தகுதி!




இளம் வயதிலேயே அறம் சார்ந்த நல்ல புத்தககங்களை வாசிக்கும் வாய்ப்பை இறைவன் ரகுவுக்கு வழங்கியிருந்தும்,அதன் படி நடக்க இயலாத நடைமுறை வாழ்வின் மாயைச்சிறையில் அவன் அடைக்கப்பட்டதால், அந்நெறியை முழுமையாக கடைப்பிடிக்காமல் பணம்,பணம் என்று அதன் பின்னால் ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டான் !
ஒரு நாள் இயல்பாக அவனைப்பார்த்து விரும்பி சிரித்த பெண் கூட மறுநாள் முகம் திருப்பி சென்றதையும்,தன்னை விட கூடுதல் வயதுடைய ஆணுக்கு அப்பெண்ணை மணம் பேசி முடிக்கப்பட்டதையும்,அவளது திருமணத்துக்கு பின் ஒரு நாள் கோவில் விழாவில் அவளை நேருக்கு நேர் சந்தித்த போது கண்களில் கண்ணீர் மல்க அப்பெண் ரகுவை நோக்கியதையும்,சொத்தும் பணமும் மனம் சேர அனுமதிக்காத சமுதாய முரண்பாட்டின் அபத்தத்தை எண்ணி அவனும் பதிலுக்கு கண்ணீர் சிந்தி உடனே இடம் பெயர்ந்ததையும் இன்றும் சில சமயம் அசை போட்டுப் பார்க்கின்றான்!
தொடர்ந்து அவளருகில் நின்றால் இருவருடைய மனங்களும் என்ன செய்யும் என்பதை அறிந்ததாலும், வேறொருவரின் இணையை மனதாலும் தீண்டலாகாது எனும் அவனது பிடிவாத குணத்தாலும், அப்பெண்ணை எந்த நிலையிலும்,எப்போதும் சந்திக்காத சூழ்நிலையை உருவாக்கி சமூக கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளித்தான் ரகு!
சந்திப்பது தவிர அவளைப்பற்றி சிந்திக்கும் எண்ணமும் தனக்குள் வராமல் தடுத்தான். ஆம் சந்திப்பதை விட சிந்திப்பது ஆபத்தானது. சோதனையானது. வேதனை தருவது!
பணம் இல்லாமல்,சொத்து சேர்க்காமல்,வேலைக்கு போகாமல் படிப்பும்,அழகும் விரும்பியதை அடைகின்ற வழியாக இல்லை. பணம்,சொத்து என்கின்ற தகுதி சிலருக்கு விரும்பியதை,விரும்புவது விரும்பாவிட்டாலும் ஏற்க வைக்கிறது!
பணம் சம்பாதிக்காத ஒருவன் எழுதும் தத்துவங்கள் குப்பைக்கு போவதையும்,செல்வச்செழிப்பில் உள்ளவர் பேசும் பேச்சு ஆபாசமாக,அபத்தமாக,ஆணவமாக இருப்பினும் அச்சில் ஏறுவதையும்,அதைக்கண்டு கூட்டம் ஆர்ப்பரித்து கூலிக்கு கைதட்டுவதையும் கண்டு ரகுவின் மனம் வேதனை கொண்டது!
‘உண்மை,கலியுகத்தில் வாய் பொத்தி நிற்கும்,பொய்யை மெய்யென நம்பி மக்கள் ஏமாந்து துன்புறுவர்’ என்று மூத்தோர் சொல்லி வைத்த முதுமொழியின் கருத்தின் தற்போதைய நடப்பை ஒதுங்கி நின்று பார்த்து உணர்ந்து கொண்டான்!
ஒரு தாய் கூட தவறு செய்யும் தன் மகனைக்கண்டிக்காமல் “யாருதா தப்பு பண்ணறதில்லை,அவன் தான் பண்ணிட்டானா..?”எனப் பேசுவதும்,முதல் நாள் ஒருவரை இகழ்ந்து பேசியவர்,மறுநாள் அவரையே புகழ்ந்து பேசுவதையும் கண்டு அதிர்ந்து போனான். யாரிடமும் வெளிப்படையாக பேசவே அவனுக்கு பயமாக இருந்தது!
திட்டமிட்டு கடினமாக உழைத்ததால் தேவைகள் தேடி வந்தது. இப்போது பார்வையே மாறியது. அப்போது ஏளனமாக பேசியவர்கள் இப்போதும் பேசுகிறார்கள் “அவனுக்கு வசதி வந்துவிட்டதென்ற கர்வம்” என்று!
வசதி என்பது ஏறிங்கொண்டே போகும் அதற்க்கு எல்லையென்பதில்லை. வறுமை என்பது ஒன்றுமே இல்லாத போது நின்று விடும். அதற்கு கீழே செல்ல வாய்ப்பில்லை. ஆக வசதிக்கு அளவீடுகள் இல்லை என்பது அவன் கருத்து!
தற்போது பொய்யை மெய்யாக்க பலர் முயன்று கொண்டிருக்கையில், ரகு மெய்யை மெய்யாக்க முயன்று கொண்டிருக்கின்றான். ஆம். இப்போது அவன் வசதியானவனாக சமுதாயத்துக்கு தெரிவதால், முன்பு எழுதி முடங்கிக்கிடந்த அவனது தத்துவங்களும்,கருத்துக்களும் தற்போது நூல்களிலும், மேடைகளிலும் அலங்கரிக்கப்படுகின்றன!
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |