பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன்…
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 7, 2026 வெளியான ஆண்டு: 2016
பார்வையிட்டோர்: 17
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எதையும் மொறயாச் செய்யணும் வே! நமக்கு எதுக்கு அரசாங்கத்து பொல்லாப்பு? ஏற்கெனவே நம்ம யோக்யதை கேள்விக்கு உள்ளாயாச்சு. நாளைக்கு எவனும் அறச்சீற்றம் கொண்டு முகநூல்ல எழுதுவான்… கனிமப் பொருள் களவாண்ட கும்பமுனி என்று… அதுக்கும் ஆயிரம் பேரு சொந்த பேரை ஒளிச்சு வச்சுக்கிட்டு லைக் போடுவான்…”…நாஞ்சில்நாடன்
“கண்ணுவிள்ளே.. வே கண்ணுவிள்ளே” என்று கூப்பாடு போட்டார் கும்பமுனி.
“…”
“கூப்பிட்டா என்னாண்ணு கேளும் வே! வாயிலே என்னா நா பறிச்ச மண்ணா கெடக்கு?’
“என்ன எளவுக்குக் கெடந்து இப்பம் கீறுகேரு? புடுக்கிலே தீப்பிடிச்ச மாரி.. கூப்பிட்டா பறக்கவா முடியும்? புத்துக்காலை ஊணி நடந்து வராண்டாமா?” என்றார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை
“கெடந்து பெடை பெடைக்காதையும்… ஒரு காரியம் ஆலோசிக்கதுக்காக்கும் உம்மைக் கூப்பிட்டேன்…”
நேரம், அந்தி மயங்கி வந்தது. மேல்வானத்தில் மஞ்சளும் குங்குமமுமாகத் தீற்றல். புள்ளினம் கூடடையப் போகும் கூக்குரல். சாலைக்கு அப்புறம் ஆல் ஒன்று பழுத்துக் கிடந்தது. விலை யிலாப் பண்டங்கள் வாங்க அரசு நியாயவிலைக் கடைகளில் கேட்கும் ஆரவாரம் போலப் பறவைகளின் இரைச்சல். காகம், நாகணவாய்ப் புள், கிளிகள், சாம்பற் குருவிகள்- வடக்கே எங்கோ வளர்ந்திருந்த மரத்தை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கனியுண்டு கழித்து தென்தமிழ் நாடு வரைக் கொணர்ந்து சேர்த்த மூதாதையரின் வழித்தோன்றல் பறவைகளாக இருக்கலாம் அவை.
‘தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை’ என்று ஒளவையின் பாட்டில், திரிசூலத்தில் குத்திய எலுமிச்சம் பழம் போல நிலைகுத்தியது கும்பமுனியின் மருட்சிந்தை.
“என்னத்துக்கு கூப்பிட்டேரு? இப்பம் ஆலமரத்துல மொளச்ச அலுசுவத்தை ஆராஞ்சுக்கிட்டிருக்கேரு?” என்றார் கண்ணுபிள்ளை.
“நமக்கு ஒரு கொடம் கடல் தண்ணி சங்கடிப்பிச்சு வய்க்கணும் கேட்டேரா?”
“என்னத்துக்கு? கசேரியிலே இருந்துக்கிட்டே உப்பு சத்யாக்கிரகம் ஆரம்பிக்கப் போறேரா?”
“அதுக்கில்ல வே! நம்ம காலம் ஆன பொறவு, சுட்டுக் கருக்கி, எல்லு பொறுக்கி, கரைய்க்கதுக்கு என்னத்துக்கு கன்னியாரி கடப்புறத்துக்கு ஓடனும்?”
“வெளங்கினாப்பிலேதான்.. வௌக்கு வய்க்கப்பட்ட நேரத்திலே நல்ல மங்கலமாட்டுப் பேசுகேரு! வீடு வர்க்கத்து ஆயிரும்!’
“ஏன்? இப்ப வர்க்கத்துக்கு என்ன கொறவு?”
“ஒரு கொறவுமில்லே! மூதேவி முன்வாசல் வழியா வாறா. சீதேவி பொறவாசல் வழியாப் போறா..”
அடுத்த முக்கியமான பாயின்டைப் பிடிக்கப் போகும் திராவிட இயக்க மேடைப் பேச்சாளரைப் போல, சற்று நிதானப்பட்டு, கும்பமுனி முற்றத்தை வெறித்தார். நடுமுற்றத்தில் பழம் படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாரை’ ஒன்றின் சிறகு உதிர்ந்து கிடந்தது. நவீன கவிதை எழுத கருப்பொருள் ஒன்று கேட்பார் கேள்வி இல்லாமல் கிடப்பதாகத் தோன்றியது. முழங்கையில் மசுக்குட்டி ஏறியதுபோல கும்பமுனியின் முழு உடம்பும் சிலிர்த்து. காலத்தை எழுதிச் செல்லும் தூவல் அல்லவா?
அதற்குள் தயாரெடுத்த தவசிப்பிள்ளை கேட்டார் “சொல்லும்…இப்பம் என்னத்துக்கு ஒமக்கு ஒரு கொடம் கடல் தண்ணி? உப்பு வேண்டாண்டாம், நேரடியாக் கஞ்சியிலே ஊத்தீரலாம்ணா?”
“சும்ம கொறளி பேசப்பிடாது கேட்டேரா? நான் காரியமாட்டாக்கும் சொல்லுகேன். ஒரு கொடம் கடல் தண்ணி உண்டும்ணா, இங்கிணயே ஒரு சருவத்திலே சாம்பலைக் கரச்சு மரத்து மூட்டுலே ஊத்தீரலாம்லா வே! இல்லாட்டா நீரு தாலா இந்தப் புத்துக் கால வச்சுக்கிட்டு. எஞ் சாம்பல இருமுடி மாதிரி கெட்டீட்டு காரு ஏறி எறங்கி கடப்புறத்துக்குக் கொண்டுச் கிட்டுப் போகணும்!” என்று தழைந்து பேசினார் கும்பமுனி.
“ஏன்? கலைமாமணி எல்லாம் வாங்கீருக்கேல்லா. அரச எலிகாப்டர் அனுப்ப மாட்டாளா, சாம்பலு கரைய்க்கதுக்கு?”
“தெரியாம ஒண்ணு வாங்கீட்டு வர்திற்றேன்- ஆளாளுக்குட் போட்டு பதங் குலைக்கேளே ஓய்?”
“சரி.. இப்பம் ஒமக்கு ஒரு கொடம் கடல் தண்ணி வேணும் அம்புட்டு தாலா? சாவதுக்கு ரெண்டு நாளைக்கு முந்து சொல்லும்… சரியாக்கீரலாம்” என்றார் கண்ணுபிள்ளை குறுஞ்சிரிப்புடன்.
“ஏன்? கடப்புறத்துக்குப் போயிட்டு வாறேன்ணு ஒருநாள் கள்ளம் போட்டு, வீட்டிலேயே கெடந்துகிட்டு, ஆத்திலே ஒரு கொடம் தண்ணி பிடிச்சு அரைக்கிலோ பரலுப்பு போட்டுக் கலக்கிக் கொண்டாந்து வவுச்சர் எளுதீரலாம்ணு பாக்கேரா?” என்று வர்மத்தில் குத்தினார் கும்பமுனி,
“முடிவானுக்கு புத்தி எங்கிட்டுப் போகு பாரு. நம்மள பேராசிரியர்னு நெனச்சிக்கிட்டாரு போல… தமிள் எளுத்தாளர்னா சும்மாவா?” என்று முனகினார் தவசிப்பிள்ளை. “ஏன்? செய்ய மாட்டேரா?” அதட்டினார் கும்பமுனி.
“சரி! செய்து போடலாம்… ஆனா பித்தளைக் கொடம் கொண்டுகிட்டுப் போயி, ரெண்டு பஸ்சு ஏறி எறங்கி, ஆடாம அசையாம, புதுப்பொண்ணு போலத் தூக்கீட்டு வர முடியுமா பாட்டா? வேணும்ணா ஒரு பித்தளைத் தூக்குப் போணி நிறையக் கொண்டாறேன்!”
“அது காணுமா டே! ஒரு இருவது லிட்டராவது வேண்டாமா? அத்தா பெரிய தூக்குவாளி நம்மகிட்டே இருக்கா?”
“அப்பம் ஒரு காரியம் செய்யலாம்… வடசேரியிலே எறங்கி, இருவது லிட்டர் கேன் ஒண்ணு வாங்கீட்டுப் போயி, நெறச்சுக் கொண்டாந்திருவோம்..”
சற்று நேரம் அறிதுயிலில் இருந்தார் கும்பமுனி. முகத்தைத் தீவிரமாக்கி யோசித்தார். ஈங்கோர் உவமை எழுதலாம், ‘அவர் முகம் பேண்ட நாயின் குண்டி போலிருந்தது’ என்று. ஏற்கெனவே பேரு கெட்டுக்கிடக்கு என்பதனால் தவிர்த்தும் விடலாம்.
“ஒரு சிக்கலு இருக்கு வே கண்ணுவிள்ளே! கொடத்துலே கோரிக்கிட்டு வந்தா, தீர்த்தமாக்கும்ணு எவனும் கண்டுக்கிட மாட்டான். கேன்ல கொண்டாந்தா எக்சைஸ்காரன் பிடிச்சுக் கொடைய மாட்டானா?”
“எங்க கொடைவான்?”
“ஒமக்க புளிச்ச தமாசை ஏறக்கட்டி வையும் கேட்டேரா? சொல்லப்பட்ட விசயத்தை மனசிலாக்கணும் மொதல்லே!” “அதான் எதுக்கு கொடைவான்ணு கேக்கேன்?”
“வே! கடல் தண்ணிண்ணா வெறும் உப்பு மட்டும் இல்லே பாத்துக்கிடும்! ஏகப்பட்ட கனிம வேதிப் பொருள்கள் இருக்கு..”
“நாட்டுலே பேலப்பட்ட பேதி எல்லாம் கடலுக்குப் போறதினாலயா?”
“அதுல்லவே! கனிம வேதியல் பொருட்கள்னா பேரியம். தோரியம், டைட்டானியம், புளோட்டோனியம், யுரேனியம்…”
“பார்த்தீனியம்..”
“அது செடி வே! முட்டாத்தனமாப் பேசப்படாது! எளவு என்னத்தைச் சொன்னாலும் உமக்கு மனசிலாகாது…”
தவசிப்பிள்ளை, சக்தி வாய்ந்த டார்ச் லைட் வெளிச்சம் கண்டு திகைத்த பெருக்கான் போல மிரண்டு நின்றார். உடனடியாக எதிர்த் தாக்குதலுக்கு நாவெறி குண்டு எதுவும் அகப்படவில்லை.
“சரி! இப்பம் என்னதான் செய்யணும்ங்கேரு?” என்று படத்தைக் கீழே போட்டார் கண்ணுபிள்ளை.
“எதையும் மொறயாச் செய்யணும் வே! நமக்கு எதுக்கு அரசாங்கத்துக்கு பொல்லாப்பு? ஏற்கெனவே நம்ம யோக்யதை கேள்விக்கு உள்ளாயாச்சு. நாளைக்கு எவனும் அறச்சீற்றம் கொண்டு முகநூல்லே எழுதுவான்… கனிமப் பொருள் களவாண்ட கும்பமுனி என்று… அதுக்கும் ஆயிரம் பேரு சொந்தப் பேரை ஒளிச்சு வச்சுக்கிட்டு லைக் போடுவான்.”
“நீரு என்னத்துக்கு இப்படிக் கெடந்து தொடை நடுங்கிக் காலோட செலவாதிக்குப் போறேரு. அவனவன் பெரும் பாறையை, மலையை, ஓடையை, ஆத்தை, மணல்தேரியைக் களவாங்குகான்.. ரெண்டு லோடு செம்புத் தகடு ஏத்தீட்டுப் போன லாரிகளையே காணோமாம்… போட்டுப் பேசுதேரே!’
“ஓய்! ஒண்ணு மனசிலாக்கணும் பாத்துக்கிடும்…சிவன் சொத்து குல நாசம் எண்ணாக்கும் மூத்தோர் வாக்கு!”
“அப்பம் பத்தாயிரம் கோடி அடிச்சு மாத்தினவன், நாலு மலையை விலைக்கு வாங்கினவன், பெருங்காட்டைப் பட்டா போட்டவன், கொள்ளையடிச்சு கப்பல் வாங்கி விட்டவன்… எவன் சொத்து பாட்டா அது?”
“அதெல்லாம் நமக்கு யோசிக்காண்டாம்- சுப்ரமணிய சாமி பாத்துக்கிடுவாரு.
“அவுரு சூரம்பாடு அண்ணைக்குத் தான கோயில்லேருந்து வெளீல் வருவாரு பாட்டா!”
“நான் சொன்னது முருகரு இல்லவே! வேற சாமி! ஒமக்கு புடி கெடச்சா?”
“சரி.. இப்பம் என்ன செய்யணும்னு சொல்லும்.. சும்மா ஓலைக்கெடையிலே நாய் மோண்ட மாதிரி களபுள களபுளண்ணு பேசப்பிடாது! சங்கதியைச் சொல்லும்..”
கும்பமுனி, அறிவுசீவிகள் அந்தரத்தை வெறிப்பதுபோல சற்று சிந்தனை வயப்பட்டார். தொண்டையைச் சற்று கனைத்தார்.
“நாம எதையும் சட்டத்துக்குப் பொறம்பா செய்யப்பிடாது பாத்துக்கிடும்.. எவன் என்ன சாணியை வாரி வீசுனாலும் நம்ம யோக்கியதை நமக்குத் தெரியும். நாளைக்கு நீரு மொதக் காரியமா வில்லேஜ் ஆபீசரைப் போயிப் பாரும்..”
அரண்டு, மிரண்டு, பேயடித்தவர்போல் கண்ணுபிள்ளை கேட்டார், “பாத்து?”
“இப்பிடி யிப்பிடியாக்கும். காரியம்… நமக்கு, உலகப் புகழ்பெற்ற எளுத்தாளரின் இறுதிச் சடங்குகள் தேவைக்கு ஒரு இருவது லிட்டர் கடல் தண்ணி அத்தியாவசியம் இருக்கு… அதுக்கு ஒரு பெர்மிஷன் வேணும்ணு சொல்லி ஒரு அர்கி எளுதிக் குடுத்து வாங்கீட்டு வாரும்” என்றார் கும்பமுனி.
கண்ணுபிள்ளை இதழ்க்கடையோரம் செம்மாந்த சிரிப்பொன்று ஒதுங்கியது.
“பட்டா இதுலே ரெண்டு காரியம் பாத்துக்கிடும்! ஒண்ணு நீரு ஒலகப் புகள் பெற்ற எளுத்தாளர்ங்கப் பட்டது. ரெண்டாவது நீரு இப்படி வில்லேஜ் ஆபீசரு, ரெவ்னியூ இன்ஸ்பெக்டரு. தாசீல்தாரு, ஜில்லா கலக்டருண்ணு போனா, உமக்க காலம் கழிஞ்சு, இருவத்தினாலு தெவசம் வந்தாலும் கிடைச்சுக்கிடாது. நம்ம நாட்டிலே வழக்குண்ணு ஒண்ணு வந்தாச்சுண்ணா ஈரங்கி வாறதுக்கே பதினெட்டு வருசம் ஆகும்… தீர்ப்பு வாறதுக்கு முப்பத் தேழு வருசம் வரைக்கும் ஆகிப்போகும்…அதாக்கும் சர்க்காருக்க துரிசம். இவுனுக கிட்டே அலையதுக்குப் பதிலா, ஒரு காப்பிச் செம்பு கொண்டுபோயி, கடலுத்தண்ணி கோரிக்கிட்டு வரலாம் என்னா, ஒரு இருவது நடை போகணும்.– சங்கதி தீந்து போகும்” என்று மேற்சென்று இடித்துரைத்தார் கண்ணுபிள்ளை.
“வே! நான் என்ன சொல்லுகம்ணா அரசாங்கத்தக்கு விரோதமாட்டு நாம நடக்காண்டாம்ணு… கடல் தண்ணி வேணும்வே, ஆனா அது தப்பான வழியிலே வேண்டாம்… கர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… என்றாலும் சட்ட விரோதமா நடக்கலாமா?”
“அப்பம் தர்மம் வேற, சட்டம் வேறயா? நீரு தானே அன்னைக்குச் சொன்னேரு, அறத்தின் ஆறே அரசும் செல்லும்…”
“அது ஏரோப்ளேன்ல போயி, ஏ.சி.ரூம் போட்டு, தந்தூரி சிக்கன் திண்ணு பேசித் தீர்க்க வேண்டிய சமாச்சாரம். இப்பம் அந்தக் கவலை உமக்கு எதுக்கு? சொன்ன காரியத்தைப் பாரும்..”
“சரி, ஒரு கட்டன் எடுக்கட்டா?”
“போவும். அதைச் செய்யும்!”
கண்ணுபிள்ளை, புத்துக்காலைத் தாங்கி நடந்து குசினிப்பெரைக்குள் போனார்.
காலையில் கஞ்சி வைத்துக் கொடுத்து, மத்தியானத்துக்கு புளித்தண்ணி தாளிச்சு சோறு கிண்டி, பாத்திரத்தில் அடைந்து, கையில் பொதிந்து எடுத்துக்கொண்டு, இரண்டு பேருந்து ஏறி இறங்கி, வழி கேட்டு வில்லேஜ் ஆபீசர் அலுவலகம் நாடிக்க கண்டடைந்தார். பல வயதிலும் ஆடவரும் பெண்டிரும்… சில வெள்ளாடுகள், ஒரு கிழட்டுப் பசுமாடு, ஏகப்பட்ட புற்களும் புதர்களும் மண்டிக் கிடந்தன. சந்திரகுப்த மௌரியனின் காலம் தொட்டு, பாரதத்தின் அந்தப் பகுதியின் ஆவணங்கள் பலவும் நின்றும் இருந்தும் கிடந்தும் தேச சேவை ஆற்றின. தூசுகளின் குடமுழுக்காட்டு-
கிராம அலுவலர் உட்கார்ந்தும் முக்கியஸ்தர் போல் இருவர் நின்றுகொண்டும் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் கிடைக்குமா என்று ஆழ்ந்த கவலையுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். பிணை கிடைக்கும் வரை அடுத்த அலுவல் ஏதும் செய்யமாட்டார் போலும் எத்தனை ராஜ விசுவாசம் மயிர்க் கூச்செறிந்தது கண்ணு பிள்ளைக்கு…
நெடுநேரம் நிற்பதைக் கண்ணுற்றவர், குரலில் அதிகாரத் தின் சாரம் ஏற்றி, கடுப்புடன், “என்ன வே?” என்றார். சிற்றடி வைத்து நடந்து, கிராம அலுவலர் மேசைக்கு அருகில் போய் கையது கொண்டு வாயது பொத்தி, சற்றுக் கூனிக் கேட்டார் “ஐயா ஒரு கேன் கடல் தண்ணி கோரீட்டுப் போகணும் அதுக்கு உங்க அனுமதி வேணும்.”
கிராம நிர்வாகிக்கு ஒன்றும் அடியோடு அர்த்தமாக வில்லை. மேலும் அவர் அரசு ஊழியர்.
“என்னது? கடல் தண்ணி கோரத்துக்கா? அதற்கு எங்கிட்டே எதுக்கு வே கேக்கேரு? போயிக் கோரீட்டுப் போவும் வேணும்ணா கடலம்மைக்கு ஒரு கும்பிடு போட்டு வேண்டிக் கிடும்… காலம்பற பொறப்பிட்டு வாறானுக நம்ம ஊட்டி அறுக்கதுக்கு!
“அதுல்லயா! வந்து கோரீட்டுப் போனா எக்சைஸ்கார சார்மாரு புடிச்சு தடஸ்தம் சொல்லப்பிடாதுல்லா? நீங்க ஒரு ஒப்புப் போட்டு ஆர்டர் தந்தா காமிக்கலாம்லா? அதென்னமோ காரீயம், பேரீயம் எல்லாம் கடல் தண்ணீல ருக்காமே! அதனால சர்க்கார் சம்மதம் இல்லாம கோருனா குத்தமாக்கும் அப்டீண்ணு அவாள் கும்பமுனி சொல்லுதாவ…’
“அதாருவே கும்பமுனி! அவன் வரமாட்டானா? ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி, வீட்டு வரி கட்டுன ரசீது, பேங்கு பாஸ் புக்கு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் எல்லாம் வச்சிருக்கேரா?”
“அவுருக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது சார்! ஆதார், எடுக்கல்லே! திருவனந்தபுரம் போயிட்டு வர பாஸ்போர்ட் என்னத்துக்கு? ரேஷன் கார்டு இருக்கு.. எந்தக் காலத்திலே அவுரு ஓட்டுப் போட்டாரு!”
“இருக்கப்பட்டது எல்லாத்துக்கும் ஜெராக்ஸ் எடுத்துக் கிடும். ஒரு விண்ணப்பம் எழுதி அதுலே அஞ்சு ரூவாய்க்கு கோர்ட் பீஸ் ஸ்டாம்பு ஒட்டும்… எல்லாம் கொண்டுக்கிட்டு வெள்ளிக்கௌமை மத்தியானம் ரெண்டு மணிக்கு மேல வாரும் பின்ன ஒரு காரியம், வெள்ளக்குடிக்கு எதாம் கொண்டுகிட்டு வாரும்”
வெள்ளிக்கிழமை மத்தியானம் வந்தது, கண்ணுபிள்ளை வந்திருந்தார். கிராம அதிகாரி வரவில்லை. கிராம அதிகாரிக்கும் உயரதிகாரி போலச் சத்தம் போட்டு சிப்பந்தி சொன்னார். “எதுக்கு வே வந்து காத்துக் கெடக்கேரு வி.ஓ. இனி திங்கக் கிளமை காலம்பறதான் வருவாரு…”
“இல்ல தம்பி, வெள்ளிக்கௌமை மத்தியானம் வந்து பாக்கச் சொன்னாரு.”
“அவுரு கதை ஒம்பது கோயிலும் ஒரு ஊத்துக்காரனும் கதை ஓய்! நிண்ணாப்பிலே தாசீல்தாரு கூப்பிட்டா அங்கிண போவாரா? இங்கிண நிப்பாரா? போவும், போயிட்டு திங்கக்கௌமை வாரும்..”
திங்கட் கிழமை, சட்டென்று வேலையை முடித்து விடலாம் என்று தவசிப்பிள்ளை காலை ஒன்பதரை மணிக்கே போய்விட்டார். கும்பமுனிக்கு காலைப் பலகாரம் சுடுகஞ்சியும், மதிய உணவு ஆறிய சுடுகஞ்சியும் என செய்து வைத்திருந்தார்.
வி.ஓ. பன்னிரண்டே காலுக்கு வந்தார். கடவுளுக்கும் கும்பமுனிக்கும் மட்டுமே புரியக்கூடிய கையெழுத்தில், கும்பமுனி தனது பின்னவீனத்துவத் திறனை எல்லாம் காட்டி, சங்கத்.தமிழ்ச் சொற்களைக் கையாண்டு, இலக்கணம் பாக்காத செய்யுள் போல எழுதப்பட்ட மனு அது எழுதி முடித்தவுடன் விண்ணப்பமே உலகத் தரத்தில் இருப்பதாய்க் கும்பமுனி நினைத்தார். யார் நினைப்பை யார் கெடுக்க இயலும்.
சற்றுக் காத்திருப்புக்குப் பின் விரல் நீட்டி அழைத்தார் கிராம அதிகாரி. ஓட்டமும் நடையுமாகப் போய் நின்றார் கண்ணுபிள்ளை.
“என்னத்துக்கு வே இந்த விண்ணப்பம்? கடல் மண்ணு வாருகதுக்கா?”
“இல்ல சார்…ஒரு கேன் கடல் தண்ணி கோரீட்டுப் போறதுக்கு..”
“என்ன காரணத்துக்குண்ணு எழுதியிருக்கேரா?”
“ஆமய்யா…”
”நீரு எந்தூரு?”
“வடமதி ஐயா!”
“அப்ப அந்த ஊரு விஓ கிட்டே பெர்மிஷன் வாங்காண் டாமா? உம்ம தேவை சரிதான், நியாயமானதுதான், இது கமர்ஷியல் பர்ப்பசுக்கு இல்லேண்ணு அவுருதான சைட் விசிட் செஞ்சு ஒப்புதல் சான்று தரமுடியும்?”
“மூணு நாளாட்டு அலையுதேம்யா.”
“நானா வே கூப்பிட்டேன் ஒம்மை… கடல் காத்து, புடிச்சுற்றுப் போக பெர்மிஷன் தாறன்ணு சொன்னனா? போவும் போயிச் சொன்ன வேலையைச் செய்திட்டு வாரும்.”
கும்பமுனி பிறந்த நாள், ஓலை, கோள்கள் அவை அமர்த் திருந்த வீடுகள் யாவற்றையும் சபித்தவாறு, கண்ணுபிள்ளை மடங்கிப் போனார்.
பக்கத்து ஊர் வி.ஓ.விடம் விண்ணப்பம் போயிற்று அவருக்குத் தெரியும் கும்பமுனி சள்ளை பிடித்த எழுத்தாளர் என்று. தலைத்தட்டு வரை பிடி உள்ளவர் என்பதும் தெரியும்.
மேலும் எங்காவது நேர்காணலில் வில்லங்கமாகப் பேசு வைத்து அது மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குப் போய், களியந்தட்டு விளைக்கு மாற்றல் செய்தால் என்னவென்று எங்கு சென்று முறையிடுவது? மறுபடி ஒரு இடமாற்றத்துக்கு சந்தை நிலவரம் மூன்று இலக்கம் என்பதும் தெரியும்!
விண்ணப்பத்தை வாங்கி, மேலும் கீழும் பார்த்து, மேல் விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, நாலைந்து லெட்ஜர்களைத் திறந்து மூடி, எதிலோ எதையெதையோ பதிந்து, விண்ணப்பத்தின் மார்ஜின் பகுதியில், சிவப்பு மையால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆவன செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது என்றெழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
காதருகே போய், கண்ணுபிள்ளை, “ஐயா காப்பிச் செலவுக்கு ஏதாம்…”
“அதெல்லாம் ஒண்ணுமே வேண்டாம். போவும்… கொழுத்துப் போயி அரிமாணையிலே ஏறச் சொல்லுகேரா?”
மறுநாள் கண்ணுபிள்ளை கடற்புறத்து வி.ஓ. அலுவலகம் போனார். இதற்குள் அமாவாசை போய் அமாவாசை வந்திருந்தது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பம் வாங்கிப் பார்த்தார்.
“அவுனுக்கென்னா? பரிஞ்சுரைச்சிட்டான்… இதுக்கு சட்டத்திலே எடமிருக்கா? எத்தனை கேன் வரை அனுமதிக்க லாம், அதுக்கு எதாம் அரசாங்கக் கட்டணம் இருக்கா? எந்தப் பக்கம் கடல் தண்ணி பிடிக்கது? பகல்லேயா? ராத்திரியா? இதுலே ஏதும் லா அண்ட் ஆர்டர் பிரச்னை உண்டா?”
கண்ணுபிள்ளையைப் பார்த்துத் திரும்பி, “என்ன எளவுக்குவே வந்து உயிரை வாங்குகியோ? கொடமோ, அண்டாவோ, டேங்கரோ புடிச்சுக்கிட்டுப் போக வேண்டியது தானே! இனி நான் தாசீல்தார்ட்டே என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கணும்ணு கேக்கணும்… முன்மாதிரி இருக்காண்ணு பார்க்கணும்… பென்சன் பத்தப்பட்ட நாள்ளே சஸ்பென்சன் குடுத்தாம்ணா, நீராவே கடைசிக் காலத்திலே எனக்குக் கஞ்சி ஊத்துவேரு? வாறானுகப்பா, நமக்குண்ணு…”
கண்ணுபிள்ளை வெலவெலத்து நின்றிருந்தார். ஜெயில்லே போட்டுருவாரோ என்று பயம் உண்டாயிற்று வீட்டில் கும்பமுனி குண்டி காய்ந்து கிடப்பார், ஒரு கட்டனுக்கும் வழியற்று கிராம அதிகாரியை நெருங்கி, பயபக்தியுடன் முன்னாள் முதலமைச்சர் முன் நிற்கும் துறை அமைச்சர் போல கேட்டார், “ஐயா.. நான் இனி எப்பம் வரட்டும்?’
“வாரும் ஓய், எனக்க அம்மைக்கு பதினாறு அடியந்திரத் துக்கு போவும்…. நெறைய பார்மாலிட்டீஸ் இருக்கு இதுலே.. போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வாரும்… தாசீல்தாரு என்ன சொல்லுதாரோ? அவுரு கலக்டரைப் பாக்கணும்பாரு…ஒரு காரியம் செய்யட்டா? நானே ஒரு ஆளை வச்சு ஒரு கேன் கோரி. சத்தம் மூச்சு காட்டாம ஒழுக்க அவன் யாரு? பம்பைமுனி வீட்டிலே கொண்டாந்து சேத்துரட்டா?”
“வேண்டாம்யா. உடுத்த வேட்டியை நம்ப மாட்டாரு மனுசன்! நீங்க அனுமதி குடுங்க, நானே புடிச்சுக்கிட்டுப் போறன்..”
“பாக்கட்டும்…எதுக்கும் மாசம் செண்ணு வாரும்..”
சில மாதங்கள் நடந்தார் கண்ணுபிள்ளை. கையோடு கொண்டுபோன கேன் மஞ்சள் பூத்து நசுங்க ஆரம்பித்து விட்டது. காரைக்கால் அம்மை சிவபெருமானைக் காண நடந்தும் தவழ்ந்தும் உருண்டும் போனதைப்போல நடந்தார்.
ஆண்டுகள் சில சென்றன. வியர்வை உப்புப் பொரிந்த முதுகுடன், கால்களில் புழுதி அப்பி. கேசம் காய்ந்து பறந்து, வறண்ட உதடுகளுடன் வெறுப்பே உருக்கொண்டது போல், ஒரு நாள் தாசீல்தார் அலுவலகத்தில் இருந்து திரும்பினார் கண்ணுபிள்ளை வழக்கமான மிதப்புடன் சற்றே சாய்வான சூரல் நாற்காலியில், கால்கள் இரண்டையும் மேலே தூக்கி வைத்து உட்கார்ந்திருந்த கும்பமுனியைப் புழுப்போலப் பார்த்தார்.
நேரே உள்ளே சென்று, குளித்து, குசினியுள் சென்று கட்டன் சாயா போட்டு, கும்பமுனிக்கு ஒரு தம்ளர் கொடுத்து, தனக்கும் எடுத்துக்கொண்டு, பொறுக்கப் பொறுக்க, ஊதியூதிக்க குடித்தார். சற்று மிதமான குரலில் கும்பமுனியைப் பார்த்துச் சொன்னார்.
“பாட்டா…இந்த மாசக் கடைசியோட நான் ஜோலியை ராஜி வைக்கேன், என்னா?”
கும்பமுனி, சற்றும் சுவாரசியம் இல்லாமல் கேட்டார். “அதுக்கு நீரு சத்தீஸ்கர் கவர்னரா டே?”
“கேலி மண்ணாங்கட்டி வேண்டாம்-நீரு வேற ஏற்பாடு செய்துக்கிடும்.”
“காரியம் என்னா? அதைச் சொல்லும்..”
“தாசீல்தார் ஆபீசு நடையிலே செத்துக் கெடக்க எனக்க தலையிலே எழுதல்லே பாத்துக்கிடும்.”
“உம்ம தலையெழுத்தை உமக்கு வாசிக்கத் தெரியுமா?” கண்ணுபிள்ளைக்கு வெப்ராளம் ஏறி அடித்தது.
“எனக்கும் பேசத் தெரியும் கேட்டேரா?”
“சமானப்படும் வே! இப்பம் என்ன ஆயிப்போச்சுண்ணு சோலியை ராஜினாமாச் செய்யப் போறேன்ங்கேரு?”
“இந்தக் கடல் தண்ணிக் கொடம் கொண்டார என்னால் முடியாது. வேணும்ணா ஒரு காரியம் செய்வோம். கடப்புறத் துக்கு ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்.. பதுக்கப் பதுக்கப் பாறைமேல ஏறி நிப்போம்.யாரும் பாக்காம ஒம்மைத் தள்ளி விட்டிருக்கேன்… கால் இடறியோ கொடுங்காற்று அடித்தோ கடல்லே விளுந்து செத்தார் மூத்த தமிள் எளுத்தாளர்னு செய்தி போடுவா…எதுக்குப் போயி சாவுத வரைக்கும் காத்திருந்து சுட்டுக் கருக்கி கடல் தண்ணியிலே கரைக்கணும்?”
கும்பமுனி சற்று நேரம் வித்து முளைக்கும் தன்மையில் இருந்தார்.
“சரி வே! உம்மால முடியாதுண்ணா விடும்.. கடல் தண்ணி எதுக்கு? நம்மூரு பாறையாத்துத் தண்ணி போரும்… இன்னரு நீர்க் கங்கையாறும் பாறையாறே!”
“அப்பம் அது ஒரு கொடம், முன்பேறாக் கொண்டு வய்க்கணுமா?”
“அதைப் பொறவு பாப்பம்… இப்பம் அந்தக் கவலை எதுக்கு?”
ஒரு மாதம் பொறுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து, அரக்கு முத்திரை இடப்பட்ட சாணித்தாள் கவரில் பதிவுத் தபால் ஒன்று வந்தது. தங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருபது லிட்டருக்கு மிகாமல், ஒரு கேன் கடல் நீர் ஒருமுறை முகந்து கொள்ளலாம் அதற்கு முன்பாக அரசு சார்நிலைக் கருவூலத்தில் உரிமைத் தொகையாக ரூ. 1,27,439 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று குறிக்கப்பட்டிருந்தது.
தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளைக்கு வாய்கொள்ளாக் சிரிப்பு. கும்பமுனி முகம் முன்பு சொன்ன உவமை ஒன்றை ஒத்திருந்தது.
– 2016, நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது…!
வளர்கவி
November 1, 2026
எது நிஜம்? எது மாயை?
இளையவேணி கிருஷ்ணா
November 1, 2026
