ஆதாரம்
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பழம் பெருமையுடன், பல நூற் றாண்டு காலமாக அந்த ஆலமரம் வாழ்கின்றது.
அதன் வாழ்வுக்குத் தாமே ஆதாரமென்று இலைகள் நினைத்தன.
இல்லை, தாமே ஆதாரமென்று விழுதுகள் நினைத்தன.
இவை இரண்டும் பைத்தியங்கள் என்றும். தாமே மரத்திற்கு ஆதார மென்றும் மணலுக்குள் மறைந்து கிடக்கும் வேர்கள் நினைத்தன.
இவற்றின் எண்ணங்களை உணர்ந்த அம் முதுமரஞ் சிரித்தது.
“ஏன் சிரிக்கின்றாய்?” என மூன்றும் ஏககாலத்திற் கேட்டன.
“இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உங்களையும் என்னையும் தன்னுள் அடக்கி வைத்திருந்த ஒரு சின்னஞ் சிறு விதையை நினைத்துப் பார்க்கின்றேன். பாவம், நாங்கள் தோன்றுவதற்காக அது தன்னைத் தானே அழித்துக்கொண்டது”.
அப்போது . .
பேச்சுக்குத் தடையாக ஒரு காகம் ஓர் ஆலம் பழத்தைக் கொத்திச் செல்கின்றது..
– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.