புத்தி சாதுர்யத்தால் சண்டையை சமாதானமாக்கியவன்




முன்னொரு காலத்தில் கந்தன் என்னும் ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் சிறிதளவே நிலம் இருந்தது, அதனையே உழுது பயிர் செய்து வாழ்ந்து வந்து கொண்டிருந்தான்.அவனுக்கு மனைவியும், குமரப்பன் என்ற மகனும் இருந்தான். இவர்கள் மூவரும் அவர்கள் நிலத்தை ஒட்டிய இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர்.
கந்தனும், அவன் மனைவியும் நல்ல உழைப்பாளிகள். குமரப்பன் புத்திசாலி குழந்தையாக இருந்த போதிலும்,கல்வி கற்க வைக்க இவர்களிடம் வசதி இல்லாததால்
தினமும் விடியலில் மூவரும் எழுந்து பழையதை கரைத்து குடித்துவிட்டு, மிச்சத்தை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நிலத்திற்கு சென்று தோட்ட வேலைகளை பார்த்து விட்டு சூரியன் மங்கும் போதுதான் வீடு வந்து சேர்வர்.இப்படியே இவர்கள் காலம் ஓடி கொண்டிருந்த்து. குமரப்பன் வாலிப பருவத்தை அடைந்து விட்டான். அவனுக்கு ஒரு பெண் பார்த்து கல்யாணம் முடிக்க வேண்டும் என்று அவனின் பெற்றோர்கள் நினைத்தனர். ஆனால் படிப்பறிவோ, வசதியோ இல்லாத இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அவர்கள் நாட்டின் மீது அடுத்த நாட்டு அரசன் படையெடுத்து வந்து நாட்டு எல்லையில் முகாமிட்டு விட்டான். இவர்கள் நாடு போரிட வந்திருக்கும் நாட்டை விட சிறிய நாடு, வலிமையான வீரர்கள் இருந்தாலும் எதிரி நாட்டை ஒப்பிடுகையில் குறைந்த அளவே இருந்தனர்.அதனால் இவர்கள் நாட்டு அரசன் அவசரமாக ஒரு உத்தரவு பிறப்பித்தான். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டில் இருந்து ஒருவரை நாட்டை காப்பாற்ற போர் புரிய அனுப்ப வேண்டும். இதை கேட்ட கந்தனும் அவன் மனைவியும் மிகவும் வருத்தப்பட்டனர்,நமக்கு இருப்பதோ ஒரே மகன், அவனையும் போருக்கு அனுப்பி விட்டால் நம் கதி என்னாவது என்று துயரத்தில் ஆழ்ந்தனர்.
குமரப்பன் அவர்களை அமைதிப்படுத்தினான். நாட்டுக்குத்தானே சேவை செய்ய போகிறேன்.கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு, அவர்கள் படையில் சேர்ந்து விட்டான்.இவனைப்போல் ஏராளமானவர்கள் படைகளில் சேர்ந்தன்ர்.படைவீரர்கள் தவிர மற்றவர்கள் குடியானவர்களாக இருந்த்தால் அவர்களுக்கு ஆரம்ப கட்ட இராணுவ பயிற்சி அளித்து நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
குமரப்பனும் நாட்டின் எல்லைக்கு அனுப்பிவைக்கப்பட்டான். அங்கிருந்து பார்த்தால் தொலை தூரத்தில் எதிரி நாட்டு படைகள் முகாமிட்டிருப்பது தெரிந்தது. அங்கிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் இந்த நாட்டுக்குள் புகுந்து விட வாய்ப்பு உண்டு.எச்சா¢க்கையுடன் அவர்களை கண்காணிக்கும்படி அவ்ர்கள் தளபதி உத்தரவு போட்டான். குமரப்பனுக்கு எல்லையில் காவல் இருக்கும் வேலையை கொடுத்திருந்தார்கள்.
ஒரு நாள் மாலை நேரம், எல்லையில் காவல் இருந்த குமரப்பன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். இவர்கள் இருந்த பாதையிலிருந்து சற்றுத்தொலைவில் மேலே பறவைகள் பறந்து கொண்டிருப்பதை பார்த்த குமரப்பன் சற்று எச்சா¢கையுடன் அவன் இருந்த இடத்திலிருந்து சற்று மேடான இடத்துக்கு சென்று கீழே கூர்ந்து பார்க்க அங்கு தானிய மூட்டைகள் மாட்டு வண்டியில் வந்து இறங்கிக்கொண்டிருப்பதையும், ஏராளமான தானியங்கள் சிதறி அதனை கொத்திச்செல்ல பறவைகள் கூடி பறப்பதையும் பார்த்தான். எதிரி நாட்டு படை வீரர்களுக்கு உணவு சமைக்க தானியங்கள் வந்து கொண்டிருப்பதை புரிந்து கொண்டான்.அவ்னுக்கு ஒரு யோசனை தோன்றியது,உடனே தளபதியை பார்க்க ஓடினான்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்து நினற குமரப்பனை பார்த்த தளபதி அவனை ஆசுவாசப்படுத்தி என்ன விசயம் என்று கேட்டான். இவன் சற்று தொலைவில் எதிரி நாட்டு படை வீரர்களுக்கு உணவு சமைக்க தானியங்கள் வந்து இறங்குவதாக தெரிவித்தான்.அத்ற்கென்ன? படை வீரர்களுக்கு உணவுக்கு தானியங்கள் வந்து சேர்வது இயலபுதானே என்று பதில் சொன்னான் தளபதி. உடனே குமரப்பன் ஐயா தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம், நாம் இப்பொழுதே அந்த இடத்திற்கு
நம் படையை சத்தமில்லாமல் அனுப்பி அங்குள்ள அனைத்து தானியங்களையும் பறித்து இங்கு கொண்டு வந்து விட்டால் அவர்களுக்கு உணவு பற்றாக்குறை வந்து விடும், ஒரு சில நாட்களுக்கு மேல் முற்றுகையை நீட்டிக்க முடியாது அல்லவா. இந்த யோசனையை கேட்ட தளப்தி சபாஷ் என்று அவனை தட்டிக்கொடுத்து உடனே அனுபவமிக்க ஒரு படையை தேர்வு செய்து கூடவே இவனையும் சேர்த்துக்கொண்டு “நடு இரவில் ” குமரப்பன் சொன்ன இடத்தை நோக்கி சென்றனர்.
தானியங்கள் சேமித்து வைத்திருந்த இடத்தில் குறைந்த அளவே பாதுகாப்பு போட்டிருந்தார்கள்,மேலும் இவர்கள் நள்ளிரவு தாண்டி சென்றதால் நிறைய வீரர்கள் தூக்க கலக்கத்தில் இருந்தனர். இவர்கள் அவர்களை தாக்கி அவர்கள் சுதாரிக்குமுன் அங்கிருந்த அனைத்து தானியங்கள், தண்ணீர் குடுவைகள் அனைத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு நாட்டுக்கு திரும்பி விட்டனர். அடுத்து தானியங்கள்,மற்றும் தண்ணீர் கொண்டு வரும் பாதைகள்அனைத்திலும் வீரர்களை காவல் இருக்க வைத்து அதனையும் களவாடுவதற்கு ஏற்பாடு செய்து விட்டனர்
மறு நாள் முகாமிட்டிருந்த எதிரி நாட்டு மன்னன், அவர்கள் படைகளுக்காக சேமித்திருந்த அனைத்தும் களவாடப்பட்டு விட்டன என்று தெரிந்தவுடன் கடுங் கோபம் கொண்டான்.அவர்கள் நாட்டு தூதனை அனுப்பி, உடனே படை எடுத்து வரப்போவதாக அறிவித்து விட்டான்.தளபதிக்கு குமரப்பன் இப்பொழுது நெருக்கமாகி விட்டபடியால் அவன் குமரப்பனை பார்த்து இப்பொழுது உன் யோசனை என்ன என்று கேட்டான்.ஐயா, மன்னனிடம் நாளை மறு நாள் நாங்கள் போருக்கு தயார் என்று சொல்ல சொல்லுங்கள்,இப்பொழுது நாம் நாட்களை கடத்தினால் நல்லது.எப்படியும் இன்று ஒரு நாள் ஓடி விட்டது, இதற்குள்ளாகவே அவர்களிடம் மிச்சமிருந்த உணவு பொருட்கள் தீர்ந்திருக்கும், நாளை அவர்களுக்கு உணவு பஞ்சம் ஏற்படும், அந்த சமயத்தில் வீரர்களை போருக்கு தயார் படுத்துவது சிரமம், அதற்குள் தாங்கள அனுமதி அளித்தால் என்னை தூதுவனாக அனுப்புங்கள், என்று சொன்னான்.
அதன்படி தளபதி மன்னா¢டம் பேசி, ஒரு நாளை நீட்டிக்க ஏற்பாடு செய்ய சொன்னார். அதற்குள் குமரப்பன் தூதுவனாக முகாமிட்டிருந்த எதிரி நாட்டு மன்னனை காணச்சென்றான்.இரண்டு நாட்கள் ஓடி விட்ட நிலையில் சோர்ந்து காணப்பட்டிருந்த எதிரி நாட்டு படை வீரர்களை கடந்து அவர்கள் மன்னனைக்காண அழைத்து வரப்பட்டான். எதிரி நாட்டு மன்னனை வணங்கியவன் மன்னா எங்கள் நாட்டு மன்னர் “நீங்கள் எங்கள் நாட்டின் போர் புரிய வந்துள்ளீர்கள் என்றாலும், இப்பொழுது இங்குள்ள அனைவரும் பசியோடிருப்பதாகவும், குடிக்க தண்ணீர் இன்றி இருப்பதாகவும் கேள்விப்பட்டு, தாங்கள் அனுமதி அளித்தால் உங்கள் படை வீரர்களுக்கு முதலில் உணவும், தண்ணீரும் அளித்து வரச்சொன்னார்”, என்று பணிவுடன் சொன்னான்.
கோபமாக “நாளை போர்” என்று தூதுவனிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்த மன்னனுக்கு அவ்ர்கள் முதலில் உணவும் தண்ணீரும், படை வீரரகளுக்கு அளிப்பதாக தூதுவன் சொன்னதை கேட்டு குழப்பமடைந்தான். வேண்டாம் என்று சொன்னால் படை வீரர்கள் கலகம் செய்வர், அப்புறம் அவர்களை போர் புரிய சொன்னாலும் பின் வாங்கலாம்,
யோசித்த மன்னன் மனிதாபிமானமாக யோசிப்பதே உத்தமம் என்று முடிவு செய்து சா¢ படை வீரர்களுக்கு முதலில் உணவளிக்க சொல் என்றான்.
உத்தரவு மன்னா என்று வெளியேறிய குமரப்பன் முன்னரே ஏற்பாடு செய்து சிறிது தள்ளி வைத்திருந்த ஏராளமான உணவு, மற்றும் தண்ணீர் குடுவைகளை ஆளை விட்டு எடுத்து வரச்செய்தான்.
ஏற்கன்வே பசியோடிருந்த எதிரி நாட்டு படை வீரர்கள் இவர்கள் கொண்டு வந்த உணவுகளையும், தண்ணீரையும், ஆசை தீர உண்டும்,அருந்தியும், மகிழ்ந்தனர்.இதை வெளியே வந்து பார்த்த எதிரி நாட்டு மன்னன் குமரப்பனை பார்த்து உன் மன்னனுக்கு நன்றி தெரிவிப்பதாக சொல் என்றான். குமரப்பன் மன்னா தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும், எங்கள் மன்னர் தங்களை விருந்தாளியாக வரவேற்க எல்லையில் காத்துக்கொண்டிருக்கிறார், என்று பணிவுடன் சொன்னான். எதிரி நாட்டு மன்னன் சா¢ வருகிறேன் என்று புன்முறுவலுடன் சொன்னான்.
பக்கத்தில் இருந்த ஒரு சிலர், மன்னா தாங்கள் தனியாக சென்றால் ஆபத்து என்று அவன் காதில் சொல்ல, குமரப்பன் மன்னா இவர்களுக்கு எங்கள் மன்னன் மீது நம்பிக்கை
இல்லை என்றால் நாங்கள் இங்கேயே வேண்டுமானாலும் பிணைக்கைதியாக இருக்கிறோம் என்று சொன்னான்.
எதிரி நாட்டு மன்னன் அவனை கட்டிப்பிடித்து உன்னை நம்புகிறேன், வாருங்கள் அவர்கள் நாட்டுக்கு விருந்தாளியாக போவோம் என்று முன்னே நடக்க ஆரம்பித்தான்.
வெளியே ஒரே ஆரவாரம் கேட்டு வெளியே வந்து பார்த்த கந்தனும், அவன் மனைவியும்,அங்கே அவன் மகன் குமரப்பன் குதிரையில் உட்கார வைக்கப்பட்டு சுற்றிலும் மேளம் ஒலிக்க வருவதை பார்த்து மிகுந்த சந்தோசப்பட்டனர்.குமரப்பனுடன் வந்தவர்கள், கந்தனை அணுகி இப்படிப்பட்ட புத்திசாலி குழந்தையை பெற்றதற்கு மன்னர் உங்களை பாராட்டி பா¢சுகள் வழங்கியுள்ளார் என்று கொண்டு வந்த விலையுயர்ந்த பொருட்களை கொடுத்தனர்.மேலும் உங்கள் மகனை இந்த ஊரின் பாதுகாப்பு அதிகாரியாக நியமித்து உள்ளார் எனவும் தெரிவித்தனர்.
குதிரையிலிருந்து இறங்கி வந்த குமரப்பனை நோக்கி பெற்றோர்கள் விரைந்து சென்று அணைத்துக்கொண்டனர்.
![]() |
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க... |
perfect