நன்னயம்!
 கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
 கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி கதைத்தொகுப்பு: 
                                    சமூக நீதி
 கதைத்தொகுப்பு: 
                                    சமூக நீதி  கதைப்பதிவு: September 12, 2023
 கதைப்பதிவு: September 12, 2023 பார்வையிட்டோர்: 3,267
 பார்வையிட்டோர்: 3,267  
                                    “ஏங்க சோர்வா இருக்கீங்க…? ஒடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா…? இன்னைக்கு வேலை அதிகமா….? மத்தியானம் சாப்பிட்டீங்களா…? ” எனக்கவலை மிகுந்து கேட்ட அன்பு மனைவி ரம்யாவின் கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல விரும்பாமல் தனது அறைக்குள் புகுந்து படுத்துக்கொண்டான் ரவி.

இன்று அலுவலகத்தில் நடந்ததை நினைத்தபோது நெஞ்சே அடைப்பது போலிருந்தது. ‘பதினைந்து வருடம் கணக்குப்பார்க்காமல் பட்ட பாட்டில், எதிர்கால வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளைப்பூர்த்தி செய்யவிருந்த தொழில் கோபுரம் ஒரு கணத்தில் மனதை உடைத்துச்சரிந்ததை விதி என விட முடியுமா? திட்டமிட்ட சதிதான் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி தெரிந்ததை நினைத்தவன் கண்ணீர் விட்டான், கதறி அழுதான்.
ஏமாற்றியவன் மீது கோபம் வந்தது. ஆத்திரம் வந்தது. ‘எதிரே நின்று எதிராக செயல் படுபவர்களைக்கூட எதிரிகளாக இருந்தாலும் விட்டு விடலாம். கூடவே இருந்து குழிபறித்து அதில் எழமுடியாமல் தள்ளிய நம்பிக்கைத்துரோகியை மன்னிக்கவே முடியாது. அவனையும், அவனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும்’ என்கிற கோபம் குரோதமாக, கொலைவெறியாக தலைக்கு ஏறியது.
கற்பனையில் துரோகியை கதறக்கதறக்கொன்றே விட்டான். கற்பனைக்கே உடல் நடுங்கியது. உடனே கற்பனையை நிஜமாக்கிட மனம் ‘போ, போ’ என கூறி அவசரப்படுத்திய போது, அவனது அறிவு பின் விளைவுகளைச்சிந்தித்து போக விடாமல் தடுத்தது. மனதுக்கும் அறிவுக்கும் பெரும் போராட்டமே நடந்தது. முடிவில் அறிவு வென்றது.
பதினைந்து வருடங்களாக உறவினர் ராக்கியுடன் தனது சொத்துக்களை அடமானம் வைத்து கூட்டாகத்தொழில் நடத்த வங்கியில் கையெழுத்திட்ட ரவி, தனது உழைப்பிற்கு சம்பளம் எடுத்துக்கொண்டாலும் தொழிலில் வரும் லாபத்தில் சரிபாதி இருவருக்கும் பங்கு உண்டு என்பதை எழுத்தால் இல்லாமல் பேச்சால் ஒப்பந்தம் செய்து கொண்டான். தொழில் வளர்ந்தால் பிற்காலத்தில் பிரித்துக்கொள்ளலாம் எனும் நம்பிக்கையில் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்தான்.
தொழில் பல மடங்கு வளர்ச்சி பெற்றதோடு, கூட்டாளி ராக்கி தனது மனைவி மற்றும் மனைவியின் உறவுகளின் பெயரில் பல நிறுவனங்களை இந்த நிறுவன லாபத்தில் வந்த பணத்தில் அமைத்துக்கொண்டான். இந்த நிறுவனத்துக்கு வாங்கிய கடனை அடைக்காமல், ஆரம்பத்தில் ரவியின் சொத்தின் மீது வாங்கிய கடனை சொன்னதை விட பத்து மடங்கு அதிகமாக, வங்கி அதிகாரியை உடந்தையாக்கி கடன் பெற்றதும், இன்று வங்கியிலிருந்து வந்த நோட்டீஸ் ரவிக்கு காட்டிக்கொடுக்க, ஓடிச்சென்று ராக்கியிடம் கேட்ட போது எல்லாம் தொழிலால் ஏற்பட்ட நஷ்டத்தில் கூடுதல் கடனாகி விட்டதாகவும், சரி செய்ய போராடியும் முடியவில்லையெனவும் கூற, உண்மையிலேயே தான் ஏமாற்றப்பட்டதைப்புரிந்து தனது பழைய பைக்கை எடுத்து பதட்டமான மனநிலையுடன் என்ன செய்வதென்றே தெரியாமல் வீடு செல்ல, ஏமாற்றிய ராக்கியோ பதட்டமில்லாமல் விலையுயர்ந்த காரில் எதுவுமே நடக்காதது போல் சென்றான்.
ராக்கி படித்திருக்கிறானே தவிர சொத்து எதுவும் கிடையாது. அதுவும் குடிகார தந்தையால் படிக்க கூட கட்டணம் கட்ட முடியாத நிலையில் தாயின் கூலி வேலையால் கிடைத்த வருமானத்தில் சிக்கனமாக இருந்து படித்தவனுக்கு எப்படியாவது பெரிய பணக்காரனாகி விட வேண்டுமென்ற வெறி அதிகமானது.
ஆரம்பத்தில் தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்ததும் பணம் கையாளும் கேசியர் வேலை கிடைக்க, தினமும் நிறுவன வருமானத்தை வங்கியில் போடச்செல்பவன் தனக்கென ஒரு கணக்கைத்தொடங்கி நிறுவனப்பணத்தை தனது கணக்கில் போடுவதும், பின் அதை எடுத்து நிறுவன கணக்கில் போடுவதுமென போலியாக தனது கணக்கில் அதிக வரவு செலவு வைக்கும் நிலையைக்காட்ட, வங்கி மேளாளரும் அதிகளவில் பணம் போட்டு எடுப்பதால் பழக்கமாகி தனியாக தொழில் ஆரம்பிக்க கடன் கொடுக்க முன்வர, கடனுக்காக அடமானம் கொடுக்க சொத்துக்கள் இல்லாததால், வேலைக்குச்சென்று கொண்டிருந்த உறவினர் ரவியை மூளைச்சலவை செய்து அவனது சொத்துப்பத்திரங்களை வாங்கி அளவான கடனென பொய் சொல்லி அதிக கடன் வாங்கி இன்று அந்த ஊரிலேயே அதிக விலை கொண்ட காரில் பவனி வருவதோடு பல கோடிக்கு சொந்தக்காரனானவன், ஆரம்பத்தில் உதவிய ரவியை ஒன்றுமில்லாத நிலைக்கு தள்ளி விட்டது தான் ரவியின் மனக்குமுறலுக்கு மூலகாரணம்.
ரவியை அறிவு தடுத்தது. ‘ராக்கியைக்கொன்று விட்டால் நீ பதினைந்து வருடங்கள் ஜெயிலுக்குப்போக நேரும். குழந்தைகளும், மனைவியும் அனாதையாவதோடு தீராத கொலைப்பழி காலத்துக்கும் குடும்பத்துக்கு வந்து சேரும். அவனைக்கொன்றதாகவே நினைத்து மனதைச்சாந்தப்படுத்திக்கொள். பதினைந்து வருடங்கள் ஜெயிலில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டு உனது அனுபவத்தையும்,திறமையையும் வைத்து தொழில் செய். பதினைந்தாவது வருடம் நீ நல்ல நிலைக்கு வருவாய் ‘என்றது.
மறுநாள் உறவினர்கள் பலரை அழைத்துச்சென்று ராக்கியிடம் நியாயம் கேட்டும் ‘ஒரு ரூபாய் கூட தன்னால் இந்த நிறுவனக்கடனை வேறு நிறுவன லாபத்திலிருந்து கொடுக்க முடியாது’ என கையை விரிக்க, சோகமாக வீடுவந்தான் ரவி.
நிறுவனம் மற்றும் அடமானத்துக்கு கொடுத்த சொத்துக்கள் விற்றதில் கடன் மட்டுமே அடைந்ததோடு இனி மேல் வங்கியில் கடன் வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
நண்பர் ஒருவர் ரவியின் நிலையைப்பார்த்து தனது நிறுவனத்தில் வேலை கொடுத்ததோடு லாபத்தில் பத்து சதவீதம் கொடுப்பதாக உறுதியளித்தார்.
சில வருடங்களில் தனியாக தொழில் செய்ய, யாரும் எதிர்பாராத அளவிற்கு வளர்ச்சி லாபங்களைக்கொட்ட, அனைவரையும் மூக்கின் மீது விரலை வைக்கச்செய்தது.
பதினைந்தாவது வருடம் அறிவு சொன்னது போல், பொறுத்துக்கொண்டு வாழ்ந்தவன் மனச்சிறையிலிருந்து வெளியே வந்த போது தன்னை ஏமாற்றிய ராக்கி தொழில் நஷ்டத்தால் வீடு, வாகனம் என அனைத்தையும் இழந்து, எதுவுமற்ற நிலையில் உடலில் தோல் நோய் வந்து உயர் சிகிச்சைக்குச்செல்லவும் பணமின்றி சிரமப்படுவதாக அறிந்தவுடன், அதற்குரிய பணத்தை அவனது வங்கிக்கணக்கில் செலுத்தியபோது ஊரும், உறவும் ரவியை வியப்பாகப்பார்த்தனர்.
‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ எனும் திருக்குறளை தனது நிறுவன அலுவலகத்தின் முன் எழுதி வைத்துக்கொண்டான் ரவி.
|  | ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... | 
 
                     
                       
                      