வாட்சப் பார்வர்ட்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 5,747
பரமன் வாட்ஸப்பில் வரும் எந்த பார்வர்ட் மெசேஜ் -ம் பார்க்க மாட்டார். உடனே நீக்கி (டிலிட்) செய்து விடுவார்.
அவரின் ஆபிஸ் பாஸ் பரந்தாமன் பரமனுக்கு எதிர் வகையை சேர்ந்தவர். ஒரு வாட்ஸப் பிரியர். தான் படும் துன்பம் மற்றவர்களும் பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஏதாவது ஒன்றை தன் அலுவலக குரூப் வாட்சப்-ல் பதிவிடுவார். அறுவை ஜோக், உறுதி படுத்தப்படாத போலி/வதந்தி தகவல், இல்ல வேறு ஏதாவது பல வருடங்கள் முன்னரே அனுப்பிய தகவலாக இருக்கும். அடுத்த நாள் தன் சேம்பர்க்கு வரும் ஆபிஸ் நபர்களிடம் அவர் அனுப்பிய பார்வர்ட் தகவல் பற்றிய விமர்சனம் கேட்பார். பாஸுக்கு பயந்து அவரவர்கள் ‘சூப்பர், ஓகே, ஏ1, அமர்க்களம்’ என்றெல்லாம் வஞ்சப்புகழ்ச்சி ஒப்புவார்கள்.
நல்லவேளையாக பரமன் இதுவரையில் அவரிடம் மாட்டியதில்லை. அன்று அவரிடம் மாட்டிக்கொண்டார்.
முந்தைய நாள் வாட்சப் பார்வர்ட் பற்றிக் கேட்டு விட்டார்.
‘ஆமா சார், ரொம்ப நல்லா இருந்தது. கடைசி வரைக்கும் அந்த வீடியோ பார்த்தேன்.’
‘என்னப்பா, பொய் சொல்றே ?. அந்த வீடியோ-ல்ல ஒண்ணுமே இல்ல. வெறும் பிளாங்க் வீடியோ அது. நீங்க உண்மையா என் வாட்சப் பார்க்கறீங்களான்னு டெஸ்ட் பண்ண வச்ச டெஸ்ட் வீடியோ அது. சூப்பர்ன்னு கதை வேற உடறே.’
தூக்கி வாரி போட்டாலும், சுதாரித்துக்கொண்ட பரமன் அமைதியாக சமாளித்தார். ‘சார், அதில ஒண்ணுமில்லாம இருந்ததால் தான் ரொம்ப நல்லா இருந்தது’.
பாஸுக்கு சுருக்கென்று தைத்தது. பாஸ் மேற்கொண்டு பேசவில்லை. அடுத்த நாள் முதல் பாஸ் எந்த வாட்சப் பார்வர்ட் செய்வதை நிறுத்தி விட்டார். ஆபிசில் எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த சந்தோசம். திடீர் மாற்றத்திற்கான காரணம் எதுவும் பரமனைத் தவிர யாருக்கும் புலப்படவில்லை.