நாக்கு வளைக்கும் நல்லம்மா!
கதையாசிரியர்: பொ.சண்முகநாதன்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 359
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நல்லம்மாவை வர்ணிப்பதென்றால் ‘கட்டாக் காலி மாடு சுவைத்த பனம்பழத் தும்புகளை ஒத்த கேசம்; கழுவிய நெருப்புத் தணலன்ன கன்னம்; அட்டை அதரத்தாள்; நத்தை நாசியாள்; புலிப் பல் லாள்; பூனைக் கண்ணாள்; உரல் இடையாள்; உலக்கைக் கையாள்’ என்றவாறுதான் வர்ணிக்க வேண்டும்.
நல்லம்மாவின் தினசரி அலுவல்களில் முக்கிய யமானவற்றின் விவரம் இதோ:-
பாடசாலைகள் அலுவலகங்கள் தொடங்கும் காலை வேளைகளிலும், அவை முடிவடையும் மாலை வேளைகளிலும் அவள் தனது தெருப்படலையில் ஒரு கையும் மதில் சுவரில் ஒரு கையுமாக நின்றுகொண்டு வருவோர் போவோரையெல்லாம் பார்த்துத் தனது நாக்கு வளைக்கும் கலைக்குக் ‘கரு’ தேடிக்கொண்டிருப்பாள்.
சமையல் அல்லது வேறு வேலைகளில் ஈடுபட் டுக்கொண்டிருக்கும் இடை நேரத்தில் ‘கரு’ கிடைப்பதற்கான அறிகுறி தென்பட்டாலும் படலையை நோக்கி விரைந்து விடுவாள்.
முற்பகல் பத்து மணி தொடக்கம் பதினொரு மணி வரையும், பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் மூன்று மணி வரையும் வீடு வீடாகச் சென்று பிற ரைப்பற்றி நாக்கு வளைத்தல்!
இரவு ஏழு மணி தொடக்கம் ஒன்பது மணி வரை தனது வீட்டிலுள்ளோருடனும் வீட்டுக்கு வரு வோரிடமும் பிறரைப் பற்றித் தனது வீட்டிலுள்ள திறந்த வெளி அரங்கிலிருந்து நாக்கு வளைத்தல்!
நாக்கு வளைப்பதில் நல்லம்மாவுக்கு நிகராக வேறு யாரையும் சொல்ல முடியாது. அவளுக்குத் தானும் தனது கணவன் பிள்ளைகளும் இன்னும் தன் னைச் சேர்ந்த சிலரும்தான் உண்மையில் ஒரு குறையுமே இல்லாத உயர்ந்த பிறவிகளென்றும் மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையிலாவது குறையுடைய வர்களே என்றும் எண்ணம்.
“அவளின் அலங்காரத்தைப் பார் அலங்கா ரத்தை! இவ்வளவு காலமாகியும் இன்னும் சேலையை அழகாகக் கட்டக்கூடத் தெரியவில்லையாம்! அவளின்ரை பல்லுக்கும் சேலைக்கும் அழகாயிருக்கு.”
“வேலுப்பிள்ளை போயும் போயும் இந்த மூக் கில்லாதவனையா மருமகனாக எடுத்தான். இந்த உலகத்திலே மூக்குள்ளவன் ஒருவனும் வேலுப்பிள்ளைக்குக் கிடைக்கவில்லையாமோ?”
பெரிய பிள்ளையாகி இவ்வளவு காலமாகியும் அவள் பாவிக்கு வெட்கம் என்பதேயில்லை. குதிரைப் பாய்ச்சலில் நிலம் அதிர அதிரத் தெருவழியப் போறாளே தேவடியாள்.”
“கந்தையற்ரை நாலு பொடியளும் பள்ளிக் குப் போறதைப் பார்த்தால் எரிந்த வீட்டுக் கப்புகள் நடந்து போகிறமாதிரிக் கிடக்குது. மனிதன்ரை முழுவி யளத்துக்கு நல்ல சரக்குகள்.’
இப்படியாக நல்லம்மா ஒவ்வொருவரையும் நாக்கு வளைப்பதுமல்லாமல் அவர்கள் ஒவ்வொருவருக் கும் மூளி அலங்காரி, மூக்கறையன், குதிரை, கரிக் குருவி, பல்லன் என்றெல்லாம் பட்டங்களும் வழங்கி விடுவாள்.
நல்லம்மாவுக்கு ஆங்கிலம் எழுத வாசிக்கத் தெரியாவிட்டாலும் ஒருசில சொற்களைத் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறாள். அவைகளையெல்லாம் இடையிடையில் தனது பேச்சில் பயன்படுத்திக்கொள் வாள், ஆனால் அப்படிப் பிறர் யாராவது ஆங்கிலச் சொற்களைத் தமிழோடு கலந்து பேசினால் ” இதென்ன மோடியாம்; பேசுவதென்றால் ஒன்றில் இங்கிலீசில் பேசவேணும்; இல்லாவிட்டால் தமிழில் பேசவேணும்” என்று நாக்கு வளைப்பாள்.
அதுமட்டுமல்ல, அப்படிப் பேசுபவர்களைப் பற்றி அவர்கள் சரியாக உச்சரித்தால் கூட “இந்த வெக்கக்கேட்டை ஏன் பறைவான்? அவன் பாவி இங்கிலீசு பேசுறதென்று சொல்லிப் பச்சைப் பிழையாக இங்கிலீசுச் சொற்களை உச்சரிக்கிறான். ‘தனக்கெட்டாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்’ என்று சொல் லுவதுபோல்தான் எக்கணம் முடியும்” என்றும் நாக்கு வளைப்பாள். ஆனால் நல்லம்மா மட்டும் ‘ஏயர் மெயில்’ காகிதத்தை ‘ஏறு மயில்’ காகிதம் என்றும், ‘ஏறோப்பிளேனை’, ஏறாப் பிளான்’ என்றும், ‘ஸ்பெஷலை’, ‘புசல்’ என்றும் சொல்லும் கதைகளை யெல்லாம் யாரிடம் சொல்லி அழுவது?
நல்லம்மா கோவில் சினிமா கடைத்தெரு எங் காவது போய்விட்டு வந்தால், வந்ததும்நகைநட்டைக் கழற்றுவது, கால்முகம் கழுவிச் சாப்பிடுவது, களைப் பாறுவதெல்லாம் பிறகுதான். அதற்குமுன் தான் பாவம் அவளுக்குக் கோவில் சினிமா கடைத்தெரு அநுபவங் களை வைத்து நாலு பேருக்கு முன் நாக்கு வளைக்கும் மகத்தான கடமை மலைபோல் இருக்கிறதே! நாக்கு வளைக்கும் கடமை நல்லம்மாவுக்கு இருக்கும்போது அவள் பசி நோக்காள், கண் துஞ்சாள், கருமமே கண்ணாயிருப்பாள்.
நல்லம்மா அடிக்கடி எங்கள் வீட்டுக்கும் வரு வாள். அவளுக்கு-சூரியன் உதிக்க மறந்தாலும் தின மும் குறைந்தது நாலு பேரைப்பற்றி என்றாலும் நாக்கு வளைக்க மறவாத அந்த உத்தமிக்கு-நாக்கு வளைக்கும் கலைக்காகத் தனது உடல் பொருள் ஆவி அனைத்தை யுமே துறக்கத் தயாராயுள்ள அந்த மங்கையர் திலகத் துக்கு ஒரு தகுந்த பரிசு கொடுத்துக் கௌரவிக்க வேண்டுமென்பது எனது வெகு நாளைய ஆசை! அதற் கான பரிசும் எப்போதோ வாங்கியாகிவிட்டது. அதை அவளிடம் கொடுப்பதற்குத்தான் எனக்கு வழியும் தெரியவில்லை, வகையும் புரியவில்லை.
அந்தப் பரிசு – ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியே!
– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.
![]() |
எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
தின பலன்
எம்.பாலமுரளி
September 6, 2026
கொழும்புப் பெண்
பொ.சண்முகநாதன்
September 4, 2026
கொழும்புப் பெண் வேண்டாம்!
பொ.சண்முகநாதன்
September 4, 2026
