குங்குமச் சிமிழ்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 25, 2026
பார்வையிட்டோர்: 79 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா, மாமி குங்குமச் சிமிழ் எங்கே?”

“என்னைக் கேட்டால்? எல்லாம் அங்கேதான் அல மாரி, கிலமாரியிலே இருக்கும், பாரு…..” 

“பார்த்தேனம்மா; காணவில்லையே!” என்று தொடர்ந்து சொன்னாள் பெண். 

“காணாவிட்டால், போ! என்னால் கைவேலையை விட்டு விட்டு எழுந்து வந்து இப்போது தேடி எடுத்துக் தர முடியாது…” 

“நீ பார்த்தாயா, அப்பா, மாமியின் குங்குமச் சிமிழை?” 

“என் அலமாரியில்தான் இருக்கிறது; எடுத்துத் தருகிறேன்” என்று ராமநாதன் எழுந்து உள்ளே சென்றான். 

அது ஒரு சர்வ சாதாரணமான வெள்ளிக் குங்குமச் சிமிழ்; மிகுந்த வேலைப்பாடு ஒன்றும் இல்லை. ஆனாலும் ராமநாதனுக்கு அதைத் தொட்டு எடுத்தபோது, ஸப்த ஸ்வரங்களையும் ஒரே க்ஷணத்தில் மீட்டினால் அவற்றின் சம்மேளனத்தில் உண்டாகும் ஒலிபோல, பல்வேறு உணர்ச்சிகள் உண்டாயின; இதற்கு முன்புகூட, எத்தனையோ தடவை அவன் அதை எடுத்திருக்கிறான். ஒவ்வொரு தடவையும் அதே மாதிரி பழைய எண்ண அலைகளும் அவற்றில் பிறந்த உணர்ச்சிச் சுழல்களும் கொந்தளிப்புகளும் ஏற்படத்தான் ஏற்பட்டன. 

அதை வாங்கிக்கொண்டே அவனுடைய பெண் ஹேமா, “அப்பா, இதை அம்மாவுக்குக் கொடுத்த மாமி ஏன் ஒரு தடவைகூட நம் வீட்டிற்கு வரவில்லை?” என்று கேட்டாள். 

“வருவாள் அம்மா!” என்று சொல்லி, ஒருபெருமூச்சு விட்டான். 

ஹேமா அதை வாங்கிக்கொண்டு உள்ளே ஓடினாள். 

வீட்டில் எல்லாருக்கும் அது ஒரு சாதாரணக் குங்கு மச் ழாகத்தான் தோற்றம் அளித்தது. ஆனால் ராம நாதனுக்கு அப்படித் தோன் றவில்லை; அது ஓர் அசேதன மான வஸ்து என்றே இலக்கணம் வரம்பு கட்டியிருந்தும், அது வாய் விட்டுச் சொல்லாமல் சொல்லும் கதை, அவனு டைய காதில் கேட்காமலா போய்விட்டது? சகுந்தலாவே அந்தத் தோற்றம் எடுத்து வந்து அவனுடைய நடத்தை யைக் கவனித்து வருவதுபோலத் தோன்றவில்லையா? அது வெறும் மாயத் தோற்றம், மனப் பிராந்தி என்றெல் லாம் சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாதபடி, சகுந் தலாவின் கண்களின் விளிம்பிலே எல்லை கோலி நிற்கும் சோகக் கண்ணீர் அதில் பிரதிபலிக்க வில்லையா? 

எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டன! அவனுடைய பெண் ஹேமாவுக்கே வயது ஆறு ஆகப்போகிறதே? அதற்கும் இரண்டு வருஷங்களுக்கு முன். காலம் எத்த னையோ விஷயங்களை மறக்கடிக்கத்தான் செய்கிறது. என்றாலும் சிலர் விஷயத்தில் சிற்சில சம்பவங்களுக்கு முன், காலமும் முதுகிட்டு ஓடத்தான் ஓடுகிறது! 

2 

அப்போது ராமநாதன் எல். டி. பரீட்சையில் தேர்ச்சி பெற்றுச் சும்மா இருந்த சமயம். திடீரென்று ஒரு நாள் அவன் மாமா வீட்டிற்குள் நுழைந்தார். “மங் களம், உன் பிள்ளைக்கு எடுத்ததுமே அதிருஷ்டத்தைப் பார்! ஹெட்மாஸ்டர் வேலை ஆயிருக்கு!” என்றார். 

“ஆகக் கூடாதா, என்ன? ராமுவின் அதிருஷ்டம்னு தானா சொல்லணும்? ராஜத்தின் அதிருஷ்டம்னுதான் சொல்லேன்!” 

“அதெப்படி, அம்மா. கழுத்தில் ஒரு முடிச்சு விழுவ தற்குள் சொல்லிவிட முடியுமா?” 

“அதென்ன, அண்ணா, நடுவில் அப்படி ஒரு வார்த்தை யைத் தூக்கிப் போடுகிறாயே? அது கிடக்கட்டும்; எந்த ஊரிலே வேலை ஆயிருக்கிறது? அவன் ‘அப்ளிகேஷன்’ போட்டிருக்கான் என்கிற சமாசாரத்தையே என்னிடம் சொல்லவில்லையே!” 

“அவனுக்கே தெரியாது. நான்தான் பிரயத்தனம் செய்தேன். முதல் முதலில் ஆறுமாதத்துக்குக் கண்ணா குடி ஸ்கூலில் போட்டிருக்கிறார்கள்: ஊர்  சின்ன ஊர் தான்; பள்ளிக்கூடமும் சின்னதுதான்…” 

“ரொம்ப எட்டாக்கையாக இருக்கும்போல இருக்கே?” 

“அதெல்லாம் ஒன்றும் இல்லை; கண்ணாகுடிக்கு நாலு மைலுக்கு அப்பால் பஸ் போகிறது. இது ஆறு மாதத்துக்குத்தானே? பிறகு வேணுமானால் பக்கத்திலேயே மாற் றிக்கொள்ளலாம்” என்று அவர் தைரியம் சொன்னார். 

இவ்வளவும் காமிரா உள்ளில் படுத்துக்கொண் டிருந்த அவன் காதில் விழுந்துகொண்டுதான் இருந்தது. 

எல்.டி. யில் தேர்ந்தபோது அவன் கற்பனையில் உரு வாகியிருந்த ‘கோபுரம்’ வேறு: சிறு நகரத்துப் பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியனாகப் புகவேண்டும்; கற்பிக்கும் ஆற்றலினாலும், மாணவர்களிடத்துக் கொண்டுள்ள அன் பினாலும் ஓர் ஆதர்ச ஆசிரியனாக விளங்கவேண்டும்; படிப் படியாக ஏறித் தலைமை ஆசிரியர் பதவியில் ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரு ரைட்ஹானரபிள் சாஸ்திரி யாகவோ, அல்லது அவனுடைய ஹெட்மாஸ்டர் செல் லையா மாதிரியாகவோ பெரும் புகழுடன் விளங்கவேண் டும்; தன் காலத்தில் மாணவர் எண்ணிக்கை ஆயிரக்கணக் கில் பெருகவேண்டும் என்றெல்லாம் கோட்டைகள் கட்டி யிருந்த அவன் உள்ளத்தில் அந்தக் கிராமத்தின் பெயர் அதிக உற்சாகத்தைத் தரவில்லை. 

ஆனாலும் எடுத்த எடுப்பிலேயே தலைமை ஆசிரியர் பதவி வருகிறது என்று உள்ளத்தின் ஒரு மூலையில் உவகை இருக்கத்தான் இருந்தது. 

3 

கண்ணாகுடி அவன் எதிர்பார்த்தபடி கிராமந்தான்; பக்கத்து வட்டாரங்களில் உள்ள பத்துப் பதினைந்து கிராமத்துப் பையன்களும் பெண்களும் அந்தப் பள்ளிக் கூடத்துக்குத்தான் வந்து படித்தாக வேண்டும். 

பள்ளிக்கூடம் ஓட்டுக் கட்டிடம். பழைய காலத்துக் கெட்டிப் பலகைகளால் ஆன பெஞ்சுகளில் கிராம வாசனை வீசும்.மாணவர்களும் மாணவிகளும் உட்கார்ந்துகொண்டு, இருபத்துநான்கு மணி நேரமும் சூரியன் அஸ்தமிக்காது என்று கருதப்பட்ட ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் பாஷையை மனம் போனபடி உச்சரித்து, உரக்கப் படித் துக்கொண்டும், ஐம்பது மைலுக்கு அப்பால் இருக்கும் நகரத்தையே பார்க்கக்கூடாமல் இருக்க, ஐயாயிரம் மைல் களுக்கு அப்பால் உள்ள நாட்டார்களின் பழக்க வழக்கங் களைப் புத்தகங்களில் படித்து, மிகவும் புரிந்துகொண்ட வர்களைப்போலத் தலையை ஆட்டிக்கொண்டும் இருப்ப தைக் காண ராமநாதனுக்கு வேடிக்கையாக இருந்தது. இந்தக் குழந்தைகளையா அவன் மனம் கற்பனையில் இத்தனை காலம் போற்றி வந்தது என்பதை நினைக்கும் போது, அவன் உள்ளம் வெடித்துவிடும்போல் இருந்தது. 

மாணவர்கள் தாம் அப்படி என்றால், அவனுக்குக் கீழ் வேலைக்கு அமர்ந்திருந்த ஆசிரியர்களைப்பற்றியும் ஆசிரியைகளைப்பற்றியும் ஒன்றுமே சொல்லவேண்டிய தில்லை. முதலாவதாக அவன் வயதுக்குச் சகாவாக ஒரு வருமே அங்கு இல்லை; யாவரும் வயது ஆனவர்கள்; நெற்றி நிறைய விபூதியையோ திருநாமத்தையோ தரித்து, தினந்தோறும் தோய்த்து உலர்த்தின ‘நீர்க்காவி’ ஏறின வேஷ்டியையும், பித்தான் இல்லாத ஷர்ட்டையும் அணிந்து கொண்டு, ‘ஸேப்டி ரேசரி’ன் உபயோகத்தையே தெரிந்து கொள்ளாமல், தீக்ஷை வளர்த்துக்கொண்டு இருக்கிற ஆசிரியர்கள். வெள்ளை ரவிக்கையையும், மில் புடைவை யையும் அணிந்துகொண்டு, காலில் செருப்பு மாட்டிக் கொண்டுவிட்டதாலேயே ‘டீச்சர்’ கௌரவம் பெற்ற ஆசிரியைகள்-இவ்வளவும் சேர்ந்தால் அவனுடைய இள வேனில் கற்பனைகள் என்ன ஆகும்? எப்படி இந்த ஆறு மாதம் கழியப்போகிறது, என்றைக்கு இந்த உத்தியோகத் துக்கு ஒரு தலைமுழுக்குப் போட்டுவிட்டுப் போகப்போகிறோம்? என்றுதான் ராமநாதன் அங்கு வந்த இரண்டாம் நாளே எண்ணத் தொடங்கிவிட்டான். 

மூன்றாம் நாள் காலை, ஒரு வாரம் ரஜாவில் சென் றிருந்த பாட்டு வாத்தியாரம்மாள் வந்து சேர்ந்தாள். 

அவளேதான் ஆரம்பித்தாள். 

“நான்தான் ‘மியூஸிக் டீச்சர்’…” 

“உங்கள் பேர்தானே சகுந்தலா……?” 

இந்த இரண்டு வார்த்தைகள் பேசுவதற்குள் இருவ ருக்குமே ஏதோ வகை அறியாத ஒரு தவிப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. அவளுக்கு நல்ல பருவ வயது; நல்ல அழகு; அந்த அழகும் யௌவனமும் அவளுடைய பார்வை, பேச்சு, செயல் மூன்றிலும் ஊச லாடின. சென்ற மூன்று நாட்களாக அந்த ஊர், அந்தப் பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் யாவற்றையுமே வெறுத்து வந்த மனத்தில் சிறிது சலனம் ஏற்பட்டது. அவனுடைய சரி வயதான ஒரு பெண் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதே அவனுக்குச் சிறிது ஊக்கத்தை அளித்தது. 

அடுத்த சில நாட்களில், தினந்தோறும் மணி அடித்து, வகுப்புக்குப் போகுமுன் சகுந்தலா, ராமநாதனுடைய அறைக்கு வந்து, அவனைக் கண்டுகொண்டுதான் போவாள்; அதேபோல மாலை மணி அடித்ததும் அவனைப் பார்த்து விட்டே வீட்டிற்குச் செல்வாள். 

இந்த ஒரு க்ஷண சந்திப்பில் இருவரும் வாய்விட்டுப் பேசாவிட்டாலுங்கூட இரண்டு கண்ணிணைகளும் எவ்வ ளவோ பேசிக்கொண்டன. ஒன்றை ஒன்று பார்க்கத் தவிக்கும் ஆவல் இரண்டிலும் தென்பட்டன. 

ஒருநாள் அவனுக்கு என்ன தோன்றிற்றோ, “உங்கள் பாட்டு இன்று மிகவும் நன்றாக இருந்தது!” என்று சொல்லி வைத்தான். உண்மையில் அவளுடைய பாட்டை அன்று ராமநாதன் கேட்கவே இல்லை. 

“தாங்க்ஸ், ஸார்! நீங்கள் கேட்டுக்கொண்டே இருந் தீர்களா, என்ன?” என்று நாணத்தால் முகம் சிவக்க, ஆச்சரியம் பிரதிபலிக்கும் கண்களை ஒரு சிமிட்டுச் சிமிட் டிக்கொண்டே கேட்டுவிட்டுப் போனாள். அதற்குப் பிறகு. அவர்கள் அடிக்கடி பேசினார்கள். ஒரு ஹெட்மாஸ்டரிடம், ஒரு வாத்தியார் பேசச் சந்தர்ப்பம் இல்லாமலா போய் விடும்? பேச்சுக்கள் முதலில் லோகாபி ராமமாக ஆரம் பித்தாலும், முடியும்போது இருவருடைய சொந்த விவகாரங்களாகவே இருக்கும். 

திடீரென்று ஒரு நாள் ஒரு பொட்டலத்தை அவனு டைய மேஜையின்மீது வைத்து, ”இதை எடுத்துக்கொள் ளுங்கள்கள் ஸார்! வீட்டில் செய்தது!” என்றாள். 

ராமநாதன் மிகுந்த சங்கோசத்துடன், “இது எதற்கு?” என்றான். 

“நீங்கள் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்!” என்று ஒரே பிடிவாதத்துடன் வற்புறுத்தினாள். அதற்குள் ராமநாதனுடைய கைகள் அந்தப் பொட்டலத்தை அவிழ்த்தன.வாழை இலையில் சுடச்சுடப் பாதாம்ஹல் வா!’ குங்குமப்பூவின் மணம் வீசிற்று. அதை ருசித்துக் கொண்டே, “இத்தனை நாள் உங்கள் பாட்டுத்தான் இனிக்கும் என்று நினைத்தேன். உங்கள் ‘கையும்’ இனிக் கத்தான் இனிக்கிறது!” என்றான் ராமநாதன். 

சகுந்தலா. தட்டுத் தடுமாறிக்கொண்டு, “பாவம்! நீங்கள் உங்கள் வீட்டில் நாலும் செய்து சாப்பிட்டு வழக்கம் இருக்கும். இந்தக் காட்டில் உங்களுக்கு மிகவும் அசௌகரியமாகத்தான் இருக்கும்!” என்றாள். 

“அதைத்தான் வெகுவாக நீங்கள் குறைத்துவிட்டீர் களே!” என்றான். இருவருடைய கண்களும் காதல் பாஷை யில் மௌன ரகசியத்தைப் பேசிக்கொண் டிருந்தன. அன்றுதான் இருவரும் சிறிது மனம் விட்டுப் பேசினார்கள். சகுந்தலா, சிறு வயதிலேயே மஞ்சள் குங்குமத்தை இழந் தவள் என்றும், அவள் துணைக்கு ஓர் அத்தையை வீட்டில் வைத்துக்கொண்டு இருக்கிறாள் என்றும் ராமநா தன் தெரிந்துகொண்டான் ராமநாதனும் தன்னுடைய தகப்ப ர் இறந்த பிறகு எப்படி மாமாவின் பராமரிப்பில் இருந்து வந்தான் என்பதையும், அவனுக்காக வளர்ந்து வரும் கன்னி ராஜத்தைப்பற்றியும் சொல்லி வைத்தான். 

ராமநாதன் கண்ணாகுடிக்கு வந்து, நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நான்கு மாதங்களுக்குள் இருவ ருடைய உள்ளங்களும் எவ்வளவோ மாறுதல்களை அடைந்துவிட்டன. வந்த இடத்தில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு, தன் கொள்கையையே மறக்கும்படியான நிலைமை ஏற்படும் என்று அவன் நினைக்கவில்லை. அவ ளுக்கும் – ஆழ்ந்த குளத்து மேல்மட்டத்தில் காணப்படும். அமைதிபோல், நிச்சலமாக இருந்த உன்ளத்தில் -தன் அதிருஷ்டக்குறைவை ஈடுசெய்வதுபோல, குழந்தைகளின் நேசத்திலே மூழ்கி ஓரளவு இன்பம் கணட அவள் மனத்திலும் சிறு புரைசல் ஏற்பட்டது. இருவருடைய நட்பும் வரம்பு கடந்து போகாவிட்டாலும், அந்தச் சிறு காலத்துக்குள் இருவருடைய உள்ளத்துக்குள்ளும் ஆயிரம் ஆண்டுகளாகக் கூடிக் களிக்கும் காதலர்களுடைய மனப் பண்பும் மனமகிழ்ச்சியும் நிறைந்திருந்தன. ஒருவருடைய வெறும் கண்பார்வையே மற்றவருக்குக் காதல் முத்தம் இட்டதைப்போல மனத்தில் புளகிதத்தை உண்டாக் கிற்று. அவளுடைய குவிந்த வாயின் கடைக்கோணத்தில் ஒரு லேசான புன்சிரிப்புப் பூத்தது. ராமநாதனுக்கு அவளைத் தன் இரு கைகளிலும் ஆர்வம் பொங்க அணைத் துக்கொண்டதைப்போல மயிர்க்குச்சு எறிந்தது! 

ராமநாதனுக்கு நாட்கள் வெகு வேகமாக ஓடுவதாகத் தோன்றின. ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணி நேரத் துக்குப் பதிலாக, நாற்பத்தெட்டு மணியாக இருக்கக் கூடாதா என்று தவித்தான். ஆயிற்று; இன்னும் இரண்டு மாதங்கள் முடிந்து, ரஜாவில் சென்றிருக்கும் ‘ஹெட் மாஸ்டர்’ வந்துவிட்டால், தான் எங்கேயோ சகுந்தலா எங்கேயோ என்ற அச்சம் மனத்தை வெகுவாகக் கலக்கி யது. அதற்குள் சகுந்தலாவைத் தன் உடைமையாகச் செய்துகொண்டுவிட வேண்டும் என்றும் அவசரப்பட் டான். அவனுடைய புரட்சிகரமான திட்டத்துக்கு அவ னுடைய தாய் அநுமதி கொடுக்காவிட்டாலும் சகுந்த லாவை விட்டுப் பிரிவது என்பது சாத்தியப்படாத காரிய மென்றே நினைத்தான். 

ஆனால் இன்னும் ஒரு தடவைகூட அவன் வாய்விட்டு, ‘உன்னைக் காதலிக்கிறேன்!’ என்று சகுந்தலாவிடம் சொல்லவில்லை; அவளும் சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் இருவருடைய கண்ணுந்தான் அந்த ரகசியத்தை இருதயத்துக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறதே! உணர்ச்சி வசப்பட்டு இருக்கும்போது சொல் பிறக்குமா? 

அன்று உள்ளூர்த் திருவிழாவிற்காகப் பள்ளிக்கூடம், மத்தியான்னத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. இரண்டொரு ஆசிரியர்களை த் தவிரமற்ற யாவரும் சென்று விட்டனர். ராமநாதன் ‘ஆபீஸ்’ வேலையாக இருந்தான். 

புடைவையின் சலசலப்புச் சத்தம் கேட்டுத் தலை நிமிர்ந்து பார்த்தான். சகுந்தலா நின்றுகொண் டிருந் தாள். 

“ஏன் வீட்டிற்குப் போகவில்லை?” என்று கேட்டான் ராமநாதன். 

“போக வேண்டும்; ஏதாவது வேலை இருந்தால்…” என்று சொல்லிக்கொண்டே மேஜைக்கு அருகில் வந்தாள். 

”உட்காருங்களேன்; சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாம்.” 

ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு, சகுந்தலா உட்கார்ந்தாள். ராமநாதனுக்கு மேற்கொண்டு வேலை ஓடவில்லை. அவளையே பார்த்துக்கொண் டிருந்தான்; தன்னை அவன் உற்றுப் பார்த்துக்கொண் டிருப்பதைத் தெரிந்துகொண்ட அவள், வேறு எங்கோ பார்த்த வண்ணமாக இருந்தாள். 

சகுந்தலாவினுடைய சௌந்தரியமும் யௌவன மெரு கும் அவனுடைய உள்ளத்தில் புயலை எழுப்பிக்கொண் டிருந்தன. அவளுடைய ஒடிசலான தேகமும் கடைக் தெடுத்த சிலைக் கைகளும் சிறிது உயர்ந்த கழுத்தும் முகத்தின் முன் நெற்றியில் புரளும் சுருண்ட மயிரும் மயக்கும் இரு விழிகளும் அவனுக்குப் போதையைக் கொடுத்துக்கொண் டிருந்தன. அவள் அணிந்திருந்த ரோஜா வர்ணப் புடைவையும் ரத்தவர்ண ஜாக்கெட்டும் அவனுடைய மனத்தில் குங்கும வர்ணமாகவே தென் பட்டன. 

“உங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீடு காலியாகப் போகிறதாமே! நான் வரலாம் என்று இருக்கிறேன்” என்று ஆரம்பித்தான் ராமநாதன். 

“வேண்டாம், ஸார்!……” என்றாள் சிரித்துக் கொண்டே; ஆனாலும் அதில் ஒரு வேதனை இருக்கத்தான இருந்தது. 

“ஏன்? உங்களுக்கு என்னால் ஏதாவது தொந்தரவு ஏற்படும் என்றா?” 

சகுந்தலா உடனே பதில் சொல்லவில்லை. பொங்கி வரும் புன்சிரிப்பை அடக்கிக்கொண்டு, “அப்படி இருந்தாலும் இருக்கலாம்!” என்றாள். 

மேஜைமீது ஊன்றிக்கொண் டிருந்த அவளுடைய தங்கக் கைகளையே பார்த்துக்கொண் டிருந்தான் ராம நாதன். ‘இனிக்கும்’ அந்தக் கைகளை ஒரு தடவையாவது தொடவேண்டும் என்கிற மோகம் அவனுக்கு நிறைய இருந்தது.அதனால் மெதுவாகத் தன் கையை அந்தப் பக்க மாக நகர்த்திக்கொண்டே இருந்தான். ஒரு மயிரிழை இருக்கும் இரண்டு கைகளுக்கும்; அவனுடைய கருத்தைத் தெரிந்து கொண்டவள்போலத் தன் கைகளை எடுத்துக் கொண்டு, “நான் போய் வரட்டுமா?” என்று எழுந்திருக்க முயன்றாள். 

ராமநாதனுக்கு இருதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அன்று தப்பினால் தன் மனக்கருத்தை அவ ளிடம் சொல்ல, வேறு சமயம் கிடைக்காது என்று எண்ணினான். 

“ஏன், நேரமாகிவிட்டதா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, “உட்காருங்கள்; போகலாம். பயமாக இருக்கிறதா? என்ன?” என்றான். 

“பயம் இல்லை; ஆனால் ஏன் அநாவசியமாகப் பிறர் நம்மைச் சந்தேகப்பட வேண்டும்?” என்றாள் அவள். 

“எல்லோருடைய சந்தேகத்துக்கும் ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்துவிடப் போகிறேன், கூடிய சீக்கிரத்தில்!” 

அவனுடைய பேச்சின் கருத்தை உணராதவள்போல விழித்தாள். 

“உனக்கே இன்னும் புரியவில்லையா? நான் உன்னைப் பலரும் அறிய மணந்துகொள்ளப் போகிறேன் !” 

சகுந்தலா ‘இடி இடி’யென்று சிரித்துக்கொண்டே, “இது எத்தனை நாளாகத் தீர்மானம் ?” என்று கேட்டாள். 

“உன்னைப் பார்த்த நாள் முதல் என்று சொல்ல மாட்டேன்; சென்ற பத்துப் பதினைந்து நாளாக.” 

“அப்படி என்றால் உங்கள் மாமா பெண்ணை நீங்கள் உண்மையாகக் காதலிக்க வில்லையா?” 

”உண்மையாகத்தான் காதலித்தேன்.” 

”பின், அதற்குள் என்மீது ஏன் உங்களுக்கு இந்த மோகம் ஏற்படவேண்டும்?” 

“சகுந்தலா, நான் உன்மீது கொண்டிருக்கும் பாசத்தை மோகம் என்று கூறாதே!” 

“பின் எப்படி ஒரே சமயத்தில் இருவரையும் உங்களால் நேசிக்க முடியும்?” 

“எனக்கே தெரியவில்லை, சகுந்தலா!” ராமநாதன் உண்மையை ஒப்புக்கொண்டான். 

“சரிதான்; இந்த இடத்துக்கு நான்; அந்த இடத்துக்கு அவள்; அப்படித்தானே?” 

ராமநாதன் பதில் சொல்லவில்லை. அந்தச் சமயத்தில் தன்னுடைய மாமன் மகள் ராஜத்தையும் சகுந்தலையையும் மனத் தராசில் அவன் எடை போட்டுக் கொண்டிருந்தான். 

ராஜமும் நல்ல அழகிதான்; நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவ ளாதலால் நாகரிகப் பாங்கு நிறைய இருந்தது. நகத்துக்குச் சாயம் இட்டுக்கொள்வாள்; முகத்திற்கு அழ காகப் பவுடரைப் பூசிக்கொள்வாள்; நுனித் தலையைப் பின்னால் ரிப்பனால் கட்டி விட்டுக்கொண் டிருப்பாள். கையில் புத்தகமோ அல்லது ‘ஸ்வெட்டர்’ போடும் ‘உல்லன்’ நூலும் ஊசிகளுமோ இருக்கும்; அந்த அழகு ஒரு விதம். 

இங்கே சகுந்தலா… கண்வருடைய ஆசிரமத்துச் சகுந் தலையை எத்தனையோ விதங்களில் ஒத்திருக்கிறாள். இவளுடைய காம்பீர்யமும் உடம்போடு பிறந்த அமைதியும் பணிவும்… இந்த அழகு வேறுதான்! ராஜத் தின் அவ்வளவு நாகரிகமும் இந்தச் சகுந்தலாவினுடைய கண்ணிமைக்கு முன் நிற்காது என்றுதான் ராமநாதன் முடிவு கட்டினான். 

ராமநாதன், பதில் சொல்லாமல் இருக்கவே, “நான் அன்றே சொன்னேன், என் துரதிருஷ்டத்தை; என் வாழ்க்கையில் இனிமேல் பூவும் குங்குமமும் இடம் பெறும் என்றா நினைக்கிறீர்கள்?” என்றாள். 

ராமநாதன் அதற்குள் இடைமறித்து, “இதோ பார், சகுந்தலா; அப்படி எல்லாம் பேசக்கூடாது. உன் வாழ்க்கையை நான் எப்பாடு பட்டாவது மலர வைக்கிறேன்” என்று ஆவேசத்துடன் கூறிக்கொண்டே மேஜை டிராய ரைத் திறந்து, ஒரு வெள்ளிக் குங்குமச் சிமிழை எடுத் தான். 

“இதோ பார், சகுந்தலா: இது என்ன தெரியுமா?” அவள் பதில் சொல்லாமல் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண் டிருந்தாள். 

“இதை எடுத்துக்கொண்டு போய் நீ உபயோகிக்க வேண்டும்!” 

சகுந்தலை சிரித்தாள்; “நான் உபயோகிப்பேன்; உபயோகப்படுத்துவதற்கு முன் எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன; எவ்வளவோ விஷயங்களை ஆலோசிக்க வேண்டும்.” 

”நீ அப்படியே ஒரு நிமிஷம் இரு; நான் உன் நெற்றி யில், அதில் இருக்கும் குங்குமத்தை என் கையால் இடுகிறேன்; அப்போதாவது என் உறுதியில் உனக்கு நம்பிக்கை ஏ ற்படுமா?” 

“இருங்கள்; அவசரப்பட வேண்டாம்; ‘நாள்செய்வது நல்லவர்கள்கூடச் செய்ய மாட்டார்கள்’ என்று சொல்லுவார்களே. நல்ல நாள் பார்த்துச் செய்யலாமே?” 

“சரி, நாளை ஆடி வெள்ளிக்கிழமை; நல்ல சுபதினம்; நீ அவசியம் ‘அந்தக் கோல’த்துடன் வரவேண்டும்.” 

“இப்படிப் பதறினால் எப்படி? அதனால்தான் நான் ஆரம்பத்திலேயே இதை மோகம் என்றேன். உங்கள் மாமா பெண் என்ன ஆவது?” 

வீணையில் ஒரு ராகத்தின் ஸ்வரத்தில் வேறு ராகத் தின் ஸ்வரம் கலந்து ஒலிப்பதுபோல அவனுடைய மனத் தில் அந்தக் கேள்வி விகற்பமாக விழுந்தது. 

சமாளித்துக்கொண்டு, “என்ன ஆவது? அவள் கன் னிப்பெண்; மாமா பணக்காரர்; நான் இல்லாவிட்டால் அவளுடைய கல்யாணம் நின்றா போய்விடும்!” என்றான். 

“எனக்கு மட்டும்?” விஷமச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே கேட்டாள் சகுந்தலா. 

“விளையாடுகிறாயா, சகுந்தலா? நான் இல்லாவிட்டால் உனக்கு இந்தத் தைரியமே ஏற்படாது!” 

“சரி, நான் வருகிறேன்” என்று சகுந்தலா கிளம்பி னாள். 

“இதை எடுத்துக்கொண்டு போ; நான் சொன்னது ஞாபகம் இருக்கு அல்லவா?” 

சகுந்தலா, ராமநாதன் கொடுத்த குங்குமச் சிமிழை எடுத்துக்கொண்டு போனாள். அப்போது அவளுடைய முகத்திலும் ஒரு புதிய சோபை இருக்கத்தான் இருந்தது. 

6 

அன்று இரவு ஏழு மணி இருக்கும்; திடீரென்று ஒரு ‘டாக்ஸி’ பள்ளிக்கூடத்தின் வாசலில் வந்து நின்றது, ராமநாதனுடைய மாமா பரபரக்க வண்டியிலிருந்து இறங் கினார். அவனுடைய தாய்க்கு மத்தியான்னத்திலிருந்து உடம்பு மிகவும் தடபுடலாக இருக்கிறதென்றும், உடனே ஒரு வாரம் லீவு எடுத்துக்கொண்டு புறப்பட்டு வரவேண் டும் என்றும் சொல்லி, அவனைக் கையோடு அழைத்துக் கொண்டு போய்விட்டார். 

அடுத்த நாள் ஆடி வெள்ளிக்கிழமை; இது ஒன்றை யும் அறியாத சகுந்தலா. எண்ணெய் நீராடிவிட்டு, ஈரத் தலையை நுனி முடிச்சுப் போட்டுக்கொண்டாள்; லேசா கக் கண்களில் மையையும் இட்டுக்கொண்டாள்; நடுங்கும் கைகளினால் நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டாள்; கண்ணாடியில் தன் அழகைப் பார்த்துக்கொள்ளும்போது அவளுக்கு உடம்பு புல்லரித்தது. பத்துமணிப் பள்ளிக் கூடத்துக்கு ஒன்பது மணிக்கே பள்ளிக்கூடத்துக்கு வந்து விட்டாள். வாசல் ப்யூன், “அம்மா, ஹெட்மாஸ்டர் பத்து நாள் லீவாம். ஊருக்குப் போயிருக்கிறார்……’ என்று சொன்னான். அதைக் கேட்டதும் அவளுடைய இருதயமே நின்றுவிடும்போல் இருந்தது! பைத்தியம் பிடித்தவள்போல் குழாயண்டை ஓடினாள்; முகத்தைக் கழுவிக்கொண்டு, வகுப்பில்போய் உட்கார்ந்தாள். 

அன்று ஊருக்குப்போன ராமநாதன் பிறகு திரும் பவே இல்லை; எட்டாம் நாள் அவனுடைய ராஜீநாமாக் கடிதம் வந்தது. ஊரில் அவனுடைய தாயினுடைய உடல் நிலை நிச்சயமில்லாமல் இருந்ததால், அவசர அவசரமாக ராஜத்தின் கழுத்தில் ஒரு முடிச்சைப் போடச் செய் தார்கள். அந்தச் சூழ்நிலையில் சகுந்தலாவின் ஞாபகமே ராமநாதனுக்கு இல்லை! 

கல்யாணம் ஆன இரண்டு நாள் கழித்து, அவனுக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் ராமநாதன் சகுந்தலாவுக்கு வாங்கிக் கொடுத்த குங்குமச் சிமிழ் இருந்தது! அத் துடன், “இந்தச் செல்வத்தை உபயோகிக்கும் அதிருஷ் டத்தை எனக்கு வரமாகக் கொடுத்த கடவுள், மறைந்து விட்டார். இனி மூன்றாம் முறையாக அந்த அதிருஷ்டத் தைப் பரீக்ஷை செய்ய ஆசைப்படவில்லை!” என்று எழுதி யிருந்தது. 

“இது ஏது?” என்று அவன் மனைவி கேட்டாள். 

என்னோடு வேலை பார்த்து வந்த வாத்தியாரம்மாள் உனக்கு அனுப்பியிருக்கிறாள்” என்று அவள் கையில் அதைக் கொடுத்தான். 

அவள் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டாள். அவளுக்குத் தெரியுமா அதனூடே புதைந்து கிடந்த ரகசியங்கள்!

– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *