தத்துவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2025
பார்வையிட்டோர்: 228 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விழுதுகளுன்றி, செழுங்கிளைகள் பரப்பி, பல நூற்றாண்டு காலம் வாழ்ந்துவிட்ட ஆலமரம். அது விரித்துள்ள நிழலிற் சுகிக்கும் மான்தோ லாசனத்தில், பல தலைமுறைகளைச் சேர்ந்த சீடர்களைக் கண்ட குருநாதர் அமர்ந்திருக்கின்றார். அவரிடம் ஆய கலைகளனைத்துங் கற்றுத் தேறிய சீடர்கள் மூவர் அஞ்சலி செய்து நிற்கின்றார்கள். 

குருநாதர் பேசத்தொடங்கினார்:

”சீடர்காள்! விண்ணிலே பறக்கவும், மண்ணைக் குடைந்து அதன் மத் திய கோளம்வரை செல்லவும், அற்ப ஜீவராசிகளின் மொழிகளைப் புரிந்து கொள்ளவும், வேண்டிய நேரத்தில் மனதில் நினைத்த உருவங்களிலே தோன்றவும் பல அரிய விநோத வித்தைகளைக் கற்பித்திருக்கிறேன். சாமானிய மானிடன் அறியவே முடி யாத அற்புத வித்தைகள். இவற்றினை ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினால், ஞானாபிவிருத்தியின் சுகங் கிட்டுகின்றது… வினாவும் அதற்கான விடை யும். இவற்றின் நித்திய சுழற்சியிலே தான் தத்துவத்தின் உண்மைகள் கல்லியெடுக்கப்படுகின்றன… இவ்வளவு காலமும் கிளிப்பிள்ளை மனப் பாங்குடன் பாடங்களை ஒப்புவித்து வந்தீர்கள். இன்று உங்களுடைய சுய ஆற்றல்களைப் பரீட்சித்துப் பார்க்கப் போகின்றேன்.” 

குருநாதர் பேசுவதை நிறுத்திச் சீடர்களைப் பார்க்கின்றார். மூவரது இரு மூன்று விழிகளையும் அவரது தீட்சண்யம் துழாவுகின்றது. 

“தங்களுடைய சித்தம்.” 

“இந்தப் பரீட்சையிலே முன்பெவருந் தேறவில்லை.” 

“நாங்கள் வெற்றி பெறுவோம்,” என மூவரும் ஒரே குரலிற் பதிலிறுக்கின்றனர். 

குருநாதர் குஞ்சிரிப்பு ஒன்றினை உகுக்கின்றார். 

“நம்பிக்கைதான் வெற்றியின் அடித்தளம்.” 

”சொல்லுங்கள செய்யக் காத்திருக்கின்றோம்,” என ஒருவன் துரிதப் படுத்துகின்றான். 

”அவசரம் அஞ்ஞானப் பாதை; நிதானம் தெளிவுப் பாதை. ஒரு வினாவுக்கு உங்களுடைய விடை தேவை”. 

“வினாவா?” 

“ஆம். இது மனிதனின் தன்மயமான சுய விசாரணை. நாம் எப்படித் தோன்றினோம்? ஏன் தோன்றினோம்? புதிய சந்ததிகள் ஏன் தோன்று கின்றன? – இப்படிச் சங்கிலிக்கோவை யான பல வினாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது வாழ்க்கை. வாழ்க்கை சிருஷ்டிச் சக்கரத்திலே சுழல்கின்றது. வாழ்க்கையென்னும் சக்கரத்தினைச் சுழற்றும் அந்தச் சிருஷ்டித் தத்துவம் என்ன என்பதுதான் கேள்வி. ” 

“சிருஷ்டித் தத்துவம் என்றால் என்ன?” – என மூவருங் கேட்கின்றனர். 

“ஆம். இந்த வினாவுக்கு அறுபது நாழிகைகளுக்கிடையில் விடை தர வேண்டும்.” 

மூவருங் குருதேவரை வணங்குகின்றார்கள்.

”இந்தச் சிருஷ்டித் தத்துவ முடிச்சினை எவன் அவிழ்க்கின்றானோ, அவனே என் வாரிசு. அவனே நான் அமர்ந்திருக்கும் மான்தோலாசனத்தில் அமருவான்… ஞாபகமிருக்கட்டும்.. வினாவும் அதற்கான விடையும். அஃது அறிவுப்பாதை”. 

மூன்று சீடர்களுடைய உள்ளங் களிலேயுஞ் சிருஷ்டித் தத்துவத்தினை அறியும் ஆவல் விஸ்வரூபங் கொள்ளுகின்றது. 

ஒருவன் விண்ணிலே பறக்கின்றான்.  

இன்னொருவன் மண்ணைக் குடைந்து வெகு வெகு உள்ளே நுழைகின்றான். 

மற்றவன் குருநாதர் முன்னால் கைகட்டி நின்று யோசிக்கின்றான். 

குருதேவர் தமது நேத்திரங்களை இமைக் கபாடத்திற்குள் பூட்டி, நிஷ்டையில் ஆழ்கின்றார். 


அறுபது நாழிகைகள் கழிகின்றன. 

குருநாதரின் விழிகள் திறக்கின்றன.

விண்ணிலே பறந்தவன் திரும்பவில்லை. 

மண்ணைக் குடைந்து சென்ற 

கைகட்டி நின்றவன் மட்டும், எதிரிலே நிற்கின்றான். அவன் மருங்கில் ஒரு பெண். 

சீடன் குருதேவரை வணங்கி எழுகின்றான்.

“விடை கிடைத்ததா?” 

“ஆம், சுவாமி.” 

“யாது?”

”விடையா? இதோ!..” எனப் பெண்ணைக் காட்டுகின்றான். 

குருநாதர் ஏளனமாகச் சிரிக்கின்றார். 

இவள் ஒரு பெண். பலவீனங்களின் உருவம். 

“ஆனாலும், என் அன்னை”. 

‘அன்னை’ என்கிற வார்த்தை குரு நாதரின் உள்ளத்திலே பல தடவைகள் எதிரொலிக்கின்றது. ஒரு கணஞ் சிந்தனைத் திரிகையில் மூளை அரைக்கப் படுகின்றது. 

பேச்சு எதுவும் வரவில்லை. 

ஆலமரத்தின் கீழிருந்து எழுந்து நடக்கத் தொடங்குகின்றார். 

மான்தோலாசனம் வெறுமையாகக் கிடக்கின்றது. 

அன்னை அவனைப் பார்த்து முறுவலிக்கின்றாள். 

சீடன் மான்தோலாசனத்தில் அமர்கின்றான்.

– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *