நான்… உன்னை அழைக்கவில்லை..!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 100

அது ஒரு சின்ன ஐடி கம்பெனிதான். என்றாலும், அதிலும் ஆண்களும் பெண்களுமாய் அனேகர் வேலை செய்தார்கள். அங்கே புதிதாய் வேலைக்குச் சேர்ந்தான் குமார்.
பார்க்க, ‘சுருள் முடி நடுத்தர உடல்வாகு, சிவப்பு நிறமென’ சினிமா ஸ்டார் மாதிரி இருந்தான். அவன் மேல் அங்கிருக்கும் எல்லாருக்கும் ஒரு கண்! அதிலும், குறிப்பாக, அனிதாவுக்கு ஒரு ஈர்ப்பு!
ஒருநாள் குமார் கேண்டினில் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு வீடியோ கால்…
‘ஹாய்..! யூ ஆர் சோ ஹான்சம்.!. உன்னோடு தனியாப் பேச விருப்பம் சம்மதமென்றால் சொல்!’ போன் கால் துண்டிக்கப்பட்டது.
யார் அது? கம்பெனியில் இல்லாத முகமாய் இருக்கிறதே! யாராய் இருக்கும்?! யோசித்தபடி வந்து சீட்டில் அமர, டொபுக்குனு ஒரு மெயில் சிஸ்டத்தில் வந்து விழுந்தது.
அதிலும் கன்னா பின்னான்னு … செய்திகள்..! குழம்பினான். பதில் அனுப்பினான். ‘யார் நீ? நேரில் பேச வா!’ மெயில் அனுப்பினால் ஒரு ஐந்து நிமிடத்தில் பதில். ‘இது ஆட்டோமேட்டட் சிஸ்டம்!’. இதையே தங்கள் மெயில் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான சான்றாகக் கொள்ளவும் என்று.
நேரில் பேசாமல், இப்படிக் கொல்கிறாள்….! மெயில் அனுப்பினால், மெயில் போகிறது., பதில்தான் வருவதில்லை…! யாராய் இருக்கும்?! ஒரே குழப்பம் ஆறு மாதமாய்!.
ஒருநாள் ‘லோகல்’ டிரெயினில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் அதே வீடியோ கால் படி நின்றபடி பயணித்துக் கொண்டிருந்தான். ரயிலில் கூட்டம் பிதுங்கி வழிந்தது. செல்லை எடுத்து ஆன் செய்தால்… ‘ஹேய்! எட்டித் தான் பாரேன்! நான் உன்னை அழைக்கவில்லை..! … உன் உயிரை அழைக்கிறேன்…?!’ போன் கட்டானது.
ரயில் வாசலின் படியில் நின்று பயணித்தபடியே எட்டி ரெண்டு பக்கமும் பார்க்க, யாரும் தெரியவில்லை!. அன்று நிறைய பெண்கள் கூட படியில் நின்றபடிதான் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் யார்? யாராய் இருக்கும்?! என்று சிந்தித்தவன், வண்டியோட்டத்தில் நெருங்கி வரும் ‘சிக்னல் போஸ்ட்’ மிக ஒட்டிவருவதைக் கவனிக்கத் தவறி, தலையை நீட்டி ஆளைக் கண்டுபிடிக்க எத்தணிக்கையில் ‘டொம்!’ என்ற சப்தத்தோடு பிடிநழுவி அவன் விழ்ந்து டிராக்கில் தலை சிக்கத் துண்டு துண்டாய் சிதைந்து கொண்டிருந்தான் குமார்.
AI தொழில் நுட்பத்தால் நண்பர்களுக்குள் கலாய்க்கச் செய்த காதல் விளையாட்டில், குமார் காலனுக்குப் பலியானதுதான் மிச்சம்!.
இது ‘A1 காதலா? AI காதலா?’ AI முறையில் பெண்பேசுவதாக புரோகராம் செய்து, எவரோ அனுப்ப, அது புதிதாய் வேலைக்குச் சேர்ந்த குமாருக்குப் புரியாது போனதுதான் கொடுமை!
ஒன்று மட்டும் உறுதியானது ’நான் உன்னை அழைக்கவில்லை..என் உயிரை அழைக்கிறேன்’ என்று பாடாமல்..‘உன் உயிரை அழைக்கிறேன்’ என்று பாடிய அப்போதாவது அவன் விழித்திருக்கலாம்..! என்ன செய்வது?
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
