பயன்
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த நெற்பயிரின் கதிர் பரிபாக முற்றது. கதிரை நந்நெல் முத்துக்கள் பூஷிதஞ் செய்தன. பொன் நிறங் கூட்டித் துவண்டது. நிறைமாதக் கர்ப்பவதியின் மடிச்சுமை. பெண்மையின் பூரிப்பு. தனக்கு உயிரூட்டிய பூமித்தாயை வாஞ்சையுடன் முத்தமிட்டது. பாசம் குனிந்து இணைத்தது. கவிழ்ந்த தலை நிமிரவேயில்லை.
அந்தப் பயிருக்குப் பக்கத்தில் இன்னொரு நெற்பயிர். அதன் கதிரிலே, நெல்மணி உருவங்கொண்ட நாலைந்து பதர்கள். கனமுமில்லை; பயனுமில்லை. அஞ்ஞானத்திலே விளைந்த ஏமாப்புடன், அவற்றை ஏந்தி, வானை நிமிர்ந்து பார்த்தது. பெண்மைக்குப் பொருந்தாத ஆண் மைச் சிலிர்ப்பு. அந்தக் கழனியின் அல்லிராணியெனத் தன்னைத் தானே கற்பித்துக் கொண்டது.
தலை கவிழ்ந்து, நிலத்தினைத் தொடும் பயிரைக் கண்டதும் அதற்கு ஏளனந் துளிர்ந்தது.
மண்ணைக் கல்லவா கீழே பார்க் கின்றாய்? நிமிர்ந்து நின்று விண்ணைப் பார்; வானத்துப் புதுமைகளைப் பார்!”
பூரண விளைச்சல் எய்திய பயிரி னால் தலையைத் தூக்க முடியவில்லை.
‘பூமாதேவி தன் நெஞ்சைப் பிளந்து, பசளை மண்டிய தனது மண் மஞ்சத்திலே என்னைக் கிடத்தி வளர்த்தாள். அவள் தந்த உணவில் நான் வளர்ந்தேன்; விளைந்தேன். அதற்காக நான் அவளை அஞ்சலி செய் கின்றேன்.’
‘‘கூனிக் குறுகி நிற்பதற்குப் பெயர் அஞ்சலியா? அடிமைப் புத்தி! நான் சுதந்திரப் பிரியை.”
செந்நெல் கொத்துடன் சாய்ந்து விட்ட பயிர் பதிலெதுவும் பேச வில்லை.
“மகளே! உன்னால் நான் பெருமை அடைந்தேன்” என்று பூமித்தாய் தன்னை அஞ்சலி செய்யும் பயிரின் செவிகளிலே கொஞ்சினாள்.
செருக்குடன் விண்ணைப் பார்த் துப் புதுமை பேசிய பயிருக்குப் பூமித் தாயின் பேச்சுக் கேட்டது. அழுக்காறு மூண்டது. சினம் சென்னிவரை ஏறிற்று.
“பூமியே, நீ ஓரவஞ்சகி!” எனக் கத்திற்று. ஆத்திரத்தில் அதன் உடம்பு ஆடிற்று.
“இளைய மகளே! நீ உன்னை மறந்து பேசாதே. இப்பொழுதும் நான்தான் உன்னையுந் தாங்கிக் கொண்டிருக்கிறேன்..” என்று பூமித் தாய் மிகவும் அமைதியாகப் பதில் சொன்னாள்.
“என்னைத் தாங்குவது உன்னுடைய கடன்மை. அதற்காக நான் உனது சிற்றடிமையாக வாழவேண்டுமா? நான் சுதந்திரப் பிரியை.”
“விளைவும் – பயனும்! அதுதான் சுதந்திரம் ”
“நீ சுத்தக் கர்நாடகம், நீ பேசுவது ஒருவருக்கும் விளங்காது.”
பொறுமையை அணிகலனாகப் பூண்ட பூமித்தாயின் நெஞ்கில் இந்த ஏளனச் சொற்கள் சுருக்கென்று ஏறின. ஒரு கணம் நிதானந் தவறியது.
”நான் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு, நீ உன்னையே நீ புரிந்துகொள்ள வேண்டும்.”
“நான், நானே தான்”.
“ஆம். ஆனால், பதர்!”
“உன்னை நான் என் காலால் மிதிப்பேன்” என்று அகம்பாவச் செருக்குடன் முனிந்து, மீண்டும் வானையே பார்த்தது.
முற்றி விளைந்த நெல்மணிக் கொத்து பூமித்தாயின் வயிற்றைத் தழுவியது.
அவளுடைய சினந் தணிந்தது. பெருமையிலே சீதளச் சுகம் பருகுகின்றாள்.
பதரைச் சுமக்கும் பயிருக்குப் பதில் உத்தரம் எதுவுஞ் சொல்ல வில்லை.
– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: August 3, 2025
பார்வையிட்டோர்: 364