சிறுகதை எழுதுங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 4, 2026
பார்வையிட்டோர்: 86 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இக் காலத்தில் கதை எழுத வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. அப்படியான ஆசை இருந்தும் எழுதத் தெரியாமலும் முடியாமலும் தத்தளிப் பவர்களுக்கு இச் சிறு கட்டுரை வழிகாட்டுகிறது. இக் கட்டுரை மூலம் எழுதவும் படிக்கவும் தெரிந்த யாரும் கதைகள் எழுதிப் புகழும் பணமும் பெறலாம். 

கதை எழுத முதலில் தேவைப்படுவது, தங்கு தடையின்றி எழுதக்கூடிய பேனா, ‘புல்ஸ்காப்’பேப்பர் கள், லோங் என்பலப்புகள், முத்திரைகள் வசதியாக இருந்து எழுதுவதற்கேற்ற மேசை நாற்காலி முத லியன. இத்துடன் நூல்கள் இரவல் பெறக்கூடிய நூல் நிலைய வசதி அல்லது நண்பர்கள். இவ்வளவு வசதிகளும் உங்களுக்கு இருக்கிறதா? இருப்பின் எழுத நீங்கள் அரைவாசி தகுதியானவர்கள் என்று பொருள். மேற்படி வசதிகள் இல்லாதவர்கள் அவை களைத் தேடியதும், கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம். 

நீங்கள் இதுவரை படித்த கதைகள் எத்த னையோ உங்கள் மனதில் மறக்காமல் இருக்கலாம். அவைகளில் ஒரு பத்துச் சிறு கதைகளை நன்கு ஞாப கப்படுத்திக் கொண்டு அவற்றிலுள்ள சம்பவங்கள் நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து மாற்றி மாற்றிப் பாருங்கள்; சிறு கதை வந்து விடும். இது சிறிது கடினமாக இருந்தால் கதைகளை முன்னுக்கு வைத்துப் பார்த்துக் கொண்டே இந்த வேலைகளைச் செய்யுங்கள். 

இரண்டாவது வழி. நீங்கள் தமிழல்லாத பிற மொழி ஒன்றை இரகசியமாக ஒருவருக்கும் தெரியாது கற்க வேண்டும். அந்த மொழியை நீங்கள் பேசவோ எழுதவோ, தெரியுமென்று ஒருவருக்கும் காட்டிக் கொள்ளக்கூடாது. இதன்பின் நீங்கள் அம்மொழிக் கதைகளை இரகசியமாக வாங்கி மொழிபெயர்த்து விடுங்கள். 

மேலே காட்டிய இருவழிகளாலும் நீங்கள் சிறந்த எழுத்தாளர்களாக வரமுடியும். ஆரம்பத்தில் இந்த வழிகளைக்கொண்டு சிறுகதைகள் எழுதுங்கள். பின் போதிய பயிற்சியும் திறமையும் ஏற்பட்டபின் நாவலையும் நாடலாம். இந்த வழிகளைப் பின்பற்றி எழு தத் தொடங்கியதும் ஏதாவது பேட்டியின் போதோ பேச்சுவாக்கிலோ நீங்கள் யாருடைய எழுத்தில் ஆராய்ச்சி நடத்தினீர்களோ அவர்களை உங்களது அபிமான எழுத்தாளர் என்றே அவர்களது எழுத்துக்களைப் படித்ததென்றே சொல்லிவிடக் கூடாது. பிற மொழிகளிலிருந்து கதைகள் தயாரித்தவர்கள் தங்க களுக்குப் பிறமொழி தெரியாதென்றும், பிறமொழிக் கதைகளைப் படிப்பதில்லையென்றும் சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் அகப்பட்டுவிடுவீர்கள். 

இது தவிர இன்னொரு முறையிலும் கதைகள் எழுதலாம். சில வேளைகளில் உங்களுக்குத் தெரிந்த. வர்கள் உங்களிடம் தாங்கள் எழுதிய கதையைக் காட்டி அல்லது தங்களது கற்பனையில் தோன்றிய கதையைச் சொல்லி “ எப்படி என் கதை ? பத்திரி கைக்கு அனுப்பலாமா?” எனக் கேட்பதுண்டல்லவா? அப்பொழுது நீங்கள் அக்கதை கூடாதென்றால் “நல் லது அனுப்பிப்பாரும்” என்று சொல்லுங்கள். உண் மையிலேயே நல்லதென்றால் “நல்ல கதையாயிருக்கு. ஆனால் போயும் போயும் எங்கள் இருவருக்கும் ஒரே கற்பனையா தோன்ற வேண்டும் ? இதே கதைபோல் நானும் அல்லவா ஒரு கதை எழுதி இன்றுதான் பத் திரிகைக்கு அனுப்பியிருந்தேன் என்று ஒரு பொய் யைச் சொல்லுங்கள். நண்பர் அவ்வளவுடன் நின்று விடுவார். இதன்பின் நீங்கள் நண்பரின் கதை யை உடனே எழுதிப் பத்திரிகைக்கு அனுப்பி விடுங்கள். 

நீங்கள் எந்த வழியில் கதைகள் எழுதினாலும் கதைகளுக்குத் தலைப்பிடுவதையும் பாத்திரங்கள் ஊர்கள் தெருக்களுக்குப் பெயர் சூட்டுவதையும், மட்டும் என்றாலும் உங்களது சொந்த அறிவிலிருந்து எடுத்து எழுதவும். 

இப்பொழுது உங்களுக்கு கதை எழுதுவது மிகவும் கடினமாகத் தோன்றாது என எண்ணுகி றேன். ஆனால் இன்னும் ஒரு கட்டத்தைக் கடந்தால் தான் நீங்கள் வெற்றிகாணமுடியும். 

பத்திரிகை ஆசிரியர்கள் இருக்கிறார்களே! அவர்களுக்கு இந்தப் புது எழுத்தாளர்கள் என்றால் மிகவும் ஆத்திரம். கதை கிடைத்ததும் ‘திருட்டுக் கதையாக இருக்கும் அல்லது தகுதியற்றதாயிருக்கும்’ என வாசிக்காமலேயே குப்பைக் கூடைக்குள் போட்டு விடுவார்கள். முன்பு எழுதியவர்களாக இருந்தால் ஒருவித தயக்கமுமின்றிப் பிரசுரித்து விடுவார்கள். 

இதற்கு நீங்கள் செய்யக் கூடிய வழி கதை களுடன் அனுப்பும் கடிதத்தில் ஆரம்ப எழுத்தாளன் என்பதை “…நான் முதல் முதல் எழுதும் கதை இத்துடன்…” என்று குறிப்பிட்டுக் காட்டி விடக்கூ டாது. பழம் பெரும் எழுத்தாளர்கள் எழுதுவதுபோல் உங்கள் பத்திரிகைக்கு நான் எழுதுவது இது தான் முதல்தடவை…” என்பதுபோல் தொடங்க வேண்டும். 

இனி, நீங்கள் கதைகள் எழுதலாம். 

– கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: செப் 1965, கலைச்செல்வி பதிப்பகம், சுன்னாகம்.

பொ.சண்முகநாதன் எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (போனாச்சானா) இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளரும், நகைச்சுவை இலக்கிய முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். 'போனாச்சானா' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். வீரகேசரி' மூலம் 1961ல் எழுத்துலகில் நுழைந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு.பொ.சண்முகநாதன் அவர்கள் ஏனைய ஈழத்துப் பத்திரிகைகளான 'ஈழநாடு', 'கலைச்செல்வி', 'கலைவாணி, 'சங்கப்பலகை', 'சுதந்திரன்', 'செய்தி', 'தமிழ்முரசு', தினகரன்', 'புதினம்', 'விடுதலைப் பரணி, விவேகி', 'ராதா' ஆகியவைகளிலும் எழுதியுள்ளார். இவர் நகைச் சுவைக்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *