கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2026
பார்வையிட்டோர்: 25 
வாசிப்பு நேரம்: 30 நிமிடங்கள்

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம் – 13

திவ்யாவின் புகுந்த வீட்டார் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை என்றாலும், மகளை அப்படியே அனுப்ப முடியாது என்று சில நகைகளை திவ்யாவுக்குக் கொடுத்தார்கள். புதிதாக வாங்கவில்லை என்றாலும், கைகளுக்கு நான்கு வளையல், ஒரு சங்கிலி மற்றும் ஒரு சிறிய அட்டிகை, பழையதை மெருகேற்றி கொடுத்ததுடன், சில பாத்திர பண்டங்கள் என்று வாங்கினார்கள்.

எப்படியும் பின்னால் அவளுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டி வரலாம். தலை தீபாவளி, பொங்கல், வளைகாப்பு, மகப்பேறு செலவுகள் என்று எண்ணிக்கொண்டுதான் திருமண செலவுகளை குறைத்துக்கொண்டார்கள். ஆனால் காவ்யா, சங்கருக்கு ஒரு சிறிய கவலை வந்தது. அவர்கள் படிப்பு மற்றும் அவர்கள் வாழ்க்கைக்கான சேமிப்பை திவ்யாவுக்கு செய்துவிட்டார்களோ என்று! அதனாலேயே பெற்றோர்களை நச்சரிக்கத் தொடங்கினார்கள். திவ்யா திருமணம் முடிந்து சில நாட்களில் அந்த வேலையைத் தொடங்கினார்கள்.

“அம்மா! ஏற்கனவே தேர்வு எழுதிவிட்டேன்! முடிவுகள் வந்து சில மாதங்களில் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்! பிறகு விண்ணப்பம், கட்டணம், வங்கி கணக்கு என்று எல்லாம் கட்ட வேண்டும். இன்னும் நான்கு அல்லது அதிகபட்சம் ஐந்து மாதங்கள் தான் இருக்கிறது. பிறகு நான் சொல்லவில்லை என்று சொல்லாதீர்கள்! சரியாக இந்த ஆண்டு இறுதியில் எனக்கு பணம் வேண்டும்!” என்றான் சங்கர்.

“என் அடுத்த செமெஸ்டரில் ப்ராஜெக்ட் ஒர்க் என்று டெல்லி, மும்பை என்று செல்ல வேண்டி இருக்கும். எனக்கும் பணம் தேவைப்படும். சங்கர் அளவுக்கு இல்லை என்றாலும் எனக்கும் பணம் தேவைப்படும்” என்றாள் காவ்யா.

“நீங்க ரெண்டு பேரும் என்ன கொடுத்தா வைத்திருக்கிறீர்கள்? அதெல்லாம் இப்போ எதுவும் சொல்ல முடியாது! ஏற்கனவே நாம் பேசினதுதான்! ஒருவேளை பணம் ஏற்பாடு செய்ய முடியலைன்னா, சங்கர் ஒரு வருஷம் வேலைக்கு சென்று பணம் சேர்க்கட்டும்” என்றவள் மகளைப் பார்த்து, “காவ்யா, நீதான் ஊக்கத்தொகை, பரிசுகள் என்று சேர்த்து வெச்சிருக்கியே! அதை உன் ப்ராஜெக்ட்டுக்குப் பயன்படுத்திக்கொள்” என்றாள்.

“அது நான் என் மற்ற செலவுக்கு சேர்த்து வெச்சது. படிப்பு செலவுக்கு தானே கேட்கிறோம்! அதை கூட நீங்க கொடுக்க மாட்டீங்களா?” என்றாள் காவ்யா.

“நாங்க கொடுக்காமலா, இருவரும் இதுவரை படித்தீர்கள்?” என்றாள் உமா.

“அம்மா! இவள் எப்படியோ! ஆனால் எனக்கு ஒரு வருஷம் எல்லாம் காத்திருக்கும் எண்ணம் இல்லை. அடுத்த ஆண்டு நான் வெளிநாடு போக வேண்டும். பணம் தயார் பண்ண முடியலைன்னா, இந்த வீட்டை அடமானம் வெச்சு பணம் கொடுங்க. எங்கள் இருவருக்கும் வேலை கிடைச்சதும் மீட்டு விடலாம்!” என்றான்.

“ஏய் சங்கர்? உன் படிப்புக்கு வாங்கும் கடனை நான் ஏன் அடைக்க வேண்டும்? அதுவும் இல்லாமல் நாம் இருக்கும் வீட்டை எல்லாம் அடகு வைக்க முடியாது! இதற்கெல்லாம் சுலபமான வழி ஒன்று இருக்கு. திருச்சியில் தாத்தா வீடு இருக்கிறதே! அது திவ்யா பேர்லதானே இருக்கு. அதை வேண்டுமானால் அடமானம் வைக்கலாம். அவள் திருமணத்திற்கு செலவு ஆனதற்கு பதில் அவள் அதை நமக்கு கொடுக்கட்டும்” என்றாள் காவ்யா.

பிள்ளைகள் இருவரும் அவர்கள் இருவரைப் பற்றி மட்டும் யோசிக்கிறார்கள் என்று உமா வேதனைப்பட்டாலும்,

பெற்றோர்களாக கடமையைச் செய்துவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் திவ்யாவிடம் கேட்கும் எண்ணம் முதலில் அவளுக்கு துளியும் இல்லை. கணபதியிடம் இது பற்றி பேச, “உமா! இப்போது இதற்கு என்ன அவசரம்? இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இப்போதுதானே ஒரு கடமை முடிந்தது. மற்றதை பிறகு பார்க்கலாம்,” என்றார். பிள்ளைகள் போல் சுயநலமாக இத்தனை நாட்களில் வேண்டும் என்று கணவனிடம் வாதாட முடியவில்லை. அப்போதைய வீட்டு நிலவரம் எல்லாம் உமாவுக்குத் தெரியும். அதனாலேயே திவ்யாவிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று எண்ணினாள். திவ்யாவின் பேரில் இருக்கும் வீடு, எல்லோருக்கும் பொதுதானே!

சுயமாக சம்பாதித்த சொத்துக்களை இரு பங்காக மகனுக்கும், திவ்யாவுக்கும் கொடுத்தபோது உமாவுக்கும் கணபதிக்கும் பெரிய ஆட்சேபனை இல்லை. அதை காவ்யா, சங்கர் கேட்பதில் தப்பில்லையே! அதுவும் அவர்கள் படிப்பு செலவுக்காக கேட்கலாம் என்று எண்ணினாள். ஒருவேளை திவ்யா அதற்கு சம்மதித்துவிட்டால், பிள்ளைகள் இடையே இருக்கும் இடைவெளி கூட குறைந்துவிடும். திவ்யா கொடுக்க சம்மதித்தால், காவ்யா சங்கர் இருவரும் அவள் மேல் பிரியத்தை காட்டலாம். இப்படி எல்லாம் யோசித்துதான், உமா திவ்யாவிடம் கேட்டாள். ஆனால் திவ்யாவின் மறுப்பு உமாவுக்கு கவலை தந்தாலும், உடன் பிறந்து, வளர்ந்தவர்களே ஒருவருக்கு ஒருவர் உதவ முன்வராதபோது, திவ்யா மறுத்தது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான். எப்போதும் அனுசரணையாக இருக்காதவர்களுக்கு திவ்யா ஏன் கொடுக்க வேண்டும்? ஆனால் அவள் கொடுத்தாள். அன்னை கொடுத்திருந்ததை திரும்பக் கொடுத்தாள்.

பூர்வீக வீட்டின் வழக்கு சம்பந்தமாகச் சென்னை சிலமுறை சென்று வந்த கிருபாகரனுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அரசாங்க விஷயத்தில் குளறுபடி செய்த கூட்டாளிகள் சிக்கிக்கொண்டார்கள். வேறு ஒரு நகரத்தில் அதே போல் சில தவறுகள் செய்யும் போது பிடிபட்டு இருந்தார்கள். குடும்பத்தில் நற்பெயரைக் கேள்விப்பட்டு ஒரு காவல் அதிகாரி சென்னையில் இருக்கும் மேல் அதிகாரி வரை இவர்கள் விஷயத்தைக் கொண்டு சென்றிருந்தார். அதன் பலன் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டார்கள்.

ஆனால் தங்கவேலு மேல் இருக்கும் வழக்கு அத்தனை சுலபமாக தீர்ந்துவிடாதே! அவர்களின் வழக்கறிஞர் கூட அதைத்தான் சொன்னார். “கூட்டாளிகள் பிடிபட்டது நன்மைதான். ஆனால் அவர்களிடம் உண்மையை வரவழைத்து அதன்பின் உன் அப்பாவை எல்லா வழக்கிலிருந்தும் விடுவிக்க முடியும். அதற்கு சில நாட்கள் ஆகலாம். சரியான நிலவரம் பற்றி உனக்கு விரைவில் தகவல் சொல்கிறேன்.”

அப்போதும் கிருபாகரனுக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. வீட்டிலும் யாரிடமும் பெரிதாகச் சொல்லவில்லை. அன்றாட வாழ்க்கையில் மூழ்கி விட்டான், என்றாலும் திவ்யாவுக்கு ஏதோ ஒரு வித்தியாசம் கணவனிடம் இருப்பதை அறிந்துகொண்டாள்.

“ஏதும் பிரச்சனையா?” என்றாள் அவன் முகத்தை ஆராய்ந்தபடி.

“ஒன்றும் இல்லையே!”

“சென்னை சென்று வந்ததிலிருந்து ஏதோ யோசனையாகவே இருக்கிறீர்கள்!”

“நாளை செய்ய வேண்டிய வேலையைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.”

“வழக்கு பற்றி ஏதோ விஷயம் மண்டைக்குள் ஓடுகிறது. சரியா?”

சிரித்துக்கொண்டு மனைவியின் தலையை வருடினான். “நான் யூகித்தது சரிதான்! இப்போது தான் அத்தை மாமா கொஞ்சம் சாதாரணமாக இருக்கிறார்கள். நீங்கள் இப்படிக் கவலைப்பட்டால் எப்படி?”

“கவலை என்று இல்லை. வக்கீல் விரைவில் தகவல் சொல்வதாகச் சொன்னார். இன்னும் ஒன்றும் வரவில்லை.”

“நான் முன்பே சொன்னது தான். சீக்கிரம் நாம் பெரிய வீடாக ஒன்றை இங்கேயே கட்டலாம். அதைப்பற்றி இனியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.”

“இது வீட்டைப் பற்றி மட்டும் இல்லை திவ்யா. வழக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற கவலை.”

“நம்பிக்கை இருந்தால் தானே நடக்கும். மனதில் நம்பிக்கை இல்லையென்றால் நல்லது எப்படி நடக்கும்.”

“பெரிய ஞானி!” என்று கேலி செய்தான்.

“பாட்டி அப்படிச் சொல்வார்கள். நாம் செய்யும் முயற்சி என்பது வேறு. ஆனால் மனதில் இருக்கும் எண்ணம் மிக முக்கியம். படிக்கும்போதே, இது நாளை மறந்துவிடுமோ என்று யோசித்தால் அது நிச்சயம் மறந்துபோகும். செய்யும் போதே எதிர்மறையான எண்ணம் மனதில் இருந்தால் காரியம் எப்படி நடக்கும் என்று பாட்டி சொல்வார்கள். முதலில் நம்ப வேண்டும்!”

“வழக்குகள் எல்லாம் உடனே முடிந்து, வீடு ஒரு வாரத்தில் கிடைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். கிடைத்துவிடுமா?”

“மனப்பூர்வமாக நினைத்தால் கிடைக்கும்.”

“அப்படியானால் இதுவரை, அப்படி நான் நினைக்கவில்லை என்று சொல்கிறாயா?”

“ஆமாம்.”

“இந்த இரண்டு விஷயங்களும் எவ்வளவு முக்கியம் என்று சொல்லி இருக்கிறேன். பிறகு எப்படி நாம் மனப்பூர்வமாக ஆசைப்படவில்லை என்று எப்படிச் சொல்கிறாய்!”

“ஆசை என்பது வேறு! மனதில் தோன்றுவது வேறு! சில சமயம் உணவு சமைக்கும்போது சுவையாக வர வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் மனதில் ஏதோ தோன்றும். இன்று ஏதோ குளறுபடி நடக்கும் என்று. கடைசியில் உணவுச் சுவை அவ்வளவு பிரமாதமாக வராது. அப்படித்தான் இதுவும். உங்களுக்கு வீடு கிடைக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் சிக்கல் சரியாகுமா என்று ஒரு பயம், நம்பிக்கையைத் தர மறுக்கிறது.”

“நீ சொல்வதும் சரிதான்! அந்த அவநம்பிக்கை எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கிறது. வழக்கு என்பது சீக்கிரம் முடியாதே! அதற்கு செலவு செய்துகொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. வக்கீல் பீஸ், கோர்ட் பீஸ். பிறகு வீட்டை எப்படி மீட்பது? அம்மா அப்பாவை அந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல வாய்ப்பே இல்லாமல் போகுமோ என்று கூட பயம் எட்டிப் பார்க்கிறது.”

“இதைத் தான் சொன்னேன்! ஒன்று செய்யலாம். இப்போது நான் சொல்வது போல் யோசியுங்கள். இன்னும் இரண்டு நாளில் ஒரு பெரிய நல்லது நடக்கப்போகிறது. வீடும் சில நாளில் நம் கைக்கு வருகிறது. கொஞ்சம் பராமரிப்பு வேலை செய்ய வேண்டி இருக்கிறது. வேலையை வேகமாக முடிக்கிறோம். இன்னும் இரு மாதத்தில் நாம் எல்லோரும் அந்த வீட்டுக்குப் போகிறோம். வீடு புதிதாக இருக்கப்போகிறது. நினைத்துப்பார்க்கும்போது நன்றாக இருக்கிறதுதானே!” என்று சிறு பிள்ளைக்குச் சொல்வது போல் கற்பனை செய்யச் சொன்னாள்.

“சிரித்துக்கொண்டே, “நன்றாக இருக்கிறது! ஆனால்….””

“சட்டென்று கணவன் வாயில் விரல் வைத்தாள். “நல்லது மட்டும் நினைக்க வேண்டும்.””

“சரி! அப்படியானால் இன்னும் ஒரு வருடத்தில் அந்த வீட்டில் பிள்ளைகள் விளையாடுவர் என்று நம்புகிறேன்.”

“இது கொஞ்சம் அதிகப்படி! ஒருவரிடத்தில் பிள்ளைகள் எப்படி?”

“ஏன்? நம் பிள்ளை ஒன்று! சந்தியா பிள்ளை ஒன்று!!” என்றான்.

விழி அகலப் பார்த்தாள் திவ்யா. “என்ன? நடக்கும் தானே!” என்று கேட்டான் கணவன்

“அது எனக்குத் தெரியாது!”

“நீ தானே சொன்னாய் ஆசையுடன் நம்பிக்கையும் இருந்தால் நடக்கும் என்று!” சொல்லிவிட்டு மனைவியை அணைத்துக்கொண்டான்.

“திவ்யா சொன்னால் என்று முழுமனதுடன் நம்பினானோ என்னவோ? கிருபாகரனுக்கு மறுநாள் வழக்கறிஞரிடமிருந்து அழைப்பு வந்தது. சாதகமாகப் பதில் வந்ததாகவும், உடனடியாகச் சென்னை வரவும் சொன்னார்.”

“முதலில் கிருபாகரனால் நம்ப முடியவில்லை. மதிய உணவை முடித்துக்கொண்டு அப்போது தான் வயலுக்கு வந்திருந்தான். உடன் நடந்து வந்த தந்தை “யார்?” என்று கேட்டார்.”

“வக்கீல் தான் அப்பா! ஏதோ சாதகமாக இருக்கிறதாம்! சென்னை வரச் சொல்கிறார்.”

“எப்பவும் சொல்வதுதான். இந்த இரண்டு மாதமாக நீயும் சென்னைக்குப் போவதும் வருவதுமாக இருக்கிறாய்!” என்று கொஞ்சம் அவநம்பிக்கையாகப் பேசினார். முதல் நாள் இரவில் மனைவி சொன்னது நினைவு வர, “நம்பிக்கையுடன் இருங்கள் அப்பா! எல்லாம் நல்லதாக நடக்கும்.”

“எப்போதும் மகனும் அவரைப் போல்தான் பேசுவான். ஆனால் மகன் இன்று உற்சாகமாகப் பேசவும் தங்கவேலுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.”

“இன்று இரவே வரச்சொல்கிறார்! நாம் சென்று வருவோம். துரை மாமாவும் வருகிறாரா என்று கேட்டுவிடுங்கள். நான் சென்று பயண ஏற்பாடுகளைப் பார்க்கிறேன்.” என்று வேகமாக வீட்டை நோக்கி வந்தான்.

“உணவிற்குப் பிறகு சிறிது நேரம் உறங்குவது வசந்தியின் வழக்கம். அப்படியே முற்றத்தின் ஒருபுறமாக அன்னை உறங்கிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்தவன், மனைவியைத் தேடினான்.”

“அவர்கள் அறைக்குள் உடைகளை இஸ்திரி செய்துகொண்டிருந்தாள் திவ்யா. வேகமாக அருகில் வந்து, அவளைத் தூக்கிச் சுற்றினான்.”

“என்ன செய்கிறீர்கள்? கீழே இறக்கி விடுங்கள்.” என்று கொஞ்சம் திமிறினாள். அவளை இறக்கி விடவும், “யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்!”

“யார் பார்த்தாலும் எனக்கு ஒன்றும் இல்லை!” என்று முத்தமழை பொழிந்தான்.

“ஐயோ! அத்தை வெளியே தான் படுத்திருக்கிறார்கள். இப்போது எதற்கு இந்தக் கொஞ்சல்.”

“வக்கீல் கூப்பிட்டார். உடனே சென்னை வரச் சொன்னார்.” என்றான்.

“நிஜமாகவே? அதற்குள் எப்படி? நேற்று தான் நீங்கள் மிகவும் கவலையுடன் இருந்தீர்கள்.”

“நீ சொன்னது வேலை செய்கிறது.”

“அத்தையிடம் சொன்னீர்களா?”

“இல்லை! அம்மா தூங்குகிறார்கள். வீட்டிற்கு வந்ததும் உன்னிடம் வந்துவிட்டேன். அம்மா எழுந்துவிட்டால் இப்படி உன்னை அணைக்க முடியாதே!” என்று மனைவியை மீண்டும் இறுக அணைத்து முத்தமிட்டான்.”

முன்னறைக்கு வந்து அன்னையின் அருகே அமர்ந்தான். “அம்மா!” மெல்ல அழைத்தான்.

வசந்தி அசைந்தாள். “அம்மா!” என்று மீண்டும் அழைக்க, “என்ன கிருபா? காபி வேண்டுமா?”

“அதெல்லாம் இல்லை அம்மா! ஒரு நல்ல விஷயம்!” என்றவுடன்

வசந்தி சட்டென்று திவ்யாவைப் பார்த்தாள். “நீ என்னிடம் சொல்லவில்லையே!” என்றாள்.

திவ்யாவுக்கு வசந்தி என்ன சொல்கிறாள் என்று புரிந்துவிட, முகம் சிவந்தது. “அவளுக்கு இப்போது தான் தெரியும் அம்மா!” என்று

கிருபாகரன் சொல்ல, “இது வேறு விஷயம் அத்தை. நீங்கள் நினைப்பதுபோல் இல்லை! அத்தைக்குத் தெளிவாகச் சொல்லுங்கள்.” என்றாள்.

கிருபாகரன் சொல்லவும், வசந்தி கண்கள் அவளை அறியாமல் கலங்கின.

அன்று இரவே சென்னை கிளம்பினார்கள்.

குற்றவாளிகளின் வாக்குமூலத்தை வைத்து தங்கவேலுவையும் துரையையும் வழக்கில் இருந்து விடுவிக்க மனு ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக வழக்கறிஞர் சொன்னார்.

அத்துடன் இன்னொரு நல்ல விஷயத்தையும் சொன்னார்.

“எனக்கு தெரிந்த பெரிய நிறுவனம், நிறைய நகரங்களில் வீட்டுமனைகளை அமைத்து விற்கிறார்கள். உங்களுக்கு சம்மதம் என்றால் அவர்களிடம் உங்கள் நிலத்தை பற்றி சொல்கிறேன். இனிமேல் நீங்கள் அதற்கு அனுமதி பெற்று விற்பனை செய்வதோ இல்லை அதில் விவசாயம் செய்வதோ உங்களுக்கு பெரிய லாபத்தை தரும் என்று தோன்றவில்லை. பேசாமல் அதை அவர்களுக்கு விற்று விடுங்கள். அது உங்களுக்கு நல்லது என்று தோன்றுகிறது. உங்களை வழக்கில் இருந்து விடுவித்து விட்டால், உடனே அவர்கள் இதை வாங்கிக்கொள்வார்கள்.”

கிருபாகரன் கொஞ்சம் யோசிக்க, தங்கவேலு உடனே சொன்னார், “செய்துவிடலாம் சார்! இனியும் அந்த நிலத்தை வைத்துக்கொண்டு எங்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.” என்றார். பெரும்பாலான முதலீடு முழுவதும் அவரின் பங்கு என்பதால் துரையும் எதிர்த்து ஒன்றும் சொல்லவில்லை. சில நாட்களிலேயே தங்கவேலு, துரை இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்தது தான் தாமதம், அடுத்த சில நாட்களிலேயே வழக்கறிஞர் மூலம் ஒரு குழு அவர்களிடம் வந்து நிலத்தை வாங்க சம்மதித்தது. யாரும் எதிர்பார்க்காத தொகையை கொடுக்க சம்மதித்தார்கள். இந்த சில வருடங்களில் அந்த இடத்தின் மதிப்பு நன்றாகவே ஏறி இருந்தது.

கிருபாகரன் தரப்புக்கு அதுவே போதும் என்று இருந்தது. கிடைத்த பணத்தை வைத்து வீட்டை உடனே மீட்டார்கள்.

எல்லாம் சரியாக நடந்தது. பல வருடங்களாக பராமரிப்பின்றி வீடு கொஞ்சம் சிதலமடைந்திருந்தது. அதைச் சரிசெய்ய ஏற்பாடுகள் நடந்தன.

திவ்யா சொன்னது போல் இரண்டாவது மாதம் இல்லை என்றாலும் மேலும் ஒரு மாதம் கழித்து அவர்கள் பூர்வீக வீட்டிற்கு குடிபோனார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் வீட்டின் நிலைமை தலைகீழாக மாறியது எனலாம். புதிதாக ஒரு கார் வந்தது. திவ்யாவுக்கு கொஞ்சம் மலைப்பாகக் கூட இருந்தது. வீடு திரும்பக் கிடைத்துவிட்டது என்று இப்படி ஆடம்பரமாகச் செலவு செய்வதா? வீட்டின் சுவற்றில் புது வண்ணங்கள், புது மின்சாதனங்கள், புதுப்பிக்கப்பட்ட மர சாமான்கள், புது கம்பளங்கள் என்று ஒரு வீட்டிற்கு என்னென்ன செய்யமுடியுமோ செய்தார்கள். சுற்றி இருந்த இடத்தைப் பராமரித்து, புது புல் தரை, செடிகள் என்று அமைத்தார்கள். முன்பு கிருபாகரன் காட்டிய வீடு இதுதானா என்று சந்தேகம் வரும் வண்ணம் மாற்றிவிட்டார்கள்.

வீடு கைக்கு வந்துவிட்டது என்று ஒருநாள் ஊருக்கே விருந்து போல் ஏற்பாடு செய்தார்கள். சில நாட்கள் ஆட்கள் வருவதும் போவதும் அதிகமாகவே இருந்தது.

அந்த வீடு நால்வருக்கு மிகப் பெரியது என்று தோன்றியது. அதற்கும் சில வேலையாட்கள் வந்தார்கள். அவர்கள் அங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டார்கள்.

தாத்தா சொல்லிக்கொடுத்த சேமிப்பை இங்கேயும் யாரும் கடைப்பிடிப்பதில்லையா என்ற சந்தேகம் வந்தது. தயங்கியபடியே கணவனிடம் கேட்டாள்.

“வீடு கைக்கு வந்ததும் கொஞ்சம் அதிகப்படியாகச் செலவு செய்கிறோமோ என்று தோன்றுகிறது?”

“செலவா? என்ன செய்தோம்?”

“வீடு முழுவதும் புதுப்பித்தீர்கள். இப்போது கார்! எத்தனை வேலையாட்கள்!”

மனைவி பயந்த குரலில் சொல்வதைக் கேட்டு, கிருபாகரனுக்குப் பாவமாகவும் இருந்தது, சிரிப்பும் வந்தது.

“அம்மா எப்போதும் இப்படிக் கேட்டதில்லை.” சிரிப்பை மறைத்துக் கண்டிப்பான குரலில் கேட்டான்.

கணவன் தவறாக எடுத்துக்கொண்டானோ என்று தோன்ற,

“தாத்தா எப்போதும் நாளைக்குச் சேமிக்க வேண்டும் என்று சொல்வார். ஆனால் நாம் ஆடம்பரமாகச் செலவு செய்வது போல் இருக்கிறது. அதனால் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.” மிகவும் பயந்துதான் சொன்னாள்.

“திவ்யா! என்னிடம் சொல்ல உனக்கு என்ன அவ்வளவு தயக்கம்! தைரியமாக என் சட்டையைப் பிடித்து, ‘எதற்கடா அதிகமாகச் செலவு செய்கிறாய்’ என்று கேட்கவேண்டாமா? உண்மையில் நீ இப்படிக் கேட்டது எனக்குச் சந்தோஷம்தான்.” சொல்லும்போதே அவள் கைகளை எடுத்து அவன் சட்டையைப் பற்றும் படி வைத்துக்கொண்டான்.

திவ்யாவின் பயம் மறைய, “சரி! அப்படிக் கேட்டதாக வைத்துக்கொள்ளுங்கள்!” என்று கணவன் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

“நம் வீடு இப்படித்தான் இருக்கும். எப்போதும் இங்கே இரண்டு அல்லது மூன்று பேர் உதவிக்கு இருப்பார்கள். வேலைகளை எல்லாம் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். பின்புறம் இருக்கும் கூடத்தை ஒட்டி இருக்கும் அறைகளில் இருப்பார்கள். அவர்கள் உணவு எல்லாம் நம் வீட்டில் தான். வீட்டை விட்டுப் போகும்போது, அவர்களுக்குத் தங்க வேறு ஏற்பாடுகள் செய்துகொடுத்து விட்டுத்தான் நாம் தோட்ட வீட்டுக்குப் போனோம். பிறகு கார்! முன்பு மூன்று கார்கள் இருக்கும். இடையில் விற்று விட்டோம். நிலைமை சரியாகும் வரை கார் வாங்க நினைக்கவில்லை.”

திவ்யா வியந்து பார்த்தாள். “அப்புறம் நீ கேட்ட வருங்காலத்திற்கு சேமிப்பது” என்று சொன்னவன் சில கோப்புகளை எடுத்து கட்டினான். மீதம் இருந்த பணத்தை பல சேமிப்புத் திட்டம், முதலீடு, வைப்பு நிதி என்று செய்திருந்தான்.

கிருபாகரனின் பொருளாதார நிலை அவள் நினைத்தது போல் நடுத்தரக் குடும்பம் போல் இல்லை என்று தோன்றியது. வீடு கைக்கு வந்ததும் இத்தனை மாற்றங்களா? கணவனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“முன்பே சொன்னேனே! வழக்கில் இருந்து மீண்டு வருவதும், வீடும் ரொம்ப முக்கியம் என்று! அதிகமாக அதற்காகத்தான் செலவு செய்தோம். வீட்டை மீட்க சேமித்துக்கொண்டு இருந்தோம். மற்றபடி நமக்கு வறுமை என்று இல்லை. ஆனால் நிறைய பேர் அப்படித்தானே நினைத்துக்கொண்டார்கள்.”

இந்த வீட்டிற்கு வந்த பிறகு, எல்லோர் முகத்திலும் ஆனந்தம். ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசும் தங்கவேலு, கலகலப்பாகப் பேசுகிறார்.

ஏதும் உதவி கேட்டுவிடுவார்களோ என்று ஒதுங்கிய நண்பர்கள் மெல்ல வரத் தொடங்கினார்கள். திவ்யாவுக்கு நிறைய புது அறிமுகங்கள். விலகிச் சென்றவர்கள் திரும்ப வருகிறார்கள் என்ற சலிப்போ, வெறுப்போ இல்லாமல் தங்கவேலுவும், வசந்தியும் பேசுவது வியப்பாகவே இருந்தது.

அத்தியாயம் – 14

எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அடுத்த உவப்பான விஷயமாக கீர்த்தி கருவுற்ற நற்செய்தியைச் சொன்னாள். கீர்த்தியும் அங்கேயே அதிகம் தங்கினாள்.

ஊரில் திருவிழாவும் நெருங்கி வந்தது. இத்தனை கோலாகலத்தில் திவ்யாவின் பெற்றோர்கள் கலந்துகொள்ளாமல் எப்படி?

சில வருடங்களாக ஊரின் கோவில் உற்சவத்தில் பெரிதாகக் கலந்துகொள்ளாத குடும்பம், இம்முறை பெரும் பங்களிப்பு செய்தார்கள். அங்கே இருக்கும் அம்மன் கோவிலின் விழா.

வசந்திதான் பேச்சை ஆரம்பித்தாள்.

“இந்த ஆண்டு, கீர்த்தி வீட்டிலும், திவ்யா வீட்டிலும் விழாவுக்கு அழைப்பு வைக்க வேண்டும். எல்லோரும் இருநாட்கள் இங்கேயே தங்கி இருக்கும்படி வரச்சொல்ல வேண்டும்.”

“செய்துவிடலாம்!” என்றார் தங்கவேலு.

“எல்லோருக்கும் உடைகள் எடுக்க வேண்டும். நாளை நானும் திவ்யாவும் கடைக்குச் செல்ல வேண்டும்.”

திருமணத்திற்கு வாங்கியதை விட வசந்தி வாங்கிக் குவித்தாள். மகள் கருவுற்ற சந்தோஷம். வீடு மீண்டும் கிடைத்த ஆனந்தம். யாரும் தடை சொல்லவில்லை.

கீர்த்தி வீட்டுக்கும் திவ்யா வீட்டிற்கும் அழைப்பு வைக்கப்பட்டது. கீர்த்தி வீட்டில் எல்லோரும் வருவதாகச் சொன்னார்கள். திவ்யா வீட்டிற்குப் பேசியபோது,

“எல்லோரும் வரும் இருபதாம் தேதி இங்கே வர வேண்டும்.” என்று வசந்தி அழைத்தாள்.

“என்ன விசேஷமா?” என்றாள் திவ்யாவின் அன்னை உமா.

“விசேஷம் என்றால்தான் வருவீர்களா? மகளைப் பார்க்க வர வேண்டும் தானே!”

“இங்கே காவ்யா டெல்லியிலிருந்து இருபதாம் தேதி தான் வருகிறாள். அதுதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.”

“இருபத்தி இரண்டாம் தேதி இங்கே கோவில் திருவிழா. இரண்டு நாட்கள் முன்பாக எல்லோரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும். பரவாயில்லை. நீங்கள் காவ்யா டெல்லியிலிருந்து

வந்ததும் அவளையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். சங்கரையும் அழைத்து வர வேண்டும்.” என்றாள்.

மறுத்துப் பேச முடியாத அளவுக்கு வசந்தி வற்புறுத்தினாள் எனலாம். ‘எல்லோரும் வருகிறோம்’ என்று உமா சொல்லும்வரை விடவில்லை.

உமா வருவதாகச் சொல்லிவிட்டாலும், மகனையும் மகளையும் சம்மதிக்க வைக்கப் பெரும் பாடு பட்டாள். முதலில் சங்கர் “அங்கே வந்து நான் என்ன செய்யப்போகிறேன்?” என்றான்.

“ஊரில் ஏதோ திருவிழாவாம். திவ்யாவின் மாமியார் எல்லோரையும் அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்கள்.”

“அவர்கள் கூப்பிட்டால் என்னால் வர முடியாது.”

“அப்படிச் சொல்லக் கூடாது சங்கர். பிறகு திவ்யாவைத் தான் தவறாகப் பேசுவார்கள்.”

“அம்மா! நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள். அப்படி எல்லாம் யாரும் நினைக்கமாட்டார்கள்.”

“திவ்யாவின் ஊர் ஒன்றும் நகரம் இல்லை. யார் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்று இருப்பதற்கு. அதுவும் அவர்கள் அழைத்தும் போகவில்லை என்றால் நம்மை எப்படி மதிப்பார்கள்.”

“அம்மா! இன்னும் எனக்கு வங்கியில் படிப்புக் கடன் உறுதியாகவில்லை. அதற்கு இன்னும் அலைந்துகொண்டு இருக்கிறேன். பேங்க் பேலன்ஸ் கூடக் குறைவாக இருக்கிறது. விசாவில் பிரச்சனை வரும். எனக்குப் பல சிக்கல்கள் இருக்கிறது.”

“இரண்டு நாளில் எல்லாம் சரியாகி விடாது! அவள் உன் தங்கை. அவர்கள் வீட்டில் அழைத்தால் நாம் செல்ல வேண்டும். அவ்வளவுதான்.”

“அவளுக்காக எல்லாம் வர முடியாது!”

“போதும் சங்கர்! நீ வருகிறாய்” என்றார் கணபதி. “நீங்கள் இரண்டு பேரும் திவ்யாவை எப்போதும் ஒதுக்கி வைத்தீர்கள். சிறு பிள்ளைகள், வளர்ந்ததும் சரியாகி விடும் என்று நினைத்தோம். இன்னும் அவளை வெறுத்து ஒதுக்குவது சரி இல்லை. அவளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. எங்களுக்குப் பிறகு பிறந்த வீட்டில் நீங்கள்தான் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் உன்னிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதனால் நாங்கள் இருக்கும் வரை எங்கள் திருப்திக்காக நாங்கள் சொல்வதைச் செய்.”

பேசிய பெற்றோர்கள் அடுத்து இரு நாட்கள் மகள் வீட்டுக்குச் செல்ல பொருட்களை வாங்கி குவிக்க, சங்கருக்கும் காவ்யாவுக்கும் மேலும் ஆத்திரம். தீபாவளி சீர் என்று பட்டுப்புடவை, மாப்பிளைக்கு மோதிரம் என்று வாங்கினார்கள். இப்போது பொங்கலுடன் சேர்ந்து அவர்கள் வீடு கிடைத்துவிட்டது என்று அவள் குடும்பத்திற்கே உடை, அதுவும் விலை உயர்ந்த உடை என்று வாங்கி வைத்தது சங்கருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவன் சில கல்லூரி விண்ணப்பங்களை வாங்க சில ஆயிரங்கள் கேட்டபோது தராத தந்தை இப்போது திவ்யாவுக்குச் செய்வது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதையே காவ்யாவிடம் சொல்ல, அவள் தன் பங்கிற்கு, அன்னை கேட்ட உதவியை திவ்யா மறுத்தது பற்றியும் சொன்னாள்.

“அது தான் அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டதே! அவர்கள் வீட்டில் தானே இருக்கிறாள்? திருச்சி வீட்டை வைத்துக்கொண்டு அவள் என்ன செய்ய போகிறாள்? அதை கொடுப்பதற்கு என்ன? அதுவும் வீண் செலவு செய்யவா கேட்கிறோம்! படிப்பிற்காகத்தானே!” என்றான் சங்கர்.

“நீ படிப்பதற்கு தான் கேட்கிறாய்! ஆனால் அது தான் அவளுக்கு இருக்கும் ஒரே ஆதாரமாம்! ‘அதை என்னிடம் இருந்து பறித்து கொள்ளாதீர்கள்’ என்றாள். அவள் வீட்டில் என்ன நிலைமையோ தெரியவில்லை! நாமும் தான் அவள் வீட்டைப் பார்த்தோமே! விவசாயத்தில் என்ன பெரிதாக சேர்த்துவிடுவார்கள்? அவர்கள் கஷ்டம் நமக்கு எப்படி தெரியும்?” என்று ஏளனமாக சொன்னவள்,

அவள் அந்த வாழ்க்கையில் இருந்து தப்பித்துக்கொண்டதை எண்ணி மகிழ்ந்தாள். திவ்யா நகைகளை கொடுத்ததை ஏனோ மறைத்துவிட்டாள்.

கணபதியின் கோவமோ இல்லை உத்தரவோ! காவ்யா, சங்கர் இருவரும் திவ்யாவின் புகுந்த வீட்டுக்கு வந்தார்கள். முதலில் அங்கே ஒரு வசதியும் இருக்காது, தனிமை கிடைக்காது, கூட்டமாக ஒரே அறையில் படுக்க வேண்டும் என்று புலம்பிக் கொண்டிருந்த இருவரும் திவ்யாவின் வீட்டைப் பார்த்ததும் வாய் அடைத்துப் போனார்கள். எல்லோருக்கும் தனியறை கொடுக்கும் அளவுக்கு அத்தனை அறைகள் கொண்ட வீடு. இதுவா திவ்யாவின் புகுந்த வீடு? பழைய கால மச்சு வீடு தான். ஆனால் அதன் பிரம்மாண்டம் வாயைப் பிளக்கவைத்தது.

ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச்செல்ல கிருபாகரன் தான் வந்திருந்தான். முதலில் வாடகை கார் என்று எண்ணினார்கள். உண்மை விரைவிலேயே புரிந்தது.

உள்ளே நுழைந்தால் எல்லா நவீன வசதிகளும் கொண்ட வீடு. ஏழு ஆண்டுகளுக்கு முன் வரை பழையதாக இருந்த வீடு காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்து வந்ததால், அதன் உட்புறம் நவீனமாகவே இருந்தது.

இவர்களைப் பார்த்ததும், வசந்தி வந்து வரவேற்றாள்.

“வாருங்கள் வாருங்கள்! திவ்யா யார் வந்திருக்கிறார்கள் பார்!” என்று சொல்லத் திவ்யா கையில் காபியுடன் நுழைந்தாள். ஏற்கனவே வந்திருந்த கீர்த்தியும் அவள் குடும்பத்தாரும் இவர்களிடம் நலம் விசாரித்தார்கள்.

எல்லோரும் காபியை அருந்தியபடி சிறிது நேரம் பேசினார்கள்.

“திவ்யா இவர்களுக்கு அறையைக் காட்டிவிட்டு, அவர்களுக்கு என்ன தேவை என்று பார்த்து செய்” என்று வசந்தி சொன்னாள்.

அன்னையின் அருகிலிருந்த பையைத் திவ்யா எடுக்க, “நான் எடுத்து வருகிறேன் அம்மா” என்று ஓடி வந்தான் ஒருவன்.

“அம்மா அப்பாவுக்கு, அத்தை மாமாவின் அறைக்கு எதிர் இருக்கும் அறை. அங்கே இந்தப் பெட்டிகளை வைத்துவிடுங்கள்.” என்றவள் “உங்கள் இருவருக்கும் மேல் தளத்தில் அறை. வேண்டாம் என்றால் கீழேயே அறை ஏற்பாடு செய்கிறேன்.” என்றாள் காவ்யா, சங்கரைப் பார்த்து.

“அவர்களுக்கு மேல் அறையே இருக்கட்டும். அவர்களுக்கு அங்கே கொஞ்சம் வீட்டின் ஆரவாரம் இல்லாமல் இருக்கும்” என்றான் கிருபாகரன்.

அவர்கள் எதுவும் பேசவில்லை. திவ்யா பின் நடந்தார்கள். ஆளுக்கொரு அறையைக் காட்டிவிட்டு, “ஏதும் தேவை என்றால் சொல்லுங்கள். இன்னும் பத்து நிமிஷத்தில் காலை உணவு தயாராகி விடும். நீங்கள் தயாராகி வந்தால் சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

உமா, கணபதிக்கு கொடுத்திருந்த அறைக்குச் சென்றாள் திவ்யா. கணபதி குளிக்கச் சென்றிருக்க வேண்டும். உமா மட்டும் பெட்டியிலிருந்து உடைகளை எடுத்துக்கொண்டிருந்தாள்.

“உங்களுக்கு அறை சௌகரியமாக இருக்கிறது தானே! ஏதாவது வேண்டுமானால் சொல்லுங்கள்” என்று சொல்ல,

“எல்லாம் சௌகரியமாக இருக்கிறது” என்று ஒரு பையை எடுத்து நீட்டினாள்.

“இது என்ன அம்மா?”

“ஊர் திருவிழா! நாங்கள் எதாவது செய்ய வேண்டும் தானே! உனக்கும் மாப்பிள்ளைக்கும் புது உடை.”

“இதெல்லாம் எதற்கு அம்மா? தேவை இல்லாத செலவு!”

“ஏன்? நாங்கள் வாங்கி தருவது உனக்குப் பிடிக்கவில்லையா?”

“அப்படி எல்லாம் இல்லை அம்மா!”

“உனக்கு என்மேல் கோபம் இன்னும் இருக்கிறது தானே! உன்னைச் சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லை என்று?”

“இப்போது எதற்கு அந்தப் பேச்செல்லாம்? விடுங்கள்.”

“நீ சொல்!” என்று கண்கலங்கினாள் உமா.

திவ்யாவுக்கும் மனம் கலங்கியது. உமாவை நெருங்கி வந்து நின்றாள். “உங்களுக்கு நான் எதிர்பாராத வரவு. அப்பாவாலும் உங்களாலும் மூவரை வளர்ப்பது, அதுவும் ஒரு பெரு நகரத்தில் வளர்ப்பது சிரமம் என்று நன்றாகப் புரிகிறது. ஆனால் மூவரில் நான் ஏன் என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. அதற்குச் சரியான விளக்கம் உங்களிடமும் இருக்காது என்று எனக்குத் தெரியும். என்னதான் பக்குவமாக எல்லாம் யோசித்தாலும் நீங்கள் சங்கர், காவ்யாவுக்காகப் பேசும்போது நான் உங்களுக்குப் பொருட்டே இல்லையோ என்று தோன்றியது.”

“உன்னிடம் நான் …” உமா முடிக்கும் முன் சரியாகக் கணபதி குளித்து முடித்து வந்துவிட்டார்.

மனைவி கலங்கி நிற்பதைப் பார்த்து, “என்ன ஆச்சு?”

உமா “திவ்யா இந்த வீட்டில் வாழ்வது பற்றிச் சந்தோஷம்தான் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.”

“அதுசரி, வந்ததும் அவளை இப்படிப் பிடித்து வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தால் எப்படி?

“அதெல்லாம் இல்லை அப்பா! நீங்கள் தயாராகி வாருங்கள். உணவு எடுத்து வைக்கிறேன்” என்று விடைபெற்றுக்கொண்டாள். இப்போதும் உமா பேச வந்ததை பேசவில்லை.

சங்கர், காவ்யா தயாராகி வரும்போது, பெரியவர்கள் எல்லாம் உண்டு முடித்திருந்தார்கள்.

“ஏன் இவ்வளவு தாமதம்!” என்று கண்டித்தாள் உமா.

“நீங்கள் சென்று சாப்பிடுங்கள்” என்ற வசந்தி திவ்யாவுக்குக் கண்ணைக் காட்டினாள். திவ்யா அவர்களைக் கவனித்துக்கொள்ளப் போகிறாள் என்று பார்த்தால், அங்கே அவள் சொல்வதைச் செய்ய ஒரு பெண் தயாராக இருந்தாள். திவ்யா வருவதைப் பார்த்து, அவள் வந்து விவரம் கேட்டாள்.

“நீங்கள் சாப்பிட்டீர்களா?” என்றாள் திவ்யா.

“இன்னும் இல்லை அம்மா!”

“இங்கே நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்” என்றாள்.

“பூரி மட்டும் சூடாகப் போட்டுக்கொள்ளலாம் என்று பெரிய அம்மா சொன்னார்கள். போட்டுக்கொண்டு வருகிறேன்” என்று சென்றவள், முதலில் வைத்த இட்லியை முடிக்கும் முன் பூரிகளைக் கொண்டு வந்தாள்.

“இனி நீங்கள் சாப்பிடுங்கள்!” என்று திவ்யா அவளை அனுப்பிவிட்டாள்.

இருவரும் உண்டு முடிக்கும் நேரம், கிருபாகரனும் அவர்களுடன் வந்து அமர்ந்தான். இருவரும் ஒரு புன்னகையுடன் நிறுத்திக்கொள்ள, திவ்யாவிடம் பேசினான், “இவர்கள் வெளியே எங்கேனும் செல்ல வேண்டும் என்றால், டிரைவரை அழைத்துக்கொள். கோவிலில் கொஞ்சம் வேலை இருக்கிறது. மாலை பூஜைக்கும் எல்லாம் தயாராக இருக்கும்படி பார்த்துக்கொள்.”

“சரி!” என்று சொன்னபடி கணவனுக்குப் பரிமாறினாள்.

“நீயும் உட்கார். வேண்டியதை அவரவர் எடுத்துக்கொள்ளலாம்.” என்றான் கிருபாகரன்.

“நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். நீங்கள் சாப்பிடுங்கள்.” என்று மற்ற இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

காவ்யா, இங்கே திவ்யாவின் வாழ்க்கை ஒரு மாதிரி இருக்கும் என்று கற்பனை செய்து வைத்திருந்தாள். மூன்று வேளை குடும்பத்துக்குச் சமைத்துக்கொண்டு, மற்றவர்கள் சொல்வதைச் செய்துகொண்டு இந்தச் சிறிய ஊரில் அடைந்து கிடக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். அவள் யூகித்ததில் கடைசிப் பகுதி மட்டும்தான் சரியாக இருந்தது. ஆனால் அங்கே அடுத்து யார் என்ன செய்ய வேண்டும் என்பது கூடத் திவ்யா சொல்ல வேண்டும்.

காலையிலிருந்து மாலை வரை எல்லோரும் அவளிடம் வந்துதான் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

“மதிய உணவுக்கு ஏற்பாடு செய்துவிட்டாயா?” என்று வசந்தி கேட்டாள்.

“வழக்கமான சமையலுடன் வடை, பாயசம், கொஞ்சம் புளிக்காய்ச்சல் செய்யச் சொல்லுகிறேன். கீர்த்திக்குக் காரம் குறைவாகப் பருப்பும் எடுத்து வைக்கச் சொல்லுகிறேன். வேறேதும் செய்ய வேண்டுமா அத்தை.”

“ஒரு இனிப்பு. அல்வா ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும்.”

“காலையில் தானே அத்தை கேசரி செய்தோம்! மதியத்திற்குப் பாயசம் இருக்கிறது. இன்னொரு இனிப்பு என்றால் உணவைச் சுவைக்கும் முன் வயிறு நிரம்பிவிடும்.”

“சரி அப்படியானால் போதும்.” என்று சமாதானம் ஆனாள் வசந்தி.

அதற்குள் தங்கவேலு வந்து திவ்யாவைக் கேட்டார். “கோவிலுக்கு அனுப்ப வேண்டிய சாமான்கள் எல்லாம் சரிபார்த்து விட்டாயா அம்மா!”

“பார்த்துவிட்டேன் மாமா! இப்போதுதான் காரில் ஏற்றச் சொல்லி ஆட்களிடம் சொன்னேன். அவர் செல்லும்போது கோவிலில் கொடுத்துவிடுவார்.”

இப்படி ஆளுக்கொரு தகவல்களைத் திவ்யாவிடம் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இது எங்கே, அது எப்படி என்று எல்லா கேள்விகளும் திவ்யாவிடம் கேட்டார்கள். அவள் நிற்காமல் ஓடினாள் என்று இல்லை. அவள் இருக்குமிடம் வந்தே கேட்டுக்கொண்டார்கள். காவ்யா அவள் வேலைக்குச் செல்லும் இடத்தில் செய்ய நினைத்த ஆளுமையை திவ்யா அவள் வீட்டில் செய்கிறாள். அத்துடன் எல்லோரும் அவளைப் புகழ்ந்து தள்ளினார்கள்.

ஒருகணம் காவ்யாவுக்கு அது அவள் இடம் என்று கூடத் தோன்றியது. சீ! என்ன மடத்தனம்! இந்த வீட்டிற்கு மேலாண்மை படித்த அவள் வேண்டுமா? பத்து இருபது பேரை ஒரு அலுவலகத்தில் கட்டி ஆள்வதும், வீட்டில் எடுபிடி வேலைகளைச் சரி பார்ப்பதும் ஒன்றா? இந்தப் பழம் புளிக்கும் என்று நரி ஓடிய கதைதான் என்று அவளுக்கே தோன்றியது. மீண்டும் பழைய நினைவுகள் காவ்யாவுக்கு எட்டிப் பார்த்தன. வீட்டின் மூத்த மகள் என்ற எண்ணத்தை அவளுக்கு ஏற்படுத்தியதே அன்னை உமாதான். “தம்பி தங்கையை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களை உன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு நீதான் எல்லாம் சொல்லித்தர வேண்டும்” என்றெல்லாம் அன்னை சொன்னபோது, பொறுப்பைப் பற்றிய எண்ணத்தைவிட ஆளுமை பற்றிய ஆசைதான் காவ்யாவுக்கு அதிகம் பிடித்தது. அவள் சொல்வதைத் தான் அவள் தம்பியும் தங்கையும் கேட்க வேண்டும் என்ற எண்ணம். உடன் இருந்த சங்கரிடம் அது இயல்பாக நடந்தது. ஆனால் திவ்யாவிடம் அது நடக்கவில்லை.

பாட்டி வீட்டுக்குச் செல்லும் நாட்களில் தான் திவ்யாவுடன் இருக்க நேர்ந்தது. அங்கே திவ்யாவுக்கு இருக்கும் செல்வாக்கு காவ்யாவுக்கு இல்லை. வீட்டில் எது எங்கே இருக்க வேண்டும், எது எப்போது சாப்பிட வேண்டும் என்று எல்லாம் திவ்யா சொற்படிதான். ஆரோக்கியத்தை வளர்க்கப் பாட்டி கடைப்பிடிப்பது எல்லாம் திவ்யாவுக்கு அத்துப்படி. காலையில் நன்றாகச் சாப்பிட வேண்டும். இடையில் பழங்கள் அல்லது வீட்டில் செய்த தீனிகள் தான் சாப்பிட வேண்டும். பிஸ்கட், குளிர்பானம், ஐஸ்கிரீம் கூடாது. காவ்யா இதெல்லாம் வேண்டும் என்று கேட்டால், “இதெல்லாம் சாப்பிடக் கூடாது. உடலுக்கு நல்லதல்ல!” என்பாள் திவ்யா.

“உன்னைவிட இளையவள். அவளுக்குத் தெரிகிறது. உனக்குத் தெரிய வேண்டாமா?” என்பாள் பாட்டி.

“உன் அம்மாவுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்காதே! விடுமுறையில் திவ்யா செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொள்!” என்பார் தாத்தா.

இப்படி உணவில் தொடங்கி, சாப்பிடுவது எப்படி, காலையில் தயாராவது எப்படி, அவரவர் பொருட்களை எப்படி நேர்த்தியாக வைப்பது, இருக்குமிடத்தை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது என்று எல்லாம் திவ்யாவைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பார்கள்.

காவ்யாவுக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளைப் பார்த்து நான் கற்றுக்கொள்வதா? என்ற வெறுப்பு தோன்றியது. எல்லாம் சரியாகச் செய்யும் திவ்யாவுக்குக் கொஞ்சம் அதிகார தோரணை இருக்கத்தான் செய்தது. அதுகூட தாத்தா, தனியே வளரும் பெண் தைரியத்துடன் இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தது தான்.

திவ்யாவின் தோரணை, காவ்யாவைக் கட்டுப்படுத்துவது போல் இருக்கும். அப்போதிருந்து திவ்யா இருக்கும் இடத்தில் தனக்கு அதிகாரம் இல்லை என்று காவ்யாவுக்கு தோன்றத் தொடங்கியது. அவளை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்றால், அது திவ்யா தவறு செய்யும்போது தான். அப்படி வரும் சந்தர்ப்பங்களைக் காவ்யா தவறாமல் பயன்படுத்திக்கொண்டாள். காவ்யாவின் எண்ணம் உமாவிடம் மட்டும் கொஞ்சம் வேலை செய்தது. ஆனால் ஒரு மகள் சொல்லும் புகாருக்காக, அன்னை இன்னொரு மகளை ஒதுக்கிவிடுவாளா?

திவ்யாவை உடன் வைத்துக் கொள்ளும் பேச்சு வரும்போதெல்லாம், அழுது அடம்பிடித்து திவ்யாவை அழைத்து வராதபடி காவ்யா செய்தாள். பொருளாதாரமும் ஒரு பங்கு வகிக்க, அதைத் திவ்யாவிடம் தெரியப்படுத்தி அவளைக் காயப்படுத்தினாள். எப்போதும் உடன் இருக்கும் காவ்யா சொல்வது சரி என்று சங்கரும் நம்பத் தொடங்கினான்.

திவ்யாவை விட அவள் சிறந்தவள் என்று காட்டிக்கொள்ள நினைப்பாள். ஒரு சிறு நகரத்தில் வளர்ந்தவளை, பெங்களூரில் வளர்ந்த காவ்யாவுக்கு மட்டம் தட்டுவது பெரிய கஷ்டம் இல்லை. இதுவரை அதைச் சிறப்பாகச் செய்தாள்.

ஆனால் திவ்யா அவள் புகுந்த வீட்டில் செலுத்தும் ஆளுமை அதிகாரம் காவ்யாவுக்குப் பிடிக்கவில்லை.

நேரம் கிடைக்கும்போது மட்டம் தட்டக் காத்திருந்தாள். ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் கிடைப்பதாகத் தெரியவில்லை. அவளாக ஒன்றை ஏற்படுத்தினாள்.

“படிப்புதான் வரவில்லை என்றாலும், வீட்டு வேலைகளை எல்லாம் நன்றாகவே செய்கிறாய் போல! எல்லாம் உன் அத்தையின் பயிற்சியா? நீ நம் வீட்டில் இருந்தபோது இப்படியெல்லாம் செய்து பார்த்ததே இல்லையே! எப்போதும் சும்மா தானே அறைக்குள் உட்கார்ந்துகொண்டு இருப்பாய்?”

காவ்யா திவ்யாவைத் தாழ்த்திப் பேசியதும் எல்லோரும் காவ்யாவைப் பார்த்தார்கள்.

இந்தப் பேச்சு கீர்த்திக்கும் எரிச்சல் தந்தது. இவளுக்கு நிச்சயம் திருப்பிக் கொடுக்க வேண்டும். “நீங்கள் தான் எங்கள் அண்ணியுடன் அதிகம் இருந்ததே இல்லையே! பிறகு எப்படி எங்கள் அண்ணியைப் பற்றி உங்களுக்குத் தெரியும்?”

“அம்மா வீட்டில் எப்போதும் பெண்கள் கொஞ்சம் சலுகையாய் இருப்பதுதான். ஆனால் புகுந்த வீட்டிற்கு வந்த பிறகு அந்த வீட்டுக்குத் தகுந்தாற்போல் மாறுவது தான் பெரிய விஷயம். சும்மா சொல்லக் கூடாது! திவ்யா எல்லாம் சிறப்பாக கையாள்கிறாள்! அங்கே தோட்ட வீட்டில் இருக்கும்போதும் சரி! இங்கே வந்த பின்னும் சரி! எல்லாம் சீக்கிரம் கற்றுக்கொண்டாள்!” என்றாள் வசந்தி.

“எல்லாம் உங்கள் பயிற்சி தான்!” என்றாள் உமா.

“நான் ஒன்றும் சொல்லித்தரவில்லை. அவள் சமர்த்து. எல்லாம் அவளே கற்றுக்கொண்டாள். முதலில், திவ்யா சிறிய பெண்ணாயிற்றே. ஒவ்வொன்றாகக் கற்றுத்தர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் எதுவும் சொல்லித்தராமலே இங்கே முறைகளை எல்லாம் வந்து பத்து நாளில் சரியாகச் செய்யத் தொடங்கிவிட்டாள். இதை இப்படிச் செய், அப்படிச் செய் என்று சொல்லத் தேவை இருந்ததே இல்லை. சும்மா சொல்லக் கூடாது. சம்மந்தி, திவ்யாவைச் சிறப்பாக வளர்த்திருக்கிறார்கள்.”

“சில விஷயங்கள் எல்லாம் சொல்லிக்கொடுத்தாலும் வராது. காவ்யா, சங்கர் இருவருக்கும் படிப்பு மட்டும் தான் எல்லாம். திவ்யா அப்படி இல்லை.” என்று உமா சொல்லவும், அன்னை தனக்குச் சாதகமாகச் சொல்கிறாள் என்று சந்தோசப்பட்டாள் காவ்யா. ஆனால் அவள் அடுத்த வாக்கியம் காவ்யாவுக்கு எதிராக அமைந்தது. “வீட்டில் எல்லோரையும் கவனிப்பது, அடுத்தவர்களைப் புரிந்து நடந்துகொள்வது எல்லாம் நன்றாகச் செய்வாள் திவ்யா. என் அம்மாவின் குணம் அவளிடம் அப்படியே இருக்கிறது.”

“அது சரி தான்! அவள் மாமாவுக்கு என்று தனியாகப் பார்த்துப் பார்த்து சமைத்து வைப்பாள். சென்ற முறை மருத்துவ பரிசோதனையில் கூட அவருக்கு நல்ல முன்னேற்றம் இருப்பதாக சொன்னார்கள். வீட்டு நிர்வாகம் எல்லாம் எப்போது கற்றுக்கொள்வாளோ என்று யோசித்தேன். உண்மையில் என்னைவிட எல்லாவற்றையும் நன்றாகப் பார்த்துக்கொள்கிறாள்.”

“இருவரும் எனக்கு அதிகமாக ஐஸ் வைக்கிறீர்கள். எனக்கு ஜலதோஷம் பிடிக்கப்போகிறது.” என்றாள் திவ்யா.

“என்னம்மா செய்வது? உனக்கு ஐஸ் வைத்தால் தான் இந்த வீட்டில் என்னால் காலம் தள்ள முடியும்.” என்று அப்பாவியாய் வசந்தி சொல்ல, “அது சரி மருமகளை அவ்வப்போது இப்படிப் புகழ்ந்து வைத்துக்கொள்வது நல்லது. கீர்த்தியிடம் கூட நான் இதைச் சரியாகச் செய்துவிடுவேன்” என்றாள் கீர்த்தியின் மாமியார்.

“இதற்கிடையில் கிடைத்த சந்தர்ப்பம் என்று, “காவ்யா நீ கூட அண்ணியிடம் எப்படி மாமியாரை கைக்குள் போட்டுக்கொள்வது

என்று கற்றுக்கொள்ளுங்கள். படிப்பைவிட இது ரொம்ப முக்கியம். வாழ்க்கைக்கு உதவும்.” என்றாள் கீர்த்தி.”

“எனக்கே நீங்கள் தான் சொல்லிக் கொடுத்தீர்கள் அண்ணி. நீங்கள்தான் என் குரு” என்றாள் திவ்யா.

“அப்படியானால் நீங்கள் குருவை மிஞ்சிய சிஷ்யை!” இது கீர்த்தியின் மாமியார்.

“ஆளை விடுங்கள்! நான் இங்கிருந்து கிளம்புகிறேன்.” என்று திவ்யா எழுந்தாள்.

“அண்ணன் வந்துவிட்டான் என்று நான் யாருக்கும் சொல்லமாட்டேன்!” என்று கீர்த்தி சத்தமாகவே சொன்னாள். கிருபாகரன் அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தான். கணவனைக் கவனிக்க திவ்யா செல்கிறாள் என்று கீர்த்தி குறிப்பிட, “ஏய்! உன் அண்ணன் முன் உன் அண்ணியை எதுவும் சொல்லிவிடாதே! உன் அண்ணன் கோபித்துக்கொள்வான்.” என்றாள் வசந்தி.

எல்லோரும் கிருபாகரன் பக்கம் பார்க்க, “நான் சமையல் வேலையைப் பார்க்க வேண்டும்.” என்று திவ்யா அங்கிருந்து நகர்ந்தாள். கிருபாகரன் பெண்கள் அவனைத்தான் கேலி செய்கிறார்கள் என்பதை அறியாமல், மனைவியின் பின் செல்ல, மீண்டும் அங்கே ஒரு சிரிப்பலை.

மாலையில் பூஜைக்கு எல்லோருமாக கோவிலுக்கு சென்று திரும்பும் வரை உமாவுக்கு திவ்யாவுடன் பேச நேரம் கிடைக்கவில்லை. அவள் வீட்டார் கோவிலில் வெகு நேரம் இருக்க வேண்டி வரும் என்று மற்றவர்கள் எல்லோரும் வீடு திரும்பினார்கள். எல்லோருக்கும் பால் காய்ச்சி எடுத்து வர திவ்யா செல்ல, உடன் உமாவும் வந்தாள்.

“திவ்யா! உன்னிடம் பேச எனக்கு சந்தர்ப்பமே அமையவில்லை. நீ செய்ததற்கு எப்படி நன்றி சொல்வேன்!”

“என்ன அம்மா! இதெல்லாம்! சும்மா இருங்கள்!” என்றாள் திவ்யா.

“நீ செய்ததை என்னால் அப்பாவிடம் கூட சொல்ல முடியவில்லை! நிச்சயம் அப்பா என்னை தான் கோபித்துக் கொள்வார்! யோசித்து பார்த்தால் எனக்கே கூட உறுத்தலாகத்தான் இருக்கிறது. இப்படி ஒரு விழா நடக்கும் போது நாங்கள் போட்ட நகை ஒன்று கூட இல்லை! என்னால் தாங்க முடியவில்லை!” என்று கண்ணீர் விட்டாள்.

“அம்மா! நான் அன்று சொன்னது தான்! எனக்கு இப்படி ஒரு குடும்பத்தை அமைத்து தந்திருக்கிறீர்கள். அதுவே எனக்கு போதும்!” என்றாள் மகள்.

மகள் சொன்ன வார்த்தையில், மகள் சிரசில் கையை வைத்து, “நீ நன்றாக இருப்பாய் கண்ணே!” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது, “அண்ணி! நான் வந்துவிட்டேன்! நீங்கள் சென்று உடை மாற்றிக்கொண்டு வாருங்கள்!” என்று இலகு உடைக்கு மாறிய கீர்த்தி அங்கே வர, உமாவின் கண்ணீரை பார்த்து, “என்ன ஆச்சு அத்தை! ஏன் அழுகிறீர்கள்?” என்றாள்.

கண்ணீரை துடைத்துக்கொண்டு உமா, “இது ஆனந்தக் கண்ணீர் அம்மா! என் மகளை எண்ணி சந்தோஷத்தில் வந்த ஆனந்தக் கண்ணீர்!” என்றாள்.

“நான் கூட இங்கே அண்ணி படும் கஷ்டங்களை எண்ணி அழுகிறீர்கள் என்று நினைத்தேன்!” என்றாள் கீர்த்தி.

உமா அதிர்ந்து நோக்க, கீர்த்தி திவ்யாவைப் பார்த்து கண் அடிக்க, அவளின் கேலி புரிந்து, “ஒரு கணம் நான் பயந்துவிட்டேன்!” என்றாள் உமா.

“அத்தை, என் அண்ணி இந்த வீட்டில் மகாராணி! என்ன அண்ணி? சரிதானே!” என்று திவ்யாவைப் பார்க்க,

“இல்லை! அத்தை தான் மகாராணி! நாம் இருவரும் இளவரசிகள்!” என்று கண் சிமிட்டினாள்.

மகளின் மகிழ்ச்சி இப்படியே தொடர வேண்டும் என்று வேண்டிக்கொண்ட உமாவுக்கு தெரியாது அவள் மகிழ்ச்சி மறுநாளே சிதையப் போகிறது என்று!

அத்தியாயம் – 15

விழா முடிந்து எல்லோரையும் வழி அனுப்பி வைத்துவிட்டு சற்று சீக்கிரமாகவே எல்லோரும் படுக்கச் சென்றனர். சமையல் கூடத்தில் வேலைகள் எல்லாம் முடிந்ததா என்று பார்த்துவிட்டு, அவள் அறைக்குள் நுழைய சரியாக கிருபாகரனும் நுழைந்தான். இரண்டு மூன்று நாட்களாகவே வீட்டில் வேலைகள் அதிகம் என்பதால் கணவனிடம் அதிகம் பேசக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தாள். அவனும் அப்படித்தான்!

உள்ளே வந்தவன் சட்டையை கழற்றி தாங்கியில் மாட்டிவிட்டு மனைவியை பார்த்தான். புன்னகையுடன் அவனை பார்த்து கொண்டிருந்தவள், அருகில் வந்து அவனை அணைத்துக்கொள்ள, அவன் அப்படியே நின்றான். கணவன் கரங்கள் அவளை அணைக்காததை உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் இறுகிய முகத்தை கண்டு வியந்தாள்.

“என்னங்க? என்ன ஆச்சு! தலை வலிக்கிறதா?” என்று அவன் நெற்றியை தொட்டுப்பார்த்தாள்.

சட்டென்று அவள் கையை தட்டிவிட்டுவிட்டு, படுக்கையில் சென்று விழுந்தான்.

முதலில் அதிர்ந்தவள், தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “ரொம்ப வலிக்கிறதா? நான் வேண்டுமானால் தைலம் தடவி விடவா?” என்றாள்.

“ஒன்றும் வேண்டாம்!” என்று போர்வையை போர்த்தி படுத்துக்கொண்டான்.

“காபி ஏதாவது …” என்று அவள் முடிக்கும் முன்,

“நீ வாயை மூடிக்கொண்டு இருந்தால் போதும்!” என்று முக்காடு போட்டு படுத்துக்கொண்டான்.

அவன் செயல் ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது. திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் அவன் அவளிடம் இப்படி பேசியது இல்லை. அவளின் எந்த பேச்சையும் அலட்சியப்படுத்தியது இல்லை. திரண்ட வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு, மறுபுறம் சென்று படுத்துக்கொண்டாள். உறக்கம் வரவில்லை என்றாலும், அதற்கு மேல் எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் அவன் உறங்கி இருக்கக்கூடும் என்று அவன் முக்காடை மட்டும் அகற்றி விடலாம் என்று எண்ணினாள். இரவு முழுவதும் முகத்தை மூடிக்கொண்டு படுக்கக்கூடாது என்று எண்ணி, அவன் போர்வையை இழுக்க,

“கொஞ்சம் நிம்மதியாக தூங்க விடு!” என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்தான். முதலில் அவனுக்கு உடல் சோர்வு என்று எண்ணியவள் அதன் பின் பேசாமல் விலகி இருந்தாள்.

மறுநாளும் கணவனின் செயல்கள் கொஞ்சம் வேறு மாதிரிதான் இருந்தது. நாள் முழுவதும் அவளிடம் அவன் பேசவில்லை. அவள் கேட்ட கேள்விகளுக்கு கூட ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது.

“இப்போது உங்களுக்கு பரவாயில்லையா?”

“ம்!”

“டிபன் எடுத்துவைக்கவா?”

“சரி!”

“மதிய உணவுக்கு வீட்டிற்கு வருவீர்களா? இல்லை தோட்டத்திற்கு கொடுத்து அனுப்புவதா?”

“அனுப்பி விடு!”

இரவு உணவின் போதும் இதே தொடர, திவ்யா அப்போது எதுவும் பேசவில்லை!

அவர்கள் அறைக்கு வந்ததும், “உங்களுக்கு என் மேல் ஏதோ கோபம்! அத்தை மாமாவிடம் எப்போதும் போல் தான் இருக்கிறீர்கள்! என்னிடம் தான் முகம் கொடுத்து பேசவில்லை! நான் என்ன தப்பு செய்தேன்?” என்றாள்.

அவளை முறைத்து பார்த்துவிட்டு அவளை தாண்டி சென்று படுக்கையில் அமர்ந்தான். நேராக அவன் முன் சென்று நின்று, “என்ன என்று சொன்னால் தானே எனக்கு தெரியும்?” என்றாள்.

அவனிடம் பதில் இல்லை! “எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது! உங்களிடம் பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை! நான் என்ன தவறு செய்திருந்தாலும் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன்!”

“நீ எந்த தப்பும் செய்யவில்லை. நான் தான் தப்பு செய்துவிட்டேன்! உன் நம்பிக்கையை சம்பாதிக்காமல் போனது என் தவறு தானே!” என்றான்.

“என்ன சொல்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை! உங்களை நம்பவில்லை என்று நான் எப்போது சொன்னேன்!” என்றாள்.

“இதெல்லாம் சொல்லவேண்டியது இல்லை! செயல்களில் தெரிந்துவிடும்!”

“அப்படி நான் என்ன செய்தேன்?” மீண்டும் புரியாமல் கேட்டாள்.

“நான் உன்னை பார்த்துக்கொள்வேன் என்ற நம்பிக்கை கூட உனக்கில்லை! அப்படித்தானே!” என்றான்.

தலையும் காலும் இல்லாமல் அவன் இப்படி கேட்டது திவ்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை! உங்களை நம்பாமல் தான் உங்களை திருமணம் செய்துகொண்டேனா?” என்றாள்.

“ஹ்ம்ம் … பிறகு ஏன் உனக்கு இருக்கும் ஒரே ஆதாரம் உன் தாத்தா கொடுத்த வீடுதான் என்று உன் வீட்டில் சொன்னாய்?” என்றான்.

அவள் எப்போது அப்படி சொன்னாள் என்று யோசித்தவள், அந்த சம்பவம் பற்றி நினைவுகூர்ந்தாள்.

இவனுக்கு அது எப்படி தெரியும் என்று அதிர்ந்தவள், அவன் முகத்தை பார்க்க, “உன்னை நல்லபடியாக பார்த்துக்கொள்ளக்கூட என்னால் முடியாது என்று நினைத்துவிட்டாய்! நாளை உனக்கு கை கொடுக்க போவது உன் தாத்தா கொடுத்த வீடு என்றால், பிறகு நான் உன் வாழ்வில் என்ன செய்துகொண்டிருக்கிறேன்! அத்தனை கையால் ஆகாதவனா நான்? இந்த வீடு கைக்கு வந்த பிறகேனும் என் மேல் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறதா? இல்லை இதுவும் போதாதா?”

அவன் பேசிக்கொண்டிருக்கையில் அவள் அறியாமல் அவள் கண்ணில் நீர் வழிந்தோடியது! அதை பார்க்க முடியாதவனாய், முகத்தை திருப்பிக்கொண்டவன், “சராசரி பெண் என்று நிரூபித்து விட்டாய்!” என்று அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

கணவன் பேசிவிட்டு சென்றது வெகுநேரம் அவளை உறைய வைத்திருந்தது. வெகுநேரம் அப்படியே நின்றவள் கால்கள் வலுவிழப்பதை உணர்ந்து அருகில் இருந்த கட்டிலில் அமர்ந்தாள். திவ்யா சொன்னாள்தான், தாத்தா கொடுத்த அந்த வீடு தான் அவளின் ஆதாரம் என்று சொன்னாள்தான். ஆனால் அதற்கு அவன் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அல்ல. அவள் அதை அவள் உடன் பிறந்தோருக்கு கொடுக்க விருப்பம் இல்லாததால் அப்படி சொன்னாள். இந்த விஷயம் அவனுக்கு எப்படி தெரிந்தது? இவனிடம் அதை யார் சொல்லி இருக்க கூடும்? திவ்யா, காவ்யா, உமா தவிர வேறு யாருக்கும் அவள் பேசியது தெரியாதே! ஒருவேளை அன்னை சொல்லியிருக்கலாம்! அதற்கும் வாய்ப்பில்லை! அவளிடம் பண உதவி கேட்பது தந்தைக்கு பிடிக்கவில்லை என்று அன்னை சொன்னது நினைவு வந்தது. திருமணம் முடித்து அனுப்பிய பெண்ணிடம் நாம் கஷ்டத்துக்கு போய் நிற்கக்கூடாது, அது அவசியமே என்றாலும்! இப்படி நினைப்பவர்தான் கணபதி. ஆனால் இது அவசியம் கூட இல்லை! அவளால் செய்ய முடிந்ததை செய்து விட்டாளே திவ்யா! இப்போது அது முக்கியமில்லை. ஆனால் திவ்யா வீடு விஷயத்தில், தர

மறுத்ததற்கான சரியான காரணத்தை அறியாமல் கிருபாகரன் அவளை என்னவெல்லாம் சொல்லிவிட்டான்.

ஒரு பெண் அவளுக்கென்று பணமோ அல்லது சொத்தோ இருக்கட்டும் என்று எண்ணுவது கணவன் மேல் இருக்கும் நம்பிக்கையின்மையாலா? இல்லையே! அந்த விஷயங்கள் தரும் ஒரு தன்னம்பிக்கை. இருப்பதை எல்லாம் கணவனிடமோ அல்லது பெற்றோரிடமோ கொடுத்தால் தான் அவள் சிறந்தவளா? சொந்த காலில் நிற்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கும் பெண்கள் எல்லோரும் மற்றவர்களை நம்பாதவர்களா? அது உண்மை இல்லை என்பதை திவ்யா நம்பினாள். ஆனால் கணவன் மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லை என்பது தான் அவளின் செயலுக்கு காரணம் என்று சொன்னது வருத்தமாக இருந்தது. அதை யோசிக்க யோசிக்க அவன் மேல் கோபம் கூட வந்தது.

இரண்டு நாட்கள் இப்படியே செல்ல இருவர் முகங்களை பார்த்த பெரியவர்கள், “என்ன பிரச்சனை?” என்று கேட்டார்கள்!

“அதெல்லாம் ஒன்றும் இல்லை!” என்று கிருபாகரன் சொல்ல,

“அவர் சொல்வது சரி தான்!” என்ற திவ்யா, அவனை பார்த்த பார்வையில் இருவரின் வார்த்தைகளின் பொய் என்று பெரியவர்கள் புரிந்துகொண்டார்கள்.

இருப்பினும் அதில் தலையிடாமல் விலகிக்கொண்டாலும் இருவரின் நடவடிக்கையை கவனித்தார்கள். கிருபாகரன் கோவத்தை தணிக்க திவ்யா வந்து பேசுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே! அவளும் அவனிடம் பேசாமல் விலகி சென்றாள். அவன் ஆரம்பித்த ஒற்றை வார்த்தை பதில்களை இப்போது அவள் தொடங்கினாள்.

சிலநேரம் அதுகூட இல்லாமல் வெறும் செயல்கள்தான். சரியான நேரத்துக்கு அவனுக்கு காபி, உணவு என்று எடுத்து வைப்பதுடன் சரி! நாட்கள் இருவருக்கும் நகராமல் இருக்க, இருவரின் வாட்டமும், சோர்வும் அவர்கள் உணவிலும் தெரிந்தது.

சில தினங்கள் பொறுத்துப் போன வசந்தி, மகனைத்தான் கடிந்தாள். பெரும்பாலும் வெளியே திரியும் மகன் செல்லும் இடங்களில் ஏதாவது கொறிப்பது, அருந்துவது என்று நடக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் மருமகள் அடிக்கடி உணவை மறுப்பது வருத்தமாக இருந்தது.

இரவு உணவுக்கு அமர்ந்தவர்கள், ஒரு பிடி சாதத்துடன் உணவை முடித்த திவ்யாவைப் பார்த்து, “என்னம்மா! மதியமும் சாப்பிடவில்லை! இப்போதும் இப்படி செய்கிறாய்?” என்றாள் வசந்தி.

திவ்யாவின் முகத்தை கிருபாகரன் பார்க்க, அவள் எதுவும் சொல்லாமல் தன் காலி தட்டை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன திவ்யா? ஏன் மதியம் சாப்பிடவில்லை?” என்றார் தங்கவேலு.

“ரெண்டு பேரும் இன்னும் முகத்தை திருப்பிக்கொண்டு இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா!” என்று கணவனை கேட்டாள் வசந்தி.

“அதற்காக சாப்பாட்டின் மேல் கோபத்தை காட்டக்கூடாது! நன்றாக சாப்பிடவேண்டும்! அப்போதுதான் தெம்போடு இவனை ரெண்டு போடலாம்!” என்று தங்கவேலு சொல்ல, அவருக்காக லேசாக புன்னகைத்தவள் தட்டில் மேலும் கொஞ்சம் சோற்றை வைத்தாள். அடுத்த கரண்டியை எடுக்க, “இல்லை மாமா! எனக்கு போதும்” என்று அதற்கு மட்டும் கொஞ்சம் தயிர் விட்டு சாப்பிட்டாள்.

மகன் மருமகளுக்கு பால் கலந்து எடுத்து வந்த வசந்தி, திவ்யா அறைக்கு சென்றிருந்ததைப் பார்த்து, “கிருபா! ரெண்டு பேரும் இந்த பாலை குடித்துவிட்டு படுங்கள்! ஒழுங்காக அவளிடம் பேசு! நாளை இருவரும் இப்படியே இருந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்!” என்றாள்.

கிருபாகரனுக்கும் ரொம்பவே வருத்தமாக இருந்தது. அவளுடன் பேசாமல் இருந்து அவளை தண்டிக்க வேண்டும்! அவள் தவறை புரியவைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் எண்ணியவன்,

அவளின் பாராமுகம் அவன் திட்டத்தை தகர்த்துவிட்டது. அதனாலேயே அவனாக பேச சென்றான். ஆனால் திவ்யா பேச தயாராக இல்லை.

‘இவள் தவறு செய்துவிட்டு, எத்தனை இறுமாப்புடன் இருக்கிறாள்’ என்று அந்த நேரம் நினைத்தாலும், சில நிமிடங்களில் அவளிடம் மீண்டும் பேசவேண்டும் என்று தோன்றியது. திவ்யாவின் விலகலை பொறுக்கமுடியாமல் வீட்டில் இருக்கும் நேரத்தை குறைத்துக்கொண்டான். காலையில் கிளம்பி செல்பவன், இரவுதான் வீட்டுக்கு வந்தான். அதனால் அவளின் உணவு மாற்றம் பற்றி பெரிதாக தெரியவில்லை. இன்று வசந்தி சொன்னபோதுதான் அவனும் கவனித்தான். திவ்யா அவன் மேல் இருக்கும் கோபத்தில் தன்னை வருத்திக்கொள்கிறாளோ என்று தோன்ற அவனுக்கு பொறுக்கவில்லை.

கொண்டுவந்த பாலை மேசையில் வைத்துவிட்டு, ஏற்கனவே படுத்திருந்த திவ்யாவை அழைத்தான்.

அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவள் பதில் சொல்லவில்லை.

“திவ்யா!” மீண்டும் அழைத்தான்.

இப்போதும் அவள் பேசாமல் இருக்க, அவள் அருகில் அமர்ந்து அவள் தோள்களை தொட்டு திருப்பினான்.

“பாலை குடித்துவிட்டு படு!” என்றான்.

“எனக்கு வேண்டாம்!” என்றவள் மறுபுறம் திரும்பிக்கொண்டாள்.

“சாப்பிடாமல் உடம்பை கெடுத்துக்கொள்ளாதே! எழுந்திரு!” என்றான்.

அவன் புறம் தலையை மட்டும் திருப்பி “எதற்கு என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்! உங்கள் நிம்மதி கெட்டுவிடும்!” என்று சொன்னவள் மீண்டும் திரும்ப முயற்சிக்க, சட்டென்று அவளை அவன் புறம் திருப்பினான்.

“கோபத்தில் சொல்லிவிட்டேன்!” என்று அணைத்து கொள்ள, அவனிடம் இருந்து அவளை விடுவித்து கொண்டாள்.

“சரி! அன்று பேசியது தவறு தான்! மன்னித்துவிடு!” என்றான்.

சட்டென்று எழுந்து அமர்ந்தவள், “எனக்கு எதற்கு மன்னிப்பு? அதனால் எனக்கு கிடைக்கப்போவது என்ன? ஒரு பொட்டி நிறைய பணம் கொண்டு வாருங்கள்! மன்னித்துவிடுகிறேன்!” என்றாள் கோவமாக.

“அது தான் மன்னிப்பு கேட்கிறேனே! அன்று நான் பேசியது எல்லாம் தவறு தான். சங்கர் சொன்னதை கேட்டு கோபம் வந்துவிட்டது!” என்றான்.

“சங்கரா!” என்றாள் ஆச்சரியமாக.

திருவிழா முடியும் நேரத்தில் ஆண்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தபோது, வீடு திரும்ப திடீரென்று மாறிய அவர்கள் வாழ்க்கை பற்றியும் பேசிக்கொண்டிருக்க, சங்கருக்கு அவர்கள் பொருளாதார நிலை முன்னேறிவிட்டது தெரிந்தது. காவ்யா சொன்னது போல் திவ்யா வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் எல்லாம் இல்லை என்று உணர்ந்தான். தீவிரமாக யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

எல்லோரும் உறங்க சென்றுவிட, சங்கர் கிருபாகரனை நாடி வந்தான்.

“என்ன சங்கர்! தூங்கவில்லையா?”

“மாமா! உங்களிடம் ஒரு உதவி கேட்க வேண்டும்!” என்றான்.

“என்ன உதவி?”

“தவறாக நினைக்க வேண்டாம்! எனக்கு இப்போது இந்த உதவி தேவைப்படுகிறது.”

“தயங்காமல் சொல்!”

“மாமா! நான் மேல் படிப்பிற்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று பரீட்சை எல்லாம் எழுதிவிட்டேன்!”

“ம்! திவ்யா சொன்னாள்!”

“அதில் கொஞ்சம் பிரச்சனை மாமா!”

“என்ன பிரச்சனை?”

“எல்லாம் பண விஷயம் தான்! எனக்கு பிடித்த கல்லூரியில் சேர்க்கை கூட கிடைத்துவிட்டது. ஆனால் இந்த ஆண்டு கட்டணம் கொஞ்சம் அதிகமாகி விட்டது. அப்பாவால் பணம் ஏற்பாடு செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். அடுத்த வருடம் மீண்டும் முயற்சிக்கலாம் என்கிறார். இல்லை வேறு கல்லூரியில் சேர சொல்கிறார். ஆனால் எனக்கு இப்போது கிடைத்த வாய்ப்பு ரொம்ப நல்ல வாய்ப்பு! அதை விட எனக்கு மனம் வரமாட்டேன் என்கிறது!” என்றான்.

“எவ்வளவு பணம் வேண்டும்?” என்றான் கிருபாகரன்.

“இன்னும் ஒரு இரண்டு லட்சம்!” என்றான் சங்கர்.

“சரி! நான் ஏற்பாடு பண்ணுகிறேன்!” என்றவனை உடனே தடுத்தான்.

“ஐயோ! அதெல்லாம் வேண்டாம் மாமா! திவ்யாவுக்கு தாத்தா கொடுத்த வீடு ஒன்று இருக்கிறது, திருச்சியில்! அதை வங்கியில் வைக்க சம்மதித்தாள் போதும். முதலில் உங்கள் வீட்டு நிலை சரியில்லை என்பதாலோ என்னவோ, அவளுக்கு இருக்கும் ஆதாரத்தை கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டாள். இப்போது நிலைமை மாறிவிட்டதே! அவளிடம் பேசுகிறீர்களா? விற்க கூட வேண்டாம்! நான் படித்ததும் வேலைக்கு சென்று அவளுக்கு மீட்டு கொடுத்து விடுவேன்!” என்றான்.

காவ்யா அவனிடம் சொன்ன அதே வார்த்தைகளை யோசிக்காமல் அப்படியே சொல்லிவிட்டான் சங்கர்.

ஆனால் கிருபாகரனின் சுயமரியாதையை சீண்டி விட்டான் என்று அவனுக்கு தெரியாது. கிருபாகரன் அவனிடம் எதுவும்

காட்டிக்கொள்ளாமல், அவன் செல்லும் போது, ஒரு காசோலையை கொடுத்தான்.

“இதை வைத்துக்கொள். இன்னும் ஏதும் உதவி வேண்டுமென்றால் தயங்காமல் கேள்!” என்றான்.

“இல்லை மாமா! இது வேண்டாம்! திவ்யாவிடம் இருந்து…” என்று சங்கர் தயங்கினான்.

“திவ்யா கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் ஒன்றுதான்!” என்று அவன் கையில் திணித்தான்.

கிருபாகரன் நடந்ததை சொல்லிமுடிக்கும் வரை திவ்யா பேசாமல் கேட்டிருந்தவள், அமைதியாக இருக்க, “நீ என்ன சொன்னாயோ! அவன் என்ன புரிந்து கொண்டானோ! ஆனால் நான் அதை வைத்து உன்னிடம் அப்படி பேசி இருக்கக் கூடாது! உனக்கு தெரியும் தானே! சில ஆண்டுகளுக்கு முன் நம் வீட்டு நிலை. சில நிகழ்வுகள் எல்லாம் கொஞ்சம் என்னை காயப்படுத்தி இருந்தது. மீண்டும் அதெல்லாம் சட்டென்று நினைவு வந்தது. அதனால்…” என்று அவன் முடிக்கும் முன்,

“நீங்கள் நினைத்த அதே அர்த்தத்தில் தான் நான் பேசினேன்! எனக்கு இருக்கும் ஆதாரம் அது தான்! அதை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்! இதையே தான் அன்றும் சொன்னேன்! இப்போதும் சொல்கிறேன்! நான் சராசரி பெண் தான்!” என்று திவ்யா முடிக்கும் போது வெடித்து அழுதாள்.

அவளை அணைத்துக்கொண்டான் கிருபாகரன். “திவ்யா! வேண்டாம்! நீ அழுவதை என்னால் பார்க்க முடியாது! அதுவும் என்னால் நீ அழுகிறாய் என்றால் என்னால் தாங்க முடியவில்லை! என்மேல் தான் தவறு. கோவத்தில் ஏதேதோ பேசிவிட்டேன்! உன்னை பற்றி எனக்கு தெரியும் தானே! நான் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து நீ உன்னை வருத்திக்கொள்ளாதே!” என்று அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன், அவள் கண்ணீரை துடைத்துவிட்டான். மேலும் அவன் கண்ணங்களில் கண்ணீர் வழிய, “போதும் திவ்யா! இங்கே பார்! நீ சொன்னது போல் உனக்கு ஒன்று வேண்டும் என்று நினைப்பதால் நீ என்னை நம்பவில்லை

என்று அர்த்தம் இல்லை! நான் தான் மடத்தனமாக யோசித்தேன்! அப்பா சொன்னது போல் என்னை வேண்டுமானால் ரெண்டு அடி அடித்துக்கொள்!” என்றவன் அவள் கைகளை எடுத்து அவன் முகத்தில் அவனே அடிக்க, திவ்யா கைகளை இழுத்துக்கொண்டாள். அந்த கைகளை மீண்டும் பற்றி முத்தமிட்டான் கிருபாகரன். கணவன் மேல் சாய்ந்து கொண்டு மெல்ல திவ்யா சொன்ன விஷயங்களை கேட்டு கிருபாகரன் விழிகள் அவனை அறியாமல் விரிந்தன. இவளையா ‘என்னை ஏன் நம்பவில்லை!’ என்று கேட்டேன் என்று அவனுக்கே அவன் மேல் ஆத்திரம் வந்தது. மனைவியை காயப்படுத்தி விட்டோம் என்று தெரிந்து சிறிதுநேரம் அவளை அணைத்தபடி அமர்ந்திருந்தான்.

அவள் விசும்பல் மெல்ல குறைய, “நான் பாலை சூடு பண்ணி எடுத்து வருகிறேன்! நீ சென்று முகத்தை கழுவு!” என்றான்.

“அதெல்லாம் வேண்டாம்! அப்படியே குடித்துக் கொள்வேன்!” முகத்தை கழுவிக்கொண்டு வந்தவள், அவன் நீட்டிய பாலை மிச்சம் வைக்காமல் குடித்தாள். அவள் குடித்து முடித்த வேகத்தை பார்த்து சிரித்தவன், “இதுவும் வேண்டுமா?” என்று அவனுக்கென்று வைத்திருந்த பாலை நீட்டினான்.

“இல்லை வேண்டாம்! நீங்கள் குடியுங்கள்!” என்றாள்.

சூடு இல்லாத பாலை அவனால் குடிக்க முடியவில்லை. வெகு சிரமத்துடன் அவன் முடிக்க, அவன் முகம் போன போக்கை பார்த்து சிரிப்பை அடக்கியபடி பார்த்தவளுக்கு முகம் மாறியது.

வேகமாக குளியல் அறைக்குள் சென்றவளுக்கு குடல் புரட்டிக்கொண்டு வந்தது.

மனைவியின் தலையை பிடித்துக்கொண்டவன், “பேசாம இருவரும் சூடு பண்ணி குடித்திருக்கலாம்!” என்று அழைத்து வந்து படுக்க வைத்தான்.

வெகு நாளைக்குப் பிறகு கணவன் மார்பில் சாய்ந்து உறங்கிப்போனாள். அவள் தலையில் வருடிவிட்டவன் அவனும் உறங்கி போனான்.

அத்தியாயம் – 16

விடிந்து வெகுநேரம் ஆன பின்னும் மகன், மருமகள் இன்னும் அவர்கள் அறையில் இருந்து வெளி வரவில்லை என்று யோசித்த வசந்தி, இருவருக்குள் எல்லாம் சரியாகி இருக்கும் என்று எண்ணி கொண்டாள். மகன் அன்று பார்க்க வேண்டிய வேலையை அவர்கள் இருவரும் பார்க்கலாம் என்று எண்ணி கிளம்பிவிட்டார்கள்.

அசந்து தூங்கிக்கொண்டிருந்த திவ்யா கதவு திறக்கும் சத்தம் கேட்டு எழுந்தாள். கிருபாகரன்தான். அவன் சட்டையை மாட்டிக்கொண்டு இருந்தான். அவர்கள் அறை பிரகாசமாக இருப்பதை கண்டு, “ரொம்ப நேரம் ஆகிவிட்டதா?” என்று கேட்டாள்.

“பரவாயில்லை! நீ கொஞ்ச நேரம் படுத்துக்கொள்! நான் தோட்டத்திற்கு செல்ல வேண்டும்!” என்றான்.

கணவன் சொன்னதை பொருட்படுத்தாமல், மெல்ல எழுந்தவளுக்கு காற்றில் மிதப்பது போல் தோன்ற மீண்டும் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள். அதை கண்டவன், “என்ன ஆச்சு?” என்றான்.

“லேசாக தலை சுற்றுகிற மாதிரி இருக்கு!” என்றாள்.

“சரியாக சாப்பிடாமல் இருந்ததால் இருக்கும்! இரவில் வேறு சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்து விட்டது! முதலில் நீ பல் துலக்கு! குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன்!” என்று அவளை பிடித்துக்கொண்டு குளியல் அறைக்கு அழைத்து சென்றான். அவள் பல் துலக்கும் வரை உடன் இருந்து பிறகு மீண்டும் அவளை பிடித்தபடி கட்டிலில் அமரவைத்தான்.

அவன் கூடத்திற்கு வந்த பிறகு தான் தெரியும் பெற்றவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்று! மனைவிக்கு காபியை கொடுத்து பருக வைத்தான். அவள் பாதி குடிக்கும் முன், மீண்டும் குளியல் அறைக்கு ஓடினாள். உள்ளே சென்ற காபியும் வெளியே வந்தது. திவ்யா வெகுவாக சோர்ந்து விட,

“வயிறு ஏதும் சரியில்லையா? சாப்பிடாமல் இருந்து ஏதும் இழுத்து கொண்டாயா? வா மருத்துவரை பார்த்துவிடலாம்! இப்படி நீ வாந்தி எடுத்துக்கொண்டிருந்தால் உன்னால் நிற்க கூட முடியாது! நான் காரை எடுத்துவருகிறேன். போகும் போது அம்மாவை அழைத்து கொள்ளலாம்.” என்று மனைவியை கை தாங்கலாய் வெளியே அழைத்துவர, காருக்குள் ஏறும் முன், திவ்யா அவன் முகத்தை பார்த்து நின்றாள்.

“என்ன? என்ன செய்கிறாய்?” என்றான்.

“இன்று தேதி என்ன?” என்றாள்.

“இப்போது எதற்கு?” என்று அவளை வண்டியில் அமரவைக்க, அவன் சட்டையை பற்றி, “தேதியை சொல்லுங்கள்?” என்றாள்.

அவன் சொல்லவும், அவள் முகம் பிரகாசமாக, அவன் புருவம் நேராக நோக்கினான். சட்டென்று அவனை அவள் அருகே இழுத்து அவன் செவிகளில் ரகசியம் சொன்னாள்.

மனைவியின் முகத்தில் அழுந்த முத்தமிட்டவன், “சரி! எதற்கும் டாக்டரை பார்த்துவிடலாம்!” என்றான்.

கணபதி கையில் இருந்த அலுவலகப் பையை வீசி எறிந்தார். அவர் அலுவலகம் செல்லக் கிளம்பிக்கொண்டிருந்தபோது சங்கர் சொன்ன விஷயங்கள் அவரைக் கோபத்தின் உச்சிக்குக் கொண்டு நிறுத்தியது.

“இன்னும் இரண்டு வாரத்தில் கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும்! அப்போது தான் அனுமதி உறுதியாகும்!” என்றான் சங்கர்.

“ஏற்கனவே பேசியது தானே! அடுத்த வருடம் பார்க்கலாம்!” என்றார் கணபதி.

“கட்டணத்துக்கு பணம் இருப்பதாகச் சொன்னீர்களே! அதை கட்டுவதில் எதற்கு யோசிக்கிறீர்கள்?” என்றான் மகன்.

மகனை முறைத்துவிட்டு, “பணத்தைக் கட்டிவிட்டு? பிறகு உனக்கு செலவுக்குப் பணம் இல்லை என்று விசா வரவில்லை என்றால், கட்டிய பணம் போனது தானே! கல்லூரி தொடங்கும் நாளுக்குள் என்னால் பணம் ஏற்பாடு செய்ய முடியாது சங்கர்!”

“என் செலவுக்கு பணம் நான் ஏற்பாடு செய்து கொண்டேன்! அதைப் பற்றி கவலை இல்லை!” என்றான்.

“ஏற்பாடு செய்துவிட்டாய் என்றால்? எப்படி?”

மகனும் தந்தையும் பேசிக்கொண்டே இருக்க, “கிளம்பும் நேரத்தில் என்ன பேச்சுவார்த்தை! எல்லாம் மாலையில் பேசலாம். அலுவலகத்திற்கு நேரம் ஆகிறது!” என்ற உமா மகனைப் பார்த்து, “கிளம்பும் நேரத்தில் இது போல் பேச்சுக்களை தொடங்க வேண்டாம் என்று உனக்கு எத்தனை முறை சொல்வது?” என்று மகனைக் கடிந்தாள்.

“நேற்று மாலை இதுபற்றி தான் பேச வந்தேன்! அப்பாவுக்கு களைப்பாக இருக்கிறது என்று படுத்துக் கொண்டார்!” என்றான் மகன்.

சரி இன்று மாலை … என்று பேசிக்கொண்டிருந்த உமாவை தடுத்து, “பணம் ஏற்பாடு செய்துவிட்டாய் என்றாயே? எப்படி? யார் கொடுத்தார்கள்?” என்றார்.

“அது… கிருபா மாமா கொடுத்தார்!” என்று அவன் சொன்னது தான் தாமதம், கையில் இருந்த பை வேகமாக அருகில் இருந்த சுவற்றில் வீசப்பட்டு தரையில் விழுந்தது.

“இவன் என்ன சொல்கிறான்? இவன் எப்போது மாப்பிள்ளையிடம் பணம் கேட்டான்? உனக்கு தெரியுமா?” என்றார் மனைவியிடம்.

கணவனின் கோபத்தில் பயந்து போன உமா, “எனக்கு எதுவும் தெரியாது!” என்றாள்.

“நீ செய்தது எத்தனை கேவலமான செயல் என்று உனக்கு தெரியுமா? மாப்பிள்ளையிடம் அத்தியாவசியத்துக்கு கை

ஏந்துவதே கேவலம்! நீ இப்படி செய்துவிட்டாயே! இவன் நம் மானத்தை வாங்கிவிட்டான் உமா. இவனை என்ன செய்வது!”

கணவன் பேச்சைக் கேட்டு உமா கலங்கித்தான் போனாள். மகன் செய்த அதே தவறை அவளும் தானே செய்து வைத்திருக்கிறாள். அவள் மருமகனிடம் கேட்கவில்லைதான். ஆனால் மகளிடம் கேட்டாளே! அவள் உதவியையும் பெற்றுக்கொண்டாளே!

“பையன் படிப்பு விஷயம். ரொம்ப யோசிக்காதீர்கள்! அண்ணன் தங்கைக்குள் இதெல்லாம் செய்வது தானே!” என்றாள் வசந்தி.

திவ்யா வீட்டில் பெரிய பிரச்சனை வராது என்று அறிந்து, நகைகளை அடகு வைத்து விட்டாள். வந்த பணத்தில் தான் காவியாவின் செலவுக்கு கொடுத்தாள்.

உமாவுக்கு இப்போது அவள் செய்த காரியங்களை சொல்ல கைகால்கள் உதறியது. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. மெல்ல விஷயத்தைச் சொல்ல, கணபதி நொறுங்கித்தான் போனார்.

“நான் இன்னும் உயிருடன் தானே இருக்கிறேன்! செத்துவிடவில்லையே! எல்லோரும் சேர்ந்து இப்படி என்னை கேவலப்படுத்திவிட்டீர்களே!” என்று தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தார்.

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. தன்னைத் தானே ஒருநிலை படுத்திக்கொண்டு எழுந்தவர், “நீ மாப்பிள்ளையிடம் வாங்கிய பணம் எங்கே?” என்றார் கணபதி.

ஏற்கனவே தந்தையின் வாட்டத்தைப் பார்த்தவன் அவன் அறைக்குச் சென்று கிருபாகரன் கொடுத்து காசோலையை எடுத்து வந்து நீட்டினான்.

மனைவியைப் பார்த்து, “திவ்யாவின் நகைகளை எல்லாம் உடனே மீட்க வேண்டும்! என்னுடன் வா!” என்று உமாவை அழைத்தார்.

சில மணி நேரங்களில் வீடு வந்த கணபதி வேகமாக அவர் அறைக்குச் சென்றார். சிறிய பையில் அவர் நினைத்தவைகளை அடுக்கினார். சங்கரையும் காவ்யாவையும் அழைத்தவர், சில புத்தகங்களை அவர்கள் முன் வீசினார்.

“இது என் பேரிலும் உன் அம்மா பேரிலும் இருக்கும் வங்கி கணக்குகள். என் பி.எப், கிராஜுட்டி எல்லாம் சேர்த்து எத்தனை இருக்கிறது என்று எல்லா விவரமும் இதில் இருக்கிறது. உங்களுக்கு வேண்டியதை எடுத்து கொள்ளுங்கள். இத்துடன் எல்லாம் முடிந்தது. இருவருக்கும் நல்ல படிப்பை இதுவரை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன்! அதை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள். இதை தாண்டி என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை. இனியும் உங்களுக்காக யோசித்து யோசித்து சேர்த்து வைப்பதெல்லாம் வீண்! பெரியவர்கள் ஆகிவிட்டீர்கள்! உங்களுக்கே இனி எல்லாம் தெரியும்! இனி உங்களுக்கு நான் தேவைப்பட மாட்டேன்!” என்றார்.

“என்னப்பா! என்னென்னவோ பேசுகிறீர்கள்? சங்கர் இந்த படிப்பை படிக்க ரொம்ப ஆசைப்பட்டான் என்று உங்களுக்கு தெரியும் தானே! அதனால் தான் ..” என்று சொன்ன காவ்யாவைப் பார்த்தவர், “தெரியும்! அதற்காக தான் யோசித்து யோசித்து எல்லாம் சேர்த்து வைத்தேன்! ஒரு வருடம் பொறுத்திருக்க அவனால் முடியவில்லை. உங்கள் இருவருக்கும் சுயநலம்! உங்களைப் பற்றி மட்டும் தான்! என்னைப் பற்றி, என் தன்மானத்தைப் பற்றி எல்லாம் ஒன்றும் இல்லை.” என்றவர் மனைவியைப் பார்த்து, “உங்கள் அம்மாவுக்கே அது இல்லை எனும் போது..உங்களிடம் அதை எதிர்பார்க்க கூடாது தான்!” என்றார்.

“நான் செய்தது தவறு தான்! ஆனால் பிள்ளைகள் வாழ்க்கைக்காக தான்…..” என்று அவள் முடிக்கும் முன்

“அப்போது திவ்யா ….. அவள் எப்படி போனால் உங்களுக்கென்ன? அவளும் நம் மகள் தானே! அவளுக்கு பிரதி உபகாரமாக இதுவரை செய்த ஒன்றை சொல் பார்ப்போம்! இவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அவளை இங்கே வைத்து கொள்ளவில்லை. இவர்களுக்கு பின்னாளில் சிக்கல் வரும் என்று

அவளுக்கு முதலில் திருமணம் முடித்து அனுப்பிவிட்டோம். அவளுக்கென்று கொடுத்த கொஞ்ச நகைகளையும் இப்போது இவர்களுக்கென்று பிடுங்கிக்கொண்டு வந்து விட்டாய்! நம்மை எத்தனை நம்பி இருந்தால், பெண்ணுக்கு என்ன செய்தீர்கள் என்று கூட கேட்காமல், கொடுத்த நகைகளை கூட நம்மிடமே திரும்ப கொடுத்திருந்தார்கள். இப்போது நாம் செய்த காரியம் தெரிந்தால் சம்பந்தி நம்மை என்ன நினைப்பார்கள். இப்போது அவர்கள் அடைந்திருக்கும் வசதிக்கு நாம் செய்தது எல்லாம் கால் தூசுக்கு சமமா? ஒருவேளை எங்கள் தகுதிக்கு உன் வீட்டில் என்ன செய்தார்கள் என்று திவ்யாவை கேட்டாள்? நம்மால் என்ன செய்ய முடியும்? நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிந்து அவர்களிடம் இருந்து பிடுங்குவது …இதெல்லாம் இதுவரை நான் கண்டுகொள்ளாமல் இருந்ததை நினைத்தால், அவமானமாக இருக்கிறது.” என்றவர்

மூவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, “இங்கே இருப்பதை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். நான் ஒன்றும் கேட்க மாட்டேன்! எனக்கு ஏற்பட்ட அவமானத்தை நானேதான் சரி செய்ய வேண்டும்.” என்று நகரந்தவரை மூவரும் தடுத்தனர்.

“நீங்கள் என்னென்னவோ பேசுகிறீர்கள்! திவ்யாவிடம் நான் பிடுங்கி கொள்ள வேண்டும் என்றெல்லாம் செய்யவில்லை. இப்போது வெறும் கடனாக தான் வாங்கியிருக்கிறோம். சங்கர் பின்னாளில் அதை திரும்ப கொடுத்து விடுவான் என்று நினைத்து தான் எல்லாம் செய்தேன்! இப்போது அதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். எல்லாவற்றையும் திரும்ப கொடுத்து விடலாம்!” என்றாள் உமா.

தந்தையின் பேச்சு அவரின் வேதனையைப் புரியவைக்க சங்கர் பேசவே தயங்கினான்.

உமா கொஞ்சம் கணவனை சமாதானப்படுத்த, “சரி! நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்! என் முடிவையும் நீங்கள் கேளுங்கள்!” என்றார்.

மருத்துவரிடம் பரிசோதனை முடித்துக்கொண்டு திவ்யாவுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் என்று வாங்கிக்கொண்டு வீடு

வர மாலையே ஆகிவிட்டது. மருமகள் கொடுத்திருந்த உவப்பான செய்தியை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தங்கவேலு நினைத்தார். திவ்யாவுக்கு பழச்சாறு கொடுத்துவிட்டு அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வசந்தி வரவும், தங்கவேலு மனைவியிடம் சொன்னார்.

“நீ முதலில் எல்லோருக்கும் தகவல் சொல்! பெங்களூருக்கு போன் போடு! அப்படியே கீர்த்தியிடம் பேசு! நம் வீட்டுக்கு ஒரே நேரத்தில் ரெண்டு பேரப்பிள்ளைகள் வரப் போகிறார்கள். நாம் இத்தனை நாள் பட்ட வேதனைக்கெல்லாம் தொடர்ந்து நல்லது நடந்து கொண்டே இருக்கிறது. பிள்ளைகள் நால்வருக்கும் சுற்றிப்போட வேண்டும். பேசாமல் இன்னும் உதவிக்கு ரெண்டு பேரை வைத்துக்கொள். கீர்த்தி எப்படியும் ரெண்டு நாளில் இங்கே வருவாக சொன்னாள். இருவரையும் கவனித்து கொள்ள உனக்கு சிரமமாக இருக்கலாம். இருவரையும் நல்லபடியே கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும். பண்ணையில் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்யவேண்டும்.” என்று பரபரத்தார் தங்கவேலு.

“கொஞ்சம் சும்மா இருங்கள்! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். மூன்று மாதம் நிரம்பாத வரை எல்லோரிடமும் சொல்லக்கூடாது! திவ்யாவின் வீட்டிலும், கீர்த்தி வீட்டில் மட்டும் சொல்லலாம். மற்றதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலிலே ஊர் கண்ணெல்லாம் நம் பிள்ளைகள் மேல் தான். கிருபா! நீயும் இதை இப்போதைக்கு யாரிடமும் சொல்லாதே! புரிகிறதா?” என்றாள்.

இரு ஆண்களும் தலையாட்ட, மகனிடம் “சரி! உன் மாமனாருக்கு கூப்பிடு!” என்று சொன்னாள்.

கிருபாகரன், கணபதி எண்ணுக்கு அழைக்கவும், ஒரு கார் அவர்கள் வீட்டில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

கணபதி குடும்பத்துடன் வந்து இறங்கினார்.

அவர்களை கண்டதும், “பாரேன்! இந்த பெண் உடனே அவர்கள் வீட்டில் சொல்லிவிட்டாள்!” என்று வசந்தி சொல்ல,

தங்கவேலுவும், “பின்னே! அவள் அம்மாவுக்கு சொல்லாமல் இருப்பாளா?” என்றார்.

ஆனால் திவ்யா அவர்களுடன் பேசவில்லை என்பதை அறிந்த கிருபாகரன் அவர்களை வரவேற்க, “வாருங்கள் சம்பந்தி! விஷயம் தெரிந்ததும் கிளம்பி வந்து விட்டீர்களா?” என்றார் தங்கவேலு. அவர் குரலில் இருந்த உற்சாகம் கணபதிக்கு சிறிய குழப்பத்தை தந்தது.

வீட்டிற்கு வந்தவுடன் கணபதி, ஒரு பையை தங்கவேலுவிடம் நீட்டினார்.

“என்ன சாமந்தி இது!” என்றார் தங்கவேலு.

“நீங்கள் எங்களுக்கு கொடுத்தது!” என்றார்.

தங்கவேலு புரியாமல் பார்க்க, “சங்கர் படிப்புக்கு கொடுத்தது! இவன் உங்களிடம் உதவி கேட்டு சங்கடப்பட வைத்துவிட்டான்! அதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள்!” என்றார்.

தங்கவேலு பிள்ளை மூலம் முன்பே விஷயத்தை அறிந்திருக்க, “வேறு பணம் ஏற்பாடு பண்ணி விட்டீர்களா?” என்றார்.

“அது எங்கள் கஷ்டம்! நாங்கள் பார்த்து கொள்வோம்! உங்களிடம் கேட்டிருக்க கூடாது!” என்றார் கணபதி.

“என்ன பேசுகிறீர்கள் அண்ணா! நாம் எல்லோரும் ஒரே குடும்பம். கஷ்டம் என்றால் ஒருவருக்கு ஒருவர் உதவுவது தானே! ஏன் இப்படி பிரித்து பேசுகிறீர்கள்?” என்றாள் வசந்தி.

“இல்லை அம்மா! திவ்யாவிடம் இவர்கள் கேட்டிருக்க கூடாது!” என்றார் மீண்டும்.

“ஏன்! பிள்ளைகளிடம் கேட்பதில் என்ன தவறு? நாங்களும் கிருபாவை நம்பித் தான் இருக்கிறோம்! அதை தவறு என்று சொல்வீர்களா?” என்றாள் வசந்தி.

“ஐயோ! நான் அப்படி சொல்லவில்லை! உங்கள் பிள்ளையிடம் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது!” என்று பதறினார்.

“அதே போல் திவ்யாவிடமும், கிருபாவிடமும் உங்களுக்கும் உரிமை இருக்கிறது!” என்று மீண்டும் வசந்தி சொல்ல,

“இல்லை… இது அது போல் இல்லை. நான் திவ்யாவுக்கு ஒன்றுமே செய்யவில்லை! அவளை என் மாமனாரிடம் கொடுத்துவிட்டு, கவனிக்கவே இல்லை. இப்போது எனக்கு ஒரு தேவை என்று வரும் போது மட்டும் அவளிடம் சென்று நிற்பது….” என்று அவர் குரல் தழுதழுக்க, கிருபாகரன் அவர் முன் சென்று நின்று, “என்ன மாமா! இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்! நீங்கள் மூன்று பேரையும் ஒன்றாகத்தான் நினைத்தீர்கள்! அவர்களுக்குள் வேறுபாடாக நடந்து கொள்ள வேண்டும் என்று எப்போதேனும் நினைத்தீர்களா?” என்றான்.

“அப்படி நினைக்கவில்லை. ஆனால் … நான் பாகுபாட்டுடன் தான் இருந்தேன்.” என்று தடுமாறினார்.

“காலத்தின் போக்கில் சிலருக்கு நினைத்ததை செய்ய முடியாது. அதற்காக அவர்களை குறை சொல்ல முடியாது! நீங்கள் திவ்யாவை பாகுபாடின்றி பார்க்கிறீர்கள் என்றால், சங்கரிடம் இருக்கும் உரிமை உங்களுக்கு திவ்யாவிடம் இருக்கிறது தானே! பிறகு எதற்கு மாமா உங்களை இப்படி வருத்திக் கொள்கிறீர்கள்!” என்றான். கணபதி பின்னால் நின்ற மூவரும் எதுவும் பேசாமல் குனிந்த தலையுடன் நிற்க,

“உங்களுக்கு ரொம்ப பெரிய மனது மாப்பிள்ளை. வேறு யாராக இருந்தாலும் என் மகளை வேறு மாதிரி நடத்தி இருப்பார்கள்!” என்று மருமகனின் கையை கணபதி பற்ற, “தேவை இல்லாத கதைகள் பேசிக்கொண்டு முக்கியமான விஷயத்தை எல்லோரும் மறந்து விட்டீர்கள்!” என்றார் தங்கவேலு.

“அட! அண்ணன் ஒரு மாதிரி பேசவும் நானும் மறந்து விட்டேன்!” என்றாள் வசந்தி.

“என்ன விஷயம்?” என்றார் கணபதி.

“ரொம்ப சந்தோஷமான விஷயம்! உங்களுக்கு சொல்லலாம் என்று போனில் அழைக்க எண்ணிய போது நீங்களே வந்துவிட்டீர்கள்! நீங்கள் சீக்கிரம் தாத்தா ஆகப்போகிறீர்கள்!” என்றாள் வசந்தி.

அதுவரை பெரிய சங்கடத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தவர், சட்டென்று, “அடடா! நான் தாத்தா ஆகப்போகிறேனா? திவ்யா எங்கே!” என்றார்.

“அவள் அறையில் படுத்திருக்கிறாள்! கிருபா நீ சென்று அழைத்து வா!” என்று சொல்ல அவனும் அவன் அறைக்கு சென்றான்.

“ஏதும் முடியவில்லையா? ஏன் படுத்திருக்கிறாள்?” என்றாள் அதுவரை பேசாமல் இருந்த உமா.

“இன்று காலையில் தான் வாந்தி தலை சுற்றல் என்று சொன்னாள். சரியாக சாப்பிடவும் இல்லை. அதனால் தான் கொஞ்சம் களைத்து விட்டாள்.” என்று சொல்லவும், “அப்படி என்றால் படுத்து கொள்ளட்டும். நாமே சென்று பார்க்கலாம்!” என்று உமா சொல்ல, அதற்குள் மனைவியை அழைத்துக்கொண்டு கிருபாகரன் அங்கே வந்தான். அங்கே எல்லோரும் திவ்யாவை சுற்றி நின்று அவளிடம் விசாரிக்க, முகம் சிவந்து போனாள்.

அங்கே வரும் போது இருந்த மனநிலை மாறி எல்லோருக்கும் மகிழ்ச்சியான மனநிலை தோன்றியது. சிறிது நேரத்தில் கீர்த்தியும் வர வீடு களை கட்டியது.

மனைவியை சுற்றி எல்லோரும் இருக்க, அவன் வேலைகளை கவனிக்க சென்றான். மீண்டும் திவ்யாவிடம் செல்ல நினைத்தபோது அவள் அறையில் படுத்திருக்க அவளை தொல்லை செய்யவேண்டாம் என்று அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுக்க, சட்டென்று கண்களை திறந்தாள். “ஏய்! நீ தூங்கவில்லை!” என்றான்.

“தூக்கம் வரவில்லை!”

“பிறகு ஏன் இங்கே படுத்திருக்கிறாய்? எல்லோருடனும் சென்று அங்கே இருக்க வேண்டியது தானே!”

“எல்லோரும் என்னை பற்றியே பேசுவது கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது! அதனால் தான் ‘படுத்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு இங்கே வந்து விட்டேன்.”

சிரித்துக்கொண்டே மீண்டும் அவள் கணத்தில் இதழ் பதிக்க, அவளும் பதிலுக்கு முத்தமிட, “எல்லாம் சரி! ஆனால் இன்னும் நீ வீட்டை உன் மாமாவுக்கு கொடுத்தது பற்றி உன் அம்மா அப்பாவிடம் சொல்லவில்லையே!” என்றான்.

“அது அவர்களுக்கு தெரிய வேண்டாம்!” என்றாள்.

“ஏன்? உன்னை பற்றி மேலும் உயர்வாக எண்ணுவார்கள்!”

“அத்தை மாமாவை பற்றி தவறாக எண்ணுவார்கள். என்னிடம் இருந்ததை பறித்து கொண்டதாக நினைப்பார்கள். நான் தான் விரும்பி கொடுத்ததாக சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.”

“கல்லூரியில் படிக்கும் போது என்ன தைரியத்தில் உன் மாமாவுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தாய்! ஒருவேளை நான் வரதச்சனையாக நிறைய கேட்டிருந்தால்…” என்று கணவன் கேட்க

“கேட்டிருந்தால் …’போடா!’ என்று சொல்லிவிட்டு போயிருப்பேன்!” என்றாள் திவ்யா.

“ஏது? போடா வா … ரொம்ப வாய் நீளுகிறதே!” என்று அவள் கழுத்தை சுற்றி அவன் கையை வளைத்து பிடிக்க, “அது தான் நீங்கள் எதுவும் கேட்கவில்லையே! கேட்டிருந்தால் தான் அப்படியெல்லாம் பேசி இருப்பேன்!” என்று அவன் கைகளை எடுத்து அவள் கன்னங்களில் வைத்துக்கொண்டான்.

“பாட்டி தாத்தாவுக்கு பிறகு என்னை பிரியமாக பார்த்துக்கொண்டது இந்த வீட்டில் இருப்பவர்களும்தான். அதனால் நான் இருக்கும் வரை இந்த வீட்டில்தான் இருப்பேன்! இங்கே இருந்து போவதென்றால், நான் செத்….” அவள் வாயை சட்டென்று பொத்தினான்.

“என்ன பேச்சு இது! இனி ஒருமுறை இப்படி பேசாதே!” என்றவன், “நீ ஏதாவது சாப்பிடு! ரொம்ப நேரம் நீ சாப்பிடவில்லை!” என்றான் அந்த அன்பு கணவன்.

“ஆமாம்! சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இப்படி மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால், உங்களைவிட அதிக எடை போட்டுவிடுவேன்!” என்றாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கதவு தட்டப்பட, அங்கே சங்கரும் காவ்யாவும் நின்றிருந்தார்கள்.

“உள்ளே வாருங்கள்!” என்று கிருபாகரன் குரல் கேட்க,

“சாரி! நீங்கள் இங்கே இருப்பது தெரியாது! நாங்கள் திவ்யாவிடம் பேச வந்தோம்!” என்று இருவரும் திரும்ப, “அதனால் என்ன? நீங்கள் பேசுங்கள்!” என்று வெளியே சென்றான் கிருபாகரன்.

அக்காவும் சங்கரும் அருகே வர, “சாரி திவ்யா!” என்றனர் இருவரும் ஒன்றாக.

இருவரையும் மாறி மாறி பார்க்க, “சின்ன வயதில் இருந்து உன்னை வேறு யாரோ என்றே நினைத்து பழகிவிட்டோம்! ஆனால் எங்கள் மேல் இருக்கும் வருத்தங்களை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல், எங்கள் படிப்புக்கு உதவ வேண்டும் என்று நீ நினைத்தது பெரிய விஷயம். அதற்கு தேங்க்ஸ்!” என்றான் சங்கர்.

“நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. அதை விடுங்கள்!”

“இனி இதை பற்றி பேசவேண்டாம்! நாம் மூவரும் ஒருவருக்கொருவர் எப்படி புரிந்து வைத்துக்கொண்டிருந்தோம் என்று மற்றவர்களை விட நமக்கு தெரியும். அவரவர்க்கு அவர்கள் தரப்பு நியாயமாக படும். அதனால் இனி பழையதை பேசவேண்டாம்.” என்றாள் திவ்யா.

“வாழ்த்துக்கள்!” என்று சங்கர் சொல்ல, “நன்றி!” என்றாள்.

“இன்னும் ரொம்ப அந்நியமாகவே இருக்கிறோம். இல்லையா?” என்றான் சங்கர்.

“பல வருட விலகல். உடனே சரியாகி விடாது! மெல்ல மாறட்டும்!” திவ்யா சொன்னாள்.

காவ்யா பேசாமல் இருக்க, “தேங்க்ஸ் காவ்யா!” என்றாள். மற்ற இருவரும் புரியாமல் பார்த்தனர்.

எப்போதும் காவ்யா வேண்டாம் என்று சொன்னது திவ்யாவுக்கு கிடைக்கும். முதலில் தாத்தா பாட்டி வீடாகட்டும். இப்போது இந்த வீடாகட்டும். திவ்யாவுக்கு கிடைத்த வரம் இது. காரணம் காவ்யா. எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி ஒரு சிநேக புன்னகை திவ்யா சிந்த, காவ்யாவுக்கு தான் ஒரு மாதிரியாகி போனது.

முதலில் இரு பெண்களும் கருவுற்று இருக்கும் போது ஒரே வீட்டில் இருக்க கூடாது என்று சொன்னதை கருத்தில் கொண்டு கீர்த்தியின் வளைகாப்பு செய்யும் நேரம் திவ்யாவை பிறந்த வீட்டுக்கு அனுப்ப எண்ணினார்கள். மனைவியின் மனதை அறிந்த கிருபாகரன் அவளிடம் பேசினான்.

“நான் வாரம் ஒரு முறை வந்து பார்க்கிறேன்! பெரியவர்கள் சொல்கிறார்கள். கேட்க வேண்டுமே!” என்றான்.

“என்னை இங்கிருந்து அனுப்புவதில் உங்களுக்கு என்ன அப்படி ஒரு அவசரம்!” என்றாள் பெண்ணவள்.

“கீர்த்திக்கு இப்போது ஏழு மாதம் முடியப்போகிறது! அவளை இங்கே அழைத்து வர வேண்டும் தானே!”

“கீர்த்தி இங்கே வரட்டும்! நாம் வேண்டுமானால் தோட்டத்து வீட்டில் கொஞ்ச நாள் இருக்கலாம்.”

“அந்த வீட்டில் எப்படி? அதுவும் நீ தனியாக இருக்க நான் சம்மதிக்க மாட்டேன். எந்நேரமும் உன்னுடன் இருக்க என்னாலும் முடியாது. அம்மாவும் கீர்த்தியை பார்த்துக்கொள்ள வேண்டும்!” என்று நிலையை விளக்கினான்.

“நான் தனியே இருந்து கொள்வேன்! துணைக்கு இங்கே இருக்கும் ஆட்களில் ஒருவரை அழைத்துக்கொள்கிறேன்!”

“என்ன பிடிவாதம் திவ்யா இது?” என்று குரலில் சற்று கடுமை காட்டினான்.

“எனக்கு பெங்களூரு ஒத்து வராது!” என்றாள்.

“அது தான் எல்லாம் சரியாகி விட்டதே! உன் அம்மா அப்பாவிற்கும் உன்னை அவர்களுடன் வைத்துக்கொள்ள ஆசை இருக்கும் தானே!”

“அப்படி எல்லாம் இருக்காது!” என்றாள் வெடுக்கென்று.

மனைவியை அழுத்தமாக பார்த்தவன், அவள் தாடையை பற்றி அவன் புறம் திருப்பினான். “இங்கே பார்! வெறும் இரண்டு மாதம் தான். கீர்த்தியின் பிரசவம் முடியும் வரை! பிறகு நீ இங்கே வந்து விடலாம்.” என்றான்.

“ஹ்ம்ம் … இப்போது இப்படி சொல்வீர்கள்! பிறகு கீர்த்தி அம்மா வீட்டில் தான் குழந்தை பெற்றாள். நீயும் அதே போல் செய் என்று அங்கே அனுப்பிவிடுவார்கள்! எனக்கு இங்கே இருப்பது போல் எங்கும் இருக்க முடியாது! அது… அந்த வீடு எனக்கு ரொம்ப அந்நியமாக….” லேசாக கண் கலங்க, “நான் இப்போது சொல்வதுதான்! வெறும் இரண்டு மாதம் நீ பெங்களூரில் இரு. அதன் பின் உன்னை யாரும் எங்கும் அனுப்பமாட்டார்கள். நான் விடவும் மாட்டேன். நம் குழந்தை இங்கே தான் பிறக்கும். இது பெரியவர்களின் நம்பிக்கைக்காக மட்டும் இல்லை. உன் பெற்றோருக்கு ஒரு திருப்தி கிடைக்கும். இந்த சமயத்திலாவது உன்னை உடன் வைத்து கொண்டார்கள் என்ற திருப்தி! அவர்களும் பாவம் தானே!” என்றான்.

“வெறும் ரெண்டு மாதம் தான்!” என்றாள்.

“கண்டிப்பாக!”

திவ்யா பயந்த அளவுக்கு பெங்களூரு வீடு இருக்கவில்லை. ரொம்ப கலகலப்பாக காவ்யாவும் சங்கரும் பேசவில்லை என்றாலும், முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை. அவளுக்கு பொழுதுபோக்குக்காக புத்தகங்களை வாங்கி வந்தான் சங்கர். சிசு வளர்ச்சி மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றி புத்தகங்கள். காவ்யாவும் அவளுக்கு பழங்கள் வெட்டி தருவது, அவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தால் வெந்நீர் கொண்டு வருவது என்று செய்தாள். மாலை கணபதி அவளை சிறிய நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வார். ஆனாலும் திவ்யாவுக்கு நாட்கள் மெதுவாகவே நகர்ந்தன.

சரியாக இரண்டு மாதத்தில் கீர்த்தி ஒரு ஆண் மகவை பெற்றெடுக்க, அடுத்த இரண்டு நாளில் மனைவியை அழைக்க வந்துவிட்டான் கிருபாகரன்.

“இன்னும் கொஞ்ச நாள் திவ்யா இங்கேயே இருக்கட்டுமே!” என்று உமா கேட்க,

“பிறகு அழைத்து வருகிறேன் அத்தை!” என்றான்.

“கீர்த்தியை பார்த்துக்கொள்ள வேண்டுமே! திவ்யாவும் அங்கே வந்தால் சிரமம் தானே!” என்றார் கணபதி.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை மாமா! நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்றான்.

“வளைகாப்பு ஐந்தாம் மாதம் வைத்து கொள்ளலாம் தானே!” என்றாள் உமா.

“அம்மாவிடம் கேட்டு கேட்க வேண்டும் அத்தை. பிறகு அதுபற்றி முடிவெடுக்கலாம்!” என்ற கணவனை முறைத்து கொண்டிருந்தாள் திவ்யா.

மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பினான். காரில் தான் சென்றார்கள். திவ்யா எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க, “என்னம்மா! எதுவும் செய்கிறதா?” என்றான்.

அவனை பார்த்து முறைத்தவள், “எப்போது திரும்ப அனுப்புவதாக உத்தேசம்!” என்றாள்.

“எங்கே?” என்றான் தெரியாதவன் போல.

“உங்கள் மாமனார் வீட்டுக்கு!” என்றாள்.

சிரித்துக்கொண்டே, “வளைகாப்புக்கு பிறகுதான்!” என்றதும் சில நொடிகள் கணவனை பார்த்துக்கொண்டிருந்தவள், வெறுப்புறம் திரும்பிக்கொண்டாள். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, “அவர்கள் கேட்கும் போது, ‘அனுப்ப முடியாது’ என்று எப்படி சொல்வது? அவர்கள் திருப்திக்கு சொல்லி வைத்தேன். என் மனைவிக்கு கொடுத்த வாக்கை நான் மீறுவேனா?” என்றான்.

“ப்ரோமிஸ்?” என்று அவள் கையை நீட்ட,

“ப்ரோமிஸ்!” என்று அவள் கையில் முத்தமிட்டான்.

மாதங்கள் இப்போது வேகமாகவே நகர்ந்தன. சீமந்தம் செய்தபின்னும் மனைவியை அவனுடன்தான் வைத்துக்கொள்வேன் என்று கிருபாகரன் பிடிவாதமாக சொல்லிவிட்டான். வசந்தி கூட, “பெண்களுக்கு அம்மாவுடன் இருக்க ஆசையாக இருக்கும் கிருபா! அங்கே அனுப்பி வைக்கலாமே!” என்ற போது, “அதெல்லாம் முடியாது! என்னால் தினமும் பெங்களூரு சென்று வர முடியாது! அதனால் அவள் இங்கேயே இருக்கட்டும்!” என்றுவிட்டான்.

கணபதி உமாவுக்கு வருத்தம் என்றாலும் பிடிவாதமாக சொன்ன மருமகனிடம் மறுபடியும் பேச தயங்கினார். அவர்களுக்கு தெரியாது அது அவர்கள் மகளின் கட்டளை என்று. வேறு வழியின்றி நிறைமாதம் ஆனதும் உமா தான் மகளின் வீட்டில் வந்து தங்கினாள்.

திவ்யாவும் நல்லபடியாக ஒரு மகளை பெற்றெடுக்க எல்லோருக்கும் மகிழ்ச்சி.

இப்போதேனும் மகளையும் பேத்தியையும் அவர்களுடன் சில நாள் வைத்துக்கொள்ளலாம் என்றால், இப்போது வசந்தி அதற்கு சம்மதிக்கவில்லை. “நீங்கள் இதற்காக வேலையை விட வேண்டும்! அங்கே ஆட்கள் கிடைப்பதும் கஷ்டம். இங்கே எல்லா வசதிகளும் இருக்கிறது! கீர்த்தியும் அவள் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். இப்போது திவ்யாவையும் நீங்கள் அழைத்து சென்றால் எங்களுக்கு ரொம்ப கஷ்டமாகி விடும். அவர்கள் இங்கேயே இருக்கட்டும்.” என்று விட்டாள்.

உமா கணபதி இருவரும் கிருபாகரை பார்க்க, அவனுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் கணக்குப்புத்தகத்தில் மூழ்கியிருந்தான்.

மகளின் பிரசவத்திற்காக ஒரு மாதம் ஏற்கனவே உமா விடுப்பு எடுத்துக்கொண்டுதான் இங்கே வந்திருந்தாள். இம்முறை மற்ற பிள்ளைகள் பற்றி சிறிதும் யோசிக்காமல் திவ்யாவுடன் இருக்க நினைத்திருந்தாள். என்னதான் மகளின் புகுந்த வீட்டில் உமாவை நல்லபடியே நடத்தினாலும், அவள் மகளை பார்த்துக்கொள்ள வாய்ப்பே கிடைக்கவில்லைதான். வளைகாப்பு முடிந்து அனுப்பி வைப்பதாக சொன்னவர்கள், “நீங்கள் திவ்யாவை பார்த்து கொள்ள வேலையை விட வேண்டும். இங்கே நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் தானே!” என்றார்கள்.

அறைக்குள் குழந்தைக்கு பால் புகட்டிக்கொண்டிருந்த திவ்யாவுக்கு இது ஏதும் தெரியவில்லை. கணவன் அறைக்குள் வர, மகள் பசியாறிவிட்டாள் என்று தெரிந்ததும் அவளை தூக்கிக்கொண்டு வெளியே சென்றான். சில கணங்களில் திரும்பி வந்தவனை முறைத்து கொண்டு இருந்தாள் திவ்யா.

“என்ன?” என்றான்.

“பாப்பா எங்கே!” என்றாள்.

“வெளியே நிலையை சுமூகமாக்க என் தங்கத்தை அங்கே விட்டுவந்திருக்கிறேன்!”

“என்ன நிலைமை?” என்று கேட்ட மனைவியிடம் பெரியவர்கள் பேசிக்கொண்டதை சொன்னான்.

“நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையா?” என்றாள்.

“அதுதான் அம்மாவே சொல்லிவிட்டார்களே! அத்தை மாமா முகமே வாடிவிட்டது. அது தான் குழந்தையை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு, “பார்த்துக்கொள்ளுங்கள்! திவ்யா தூங்கட்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன்! அவர்களை பார்த்தாலும் பாவமாக இருக்கிறது!” என்றதும் கணவனை கூர்ந்து நோக்கினாள். அவள் பார்வையை புரிந்துகொண்டவன், “அதற்காக அங்கே எல்லாம் உங்களை அனுப்பும் எண்ணம் எனக்கில்லை! என் மகளை நான் எங்கும் அனுப்பமாட்டேன்!” என்றான்.

“மகள் வந்ததும் நான் கண்ணுக்கு தெரியவில்லையா?” என்றாள்.

அவள் அருகே அமர்ந்து, “அடடா! குழந்தை பிறந்து பத்து நாள் ஆன பின்னும், ‘என்னடா! நம் மனைவி மட்டும் நம்மிடம் இந்த கேள்வி கேட்கவில்லையே என்று நினைத்தேன்!” என்றான் அவள் நெற்றியில் விழுந்த கேசத்தை ஒதுக்கிவிட்டபடி.

“பின்னே! அவளை பிரிந்து இருக்க முடியாதாமே! உங்கள் மகளை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்! நான் என் அம்மா வீட்டுக்கு போகிறேன்!” என்று சொன்னாள்.

“ஓ! போய் வாயேன்!” என்று அவன் சாதாரணமாக சொல்ல, கொத்தாக அவன் சிகையை பற்றினாள்.

“என்ன சொன்னீர்கள்? நான் போகவேண்டுமா? அப்படியானால் என்னை விட்டு பிரிந்து இருக்க உங்களுக்கு பிரச்சனை இல்லை! அப்படித்தானே!” என்றாள்.

“வலிக்கிறது! விடுடி! உன் விருப்பத்துக்கு நான் தடை சொல்ல முடியுமா!” என்று அவள் கைகளை பற்றி அவன் சிகையை விடுவித்துக்கொண்டவன், “எப்படியும் ரெண்டு நாளைக்கு மேல் தாங்காது! உடனே வந்து அழைத்துக் கொள்ள சொல்வாய்!” என்று சிரித்தான்.

“அந்த தைரியம் தானே உங்களுக்கு! ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல், உங்களை விட்டு விட்டு …” என்று அவள் முடிக்கும் முன் வேகமாக அவள் வாயை பொத்தினான். “இப்படி பேசாதே என்று சொல்லி இருக்கிறேன் தானே!” என்று கண்டித்தான்.

“முழுதாக கேட்கவேண்டும்! தனியாக ஒரு ட்ரிப் போகப்போகிறேன்! இந்த படங்களில் எல்லாம் வருமே கதாநாயகி தனியாக அவளுக்கு பிடித்த இடம் எல்லாம் சுற்றுவாளே! அது மாதிரி நிறைய இடத்துக்கு போவேன்!” என்று அவள் சொல்ல,

“உனக்கு பிடித்த இடத்துக்கு! தனியாக! நிச்சயம் இந்த ஜென்மத்தில் இல்லை!” என்றான்.

“ஏன்? அதெல்லாம் முடியும்!”

“நான் இல்லாத எந்த இடமும் உனக்கு பிடிக்காது!” என்று அவள் கண்களில் பார்த்தான். அது உண்மையும் தானே!

“கேடி! என் பலவீனம் எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு சுலபமாக ஜெயித்து விடுகிறீர்கள்!” என்ற மனைவியை குறும்பு பார்வை பார்த்தவன், “அது ஒன்று தான் என் வாழ்நாள் சாதனை!” என்று காலரை தூக்கிவிட்டு கொண்டான்.

“அப்போது பாப்பா!”

“அது சாதனைக்கு கிடைத்த பரிசு! அதுபோல் வருங்காலத்தில் பல பரிசுகள் கிடைக்கலாம்! ஆனால் சாதனை ஒன்று தான்!” என்று அவள் பிடரியை பிடித்து அவன் பக்கம் இழுக்க, “எது பல பரிசுகளா? எத்தனை! ” என்று அவனிடம் இருந்து விலகி பார்த்தாள்.

“அது …. நீ தான் சொல்லவேண்டும்!” என்று இப்போது அவன் மேலே எழும்பி முத்தமிட்டான். “அடுத்த முறை கொஞ்சம் திட்டமிட்டு பிள்ளை பற்றி யோசிக்க வேண்டும்! இந்த முறை போல் ஆகிவிடக்கூடாது!” என்றான் தீவிரமாக.

“என்ன திட்டம் போடுவது?” என்று புரியாமல் கேட்டாள் மனைவி.

“ஒரு வேளை இந்த முறை போல் நீயும் கீர்த்தியும் ஒரே சமயம் கருவுற்றால், உன்னை உன் அம்மா வீட்டிற்கு அனுப்ப நினைப்பார்கள்! அது சரி வராது! ஆனால் அதை எப்படி செய்வது என்று தான் புரியவில்லை.” என்றான் தீவிரமாக யோசித்தபடி.

கணவன் யோசிப்பதை பார்த்து பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள் திவ்யா.

“என்ன சிரிக்கிறாய்! என் கஷ்டம் எனக்கு! காலியான அறைக்குள் வரும் போது எப்படி இருக்கும் தெரியுமா? நீ மாசமாக இருக்கிறாய் என்று எந்நேரமும் உன்னை கவனித்துக்கொள்ள எல்லோரும் முனைப்புடன் இருப்பார்கள். இங்கே என்னை தண்ணி தெளித்து விட்டது போலத்தான். ஒரு ஜீவன் கூட என்னை நினைத்துக்கூட பார்க்காது. நான் பாவம் தெரியுமா! ” என்றான்.

சிறிது குழந்தை போல் கணவன் பேசிய விதம் பார்த்து ரசித்துக்கொண்டு நினைத்தாள், “நீங்கள் இல்லை என்றால் நானும் என்ன செய்திருப்பேன்! நீங்கள் தானே எனக்கு எல்லாம்! என் சந்தோஷம், காதல், கனவு, வாழ்க்கை….என் உலகம் எல்லாம். என் சகலமும் நீங்கள் தான்!”.

“எனக்கு தெரியும்!” என்றான்.

அப்போது தான் அவள் கடைசி வார்த்தைகளை சத்தமாக சொல்லிவிட்டதை உணர்ந்தாள். உதடுகளை கடித்துக்கொண்டு வெறுமனே பார்க்க, அவன் புறம் திரும்பி, “எனக்கும் அப்படித்தான்!” என்றான்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *