மெல்லத்திறந்தது கனவு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 1,722
(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
உச்சி வெயில்பட்டு மின்னிடும் செண்பகப்பூ போன்ற பிரகாசமான முகப்பொலிவுடன் என் முன்னே அமர்ந்திருந்தார் திரு டாம் அலிஸ்டர். பெருங்கடலை நினைவுறுத்தும் நீல நிறக் கண்கள், மூன்றாம் பிறை நெற்றி, பொன்னிறத் தலைமுடி. சற்றுக் கீழிறங்கி வந்தால் சிவப்பு ரோசா நிற மெல்லிய உதடுகள். அதற்கும் கீழே இறங்க முடியாமல் அவருடைய வசீகரப் பேச்சில் சுட்டுண்டு கிடந்தேன் என்றால் அது மிகப் பெரிய பொய். அவருடைய பிரிட்டிஷ் உச்சரிப்புக் கலந்த ஆங்கிலத்தை மிகுந்தச் சிரத்தையுடன் கவனித்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.
‘மிஸ் ஜனனி, உங்கள் கல்வித் தகுதிக்கும், முன் அனுபவத்திற்கும், இந்த வேலை உங்களுக்குப் பொருந்தாதுதான்…” மனம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. குறைவான சம்பளமாக இருந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது ஒரு வேலை கிடைத்திருக்கிறது என்ற செய்தியோடு போனால்தான் கெத்தாக இருக்கும், இல்லையென்றால் சூரியாகூட மதிக்கமாட்டான்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக வேலை தேடி அலுத்துவிட்டது. சொந்தத் தொழில் தொடங்கலாம் என்ற மனநிலைக்கு வந்தபோதுதான், இந்த வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்திருந்தது. கிளம்புவதற்கு முன், அம்மா பூஜை அறையிலிருந்து பழனிமலை முருகனின் திருநீற்றை நெற்றியில் பூசினார். சூரியா வாசல்வரை வந்து வழியனுப்பினான்.
தொடர்ந்து திரு டாம் அலிஸ்டர் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தோடு ஒப்பனை கலையாத புன்னகையால் அவரைப் பார்த்தேன்.
“ஆறு மாதங்களுக்குப் பிறகு உங்கள் தகுதிக்கு ஏற்ற பொறுப்பு உருவாகும், அப்போது, கட்டாயமாக உங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். உங்களுக்குச் சம்மதமென்றால் நான் உடனே மனிதவளக் குழுவினரிடம் உங்களைப் பரிந்துரைக்கிறேன்” குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யத் தயாரா என்பதை இதைவிட நாகரீகமாகக் கேட்டுவிட முடியுமா என்ன? யோசித்துக் கூறுவதாகக் சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றேன்.
நீண்ட காத்திருப்பின் இறுதியில் ஒரு துளி ஒளி என் மீது படர்வதை உணர்ந்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தொழில் முனைவராக வேண்டும் என்ற என் இலட்சியக் கனவு இதனால் சிதைந்துவிடுமே என்று மறுபக்கம் கலவரமாக இருந்தது. மின்தூக்கி ஒவ்வோரு தளங்களாக இறங்கும்போது எனது நாட்குறிப்பில் கத் போன பக்கங்கள் மீண்டும் என்னைக் கடந்து போயின.
பலவருடங்களாக நான் வேலை செய்த நிறுவனம் சூழ்நிலை காரணமாகச் சிங்கப்பூர்க் கிளையை ‘நட்டம்’ என்ற கதவுகளால் நிரந்தமாக மூடியது. செய்தி அறிந்ததும் முதலில் அதிர்ந்தேன். இருந்தாலும் ஒரு தொழில் முனைவராக வேண்டுமென்ற எண்ணம் வெகுநாட்களாகவே எனது மனதை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இந்த வேலை பறிபோனதை எனது கனவுகளைக் கண்டடையும் கதவுகளாக பின்னர் ஏற்றுக்கொண்டேன்.
சிறிதும் தாமதிக்காமல், இணையம் வழி சுயதொழில் ஆரம்பிக்கலாம் என்றெண்ணி, அம்மாவின் எச்சரிக்கையையும் மீறிச் செயல்பட்டது நினைவுக்கு வந்தது. முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் ‘பெண்கள் பக்கம்’ என்ற பெயரில் உடல் பருமனான பெண்கள், கட்டையான பெண்கள், நெட்டையான பெண்கள் என்று பெண்களுக்கென வகைவகையான பிரத்தியேக ஆடைகளை வடிவமைப்பது, இணையம் வழி வாடிக்கையாளர்களிடம் ஆடை ரகங்களைக் காண்பிப்பது, ஆர்டர் எடுத்து, தமிழ்நாட்டிலிருக்கும் எனது ஆடை வடிவமைப்பாளரிடம் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்கலாம் என்ற நோக்கத்துடன் மின் வியாபாரம் ஒன்றைத் தொடங்கினேன்.
ஆரம்பத்தில் வாடிக்கையாளர் கிடைப்பது கடினமாக இருந்தது. அதைவிடக் கடினம் அவர்களைத் திருப்திப் மலிவு விலையில் விரைவான சேவையை வழங்கும் குத்திரம் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த இதையெல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு எப்படியாவது என்னை மீண்டும் வேலைக்குப் போகவைப்பதில் அம்மா மும்முரமாக ஈடுபட்டாள்.
‘வியாபாரம்கிறது ஒரு கடல்போல, சின்ன மீனைப் பெரிய மீனு தின்கிற கதையாத்தான் முடியும்! எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சுச் செய்” துடைப்பத்தோடு கூடத்துக்கு வந்த அம்மா அன்றும் வழக்கம்போல தன் பல்லவியை ஆரம்பித்தாள். சூரியா எங்களை எங்களை எட்டிப்பார்த்துவிட்டு, எங்கள் உரையாடலைப்பற்றி சட்டை செய்யாமல் மீண்டும் அறைக்குள் சென்றான். அம்மா வீட்டைப் பெருக்கிக்கொண்டே தொடர்ந்தாள்.
“என்னைக் கேட்டேன்னா, பேசாம் வேலைக்குப் போறதுதான் நல்லது. வியாபாரம்னா அப்படி இப்படின்னு இருக்கும், உன்னோட கைக்காசைக்கூட இழக்க நேரலாம், ஜாக்கிரதை!” துடைப்பத்தைக் கதவுக்குப் பின்னால் வைத்துவிட்டு, குப்பையைப் பையில் கொட்டி, கட்டி ஓரமாக வைத்தாள்.
“வேலைன்னா மட்டும் நிரந்தரமா? இப்போ என்னாச்சு? கம்பெனியை இழுத்து மூடிட்டாங்கதானே? இதே சொந்தத் தொழில்னா யாரும் நம்மை வெட்டிவிட முடியாது, தெரியுமா?” எனது கையை உயர்த்தி ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் கத்திரியால் வெட்டுவதுபோல விரித்து என்னைத் மூடினேன். என்னை தீர்க்கமாகப் பார்த்துவிட்டுச் சமையலறைக்குள் பானைகளை உருட்டச் சென்றுவிட்டார் அம்மா.
சுழலும் பூமியில் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவத்தை அம்மா ஒருநாள் புரிந்துகொள்வார் என்றெண்ணி மின் வியாபாரத்தில் தீவிரமானேன். ஏதோ முக்கி முனகிக் கையளவு வாடிக்கையாளர்களை வைத்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தபோதுதான் சென்னை வெள்ளத்தால் எனது ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு, இருந்த ஓரிரு வாடிக்கையாளர்களையும் இழக்க நேர்ந்தது. சென்னை வெள்ளப் பேரிடர் சென்னையில் வசிப்போருக்கு மட்டுமல்லாமல் என்னைப்போன்ற அயல்நாட்டில், சென்னையைச் சார்ந்து தொழில் புரிவோரையும் சேர்த்தே அடித்துச் சென்றது. தொழில் முனைவராக வரவேண்டும் என்ற என் எண்ணமும் அப்போது நீரில் மூழ்கியது.
மீண்டும் வேலை தேடும் படலம். பல நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்று வந்தேன். ஒன்றும் தேறவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருந்த சமயம், இன்னும் சில ஆண்டுகளில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயரும் என்ற ஆய்வுகளின் புள்ளிவிவரங்களை அடிக்கடி நாளிதழ்களில் படிக்க நேர்ந்தது. அப்படியானால் வருங்காலத்தில் அதிகமான பணிப்பெண்களின் சேவை தேவையாயிருக்கும், பேசாமல் பணிப்பெண் முகவராகிவிடலாம் என்று அடுத்த திட்டம் தீட்டினேன்.
அக்கம் பக்கம் விசாரித்ததில் பணிப்பெண் முகவராவது அவ்வளவு சுலபமில்லை என்று அறிந்தேன். அதற்கு முதலில் பயிற்சி பெறவேண்டும், தேர்வு எழுதவேண்டும், மற்றும் அந்தத் தேர்வில் தேறுவது மிகக் கடினம் என்ற அச்சுறுத்தல்கள் என்னை யோசிக்க வைத்தன. அனைத்திற்கும் மேல் கணிசமான தொகை வேண்டும், என்னிடமோ கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்து கஜானா காலியாகிக்கொண்டிருந்தது. நினைக்கையில் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. வேலை செய்யும் காலத்தில் ஒரு நாளாவது பணத்தைப்பற்றிக் கவலைப்பட்டிருப்பேனா? கணக்கு வழக்குப் பார்க்காமல் நண்பர்களுடன் கும்மியடித்தேன். இப்போது வாடகை வண்டி எடுக்க வேண்டுமென்றாலும் பலமுறை யோசித்து, இறுதியில் பேருந்தில்தான் சென்று வருகிறேன்.
எப்படியாவது தொழில் முனைவராகிவிடுவது என்ற நோக்கில் பயன்படுத்தாமல் இருந்த சில நகைகளை அடகு வைத்துப் பணம் புரட்டிப் படிக்க ஆரம்பித்தேன். அல்லும் பாலும் படித்து, சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் சட்டதிட்டங்களையும், அதை மீறுவோருக்கான அபராதத் தொகை, தண்டனைக் காலம் எனப் பல்வேறு கூறுகளையும் மனனம் செய்வதற்குள் இளநரை வர ஆரம்பித்துவிட்டது.
“இதையெல்லாம் படிச்சு வக்கீலாகவா ஆகப்போறே? பேசாமல் நீ படிச்ச படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ளேன் அம்மா” நான் படும் சிரமத்தைப் பார்த்து அப்பாகூட எனக்காக அனுதாபப்பட்டார்.
“அப்பா, நம்ம அரசாங்க ஆய்வுகளெல்லாம் என்ன தெரியுமா சொல்லுது? நம்ம சிங்கப்பூர்ல குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வருவதால் இனி வரப்போகும் ஆண்டுகளில் மூத்த தலைமுறையினருடைய எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகுமாம். அப்போது அவங்களைக் கவனிச்சுக்கிறதுக்கு இளைய தலைமுறையினருக்கு நேரம் இருக்காதாம். அப்படின்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டு நிறுத்தினேன்.
“என்ன அர்த்தம்? நீங்களெல்லாம் பணம், பணம்னு பிணம் மாதிரிக் கிடக்காம், சீக்கிரமாக் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டிகளைப் பெத்துக்கோங்கன்னு அர்த்தம்!” காய்ந்த துணிகளை மடித்துக்கொண்டே அம்மா கூறினார். அதை ஆமோதிப்பதுபோல அப்பாவும் தலையசைத்தார்.
“ஐயோ அம்மா! வருங்காலத்தில் நல்ல தேர்ச்சிபெற்ற பணிப்பெண்களின் சேவை இந்த நாட்டுக்குத் தேவைன்னு அர்த்தம். என்னோட கனவு என்ன தெரியுமா? பணிப்பெண்களுக்கான பயிற்சி மையம் துவங்குவது. இப்போதிலிருந்தே அவங்களுக்குத் தக்க பயிற்சி கொடுத்தால் வருங்கால இளைய மற்றும் மூத்த தலைமுறையினருடைய பிரச்சனைகளுக்குத் தீர்வா இருக்கும் இல்லையா?” எனது இலட்சியத்தை அடையும் வழிகளைப்பற்றி அப்பாவுக்கு விளக்கினேன். மறுநாள் தொழில் தொடங்குவதற்கான வேலைகளைத் திட்டமிடுவதற்காகக் கிளம்பிக் கொண்டிருக்கையில்தான் இந்த நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. அம்மாதான் அதிகமாக மகிழ்ந்தாள்.
“நேத்திக்கு நீ கனவு, கசமுசான்னு சொல்லும்போதே வயித்துல புளியைக் கரைச்சு ஊத்தினதுபோல இருந்திச்சு. ராத்திரி தூங்கும்போது உனக்கு வேலை கிடைச்சா பத்துமலை முருகன் கோயிலுக்கு வரதா வேண்டிக்கிட்டேன். முருகன் என்னைக் கைவிடல” பூஜையறையை நோக்கிக் கும்பிட்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டாள். எனக்குத்தான் தெளிந்த நீரோடையில் இது என்ன புதிய நீர்க் குமிளிகள் என்று சிறிது கலக்கமாக இருந்தது. எதற்கும் போய்த்தான் பார்ப்போமே என்று இருமனதாகத்தான் வந்திருந்தேன். வேலையைவிட என்னைப் பேட்டி எடுத்த அதிகாரி திரு டாம் அலிஸ்டரைத்தான் அதிகமாகப் பிடித்திருந்தது. அவருடைய நீலநிறக் கண்களையும், மொட்டு ரோசா இதழ்களையும் நினைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்.
வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் அம்மாவும், சூரியாவும் வேகமாகக் கூடத்திற்கு வந்து என்னை ஆவலோடு பார்த்தார்கள். நேர்முகத் தேர்வில் நடந்தவற்றைக் கேள்விப்பட்டதும் அம்மா உடனே அப்பாவுக்குக் கைத்தொலைபேசியின் வழியாகத் தகவல் கொடுக்கச் சென்றாள். குளித்துவிட்டு வரும்போது அம்மா அடுப்பங்கரையில் இரவு உணவு தயாரிக்கும் வேலையில் மும்முரமாக இருந்தாள்.
“அவனவன் வாடகை கட்ட முடியாமல் கடையை இழுத்து மூடிக்கிட்டு இருக்கான், இதுல இவங்க சுயமா தொழில் செய்யணுமா?” அம்மா சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி, கரண்டியால் வட்டம்போட்டுக்கொண்டே வார்த்தைகளால் என்னைச் சுட்டுக்கொண்டிருந்தாள்.
“அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம், ஒழுங்கா இந்த வேலையை ஒத்துக்கோ, ‘சி.பி.எப்’ (CPF) பணமாவது கிடைக்கும், கல்யாணத்திற்குப்பிறகு வீடு வாங்குறதுக்கு உதவியா இருக்கும்” அம்மா அம்மா தோசையைத் தோசையைத் திருப்பிப் போட்டுக்கொண்டே தொடர்ந்தாள். சூரியா என்னைப் பாவமாகப் பார்த்தான்.
பணிப்பெண் முகவராக வேண்டும் என்ற என் கனவுக்கு நேரமும், கடுமையான உழைப்பும்தான் முக்கியமான முதலீடுகள், பழையகாலத்து அம்மாவுக்கு இதை எப்படிப் புரியவைப்பது? இதற்குமேலும் அங்கே உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் சூரியாவுடன் கீழே வந்துவிட்டேன்.
விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக வரும் பலருக்கும் சூரியா மிகவும் பரிச்சயமானவன். அவனைப் பார்த்ததும் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் வேகமாக ஓடி வந்தார்கள். சூரியாவை விளையாட விட்டுவிட்டுத் தெரிந்த முகங்கள் யாராவது தெரிகிறார்களா என்று வட்டமிட்டேன்.
குழந்தைகளின் விளையாட்டுச் சத்தமும், இதமான காற்றும் இறுக்கமான என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. விளையாட்டு மைதானத்தின் வலது பக்கம் பெரிய மரம் தன் கிளைகளை விரித்து பழுத்த இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது. இலைகள் காற்றில் கோலமிட்டு, தரையில் மெல்ல இறங்குவதைப் பார்க்க அழகாக இருந்தது. அந்த மரத்தின் கீழே நீண்ட பெஞ்ச் போடப்பட்டிருந்தது. அதில் பரணியின் தாத்தா உட்கார்ந்திருந்தார்.
“என்ன தாத்தா, இன்னைக்கு நீங்க வந்திருக்கீங்க, வைதேகி வரலையா?” அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டே மெல்லப் பேச்சை ஆரம்பித்தேன். வைதேகி என்பது பரணியைப் பார்த்துக்கொள்ளும் பணிப்பெண். அவள் சிங்கைக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்தன. அவளுக்குமுன் பரணியின் பெற்றோர்கள் நான்கு பணிப்பெண்களை மாற்றிவிட்டிருந்தனர் என்பது வேறொரு கதை.
“வாம்மா ஜனனி, ஒரே புளோக்ல இருக்கோம்னுதான் பேரு, ஆனா உன்னைப் பாக்கவே முடியல” முன் மேல்வரிசையில் இரண்டு பற்கள், கீழ்வரிசையில் மூன்று பற்கள் என்னை எட்டிப்பார்த்து மறைந்தன.
“என்ன தாத்தா, சாயந்திரம்னா நான் இங்கேதான் வருவேன். இல்லைன்னா வைதேகியைப்பற்றி எனக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்?” மீண்டும் வைதேகியைப் பற்றி அவருக்குச் சூசகமாக நினைவூட்டினேன்.
“வைதேகி கதை பெரிய கதைம்மா! அந்தப் பொண்ணோட புருசனுக்கு உடம்பு சரியில்லையாம் மா, உடனே கிளம்பணும்னு அழுதுச்சு. பாவம். போனால் போகட்டும்னு எம் மகன்தான் டிக்கெட் வாங்கி அனுப்பி வைச்சான், ம்…” பெருமூச்சோடு நிறுத்தினார் தாத்தா.
இது எதிர்பார்த்ததுதான். வைதேகியாவது ஆறு மாதங்கள் தாக்குப்பிடித்தாள். ஆனால் இதற்குமுன் வந்த பெண்கள் இரண்டு அல்லது மூன்றே மாதங்களில் மூட்டை முடிச்சுக்களோடு வேறு வீட்டிற்கு மாற்றப்பட்டனர். பரணியின் அம்மாவின் பிக்கல்பிடுங்கல் தாங்காமல் வந்த பெண்களெல்லாம் ஓட்டம் பிடித்தனர். போனமுறை சந்தித்தபோது அமைதியான வைதேகிகூடக் கொதித்துப் பேசினாள்.
“மெய்ட்னா என்ன மெஷினா, நாங்களும் மனுஷங்கதானே? ராத்திரியெல்லாம் பாப்பாவுக்கு டைமுக்கு முழிச்சுப் பால் கொடுக்கணும். மத்தியானத்துல பாப்பா தூங்கும் நேரம் கொஞ்சம் அசதியில தூங்கிட்டேன், கேமராவுல பாத்துட்டு செமையாத் திட்டிட்டாங்க. முடியாதுக்கா, இவங்ககிட்டே பேர் போடுறது கஷ்டம்…” படபடப்பாகப் பேசி நிறுத்தியபோது அவள் கண்கள் கலங்கியிருந்தன.
“சார் கிட்டே பேசவேண்டியதுதானே?” பணிப் பெண்களுக்குப் போதிய ஓய்வும், வாரத்திற்கு ஒருநாள் விடுப்பும் கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று சட்டம் கூறுகிறது. அப்படியிருந்தும் அதன் பின்விளைவுகள் தெரியாமல் பலரும் மேம்போக்குத் தனமாக இருப்பதை நினைக்கும்போது கடுப்பாக இருந்தது. பணிப்பெண் முசுவர்களை அனுப்பும் அதே தேர்வுக்கு இவர்களையும் அனுப்பினால் பாதிக் கிணறு தாண்டியதுபோலத்தான்! நான் பெற்ற ஞானம் பெறுக இவ்வையகம் என நினைக்கும்போதே, இதனை நடைமுறைப்படுத்தினால் முகவர் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்குக் கொண்டாட்டமா அல்லது திண்டாட்டமா எனும் வினாவும் எட்டிப்பார்த்தது.
“அதெல்லாம் வேணாம்கா, நீங்க நீங்க ஒரு மெய்ட் ஏஜென்சி ஆரம்பிச்சீங்கன்னா என்னை மறந்திறாதீங்கக்கா. இந்த நம்பருக்குப் போன் போடுங்க, நான் உடனே கிளம்பி வந்துடறேன்” அவள் இந்தியக் கைப்பேசி எண்களை என் கைகளில் திணித்தாள். அதன்பிறகு அவள் சென்றுவிட்டதை இப்போது தாத்தா கூறித்தான் தெரிந்துகொண்டேன்.
யோசித்துக்கொண்டிருக்கும்போதே நாய் குரைக்கும் சத்தம் அருகாமையில் கேட்டதும் நிமிர்ந்தேன். பகலை விழுங்கி இருள் பரவத் தொடங்கியிருந்தது. மைதானத்தில் பரணியும் இரண்டு சீனக் குழைந்தைகளும் மட்டும் மீதமிருந்தார்கள். ஆனால், சூரியாவைக் காணவில்லை. “சூரியா…” சத்தமாகக் கூப்பிட்டேன். சூரியா மரத்திற்குப் பின்னாலிருந்து ஓடி வந்தான். தன் இரண்டு முன்னங் கால்களையும் தூக்கி என் கால் சட்டையை இழுத்தான். அப்படிச் செய்தால் அவனைத் தூக்க வேண்டும் என்று அர்த்தம். உடனே அவனைத் தூக்கி “என்னடா” என்றேன். தன் நாவால் என் முகத்தை நக்கினான். தாத்தாவிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
மனம் கனத்துக் கிடந்தது. அம்மா எப்படியும் அப்பாவின் மூளையைச் சலவை செய்திருப்பாள். அவரும் இதுவரை அம்மாவை எதிர்த்துப் பேசியது கிடையாது. அப்பாவின் பொறுமையும், விட்டுக்கொடுத்துப் போகும் தன்மையும்தான் அவர்களுடைய திருமண வாழ்க்கையை வெள்ளி விழாவரை இட்டு வந்திருக்கிறது. கஷ்டப்பட்டுப் படித்ததெல்லாம் வீண் என்று நினைக்கும்போதே என்னையும் அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் குபுக்கென்று வெளிப்பட்டது. என் கையிலிருந்த சூரியா நிமிர்ந்து என்னைப் பார்த்தான். ஊ ஊ’ என்ற முனகலோடு என் கன்னத்தை நாவால் நக்கினான். அவனை மென்மையாக அணைத்துக்கொண்டேன்.
கதவைத் திறந்து உள்ளே நுழையும்போது அப்பா தோசையைப் பிட்டுக்கொண்டிருந்தார். சூரியா அவரைப் பார்த்ததும் தன் வாலை வாலை ஆட்டிக்கொண்டே அவரிடம் ஓடினான்.
“வாம்மா, வேலை கிடைச்சுடுச்சாமே?” தோசையை மென்றுகொண்டே கேட்டார். அம்மா சாம்பாரை அவரது தட்டில் ஊற்றினார்.
“ஆமாப்பா” எனது ஒற்றைப் பதிலால் சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. அப்பா தோசையைப் பிட்டு, தன்னருகில் வாலாட்டிக்கொண்டிருந்த சூரியாவிற்கு ஊட்டினார். உற்சாகத்தால் சூரியாவின் வால் இன்னும் வேகமாகக் காற்றில் சுழன்றது. தோசையை லாவகமாக வாங்கிக் கொண்டான். தனது சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக அப்பாவின் காலுக்கடியில் நல்லப்பிள்ளையாக உட்கார்ந்துகொண்டு தோசையை ருசித்து அசைபோட்டான்.
“ஏம்மா, மெய்ட் ஏஜென்சி ஆபீஸ் பாத்துவச்சிருக்கேன்னு சொன்னியே, நாளைக்கு அங்கே போவோமா? இடம் ஓகேன்னா உடனே முன்பணம் கொடுத்துடலாம்” சட்டென்று அப்பாவை நிமிர்ந்து பார்த்தேன். கரண்டியோடு முறைக்கும் அம்மாவின் பார்வையைத் தவிர்ப்பதற்காக அவரருகில் நல்லபிள்ளையாக உட்கார்ந்து கொண்டிருந்த சூரியாவின் தலையைக் கோதிவிட்டார்.
“தேங்க்ஸ் அப்பா” அப்பாவைக் ஓடிச்சென்று கட்டிப்பிடித்தேன். முதல் முறையாக அம்மாவை எதிர்த்து எனக்காக ஒரு முடிவு எடுத்திருக்கும் அப்பா ஒரு ஹீரோவாக என் கண்களுக்குக் காட்சியளித்தார். சூரியா ‘லொள், லொள்’ என்று குரைத்துக்கொண்டே என்னையும் அப்பாவையும் சுற்றிச் சுற்றி வந்தான்.
– நீர்த் திவலைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2017, ஆர்யா கிரியேஷன், சிங்கப்பூர்.