வல்லவனுக்கு வல்லவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு கெழவி இருந்தா. அவளுக்கு ஒரே ஒரு மகன். அந்தக் கெழவி, அவனுக்குப் பிட்டு அவுச்சுத் தருவாளாம். அதத் திண்டுபிட்டுப் போயி, ஒரு ஆனய வாலப் புடுச்சு சுத்தி ஏறிவானாம். 

இப்டியே தெனமும் செஞ்சு வரயில, ஒருநா, கெழவி புட்டு அவிக்கிறா, அவிச்சுக்கிட்டிருக்கும்போது, வீ தில வெளையாடிக்கிட்டிருந்த பிள்ள ஒண்ணு, கெழவி கிட்டப் போயிருக்கு. போகவும், அந்தக் கெழவி கொஞ்சம் பிட்ட அள்ளிக் குடுத்தாளாம். அள்ளிக் குடுக்கவும், பிட்டுல கொஞ்சூண்டு கொறஞ்சு போச்சு. 

வழக்கம் போல வந்தா. பிட்ட எடுத்து முன்னால வச்சா, திண்டுட்டு, ஆனயப் புடிக்கப் போனா. போயி, ஆன வாலப் புடிக்கவும், ஆன இவன இழுத்துப் போட்டுட்டு போயிருச்சு. நேரா வீட்டுக்கு வந்து, கெழவி கிட்டச் சொன்னா. 

இண்ணக்கி ஆன, என்னய இழுத்துப் போட்டுட்டுப் போயிருச்சுண்டு சொல்றா. சொல்லவும்; அதுனால என்னா மகனே! வல்லவனுக்கு வல்லவன் வையோகத்துல இருப்பா! அவ் வந்து, நீ புடிக்க முடியாத ஆனய, அவ புடிப்பாண்டு சொன்னா. 

வல்லவனுக்கு வல்லவன் வையகத்துல இருக்கானா? அப்ப அவனப் போயி, நா பாக்கணும். எனக்குக் கட்டுச்சோறு கட்டிக்குடுண்டு கேக்குறா. கேக்கவும், அவளுங் கட்டிக் குடுத்திட்டா. கொண்டுகிட்டுப் போறா. போகயில, அங்கிட்டு ஒருத்த, ரெண்டு ஆனைகள ஏர்ல கட்டி உழுதுகிட்டிருக்கா. 

நேரா அவங்கிட்டப் போயி, குடிக்கத் தண்ணி வேணும்ண்டு கேக்குறா. அவ் உழுகுறத நிறுத்தாம, அங்க கொடத்துல தண்ணிஇருக்கு, எடுத்துக் குடிண்டு சொல்லிட்டு, அவ் பாட்டுக்கு உழுகுறா. 

வந்து, கொடத்தப் பாத்தா. கொடத்ல தண்ணி இருக்கு, ஆனா கொடத்து மேல ஒரு கல்லெடுத்து வச்சிருக்கர். அந்தக் கல்லத் தூக்கித் தூக்கிப் பாக்குறா. தூக்க முடியல. உழுதுகிட்டு இருந்தவனக் கூப்பிட்டா. அவ உழுகுறத விட்டுட்டு வந்து, கொடத்த மூடியிருந்த கல்ல, லேசா தாருக்கம்புல தள்ளினா. கல்லு கீழ விழுந்திருச்சு. தண்ணிய நல்லாக் குடிச்சா. 

குடிச்ச பெறகு, எங்க போறண்டு கேட்டா. யாரு? உழுகுறவ். வல்லவனுக்கு – வல்லவனப் பாக்கப் போறேண்டு சொன்னா. 

சொல்லவும், எங்ஙம்மா தெனமும் பிட்டு அவுச்சுத் தருவா, அதத் திண்டுபிட்டுப் போயி, ஆனய வாலப் புடுச்சு சுத்தி எருஞ்சுட்டு வருவே. 

ஒருநா, அப்டித்தா – பிட்டத் திண்டுபிட்டு, ஆனயப் பிடிக்கப் போனே. போயிப் புடிக்கவும், ஆன என்னய இழுத்துப் போட்டுட்டுப் போயிருச்சு. அதப் போயி, எங்ஙம்மா கிட்டச் சொன்னே. அதுக்கு வல்லவனுக்கு – வல்லவன் வையோகத்துல இருப்பாண்டு எங்ஙம்மா சொன்னா. 

அதா – நானு வல்லவனத் தேடிப் போயிக்கிட்டிருக்கேண்டு சொல்றா. சொல்லவும், நானும் அப்டித்தா எம் பொண்டாட்டியோட வாழ்ந்துக்கிட்டிருந்தே. ஒரு ரிசி வந்து, எம் பொண்டாட்டியத் தூக்கிக்கிட்டுப் போயிட்டா. அவங்கிட்டயிருந்து மீட்ட முடியல. அந்த வருத்தத்துலதா, எம்பாட்டுக்கு தனியா உழுதுகிட்டிருக்கேண்டு அவ் சொன்னா. 

சொல்லவும், அப்ப, வா போவோம். ஒம் பொண்டாட்டிய நா மீட்டித் தரேண்டு சொல்றா. சொல்லவும், ஏர நிறுத்திட்டு, ரெண்டுபேரும் போறீங்க. போகயில, அந்த ரிசி, ரெண்டுபேரும் போறாங்க. போகயில, அந்த ரிசி, மல மேல உச்சில ஒக்காந்திருக்கு. இவங்க வர்றதப் பாத்திட்டு, ஆங்காத்து வீ சுது – பொங்காத்து வீசுதுண்டு வெரட்டி வருது. இவங்க தல வீ தெறிக்க திரும்பி ஓடி வாராங்க. 

ஓடிவர வரத்துல, காட்டுல நிண்டுகிட்டிருந்த ஆனைகளயுந் தூக்கி, இந்தக் கக்கத்துல ஒண்ண, இந்தக் கக்கத்துல ஒண்ண இடுக்கிக்கிட்டு, ஓடி வராங்க. அப்டி ஓடி வரயில, ஒரு பொம்பள, வட்டப் பாறையில, நெல்ல அவுச்சுக் காயப் போட்டுக்கிட்டிருக்கா. 

இவங்க ஓடி வரதப் பாத்திட்டு, என்னாங்கடா இப்டி ஓடி வாரங்கண்டு கேக்குறா. கேக்கவும், ஒரு ரிசி, எங்கள வெரட்டி வருதுண்டு சொல்றாங்க. திரும்பிப் பாத்தாளோ இல்லையோ! நெல்லு, நெல் அவுச்ச பான, இதுகளச் சுருட்டித் தூக்கிக்கிட்டு இவங்களோட ஓடுறா. 

மூணுபேரும் ஓடுறாங்க. ஓடயில, அங்கிட்டு, ஒரு பொம்பள நிண்டுகிட்டு, என்னாப்பா இப்டி ஓடியாறங்கண்டு கேக்குறா. 

கேக்கவும், ரிசி எங்கள வெரட்டி வருதுண்டு சொன்னாங்க. சொல்லவும், இவங்க மூணு பேரு, ரெண்டு ஆன, பூராத்தயும் தூக்கி மாராப்புக்குள்ள வச்சுக்கிட்டு நிண்டுகிட்டா. 

ரிசி பக்கத்துல வந்து, இங்க ஓடியாந்த பயகள எங்கண்டு கேக்குது. கேட்டுக்கிட்டிருக்கயில, ஒரு மூக்க அடச்சுக்கிட்டு, ஒரு மூக்குல மூச்ச இ…ழு…த்து விட்டா. அந்தக் காத்துல, ரிசி 

பறந்துபோயி சத்தா சமுத்திரத்துக்கு அங்கிட்டுப் போயிவிழுந்துச்சாம். 

பெறகு, மாராப்ப அவுத்து விட்டா. அவுத்து விடவும், ஆனக்கார் ஆனயப் புடுச்சுக்கிட்டுப் போனானாம். நெல்லுக்காரி நெல்ல அள்ளிக்கிட்டுப் போனாளாம், இவ் வீட்டுக்குப் போனானாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *