காதலென்பது எதுவரை?
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 5,501
யாராலும் பதில் சொல்ல முடியாத விடைக்கு அம்மாசியின் பதில் தயாராக இருந்தது,
“இன்னா ராஜ், இன்னுமா நீ அனிதாவ நெனிச்சு பொலம்பறே? காதல் எல்லாம் கலியாணம் வரைன்னு நென்ச்சுகிணு இப்போ குழந்தையும் பாத்தாச்சு. அப்பங்காரன் பிளேன் விபத்துல பூட்டான். இது ரெண்டும் இப்போ ஆங்! அநாதைங்கதான். நீ போய் அநாதை இல்லம் நடத்தி பட்டம் பதவிசு வாங்கப் போறியாக்கும்? கண்றாவி! கஸ்மாலம்! எங்கே போய்ப் புச்சியோ தெரில! வுட்டு கடாசு பாக்கலாம்.”
அனிதா அவ்வப்போது கை நழுவி, கை கழுவி விட்டபோதெல்லாம் அம்மாசியின் சகல மாலை மரியாதைகளையும் ஏற்றுக் கொண்ட ராஜுக்கு இந்த கஸ்மாலம் பெரிசாப் படல!
இன்னிக்கா நேத்திக்கா, இது தொடரி சினிமாப்படம் மாதிரி, ரயில் ஊளையிட்டுக் கொண்டு ஓடிக் கொண்டே இருந்தது. “அடடா.. இது என்ன … இது என்ன…எனக்கொன்றும்…புரியலியே…” என்று பாடிக் கொண்டு.
ராஜிற்கு, அவ்வப் போது ரெட் டேக்ஸியிலும், அவ்வப் போது அனிதாவின் அருகாமையிலுமாக வசந்தங்கள் மாறி மாறி வந்தன. போகும்போது பாதி முடிந்த படம் போலவும் ‘ரீல் அறுந்து போச்சு’ கணக்கில், சுழன்றுகொண்டும் கழன்று கொண்டும் போயின. இதற்கும் ஒரு முடிவே கிடையாதா? என்று அவன் மனத்திரையில் ஒளிர்ந்தாலும், தற்கால “ஜியோ” சிக்னல் மாதிரி அடிக்கடி காணாமல்தான் போனாள் அனிதா!
இன்று மீண்டும் போனில் ராஜிடம் அபயக் குரலில் கெஞ்சினாள், ”ராஜ்! கடைசியில், நீதான் என் ரட்சகன்! எப்போது வழிதவறி எங்கே போனாலும் நான் உன்னிடம்தானே திரும்பி வருகிறேன்! இந்தத் தடவையும் நீ என்னைக் காப்பாற்றுவாயா?
இந்தக் குழந்தை உன்னிடம் இருந்தால்தான் அவளுக்குப் பாதுகாப்பான நல்ல வாழ்க்கை கிடைக்கும். நீ அவளைச் சீரழிய விட மாட்டாய்.
“அனிதா! நெசம்மாவே நீ என்னைத்தான் மனசாரக் காதலிக்கிறாயா?” ராஜ் தன் மனதில் எப்போதும் சுற்றிக் கொண்டிருந்த , “கோன் பனேகா கரோட்பதி” கடைசிக் கேள்வி மாதிரி, அவளைக் கேட்டே விட்டான்.
வழக்கம்போல அவள் ஆழ்ந்த மௌனத்தில் புரண்டு, விசும்பலில் தான் பதிலாக வந்தது!
“பெண்கள் தங்கள் காதலை எந்தக் கணத்திலும், சொந்தக் காதலனிடம் கூட வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்களோ?”
“இன்னாடா! இப்டி லூசு மாதிரி கீற? கயட்டி வுடு! வாணாம்! வேற தேவதிய நான் புச்சுத் தர்ரேன்.”
ராஜ் அவனைப் பார்த்த பார்வையில் அம்மாசிக்குப் புரிந்து விட்டது.
“த்தா! இந்த ஜன்மத்தில உண்ணிய யாராலும் திருத்த முடியாதுடா ப்ரோ!”
அம்மாசிக்கு ரொம்பக் கோபம் வந்து விட்டது!
ஸரிடா! நீ இன்னா வாணாலும் பண்ணு! நா டப்பாங்கூத்து ஆடிக்கினு இங்க இனி வரமாட்டேண்டா! ஸாரி! வரமாட்டேண்டா ஸார்!
கண்ணைத் துடைத்துக் கொண்டு அம்மாசி வெளியேறவும், ஒரு டாக்ஸி வந்து நிற்கவும் சரியாக இருந்தது!
பின் கதவின் திறப்பில், அனிதா! –
இன்னும் பழைய மாதிரியே அழகாக மின்னுகிறாளே! (மனசில் நினைத்தான் ராஜ்)
அவள் கைகளில் ஒரு அழகான பேபியும்! குழந்தை அவனை அழகாக வெறித்தது!
“என்ன பேரு வச்சிருக்க?”- பாசம் பொங்கியது ராஜிற்கு.
“குமுதா”
ஏன்ன? ராஜ் மனசில் பூகம்பம்… ஆதங்கம்… அங்கலாய்ப்பு எல்லாம் – ஒரே சமயத்தில்!
“எங்கம்மா பேரை எதுக்கு வச்ச?”
“உங்களை விட உங்கம்மாவை எனக்குப் பிடிக்கும்…” அனிதா திருவாய் மலர்ந்தாள்.
“நானே அவளை முழுசா பாத்ததில்ல! நீ எப்டி?…” தடுமாறினான் ராஜ்.
“ஸிம்பிள்! ராஜ் னு உருவான ஒரு நல்ல பையன்-அவனுடைய புண்ணியவதி அம்மா குமுதா!”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“இருக்குதே!”
“என் குழந்தையை – அதாவது இப்போ நம்ம குழந்தையை, உங்க அம்மாவைப் பார்த்துக் கொள்வது மாதிரி, நீங்கள் மட்டும்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். குமுதா ஒரு நல்ல பெண்ணாக, வளர்ந்து ஆளாக வேண்டும் அல்லவா?”
“அப்போ நீ?”
ராஜ் கேள்வியை முடிக்கும் முன்…
வெளியில் ரசிகர்களின் ஆரவாரம் கேட்டது!
பட்டாசு சத்தம்! தீபாவளிக்கு மட்டும்தான் வெடிக்கக் கூடாது என்பது சட்டமாம்!
“அக்கா அனிதா! வாழ்க!” என்று.
அவர்களின் பின்னால் கல்வி அமைச்சர், தொண்டர்கள், குண்டர்கள் புடைசூழ, பெரிய மாலையுடன் ஓடி வந்து கொண்டிருந்தார்.
ராஜ் பேனர்களைப் பார்த்தான்.
படித்ததில் அவன் இரசித்துப் படித்தது:
“அக்கா அனிதா! அகில இந்திய இளம் தலைவி!“
“இன்றைய தேவை! அக்கா அனிதாவின் தலைமை!”
“தமிழகத்தின் விடி வெள்ளி அக்கா அனிதா!”
“ந.மு.க வின் நல்லதங்காள் அக்கா அனிதா வாழ்க வாழ்க!….” கூச்சல் விண்ணைப் பிளந்தது.
“டேய்! அம்மாசி! திரும்பி வாடா! கதை வேற மாதிரி போகுது!”
“தமிழகத்தில் இன்னும் ஓரு அக்கா உருவாகவில்லை போலும்!” என்று நினைத்துக் கொண்டான் ராஜ்.