இராமு தீபாவளிக்கு தனது தோட்டத்திற்கு வருகின்றான்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 2,438 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடிந்து வெகு நேரமாகியும், அசதியினால் படுக்கையிலேயே சுருண்டு கிடந்தான் இராமு. இரவு நடுச்சாமத்திற்குப் பின்னரும், நீண்ட நேரமாகக் கண்விழித்து சீமேந்துப் பைகளை வெட்டி “பேக்” ஒட்டினான். தீபாவளி சீசன். நாலைந்து கடைகளின் படிவாசல் ஏறி இறங்கினாலே போதும்! பேக்குகளைக் கரையேற்றி விடலாம். பேக்குகளில் கிடைக்கும் பணம் றூம் ரெண்டிற்குச் சரி. 

“பஜாரில்” போதிய அறிமுகம் உள்ளது. என்றாலும் “பேர்ச்சஸ்சிற்கு முந்திக் கொள்” என்பதற்கொப்ப, முந்திக் கொண்டு கடை கடையாகப் போட்டாக வேண்டும். வீட்டுக்கு வீடு வாசற்படி உண்டோ இல்லையோ எல்லா சிறிய வீடுகளிலும் பேக் ஒட்டப்படுகிறது. வாசற்படி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? வயிற்றைக் கழுவ ஏதோ வருமானம் கிடைக்கின்றதே! இதில் வேறு எங்கும் ஏகமாய் வியாபித்து இருக்கும் பொலிதீன் அசுரனின் போட்டி வேறு. 

பகல் பிடவைக் கடை வேலை முடிந்து; றூமிற்குத் திரும்பி வரும் போதே இரவு மணி ஒன்பதைத் தாண்டி விட்டது. பகலெல்லாம் கால்கள் கடுக்க, நின்ற நிலையிலேயே வேலை. தூக்க கலக்கம்……. மயக்கம் போல தலை சுற்றுகின்றது. கண்கள் எரிகின்றன, ஒட்டிய பேக்குகள் காய்ந்தும் காயாத நிலையில் இன்னமும் எண்ணி அடுக்கிக் கட்டப்படாத நிலையில் றூம் எங்கும் பரவிக் கிடக்கின்றன. 

இன்று ஞாயிற்றுக்கிழமை. ஓய்வுதான் ம். ஓய்வு.. களைப்பு தூக்கம்…. தூக்கம்…… களைப்பு என்று சுகத்தைப் பெரிதாக நினைத்துக் கொள்ள முடியுமா? 

“பொழுது போகின்றதே, இன்றைய ஒரு பொழுதுதானே இடையில்! இன்னும் எத்தனையோ வேலைகள் பாக்கி. மீதியுள்ள சகலத்தையும் செஞ்சிறனுமே” என்ற கரிசனையும், “அப்பாடா ஒரு வருஷத்திற்குப் பிறகு தோட்டத்து மண்னை மிதிக்கப் போகிறேன்” என்ற உள்ளக் கிளுகிளுப்பும் மேலிட “முருகா…. முருகா” என்று உச்சரித்துப் பிரார்த்தித்ப் படியே நெட்டி முறித்துப் படுக்கையை விட்டு எழுந்த போது, கீழே மேடும் பள்ளமுமான தரையில் அடுக்கிய “பக்கீஸ்” பெட்டிப் படுக்கை, கட.. கட சட சடவென ஆவர்த்தனம் செய்து கொள்கின்றது. 

“பக்கீஸ்” பெட்டிப் பலகைகளுக்குப் மேலே அடுக்கிய “காட் போட்” பெட்டி அட்டைகளின் மீது விரித்துப் படுத்திருந்த சாரத்தை உதறிக் கொடிக் கயிற்றில் எறிந்து விட்டு; குத்துக் கால்களை மடித்து, குந்தி முழுந்தாள்களில் நாடியைப் புதைத்து அழுத்தி; முன்னும் பின்னுமாகத் தலையை ஆட்டியவாறு மீண்டும் இராமு எண்ணங்களில் மூழ்கி…

காலை வெயில்; தலைநகரின் வானுயர்ந்த மாளிகைகளுக்குத் திருஷ்டி பரிகாரமாக அமைந்துள்ள இந்தச் சேரிக்குடி சைகளின் அசூசையைக் கண்டு ஓதுங்காமல்; எதுவித வசதியுமே இல்லையே என ஒதுங்கிவிடாது; தேர்தல் காலத்து அரசியல் வாதியைப் போல் பல்லிளித்து பாச நேசத்துடன் உள்ளே ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. 

பழைய பக்கப் பலகைகள், கழித்து ஒதுக்கிய ‘ஹாட் போட்’ துண்டுகள் என்பன தடுப்புச் சுவர்களாகவும், தார்ப்பீப் பாய்களினதும், துருப்பிடித்த தகரடப்பாக்களினதும், வெட்டுத் தகரங்களினதும் கூட்டுத் தயாரிப்பில் உருவான அந்தக் காம்பிராவின் கூரையில் செங்குத்தாக விழும் காலைக் கதிர்கள் தரையில் “டூரிங் சினிமா” சிலைடுகளைப் போட்டுக் கொண்டிருந்தன. 

காலை வெயில் சூடேற… சூடேற.. இந்த “நவகம்புர” பகுதிகளில் சுகாதாரத்திற்கு, இலக்கணம் வகுத்து; மூச்செடுக்க முடியாத அதன் மேதாவிலாசத்திற்கும், மகிமைக்கும் ரிஷி மூலமாய் அமைந்து, அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் சதா எடுத்தியம்பிக் கொண்டு, விட்டனோ பார்….. என்று ஒட்டுறவாடி பக்கத்திலுள்ள “கிராண்பாஸ்” பகுதி தோட்டங்களையும் அரவணைத்துக் கொண்டு ஓடும் சாக்கடைக் கால்வாய்; ஆழுகிய கழிவுப் பொருள்களையும், பலரக எண்ணெய் கழிவுகளையும் நிரந்தரமாகவே தன் செறிக்காத மலைப் பாம்பு வயிற்றில் பதுக்கி அடக்கிக் கொண்டு; சலனமற்று ஊறு கொட பகுதியின் ஊத்தை குப்பை கூளங்களையும்; முன்வயிற்றுப் பகுதிக்குள் கபளிகரம் செய்துள்ள “கொசுக்களின் தாயகம் இது தான்” என்று கட்டியம் கூறி நிற்கும் அப்பகுதியின் இளங்காலைப் பொழுதில்…

ஒரு கணம்…

அழுகிய பூண்டுகளினதும்; சல்வீனியாவினதும் கலப்புவாடை கலந்த சேற்றின் மணம் வயிற்றைக் குமட்டும் படியாக வீச…

அது மாறிவிட; பாதாள சாக்கடையைத் திறந்து விட்டது போல கலந்த சேற்றின் அழுக்குகளின் நெடி மூக்கைத் துளைக்க…. பின்…… காற்று இழையோடி மெதுவாக வீச, கரும்புகை, தூசு என்பன நிரவி வர… அழுக்கு நீரின் மணம் மெல்லத் தவழ்ந்து உறவாடி வர….. 

தலையைச் சுற்றி கண்கள் இருண்டு மயக்கமடையச் செய்யும் காற்றுடன் நிரந்தரமாகச் சங்கமமாகிப் பவனி வரும் கந்தக வாடை பரிணமிக்க. 

இயற்கையையே மாற்றிவிட்ட அசாதாரணச் சூழல் சூழல் இவையொன்றுமே இரமுவின் சிந்தனையைத் தடைப் படுத்த வில்லை! அவன் பிரச்சினைகளில் அவன் மூழ்கி! 

கொழும்பிற்கு வந்து இந்தப் பகுதியில் வாழத் தலைப்பட்ட போது இவைகளினால் இவன் பட்ட துன்பங்கள்; வேதனைகள்… அப்படா… 

உடம்பு இங்கிருந்தாலும் நினைவுகளில் தோட்டத்துக் காற்றை உள்வாங்கிக் கொள்வான். இப்போது எல்லாம் பழக்கப்பட்டாகி விட்டது. நல்லது கெட்டது என்பதெல்லாம் பழக்க தோஷம் தானே! “றூம்…… றூம்’ என்று தேடியலைந்து இது கிடைத்த போது, சூழல் இவனை விரட்டி ஓடச் செய்தது. தோட்டம் சொர்க்கமாக அழைத்தது. வாழ்க்கை யென்பது அழகு மட்டுமா? எத்தனை அசிங்கங்கள் என்றாலும் அதன் பின்னே பணம் பசையாக ஒட்டிக் கொண்டு வாழ்க்கையை நிர்ணயிக்கும் போது ஓடிவிட முடியுமா? தினம் தினம் “சனம்” அகதிகளாக வந்து குவியும் நேரத்தில் இந்தப் பகுதியில் இந்த ‘றூம்’ கிடைத்ததே பெரும் பாக்கியம்! இதனைக் கைப்பற்றியதே சாதனை தான். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத சம்பளம், எப்படி வசதியான வாடகை வீடு எடுப்பது? நினைத்தும் பார்க்கக் கூடாது. 

சதா இரைச்சலும் ஆரவாரமும் பரபரப்புமிக்க இந்தக் சூழல் அவனை வாட்டி எடுக்க… 

மெல்ல மெல்ல பூப்பூவாக முகில்களைக் கடைந்து மலைப்பனிகளை நுகர்ந்து தேயிலை மலைகளில் தவழ்ந்து…… இளந்தளிர்களைக் கோதி, ‘சவுக்கு’ மரக்கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆடி ‘கொன்னைக்’ கவனைகளில் ‘சீசோ’ ஆடி, சதா இற்றுப்போன அந்த லயத்துத் தகரங்களோடு இரகசியம் பேசிக் “கிச்சு கிச்சு மூட்டும் பொல்லாத ஆடிக் காற்று. தேயிலை பக்டரிக்குப் பக்கத்தில் போகும் போதே வரும் வாட்டம் போட்ட கொழுந்தின் வாடை….. தேயிலை பக்டரிக்குப் பக்கத்தில் போகாமல் வெளியே சுற்றி வந்தாலே அடுப்பிலிருந்து அரைத்த தேயிலைக் காய்ச்சும் போது; காற்றாடிக் கொண்டு வரும் இளம் சூடான பச்சையும் வறுவலும் கலந்த நறுமணம்…

“மண்ணைக் கொத்தி, புரட்டி பாத்தி பிடித்து தவறணையில் கன்றுகளை நாட்டி, பூவாளியில் தலை சீவி விடுவது போல தண்ணீர் ஊற்றும் போது மண் கரைய, கரையும் மண்ணைக் காலில் சரி செய்தபடியே…….. தேயிலைக் கன்றுகளை நனைய விடும்போது” எட்டி நின்றாலே வந்து சூழும் மண்ணின் வாசனை. 

மண்வாசனையோடு பக்கத்துக் காணியிலிருந்து சிலிர்த்தோடும் நீரின் குளிர்மையும் சேர்த்து…… இளமையை ஊஞ்சலாட்ட இதம் இதமான…. சுகம்…

அவன் மசியவில்லை. 

தோட்டத்தில் வேலைக்கப்பட்ட கஷ்டங்கள்…..; இருண்ட நாட்களாகக் கழிந்த கடைசிக் காலப்பகுதி…….. ; ஏமாற்றங்கள் புரட்டுக்கள் அம்மம்மா எத்தனைத் துயரம்! இப்போது தான் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சினைகள், சவால்கள்….. அவன் மனதில் வைத்த வைராக்கியத்தின் முன்னே, இந்தக் கிளுகிளுப்புகள் சுகங்கள் அத்தனையும் எடுபடாமல் ஓடி ஓடி…. தூரவே ஓடி ஒதுங்கி மறைந்தும் போய் விட்டன. 

வேலை….. தேவை….. ஒரு வேலை அது கிடைத்து விட்டது ஊதியம்….? பணம்…. பணம் ஒன்று தான் அவன் முன்னே பூதாகாரமாக நிற்கும் பிரச்சினைகளுக்கான ஒரே சஞ்சீவி. 

தீர்ந்தும் தீராததுமாகத் தன் முன்னே…. தான் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகள்; தனது குடும்பம் எதிர் நோக்கியுள்ள பயங்கரமான சவால்கள் எப்படித் தீரும் என்று தெரியாது….. 

“மீதித் தோட்டமும்” கொலனியாகப் போகின்றது. இனிப் பேச்சு வார்த்தையில் பலனில்லை…. “போராட்டம் ஒன்னுதான் வழி வெட்டு, கொத்து” என்ற ஆக்ஞைகளுக்கு அடி பணிந்து, அதனைத் தாரக மந்திரமாக ஏற்று, உணர்வோடு போராடி, கண்டி வைத்தியசாலையிலும் பின்னர் ரஜ வீதி ரிமாண்டிலுமாக இருக்கும் தோட்டத்தைச் சேர்ந்த பத்துப் பேரில் “நாலாவது எதிரியாக குற்றப் பத்திரிகை கொடுக்கப்பட்டு” பிணையின்றிக் கடந்த இரண்டு வருடமாகத் தண்டனையை எதிர்பார்த்தபடி இருக்கும் அப்பா முத்துசாமி. 

கால மெல்லாம் தோட்டத்திற்காகவே உழைத்து விட்டு, முதுமையில் ஏதுவிதக் கொடுப்பனவுகளுமே இன்றி, பாரிசவாதத்தில் வீட்டில் படுத்த படுக்கையிலேயே கிடக்கும் தாத்தா சிவனான்டி. 

உழைப்பு ஒன்றைத் தவிர, வேறொன்றையுமே அறியாத அவன் அம்மா “எட்டுக்காம்பிரா லயத்து,தொங்க வீட்டு அலமேலு.” 

சுப்ரீம் கோட்டிலிருக்கும் அப்பாவின் வழக்கைப் பேசுவதா தன்னுடைய உயர்கல்வியைத் தொடருவதா? என்ற போராட்டத்தின் இறுதியில் படிப்பிற்கு முற்று புள்ளி வைத்துவிட்டு தையல் வேலை தேடிக் கொண்டிருக்கும் மூத்த சகோதரி பத்மா. 

குடும்பத்தில் ஒருத்தரேனும் படித்து ‘டீச்சர்’ ஆகிவிட வேண்டுமென்ற இராமுவின் கனவை நனவாக்க, ‘இமிடேஷன்’ கம்மலோடு விடாப்பிடியாக, பக்கத்து நகரிலுள்ள கல்லூரிக்குச் செல்லும் இளையவள் ஜெயா. 

தோட்டத்திலும் வேலை இல்லை, இனியும், ஊர்பகுதியில் வேலை கிடைக்காது, அண்ணன் ஒரு ஆள் உழைத்தால் போதாதென்று நாலாம் குறுக்குத் தெருவிற்கு மூடை சுமக்க வந்து விட்ட தம்பி இராசு. 

“பாடசாலை வேண்டும்” “ஆசிரியர் வேண்டும்” என்றெல்லாம் நடத்திய போராட்டங்கள்; “கோட்டை கட்டிய மலையகக் கனவுகள்” எல்லாமே, இப்போது தூரத்து உறவுகளாக விளங்க…. 

கொழும்பு அவனது உறவாகிவிட்டது. 

முதலில் தீபாவளித் திருநாளைக்குத் தோட்டத்திற்குப் போகாமல், பணத்தை மட்டு அனுப்பி வைப்பது என்றுதான் தம்பியும் இராமுவும் கூட்டாக முடிவு செய்தார்கள். பின்னர், அவரது அம்மா சொல்லச் சொல்ல பத்மா எழுதிய நேர்முக வர்ணணையான கடிதம் அவனது முடிவை மாற்றும்படி ஆக்கிவிட்டது! 

“வீட்டிலேயும் அப்பா இல்லாத நேரத்தில் தாத்தா இன்றைக்கோ நாளைக்கோ, கண்மூட முந்தி ‘மகனைப் பார்க்கணும், பேரன்களை பார்க்கோனும் வாய்புலம்பியபடி….” தாத்தா மேட்டு லயத்திலிருந்து வரும் போதே “விசுக்கோத்துப்” பொட்டலத்தோடு வந்து “பேராண்டி” என்று எத்தனைப் பாசத்தோடு நீட்டுவார்! முறுக்கி விடப்பட்ட மீசை; காதுல சிவப்புக்கல் கடுக்கண்கள். 

சிவானான்டி என்றால் அந்த தோட்டத்தில் மட்டுமல்ல, அந்தத் தோட்டப்பகுதியே பெருமையாகப் பேசும், தோட்டத்தில் “அருச்சுனன் தபசு நடக்கும். இராமுவுக்கு அப்போது விபரம் தெரியும், இராசு கைக் குழந்தை. சிவனாண்டித்தான் “அருச்சுனன்” வேஷம் கட்டுவார். அருச்சுனன் என்றால் அரச்சுனன்தான். அப்பாடா தோட்டமே வியந்து பேசும் “பாசுபதம்’ பெற அருச்சுணன் செல்லும் போது, “மோகினிப் பெண்” வந்து தடுப்பாள். அப்போது சிவனாண்டி பாடியாடுவார். “அடியே மோகினி பெண்ணே, நான் ஈசனை நோக்கி, இமயம் வரை செல்கின்றேன். 

“பரமனை நோக்கிப் பாசுபதம் வாங்கப் போகின்றேன். என்பாதையில் குறுக்கிடாதே!” வசனம் பேசும் போது சிவனாண்டியின் அழகில்…; எடுப்பில் மயங்காத தோட்டத்துப் பெண்களே இல்லை. சிவனாண்டியின் எடுப்பான நடை துள்ளல்……வில்லெடுத்துப் பன்றியுடன் சண்டை செய்ய. ஒரு தடவை உயிரான பன்றியே இடையில் ஓடிவர…. தோட்டத்து பக்தி பரவசத்தின் உச்ச நிலை. இப்போதும் கிழடுகள் பெருமையுடன் நினைவு கூர்ந்து, லயித்து பேசும். 

அருச்சுனன் தவக்காட்சியில் அறுபது அடிக் கம்பத்தில் அநாயசமாக ஏறி நின்று, சூடத்தைக் கொளுத்தி கையிலும், நாவிலும் எரிய விட்டு, கருடப்பட்சி பறந்து வந்து வட்டமிட தோட்டமே சூழ நின்று அரோகரா……… அரோகரா கோஷமிட “ஒன்னாம் படித்தரமாம் தருமன் தம்பி அருச்சுனா முன்னங் காலை எடுத்து வைத்தான் தருமன் தம்பி அருச்சுனா” என்று படிக்கொரு பாடலாக பாடி; . தவத்தை முடித்துக் கம்பத்திலிருந்து இறங்கி வர, இடுப்பில் கட்டிய கச்சை மணிகள் குலுங்கிக் குலுங்கி… கிண்கிணி நாதம் எழுப்ப, முழுச்சனமுமே முண்டியடித்துக் கொண்டு “நான் முந்தி நீ முந்தி’ என்று விழுதி வாங்கிப் பூசும்…

அது ஒரு காலம். இப்போது சிவணான்டித் தாத்தா எழுந்து நடக்க முடியாத நிலையில், ஆசையோடு பேத்தி கொடுக்கும் ஒரு வாய்க் கஞ்சி கூட தொண்டைக்கும் கீழ் இறங்காமல் வாய்வழியே வடிய. 

தாத்தா இன்றோ நாளையோ என்றிருக்கும் போது எப்படிப் போகாமல் விடுவது? தீபாவளியும் கூட. 

எனவேதான் தம்பியையும் அழைத்துக் கொண்டு நாளை செல்வது என்று முடிவு எடுத்தான். சிறுகச் சிறுக வீட்டிற்கு வாங்கிய பொருள்கள் மூட்டையினுள் கொலுவிருக்கின்றன. 

சிக்கனமாக வாழ்ந்து சேமித்த பணம், சீட்டுப் பணம் என்பன பெட்டியில் பவித்திரமாக….

விடியற்காலையிலேயே பஸ் எடுத்தால், பத்து மணிக்கெல்லாம் மாத்தளை டவுனுக்குப் போய் விடலாம். பின்னர் வேனோ….. பஸ்சோ எடுத்தது…. ஒரு மணித்தியாலத்தில் தோட்டங்களுக்குப் பிரியும் தாம்பர வள்ளி சந்தியில் இறங்கிவிடலாம். வாழ்க்கை என்ற கதையின் அத்தியாயங்களைப் பிரிப்பதே போன்ற வடக்கே மலைகளை நீவிக் கொண்டு “ராஜரட்டை” யென விரியும் அந்தத் தார்ப்பாதையில் ஒரு ஆலமரத்து நாற்சந்தி. 

பல தோட்டத் சாம்ராஜ்யங்களை இணைத்து நின்ற சந்தி, சந்தியில் ஒரு ஆலமரம். ஆலடிச்சந்தி? 

சந்தியில் இன்று பல கடைகள் முளைத்து விட்ட போதும் “சந்திக் கடை’ என்ற பழம் பெருமையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சந்திக் கடை. 

முன்பு இந்த சந்தியிலிருந்தே தோட்டங்கள் வியாப்பித்திருந்தன. நாற்புறமும் தேயிலை, இறப்பர். கொக்கோ, மிளகு என்ற பயிர்கள் டிவிசன் டிவிசன்களாகத் தோட்டம் விரிந்து கிடந்தது. 

இப்போது நாலாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் பேருக்கு ஒரு இரு நூறு ஏக்கர் தேயிலை. அதுவும் பழைய மலை மூடிய “ஸ்டோர்” எலும்பும் தோலுமாக! இடையிடையே ஐம்பது ஏக்கருக்கு குறைவான குட்டித் தோட்டங்கள் செக்ரோல் கிடையாது கை காசுச் சம்பளம். 

கூலியின்றி வாழ எழுபத்தேழிலும், எண்பத்து மூன்றிலுமாகப் பல தடவைகள் அக்கின் பிரவேசம் செய்து தப்பிய கிழட்டு லயங்கள்; பல. இடைக்கிடையே இவைகளில் வவுனியா, கிளிநொச்சி என்று அடைக்கலம் சென்றும்; செல்லாமலும், பயந்து அஞ்சியும் அஞ்சாமலும் வாழ்ந்து வரும் பல குடும்பங்கள் வேறு வழி இன்றி…… 

ஒரு காலத்தில் “தாய் இல்லாத பிள்ளையும்” பிழைக்கும் என்று பெயரெடுத்த தோட்டம் தான் தாம்பரவள்ளி! இப்போது தாயோடு பிள்ளை கலங்கித் தவிக்கும் நிலை, தேயிலை வளர்ந்து செழித்த இடத்தில் கவலை வளர்ந்து… வாட்ட…

அம்மா கடிதத்தை முடிக்கும் போது மறக்காமல் குறிப்பிட்டு எழுதியிருந்தாள். “வருவதென்றால் இரவில் வரவேண்டாம். நேரத்துடனேயே புறப்பட்டு வரவும்” சென்ற பொங்கலுக்கு, கொழும்பிலிருந்து இரவு தோட்டத்திற்கு வந்த இளைஞர்களான சங்கரையும், கோபாலுலையும் கொலனியைக் கடந்து வரும்போது சிசுரெட் கேட்டு வழிமறித்ததில் ஏற்பட்ட கலாட்டா. பின்னர் “லயத்திற்குப் ‘புலி’ வந்திரிச்சின்னு…. லயம் லயமா… தோட்டந்தோட்டமா… சல்லடை போட்டுத் தேடும் வரை நிலைமை மோசாமாகி விட்டது. 

இப்போது லயத்தில் செத்த வீடு என்றாலும் “சீட்டுக் கட்டு” டன் அழையா விருந்தாளியாக வந்து “பூர்வா” சூது சீட்டாட்டத்தில் இறங்கும் கும்பல்கள். 

ஆலமரத்துச் சந்தியில் இறங்கினால் “ஜில்” என்று குளிர் காற்று வீசும். சந்திக்கு வடக்குப் புறமாக, “அம்மன் கோயில்” கடைகளைத் தாண்டி நடந்தால், தோட்டத்தில் புனர் ஜென்மம் எடுத்திருக்கும் கொலனிகள், பிறவித் தொடராய் நீண்டு கிடக்கும் செம்மண் பாதையும் நீண்டு செல்லும். 

செம்மண் பாதை சென்றடையும் மலையடி வாரத்தில், ஒரு ‘கான்’ சிலிர்த்து ஓடுகின்றது. கானுக்கு இரு புறமும், சூரிய காந்திப் பூக்கள். கானைத் தாண்டினால் பல இன மரங்கள். கூட்டாகப் பிணைந்து வளர்ந்த……. “வால்ராசா” கோயில், வால்ராசா கோயில் முடக்கிற்கு மேற்கே பாட மாத்தி பாட மாத்திக்கு மேலே சரிவில் மாடாசாமிக் கோயில். அதற் கப்பால் பாதையில் ஒரு மென் வளைவு. பக்கத்திலிருக்கும் குன்றில் எலும்பும் தோலுமாக நிற்கும் தோட்டத்துப் பழைய ஸ்டோர், ஸ்டோர் முடக்கிற்கு மேலே “காமன் பொட்டவ்’ காமன் பொட்டல்” காமன் பொட்டலுக்குச் சமாந்தரமாகப் “பீலிக்கரை அங்கிருந்து அண்ணாந்துப் பார்த்தால் மேகம் சூழ்ந்து கிடக்கும் “சிந்தாக்கட்டி” மலை, சிந்தாக்கட்டி மலையின் குழந்தைகளாக சிறியதும் பெரியதுமான முடிச்சு மலைகள். 

குன்றுகளின் மடியில் தோட்டச் சிதைகளின் பூட்டறைகளாக, எதிரும் புதிருமாக அமைந்த பழைய லயன்கள். மூன்றாம் பிறையில் “கம்பல்” நட “காமன் கூத்து” ஆரம்பமாகும் முழுத் தோட்டத்து சனங்களுமே, சமயச் சடங்கில் ஈடுபடுவர் லயன்கள் விழாக் கோலம் பூண்டு விடும். 

காம தகனத்தன்று முன்பு “ஆலமரத்துச் சந்திய”யில் இருந்து தான் “இந்திர லோகத் தூதுவனை” ஒத்த தப்பு அடித்து “யாருக்கடா தூதா, நீ ஓலை கொண்டு வாராய்! இந்திர லோகத்து தூதா, நீ இமைப்பொழுதில் சொல்லு..’ என்று புஜங்களில் கட்டிய பந்தங்கள் கொழுந்து விட்டு எரிய, கைகளில் ஜூவாலையிடும் பந்தங்கள் சுழல ஆடிவரச் செய்வார்கள். 

இப்போது அந்தியாகி விட்டால், தோட்டத்தவர்கள் சந்திப் பக்கமே போக முடியாத நிலை. 

ஏத்தரோட்டு வாகைமர முடக்கில் இருந்துதான், அகோர “வீரபத்திரரை’ அழைத்து வருவார்கள். 

இப்போது ஏத்த ரோட்டு வாகை மர முடக்கில், புதிதாக ஒரு “பார்” முளைத்துள்ளது. வம்புச் சண்டைக்குப் பெயர் பெற்ற இடம். நமக்கு ஏன் வீண் சண்டை என தோட்டத்தவர் போவது கிடையாது. 

ரதிமதன் வில்லெடுத்து ஆடிவந்து திரும்பும் இடம் “தொரப்பீலி’ தோட்டத்திற்கு தொரப்பீலி டாங்கியிலிருந்து தான் குடிப்பதற்குத் தண்ணீர் வரும். சில்லென்று குளிர்ந்த நீர். இப்போது தொரப்பீலி, தெருப்பீலியாகக் கிடக்கின்றது. 

சிறகறுந்த சடாயு என ஆகிவிட்ட தோட்டத்தின் அம்சங்கள் இவை. 

இந்தச் சிறகறுப்பில், இரு நூறு ஏக்கரைக் காப்பாற்றி விட்ட, இராமுவின் தந்தை தண்டனையை எதிர்பார்த்தபடி கண்டி ரிமாண்டில்! வழக்கு சுப்ரீம் கோட்டில்! தவனை பல ஓட; பணம் தண்ணீராகக் கரைகின்றது. 

ஆரம்பத்தில், ”குத்திவிட்டு வா! வெட்டிவிட்டு வா! நாங்கள் இருக்கின்றோம்,” என்றவர்கள், “தியாகம் செய்யாமல் முடியுமா? காசை எடு!….. பணத்தைக் கொண்டு வா!……… நகைகளைக் கழட்டி ஈடு வை” என்றார்கள். ஈட்டுக்கடைத் தலைவர்கள். 

ஒன்ன புத்தட்டும் வட்டிக்கடை ஏறிவிட்டது. பணத்தைப் பார்த்தால் ஆகுமா? அப்பாவை வெளியே எடுத்தாக வேண்டுமே! 

தேர்தல் வந்தது. மாவட்ட பிரதி நிதி, தேர்தலில் நின்றார். “இந்த வெற்றியோடு எல்லாம் சரி” என்றார் “அப்பாவையும் வெளியே கொண்டாந்திரலாம். உன்னையும் என்னோடயே வச்சிக்கிடுவேன். நீ தான் என் பொடி காட்” இராமு மயங்கி போனான். 

தோட்டம் தோட்டமாக ஏறி இறங்கி, வாக்கு வேட்டை, ஆடினார்கள் ஊர் வலங்கள் கோஷங்கள், கல்லடி பொல்லடிகள், பம்பரமாகச் சுழன்று, உயிரைப் பணயம் வைத்து, இராமு, இராசு நண்பர்களெல்லாம் அரசியல் வேலை செய்தார்கள். 

இரவு பகலாக ஓய்வு ஒழிச்சலின்றி! நடை நடையாக நடந்து. தேர்தலில் பிரதிநிதி வெற்றி பெற்றார். 

ரிமாண்டிலிருக்கும் தியாகி முத்து சாமியின் தனயன்கள் ‘சின்ன உங்கா’, ‘பெரிய உங்கா, வான ராமுவும், ராசுவும் பிரதிநிதியின் மெய்க்காப்பாளராக நின்று வெற்றிக் கனியைப் பறித்தார்கள். 

சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, புதிய காரில் ஊர் வந்த பிரதி நிதியை மகிழ்ச்சியில் கட்டித் தழுவ இராமு நெருங்கிய போது, ஆளும் கட்சி எம். பியான அவரைத் தொடவிடாது, “சோதனை போட வேண்டும். தள்ளி நில் என்று தடுத்தார்கள் கூட வந்த “கபட்டி கமீஸ்” அணிந்த மெய்க்காப்பாளன். அவன் கையிலிருந்த “வாக்கி டோக்கி” சமிக்ஞை வேறு பயம் காட்டியது. 

இராமுவிற்கு அவமானாகப் போய்விட்டது. நாட்கள் விரைந்து ஓடிக் கொண்டிருந்தன மந்தரியாகிவிட்ட பிரதிநிதியைப் பல தடவைகள் சந்தித்தும் இராமுவால் வேலை பெற முடியவில்லை. இப்போது அவரைச் சந்திப்பதே ஒரு வேலை தேடுவது போல; கஷ்டமாகி விட்டது. தேர்தல் காலத்தில் இல்லாத சொந்தபந்தங்கள் புடை சூழ அவர் இப்போது.. பிசி .. பிசி.. 

‘இனி அவரை நம்புவதால் பிரயோசனம் இல்லை’ என்று முடிவெடுத்த ராமு, தனக்கிருந்த கொஞ்ச அறிமுகங்களோடு கொழும்பு வந்து விட்டான். 

இராமுவிற்குப் புடவைக் கடையில் வேலை கிடைத்தது. வெல்லம்பிட்டியி லிருந்த ஒருவர் சிபாரிசில் ஊறுகொட பகுதியில் இருக்கும் இந்த றூம் கிடைத்தது. பின்னர் தம்பி இராசுவையும் அழைத்துக் கொண்டான். 

“முதலில் இராசுவுக்கு “பெட்டா” வில் பேமன்டில் தினக்கூலிக்குத் தட்டுப்போடும் வேலை” கிடைத்தது. சாப்பாட்டிற்கே வருவாய் போதவில்லை. கூலியை அதிகரித்துத் தரும்படி கேட்க, “ஐடன்டி” இல்லாதவனுக்கு பஜாரில் வேலை கொடுத்ததே பெரிசு” என்று பெருமை பேசினார்கள். 

“பத்தாது பார்த்துக் கொடுங்க” என்று நயந்து போனபோது, “நன்னத்தாரி பலயாங்” நாலு படி மேலே போய் விரட்டி விட்டார்கள். 

இராமுவிடம் கேட்காமலே; நாலாம் குறுக்குத் தெருவில் நாட்டாமை வேலைக்குச் சேர்ந்து விட்டான் இராசு. 

தம்பி நாட்டாமை வேலைக்குச் சேர்ந்ததினால் இராமு அதிகக் கவலைப் பட்டான். 

இவருடைய உழைப்பும் சேர, அப்பாவின் வழக்கிற்குப்போக சீட்டும் கட்ட முடிந்தது. அம்மாவிற்கும் மாதம் தவறாமல் பணம் போய்க் கொண்டிருந்தது. 

இடையில், அடையாள அட்டை இல்லாதபடியால், இராசு பிடிபட்டு, ஒரு வாரம் பொலிஸ் நிலையத்திற்கு விருந்தாளியாகப் போய் வந்தான். இராசுவை வெளியே எடுக்க ரூபா இரண்டாயிரத்துக்கு மேல் போய்விட்டது. இரண்டாயிரம் செலவோடு இராசுவை மீட்டெடுத்ததே பெரிய காரியம் தான். இராசுவோடு பிடிபட்ட பக்கத்துத் தோட்டத்துக் கணபதி, இன்னமும் நாலாம் மாடி விசாரணையில்! 

வழமை போலவே “அப்பாவி மலையக இளைஞர்களைக் கைது செய்யாதே ‘என்று பிரதிநிதி; தன் படத்தோடு அறிக்கை விட்டிருந்தார். 

அதே நாளிதழின் மற்றைய பக்கத்தில் அவர் இஸ்ரவேல் சென்று தொழிலாளர்களை சந்திப்பதாகவும் செய்தி வெளியாகியிருந்தது. 

இன்னும் கொஞ்சம் பணம் சேர்க்க வேண்டும், தோட்டத்திற்கு இப்போதைக்கு போவதில்லை என்று நினைத்திருந்த வேளையில் “தீபாவளிக்குக் கட்டாயம் வரும்படி” எழுதிய அம்மாவின் கடிதம் வந்தது. 

அம்மாவிற்கு ஒரு சேலை சட்டை….. 

தாத்தாவிற்கு ஒரு வேட்டி…. சால்வை…. சட்டை…. 

செத்துப் போன பாட்டிக்கு படையல் போட சிவப்பு நிறத்தில் ஒரு சாரி. அப்பாவுக்கு கமிசு… திரும்பி வந்து உடுத்திக் கொள்வார் தானே என்ற நம்பிக்கையில். 

தங்கைமார்களுக்கு அவ்வப்போது இருவரும் பேமண்டில் கண்டு வாங்கிய மணிச் சாமான்களுடன் ஆசை ஆசையாக வாங்கி வைத்த உடுதுணி வகைகள். 

மறக்காமல் அடிக்கடி தொங்கலயத்திலிருந்து, “பேராண்டி வந்துட்டானா?…..” என்று வாஞ்சையுடன் விசாரிப்பதோடு, “நான்தான் தொப்புள் கொடி வெட்டினேன். பேராண்டி இந்தக் கட்டையை ஆடிப்பாடி… கோடி போட்டு தூக்கி புதைச்சிறு” என்று நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ளும் ஆராயி பாட்டி தவறாமல் தீபாவளிக்கு வருவாள் அவளுக்கு ஒரு நூல் சேலை! 

“கொட்டகொல” தொட்டிச்சி அம்மனுக்கு பூஜைக்கு ஒரு பட்டு! 

எல்லாமே ரெடி பாக்கி; 

தங்கச்சி பத்மாவிற்கு ஒரு தங்கச் செயின் ஆடர் கொடுத்து விட்டு அடிக்கடி போய் வருகின்றான் இராசு. 

இராசு கூறினான், “அண்ணா நீங்க எல்லாம் ரெடி பண்ணுங்க….. நான் ஒரு ஏலச்சீட்டு போட்டிருக்கேன். வசதியிருந்தா அந்திக்கு இல்லாட்டி இரவு வந்திடுறேன் அப்படியும் இல்லாட்டி காலையில் ஆறுமணிக்கெல்லாம் நகையோட வந்திடுவேன். காலையில் உடனே புறப்பட்டிறலாம் 

தம்பி வருவதற்கு முன்னர் ஒட்டிய பேக்குகளைக் கடைகளில் போட்டு விட்டு, இரவு அவனை எதிர்பார்த்தப்படி, தூங்கிப் போனான் இராமு. 

அன்று இரவு இராசு வரவில்லை. எப்போது விடியும்….. ? ? நடுநிசி கடந்து இரவு விடிய துயில் எழுகின்றது. 

திக்கெங்கும் பெரும் இரைச்சல்…. பேரிரைச்சல்… கூச்சல்கள்.. ஆரவாரம். திடுக்கிற்று எழுந்தான் இராமு. 

என்ன நடந்தது….. ஏது நடந்தது என்ற தவிப்பு….. 

வீசியடிக்கும் வெப்பக் காற்று! 

அனல் ஜுவாலை…. தகிக்கும் தீச் சுவாலை. 

வீசும் அனல் காற்றின் வெப்பம். திசையெங்கும் பரவ … மக்களின் அவலக் கூக் குரல். 

துப்பாக்கி வேட்டுக்களின் தீவிர ஓசை திக்கெங்கும் பதறி, சிதறி ஓடும் மக்கள் கூட்டம். 

குழந்தைகள்…. பொக்கிஷங்களோடு அல்லலோலகல்லோலப்பட்டு, இங்கு மங்குமாக….. செய்வதறியாது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு… 

“கொலன்னாவ தெல்டாங்கியட்ட கினிதியலா”…”போம்ப காலா”… தீயோடு போட்டியிட்டு பரவும் செய்திகள். “நம்ம பகுதிக்கு நெருப்பு வருமா…. சேரிக் குடிசைவாசிகள் முணுமுணுக்கின்றார்.” 

தூரத்தே தரைக்கும் வானுக்குமாக தீச்சுவாலை…… டும் துப்பாக்கிகள் உயிர்ப் பெற்று முழங்குகின்றன பகுதியே யுத்த பூமியாகப் பரிணமிக்க… 

எங்கும் ஒரே களேபரம். 

விடிந்து விட்டது. 

விளைந்த அனர்த்தம் புரிந்தும் புரியாத நிலை …. பிராமாண்டமான எண்ணெய்க் குதங்கள் பற்றி எரிந்து கொண்டே இருக்க, கரும்புகை விண்ணை மறைத்து நிற்கின்றது. தீயின் கோர நாக்குகள் நாலா திக்கிலும் பரவ… 

கலக்கம் பதற்றம்……. 

என்ன செய்வது…..?…..? 

சுற்றி வளைத்த காவல், வேலி போட்டு நிற்கின்றது. 

வேட்டுச் சத்தங்கள் தொடர்ந்து கொண்டே. உள்ளன. 

“போன தம்பி” – இன்னமும் திரும்பி வரவில்லை . தீபாவளிக்கு வீட்டுக்குப் போக வேண்டும். முருகா! … தம்பிக்கு என்ன நடந்ததே…..! 

இராமு கலங்கி நிற்கின்றான்…… 

சேரி மக்கள் பொறி கலங்கித் தெருவில் நிற்கின்றனர். இனக் குரோதமான வசைகள் வானளாவிக் கேட்கின்றன. 

சற்று நேரத்திற்குள்……. 

எது நடக்குமோ, என்ன நடக்குமோ என்ற பீதியில், வதந்திகள் பரவ, மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓட, யார் யார் எங்கே எப்படிச் சிதறிப் பதிறி ஓடினார்களோ , திசை மாறிப் போனவர்கள் யார்? எங்கோ தெரியவில்லை உயிரைப் பிடித்துக் கொண்டு, எங்கெல்லாமோ போய்ச் சேர…. 

பெரும் கூச்சல்கள் ….. ஆராவாரங்கள்…… ஆக்ரோஷமான வசவுகள் நெருங்கி வர….. 

நாம் ஒரு குற்றமும் செய்யவில்லையே எங்கே போவது எல்லா வழிகளிலும் தடை…… தடைகள் 

மிகவும் அண்மையில் அடித்து நொறுக்கி அவலக் குரல்கள்….. ஓலங்கள்…

பணத்தைச் சரி எடுத்துக் கொண்டு…… பொருள்களோடு வீட்டைப் பூட்டி விட்டு, மெதுவாக ஓடி … எப்படியும் போய்விடலாம். இராமு உள்ளே நுழைந்து தீபாவளிக்காக வாங்கிக் கட்டிய பொருள்களின் மூட்டையை ஒரு புறமாக வைத்து விட்டு பெட்டியைத் திறந்து; பணத்தை எடுத்து மடியில் மறைவாக வைத்த போது…. 

“ஹா காப்பாங்…….. மரப்பாங்………. கினி தியாபங்.. கினி தியாபங்……..” சேரியை அடித்து நொறுக்கிக் கொண்டு வந்த கும்பல் இவனுடைய றூமையும் நெருங்கிக் கதவை உடைத்து……. 

“மரப்பாங்……ஆ….வரேங்….. “

அடித்து நொறுக்கி ஒவ்வொரு வீடாகச் சோதனை செய்து கொண்டு, அறியாத முகங்கள் இரத்த வெறியுடன் கும்பல் கும்பலாக, பயங்கர வாள்கள். இரும்புக் கம்பிகள்… வெட்டரி வாள்கள் கம்புகள் சகிதம் … அடித்து நொறுக்கி… வெட்டி…

அவலக குரல்கள்…. அழுகையொலிகள்… கேட்பாரில்லையா? பூமிக்கும் வானத்துக்குமாகக் கனிந்து கொண்டு இருக்கும் தீயைப் பற்றியே எங்கும் பேச்சு… வேடிக்கை பார்க்கும் கூட்டம் வேறு….! 

அடிபட்டோரினதும் வெட்டுபட்டோரினதும் அவலக் குரல்கள்……. இராமுவின் றூம் கதவை அடித்து நொறுக்கி, உள்ளே பாயும் போது 

‘நா….. நா….. நான்…”. நடுங்கும் கைகள் அடையாள அட்டைளை நீட்ட, “தெமலத….” ஆவேசக் குரல்கள்…… 

“நம….?..”, “ராமு….. கொட்டகல தோட்டம்… தோட்டம்…” சொல்லி முடிக்கவில்லை. 

“கொட்டகல தோட்டம்…..?…..?…” 

“கொட்டகல…… கொட்டித….”

குரல்கள் கோரஸமாக ஒலிக்க…… 

“காப்பாங்….. காப்பாங்…… மரப்பாங்” 

எத்தனை வாள் வெட்டுகள், எத்தனை இரும்படிகள், உடம்பில் எங்கெல்லாம் விழுந்தனவென்று தெரியாது. இராமு….. தலை பிளந்து, கண்கள் பிதுங்கி, கழுத்து முறிந்து….. இரத்தம் பீரிட….. “ஐயோ! அம்மா…..” குரல் வெளியே வரவில்லை. 

நிலத்தில் சரிந்தான். 

“சுத்த கரப்பாங்…..” தேனீயாய்த் தம்பியும் தானும் சேர்ந்த பணத்தை மடியிலிருந்து உருவி எடுப்பதையோ, ஆசையோடு தீபாவளிக்கு வாங்கிய பண்டங்கள், பொருள்களைச் சூறையாடிச் செல்வதையோ தடுக்க முடியாது நிலத்தில் சரிந்தான். 

அடி, வெட்டு, குத்து…… இவைகளில் எது இராமுவின் உயிரைப் பறித்ததோ தெரியாது. 

பிரியும் இராமுவின் உயிரைத் தடுத்து, அரவணைத்துக் கொள்வது போல அடித்து நொறுக்கப்பட்ட அந்தப் பழைய காம்பிரா தகர்ந்து தரையோடு அவன் மீது வீழ்ந்து போர்த்துக் கொள்கின்றது. 

வீணர் கும்பல்…. கைவரிசை காட்டி மறைய…; நிலைமை கட்டுக்கடங்கிட .. நேற்று மாலை குறித்த நேரத்தில், தங்கைக்கு ஆடர் செய்த நகை கிடைக்காத படியினாலும், காலையில் கட்டுங் கடங்காத காடைத்தனம், வீதித் தடை என்பவற்றினாலும் றூமிற்கு வந்து அண்ணனைப் பார்க்க முடியாத இராசு, மறுநாள் வந்து கேள்விக் கணைகளுக்கும், பலத்த, விசாரணைகளுக்கும் பின்னர், அண்ணன் இராமுவின் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டான். 

தீபாவளித் திருநாள்…. 

பட்டாசு வெடிகள் வெடிக்க…… 

வானவெடிகள் மத்தாப்புகள் வெடித்துச் சிதற, 

புத்தாடைகள் அணிந்து…

பட்சணங்கள் தின்பண்டங்கள்…. 

கோயிலில் பூசை நடைபெற…

உற்றார் உறவினர் வந்து குதூகளிக்க…. 

தீபாவளித் திருநாள் இருள் நீங்கி ஒளி பிறந்த திருநாள்…

ஆல மரத்துச் சந்தி…. ஜில்லென்று குளிர்காற்று வீசும் தோட்டம். வால்ராசா கோயில். வால்ராசா கோயிலுக்கு மேற்கே பாடமாத்தி. பாடமாத்திக்கு மேலே சரிவில் மாடசாமிக் கோயில், அதற்கப்பால் பாதையில் ஒரு மென்வளைவு, பக்கத்திலிருக்கும் குன்றில் எலும்பும் தோலுமாக நிற்கும் தோட்டத்தின் பழைய ஸ்டோர். ஸ்டோர் முடக்கில் காமன் பொட்டல், காமன் பொட்டலுக்குச் சமாந்தரமாகப் பீலிக் கரையைச் சுற்றி, எதிரும் புதிருமாக அமைந்த லயன்கள். லயன்களின் நடுவே, எட்டுக் காம்பிரா லயத்தின் தொங்க வீட்டை நோக்கி, கொழும்பிலிருந்து இராமுவின் பிரேதத்தைச் சுமந்து வந்த வண்டி, சிலு சிலு வென்று ஓடும் தண்ணீர்க் கானைத் தாண்டி: இரு புறமும் மண்டிக் கிடக்கும் சூரியகாந்திப் பூக்களின் அஞ்சலியை ஏற்றுக் கொண்டு … அந்தச் செம்மண் பாதையில் செல்ல வண்டியின் முன் சீட்டில் அமர்ந்து, லயத்திற்குச் செல்லும் வழியை இராசு காட்டிக் கொண்டுவர, இராமுவின் பிரேத வண்டி ஊர்ந்து… 

லயத்துக் கோடியிலிருந்தே, தூரத்தே மகனின் பிரேதம் வருதைக் கண்ட தாய், “நான் தேடிய ராசவே…..” என்று பெரிதாக ஒப்பாரி வைத்துக் கொண்டு வாயிலும் வயிற்றிலுமாக அடித்துக் கொண்டு கதறி அழ… கூடவே தங்கைகளும்… கதறி அழ…அழது புரண்டு… 

ஒரு தோட்டத்து இளைஞன் தீபாவளிக்குத் தனது தோட்டத்திற்கு வருகின்றான். 

– துரைவி – தினகரன் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை. 

– அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

மாத்தளை பெ.வடிவேலன்2 சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன.  வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *