உந்தன் நிழலாய் நானடி தோழி…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2026
பார்வையிட்டோர்: 164 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

கூடத்தின் கோடியிலிருந்த கறுப்பு பெயின்ட் அடித்திருந்த மர பத்தாயத்திற்குப் பின்பு மறைவாய் வெறும்  வயிற்றோடு சுருண்டு படுத்துக்கிடந்தாள் சாரு. அழுதழுது முகம் சிவந்து வீங்கிப் போயிருந்தது.

சித்தியின் காலில் விழுந்தும் அப்பாவின் காலில் விழுந்தும் எந்தப் பயனுமில்லை.

சித்தி அவளை பம்பாய்க்கு அனுப்புவதிலேயே உடும்புப்பிடியாய் இருக்க..

கொஞ்சமாய்த் தனக்குப் பரிந்துபேசிய அப்பா..

சித்தி அழுதுகொண்டே கூடத்து அறைக்குள் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போன போது.. நாகு.. நாகு..அழாதடி நாகு என்று பதைபதைப்போடு  கத்திக் கொண்டே பெண்டாட்டியின் பின்னால் ஓடி அறைக்குள் நுழைந்தவன்.. அறையிலிருந்து அரைமணி கழித்து வெளியே வந்த போது தன்னையே ஏக்கத்தோடு பார்த்தபடி நிற்கும் சாருவை..

நொடிநேரம் பார்த்துவிட்டு சட்டெனப் பார்வையை நகர்த்திக் கொண்டு சுவரைப் பார்த்தபடி கடந்து சென்றான்.

அப்பாவின் செயலைக் கண்ட சாருவுக்குக் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கைவிட்டுப் போனது.

தான் யாருமில்லா அனாதை என்பது புரிந்துபோனது.

தாயில்லா பிள்ளைக்கு தகப்பன் தாயாதி என்று எதுத்தாத்து பிச்சம்மா பாட்டி ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்தது.

அப்ப.. அப்ப.. இந்த ஒலகத்துல எனக்கு யாருமே இல்லையா? நா அனாத தானா?

இல்ல.. இல்ல.. நா அனாத இல்ல.. எ ரேவி இருக்கா எனக்கு.. யார் என்ன வேண்டான்னாலும் ரேவி என்ன வேண்டாங்கமாட்டா..

அவ எ ஃப்ரெண்டு..எ உயிர்த் தோழி..

சாரு நீதாண்டி நா.. நாந்தாண்டி நீ அப்பிடீன்னு எப்பவும் சொல்வால்ல?

ஒருநாளும் நா ஒன்ன பிரியமாட்டேண்டி சாரும்பாள்ல..

நானும் அப்பிடித்தானே ரேவிய நெனைக்கிறேன். நாதா அவ அவதா நா.. 

சட்டென நெஞ்சு கலங்கி உடல் குலுங்கியது.

ஐயோ.. நா பம்பாய்க்குப் போய்ட்டா?அப்பறம் ரேவிய எப்பிடிப்பாக்கறது?

முடியாது..முடியாது.. ரேவிய பாக்காம என்னால இருக்க முடியாது.அவளோட பள்ளிக்கூடம் போகாம.. வெளையாடாம..

ரேவீ..நா பம்பாய்க்குப் போகணுமாண்டி..சித்தி கண்டிப்பா என்ன யாரோடையோ அனுப்பப் போறாடி.. அங்க போய் கொழந்தைய பாத்துக்கணுமாம்.. பள்ளிக்கூடம்லாம் போக முடியாதாம்.. நா என்னடி செய்வே ரேவி.. 

ஒன்னப் பிரிஞ்சி எப்டீடி இருப்பே?

நீ இல்லாட்ட நா செத்துப் போயிடுவேண்டி ரேவி..

ஒன்னப்பாக்காம பேசாம ஒன்னோட வெளையாடாம நா எப்பிடீடி ரேவி இருப்பே?..

அடக்கமுடியாமல் கேவல் வெளிப்பட்டது.கட்டுப்படுத்தமுடியாமல் அழுகை வெடித்து வந்தது. சின்ன இதயம் தாங்கமுடியாத சோகத்தில் தவித்தது.

துவண்டுபோனாள் பத்து வயது சாரு. தேற்றுவார் யாருமில்லை.

வாங்கோ..வாங்கோ..அப்பா 

யாரையோ வரவேற்பதும்..

சித்தி அடடே அடடே.. வாங்கோ வாங்கோ.. ஜகதம் மாமி நீங்க வருவேள்னு சொன்னா.. வாங்கோ ஒக்காருங்கோ..என்பதும் காதில் விழுந்தது சாருவுக்கு.

பங்கஜம் மாமி அனுப்பிய புருஷனையும்  பெண்டாட்டி யையும்தான் அப்படி சித்தியும் அப்பாவும் வரவேற்கிறார்கள் என்பது புரிந்தது சாருவுக்கு.

சொரேர் என்றது அடி வயிற்றில். நெஞ்சு பயத்தில் படபடத்தது.

பேச ஆரம்பித்த அவர்களின் பேச்சு முக்கிய விஷயத்தில் வந்து நின்றது.

சாருவிடம் அவர்களைப் பேசவே விடவில்லை நாகு.

பத்துவயசுதானே ஆறுது சாருவுக்கு..அவ சின்னப் பொண்தானே? கொஞ்சம் பயப்படறா.. ஆத்துல செல்லமா வளைய வந்தவ..

நா இவருக்கு ரெண்டாந் தாரந்தா.. ஆனா சாருவ மூத்தா பொண்ணுன்னு நெனச்சதே இல்ல.. எவ்வயித்துல பொறந்த பொண்ணாதா நா நெனைக்கிறே..அப்பிடி நெனச்சுதா வளக்கறேன்.

சித்தினு என்னக் கூப்டாத..அம்மான்னு கூப்புடுன்னுதா சொல்லிருக்கேன்..தோ..இவ இருக்கானே சீனு.. இவன நா பத்துமாசம் சொமந்து பெத்தேந்தா..

சாருவ நா எ வயத்துல சொமந்து பெறலதா.. அதுக்காக அவுளுக்கு நா அம்மா இல்லேன்னு ஆயிடுமா என்ன? எனக்கு.. சீனுவும் ஒன்னுதா..சாருவும் ஒன்னுதா..நா பிரிச்சே பாக்கறதில்ல..

அப்பிடி பாசத்தக்கொட்டி வளக்கறேனோனோ? அதா சாருவுக்கு என்னையும் தம்பியையும் விட்டுப்பிரிய மனமில்லாம தவிக்கிறா.. அழறா..

அப்பாவ விட்டுப் பிரிய முடியுமா?சொந்த ரத்த மாச்சே?தவிப்பு இருக்க தானே செய்யும்?

நா சொல்றது சரிதானே நீங்களே சொல்லுங்கோ..

எனக்கும்.. செல்லக்குட்டி சாருவ பம்பாய்க்குலாம் அனுப்ப கொஞ்சமு இஷ்ட்டமில்லதா..

என்று சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்தவள்..  சட்டெனக் குரலைத் தாழ்த்தி அவர்களிடம் கிசுகிசுப்பாய்..

“ஆனா பாருங்கோ..அவ காலத்தா கொஞ்சம் சரியில்லாம படைச்சுட்டானே ஆண்டவ..

பொண்ணாவும் பொறந்து ஊனமாவும் பொறந்த பொண்ண என்ன செய்யறது சொல்லுங்கோ?..கல்யாணம் பண்ணாம ஊறுகாபோட்டு வெச்சுக்கமுடியுமா சொல்லுங்கோ?என்றாள்.

சாருகாதுல விழுந்தா வருத்தப்படுவா..அதா மெள்ளப்பேசவேண்டிருக்கு. என்றாள்.. தவிச்சுப் போய் பேசுவது போல் பேசினாள் நடிப்பில் கில்லாடியான நாகு.

மறுபடியும் குரல் உயர்ந்தது.

தம்பொண்ணா இருந்தா இப்பிடி பொண்ணை கன்னியாஸ்த்ரீமாரி வெச்சுப் பாளா?காலாகாலத்துல. எங்கியோ எப்பிடியோ ஒரு வரனப்பாத்து பணத்தையோ பண்டத்தையோ குடுத்து கல்யாணத்தப் பண்ண மாட்டா?

மூத்தா பொண்ணுனுதானே கவலப்படாம இருக்கான்னு ஊரும் ஒலகமு எம்மேல பழிபோட்டுப் பேசாது?

தண்ணீல கெடக்கற நாக்குதானே எப்பிடிவேணா பேசாதோ? நீங்களே சொல்லுங்கோ..

பொண்ணுவளத்தியோ பீர்க்க வளத்தியோம்ப்பா..

இப்பதானே பத்துவயசாரு துன்னு நெனப்போம்.. கிடுகிடுன்னு பொம்னாட்டி கொழந்தேள் வளந்து நின்னுடும்க.

அப்பபோய் கல்யாணம் பண்ண காசில்லயேன்னு கையப்பெசஞ்சுண்டா நிப்பா? நீங்களே சொல்லுங் கோ.. நா சொல்றது கரெக்ட்டா இல்லையா?

சரி இப்பவே காசு சேக்கலாம்னா..இவர் என்ன கவர்மெண்டு ஆபீசரா என்ன?

சாஸ்திரிகள்தானே?வைதீகத்துல அப்பிடியென்ன வரும்படி வந்துடும்?

அமாவாச தர்ப்பணம்னா அஞ்சுரூவா தட்சண.. தெவசம் பண்ணிவெச்சா பதிமூணு ரூவா..தெனமுமா அமாவாச வருது? தெனமுமா எல்லாராத்லயும் தெவசம் வருது?இவர்மட்டுமா இந்தூர்ல சாஸ்திரிகள்?எத்தனையோ பேர் இருக்கா..

கல்யாணம்..உபயநயனம்னு போனா ஏதோ கொஞ்சம் கெடைக்கும்..அதெல்லாம் 

அவா அவா.. அவாவாத்து உபாத்யாய சாஸ்திரிகள வெச்சு பண்ணிப்பா..இவர் ஊறுகா மாரி..அப்பப்ப ஹெல்ப்புக்குக் கூப்டுப்பா..

பெரிய வாத்தியார்லாம் குடுக்குற சம்பாவணைய வாங்கிண்டு வாயமூடிண்டு வரணும்..என்னத்த சொல்றது போங்கோ..

விக்கிர வெலவாசில.. சாண்ஏறினா மொழம் சறுக்கறது..இதுல எப்ப காசுபணம் சேத்து.. நகநட்டு வாங்கி.. எப்ப இவுளுக்கு கல்யாணம் பண்ணி..நெனச் சாலே அகில்திகிலாத்தா இருக்கு போங்கோ..

அதா மனச கல்லாக்கிண்டு ஒரு முடிவுக்கு வந்துட்டே.

இவள ஒங்களோட அனுப்பறதுன்னு..

ஆனா பாழும் மனசு கேக்க மாட்டேங்கறது..அடிவயத்தப் பெசயறது..சட்டெனப் புடவைத்தலைப்பை வாயில் அடைத்து விம்மினாள்.

குபுக்கென்று கண்ணீர் எப்படித்தான் வருமோ? நீலிக்குக் கண்ணு நெத்தீல..

என்பதுபோல் ரெடியாய் வந்து கண்களில் கண்ணீர் நிற்கும் போல.. முதலைக் கண்ணீர் கன்னங்களில்  வழிய..கண்ணீரைத் துடைக் காமலேயே அவர்களைப் பார்த்துப் பேசினாள்.

த்ச்..த்ச்..அழாதேள்..அழா தேள்..ஒங்க பொண்ண நாங்க பத்ரமா பாத்துப்போம்.

கவலையே படாதேள். வீட்லயே கொழந்தையப் பாத்துக்கிற நேரம்போக மிச்சநேரத்துல கொழந்த அவ படிக்கட்டும்.புஸ்தகம் நோட்லாம் லாங்கித்தரோம்.

கொழந்த படிக்கட்டும் என்று சொன்னதுகேட்டுக் கருத்த முகத்தை வெகுகஷ்ட்டப்பட்டு இயல்பாய் வைத்துக் கொண்டாள் நாகு.

அதுக்கென்ன அதுக் கென்ன?..படிக்கிறேகிடிக்கி றேன்னு கொழந்தைய சரியா பாத்துக்காம போய்டக் கூடாதோன்னோ?. வாங்கர சம்பளத்துக்கு ஏத்துண்ட கடமைய சரியாச் செய்யனு மில்லையா?என்ன நா சொல்றது?

அவர்கள் எதுவும் பதில் சொல்வதற்குள் முந்திக் கொண்டு.. மேற்கொண்டு சின்ன விண்ணப்பம் என்றாள் நாகு.

சொல்லுங்கோ..

மாசம் நானூறு ரூவா தருவேள்னு ஜகதம்மாமி சொன்னா..கொஞ்சம் கூடக் குடுத்தேள்னா.. உபகாரமா இருக்கும்.அறநூறுன்னா குடுத்தேள்னா..இழுத்தாள் நாகு..

சிலநொடிகள்அந்தஜோடி கிசுகிசுத்துக் கொண்டார்கள் தங்களுக்குள்.

நீங்க இவ்ளதூரம் சொல்றேள்..மறுக்கமுடியல..

சரி..தந்துட்டா போச்சு..

ஷேமமா இருக்கணும்.. ஷேமமா இருக்கணும்.

பெரிய மனுஷான்னா பெரியமனுஷாதா..இந்த பெரிய மனசு யாருக்கு வரும்?

மாசாமாசம் பணத்த எம் பேருக்கு அனுப்பிடுங்கோ..

ஏன்னா..நம்மாத்து அட்ரஸ இவாளண்ட எழுதிக் குடுங்கோ..

பெண்டாட்டி நாகு வந்தவர்க ளிடம் பேசும் பேச்சை முகமாற்றம் எதுவுமின்றி.. தான் ஒருவார்த்தைகூட பேசாமல்  பார்த்துக் கொண்டிருந்தான் சாம்பு..

ஏற்கெனவே நாகு அவனுக்கு சொல்லி வைத்திருக்க வேண்டும்.

தோ..என்றபடி கோலுக்கு ஆடும் குரங்கென பெண்டாட்டியின் ஆணையை சிரமேற்கொண்டு பேப்பரும் பேனாவும் எடுக்க ஓடினான்.

வந்தவர்களிடம் சித்தி குழைந்து குழைந்து பேசியதையும் நல்லவள் போல் நடித்ததையும்..

தன்னை தான் பெத்த மகளைப்போல் நினைத்தே பாசமாய் வளர்த்ததாயும் தன்னை கொஞ்சமும் மனமில்லாமல்தான் அவர்களோடு பம்பாய்க்கு அனுப்பபுவதாயும் பசப்பு வார்த்தைகளைக்கூறி பேசி அவர்களை நம்பவைத்து நானூறுக்குபதில்  அறுநூறு ரூபாய் பேரம்பேசி அதனை அவர்களை ஒப்புக்கொள்ள வைத்து..

மாதாமாதம் பணத்தைத் தன்பேருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து கொண்ட சித்தியின் சாமர்த்தியமும்..சுயநலமும்..

சித்தியின் அத்தனைபேச்சும் தனக்கும் சம்மதமே என்ற ரீதியில் அப்பா மௌனமாய் அமர்ந்திருந்ததும்.. சாருவின் மனதை இப்படித்தான் என்றில்லாமல் தவிக்க வைத்தது. வேதனை நெஞ்சு முழுதுவும் வந்து தேங்கி நின்றது.பிஞ்சுமனம் ரணமாகிப் போனது.

அவளின்  சின்ன இதயப் பிரதேசம் முழுதும் சித்தியின்மீதும் தகப்பன் மீதும் விதைக்கப்படாம லேயே வெறுப்பு விதைகள் வீழ்ந்து வேர் பிடித்து முளை விட்டன.

அத்தியாயம் – 8

கொழந்த பேரென்ன சொன்னேள்?

சாருலதா..சாருனு கூப்புடறது.சமத்தா இருப்பா..

கொழந்தைய பாத்துக்கறது மட்டுமில்ல..சமைக்க கொள்ள கூடமாட ஒத்தாசயா இருப்பா..

சமைக்க..பத்துபாத்ரம் தேய்க்க..துணிதோய்க்க..

ஆத்தப்பெருக்கி தொடைக்கனு எல்லாத்துக்கும் ஆள் போட்ருக்கேளா என்ன?

இல்ல..டயம் ஒத்து வர மாட்டேங்கிறது.நாங்களேதா செஞ்சுக்குறோம்.கஷ்டமாதா இருக்கு..நல்லவேள கொழந்தையப் பாத்துக்க வாவது நீங்க பொண்ண அனுப்பறேன்னேளே அதுவே பகவான் புண்ணியம்.

கவலையே படாதேள்.. சாருக்குட்டியே மத்த ஆத்து வேலயயும் பாத்துப்பா..என்ன கொஞ்சம் சம்பளத்த அதிகப் படுத்தினா போறது..

ஆத்தோட இருக்கற ஆளுன்னா  நல்லதாப் போச்சில்லியா?.ஆபீஸ்லேந்து வேலமுடிஞ்சு ஆத்துக்கு வந்தா ஆத்துல கொத்துவேல காத்துண்ருந்தா மலப்பா இருக்கும்தானே?

ஆத்துல யாராவது இருந்து வேலயெல்லாத்தியும் பாத்து வெச்சிருந்தா? எப்பிடி யிருக்கும்? ஆபீஸ்லேந்து வந்தமா காபியகுடிச்சமா அக்கடான்னு சித்தநாழி படுத்தமான்னு..அது தனி சொகமில்லியோ? என்ன நா சொல்றது?

சாரு பாத்துப்பா..அவுளுக்கு ட்ரெயினிங் குடுத்து வெச்சிருக்கே..என்ன இன்னும் எரனூறு..

சட்டென அந்த ஜோடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.  

ஏனோ பயந்துபோனாள் நாகு..அய்யோ கடவுளே..

ரொம்ப காசுக்கு ஆசப்படறதா நெனச்சுடப் போறாளே..உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு ஆகிடுமோ..ஜாக்கிரதையானாள்..

ஹிஹி.. சொன்னே வேறொண்ணுமில்ல..சாரு கொழந்தையமட்டும்னா பாத்துக்கட்டும். என்னிக்குக் கெளம்பறேள்?

புதங்கெழம மத்தியானம்  ரெண்டு மணிக்கு கும்மோணத்துல மெட்ராஸ்க்கு ட்ரெயின்.

ஆத்துலேந்து பன்னண்டு மணிக்குக் கெளம்பினா போதும்.

மெட்ராஸ் போனதும் ராத்திரி ஹோட்டல்ல ரூம் புக்பண்ணிருக்கு தங்க..

கொஞ்சநாழி ரெஸ்ட் எடுத்தா வியாழக்கெழம விடிகால நாலே முக்காலுக்கு பம்பாய்க்கு ஃப்ளைட்.

என்னது ஏரோப்ளேன்லியா?

இவுளுக்கு டிக்கெட்டு?

அதெல்லாம் ஏஜென்ட் மூலம் வாங்கிடலாம்.

ஏன்னா..பாத்தேளா?சாருக்குட்டி ஏரோப்ளேன் லன்னா பம்பாய்க்குப் போப்போறா?

என்ன அதிசயமாருக்கு?

என்னமோ சொல்லுவாளே..

திண்ணேல கெடந்த கெழவனுக்கு திடுக்குனு வந்துதாம் கல்யாணம்னு.. 

அதாட்டம்னா இருக்கு?

பாரே சாரு குட்டிக்கு அடிச்ச அதிஷ்ட்டத்த?

நாகுவின் வயிறு புகைந்தாலும் வாய் அதை வெளிக்காட்டாமல் பேசியது.

சரி..பொண்ணு சாருவப் பாத்து கொழந்த கிட்டையும் வரசம்மதமான்னு ஒருவார்த்த கேட்டுட்டா தேவல.. வந்த பெண் சொல்ல..

பேஷா..பேஷா..கூப்படறேன்.

சாரு..சாருக்குட்டீ..இங்க வா கண்ணு.

இவ்வளவு நேரம் நடந்த அத்தனைப்பேச்சுக்களையும்ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்த சாருவுக்குத் தான் பம்பாய்க்கு மூட்டைகட்டி அனுப்பப் படப்போவது சித்தியால் உறுதிப்படுத்தப் பட்டதெனத் தெரிந்து போனதால் தானும் ஓர் முடிவுக்கு வந்திருந்தாள்.

வந்திருப்பவர்கள் நிச்சயம் தன்னைப்பார்க்கவும் பேசவும் விரும்புவார்களென எதிர்பார்த்தாள்.

தன்னிடம் தங்களோடு வரச் சம்மதமா என்று கேட்டால்..

இல்லை என்று சொன்னால்..

பிறகு தனக்கு சித்தியால் என்ன நடக்கும் என்பது அவளுக்குத் தெரியாதா என்ன?

அப்பாவையும் சித்தியையும் விட்டுச் செல்வதில் எந்தத் தயக்கமுமில்லை..என்ன அப்பா?என்ன சித்தி?ஆசையோ பாசமோ கொஞ்சமும் இல்லாத இவங்கள கொஞ்சங்கூடப் புடிக்கில..வெறும் வேஷக்காரா இவா..

ஆனா ரேவி?ரேவிய எப்பிடி பிரியறுது? முடியாது.. முடியாது..சின்ன இதயம் வலித்தது. முட்டிக்கொண்டு அழுகைவந்தது.ரேவீ என்றன உதடுகள்.

சாருக்குட்டி இங்க வா கண்ணு..சித்தியின் பசப்பு வார்த்தைகள் காதில் நாராசமாய் ஒலித்தன.

பத்தாயத்திற்குப் பின்னாலிருந்து மெள்ள எழுந்து வெளியே வந்து சாய்த்துச்சாய்த்து நடந்துவந்தாள் சாரு.

வந்தவர்களின் எதிரில் மௌனமாய்நின்றாள்.

ஒம்பேரு என்னம்மா?வந்திருந்த பெண்கேட்டாள்.

சாரு..சாருலதா.

எங்களோட பம்பாய்க்கு வரியா? ஒந்தம்பியாட்டம் எங்காத்துல ஒரு குட்டி பைய இருக்கா அவன பாத்துப்பியா?அம்மா எல்லா சொல்லிருப்பானு நெனைக்கிறே..

அம்மா என்று சித்தியைச் சொன்னது கசந்தது சாருவுக்கு.

சித்தி சொன்னா..பயமின்றி சித்தி என்று சொன்னாள்.

நீ வரியா..வர சம்மதமா?

ம்..வரேன்.குரல் உறுதியாய் இருந்தது.மனம் ரேவீ என்றது.

சரி புதங்கிழம மத்தியானம் ஒன்னு ஒன்னேகாலுக் கெல்லாம் சாருவ கும்மோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழச்சிண்டு வந்துடுங்கோ..

அவுளுக்குத்தேவயானதெல்லாம் கொஞ்சமா ஒரு சின்ன  பொட்டீல வெச்சு குடுத்துட்டேள்னா.. பம்பாய்க்குப்போய் நாங்களே வாங்கித் தருவோம்.ஃப்ளைட்ல ரொம்ப லக்கேஜ் வெயிட்ட அனுமதிக்கமாட்டா.

நாங்க இந்தப்பக்கம் வரசேல்லாம் சாருவயும் அழச்சிண்டு வருவோம்.

பாக்கமுடியலயேன்னு வருத்தப்பட வேண்டாம்.

எங்க பொண்ணுமாரி நாங்க பாத்துப்போம்,

ஹிஹிஹி..பாத்துப்பேள் ..

பாத்துப்பேள்..நம்பிக்க இருக்கு..

ஏன்னா அட்ரஸ ஞாபகமா குடுத்தேளா?அவா மாசா மாசம் பணம் அனுப்பணு மோல்யோ?

குடுத்துட்டேண்டி நாகு..

இளித்தான் சாம்பு.

சரி நாங்க வரோம். கிளம்பிவிட்டார்கள் கணவனும் மனைவியும்.

வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தார்கள் நாகுவும் சாம்புவும்.

ஜகதம் மாமியாத்தை நோக்கி நடந்தார்கள் அந்தக் கணவனும் மனைவியும்.

நீங்க கவுனிச்சேளே.. அந்தக்கொழந்த சாருவோட சித்தி அவா பேச்சும் சிரிப்பும் ஒரே நடிப்பா தெரியறுது.

அந்தப்பொண்ண.. தா வயித்துல பொறந்த பொண்ணாத்தா நெனச்சு வளக்கறாளாம்..எனக்கு அப்பிடித்தெரீல..சித்திக்காரி கொடுமய அந்தப் பொண்ணுக்கு செய்வாள் னுதா தோன்றது. 

காசு ஒன்னே குறியாட்ட மிருக்கு.

பாவம் அந்தப்பொண்ணு தாயில்லாப் பொண்ணு.

ஆமா..நானும் கவுனிச்சேன்.

எனக்கும் அப்பிடித்தான் படறது சித்திக்காரி பேச்சப்பாத்தா.

அவளாவது சித்தி..மூத்தா பொண்ணுதானேனு தோணும்..அப்பிடி தோன்றது தப்புதா..ஆனா சிலபேர் அப்டிதா இருக்கா..

ஆனா பெத்த அப்பனுக்கு?

அந்த ஆளுக்குக்கூட பெத்த பொண்ண யாரோடையோ கண்ணுகாணா எடத்துக்கு அனுப்பறமேன்னு வருத்தம் இருக்குறதா தெரீல.வாயே தொறக்காம ஒக்காந்திருக் கான்.

ஆமா லோச்சனி..

ஆனா ஜகதம் அத்தை சொன்னா..அந்தப்பொண்ணோட சித்தி..பேரென்ன நாகலெஷ்மி.. நாகலெஷ்மி

அவ அந்தப் பொண்ண படுத்தியெடுக்கறா..ஒன்னண்ட வந்தாவது கொழந்த சௌக்கியமா இருக்கட் டும்..தாயில்லாப் பொண்ணு பாவம்னு.. 

நாம என்ன பண்ணப் போறோம் அந்த சின்னப் பொண்ண?..எந்த ஜென்மத் துப் பாவமோ தவமா தவமிருந்து பெத்த கொழந்த பிரர்ச்சனயோட பொறந் திருக்கு..இன்னும்வேற பாவத்தப் பண்ணனுமா?

சரி இதுபத்தி மேக்கொண்டு பேசவேண்டாம்.

பேச்சை நிறுத்தியது அந்த நல்ல மனதுகொண்ட ஜோடி.

திங்கள் காலை மணி ஒன்பது.

என்னது மணி ஆயிடுச்சு.

ஸ்கூலுக்கு நேரமாயிடுச்சி. மொதபெல் அடிச்சிடும். இன்னும் காணும் பாரு இந்த சாருவ.எத்தன்நாழி ஆருதுபாரு வரத்துக்கு என்று நினைத்தபடி..

பொறுமையிழந்து புத்தக மூட்டையோடு தன்னாத்து வாசலில் நின்றிருந்தாள்  ரேவதி.

மேலும் ஐந்து நிமிடம் கடந்துபோக..ம்ஹும்..இனிமேல்லாம் நிக்கக்கூடாது.

அவாத்துக்கே போயி என்னடி பண்ற சாரு.. ஸ்கூல்க்கு லேட்டாகலயானு கேக்க வேண்டிதுதா..

தனக்கு எத்தனை பெரிய இடி காத்திருக்கிறது சாருவாத் தில் எனத் தெரியாது சாரு வின் வீட்டிற்குள் நுழைந்தாள் ரேவதி.

ரேழியிலிருந்து மெல்ல கூடத்தை எட்டிப்பார்த்தாள்.

கூடம் யாருமில்லாது வெறிச்சிட்டிருந்தது.

என்னது யாரையுங்காணும்?

சாரு..சாரு..மெதுவான குரலில் அழைத்தாள்.

பதிலில்லை..

டீ சாரு..கொஞ்சமாய்க் குரலை உயர்த்தினாள்.

யாரது?கேட்டுக்கொண்டே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் நாகு.

மாமி..சாரு கெளம்பல?பள்ளிக்கூடத்துக்கு லேட்டாயிடுத்தே.

அவ பள்ளிக்கூடம் வரமாட்டா..

ஏம்மாமி ஜொரமா அவுளுக்கு? குரலில் கவலை தெரிந்தது.

ஜொரம்லா இல்ல.. அவ இனிமேவே பள்ளிக்கூடம் வரமாட்டா..

என்னது? இனிமே சாரு ஸ்கூல்க்கே வரமாட்டாளா? 

அதிர்ந்துபோனாள் ரேவதி.

அய்யோ..ஏம்மாமி..சாரு ஏ ஸ்கூல்க்கு வரமாட்டா?.. குரலில் அதிர்ச்சி தெரிந்தது.

குரல் நடுங்கியது.

அவ பம்பாய்க்குப் போப் போறா..இனிமே இந்தூர்ல இருக்கமாட்டா..அதா பள்ளிக்கூடத்துக்கு இனிமே..

நாகு சொல்லிமுடிப்பதற்குள் பத்தாயத்தின் பின்னா லிருந்து விசும்பல் ஒலி கேட்டது.

என்னது சாரு பம்பாய்க்குப் போப்போறாளா?..இனிமே இந்தூர்ல இருக்கமாட்டாளா?

அப்படியே அதிர்ந்துபோனது ரேவதியின் குட்டி இதயம்.

கையிலிருந்த புத்தகமூட்டை கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.

பத்தாயத்திற்குப் பின்னாலிருந்து சாருவின் விசும்பல் காதில் கேட்டது.

சாரூ..குரல் நடுங்கக் கத்திக்கொண்டே சாருவை நோக்கி ஓடினாள் ரேவதி.

சாரூ..என்னடி சொல்றா ஒங்க சித்தி? நீ பம்பாய்க்குப் போப்போறியா. நீ இனிமே இங்க இருக்க மாட்டியா?

பத்தாயம் ஏற்படுத்தியிருந்த அரையிருட்டில் சுவற்றில் சாய்ந்தவாறு அழுதழுது முகம் வீங்கிப்போய்.. அழுதுகொண்டே இருந்த தால் ஏற்படும் விசும்பலும் தேம்பலுமாய் அமர்ந்திருந்த சாருவின் கையைப் பற்றிக் கொண்டாள் ரேவதி.

ரேவீ..ஊ..ஊங்.. என்ற சப்தம் தொண்டையிலிருந்து எழ.. உடைப்பெடுத்த வெள்ள மாய்க் கண்களிலிருந்து கண்ணீர் பெருக தோழியின் கையைப் பிடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள் சாரு.

ஆ..ஆ..ஆமாண்டி..ஆமாண்டி

விசும்பல் மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்தது. 

ஹ்க்..ரேவீ..விசும்பலாலும் தேம்பலாலும் தொண்டைக் குழியும் அடிவயிறும் மார்பும் தோள்களும் குலுங்கின.

நா பம்பாய்க்குப் போகணு மாம்..அங்க யாராத்துலயோ கொழந்த பாத்துக்கணு மாம்..புதங்கெழ போறேண்டி ரேவி..

என்னது..கொழந்தபாத்துக்க பம்பாய்க்குப்போறியா?

அய்யோ என்னடி சொல்ற?

நெஜாமாவே போப் போறியா?வேண்டாண்டி.. வேண்டாண்டி சாரு..அப்றம் நா..நா என்னடி செய்வே..

நீயில்லாம என்னால இருக்கமுடியாதுடி..நா யாரோட பேசுவே..யாரோட ஸ்கூல் போவே. யாரோட வெளையாடுவே..நீ எப்பிடீடி கொழந்தையெல்லாம் பாத்துப்ப..அப்பறம் ஸ்கூலுக்கு எப்பிடிப்போவ?..

என்னவிட்டுட்டு எங்கியும் பேடாதடி..போனா என்னையும் அழச்சுண்டு போய்டுடி..நீ இல்லாட்ட நா செத்துப்போய்டுவேண்டி சாரூ.. ம்..அ..அ..தோழியின் கைபிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள் ரேவதி.

ஸ்னேகத்தால் இணைந்தி ருந்த அச்சிறு இதயங்களின் தவிப்பும் அழுகையும் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

என்ன அழுகடியிங்க..என்ன அழுக?சாரு என்ன செத்தா போய்ட்டா?

ஏ..சாருவ விட்டா ஊர்ல ஒனக்கு வேற ஃப்ரெண்டே இல்லையா?ரொம்பத்தா..போடி ஆத்துக்கு.. போ..மாச அறுநூறு ரூவா ஒங்ஙப்பா குடுப்பாளா அம்மா குடுப்பாளா..வந்துட்டா ஒப்பாரி வெக்க..

ஏய்..சனியம் புடிச்சவளே.. அவ அழறா இவ அழறான்னு போமாட்டேன்னு சண்டித்தனம் பண்ண ஆரம்பிச்ச.. நொண்டிக்கால ஒடச்சு அடுப்புல வெச்சுடுவே ஆமா சொல்லிட்டேன்.

ஏய்..போடி ஆத்துக்கு.. என்னமோ வாழ்க்க முழுக்க ரெண்டுபேரும் ஒன்னாவே இருக்கப் போறாப்ல.. என்ன விட்டுட்டுப்போகாதடி.. போகாதடின்னு என்னடி அழுக?

ஏ..ரெண்டுபேரும் ஒத்தனுக் கேவா வாக்கப்படப் போறேள்?

பத்துவயது குழந்தைகளிடம் என்ன பேசுகிறோம் என்று கூட நினைக்காமல் வாய்க்கு வந்ததைத் திமிராய்ப் பேசினாள் நாகு. 

இன்னும் நீ கெளம்பல? போடி ஆத்துக்கு..

மாமி கொஞ்சநேரம் சாருவோட ஒக்காந்திருக்கேனே..

ஏ..அவள போகாதடினு சொல்லிக்குடுத்து  கெளப்பி விடவா?

எதுக்கும் இந்த நாகு மசிய மாட்டா?

அவ பம்பாய்க்கு போய்த்தா ஆகணும்.நீ போ ஆத்துக்கு.

ரேவீ..க்க்க்க்..குலுங்கி அழுதாள் சாரு.

சாரூ..ஹ்ம்ம்ம்..நெஞ்சு வெடித்து விடும் போல் வாய்பொத்தி அழுதாள் ரேவதி.

மெல்ல.. சாருவின் கையைப்பற்றியிருந்த ரேவதியின் கை பற்றை நீக்கி விலகியது.

கைகள் பிரிந்தாலும் தோழிகளின் நெஞ்சிலிருந்த நட்பு பிரியவே போவ தில்லை.

காலம் சின்னஞ்சிறு தோழிகளை இப்போது பிரிக்கலாம்.

ஆனால் வருங்காலம் என்ன செய்யப் போகிறது?

அது தோழிகளை மீண்டும் இணைக்குமா? இணைத்தால் அது எந்த சூழ்நிலையாய் இருக்கும்?அது எப்போது நடக்கும்? காலம் மட்டுமே விடையறியும்.

அத்தியாயம் – 9

சாரு பம்பாய்க்குப் போவது பற்றியதான செய்தி சின்ன கிராமமான அந்த ஊர் முழுவதும் பரவி புடை புடைத்துப் போனது.

பலரையும்.. பாவம் சாரு.. அங்கையாவதுபோய் அந்தப்பொண்ணோட நெலம மாறட்டும்.. சித்திக்காரி கொடும இல்லாம இருக்கட்டும் கொழந்த.. என்றே நினைக்க வைத்தது.

திங்கள்.. செவ்வாய் இரண்டு நாளுமே சித்தியிடமோ அப்பாவிடமோ ஒருவார்த்தை பேசவில்லை சாரு. அவர்களை நிமிர்ந்து பார்க்கவே பிடிக்கவில்லை.

ரேவதியிடம் மட்டும் பேச வேண்டும் போல் இருந்தது.

ஆனால் சித்தி பேச விடமாட்டாள்.

தபாரு இங்கேந்து கெளம்பிப் போறவர யாரண்டையும் பேசக்கூடாடது.ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்லுவா..

ஒம் மனச கலைக்கப்பாப்பா..

அதெல்லாம் கேட்டுட்டு நீ 

கோணக்கால்ல சலங்க கட்டலாம்னு பாக்காத..

என்னப்பத்தித் தெரியுமில்ல.. கண்களை உருட்டினாள் நாகு.

முக்கியமா ரேவதிண்ட கீவதீண்ட பேசப்போன..

ஆமா..நா ரொம்பப் பொல்லாதவளாயிடுவே..

என்னமோ இப்ப ரொம்ப நல்லவள் போலவும் இனிமேல்தான் பொல்லாதவளா ஆகப் போவது போலவும் பேசும் சித்தியை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை சாரு.

ரேவதியை சமாதானாம் செய்யமுடியாதவர்களாய்த்  தவித்தார்கள் ரேவதியின் தாய் மங்களாமும் கணேசனும்.

சாரு தன்னைவிட்டுப் பிரியப்போகிறாள் என்பதை ஏற்கமுடியாமல் தவித்தது ரேவதியின் இதயம்.

அழுதழுது ஜுரமே வந்து விட்டது.

சாரு..சாரு..என்ன விட்டு ஏண்டிபோற?நானும் ஒன்னோட வர்துர்ரேண்டி சாரு..ஜுரவேகத்தில் புலம்பும் மகளைப்பார்த்துத் தவித்துப்போனார்கள் கணேசனும் மங்களமும்.

நேரம் யாருக்காகவும் எதற்காகவும் ஏன்  காத்திருக்கப் போகிறது?

அது தம்பாட்டுக்கு நகர்ந்து சென்று புதன்கிழமைக்குள் நுழைந்தது.

காலைமணி பனிரெண்டை நெருங்கிக்கொண்டிருந்தது நேரம்.

டீ..ரேவிக்குட்டி ஜொரத்தோட

கூடத்து உள்ள என்ன நோண்டிண்ருக்க?நிக்கவே முடியாம ஜொரவேகத்துல ஒடம்புகெடந்து தள்ளாடறது?

இதுல உள்ள என்ன பண்ற?

கேட்ட தாய்க்கு பதில் சொல்லாமல்..சின்னதாய்க் கிழிக்கப்பட்ட கோடுபோட்ட நோட்டுப் பேப்பரில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தாள் ரேவதி. 

எழுதியைப்படித்துப்பார்த்தாள்.ஹிக்..தொண்டைக்குழி குழிந்து பொசுக்கென கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து எழுதிய எழுத்துக்கள் மேல் தெறித்தது.

சின்னதாய்க் குரலெடுத்து அழுதாள்.மூக்கு ஒழுகி வழிந்தது.முகத்தைக் குனிந்து பாவாடை அருகே கொண்டுவந்து மூக்கையும் கண்களையும் துடைத்தாள்.

முகம் நிமிர்த்தி சாரூ.. என்றாள் கேவலுடன்.

அது செவ்வக வடிவிலான சின்னசைஸ் மஞ்சள் நிறத்தகர டப்பா..மூடியின் மீது கருப்பு நிறத்தில்  ரயில் என்ஜின் படம் போடப்பட்டிருந்தது.

அந்த டப்பாவுக்குள் அவளுக்கு என்னவெல்லாம் வைக்கத்தோன்றியதோ அதையெல்லாம் வைத்தாள்.

மேலே தான் எழுதிய பேப்பரை நான்காய்மடித்து  வைத்து டப்பாவை அழுந்த மூடினாள்.

மங்களம்..பக்கத்தாத்து வாசல்ல ரெட்டமாட்டுக்  கூண்டுவண்டி வந்து நிக்கறது? அந்தப்பொண்ணு சாருக்குதாம் போலருக்கு..

சேதுய்யராத்து வண்டிமாரிருக்கு..

ஏ..பஸ்ல போல?தோ இருக்குற ரெயில்வே ஸ்டேஷனுக்கு வண்டி யென்ன வேண்டிக்கெடக்கு?வண்டி..

யாருகாண்டா?நாகு ஏற்பாடா இருக்கும்.ஈவு எரக்கமத்தவ..

அந்தக் கொழந்தைய கரிச்சுக்கொட்டி..கண்காணா எடத்துக்கு அனுப்பராளே?

நாசமா போறவ..தாயில்லா கொழந்த..

கஷ்ட்டமாதா இருக்கு.. போட்டம் விடுங்கோ.. கொழந்த அங்கபோயாவது நன்னாருக்கட்டும்.

என்னது சாருவ ஏத்திண்டு போக வண்டிவந்துருக்கா?

அப்ப இப்ப கெளம்பிப் போய்டுவாளா?வாசலுக்கு ஓடினாள் ரேவதி.

குறட்டில் இறங்கி நின்றாள் கையில் தகர டப்பா.கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந் தன.

கண்கள் வண்டியையும் சாருவாத்தையும் மாறிமாறி பார்த்தன.

முதலில் சின்னதாய் தகரப்பெட்டியொன்றைத்  தூக்கிக் கொண்டு வெளியே வந்தான் சாம்பு. பின்னால் தலைகுனிந்தபடி  அப்பா சாம்புவின் பின்னால் வந்தாள் சாரு. 

வண்டியருகே வந்து நின்ற சாருவின் கண்கள் ரேவதியின் வீட்டைப் பார்த்தது.குறட்டில் சோகமாய் நிற்கும் தோழியின் மீது நொடிநேரம் நிலைத்தது.

கண்களை ஒருமுறை மூடித்திறந்தாள் சாரு. மூடித்திறந்த கண்களிலி ருந்து கண்ணீர் இறங்கி கன்னங்களை நனைத்தது.

ரேவீ..என்றன சப்தமின்றி உதடுகள்.

க்…உடல் குலுங்க அழுதபடி சாரூ என்ற உதடுகள் துடிக்க அழும் ரேவியை அதற்குமேல் பார்க்கமுடியாமல் வண்டியில் ஏற முயன்றாள் சாரு.

வண்டியில் ஏற வைக்கப்பட்டி ருந்த கைல்வைக்குமிடம் சற்று உயரத்திலிருந்ததால் சாருவால் ஏறமுடியவில்லை.

தடுமாறினாள்.

சாம்பு மகளின் இடுப்பைப் பிடித்துத் தூக்கிவிட முயன்றான்.

பட்டென அப்பாவின் கைகளைத் தட்டி விலக்கினாள் சாரு.

சாரு தடுமாறுவது ரேவதியின் கண்களில் பட..

சாரு என்றபடி சாருவை நோக்கி ஓட முயன்றவளை பிடித்து நிறுத்திக்கொண்டார் கணேசன்.

எப்படியோ முயன்று ஏறி அமர்ந்துவிட்டாள் சாரு.

அவள் ஏறி அமர்ந்ததும் சாம்பு கீழே வைத்திருந்த பெட்டியை எடுத்து வண்டிக்குள் வைத்தான். 

அடுத்ததாய் தான் ஏறி அமர முயன்றவனைத் தடுத்தாள் சாரு.

யாரும் என்னோட வரக் கூடாது.

அதிர்ந்து போனான் சாம்பு.என்னது யாரும் வரக்கூடாதா? என்ன பேத்தர?

தனியாவா ஸ்டேஷனுக்குப் போவ?நா ஓ அப்பங்கார.. என்னப் போய் வரக் கூடாதுங்கற?..

ஹிக்..கேவலமாய் சிரித்தாள் சாரு..ஒங்களாட்டம் ஒரு அப்பா எனக்குத்தேவயில்ல..

நீங்கமட்டும் வண்டீல ஏறினா நா வண்டீலேந்து குதிச்சிடுவேன்.

அதிர்ந்து நின்றான் சாம்பு.

வண்டிக்காரரே வண்டிய வேகமா ஓட்டுங்க என்றாள்.

வண்டி பத்தடி நகர்ந்து வேகமெடுத்தது.

சட்டென அப்பாவின் பிடியிலி ருந்து விலுக்கெனத் தன்னை விடுவித்துக் கொண்டாள் ரேவதி.

வேகமெடுத்து ஓடும் வண்டியின் பின்னால் சாரூ..சாரூ..கத்திக்கொண்டே ஓடினாள் ரேவதி. கையில் மஞ்சகலர் தகரடப்பா.

மயிலைக்காளை மாடுகள் பூட்டப்பட்ட வண்டியென்ப தால் காற்றறெனப் பறந்தது வண்டி.

வண்டியின் வேகத்திற்கு ஈடாய்  ஓடமுடியவில்லை ரேவதியால்.இரண்டுநாட்கள் ஜுரமும்..சாருவைப்பிரிவது நினைத்து நினைத்து அழுத அழுகையும்..ஆகாரமின்றிக் கிடந்ததும் வெகுவாய்க் களைப்படையச்செய்தது ரேவதியை.  

தொடர்ந்து ஓடமுடியாமல் மூச்சிரைத்தது.

சாரூ..சாரூ..என்னப் பாருடி சாரூ..

சாரூ..சாரூ..கத்திக்கொண்டே ரேவதி வண்டியின் பின்னால் ஓடிவருவது தெரிந்தே இருந்தது சாருவுக்கு.

ஆனாலும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் எதிர்திசையைப் பார்த்தபடி வண்டிக்குள் அசையாது அமர்ந்திருந்தாள் சாரு.

பாப்பா.. அந்தப்பொண்ணு ஒன்ன கூப்டுக்கிட்டே ஓடியாருது..வண்டிய நிறுத்தட்டுமா?கேட்டுக் கொண்டே  வண்டிக்காரன் வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்தினான்.

வேண்டா..வேண்டா.. வண்டிய நிறுத்தாதீங்க.. வேகமா போங்க..என்றாள் சாரு.

வண்டி மீண்டும் வேக மெடுத்தது.

சாரூ..சாரூ..என்ன பாருடி சாரு..ஏய் சாரூ..பார்டி..என்ன பார்டி..

ம்ஹும்.. திரும்பவே இல்லை

சாரு..கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

ரேவி..ஒன்னத் திரும்பிப் பாத்தேன்னா அதுக்கப்பறம் எங்கியும் போமாட்டேண்டி..

வண்டீலேந்து குதிச்சிடு வேண்டி ரேவீ..

அதாண்டி மனச கஷ்ட்டப் பட்டு அடக்கிண்டு ஒன்னப் பாக்காம ஒக்காந்திருக் கேண்டி ரேவீ.. என்ன மன்னிச்சுக்கோடி ரேவி..

வண்டீல ஏறும்போது ஒன்னபாத்தப்ப நீ ஜொரம் வந்தவமாரி இருந்த.. அழுதழுது மூஞ்சி வீங்கி ருந்தது..சாப்டாத கெடாந்தா மாரி கண்ணுல்லாம் கருவளையமிட்டுருந்துது..

நாம பிரியணும்னு சாமி நெனச்சிடுத்து போலருக்கு..

அதா இப்பிடி நடக்கறது..

அழாதடி ரேவி..நா செத்துப் போறவர ஒன்ன மறக்க மாட்டேண்டி ரேவி..நீதாண்டி கடசிவர எ ஃப்ரெண்டு..

தோழிரேவியைத் திரும்பிக் கூடப்பார்க்காமல்..

சாரு மனதால் ரேவியிடம் பேசிக்கொண்டே இருந்த வேளையில் தொப்பென்ற

சப்தத்துடன் அவள் மடியில் வந்து விழுந்தது ரேவதியின் மஞ்சள் நிறத் தகர டப்பா.

குனிந்து மடியைப் பார்த்தவ ளின் கண்களில் தெரிந்தது

மஞ்சள் நிறத் தகரடப்பா.

இது ரேவதியோட குச்சி டப்பால்ல..பென்சில் டப்பால்ல.. ரேவீ..அவளின் கட்டுப்பாட்டைமீறி கழுத்து ரேவதி ஓடிவரும் திசைக்குத் திரும்பியது.

இப்போது ரேவதி முதுகாட்டி வீடு நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள்.

ரேவீ.. குலுங்கி அழுதாள் சாரு.

வண்டி அந்த ஊரின் எல்லையைத் தாண்டி கும்பகோணத்திற்குள் மூக்கை நுழைத்தது.

இனி சாரு அவளின் ஊருக்குள் நுழையப் போவதில்லை.

நெட்டையோ குட்டையோ.. குட்டையோ நெட்டையோ.. சாருவின் கால்கள்..

இனி அவளின் கால்கள் அவளின் ஊரில் பதியப் போவதே இல்லை.

காலம் சாருவை எதை நோக்கி அழைத்துச் செல்கிறது?

– தொடரும்…

காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன். ஊர்: காஞ்சிபுரம். காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துவதால் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். அதனால் தான் விளக்கம் தந்துள்ளேன். நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மிகக் கதைகள், சிறார்களுக்கான கதைகள், கவிதைகள் வாராந்திர அச்சு ஊடகங்கள், மின்னிதழ்களில் காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்..தற்போதும் எழுதிவருகிறேன். கதைகள்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *