கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2025
பார்வையிட்டோர்: 361 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மெழுகுவர்த்தி சமைத்துள்ள வேள்விக் குண்டத்திலே ஜனித்து, இருட் பாளத்தைப் பிளந்து, சென்னி யிலே ஈஸ்பர நாமத்தைத் தாங்கி, தியானப் பொலிவுடன், சுடர் பிரகா சித்துக்கொண்டிருந்தது. 

மறுகோடியில் அகண்டாகாரமாகப் பரம்பியிருந்த இருள் விளிம்பி லிருந்து ஒரு விட்டிற்பூச்சி தத்தித் தத்தி வந்தது. 

சுடரின் அழகில் மனம் ஒன்றியது. அதனையே பார்த்துக் கொண்டிருந்தது. 

சுடர் தியானத்தின் ஐக்கியத்திலே மோனத்தை வளர்த்தது. 

“சுடர்க் கன்னியே, சௌக்கியமா?” என விட்டில் பேச்சை ஆரம்பித்தது. 

சுடர் மோனத்தைக் கலைக்க வில்லை.

“நான் பேசுகின்றேன்; நீ வானத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றாய்… அழகும் அகம்பாவமும் இரட்டைப் பிறவிகள்.”

“நெஞ்சை பக்தியினால் நிறைத்து வைத்திருப்பவர்கள், வெட்டிப் பேச்சுக்களிற் காலத்தைப் பலியிடுவது கிடையாது”. தலையை நிமிர்த்திக் கொண்டு, உதடுகளை அசைக்காத வாக்கில், சுடர் பதில் சொல்லிற்று. 

”உன் தலை கழுத்துடன் அறுந்து, நிலத்திலே விழுந்துவிடப் போவது கிடையாது. என்னைப் பார்த்துத் தான் பேசேன். உன்மீது எனக்குள்ள காதலை நீ அறியமாட்டாயா?” 

“நான் நித்திய கன்னி. இறை வணக்கமே என் கர்மம்; என் ஞானம்; என் பக்தி.” 

விட்டில், ஏளனத்துடன் எக்காள மிட்டுச் சிரித்தது. 

சுடர் மோனத்திற் கலந்தது. 

”நீ உலகத்தை மறந்து உனக்கே விளங்காத தத்துவம் பேசுகின்றாய். ஒளிபரப்புவதான மமதை உனக்கு. விண்ணுலகத் தத்துவம் பேசும் நீ, தன் உடலை நெய்யாக உருக்கி வளர்க்கும் தாய், மண்ணுலகின் இருளிலே மறைந்து கிடப்பதைக் குனிந்து பார்”. 

சுடர் குனியவில்லை. நிமிர்ந்தே நின்றது. 

“என் அன்னையின் கர்மமும் யோகமும் அவ்வாறு அமைந்துள்ளது.” 

“சுடர்க் கன்னியே, கர்வங் கொள்ளாதே. இவ்வளவு நேரமும் நீ உயிர் வாழ்வது என்னுடைய தயவினாலேதான். எனது காதலை ஏற்றுக் கொள். என்னை உன் தலைவனாக ஏற்றுக் கொள்வதாகத் தலை குனிந்து வணங்கு.” 

“சிற்றின்ப விவகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்னுடைய நெஞ்சம்… வணக்கம் அபிநயமன்று. தியாகமே வணக்கம்; பக்தியே வணக்கம்.”

விட்டிலின் நெஞ்சிலே சினங் கனன்றது. வெயர்ப்பு சிரசு மட்டும் ஏறிற்று. 

“நீ என்னை வணங்காது போனால் நான் உன்னை அடிபணியச் செய்வேன். நான் உன்னை அநுபவிப்பேன்; இல்லையேல் அழிப்பேன்.” 

விட்டில் அந்தரத்தில் எழுந்து, தனது இறக்கைகளிலே காற்றினை இறைத்துக் கொண்டு, சுடரை ஒரு கணந் தழுவி, அப்பாற் சென்று விழுந்தது. ஒரு கணப் பொழுது சுடரின் மூச்சுத் திணறியது; உயிர் ஊசலாடியது. 

விட்டில், உயிர்க்கொட்டை உடைக்கும் வகையிற் கோரமாகச் சிரித்தது. 

”அற்பச் சுடரே! பார்த்தாயா உன் பலத்தையும் என் பலத்தையும் என் தயவு உனக்குத் தேவை. இப்பொழுதே என்னை வணங்கி, உயிர் பிழைத்து வாழ்.” 

சுடர் மீண்டுந் தலை நிமிர்ந்து நின்றது. 

“பலாத்காரத்திற்குப் பயப்படுங் கோழைகள் அபிநயிக்கின்றார்கள் வணக்கம் ஞானத்திலே மலர்கின்றது; பக்தியிலே மலர்கின்றது”. 

“புத்தி கெட்டவளே! என் மண்டையிலே புகமுடியாத தத்துவம் பேசாதே. மகா கர்வியான உன்னை அழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்.” 

சுடர் பதிலெதுவுஞ் சொல்ல வில்லை. பக்தியின் நிறைவிலே பிரகாசித்தது. 

விட்டில், தனது மூர்க்கப் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி அதனைத் தழுவிற்று. 

விரல் நொடிப்பு நேரம். 

விட்டில் தரையிலே விழுந்தது. மரணாவஸ்தையுடன் முணங்கியது. 

“என் இறகு பொசுங்கிவிட்டது. என்னால் வாழ முடியாது..என்னை நீ அழித்துவிட்டாய்” 

“இல்லை. நீ உன்னையே அழித்துக்கொண்டாய்.” 

“மென் காற்றிலேகூட அசைந்தாடும் உன் துரும்பு உடலிலே எப்படி அந்தப் பலம் வந்தது?… என் பலம் எங்கே?” 

“உன் பலம், உன்னுடைய பலமே! அஃது உன்னுடன் வாழும்; உன்னுடன் மாளும்.” 

“உன் பலம்?” 

“என் பலம் ஈசனின் பலம்.” 

“அதை எப்படிப் பெற்றாய்?” 

“அதுவே என் யோகமும், பக்தியும்.”  

சென்னியிலே ஈஸ்பர நாமத்தைத் தாங்கி, தியானப் பொலிவுடன், சுடர் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. 

– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *