ஐந்து புலவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு நாள் ஓரிடத்தில் ஐந்து புலவர்கள் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள். ஐந்து பேரும் ஐந்து வகையான தங்கள் எண்ணங்களைப் பின்வருமாறு வெளியிட்டார்கள் : 

அவர்களுள் ஒரு புலவர் சைவப் பழம். அவர் எப்பொழுதுந் திருநீறு அணிதல் வேண்டும் என்னுங் கொள்கையுடையவர். அவர் தமது கொள்கையை வற்புறுத்திப் பேசினார். மற்றொரு புலவருடைய கொள்கை, நெய் இல்லாமல் சாப்பிடக்கூடாது; அவ் வாறு சாப்பிட்டால் அந்த உணவு பயனளிக்காது என்பது. அவர் தமது எண்ணத்தை வற்புறுத்திப் பேசினார். மற்றொரு புலவருடைய நோக்கம் ஆற்றில் நீராடுதல் வேண்டும். ஆற்றுநீர்தான் அருமையானது, ஆறில்லாத ஊர் வீண் என்பது. இவர் தமது எண்ணத்தை வலியுறுத்திப் பேசினார். 

வேறொரு புலவர் கொள்கை ‘ஒவ்வொருவருக்கும் உடன்பிறந்தார்கள் இருத்தல் வேண்டும்; உடன் பிறப்பற்றவர்கள் இருத்தல் வேண்டும்; உடன் பிறப் பற்றவர்கள் எதற்கும் உதவார்’ என்பது. இவர் தமது கருத்தைப் புலப்படுத்திப் பேசினார். ஐந்தாவது புலவர் நோக்கம் ‘ஒவ்வோர் இல்லத்திலும் பெண்கள் இருத்தல்  வேண்டும். பெண்கள் இருந்தால் தான் வீட்டுக் காரியங்கள் நன்றாக நடைபெறும். பெண்கள் இல்லாத வீடு பாழடைந்த வீடே’ என்பது. இவர் இதனை அழுத்திக் கூறினார். 

இப் புலவர்களுடைய உரையாடல்களைக் கேட்டுக் கொண்டே அங்குச் சென்றார் ஒளவையார். அந்தச் சமயத்தில்தான் பின்வரும் பாட்டு ஒளவையார் உள்ளத்தில் தோன்றியது. 

“நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் 
ஆறில்லா ஊருக்கு கழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை.” 

(உரை ) நீறு இல்லா நெற்றி பாழ்-திருநீறு இல்லாத நெற்றி பாழாகும், நெய் இல்லா உண்டி பாழ் – நெய்யில்லாத சாப்பாடு பாழேயாகும், ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ் ஆற்றைப் பெறாத ஊரினுடைய அழகும் பாழேயாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் – மாறுபடாத உடன் பிறந்தார் இல்லாத உடம்பு பாழாகும், மடக்கொடி இல்லா மனை பாழே – இல்லத்திற்குத் தக்க பெண்கள் இல்லாத வீடும் பாழேயாகும். 

(கருத்து.) திருநீறிட வேண்டும். உணவில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஊரையடுத்து ஆறு இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் உடன்பிறந்தவர்களைப் பெற்றிருத்தல் வேண்டும். இல்லத்தில் பெண்கள் இருக்கவேண்டும். 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *