமான அபிப்பிராயம் கொண்டிருப்பீர்களோ வென்பதை நான் அறியக் கூடவில்லை. ஆனாலும், நான் எழுதியுள்ள விஷயங்களெல்லாம் சிறிதும் பொய்யே கலவாத மெய்யாதலால், உண்மையைச் சொன்னதனால், எனக்கு இழிவு நேர்ந்தாலும், அதைப்பற்றி நான் சிறி தும் வருந்தப் போகிறவனன்று. உங்களுக்கு மறுபடியும் கடிதம் எழுதி நான் முக்கியமான சில விஷயங்களைத் தெரிவிக்கப் போவதாய் எழுதி இருந்தேன். அதுவன்றி, இந்த ஒருவாரகாலத்தில் இங்கு பல விசேஷ சம்பவங்கள் நேர்ந்து விட்டனவாதலால், அவைகளையும் நான் உங்களுக்குத் தெரி விக்கக் கடமைப்பட்டவனாய் விட்டேனாதலால், நான் மறுபடியும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
“நான் இதற்குமுன் உங்களுக்கு எழுதிய கடிதத்தில், என் தகப்பனார் ஒரு பெரிய லக்ஷாதிபதி என்றும், என் தாயார் விகாரமான முகத்தோற்ற முடையவளா யிருந்தமையால், அபாண்டமான சில குற்றங்களைக் கற்பித்து அவளை என் தகப்பனார் விலக்கிவிட்டார் என்றும், அப்போது நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்தேனென்றும் தெரிவித்தேனல்லவா. எனக்கு இப்போது இருபத்திரண்டு வயது நிறைகிறதாகையால், என் தாயாரை என் தகப்பனார் விலக்கியது இருபத்திரண்டு வருஷ காலத்திற்கு முன்பு என்பதை நான் தெரிவிக்க வேண்டியதில்லை.
“அவர் எப்படி என் தாயாரை விலக்கினாரென்ற தக வலை இதுவரையில் என் தாயார் என்னிடம் சொல்லவில்லை. சில தினங்களுக்குமுன் நான் சில காரணங்களினால் சம்சயப்பட்டு, என் ஜாகைக்கு என் தாயாரை வரவழைத்து வற்புறுத்திக் கேட்டதில், அவள் அப்போது நடந்த சில சம்பவங்களைத் தெரிவித்தாள்.
“அந்தக் காலத்தில் என் தகப்பனார் கோயம்புத்தூரில் பெரிய பாங்கி வைத்து, கொடுக்கல் வாங்கல் வியாபாரம் த்திவந்தார். அவர் அப்போது யௌவன முறுக்கும் பணத்திமிரும் கொண்டு, எவரும் தமக்கு நிகரில்லையென்று கருதி, எவரையும் மதியாமல், எந்தக் கட்டுப்பாட்டையும் மீறி, அவருடைய மனம் போனபடியெல்லாம் நடந்துவந் தார். அப்போது அந்த ஊரிலிருந்த அழகுடைய சகலமான தாசிவேசிகளும் அவருக்கு இணக்கமானவர்களாயிருந் தனராதலால், விகாரமான முகத் தோற்றமுடைய அவ ருடைய மனைவியான என் தாயாரைக் கண்டால், அவருக்கு ஜென்மப்பகை. என் தாயாரைத் தம் மனைவியென்று சொல் லிக்கொள்ளவும் வெட்கி, அவள் தங்கள் வீட்டு வேலைக்காரி என்று சொல்லுவார். அந்த சமயத்தில் அவ்வூரில் வேறொரு பிரபுவிற்கு அற்புதமான அழகுவாய்ந்த ஒரு பெண்ணிரு தாள். அவள் பருவகாலமடைந்து பருத்துச் செழித்து மிக ஸொகுஸாகவும், காண்போர் மன மோகிக்கச்செய் யும் அற்புத வசீகரத்தன்மை வாய்ந்தவளாகவும் இருந்தாள். அவள்மீது மோகங்கொண்ட என் தந்தை எப்படியும் அவளையே தாம் இளைய மனைவியாய்க் கொள்ள வேண்டு மென்று தீர்மானித்து, ஏதேனும் சாக்கைவைத்து என் தாயாரை விலக்கிவிட வேண்டுமென்றும் தமக்குள் முடிவு செய்துகொண்டார்.
“அந்த சமயத்தில் அவரிடம் அந்தரங்கமான காரியஸ் தன் ஒருவன் இருந்தான். அவன் அதற்குமுன் பல வருஷ காலம் அவரோடிருந்து, அவர் ஏராளமான பொருளைத் தேடுவதற்கு அநுசரணையா யிருந்தவன். அவ்வாறு அவன் அநுசரணையாயிருந்த காலத்தில், என் தகப்பனார் அவனையும் வர்த்தகத்தில் ஒரு கூட்டாளியாய்ச் சேர்த்துக் கொள்வதாக வும், தம்முடைய சொத்துகளில் மூன்றில் ஒரு பாகத்தை அவனுக்குக் கொடுப்பதாகவும் வாக்களித்தாராம்.
“அந்த வாக்குறுதியை அவர் பலவருஷகாலம் வரையில் நிறைவேற்றாமலே அவனை ஏமாற்றிக் கொண்டுவர, அவன் அதைப்பற்றி அடிக்கடி அவரை நச்சுப்படுத்தி வந்தானாகையால், அவனைத் தாம் எப்படி ஒழிப்பது என்பதைப் பற்றி யோசித்து, ஒரே கல்லால் இரண்டு பட்சிகளை வீழ்த்தத் தீர்மானித்தார்.
“அவனுக்கு என் தாயாரிடம் நிரம்பவும் இரக்கம் ஏற்பட்டது. என் தந்தை என் தாயாரைப் பலவகையில் கொடுமையாய் நடத்தி அக்கிரமமாக அடித்தும் வைதும் நிர்ப்பந்தித்து வந்தாராகையால், இருவரும் தனிமையில் ஒருவரை யொருவர் பார்க்கையில், ஒருவருக்கொருவர் அநுதாப மொழிகள் கூறிக்கொள்வர். தமக்கு வர்த்தகத்தில் பங்கு கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றுகிறார் என்று காரியஸ்தன் என் தாயாரிடம் புகார் சொல்வான்; என் தாயார் தம்மை அவர் பலவகைகளில் கொடுமையாய் நடத்துவதாய்ச் சொல்வாள். இவ்வாறு அவர்கள் சொல்லிக் கொண்டதற்குமேல் அதிகமாய் எவ்விதமான சம்பந்தமும் வைத்துக் கொண்டவர்களன்று.
மற்ற வேலைக்காரர் மூலமாய் இதை எப்படியோ தெரிந்து கொண்ட என் தகப்பனார், தம்முடைய கருத்திற்குத் தோதாகச் சில பொய்ச்சாட்சிகளைத் தயாரித்துக் கொண்டார். அப்போது என் தாய்க்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையும் என் தாயைப் போல் அழகற்றதாயிருந்த தாகையால், அதனிடத்திலும் என் தகப்பனார் வெறுப்பாயிருந்து வந்தாராகையால், அவர் அதைக் கையால்கூடத் தொடுவதில்லை; ஒருநாள் விடியற் காலம் சில ஆட்களை ஏவி அந்தக் குழந்தையை இரகஸியத் தில் தூக்கிக் கொண்டு போய்த் தோட்டக்கிணற்றில் போட்டு அதைக் கொல்லச் செய்து, உடனே கூக்குரலிடும்படி செய்து போலீசாரையும் வரவழைத்து விட்டார்.
ஆள்கள் கட்டுப்பாடாய்ச் சொன்ன சாட்சியத்தின் மேல், போலீசார் காரியஸ்தனையும் என் தாயையும் கைதி செய்து அழைத்துக்கொண்டு போய் விட்டனர். என் தாயின் படுக்கைக்கு அர்த்தராத்திரியில் காரியஸ்தன் பல தடவைகளில் போய் வந்ததைத் தாங்கள் கவனித்ததாகவும், அவர்கள் இருவரும் ஒன்றாயிருக்கையில், பெண் குழந்தை விழித்துக்கொண்டு கத்திய காலங்களில், காரியஸ்தன் அது இருக்கும்வரையில் தங்களுக்கு அபாயம் வந்துவிடுமென்றும், ஆகையால், அதைத் தான் கிணற்றில் போட்டுக் கொன்றுவிடப் போவதாகவும் சொல்ல, என் தாயார் அப்படிச்செய்ய வேண்டாமென்று தடுத்ததாகவும், அதன்பிறகு அம்மாள் தூங்கிய காலத்தில் காரியஸ்தன் இரகஸியமாய்க் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்க் கிணற்றில் போட்டுவிட்டதாகவும், வேலைக்காரர் பலர் பொய்ச் சாட்சி கூறவே, நியாய திபதி லஞ்சம் வாங்குகிற சுபவ முடையவராதலால், என் தகப்பனாரிடம் பெரிய தொகை யைப்பெற்று என் தாயாரை எச்சரித்துவிட்டு, காரியஸ்த னுக்கு, வெவ்வேறான மூன்று குற்றங்களுக்காக மொத்தத்தில் இருபத்தொரு வருஷகாலத்திற்கு தண்டனை யளித்தார். அவன் குழந்தையைக் கிணற்றில் போட்டதை நேரில் பார்த்ததாக யாரும் சாட்சி சொல்லவில்லை யாதலால், அவனுக்கு மரணதண்டனை விதிக்காமல் 14 வருஷகாலம் அந்த மான் தண்டனையும், அயலானுடைய மனைவியை அபகரித்தது முதலிய வேறு குற்றங்களுக்காக ஏழு வருஷக் கடுங் காவலும் ஆக மொத்தம் இருபத்தொரு வருஷ தண்டனை விதித்தார். அதோடு அந்தக் காரியஸ்தன் ஒழிந்து போனான். என் தந்தை என் தாயையும் விலக்கிவிட்டார்; அதன் பிறகு சில மாதகாலத்தில், என் தந்தை மேலே குறித்த பிரபுவின் பிரவிடையான பெண்ணை இளைய தாரமாய்க் கல்யாணம் செய்து கொண்டார்.”
பர்வதலக்ஷ்மி யம்மாள் :-ஐயோ! கேக்க சகிக்கல்லியே! நேக்குக் கொலை நடுக்கம் எடுக்கறதே! ஐயோ கொடுமையோ! இப்பிடியும் சேவாளோ!
பண்ணை ஐயரவாள்:- அவன் பிராம்மணனா பதிதனா, அவனெ என்னன்னு சொல்றது! தன் சம்சாரத்துக்கும் சூத்தரக் காரியஸ்தனுக்கும் முடிச்சுப் போட்றதாவது! தன் சொந்தக் கொழந்தையையே கொல்றதாவது! ரெண்டு பேரையும் கோர்ட்டுலே கொண்டுபே நிறுத்தறதாவது! காரியஸ்தனுக்குப் பங்கு குடுக்கறேன்னு சொல்லிப்புட்டு அவுனுக்கு இருவத்தோருவருஷ தண்டனெ பண்ணி வைக் கற்தாவது! ஒடனே இன்னொரு தொண்ட பொண்ணெக் கல்யாணம் பண்ணிக்கறதாவது! என்ன கிராதகத்தனம் இது! அவன் பிராம்மணனா சண்டாளனா, அவனை என்னன்னு சொல்றது! இது ஒலகத்துலெயே நடக்காத அதிசியமா யிருக்கே!
கிருஷ்ணமூர்த்தி ஐயர்:- அவன் ஆரோடே அப்பாங் கறத்தெ நீங்க மறந்து பேசறாப்லெ இருக்கு. இந்த இரண்டு மாச காலத்துலே புள்ளெ இங்கே வந்து, இந்திர ஜாலம் மகேந்திர ஜாலமெல்லாம் பண்ணிப்புட்டானே. புள்ளெக்கி இருக்கற குணாதிசயமெல்லாம் அப்பாக் கிட்ட இருந்து தானே வந்திருக்கணும்; அப்பா, புள்ளெ, ரெண்டு பேரும் ஒத்தருக் கொத்தர் சளச்சவாளா யில்லெ. கடுதாசியெ மேலே படிக்கறேன் கேளுங்கோ.
(கடிதத்தை மேலும் படிக்கிறார்)
“இந்தப் பழைய வரலாற்றை சில தினங்களுக்கு முன்பே நான் என் தாயார் சொல்லத் தெரிந்து கொண்டேன். அதைக் கேட்டு நான் ஒரு விஷயத்தில் பெரிதும் சந்தோஷ மடைந்தேன். இப்பேர்ப்பட்ட மகா பாவியான மனிதரோடிருந்து லக்ஷக்கணக்கான அவருடைய குபேர சம்பத்தை அநுபவிப்பதைவிட, என் தாயாரும், நானும்
அவரிடமில்லாமல் பிச்சை யெடுத்து ஜீவிக்க நேர்ந்தது நாங்’ கள் பூர்வகாலத்தில் செய்த புண்ணிய பலனென்று நான் நினைத்து ஆனந்த மடைந்தேன்.
“இதையன்றி, என் தகப்பனாருடைய ஆதிகால வரலாற்றையும் நான் சமீபகாலத்தில் வேறொரிடத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அதை நான் உங்களிடம் வெளியிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லையானாலும், அது ஒருகால் பத்திரிகைகளில் வெளியானாலும் ஆகலாமாதலால், அ த நீங்கள் எப்படியும் பார்க்கப் போகிறீர்கள். ஆகையால், நானே அதையும் இப்போதே உங்களுக்குத் தெரிவித்து விடுகிறேன்.
“என் தகப்பனாரைப் பெற்ற பாட்டனார் சென்னையில் கூலிக்குப் பிணம் தூக்குகிறவர். அவர் அந்தத் தொழிலில் தினம் ஒன்றுக்கு சுமார் பத்து ரூபாய் சம்பாதித்தாரானாலும், கூத்தி, குடி, மாமிச போஜனம் முதலியவற்றில் அவர் எல்லாப் பணத்தையும் செலவிட்டு விடுவார். என் பாட்டி பரம தரித்திர நிலைமையில் இருந்து எப்போதும் பஞ்சக் காலக்ஷேபம் செய்து, அவரிடம் ஓயாமல் அடிகளும், உதை களும், வசைகளும் பெற்று ரௌரவாதி நரகத்தில் வாசம் செய்து வந்தாள். அவர்களுடைய குமாரராகிய என் தகப்பனார் கூர்மையான புத்தியும், சுறுசுறுப்பாக உழைக்கும் சுபாவமுடையவர். அவர் யாசகத்தின் உதவியால் சில வகுப்புகள் வரையில் பள்ளிக்கூடத்தில் படித்தார். அப்போது என் பாட்டனார் திடீரென்று வாந்திபேதி நோயால் இறந்து போய் விட்டார்.
“என் பாட்டி பழமண்டி வியாபாரியான ஒரு கோமுட்டிச் செட்டியாருடைய வீட்டில் சமயல் செய்யும் வேலையில் அமர்ந்திருந்தாள். அவளுடைய சிபார்சின்மேல் என் தகப்பனார் செட்டியாருடைய பழமண்டியில் குமாஸ்தா வேலை பெற்று, தமது கடமைகளை மிக சாமர்த்தியமாகச் செய்து, செட்டியாருடைய பூர்த்தியான நம்பிக்கைக்கும் பிரியத்திற்கும் பாத்திரமா யிருந்ததன்றி, வீட்டிலேயே மேன்மேலும் படித்து, எப், ஏ, பி. ஏ. முதலிய பரீட்சைகளிலும் தேர்ச்சி பெற்றார். செட்டியாருக்குப் பணமாகவும், வீடு களாகவும் சுமார் மூன்று லக்ஷம் ரூபாய்க்குச் சொத்து கள் இருந்தன. அவருக்கு, மனையாளொருத்தியும், இளம் பிராயத்துக் குழந்தைகள் இருவரும் இருந்தனர். செட்டி யார் பெரிய ஸ்திரீலோலராதலால், அவர் தனக்குயில் என்ற அழகான யௌவன தாசி யொருத்தியை வைப்பாக வைத்துக்கொண் டிருந்தார். அவருடைய மோட்டார் வண்டியை ஒட்டியவன் ரத்னவேல் என்ற பெயருடைய ஒரு குறவன்.
“செட்டியார் தனது வைப்பாட்டியான தனக்குயிலை மோட்டாரில் உட்கார வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளைய மாலையிலும் கடற்கரைக்குக் காற்று வாங்கப் போவார். அப்போது ரத்னவேல் முன்னால் உட்கார்ந்து வண்டியை ஒட்டிக்கொண்டு போவான்.”
“அவ்வாறு அம்மூவரும் ஒரு நாள் மாலையில் கடற் கரைக்குப் போன காலத்தில், வண்டி கடற்கரை ரஸ்தா வில் குறட்டோரமாய் நிறுத்தப்பட்டது. தனக்குயில் தனக்குத் தலை நோவாயிருப்பதால், தான் வண்டியில்லயே இருப்பதாய்ச் சொல்ல, செட்டியார் மாத்திரம் இறங்கிக் குறட்டில் அங்குமிங்கும் உலாவிய காலத்தில், வண்டியில் இருந்த குறப்பையனும், தாசியும் மோக விகாரமான சில காரியங்களைச் செய்ய, செட்டியார் அதைக்கண்டு, அவர்கள் இருவரையும் விலக்கி அங்கேயே இறக்கி விட்டுவிட்டு, மோட்டாரைத் தாமே ஒட்டிக்கொண்டு தம் வீட்டிற்குப் போய் விட்டார்.
“என் தகப்பனார் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிறபடி செட்டியாருக்குப் பரம மித்திரரா யிருந்ததோடு, ரத்னவேலுக்கும் அந்தரங்கமான சகாவா யிருந்தார். ரத்னவேல், செட்டியார் செய்த காரியத்தை என் தகப்பனாரிடம் ரகஸியத்தில் சொல்ல, இருவரும் கலந்து யோசனைசெய்து செட்டியாரை ஒழித்துவிடத் தீர்மானித்தனர். தாசிப்பெண்ணை வைத்து சவரக்ஷிக்கப் போதுமான பணம் குறவனிடம் இல்லையாதலால் தனியான ஓர் இடத்தில் அவளைக் கொண்டுபோய் என் தகப்பனார் வைத்து, அவளிடம் போக்குவரத்தாயிருந்தார்.
“தாம் அப்படிச் செய்வது செட்டியார் முதலிய பிறருக்குத் தெரியக்கூடாது என்னும் எண்ணத்தை வைத்துக் கொண்டு அவர் ஒரு தந்திரம்செய்தார். தனக்குயிலுக்கு பார்ஸீலேடி மாதிரி ஆடையாபரணங்களை அணிவித்து, அந்த இடத்தில் வைத்ததன்றி, தாம் அந்த இடத்திற்குப்போன போதெல்லாம் பார்ஸீ டாக்டர்மாதிரி டொப்பி, சட்டை, நிஜார், பூட்ஸ் முதலியவற்றோடு போய்வந்து கொண்டிருந்தார். பெரிய ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஒரு பார்ஸீ டாக்டரும் அவருடைய மனையாளான பார்ஸீலேடியும் அங் ருந்ததாக வேலைக்காரி முதலியோர் நினைத்து அதே தக வலை வெளியிடும்படி என் தந்தை செய்திருந்தார்.
பர்வதலக்ஷ்மி யம்மாள்:-ராமராமா! என்ன கண்றா விக் கதையிது! காதாலெ கேக்க சகிக்கல்லியே! காது புளிச்சுப் போறதே!
பண்ணை ஐயரவாள்:- பையன் தலைவெட்டீன்னா, அப் யன் மலை முழுங்கியா யிருக்கமாட்டானா! அவசரப்படாதே! இன்னும் சொச்சப் பிரபாவத்தையும் கேப்போம். ஐயரவாள், மேலே வாசீங்கோ.
கிருஷ்ணமூர்த்தி ஐயர்:- வேஷம் போட்றத்துலெ, அப்பாவும் புள்ளெயும் நிபுணரா யிருக்காளே!
(கடிதத்தை மேலும் படிக்கிறார்.)
“அன்றைய இரவு முதல் செட்டியாருடைய வீட்டில் மலைப்பிஞ்சுகள் மழை பெய்வதுபோல வந்து இறங்கத் தாடங்கின. விடியற்காலம் அவருடைய வீட்டின் வாசலில் கழிப்புக்கழித்த பாவைகள் முதலிய பயங்கர வஸ்துக்கள் வைக்கப்பட்டிருந்தன; மலச்சட்டிகள் உடைக்கப்பட்டிருந்தன. இக்காரியங்கள் பல நாட்கள் வரையில் தொடர்ச்சியாக நடைபெற, செட்டியார் திகில்கொண்டு ஏங்கி நோயில் வீழ்ந்து விட்டார். செட்டியாரம்மாளும் கிட்டத்தட்ட அதே நிலைமையை யடைந்து விட்டாள்.
“என் தந்தை எதையும் அறியாத பரம ஸாதுபோல் நடந்து, செட்டியாருக்கு அந்தரங்கமான நண்பராயிருப்பது போல் நடித்து, போலீஸாரைக் கொண்டு, கற்கள் முதலிய விழுவதைத் தடுக்க முயற்சிக்க, அது பயனற்ற முயற்சியா யிற்று. செட்டியார் மிக கேவலமான நிலைமையை யடைந்து விடவே, அவருக்கு வைத்திய சிகிச்சை செய்ய ஒரு பார்ஸீ டாக்டரையும், அவருடைய மனையாளையும் அழைத்து வருவதாகச் சொல்லி தாமும், தாசியும் வேஷம் போட்டுக் கொண்டு வந்து அவருக்கு மருந்துகள் கொடுத்து, அவர் தம்முடைய சொத்துகளின் விஷபத்தில் ‘உயில்’ எழுதி வைக்கும்படி செய்து, மறுநாளிரவில் அவருடைய படுக்கை யண்டை காவலாயிருக்கும்படி தனக்குயிலை பார்ஸீலேடி உடையில் அனுப்ப, அவள் இரவு முழுவதும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, தனது ஸாகஸங்களால் அவருடைய மோகாவேசத்தைக் கிளப்பி விட்டபடி இருந்து, உடம்பை துர்ப்பலப்படுத்தக்கூடிய மருந்துகளைக் கொடுத்துவிட்டுப் போக, மறுநாள் செட்டியார் இறந்துபோய் விட்டார்.
“மூன்று லக்ஷம் ரூபாய் பெறத்தக்க செட்டியாரு டைய சொத்துகளை யெல்லாம், அவருடைய இரண்டு குழந்தைகளும் மேஜர் ஆகும் வரையில், என் தகப்பனாரே நிர்வகிப்பதென்றும், செட்டியாரம்மாள் போஷகியா யிருப்பதென்றும், ‘உயில்’ எழுதப்பட்டதானாலும், கற்களும் மலச் சட்டிகளும் விழுந்தது, பாவைகள் வைக்கப்பட்டது ஆகியவற்றால் ஏற்கனவே தளர்வடைந்து துர்ப்பலமடைந்திருந்த செட்டியாரம்மாள் தன் கணவர் இறந்து போனபின் அபாரமான திகிலும் மனவேதனையும் அடைந்து எப்போதும் படுத்த படுக்கையாகவே இருக்க, என் தகப்பனார் மறுபடியும் பார்ஸீ டாக்டரையும், பார்ஸீ லேடியையும் அழைத்து வந்து செட்டியாரம்மாளுக்கும் வைத்தியம் செய்விக்க, அவள் அந்த ஊரை விட்டு, தேகாரோக்கியத்திற்கு அனுகூலமான குற்றாலம் முதலிய வேறு ஊர் எதற்காவது போய்ச் சில மாதகாலம் இருந்தாலன்றி உடம்பு தேறாதென்று டாக்டர் சொல்லி விட்டார்.
“குற்றாலத்தில், ஓரிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு செட்டியாரம்மாளையும், அவளுடைய குழந்தைகள் ரண்டையும், என் பாட்டியையும், இன்னம் சில சிப்பந்திகளையும் வைத்து, என் தந்தை அங்கே போவதும் சென்னைக்கு வருவதுமாயிருந்தார். செட்டியாருக்கு ரொக்கமாகவும் நகையாகவும் சுமார் 2 1/2-லக்ஷம் ரூபாயும், 1/2- லக்ஷம் ரூபாய் பெறும்படியான வீடுகளும் இருந்தன. ரூபாயும் நகைகளும் அவருடைய வசமாய் விட்டன. வீடுகளை யெல்லாம் அவருடைய பெயருக்கே முச்சலிக்கைகள் பெற்று வாடகைக்கு விட்டு வந்தார்.
“செட்டியாருடைய குடும்ப வரலாறுகள் குற்றாலத்திலிருந்த எவருக்கும் தெரியாதிருந்தன. செட்டியாரம்மாளுடைய உடம்பு தேறாமலேயே இருந்து ஐந்தாறு மாதக் காலத்தில் படிப்படியாய் முற்றிலும் கேவல நிலைமையை அடைந்து விட்டது. செட்டியாருடைய குழந்தைகளை என் பாட்டி தன் சொந்தக் குழந்தைகள் போலவே பிரியமாய் நடத்திப் பாதுகாத்து வந்தாளாதலால், செட்டியாரம்மாள் என் பாட்டியும், என் தகப்பனாரும் தன் குழந்தைகளை வஞ் சிக்க மாட்டார்கள் என்று பூர்த்தியான நம்பிக்கை வைத்து விட்டதன்றி, தன் உயிர் அதிகமாய் நில்லாதாகையால் இனி முழுப் பொறுப்பையும் என் தகப்பனாரே வகிக்கும்படி வேண்டிக்கொண்டாள். மறுபடி இன்னொரு பத்திரம் எழு தப்பட வேண்டுமென்று என் தகப்பனார்கூற, செட்டியாரம் மாள், உங்கள் இஷ்டம் எப்படியோ அப்படியே பத்திரம் எழுதிக் கொள்ளுங்கள். நான் கையெழுத்துப் போட்டு ரிஜிஸ்டர் செய்து வைத்து விடுகிறேன்’ என்று கூறிறாள். ஒரு புதிய பத்திரம் எழுதப்பட்டது. தன் புருஷரால் விடப் பட்டுப்போன சொத்துக்களை யெல்லாம் என் தந்தையே நிர்வகிப்பதோடு, குழந்தைகளுக்கும் போஷகரா யிருக்க வேண்டுமென்றும்,தேவையானால், வீடுகள் முதலிய ஸ்தாவர சொத்துக்களையும் அவர் விற்றுவிடலாமென்றும், குழந்தைகள் மேஜராவதற்கு முன் தெய்வ சங்கற்பத்தால் இறந்து போனால், சகலமான சொத்துகளையும் அவரே எடுத்துக் கொள்ளுவதென்றும் ஒரு பத்திரம் எழுதப்பட்டது. அதில் என்ன புதிய விஷயங்கள் எழுதப்பட்டன வென்பதை செட்டியாரம்மாள் கேட்கவே இல்லை. அவள் உடனே கையெழுத்துப் போட்டு ரிஜிஸ்டரும் செய்து வைத்து விட்டாள். அதற்குப் பிறகு இரண்டு மாதகாலத்தில் அவள் பரலோகப் பிராப்தி யடைந்தாள்.
“செட்டியாருடைய குழந்தைகள் இரண்டும் அதற்கு மேலும் குற்றாலத்திலேயே இருந்தன. என் பாட்டியும், மற்ற சிப்பந்திகளில் சிலரும் அங்கே இருந்தனர். அது வரையில் செட்டியாரம்மாளுக்கு முன் வராமல் மறைவிலேயே இருந்து வந்த ரத்னவேல், செட்டியாருடைய குழந்தைகளுக்கு முக்கியக் காவலனானான். குழந்தைகள் இரண்டும் நான்கு வயதிற்குட்பட்டவர்களாகவே இருந்தனவாதலால், ரத்னவேலைவைப் பற்றிய பழைய வரலாறு எதுவும் அவர்களுக்குத் தெரியாதாகையால், அவனிடம் நிரம்பவும் பற்றுதலோடிருந்து வந்தன.
“என் தந்தை குற்றாலத்துக்குப் போவதையே விட்டு விட்டார். சென்னையில் செட்டியாருக்குச் சொந்தமா யிருந்த வீடுகளையெல்லாம் அவர் விற்றுப் பணமாக்கிக் கொண்டு, ஒரேயடியாக சென்னையை விட்டு கோயம்புத்தூரை யடைந்து, அங்கே ஒரு பெரிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தம்மிடமிருந்த மூன்று லக்ஷம் ரூபாயையும் முதலாக வைத்து பாங்கி வர்த்தகம் நடத்தத் தொடங்கினார். சொத்துகள் யாவும் தம்முடைய சொந்த சொத்துகள் என்றே தஸ்தாவேஜிகள் எழுதி சகலமான நடவடிக்கைகளையும் நடத்திக்கொண்டு போனார்.
“அவர் சென்னையை விட்டு வந்தகாலத்தில் அங்கு அவருக்கு வைப்பாக இருந்த தனக்குயிலுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து, வேறு எவரையாவது பிடித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுத் தாம் இன்ன ஊருக்குப் போகிறோம் என்ற தகவலைக்கூட அவளுக்குச் சொல்லாமல் போய் விட்டார். கோயம்புத்தூரில் அவருக்கு முதல் கல்யாணம் நிறைவேறியது. என் தாயாரைப் பெற்ற பாட்டனார் ஒரு சாஸ்திரியார் என்று நான் முன்னரே எழுதி இருக்கிறேன். அவருக்கு என் தாயைத் தவிர, வேறு மனிதரே இல்லை. அவர் என் தாயை அவருக்குக் கல்யாணம் செய்துகொடுத்து தம்முடைய பெரும்பலான சொத்துகளையும் கன்யாதானமாய்க் கொடுத்துவிட்டார்.
“கோயம்புத்தூர் பாங்கியின் வர்த்தகம் அமோகமாய் விருத்தியடைந்து கொண்டே போயிற்று. சில வருஷ காலத்திற்குள் அவர் சுமார் பதினைந்து லக்ஷத்திற்கு உரியவராய் விட்டார். அந்தக் காலத்தில் குற்றாலத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அந்த ஊர் நீர்வீழ்ச்சியில் ஸ்நானம் செய்யும் பொருட்டு என் பாட்டியோடும், ரத்னவேலோடும் சென்ற செட்டியாருடைய குழந்தைகளிரண்டும் ஸ்நானம் செய்யும்போது காணாமல் போய்விட்டன என்றும், சில தினங்களுக்குப் பிறகு அவர்களுடைய பிணங்கள் அகப்பட் டன வென்றும் செய்தி வந்தது. என் தகப்பனார் இரகஸிய மாகப் புறப்பட்டுக் குற்றாலத்திற்குப் போய், செட்டியாருடைய குழந்தைகளின் பிணங்களைக் கொளுத்திவிட்டு தம் தாயையும் ரத்னவேலையும் அழைத்துக் கொண்டு கோயம்புத்தூருக்கு வந்து சேர்ந்தார்.
“அதன் பிறகு, என் தந்தை சகலமான சொத்துக்களுக்கும் எதேச்சாதிகாரம் வாய்ந்த சொந்தக்காரராய் அட்டகாசம் பண்ண வாரம்பித்தார். ரத்னவேல் முதலியோர் குற்றாலத்தில் இருந்த காலத்தில், செட்டியாருடைய குழந்தைகள் மலையருவியில் விழுந்து இறந்துபோகும்படி செய்து, அந்தச் செய்தியைத் தமக்குத் தெரிவித்தால் தாம் தமது வர்த்தக சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தை அவனுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்தார்.
“அதை நிறைவேற்றாமல் பல வருஷ காலம் ஏமாற்றி வந்தமையால், அவன் அதைப்பற்றி அவரை நச்சுப்படுத்தவும், என் தாயிடம் குறை கூறவும் நேர, அதன் பலனாய் அவனுக்கு இருபத்தொரு வருஷ தண்டனை வந்து லபித்தது”.
பண்ணை ஐயரவாள் :- ஆஹாஹா! என்ன மோசம்! என்ன மோசம்! இது எந்தக் காலத்துலெயும் ஆரும் காதாலே கேக்காத படுமோசமான்னா இருக்கு! செட்டி குடும்பத்தெ அடியோடே க்ஷவரம் பண்ணி, சொத்தெயெல்லாம் ஸ்வாஹாப் பண்ணிப்புட்டானே. புள்ளையைவிட அப்பன் பலே பேர்வழியா இருக்கானே! அவுனுக்கு ஏற்பட்ட காரியஸ்தனும், கழுவுக்கேத்த கோமுட்டிதான். சபாஷ்! சபாஷ்! மனுஷன் பணம் சம்பாதிச்சாலும் இப்பிடீன்னா சம்பாதிக்கணும்! அந்தக் காரியஸ்தனுக்கு இருவத்தோரு வருஷ தண்டனை கெடைச்சது ஞாயமான காரியந்தான்! அன்னியாயமா ரெண்டு கொழந்தையளைக் கொலை பண்ண பழி லேசானதா!
பர்வத லக்ஷ்மியம்மாள் :- அப்படியானா, குத்தாலத்துலெ ஜலத்துலெ விழுந்து செத்துப்போன செட்டிக் கொழந்தெயளே அந்தக் காரியஸ்தனே கொண்ணிருப்பான்னா சொல்றைக?
பண்ணை ஐயரவாள்:- அடி பைத்தியக்காரீ போ. தெரியல்லியா நோக்கு! நண்ணா வெட்ட வெளிச்சமாத் தெரியறதே! அதுக்காகத்தானே அந்தக் காரியஸ்தனுக்கு மூணத்தொரு பாகங் குடுக்கறேன்னு சொன்னது. ஒரு ரூவாயா, ரெண்டு ரூவாயா, மூணத்தொரு பங்கூன்னா, அப்ப இருந்த சொத்துக்கு அஞ்சு லக்ஷம் ரூபா ஆகுமே ஜீவாதாரமான கொலை பண்ணறத்துக்காகத்தான் அம்பிட்டுப் பெரிய தொகையைக் குடுக்கறேன்னு சொன்னான். இல்லாட்டாப் பைத்திக்காரத்தனமா அவன் அப்பிடிச் சொல்லிருப்பானா! ஒருநாளும் சொல்லிருக்க மாட்டான். தொகை பிரம்மாண்டமா இருந்தத்துனாலெதான், குடுக்க மனம் வராமெ, காரியஸ்தனை இந்த மாதிரி அடியோடெ வேரெக் களைஞ்சு வென்னீரை விட்டுட்டான்.
கிருஷ்ணமூர்த்தி ஐயர்:- ஆசாமி பெரிய அசுர ஜென்மத்தெச் சேந்தவனா இருக்கானே! மனுஷ ஜென்மத்துலெ சேந்தவனாவே இல்லியே !
பர்வத லக்ஷ்மியம்மாள்:- இப்பிடி யெல்லாம் ஊர்ச் சொத்தெக் கொள்ளையடிச்சு லக்ஷம் லக்ஷமாச் சேத்து என்ன பண்ணப்போறாங்கறது தெரியல்லியே! சொந்தப் பொண்ணையே கொன்னு,மூத்த ஆம்படையாளெத் தள்ளிப் புட்டு, அவளோடெ வயத்துலெ பொறந்த புள்ளை யாண்டானையும் பராரியா விட்டூட்டு, அவர் மாத்தரம் ஏகாங்கியாயிருந்து இத்தனாம் வெள்ளம் சொத்தையும் என்ன பண்ணப் போறார். இன்னெக்கிச் செத்தா நாளைக்கி ரெண்டு நாளாச்சே.
கிருஷ்ணமூர்த்தி ஐயர்:- ஏன். அவர்தான் ரெண்டாங் தாரம் ஒத்தியெக் கல்யாணம் பண்ணிண்டிருக்காறாமே! அவுளுக்குக் கொழந்தை குட்டியிருக்கும். அவுளுக்குப் பின்னாலெ அவாளுக்குச் சேரலாமோன்னோ!
பண்ணை ஐயரவாள்:- ஆனாலும் இந்த மனுஷன் மகா கிராதகன்னா ! இவனோடெ மொகத்துலெ முழிச்சாக்கூட நமக்குப் பஞ்சமா பாதகம் வந்துசேரும். இத்தனை அட்டூழியங்களும் சும்மா விட்டுடாது. அவுனுக்கு ரௌரவா நரகத்தெத் தவிர வேறே முடிவு கெடையாது. இருக்கட்டும். கடுதாசியெ மேலே வாசிங்கோ. சொச்ச வைபவத்தையும் கேக்சலாம்.
(கிருஷ்ணமூர்த்தி ஐயர் கடிதத்தை மேலும் படிக்கிறார்.)
“என் தகப்பனாருடைய இளைய சம்சாரம் தத்ரூபம் கந்தர்வ ஸ்திரீபோலவே, மகா அற்புதமான அழகும் முக வசீகரமும் வாய்ந்தவளாதலால், என் தகப்பனார் அவளுக்கு சாசுவத அடிமை முறி எழுதிக் கொடுத்து விட்டவர் போலாய் அவள் காலாலிட்டதைத் தலையால் செய்கிறவர் ஆய்விட்டார். அவளால் தமக்கு அழகான பல குழந்தைகள் பிறக்குமென் றும், அவைகளுக்குத் தம் சொத்துகளெல்லாம் சேர வேண்டுமென்றும் அவர் அவாவுற்று ஆவலோடு எதிர் பார்த்து, அவளோடு சதாகாலமும் இணைபிரியாதிருந்து அவளை ஒரு சக்கரவர்த்தினிபோல நடத்தி, எப்போதும் அவள் ஆநந்தமாயிருக்கும்படி செய்து வந்தார்.
“இரண்டாவது வருஷத்தில் அவள் கர்ப்பிணியானாள். ஆனால் மூன்றாவது மாதத்தில் கர்ப்பச் சிதைவு ஏற்படவே, அந்த வேதனையைப் பொறாமல் அவள் இறந்துபோய்விடு வாளோ வென்று அஞ்சத்தக்க பயங்கரமான நிலைமையை அடைந்தாள். அதன்பொருட்டு பல வைத்திய நிபுணர்கள் தருவிக்கப்படவே, அவர்கள் அவளுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து, ஆபரேஷன் செய்து, குறைச் சிசுவை பலவந்தமாய் வெளிப்படுத்தினர். அவர்களுள் முக்கியஸ்தராயிருந்த வெள்ளைக்கார துரையொருவர் அப்போது குடி வெறியால் தடுமாற்ற மடைந்து கர்ப்பப் பையை அடியோடு அறுத் தெடுத்து வெளியில் போட்டுவிட்டார். அதனால் அவளுக்கு அதற்குமேல் கர்ப்பமே எப்போதும் தரிக்க மார்க்கமில்லாமல் போய்விட்டது. அவள் மூலமாய்த் தமக்குப் பிறக் கும் குழந்தைக்கே தம் சொத்துகள் சேர வேண்டுமென்று அவர் எண்ணி மனப்பால் குடித்தது நிறைவேறக் கூடாத தாய் முடிந்தது.”
பர்வத லக்ஷ்மியம்மாள்:- மூத்த ஸம்ஸாரத்து வதை வீணாப்போமா! எல்லாத்தியும் பாத்துண்டு, அததுக்குத் தக்கபடி கோணக்கழி வெட்ட பகவான் காத்துண்டிருக் கச்சே, கேவலம் மனுஷன் விச்சாத்துள்ளிக் குதிக்கறத் என்ன ஆயிடப்போறது. ஏறாங் கடைசீலே மிஞ்சறது அவா ளவா பண்ணின பாவ புண்ணியத்துப் பலந்தான்.
பண்ணை ஐயரவாள்:–அதுக்கப்பறம் இன்னொத்தியைக் கல்யாணம் பண்ணிண்டாரோ என்னமோ! அப்பேர்ப்பட்ட ஆசாமி அதுக்கு மேலெயும் சும்மா இருப்பாரா!
கிருஷ்ணமூர்த்தி ஐயர் சிரித்துக்கொண்டு மேலும் கடிதத்தைப் படிக்கிறார்.)
“தம்முடைய ஆசை நாயகியான இளைய மனைவிக்கு அதற்குமேல் குழந்தை பிறக்காது என்ற நிச்சயம் ஏற்பட் டுப் போகவே, அவர் ஏமாற்றமும், ஏக்கமும், வியாகுலமும் அடைந்து அதைப்பற்றி அடிக்கடி கவலைப் பட்டாரானாலும், தாம் உயிருக்குயிராய் மதித்திருந்த, அவ்வளவு அற்புத அழகோடு கூடிய, இளைய மனையாளிருக் கையில் இன்னொருத்தியை மணக்க எண்ணவில்லை. வருஷம் ஆக ஆக சதிபதிகள் இருவருக்கும் குழந்தை யில்லாத குறை பெருத்த தாக விடாய் போல் பெருகி அவர்கள் இருவரையும் சந்தோஷ மற்றவர்களாய்ச் செய்துவிடவே, தாம் வேறு எவருடைய குழந்தையையாகிலும் வளர்த்துக் கொள்ளலாமோ என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர்.
“அப்போது முக்கியமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவர்கள் சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் விலையில் முதல்தர மான ‘ரோல்ஸ்ராய்ஸ்’ என்ற மோட்டார் வண்டியை எப் போதும் உபயோகித்து வந்தனர். எவ்வளவு தூரமானருக்குப் போக வேண்டுமானாலும் சதிபதிகள் இருவருமே அதில் போய் வருவது வழக்கம். அந்த வழக்கப்படி அவர் கள் இருவரும் தங்கள் மோட்டார் வண்டியில் சென்னைக் குப் போய்விட்டுத் திரும்பி வந்தகாலத்தில், ஜன நடமாட்ட மில்லாத ஒரு ரஸ்தாவின் வழியாக வந்தபோது, ஒரு வேலைக்காரி சுமார் ஐந்து வயதுள்ள ஒரு பெண் குழந் தையை ரஸ்தா ஓரத்தில் வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை பசுந்தங்கத்தினால் வார்க்கப்பட்ட பதுமைபோலவே இருந்தது. அது பிராம்மணக் குழந்தை யென்பதும் தெரிந்தது. பக்கத்தில் ஓர் அக்கிரஹாரம் தென்பட்டது.
“அந்தக் குழந்தையின் வசீகரமான அழகைக் கண்டு பிரமித்துப் போய் சதிபதிகள் இருவரும் தமது மோட்டார் வண்டியை அந்தக் குழந்தை விளையாடிய இடத்திற்கருகில் நிறுத்திக் கீழே இறங்கி, குழந்தையோடும், வேலைக்காரி யோடும் பேச்சுக் கொடுத்தனர்.
“அந்தக் குழந்தை அப்போதே முதன்முதலாய் மோட் டார் வண்டியைப் பார்த்ததாகையால், அதைக் கண்டு ஆசை யோடு உற்று உற்றுப் பார்த்து நாற்புறங்களிலும் சுற்றிச் சுற்றி, சக்கரங்கள் முதலியவற்றைத் தொட்டுத் தொட்டும் பார்த்துக்கொண்டே இருந்தது. அப்போது அந்த வேலைக்காரி அந்தக் குழந்தையைப் பார்த்து, ‘கண்ணூ! நீ வண்டி யெப் பாத்துக்கினே இரு. நானு ஆத்தாங் கரைக்கிப் போயி ஒரு வா தண்ணி குடிச்சுட்டு ஓடியாறேன்’ என்று கூறியபடி தடதடவென்று சுமார் நூறு கஜதூரத்திற் கப்பா லிருந்த பிரம்மாண்டமான ஓர் ஆற்றுப்பக்கம் தலைதெறிக்க ஓடினாள். வழியில் இருந்த சப்பாத்துப் புதர்களுக்கு மறைவில் அவள் அவசரமாய் ஒதுங்கிவிட்டு, பக்கத்திலிருந்த ஆற்றை யடைந்து குனிந்து இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுக்க முயல, அப்போது அவள் நின்ற இடம் அடியோடு பெயர்ந்து பிரவாகத்தில் சாயவே, அவளும் ஆற் றில் விழுந்து மறைந்து போனாள். அந்த இடத்தில் தண்ணீர் சுமார் அரைப் பனை ஆழம் போவதுபோலத் தோன்றிய தாகையால், அவள் முழுகிப்போன குறிப்பே தெரியாமல் போய் விட்டது.
“வண்டியிலிருந்தபடியே அந்த வேலைக்காரியைப் பார்த் துக் கொண்டிருந்த என் தகப்பனார், அவள் ஆற்றில் வீழ்ந் மூழ்கிப்போனதை கவனித்தார். அந்த ஒரே க்ஷணத்தில் அவருடைய மனத்தில் ஓர் எண்ண முதித்தது. அவர் தமது வண்டிக்குள்ளிருந்த மல்கோவா மாம்பழமொன்றை எடுத் துக் கத்தியால் நறுக்கி, ‘இந்தாம்மா பழம், சாப்பிடு’ என்று அந்தப் பெண் குழந்தையிடம் கொடுக்க, அது அந்தப் பழத்துண்டை வாங்கிச் சப்பிடவே, அந்தப் பழத் தின் அதீதமான ருசி அதன் மனதைக் கவர்ந்து விட்டது. அதைத் தின்றபின் மறுபடியும் குழந்தை அவருடைய கையிலிருந்த பழத்தைப் பார்த்தது.
“என் தந்தை சுற்றுமுற்றும் பார்த்தார். மனிதர் யாரும் அவர்களை கவனிக்கவில்லை. அவர், ‘கொழந்தே இந்தப் பழத்தெ யெல்லாம் நோக்கே தறேன். மேலே வந்து ஒக்காண்டிண்டு சாப்பிட்றியா?’ என்று நயமாகக் கேட்க, அது ‘சரி!’ என்று தலையை அசைத்தது. அவர் உடனே கதவைத் திறந்து, குழந்தையைத் தூக்கிக் கால்வைக்கும் பாகத்தில் வைத்து, மல்கோவாப் பழத்தையும் அதன் கையில் கொடுக்கவே, அது ஆவலோடு அந்தப் பெரிய பழத்தை வைத்துக்கொண்டு சாப்பிடத் தொடங்கியது. அவள் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இன்னும் ஏராள மான பழங்களும், பட்சணம் நிறைந்த தட்டும் இருந்தன. குழந்தை அவைகளைக் கண்டு மயங்கி மெய்ம்மறந்து போய்ப் பழத்தைத் தின்றபடி இருக்க, என் தந்தை கதவை ஓசை யில்லாதபடி மூடி, வண்டி போகிறதென்பதையே அந்தக் குழந்தை உணராதபடி அதை விட்டுக் கொண்டு போகத் தொடங்கி, அந்தக் கிராமத்தைத் தாண்டி அரைமயில் தூரம் போனபின் விசையை ஒரே வேகமாய்த் திருப்பிவிட்டார்.
“குழந்தை உட்கார்ந்திருந்த இடத்தில் வழுவழுப்பான வெல்வெட் தைக்கப்பட்டிருந்தது. வண்டி விசையாக ஓடிய தால் உண்டான அதிர்ச்சியும் அதற்கு சுகமான புதிய உணர்ச்சியை உண்டாக்கவே, மாதுரியமான பழத்தைத் தின்றபடியே அந்தக் குழந்தை வெல்வெட்டுத் தரையில் படுத்து சுகமான நித்திரையில் ஆழ்ந்துபோய் விட்டது.
“மறுபடி அது விழித்துக் கொண்டபோது கோயம்புத் தூரில் அவர்களுடைய பிரம்மாண்டமான பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. அந்தக் குழந்தையின் மனதை அவர்கள் பல வகைகளில் மயக்கி, அதன் அழுகையை சம னப்படுத்தி, அதன் தாய் தந்தையருடைய நினைவை மாற்றி அதையே தங்கள் வளர்ப்புக் குழந்தையாக வைத்துக் கொண்டனர்.”
பர்வதலக்ஷ்மி யம்மாள்:- (அபாரமான வியப்போடு) என்ன ஆச்சிரியம்! நம்ம லக்ஷ்மி காணாமெப்போன கதை மாதிரியே இருக்கே இதுவும். நம்ப லக்ஷ்மி காணாமெப் போயி பதினேழு வருஷமாறதே! இது எப்ப நடந்தது!
பண்ணை ஐயரவாள்:- (மிகுந்த பிரமிப்போடு) அந்தக் கொழந்தைக்கி அஞ்சு வயசுன்னு சொல்றான்! வேலைக்காரி ஆத்துலெ அமுங்கிப் போயிட்டான்னு சொல்றான்! நம்ப வேலைக்காரியோடெ பொணத்தெ, நாணப் பொதருலெ இருந்துதானே எடுத்தோம்! நம்ப குட்டி லக்ஷ்மி இப்ப அவாகிட்டதான் இருக்காளா என்ன! அவா கோயம்புத்தூரு லேன்னா இருக்காளாம்! இருந்திருந்து நம்ப லக்ஷ்மி அந்தச் சண்டாளன்கிட்டவா போயிச் சேரணும்!
பர்வதலக்ஷ்மி யம்மாள்: (ஆவலோடு) இன்னும் கடுதாசிலே என்ன இருக்குன்னு பாப்பம்.
(கிருஷ்ணமூர்த்தி ஐயர் கடிதத்தை மேலும் படிக்கிறார்.)
“அந்தக் குழந்தை அவர்களுக்குக் கிடைத்து சுமார் பதினேழு வருஷ மாய்விட்டது. அதற்கு அவர்கள் ஸ்வர்ணாம்பாள் என்று பெயரிட்டார்கள்!”
பர்வதலக்ஷ்மி யம்மாளும், பண்ணை ஐயரவாளும் (வியப் பும் ஆவலும் கொண்டு) என்ன! என்ன! ஸ்வர்ணாம்பாள் என்றா பெயர் வைத்தார்கள்! இந்த அம்மாளுடைய பெயரும் அதுதானே! இவாளுடைய தகப்பனார் சென்னைப் பட்டணத்திலல்லவா இருக்கிறார்!
(கிருஷ்ணமூர்த்தி ஐயர் கடிதத்தை மேலும் படிக்கிறார்)
“தாங்கள் ஒரு குழந்தையைக் கொணர்ந்து வைத்துக் கொண்டிருப்பது அந்த ஊராருக்குத் தெரிந்தால், அது யாருடைய குழந்தையென்று கேட்பார்களாதலால், அதனால் ஏதேனும் வம்பு வளருமென்று பயந்து, அவர் சில மாத காலம் வரையில் குழந்தையை எவருக்கும் தெரியாமல் மறைவாய் வைத்திருந்து, தமது பாங்கியையே கோயம் புத்தூரை விட்டு சென்னைக்கு மாற்றி அதைத் திருவல்லிக் கேணியில் ஸ்தாபித்து, தங்களுக்கு புரசைப்பாக்கத்தில் ஒரு பங்களா வாங்கிக்கொண்டு ஸ்வர்ணாம்பாளோடு அங்கே வந்துவிட்டனர்.”
என்று படிக்கப்பட்டதைக் கேட்கவே எல்லோரும் திடுக்கிட்டு, திக்பிரமை கொண்டு மெய்ம்மறந்து தத்தளித்தனர்.
பர்வத லக்ஷ்மியம்மாள்:- என்ன விசித்ரம் இது. எல்லாம் இவாளுடைய கதையாவே இருக்கே! இந்த ஸ்வர்ணாம் பாதான் நம்ப லக்ஷ்மியோ!
பண்ணை ஐயரவாள்:-மேலே படியுங்கொ, மேலே படி யுங்கோ, நிறுத்த வாண்டாம்.
(கிருஷ்ணமூர்த்தி ஐயரும் அதீதமாய்ப் பொங்கி யெழுந்த உணர்ச்சியோடு மேலும் படிக்கிறார்.)
“அந்த ஸ்வர்ணாம்பாளை அவர்கள் அந்த இளைய மனை வியின் சொந்தப் பெண்ணென்றும், அவளுக்கே எல்லா சொத்துகளும் சேருமென்றும் சொல்லிக்கொண் டிருந்த னர். தங்கள் பங்களாவிற்கடுத்த பங்களாவில் இருக்கும் வக்கீலும் ஜெமீன்தாருமான ஒருவருடைய புத்திரரான கிருஷ்ணமூர்த்தி ஐயருக்கு அந்தப் பெண்ணை வாழ்க்கைப் படுத்த, அவர்களுக்கு சுந்தரி என்ற குழந்தை பிறந்தது. அதற்கு இப்போது ஐந்து வயதாகிறது.” என்று படித்த கிருஷ்ணமூர்த்தி ஐயரே தமது மனக்கொந்தளிப்பினால் மேலே படிக்கமாட்டாமல் நிறுத்திவிட்டு, “என்ன ஆச்சிரி யம் இது! எங்க ஸ்வர்ணா ஒங்காத்து லக்ஷ்மிதான்போ லிருக்கே!” என்று மிகுந்த தடுமாற்றத்தோடு கூறி கடி தத்தை மேலும் படிக்கத் தொடங்கினார்:
“என் பாட்டனாருடைய பெயர் சுப்பராமையர். என் தகப்பனாருடைய பெயர் ராமகிருஷ்ணையர். அவைகளின் முதல் எழுத்துக்களைச் சேர்த்து என் தகப்பனார் எஸ். ஆர். ஐயர் என்று இங்கிலீஷ் எழுத்துகளால் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் பாங்கி நடத்தி சில மாதங்களுக்கு முன் சிறைச்சாலை யிலிருந்து திரும்பி வந்த ரத்னவேல் என்னும் குறவன் தன் பழியைத் தீர்த்துக் கொள்ள நினைத்து, அவருடைய இளைய மனைவியைக் கொன் றது முதலிய விவரங்களெல்லாம் பத்திரிகைகளில் வெளிவந் திருக்கின்றன. அவைகளை நான் உங்களுக்கு எழுதவேண் டிய அவசியமில்லை. காணாமற்போன உங்களுடைய பெண் ணையும், உங்கள் மாப்பிள்ளையையும், அவர்களுடைய குழந்தை யையும் தெய்வமே உங்களுடைய வீட்டில் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. நான் உங்கள் ஊரை விட்டு இங்கே வந்த வுடன் என் தாயை விட்டு அந்தக் குறவனைத் தேடச்செய்து, அவனோடு நானே பேசி, அவனுடைய கோபத்தைத் கணித்து, அவன் உங்கள் பெண், மாப்பிள்ளை முதலியோ ருக்கும், என் தந்தைக்கும் இனி எவ்வித கெடுதலும் செய்வ தில்லையென்ற வாக்குறுதியை நான் அவனிடம் வாங்கிக் கொண்டேன்.
“அதன் பிறகு நான் என் தகப்பனாரிடம் சென்று நான் இன்னானென்பதைத் தெரிவித்து, அவருக்கு எவ்வித கெடு தலும் செய்யாதபடி நான் குறவனிடம் வாக்குறுதி பெற்ற தைத் தெரிவிக்க, அவர் அடியோடு புது மனிதராய் மாறி, தாம் செய்த குற்றங்களுக் கெல்லாம் வருந்தி வாய்விட்டுக் கதறியழுததோடு, தமது சொத்துகள் முழுதையும் என் வசத்தில் ஒப்புவித்து, அவைகளை நான் என்னிஷ்டப்படி விநியோகம் செய்துகொள்ளலா மென்று சொல்லிவிட்ட தோடு, மறுபடி என் தாயாரையும் மனைவியாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.
“என் தகப்பனார் தம் கடைசிக் காலத்திலாவது தம் அக்கிரமங்களை உணர்ந்து திருந்தி என் தாயாரை ஏற்றுக் கொண்டா ரானாலும், அவருடைய மூளையில் தளர்வு ஏற் பட்டுப் போயிருப்பதாகத் தோன்றுவதால் அவர் கேனம் பிடித்தவர்போல் பிதற்ற ஆரம்பித்திருக்கிறார். அவருடைய காயமும் இனி அதிக காலம் நில்லாதென்பது நிச்சயம். இப்பேர்ப்பட்ட சொந்தக்காரரையும் அவருடைய இளைய மனைவியையும் இழந்ததைப்பற்றி உங்கள் லக்ஷ்மி முதலி யோர் இனி அவ்வளவாக வியாகுலமடைய மாட்டார்க ளென்று நம்புகிறேன்.
“என் தந்தையால் சேர்க்கப்பட்ட பணம் முழுதும் அக்கிரமத்தில் சம்பாதித்த பணத்தின் வளர்ச்சி யாதலால், எல்லாத் தாகையையும், நான் செய்ய உத்தேசித்திருக் கும் ஏழை ஜன தர்ம கைங்கரிய நிதிக்கே சேர்த்துவிட் டேன். குறவனும் இப்போது திருந்திப் போய்விட்டான். நான் ஸ்தாபிக்கப் போகும் ஏழை ஜன தர்ம கைங்கரியத் தில், அவனும் சேர்ந்து சேவை செய்வதாய் வாக்களித்து என்னோடு கூடவே இருந்து வருகிறான்.
“என் தகப்பனாருடைய இளைய மனைவியை வஞ்சித் தழைத்து வந்த மினியம்மாளும் அப்பாத்துரையும் சிங்கப் பூருக்குப் போய்விட்டன ராதலால், அவர்களைப் பிடிக்கப் போலீஸாரால் இயலவில்லை. அந்தக் குற்றத்தில் குறவனை சம்பந்தப்படுத்தத் தக்க சாட்சியில்லை யாதலால், அவர்கள் அவனை உபத்திரவிக்காமல் விட்டுவிட்டனர்.
“இவ்வளவே நான் உங்களுக்கு எழுதவேண்டிய செய் திகள். நீங்கள் லக்ஷ்மியை எந்த நிலைமையில் விட்டுப் பிரிந் தீர்களோ, அதே நிலைமையில் சுந்தரி வந்திருக்கிறாள். உங்க ளுக்கு ஏற்பட்ட மனக் குறைகளையும் ஏக்கத்தையும் அவள் தீர்த்து வைப்பாள். அதுவன்றி, அவள் உங்க ளுடைய குமாரனுக்கும் மனையாள் ஆய், உங்கள் வீட்டை விட்டுப் போகாத நித்திய லக்ஷ்மியாயும் விளங்குவாள். அதோடு உங்களுடைய குமாரியான சொந்த லக்ஷ்மியும் வட்டியும் முதலுமாய்த் திரும்பி வந்து சேர்ந்துவிட்டாள். இனி உங்கள் பாடு கொண்டாட்டமும் குதூகலமுமே. கிருஷ்ணமூர்த்தி ஐயருடைய தந்தையான உங்கள் சம்பந் திக்கும் இந்த சந்தோஷகரமான மாறுபாட்டைத் தெரி வித்து விட்டேன். அவரும் குடும்ப சகிதம் நாளையதினம் உங்கள் ஊருக்கு வந்து சேர்ந்து, அங்கு நடக்கப்போகும் கொண்டாட்ட வைபவத்தில் கலந்துகொள்வார்.
இப்படிக்கு உங்களை எப்போதும் மறவாத,
போலிச்சாமியார் பொன்னுசாமி ஐயர்”
என்று கிருஷ்ணமூர்த்தி ஐயர் படித்து முடிக்க, பர்வத லக்ஷ்மியம்மாள், “அம்மா, லக்ஷ்மீ, திரும்பி வந்தியாம்மா!” என்று கூறி அபாரமான சந்தோஷப் பெருக்கோடு பாய்ந்து ஸ்வர்ணாம்பாளைக் கட்டி மார்புறத் தழுவி ஆனந்த பாஷ்பத்தைச் சொரிய, அதுபோல பண்ணை ஐயரவாள் ஆசையோடு சுந்தரியைத் தூக்கி, யணைத்து முத்தமழை பொழியலானார்.
சுபம் ! சுபம் !! சுபம் !!!
– ஸதாநந்த போதக சாமியார் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1933, எம்.எஸ்.ராமுலு கம்பெனி, மதராஸ்.
![]() |
வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உன் கண்ணில் நீர் வழிந்தால்….
காரை ஆடலரசன்
April 21, 2026
நிஜத்தின் நிறம்
இரா.கலைச்செல்வி
April 21, 2026
அங்கும் இங்கும்
முத்தமிழ்ப்பித்தன்
April 21, 2026
