நேர்நிரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2026
பார்வையிட்டோர்: 126 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேரின்பம் ரொம்ப நாளாகக் கேட்டுக்கொண்டிருந்தாள், ஒரு பசுங்கன்று வேண்டும் என்று. கல்யாணம் ஆகும் வரை வீட்டில் இருந்த போது மாடு கன்று என்று புழங்கியவள். மாடு வளர்ப்பது என்பது பால் கறந்து விற்பது மட்டுமல்ல; ஒரு சக ஜீவனின் ஆதரவு, தோழமை.

கல்யாணம் ஆகிப்போன ஆறு ஆண்டுகளில் கூழைக்கொம்புப் பசு இரண்டுகாளையங்கன்றுகளே ஈன்றது. கடைசி ஈத்து கிடேரியாக இருந்த தில் அவளுக்கு சந்தோஷம். பசுவின் வயதிற்கு இனியொரு ஈத்து நிச்சய மில்லை. வீட்டுக்கு வரும்போது எல்லாம் “ஏங் கிடாரி எப்படி இருக்கு?” என்று போய்ப் பார்க்கத் தவறமாட்டாள். ஆற்றில் குளித்து விட்டு வரும்போது ஒரு கை ஆனை அருகம்புல் பறித்து வந்து ஊட்டவும் மறப்பதில்லை.

பால்ராஜ் ஈர்நேர் சம்சாரி. ஒரு ஏரை அவனும் இன்னொன்றை அவன் அப்பனும் உழுதார்கள். கூழைக்கொம்புப் பசு ரொம்ப நாட்களாக அவர்கள் வீட்டில் இருந்தது. உழப்போகும் காளைகளில் இரண்டு தொழுப்பிறப்பு. பின்பு ஈன்ற இரண்டையும் காயடித்து மூக்குபூறி லாடம் அடிக்க வேண்டும்.

பேரின்பத்துக்கு என்று தீர்மானித்த கிடேரிக்கன்று பால்குடி மறக்கட்டும் என்று காத்திருந்தான். பால்குடி மறக்க வேண்டும் என்றால் பசு அடங்கவேண்டும். கூழைக்கொம்பு குறைந்தது இரண்டு ஆண்டுகளா வது கறக்கும். கிடேரிக் கன்றுக்கு இரண்டு வயது ஆகியபின், பால் குடிக்க வந்தபோது காலால் எற்ற ஆரம்பித்தது பசு. ஒருநாள் ஒட்டிக்கொண்டு போய் பேரின்பம் வீட்டில் விட்டுவிட வேண்டும் என்று நினைத்தான்.

கொஞ்ச நாளாக ஓய்வில்லை. தொடர்ந்து தொழியுழவு இருந்தது. நடவும் களை பறிப்பும் ஒதுங்கிய பின்புதான் சமயம் வாய்த்தது.

பேரின்பத்தைக் கட்டிக் கொடுத்திருந்த ஊருக்கு குறுக்கு வழியில் போனால் பத்து மைல் இருக்கும். எப்படியும் குறுக்கு வழியாகத்தான் போக வேண்டும். கிடேரிக்கன்றை டவுன் பஸ்ஸில் ஏற்ற மாட்டார்கள். சக்கடா வண்டிக்குப் பின்னால் வேண்டுமானால் கட்டிக்கொண்டு போகலாம். காளைகள் எல்லாம் தொழியுழவில் அடிபட்டுக் கசங்கி குளம்புகள் தேய்ந்து கிடந்தன. இடவனுக்கு லாடம் வேறு கழன்று விட்டது. எதற்கு இரண்டு சீவன்களையும் துன்புறுத்த வேண்டும் என்று தோன்றியது.

உதயத்துக்குப் பிறகு, பசுவுக்கும் காளைகளுக்கும் புல்லறுத்துக் கொண்டுவந்து போட்டு, பசுவையும் காளைகளையும் குளிப்பாட்டி அளியில் கட்டி, பழஞ்சி குடித்துவிட்டுப் புறப்படும்போது சூரியன் நெற்றிக்கு நேராக நின்றது.

கிடேரிக்கு இன்னும் மூக்குப் பூறவில்லை. கழுத்தில் கிடந்த கயிறும் சிறு வெங்கல மணியும்தான். தொழுவில் இருந்து அவிழ்க்கும்போது கூழைக்கொம்பு திரும்பத் திரும்ப நக்கிக் கொடுத்தது. வீட்டை அடுத்து களமும் தொழுவும். தெருவில் இறங்கும்போது பால்ராஜின் அம்மா ஒரு துணிப்பை கொண்டுவந்து கொடுத்தாள். அவலோ,பயறோ, சீப்பு வாழைக்காயோ, இரண்டு நெற்றுத் தேங்காயோ இருக்கும்.

பால்ராஜின் சட்டைப் பையில் கொஞ்சம் பணமும் பீடிக்கட்டும் தீப்பெட்டியும் இருந்தன. வேட்டியை மடித்துக் கட்டி, தலைமுண்டை வட்டாகத் தலையில் கட்டி இருந்தான்.

புறப்படும்போது பால்ராஜின் மகள் வந்து, “மக்கா லே… அத்தை வீட்டுக்காலே போறே?” என்று கிடேரியைக் கொஞ்சினாள்.

கிடேரி சுணங்காமல் நடந்தால் மத்தியானம் இரண்டு மணிக்கு எல்லாம் போய்விடலாம். நல்ல வெயிலானாலும் கார்த்திகை மாதத்துக்கு காற்று. ஆற்றங்கரையோரமாக நடந்து கிருஷிப் பாலத்தில் திரும்பி வீமநேரி ஊருக்குள் நுழைந்து குளத்தங்கரை ஓரமாக வெள்ளமடம் மெயின் ரோட்டுக்கு வரும்போது வெயில் உச்சியில் நின்றது. ஆலமரத் தடியில் சற்று உட்கார்ந்தான். ஒரு பீடி பற்ற வைத்தான். ஆல் பழுத்து நிதானமாக உதிர்ந்துகொண்டிருந்தது. காகங்கள் நிரந்தரமாய்க் குடி இருந் தன. கிளிகள் வந்து வந்து போய்க்கொண்டு இருந்தன. பறவையோ எனும் படி அணில்களும் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்தன. குயில்கள் நிச்சயம் இருக்கவேண்டும். குருவிகள், செண்பகம், மைனா, நாரைகள் எல்லாம் பழங்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தன.

ஓரமாய்க் கிடந்த புற்களைக் கடித்துக்கொண்டிருந்தது கிடேரி. மெயின் ரோட்டைத் தாண்டி வெள்ளமடத்துச் சானல் ஆற்றங்கரை ஓரமாக ஒட்டிக்கொண்டு போகலாம். ஒரு பக்கம் ஆறும் மறுபக்கம் பரந்த நெல் வயல்களுமாய் வெயில் உறைக்கவில்லை. புற்கள்கண்ட இடத்தில் கன்றைக் கொஞ்சம் மேயவிட்டு ஆற்றில் இறக்கித் தண்ணீர் காட்டினாள்.

சாலை ஆளரவமற்றுக் கிடந்தது. குலசேகரன் புதூர் பக்கம் ஆற்றில் பெண்கள் துவைத்துக் குளித்துக்கொண்டிருந்தனர். இந்த நிரக்கில் போனால் பேரின்பம் வீடு போய்ச் சேர மூன்று மணிகூட ஆகிவிடும். கிடேரி நல்ல காலமாய்ச் சண்டித்தனம் செய்யவில்லை. விளையாட்டுப் போலக் குதித்துக்கொண்டும் நடந்துகொண்டும் இருந்தது. சிலசமயம் முடுக்க வேண்டியதிருந்தது. வழியில் ஒடித்த பூவரசங்கம்பு கையில் இருந் தாலும் அடிக்க வேண்டியது வரவில்லை.

தங்கச்சியும் மச்சானும் வீட்டில் இருந்தால் கொஞ்சநேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு சொல்லிவிட்டு புறப்பட்டுவிடலாம். வேலைக் குப் போயிருந்தால் திரும்ப சாயங்காலம் ஆகிவிடும்.

வீடு போய்ச் சேர்ந்தபோது கஞ்சி குடிக்க உட்கார்ந்திருந்தாள் பேரின்பம்.கையை அப்படியே துடைத்துவிட்டு ஓடி வந்தாள். மதிப்புக் களை பறித்துவிட்டு அப்போதுதான் வந்திருந்தாள். கிடேரியின் முகத் தோடு முகம் பொருத்தி, கொண்டுபோய்க் கம்பில் கட்டிவிட்டு பால்ராஜ் கையில் இருந்த பையை வாங்கினாள்.

இன்னொரு வட்டிலை எடுத்து வைத்து, பழையதை பத்தும் தண்ணீ ருமாய் ஊற்றினாள். தீக்கங்கில் சுட்ட அயிலைக் கருவாடு. உப்பும் சுட்ட வத்தல் மிளகும் சின்ன உள்ளியும் புளியும் சேர்த்துச் சதைத்த இடையன் புளி.

“மச்சானுக்கு வச்சிருந்த கஞ்சி. நீ குடி. அவுரு வாறதுக்குள்ளே பொங்கீருவேன்.”

பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டுவந்தால் கிடேரியைப் பார்த்துக் குதூகலப்படும். பேரின்பத்துக்கு இரண்டு சிறிய இறகுகள் முளைத்தது போலிருந்தது. உலையில் அரிசியை களைந்து போட்டவாறே என்ன கதையெல்லாமோ பேசிக்கொண்டிருந்தாள்.

மச்சான் வந்து, பிள்ளைகள் வந்து, புறப்படும்போது விளக்குப் பொருத்தும் நேரமாகிவிட்டது. சோறு வடித்த கஞ்சித் தண்ணீர் குடித்த களைப்பில் படுத்துக் கிடந்தது கிடேரி. கிட்டே போய் புட்டியில் இரண்டு தட்டுத் தட்டிவிட்டுப் புறப்பட்டான். பஸ் ஏற்றிவிடக் கூடவே வந்த மச்சான் கையில் இருந்த பையில் இரண்டு பப்பாளிப் பழங்களும் ஐந்தாறு முருங்கைக் காய்களும்.

பஸ்ஸில் போவதானால் நாகர்கோயில் சுற்றித்தான் போக வேண்டும். இறங்கி மறுவண்டி பிடிக்க வேண்டும். மழை வரும் போல வானம் இருட்டிக்கொண்டு வந்தது. வடமேற்கு மூலையில் மின்னல் வெட்டியது.


கங்காதரனுக்கு வேலை என்று சொல்லும்படி ஒன்றும் இல்லை. ஊரில் பெரிய சம்சாரியின் மகன். பன்னிரண்டு ஏர்கள் வரிவைத்துப் போகும். எந்த வயலும் இரண்டு சால் அல்லது மூன்று சால்தான். சொந்தம், பாட்டம் என்று பத்திருபது ஏக்கர் பயிர் உண்டு. வீட்டின் கொல்லைப்புறம், தென்னந்தோப்பும் வாழைத்தோட்டமும். நம்பிரான் விளையாடும் திடல்போல் அறுத்தடிப்புக் களம்.

காலையில் குளித்து காப்பி குடித்துவிட்டுப் பேப்பர் படிப்பது. தோன்றினால் வயல்களை சற்று மேற்பார்வை செய்வது. மத்தியானம் சாப்பிட்டுவிட்டு சிறிய உறக்கம். ஐந்துமணிக்கு கைகால்கள் முகம் கழுவி, உடைமாற்றி, மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு நாகர் கோயிலுக்கு ஒரு வெற்றுச் சவாரி. சிலசமயம் சினிமா. சிலசமயம் தென் படும் நண்பர்களிடம் சினிமா பற்றி உரையாடல். திரும்புகாலில் பஸ் நிலையம் எதிரில் உள்ள ‘கன்யா காபி கிளப்’பில் சப்பாத்தி, குறுமா, வடை, காபி. இரவில் வீட்டில் சாப்பிடுவது கிடையாது. பழமும் பாலும் தான். கல்யாணம் கூட இந்த அட்டவணையைத் திருத்தம் செய்ய வில்லை.

“வெங்கப் பய, வௌங்காத பய” என்ற ரீதியில் அப்பா கண்ணெ திரில் தென்படும்போது ஏசினாலும் அம்மா செல்லம். பால், மோர், தேங்காய், தென்னைமட்டை விற்ற காசு, பணயம் பிடித்த வட்டி என மகன் கைச்செலவுக்கு காசுக்குப் பஞ்சமில்லை.

‘கன்யா’வில் அன்று சராசரிக்கும் குறைவான கூட்டம்தான். மாசக் கடைசி. அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிலர் அமர்ந்து தட்டைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். கங்காதரன் அன்று சப்பாத்தி குருமாவுக்குப் பதிலாக முறுவல் தோசையைச் சட்டினியில் முக்கிக்கொண்டிருந்தான். ரசவடை நல்ல சுவாரசியமுள்ளதாக இருந்தது. கண்கள் சாலையை வேடிக்கை பார்த்தவாறு இருந்தன.

பஸ்ஸை விட்டு இறங்கிய பால்ராஜ்க்கு எட்டேகால் வண்டி போய்விட்டிருந்தது தெரியவந்தது. இனி கடைசி பஸ் ஒன்பதே முக்காலுக்குத்தான். ஒன்றரை மணிக்கூரில் நடந்தே கூடப் போய் விடலாம். மழை ஒரு பக்கம் பயமுறுத்தியது. கால்களும் களைத் திருந்தன. வெறுமனே நின்றுகொண்டிருப்பது எங்ஙனம் ? ஒரு டீ குடிக்கத் தோன்றியது.

நடந்து, சாலையைக் கடந்து, சற்றே சந்தேகத்துடன் நோக்கி, ‘கன்யா’வில் நுழையும்போது கை சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டது. நுழைந்தபோது கங்காதரன் அமர்ந்திருப்பது தெரிந்தது. சற்று அச்சம் நீங்கியதுபோல் உணர்ந்தான்.

கங்காதரனும் பால்ராஜும் ஒரே ஊர்க்காரர்கள். ஒன்பதாம் வகுப்பு வரை சேர்ந்துதான் படித்தார்கள். தோற்றபின் பால்ராஜின் படிப்பு நின்று போயிற்று.

நடந்து போய் கங்காரன் எதிரில் காலியாகக் கிடந்த இருக்கையில் அமர்ந்தான்.கங்காதரனுக்கு கணத்தில் ஒரு எரிச்சல் தோன்றி மறைந்தது. இலையில் இரண்டு வாய் தோசை மீதம் இருந்தது. சட்டெனக் கையை உதறிவிட்டு கை கழுவப் போனான். கை கழுவிய பின் அடுத்த வரிசையில் இருந்த மேஜையில் போய் அமர்ந்து காப்பியை அங்கே கொண்டு வரப் பணித்தான்.

பால்ராஜுக்கு ஒன்றும் புரியவில்லை. இடம் நிறைய இருப்பதால் எச்சில் இடத்தில் எதற்கு உட்கார வேண்டும் என்று நினைத்தான் போலும் என்றெண்ணி,தானும் அந்த மேஜைக்கு மாறினான்.

கங்காதரனுக்கு ஏதோ கர்வபங்கப்பட்டது போலத் தோன்றியது. சர்வர் கொண்டுவந்து வைத்த காப்பியை பொருட்படுத்தாமல் பில்லைப் பறித்துக்கொண்டு ‘விசுக்’கென்று எழுந்து நடந்தான்.

பால்ராஜுக்கு முதலில் அவன் செய்கை விளங்கவில்லை.

புத்தியில் உறைத்தபோது கங்காதரன் மேல் வெறுப்புத் தோன்றியது.

”கள்ளவாளித் தாயோளி” என்று எரிச்சலுடன் திட்டினான்.

எதிரே குடிக்கப்படாத காபி ஆவி பறந்துகொண்டிருந்தது.

அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான்.

– ஓம் சக்தி தீபாவளி மலர், நவம்பர் 1996.

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *